ஞாயிறு, 10 மே, 2026

அம்மாவை நினைக்காத நாள் இல்லை


அம்மாவும் , நானும்


மே 10  ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

மே மாதத்தின் இரண்டாவது ஞாபிற்றுக்கிழமை இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.


அம்மாவை நினைக்காத நாள் இல்லை. 

புதன், 29 ஏப்ரல், 2026

மலர் கோலங்கள் , மலர் அலங்காரங்கள், அழகர் வருகை



மகன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மலர்களை கொண்டு மலர் கோலங்கள், மலர் அலங்காரங்கள் செய்தேன் . அவை இந்த பதிவில்.


மகன் வீட்டில் இருந்த போது    மலர் கோலங்கள் மூன்று  பதிவுகள் போட்டேன், இந்த பதிவு டிராப்பிட்டில் இருந்தது பகிராமல்  அதனால்  இன்று போட்டு விட்டேன். மலர் கோலங்கள்  நான்காவது பதிவு இது.

அழகர் படங்களும் இந்த பதிவில் இடம் பெறுகிறது.


வியாழன், 16 ஏப்ரல், 2026

வாழ்த்தும் பயனும்

 


உலக அமைதிக்காக  உலக சமுதாய சேவா சங்கத்தில் நாளை அமாவாசை  அன்று  "உலக நல வேள்வி" என்ற கூட்டுப்பிரார்த்தனை நடக்க போகிறது.  வாழ்த்தால்  என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை வேதாத்திரி மகரிஷி சொன்ன "வாழ்த்தும் பயனும்"    இடம்பெறுகிறது இந்த பதிவில், போரில்லா உலகம் வேண்டும் என்ற பாடலும் இடம்பெறுகிறது.

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்


மாயவரத்தில் இருந்த போது கொண்டாடிய போது எடுத்த படம்.

சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு. மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள். காலை கண்விழித்தவுடன் இநத மங்கல பொருட்களைப் பார்த்தால் ஆண்டு முழுவதும் வளமாய் இருக்கலாம் என்று நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளார்கள். 

எங்கள் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கைநீட்டம்(பணம்) வழங்குவார்கள்.


வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து தான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவது போல் நம் முன்னோர்கள் தமிழ்ப்புத்தாண்டில் இனிப்பு, கசப்பும் என்று எல்லா சுவைகளும் கலந்து உண்ணும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். நம் உணவில் ஆறுசுவைகளும் இருக்க வேண்டும் என்பார்கள். அதை ஒழுங்காய் கடைபிடிப்பது தமிழ்ப்புத்தாண்டில் தான். இனிப்புக்கு வெல்லம் போட்ட அவல், புளிப்புக்கு மாங்காய் பச்சடி, கசப்புக்கு வேப்பம்பூ ரசம் (நான் மாங்காய் பச்சடியில் கொஞ்சம் போட்டு விடுவேன்.)


என்று உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

வெயில் காலத்தில் வேப்பமரத்தின் காற்று எல்லோருக்கும் மிக தேவையாக இருக்கிறது. கிராமப்புரத்தில் கோடைக்காலத்தில் வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது, கயிற்றுக் கட்டிலை மரத்தடியில் போட்டு தூங்குவது என்று இயற்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்து இருக்கிறார்கள். 

சித்திரை மாதத்தில், புளி, மாங்காய், மாம்பழம், பலா, வாழை மஞ்சள், இஞ்சி என்று எல்லாம் நிறைய கிடைக்கும். மக்கள் வருடத்திற்கு வேண்டியவைகளைப் பதப்படுத்தி சேமித்து வைத்துக் கொள்வார்கள். வேப்பம்பூ இப்போது தான் கிடைக்கும். அதைக் காயவைத்து, மோரில்உப்புடன் போட்டு வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வார்கள்.


 அதன் மருத்துவப்பயன் அறிந்தமையால் வேப்பம்பூவை வெந்நீர் விட்டு டீ டிகாக்ஷன் போல் இறக்கி, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடித்தால், வாதம், பித்தம், அகலும். வாய்க்கு ருசி, வயிற்றுக்கு பசி ஏற்படும், சரும நோய்கள் விலகும் என்பார்கள்.

சித்திரை மாதம் வசந்தகாலம் என்பார்கள். இந்த சமயத்தில் பூக்கள், பழங்கள் , காய்கறிகள் என்று இயற்கை அள்ளி கொடுக்கும். அவற்றை  நாம் இறைவனுக்கு நிவேதனம் செய்து வழிபட்டு எல்லோரும் நலமாக இருக்க வேண்டிக்கொள்ளலாம்.

பழங்கள்:

சமைக்காத உணவுகளாக பழங்கள் பச்சைக் காய்கறிகள், சாப்பிடலாம். அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை உண்பது நல்லது. சமைக்காத உணவாக பழங்களை, பச்சைகாய்கறிகளை உண்ணலாம். இந்த சீஸனில் மா, பலா, வாழை பழங்கள், மற்றும் எல்லா பழங்களும் நிறையகிடைக்கும். “கனிகள் தின்னப் பிணிகள் போகும் என்பார்கள்.”

மா, பலா, வாழை பயன்களை பற்றி  2022 ஆம் ஆண்டு போட்ட பதிவில் போட்டு இருக்கிறேன்.

காலையில் பழ உணவு எடுத்துக் கொள்வதைப் பழ ஆகாரம் என்று சொன்னார்கள். அது  தான் மருவி இப்போது பலகாரம் என்று ஆனதாய் சொல்கிறார்கள்,இயற்கைச் சங்கம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர்கள். 

காலையில் சாப்பிடும் பழ  உணவு, பொன் போன்றது. மத்தியானம் வெள்ளி போன்றது. இரவில் ஈயம் போன்றது என்கிறார்கள். 

தினசரி உணவில் ஒரு பகுதி பழங்களாக அமைந்தால் அதன் மூலம் இயற்கை சத்துக்கள் கிடைக்கும் .அந்த அந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதால் இயற்கை சக்திகள் குறைவில்லாமல் கிடைக்கிறது. 

நோய் வராமல் பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

பழம் சாப்பிடுவதால் அது உணவாகவும் இருக்கிறது, மருந்தாகவும் இருக்கிறது. குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும்,
நார்ப்பொருள்கொண்டதாகவும்,  குடலின் புளிப்புத் தன்மையை
அகற்றுவதாகவும் இருக்கிறது.

மா, பலா, வாழை பயன் களும் , எங்கள் வீட்டில் காலையில்  செய்யும் தமிழ்ப்புத்தாண்டு இனிப்பு  செய்முறை குறிப்பும் இருக்கும் படித்து பாருங்கள். 

மேலும் மகா கவி பராதியார் பாடல், வாலி எழுதிய சுபதினம் பாடலும் இருக்கும்.


கணவர் கணினியில்  வரைந்து தந்த  முக்கனிகள் படம் .

முக்கனிகளுமிருக்கிறது. 

மேஜை மீது நித்திய கொலுவாக வீற்று இருக்கும்  கொலுபொம்மையில் உள்ள சுவாமிகளுடன்  இந்த வருடம் கனிகாணல்.



நாம் தமிழ்ப்புத்தாண்டில் இறைவனுக்கு என்று வழங்கும் பிரசாதங்கள் எல்லாம் என்ன பயன்களைத் தருகின்றன, உணவில் கசப்புச் சுவையை ஏன் கலந்து உண்ணச் சொல்கிறார்கள்? அதன் காரணம் என்ன?

நம் வீட்டை அலங்கரிக்கும் மாவிலை, வாழை மரத்தின் பயன்கள் என்ன என்பதையும் ஏன் அதை நம் முன்னோர்கள் பயன் படுத்தினார்கள் என்பதை எல்லாம் எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள் என்ற புத்தகம் மூலம் சொல்கிறார் Dr. C.K.திரு. மாணிக்கவாசகம். அவர்கள் எழுதியதைப் படித்தேன் அதில் சில பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:-


பஞ்சபூதத்திற்கும் உரிய மூலிகைகள் :

நிலம் - அருகம்புல்

நீர் - மாவிலை,

நெருப்பு  வாழைஇலை

காற்று  வேப்பிலை.

ஆகாயம்  வெற்றிலை

அருகம்புல்:

அருகம்புல் பிள்ளையாருக்கு சமர்ப்பிக்கிறோம். அது நோய்களை நீக்கும் “ஆகாதது அருகம்புல்லில் ஆகும்என்பது பழமொழி.வாரம் ஒரு முறை கஷாயம் வைத்து குடித்தால் வலியும், வியாதியும் இன்றி வாழலாம். இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, தோல் நோய்கள், புற்று நோய், இதய நோய் போன்ற நோய்களையும் போக்கும் குணம் அருகம்புல்லுக்கு உண்டு.

மாவிலை:

மாவிலை கஷாயம் நீரின் மூலமாகப் பரவும் நோய்களைப் போக்குகிறது.கங்கை நீர் என்று கலசங்களில் நீரை எடுத்து

மாவிலை வைத்து கும்பாபிஷேகங்களிலும், புதுமனை புகுவிழாவிலும், மற்றும் விழாக்களிலும் வைத்து வணங்கி, அந்த நீரை மாவிலைகளால் தெளித்துத் தூய்மைப்படுத்தி, பின் மக்கள் மீதும் வீடுகள் மீதும் மற்றும் எல்லா இடங்களிலும், தெளிப்போம். தூய்மையான நீரை தெளித்து சுற்றுப்புறத்தை தூய்மை ஆக்கிறோம். வீட்டில் மாவிலை கட்டுவதும் காற்றில் உள்ள நீரைச் சுத்தப்படுத்துகிறது. மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள நீர் நிலைகளையும் சுத்தம் ஆக்கும்.

வாழைமரம் கட்டும் காரணம் :

விஷமுறிவுக்கு வாழை என்பார்கள். திருமணம், கோயில் விழாக்கள் வாயில்களில் வாழை கட்டுவதற்கு காரணம், விழாக்களின் போது தீங்கு இழைக்க கூடிய ஜந்துக்களை விரட்டவும், தவறி விஷஜந்துக்கள்

தீண்டிவிட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்ய வேறு எங்கும் தேடிக்கொண்டு இருக்காமல் உடனே அருகில் கட்டி இருக்கும் வாழை மரத்திலிருந்து வாழைப்பட்டையை எடுத்து தீமூட்டி அனலில் வாட்டி,வதக்கி சாறு எடுத்து அரை டம்பளர் உள்ளே கொடுத்து, பின் சாறு எடுத்து உடல் முழுக்க பூசிவிட்டால் விஷக்கடியிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள். இப்படி நல்லது கெட்டது என்று மக்கள் கூடும் இடங்களில் வாழைமரம் கட்டும் காரணம் இது தான் என்பார்கள். ஆதிகாலத்தில் வீடுகள் கோயில்கள் எல்லாம் காட்டுப் பகுதி சூழ்ந்த இடங்களில் தானே இருந்தன!

வேப்பிலை:

வேப்பிலை சக்தி கடவுளுக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கு வேண்டிய சக்திக்கும் தான். வேப்பிலை கஷாயம் அருந்தி வந்தால், உடலிலுள்ள நோய்க் கிருமிகள் அழிவதுடன் கிருமிகள் உற்பத்தி ஆகாமல் அன்றாட உடல் உறுப்பு தேய்மானத்தை தடுத்து உடலைப் புதுப்பிக்கிறது. பிணியின்றி வாழ வைக்கிறது. கசப்பு சுவை பிடிக்காது என்பதால் அதைச் சாப்பிடாதவர்களுக்கு உடலில் இருக்கும், எலும்பு மூட்டுக்கள், பாதங்களின் தசைகள், பற்கள், என்று பல உறுப்புக்கள் தேய்மானம் ஆகிறது. கசப்பு உண்டு வந்தால், தேய்மானம் தடுக்கப் படுகிறது. பாவைக்காய், சுண்டைக்காய், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெற்றிலை:

கடவுளுக்குப் படைப்பதற்கு மட்டும் அல்ல வெற்றிலை ,அறுசுவை உணவை அளவோடு உண்டபின் வெற்றிலை போட்டுக் கொள்வதால் உண்ட உணவு நல்ல முறையில் செரித்து உடலுக்கு சக்தி கிடைக்கும். அதனால்.இப்படி பண்டிகையில் சேர்த்து கொள்ளும் பொருட்கள் எல்லாம் காரண காரியமாய் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த "பராபவ" ஆண்டு, அச்சம், கவலை, நோய், நொடி முதலியவற்றை போக்கி மனநிறைவாய், மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.

இந்த ஆண்டு ஆன்மிகம் தழைத்தோங்கி, வழிபாடுகள் அதிகரிக்கும் . புதிய தொழில் தொடங்கவும், விவசாயம் செழிக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையவும், பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவும், பெண்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. என்று புத்தாண்டு பலன் படித்தேன் . இறைவன் அருளால் அப்படியே நடக்கட்டும்.

இனிய புத்தாண்டில்  இறைவன் அருள்வார். 

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.


மகன் ஊரில்  அரிசோனா தமிழ்ச்சங்கத்தில்   ஞாயிறு

  அன்று  புத்தாண்டு 

கொண்டாட்டம்  சிறப்பாக  நடந்தது.



பேரன் புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு 
முதல்பரிசு பெற்று இருக்கிறான்.


மகன் இந்த ஆண்டு  செய்த வெற்றிப்மரப்படிக்கட்டுகள் பேரன் அப்பா செய்த

 வெற்றிப்  படிக்கட்டில் ஏறி

 விட்டான் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கவினும், மகனின் நண்பர் மகளும் அப்பளம், வடை  பரிமாறினார்கள்.

பரிமாறும்  முறையும் கற்றுக் கொள்கிறார்கள்.





பெரியவர்கள், சிறியவர்கள் அனைவருக்கும் விளையாட்டு

போட்டி நடந்தது.திருக்குறள் ஒப்பித்தல், ஓவிய , புகைப்பட

போட்டி, மற்றும் சமையல் போட்டி மாறுவேட போட்டிகள்

நடந்து இருக்கிறது. மாறுவேட போட்டிக்கு நடுவராக

 மருமகள் கலந்து கொண்டார். 

விழா இனிதாக நடந்தது என்று சொன்னார்கள் எனக்கு 

படம் அனுப்பினார்கள் நானும் கலந்து கொண்ட 

மகிழ்ச்சி.



உணவு மெனுவில் உள்ளது எல்லாம் இருக்கா என்று பார்த்து விடுங்கள்.
மீண்டும் அனைவருக்கும் தமிழ்  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.







குலதெய்வம் அருள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.


 வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

புத்தன் பிறந்து போதனை செய்தான் அன்புக்கு அதுதான் சுபதினம்


தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.

 தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில்  .மன்னர்  முதலாம்  ராமர்  கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.

தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.

இந்த பதிவில் தங்க புத்தர் இடம் பெறுகிறார்.

செவ்வாய், 31 மார்ச், 2026

யோகம் செய்யும் சிலைகள்


புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக் -1



புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக்--பாகம் -2



தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.

 தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில்  .மன்னர்  முதலாம்  ராமர்  கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.

தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.

 புத்த மடாலயத்தில் பிரகாரத்தில் தோட்டம் இருந்தது,  மரங்களுக்கும் செடிகளுக்கும்  இடையில் அமர்ந்து யோகா செய்யும் சிலைகள் இருந்தது. அந்த சிலைகள் படம்  இந்த பதிவில் .

வெள்ளி, 27 மார்ச், 2026

புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக்--பாகம் -2




புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக் -1


இதற்கு முன் போட்ட பதிவின் சுட்டி. பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம்.


தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.

 தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில்  .மன்னர்  முதலாம்  ராமர்  கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.

 கோயில் படங்கள் இடம்பெறுகிறது இந்த பதிவில்.

தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.


ஞாயிறு, 22 மார்ச், 2026

உலக தண்ணீர் தினம் - 2026

  

நன்றி-  கூகுள்

2026 ஆம் ஆண்டு உலக நீர் தினம், பாலின சமத்துவத்தில் நீரின் பங்கின் மீது கவனம் செலுத்தும்.


உலக நீர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று ஜக்கிய நாடுகள் சபையால் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாகும்.

நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பாதுகாப்பான நீர் வசதியின்றி வாழும் 220 கோடி மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.


ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு   கருபொருள் இருக்கும்.

இந்த ஆண்டு , 2026 -ல் உலகநீர்தினத்தின் கருப்பொருள்

"நீரும்  பாலினமும் " என்பதாகும்.அதன் முழக்கம்" எங்கே" என்பதாகும்

" நீர் பாய்கிறது, சமத்துவம் வளர்கிறது"  இந்தக் கருப்பொருள்,

தண்ணீர் நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஏற்படும் சமமற்ற தாக்கத்தை வலியுறுத்துவதோடு , மேலும் சமத்துவமான எதிர்காலத்திற்காக நீர் தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் முடிவெடுப்பதில் அவர்களின் முக்கியப் பங்க்கிற்காக  வாதிடுகிறது.

வெள்ளி, 20 மார்ச், 2026

எங்கு இருந்தாலும் வாழ்க !

 

 நியூஜெர்சியில் மகன் வீட்டு தோட்டத்துக்கு வந்த சிட்டுக்குருவிகள்


மார்ச் 20  இன்று உலக சிட்டுக்குருவி தினம். ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடுவேன்.

இந்த ஆண்டு புதிதாக போட குருவிகள் எங்கள் வளாகத்திற்கு வரவில்லை.

வீட்டு இருபக்கமும் முன்பு காலி மனைகள் அதில் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள்  இருந்தன. குருவிகளுக்கு கூடு கட்ட இலை தளைகளும்,   உணவாக புழு பூச்சிகளும்  கிடைத்தன, அவை வந்து எங்கள் குடியிருப்புகளில் கூடு கட்டி மகிழ்வாய் இருந்தது.

வியாழன், 5 மார்ச், 2026

வரசித்தி விநாயகர்



எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விநாயகருக்கு  புதிதாக செய்யப்பட்ட  செப்பு கவசம்.  ஜனவரி 25  ஆம் தேதி   சாற்றப்பட்டு  சிறப்பு  பூஜை செய்யப்பட்டது. அந்த படங்கள் இதில் இடம்பெருகிறது இந்த பதிவில்..
நாளை  சங்கடஹர சதுர்த்தி அதனால் இந்த பகிர்வு.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நன்கு தேர்வு எழுத பிரார்த்தனைகள்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

மறை பொருளான தெய்வமே நான்




ரோஜா பதிவை படிக்க வரும் அனைவருக்கும்  மலர் கொத்து கொடுத்து  வரவேற்கிறேன்.

ரோஜா எந்த நிறந்தில் இருந்தாலும் அழகானதுதான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை ஏந்தி வருவது.
- அன்னை அரவிந்தர் 

மலர்களில் ராஜா  என்று பாராட்டப்படும் மனம் கவர்ந்த  ரோஜா பூக்களின் படங்கள் இந்த பதிவில். மலரே மலரே நீயார் ?  என்று மலரிடம் கேட்டதற்கு மலர்  சொல்லும் பதிலும் இருக்கிறது பதிவில்.

புதன், 18 பிப்ரவரி, 2026

பிராத்தனை பலித்தது, இறைவன் காப்பாற்றினார்


ஜன்னலில் குடித்தனம் நடத்தும் புறா பறவைகள்


குடியிருப்பில் புறாக்கள் அதிகமாகி விட்டது  அவற்றை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

திங்கள், 16 பிப்ரவரி, 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


என் கணவர் வரைந்த ஓவியம். (கணினி ஓவியம்)


சிவராத்திரி  பூஜை நல்லபடியாக  நிறைவு பெற்றது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

திங்கள், 26 ஜனவரி, 2026

குடியரசு தின விழா வாழ்த்துகள்.





இந்த 77 வது  குடியரசு தின  அணிவகுப்பு விழா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும்  மகிழ்ச்சியை தந்தது. புது தில்லியில்  கர்த்தவ்ய பாதையில் (முன்னாள் ராஜ பாதை)   குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் அணிவகுப்பு   விழாவில் என் பேத்தியும் கலந்து கொண்டு வந்தேமாதரம்பாடலுக்கு ஆடியது  மிகவும் மகிழ்ச்சியை தந்தது.

புது தில்லியின் கர்த்தய பாதையில் (முன்னாள் ராஜபாதை)

  நடைபெறும்

முன்பு என் அண்ணனின் மகளும் ஒரு வருடம் அணிவகுப்பில் கலந்து கொண்டாள் அப்போதும்  எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஒவ்வொரு ஆண்டும்  வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் அலங்கார ஊர்திகளையும் , கம்பீரமான துருப்புகளின் அணிவகுப்பையும் கண்டு களிப்போம். 

இந்த முறை பேத்தியும் கலந்து கொண்டதுமட்டற்ற மகிழ்ச்சி.


சனி, 17 ஜனவரி, 2026

பொங்கல் நினைவுகள்


இந்த வருடம் மகன்வீட்டு பொங்கல் 


பொங்கல் கொண்டாட்டங்கள் இன்றுடன் நிறைவு அடைய போகிறது. பொங்கல் நினைவுகள் மனதில் மலர்ந்து  கொண்டே இருக்கிறது. 

புதன், 14 ஜனவரி, 2026

பொங்கலோ ! பொங்கல்!





கதிரவன் குணதிசைச் சிகரம்  வந்து  அணைந்தான்   

சூரியனைப்போற்றுவோம், சூரியனைப்போற்றுவோம்.


மெல்ல மெல்ல உதயமாகும் கதிரவன் (அரிசோனா) மகன் அனுப்பிய காணொளி


எங்கள் குடியிருப்பு வளாகத்தில் பொங்கல் விழா 11 ஆம்  தேதி   நடந்தது
கூடாரவல்லி  அன்று பொங்கல் விழா நடந்தது
"கூடாரவல்லி வெல்லும் சீர் கோவிந்தா" பாடலின் கடைசி வரியில் ஆண்டாள் சொல்லுவது போல கூடியிருந்து குளிர்ந்தேலே ரெம்பாவாய்   எல்லோரும் கூடியிருந்து பொங்கல் பிரசாதம் உண்டு மகிழ்ந்தோம்.

பொங்கல், கடலைமிட்டாய் ,ஜூஸ் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. 



பொங்கல் பானை  ஏற்றியாச்சு


பால் பொங்கி விட்டது

எல்லோரும் பானையில் அரிசி இட்டோம்


 கலந்து கொண்டவர்கள்

உற்சாகமாக கும்மி  கொட்டினார்கள்




குடியிருப்பில் பணி புரிபவர்கள் , மற்றும் இஸ்லாமியர் , கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்கள் என்று அனைவரும்  உற்சாகமாக பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள்.






மாறுவேட போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள்  கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள்  கொடுத்தார் இஸ்லாம் மதத்தை சேர்ந்த மருத்துவர்




இவர்களும் இஸ்லாம் தான். இந்த குழந்தை நன்றாக பேசினாள்
விவசாயி படும் கஷ்டங்களை  சொன்னாள்


. "நாங்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றில் கை வைக்கமுடியும்.  கரும்பு பயிர் செய்தேன் யாரும் வாங்கவில்லை,  வாழை நட்டேன் யாரும் வாங்க வில்லை,  மஞ்சள் நட்டேன் யாரும் வாங்க வில்லை    கஷ்டத்தில் வயலை  ப்ளாட் போட்டு விற்றால் வாங்க நான் நீ என்று ஓடி வருகிறார்கள் வயல் எல்லாம் ப்ளாட் ஆனால் நாளை உணவுக்கு எங்கு போவார்கள் என்ற கேள்வி எழுப்பினாள்." போரைவிட சோறுதானே முக்கியம் என்றாள்.



முகம் கை , கால் எல்லாம் சேறு பூசி கொண்டு  மண்வெட்டியுடன் வந்து  நன்றாக பேசினாள். சின்ன மலரின்  அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் நன்றாக பேசினார்கள்.   பாட்டி கற்க கசடற திருக்குறளுக்கு விளக்கம் அழகாய் கொடுத்தார்கள் , தாத்தா நன்றாக நகைச்சுவையாக பேசினார்.


வட நாட்டு குழந்தைகள் கண்ணன் வேஷம் போட்டு  வந்து நான் கண்ணன் வந்து இருக்கிறேன் என்று சொல்லி  புல்லாங்ககுழல் ஊதி காட்டினான்.


முதலில் மைக் வைத்து கொண்டு நிற்பவர் புவனா சந்திரசேகரன் எழுத்தாளர் எங்கள்வீட்டு எதிர் வீடு அவர் தான் பொங்கல் விழாவை தொகுத்து வழங்கினார்.  கோலபோட்டியில்கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் பரிசு அளித்தார்.

கோல போட்டியில் ஒருவர் போட்ட கோலம்


எல்லோரையும் சீட்டு எடுக்க வைத்து அதில் வருவதை பேச சொன்னார்கள்.

சிலருக்கு பாட்டு, சிலருக்கு நடனம், சிலருக்கு ஆண் போல பேசுவது,  திருக்குறள் சொல்ல வேண்டும், தாலாட்டு பாட வேண்டும், ரமைஸ் சொல்ல வேண்டும்  என்று எல்லாம் எழுதி வைத்து இருந்தார்கள்.

 எனக்கு எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்றார்கள்.நான்  முன்பு முதியோர்கள் இளையவர்களை வழி நடத்தி சென்றார்கள். இப்போது  இளையவர்கள் முதியவரகளை  வழி நடத்தி செல்கிறார்கள்  . நான்  இளையவர்கள் வழி நடத்துவதில்  இப்போது இருக்கிறேன் என்றேன்.

மற்றும் வளாகத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்னை நன்கு பார்த்து கொள்கிறார்கள்.  வளாக பணியாளர்கள் எல்லாம் எப்போது என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்து தருகிறார்கள் இன்முகத்தோடு, அவர்களுக்கும், மற்றும் குடியிருப்பு நிர்வாக பொறுப்பில் இருப்பவரக்ள் எல்லாம் விழாவை சிறப்பாக நடத்தியதற்கும்   பாராட்டி  எல்லோருக்கும் நன்றி சொல்லி பொங்கல் வாழ்த்து சொன்னேன்.  

என்னை கைபிடித்து அழைத்து சென்ற பெண் பேர் கேட்டேன் கோமதி என்றார்

வளாகத்திற்கு புதிதாக வந்து இருக்கிறார்.

பொங்கல்  திருவிழாவே நன்றி சொல்லும் நாள் அல்லவா!

பொங்கல் திருவிழாவே நன்றி சொல்லும் திருவிழா முதல் நாள்   சூரியனுக்கு 

அடுத்த நாள் விவசாயிகளுக்கு ,   விவசாயத்திற்கு உதவும்  மாடுகளுக்கும் உழவு கருவிகளுக்கும் நன்றி சொல்வோம் உழவர் திருநாளில்  .


வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல நெறிகளை  போதிக்க உலகப்பொதுமறையை கொடுத்த திருவள்ளுவருக்கு நன்றி சொல்லுவோம்.

நம் நலம் விரும்பும் உடன்பிறந்த சகோதர்களுக்கு நன்றி சொல்லி அவர்களுக்காக கனுப்பிடி வைத்து உற்றார், உறவுகள், மூத்தவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் நாள். 


https://www.youtube.com/watch?v=rIML4bF0EoQ


உறியடி நடந்தது பெண்களுக்கு மூன்று பெண்கள் வெற்றி பெற்றார்கள்.

என் தம்பி பேரன், பேத்தி படிக்கும்பள்ளியில் அறிவியல் பொங்கல் என்று சிறப்பாக நடந்து இருக்கிறது. என் தம்பி மகள் அனுப்பிய படங்கள்.

 

அந்தக்கால விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் .

 


கல்லாங்காய் 

 குழந்தைகள் மாட்டு வண்டியில் ஏறி கொண்டு  பொங்கலோ பொங்கல் என்று சொல்லி  செல்கிறார்கள்

பனநுங்கு  வண்டி  ஓட்டும் தம்பி பேரன், பேத்தி.


பல்லாங்குழி

தாயம்


கிச்சு கிச்சு தாம்பூலம்

குழந்தைகள் எல்லாம் கைபேசியில் வீடியோ கேம் விளையாடாமல் இப்படி  பராம்பரிய விளையாட்டுக்களை  விளையாடுவது மனதுக்கும் , உடலுக்கும் உற்சாகம் மற்றும் ஆரோக்கியம்  தரும். நினைவாற்றல், கவனம் சிதறாமல்  விளையாடும் திறமையும் வளரும். 

இந்த பள்ளியில் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து இருப்பதை பாராட்ட வேண்டும். இந்த பள்ளியில் நவராத்திரி விழாவும் சிறப்பாக நடந்தது.

இன்று தொலைகாட்சி செய்திகளில்  பள்ளிக்கூடம், கல்லூரிகளில் பொங்கல் விழாநடந்ததை  காட்டினார்கள். ஒரு பள்ளியில் நெல்லை குத்தி அரிசியாக்கி புடைத்து உமி நீக்கி குழந்தைகள் பொங்கல் வைத்தார்கள்.  பராம்பரிய முறையை தெரிந்து கொள்கிறார்கள். குலவை சத்தம் போடுகிறார்கள் பால் பொங்கும் போது. 


2022 ஆம் வருடம் பேரன் எங்கள் வீட்டு வாசலில் பொங்கல் கோலம் வரைந்து வாழ்த்து எழுதுகிறான், ஆங்கிலத்திலும்,தமிழிலும்.


இந்த வருடம் பேரன் போட்ட பொங்கல் கோலம்


அனைவருக்கும்  இனிய பொங்கல்  நல் வாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்



பொங்குக பொங்கல்!

//பொங்குக பொங்குக பூரித்து உள்ளமெலாம் 

எங்கும் நிறைந்த நம் ஏகாந்த நிலையறிந்து //

-வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


------------------------------------------------------------------------------------------------------------------------