தியாகப்பிரம்மத்தின் 167 வது ஆராதனை விழா.
20.01.2014 திங்கள் அன்று நாங்கள் திருவையாறு சென்று இருந்தோம். வெகு காலமாய் என் ஆசை திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று. அது இப்போது தான் நிறைவேறியது. ஒவ்வொன்றுக்கும் நேரம் காலம் வரவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது உண்மைதான். நான் பதிவு எழுத வருவதற்கு முன்பு அங்கு போயிருந்தால் நான் மட்டும் மகிழ்ந்து கொள்ள முடியும். இப்போது அங்கு போய்வந்ததைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ முடிகிறது.
தியாகப்பிரம்மத்தின் சிறப்பு
தியாகராஜர் 1767 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி திருவாரூரில் பிறந்தார். ராமபிரம்மம், சீத்தம்மா ஆகியோர் இவருடைய பெற்றோர். இவருடைய தாத்தா வீணாகாளஹஸ்தி ஐயர் தஞ்சாவூர் சமஸ்தான வித்வானாயிருந்தார்.தியாகராஜரின் தாயார் சிறந்த பாடகர்.தந்தையார் சிறந்த கல்விமான். அவர் , ராமநவமி உற்சவ காலங்களில் தஞ்சாவூர் அரண்மனையில் ராமாயண உபன்யாசம் செய்து வந்தார். இதன் காரணமாக மகாராஜா இவருக்கு பசுபதி கோவில் என்ற இடத்தில் கொஞ்சம் நிலமும் திருவையாற்றில் ஒரு வீடும் தந்தார்.
தியாகராஜருக்கும் பாரம்பரியமாய் வந்த கந்தர்வ சாரீரம் இருந்தது. அவர் தம் குரு சொண்டி வீணா வெங்கட்ரமணா அவர்களிடம் இசை கற்றார்.
அவர் வாழ்ந்த காலத்தில் மேற்கத்திய நாடுகளில் பீத்தாவன், சோப்பின் , ஸ்கூபர்ட் ,வெபர், போன்ற இசைக்கலைஞர்கள் புகழ்பெற்று இருந்தார்கள்.
தென்னிந்தியாவில் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமாசாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர், ஆகியோர் சிறப்புடன் விளங்கினர்.
தியாகராஜர் எளிய குடும்பத்தில் பிறந்தவராகையால் உஞ்சவிருத்தி மூலம் தன் குடும்பத்தையும் தன் சீடர்களையும் பாதுகாத்து வந்தார். இவர் வீணை இசைப்பதிலும் வல்லவர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிதாஸ் என்பவருடைய வேண்டுகோளுக்கு இணங்க ராமநாமத்தை 96 கோடி முறை சொல்லி வந்தார். 21 ஆண்டுகள் விடாமல் சொல்லி வந்தார். அதனால்தான் அவருக்கு ராமருடைய அருள் கிடைத்தது என்பார்கள்.
72 மேளகர்த்தா ராகத்திலும் பாடல்களை புனைந்துள்ளார். ’சங்கீதரத்னாகரம்’ முதலிய இசை நூல்களில் காணப்படாத பகுதாரி, கருடத்வனி, ஜனரஞ்சனி, நவரசகன்னடா ஆகிய அபூர்வ ராகங்களில் பாடி உள்ளார்.
இவர்தன் இசையில் சிறப்பான புதிய சங்கதிகளை புகுத்தி உள்ளார்.
1847ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் நாள் முக்தி அடைந்தார்.
இவருடைய பஞ்சரத்ன கீர்த்தனைகள் மிக சிறப்புடையது. இந்த பாடலை தான் அவர் நினைவு நாளில் பாடுகிறார்கள், இசைக்கலைஞர்கள்.
ஆராதனை விழாக்காட்சிகள்
நாங்கள் திருவையாற்றிற்குப்போன போது காலை 10 மணி. தியாகராஜருக்கு அபிஷேகம் ஆகிக்கொண்டிருந்தது. நாதஸ்வர கலைஞர்கள் வாசித்துக் கொண்டு இருந்தார்கள். தியாக பிரம்மத்திற்கு முன் இருந்தவர்கள் ராமநாமத்தைச்சொல்லிக் கொண்டு இருந்தார்கள் பால் அபிஷேகம் ஆகிக் கொண்டு இருந்தது. நான் படம் எடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எடுக்கவில்லை அப்புறம் எல்லோரும் எடுத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன். அப்புறம் நான் எடுக்கும் போது பன்னீர் அபிஷேகம் ஆகிக் கொண்டு இருந்தது.
அவர் நினைவிடத்தில் ராமர் பட்டாபிஷேக சிலையின் முன் ராம நாம பாடல்களை பாடுவது போல் உள்ள தோற்றம்.
விழா மேடை அழகாய்ப் போட்டு இருந்தார்கள் ரசிகர்கள் அமர தரையில் புதுமணல் பரப்பியிருந்தார்கள். கீழே அமரும் இடத்தில் வயதான பெரியவர்கள், நடுவில் பிரித்து இருக்கும் மூங்கில் கம்பில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பாடல்களை ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.
இந்த இடத்தில்தான் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடுவார்கள்.அதே இடத்தில் அமர்ந்து பாடலை கேட்டு ரசித்து விட்டு தியாகபிரம்மத்திடம் என் பேரன் , பேத்திகள் இசையில் நன்கு தேர்ச்சிபெற வேண்டும் என்று வேண்டி வந்தேன். என் பேரன் மிருதங்கம் கற்றுக் கொள்கிறான், பேத்தி வாய்ப்பாட்டு சில வருடங்களாய் கற்று வருகிறாள். சின்ன பேரனை (என் மகனின் மகன்) பாட்டுக் கற்றுக் கொடுக்க ஆசை ப்படுகிறார்கள் மகனும், மருமகளும். ஆனால் நான்கு வயது தான் ஆகிறது 7வயது ஆக வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் சொல்கிறார்.
பின்பு நாங்கள் பாடகர்கள் பாடிய பாடல்களைக் கேட்க ஆரம்பித்தோம். அருகருகே இரண்டு மேடைகள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒரு மேடையில் பாடகர் பாடிக் கொண்டு இருக்கும்போது, அடுத்தமேடையில் பாடகர் , பக்கவாத்தியக்காரர்கள் அமர்ந்து தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
அடுத்த மேடையில் வந்து அமர்பவர்கள் வரத் தாமதம் ஆனால் பாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம்! இன்னொரு பாடல் பாடுகிறார்கள். அவர்கள் சீக்கிரம் வந்து அமர்ந்துவிட்டால் இவர்களுக்கு ஒரு பாடல்தான். பாடிய குழந்தைகள் எல்லாம் மிகவும் அனுபவித்து பயபக்தியுடன் பாடினார்கள். அடுத்துப் பாட இருக்கும் குழந்தைகள் மிக ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உழைப்பும், கவனமும் வேண்டியது அல்லவா பாடுவதற்கு !
பக்க வாத்தியங்கள் வாசித்தவர்களும் நன்கு வாசித்தார்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கு வந்து பாடவேண்டும் என்று நினைத்தவர்கள் கனவு நனவானது . பாடிய குழந்தைகள், மற்றும் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோருக்கும் இந்த பேறு கிடைத்த மகிழ்ச்சி அவர்கள் நடையில் தெரிந்தது.
வாய்ப்பாட்டு, மாண்டலின், வீணை, நாதஸ்வரம் என்று பல இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்டோம்.
நாங்களும் எங்கள் காமிராவில் பாடல்களை பதிவு செய்தோம் , அபிஷேக காணொளி மட்டும் பகிர்ந்து இருக்கிறேன்.
டெல்லியில் பேத்தி தியாக பிரம்ம ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடியதைக் கேட்டிருக்கிறேன். என் மகள் மாயவரத்தில் தியாக பிரம்ம ஆராதனைவிழாவில் வயலின் தனியாக வாசித்து இருக்கிறாள்.( இப்போது அவள் வாசிப்பது இல்லை . அவள் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று வேண்டி வந்தேன்)
ஆல் இந்தியா ரேடியோவின் தற்காலிக ஒலிபரப்பு நிலையம்.
தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் சென்னை அகில இந்திய வானொலியில் கேட்டோம், இசைக் கச்சேரிகளை. இப்போதும் அது தன் சேவையை சிறப்பாய் செய்துகொண்டிருக்கிறது. சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து வந்து கச்சேரிகளை நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டு இருந்தார்கள்.
பொதிகைத் தொலைக்காட்சியில் சிட்டியூனியன் பேங்க் நேரடி ஒளிபரப்பை வழங்குகிறது.(ஸ்பான்ஸர்).
’சென்னையில் திருவையாறு’ என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சிவழங்குகிறது, பொதிகையில் திருவையாறு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு எல்லாம் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். இப்போது நேரடியாக கேட்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பாடவந்த ஆண் குழந்தைகள், கலர் கலர் குர்த்தா, வேஷ்டி, வெள்ளைசட்டை, துண்டு எல்லாம் போட்டுக்கொண்டு அமர்க்களப்படுத்தினார்கள்.
வளரும் இசைக் கலைஞர்
பெண் குழந்தைகள் பட்டுப்பாவாடை, நெற்றிச்சுட்டி, பாவாடை, தாவணி என்று பாரம்பரிய உடையில் வந்து பாடி அசத்தினார்கள். அவர்கள் பாடப்போகும் முன் அவர்களின் குருமார்கள் அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்தார்கள். சேர்ந்து பாடும் குழுவினர்களிடம்,’ ஓடாது, எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து பாட வேண்டும் ’என்று. ’நான் தான் நல்லா பாடுவேன் என்று ஓங்கி சத்தமாய் பாடக் கூடாது எல்லோரும் சமமாய் பாட வேண்டும் ’என்று அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்தார் .
நான் என் கணவரை அலங்கார மண்டபத்தின்முன் போட்டோ எடுத்த போது, செருப்புகளைப் பாதுகாத்துக் கொண்டு இருந்த ஒருபையன் ஆவலுடன் வந்து நின்றான். அந்த சிறுவனை நீ நில் உன்னை போட்டோ எடுக்கிறேன் என்றவுடன் வந்து போஸ் கொடுத்தான். அவனது அம்மாவிடம் எடுத்த போட்டோவைக் காட்டியதும் அந்த அம்மாவுக்கும் அவனுக்கும் மகிழ்ச்சி.
விழாவை முன்னிட்டு அங்கே கடைகள் போட்டு இருந்தார்கள் . வோடபோன் கடை, ராமராஜ் காட்டன் கடை, வேஷ்டி, ஜிப்பா, நேரியல் கன ஜோராய் விற்பனை ஆகிக் கொண்டு இருந்தது.
இசைக்கருவிகளை விற்கும் கடைகள் இருந்தன. இசைக்கருவிகளுக்கான பிரத்யேக உறைகள், மிருதங்கத்திற்கு தேவையான தோல், அதைக்கட்டும் வார் முதலிய உதிரிபாகங்கள், சுதிப் பெட்டிகள் என்று சகலமும் அங்கே ஒரேஇடத்தில் கிடைக்கிறது. இசைக்கலைஞர்களின் குறுந்தகடுகள், புத்தகங்கள் விற்கப்பட்டன.நாங்கள் சிலவற்றை வாங்கினோம்.
கும்பகோண டிகிரி காப்பி கடைகள் இருந்தன . இதில் பித்தளை டபராடம்ளாரில் காப்பி கொடுக்கிறார்கள். லியோ காப்பி கடையில் இலவச காப்பி தந்து 200 கிராம் காப்பித்தூள் வாங்கினால் 50கிராம் காப்பித்தூள் இனாமாய் தருகிறார்கள். கூல்டிரிங் விற்கும் கடையில் தங்கும் வசதி கொண்ட ஓட்டல்களின் விளம்பர நோட்டிஸ்களும், போன் செய்து அறைகளைப் பதிவுசெய்ய விபர அட்டைகளும் எல்லோருக்கும் தந்து கொண்டு இருந்தார்கள்.
மருத்துவ உதவிக்கு டாக்டர், நர்ஸ் கொண்ட குட்டி மருத்துவமனை, தீயணைப்புப் படை. கண்காணிப்புக்கு காவல் துறைஅதிகாரிகள் இருந்தார்கள்.
சுகாதாரமாய் ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனியாய் தகரகொட்டகை போட்ட நவீனகழிப்பிடங்கள் என்று வசதிகள் செய்து இருந்தார்கள்.
பழைய கைவினைப்பொருட்கள் கடை
இதில் தஞ்சை ஓவியம், மரத்தாலான மண்டபங்கள், அலங்கார வெற்றிலைப் பெட்டி, அந்தக்காலத்து கேரளா உருளி , அழகிய காமாட்சி விளக்குகள் மரப்பெட்டிகள் என்று ஏராளமாய் வைத்து இருந்தார்கள்.
கடைகளுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெரியவர் அப்போதுதான் உஞ்சவிருத்திக்கு போய்வந்த கோலத்தில் கையில் அரிசிச் செம்புடன் அமர்ந்து இருந்தார். அவரைச் சுற்றி வேதியர்கள் அமர்ந்து பாடிக் கொண்டு இருந்தார்கள்.
கச்சேரிகளைக்கேட்ட மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினோம். திரும்பி வரும்போது திங்களூர், சுவாமிமலை சென்றுவந்தோம். அது பற்றிப் பிறகு பகிர்கிறேன்.
வாழ்க வளமுடன் !
_____________________
இதுவரை போகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை
பதிலளிநீக்குதங்கள் அருமையான படங்களுடன் கூடிய பதிவின் மூலம்
நேரடியாகத் தரிசித்ததைப் போன்ற திருப்தி ஏற்பட்டது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
அருமையான பதிவு சகோதரியாரே.
பதிலளிநீக்குவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தமிழ்மண வாக்குக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்கு// நான் படம் எடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எடுக்கவில்லை//
பதிலளிநீக்குதொலைக்காட்சியில் காண்பித்தபோது ஆளுக்கு ஆள் செல்லில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் நீங்களும் இருந்தீர்களா? இந்த அபிஷேகக் காட்சி தந்தி டிவியில் பார்த்தேன்.
பல வருடங்களுக்கு முன்னால் நான் சென்றிருக்கிறேன். இன்னமும் மனலிருக்கை மாறாதது மகிழ்ச்சி. அப்போது நான் பாலமுரளிகிருஷ்ணா, டிவி கோபாலகிருஷ்ணன் போன்றோரை நேரில் சந்தித்ததோடு ஓரிரு வார்த்தை பேசவும் பேசியிருக்கிறேன்.
யார் யார் பாடிய கச்சேரிகள் கேட்டீர்கள் என்று சொல்லவில்லையே...? இளம்தலைமுறை அபிஷேக் ரகுராம், சிக்கில் குருசரண், சாகேதராமன் போன்றோர் வந்தார்களா?
படங்கள் தெளிவாய் அழகாய் இருக்கின்றன.
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
தங்களின் பதிவின் வழி அறிய முடியாத பல கருத்துக்களை என்னால் அறியமுடிந்தது... படங்கள் எல்லாம் மிக அழகு... வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல பகிர்வு. ஜனவரி முதல் வாரத்தில் கும்பகோணம் சென்றபோது திருவையாறுக்கு சென்று வந்தோம். அமைதியான சூழல் காவிரி இசைத்துக் கொண்டிருந்தது தியாகராஜர் பெருமைகளை .
பதிலளிநீக்கு//வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கு வந்து பாடவேண்டும் என்று நினைத்தவர்கள் கனவு நனவானது . பாடிய குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என எல்லோருக்கும் இந்த பேறு கிடைத்த மகிழ்ச்சி அவர்கள் நடையில் தெரிந்தது.//
பதிலளிநீக்குஉண்மையான வரிகள். தஞ்சையில் இருந்தவரை இந்த வைபவத்தில் தவறாது கலந்து கொண்ட நினைவுகள் மனதில் மலர்கின்றன.
நிகழ்வுகளை அப்படியே கண்முன் நிறுத்திய தங்களுக்கு மிகவும் நன்றி..
இதுவரை சென்றதில்லை... உங்கள் பகிர்வின் மூலம் சிறிது கலந்து கொண்ட திருப்தி... அருமையான படங்களுடன் சிறப்பான விளக்கம்... நன்றிகள் பல...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு
வணக்கம் ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநாங்கள் 20 ம்தேதி போனோம். நீங்கள் என்று தந்தியி டிவியில் பார்த்தீர்கள் நிகழ்ச்சியை 21ம் தேதி பார்த்தீர்களா?
//இளம்தலைமுறை அபிஷேக் ரகுராம், சிக்கில் குருசரண், சாகேதராமன் போன்றோர் வந்தார்களா?//
அவர்கள் எல்லாம் வரவில்லை.
அவர்கள் எல்லாம் மாலையில் வந்து இருக்கலாம்.
திருச்சி சரண்யா, சிதம்பரம் நந்திவித்யா மாணவிகள், அஞ்சனா, ஜானகி, வாய்ப்பாட்டு., பெங்களூர் ரவி மாண்டலின். வீணை வித்யா, பெங்களூர் ஸ்ரீராம் சாஸ்திரி வாய்ப்பாட்டு. நாதஸ்வர கலைஞ்ர்கள் எந்த ஊர்ர என்று தெரியவில்லை. எல்லோரும் தெரியாதவர்கள். அறிவுப்பு கொடுத்தவர் வேக வேகமாய் சொன்னதால் எழுத முடியவில்லை.
பாடுபவர்கள், பக்கவாத்தியம் எல்லாம் சொல்கிறார்கள் பாடுபவர்களின் பெயர் அடித்த நோட்டீஸ் கொடுத்தால் தெரியும். வருபவர்கள் எல்லாம் உடனே பேர் கொடுத்து பாடுகிறார்கள்.
21ம் தேதி போய் இருந்தால் பிரபலமானவர்கள் வந்து இருப்பார்கள்.(அவர் அவர் ஊரில் பிரபலமானவர்களாய் இருப்பார்கள் , நமக்கு தெரியவில்லை)
நீங்கள் பாலமுரளிகிகிருஷ்ணா , டி.வி கோபாலகிருஷ்ண்ண அவர்களை சந்தித்து உரையாடியதை அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், ஆர்வமான கருத்துக்கும் நன்றி.
வணக்க்ம ரூபன், வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம், முரளிதரன், வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னது போல்அமைதியான சூழல் நிறைந்த அழகிய ஊர் தான்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் துரைசெல்வர்ராஜூ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//தஞ்சையில் இருந்தவரை இந்த வைபவத்தில் தவறாது கலந்து கொண்ட நினைவுகள் மனதில் மலர்கின்றன.//
ஆஹா ! நிறைய தடவை கலந்து கொண்டு இருக்கிறீர்களா?
மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம், கஞ்சனாராதாகிருஷ்ணன். வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான அனுபவமாக இருந்திருப்பது தெரிகிறது. நன்கு அவதானித்துப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபடங்களுக்கும் நன்றி.
திருவையாறு ஆராதனை விழாக்காட்சிகளை ஒரு நேர்முக வர்ணனை செய்துள்ளீர்கள்!
பதிலளிநீக்கு// அவர் நினைவிடத்தில் ராமர் பட்டாபிஷேக சிலையின் முன் ராம நாம பாடல்களை பாடுவது போல் உள்ள தோற்றம்.//
பொருத்தமான படம்.
// தியாகபிரம்மத்திடம் என் பேரன் , பேத்திகள் இசையில் நன்கு தேர்ச்சிபெற வேண்டும் என்று வேண்டி வந்தேன். //
உங்கள் பிரார்த்தனை நிறைவேறட்டும்! உங்கள் பேரக் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!
விழாவை முன்னிட்டு அங்கே இருந்த இரண்டு மேடைகள் மற்றும் பந்தலுக்கு வெளியே இருந்த கடைகள், உணவு விடுதிகள், மற்றும் பொது சுகாதார வசதி ஆகியவற்றையும் நன்றாக படத்துடன் பதிவைத் தந்தமைக்கு நன்றி! பின்னாளில் அங்கு செல்பவர்களுக்கு பயன்தரும் குறிப்புகள்.
// கச்சேரிகளைக்கேட்ட மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினோம். திரும்பி வரும்போது திங்களூர், சுவாமிமலை சென்றுவந்தோம். அது பற்றிப் பிறகு பகிர்கிறேன்.//
தங்களின் திங்களூர், சுவாமிமல ப்யணம் பற்றிய பதிவுகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
68 முதல் 75 வரை ஆல்மோஸ்ட் ஒவ்வொரு வருஷமும் போய்க்கொண்டு கச்சேரியை முக்கியமாக பஞ்ச ரத்ன கச்சேரியை கேட்டு கொண்டு இருந்தேன்.
பதிலளிநீக்கு77 க்குப்பின் மாற்றலான பின் தொடர்ந்து பார்க்க இயலவில்லை.
பின்பு, 87 க்கு பின் 94 க்குள் ஏதோ ஒரு வருஷம் சென்றேன். பால முரளி கிருஷ்ணா விடம் பேசி இருக்கிறேன்.
மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடியது எல்லாம் நினைவு இருக்கிறது.
ராஜம் ஐயர் வருவார்.குன்னக்குடி முன்னால் உட்கார்ந்து டைரக்ட் செய்வார்.
நெடுநெறி கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு பாடகர் அவர் எங்கள் வீடு அருகில் தான் வந்து தங்குவார்.
மூப்பனார் இந்த சபையின் முக்கிய நிர்வாகியாகவோ அல்லது தலைவராகவோ இருந்தார். இப்போது வாசன் அவர்கள் இதனுடன்
தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.
பாடல்களை நீங்கள் ஒளிப்பதிவு செய்து போட்டிருப்பீர்கள் என்று நினைத்து வந்தேன்.
சுப்பு தாத்தா.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் அருமையான அனுபவம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபேரகுழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி.
வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் முன்பு அடிக்கடி போய் கேட்டு இருக்கிறீர்கள் என்று கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
பிரபலங்கள் பாடல்களை கேட்டும். அவர்களிடம் உரையாடியதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாங்கள் ஒளிபதிவு செய்தோம் பாடல்களை ஏனோ இணையத்தில் இணைய மாட்டேன் என்று மக்கர் செய்கிறது.
அபிஷேக காட்சியும் சரியாக உள்ள காணொளி பதிவாக மாட்டேன் என்கிறது.இணையக் கல்வி நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
வாசன் அவர்கள் காலையில் வந்து ஆரம்பித்து வைத்து இருக்கிறார். வழி எல்லாம் கடஅவுட வைத்து இருந்தார்கள் அவருக்கு.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அன்றைய நாட்களில்(1965) தியாகரஜர் ஆராதனை, இசைவிழாக் கச்சேரிகளில் பங்கேற்கும் பிரபலங்களின் கச்சேரிகள், சென்னை, திருச்சி வானொலி மூலம் யாழ்ப்பாணத்திலும் மிகத் தெளிவாகக் கேட்கலாம்.எங்கள் வீட்டில் இரவு வாலொலியைச் சுற்றி அப்பா, மாமாக்கள் குழுமி விடுவார்கள். தொலைக்காட்சி கிடையாது, தமிழ்த் தினசரிகள் கச்சேரி விபரங்களை சிறிதாக ஒரு மூலையில் வெளியிடும், இவை எப்படி நடக்குமென்பதே தெரியாது. ஆனாலும் மதுரை மணி ஐயர், செம்பொன்குடி சிறீநிவாச ஐயர், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன்,சேக் சின்னமொலானா, வலயப்படி சுப்பிரமணியத்துடன், எங்கள் யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் தவில்; பட்டாம்மாள், எம்.எஸ் அம்மா, வசந்தகுமாரி அம்மா என இன்னும் பல அன்றைய இசைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் இசையில் ஒரு பகுதியை ஒலிபரப்புவார்கள்; இவை குறிப்பாக இரவு நேரடி அஞ்சலாகவே இருக்கும்; இரவு நேரக் கச்சேரிகள் பிரபலங்களுக்கே!
பதிலளிநீக்குஇன்று தொலைகாட்சி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கச்சேரியை நேரில் பார்க்கும் உணர்வுடன் தருகிறார்கள்.
எனினும் உங்கள் படங்களுடன் கூடிய பதிவு , பல மேலதிக தகவல்களைத் தந்தது.
வாழ்வில் ஒரு தடவையாவது நேரில் கேட்க வேண்டுமெனும் ஆசையுண்டு.
இன்றைய இளம் சமுதாயத்தின் மத்தியில் பரவலாக நல்ல ஆர்வம் உள்ளது, உங்கள் பேரக் குழந்தைகள் சாதிக்க வேண்டும்.
.
வ்ணக்கம் யோகன்பாரிஸ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் அந்தக் காலத்தில் தொலைக்காட்சி இல்லாதபோது வானொலியில் தான் கச்சேரிகளை கேட்போம். சென்னை, திருச்சி வானொலி நிலையத்தில் பாடல்களை கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம் நாங்கள். ஒவ்வொரு புதன்கிழமை இரவும் இசைக் கச்ச்சேரி கேட்டு விட்டுதான் தூங்குவார்கள் அப்பா. எம்,ஸ் சுப்புலட்சுமி அம்மாவின் விசிறி அப்பா அவர்கள் கச்சேரி எங்கு நடந்தாலும் போய் கேட்ப்பார்கள்.
இலங்கை வானொலி சேவையை மறக்க முடியாது. இலங்கை வானொலியின் ரசிகை நான்.
//இன்று தொலைகாட்சி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கச்சேரியை நேரில் பார்க்கும் உணர்வுடன் தருகிறார்கள்.//
நீங்கள் சொல்வது உணமை. இப்போது வீட்டிலிருந்து நேரில் பார்ப்பது போல் கச்சேரிகளை கேட்டு மகிழ்கிறோம்.
//வாழ்வில் ஒரு தடவையாவது நேரில் கேட்க வேண்டுமெனும் ஆசையுண்டு.
இன்றைய இளம் சமுதாயத்தின் மத்தியில் பரவலாக நல்ல ஆர்வம் உள்ளது, உங்கள் பேரக் குழந்தைகள் சாதிக்க வேண்டும்.//
அடுத்தவருடம் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
பேரக் குழந்தைகளை வாழ்த்தியமைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஒரு comprehensive coverage-க்கு பாராட்டுக்கள். திருச்சியில் இருந்தபோது ஓரிரு முறை சென்று வந்திருக்கிறோம். இப்போதெல்லாம் பஞ்சமி அன்று தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து விடுகிறோம். இந்த முறையும் பொதிகை மூலம் பார்த்தோம் கேட்டோம். பழைய கலைஞர்கள் இல்லாதது ஏனோ வெறுமையாய் இருக்கிறது. பகிர்வுக்குப் பாராட்டும் நன்றியும்.
பழைய கலைஞர்கள் இல்லாதது ஏனோ வெறுமையாய் இருக்கிறது.//
பதிலளிநீக்குபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையன்றோ .
அது சரி. 167 ம் வருஷம் இந்த ஆராதனை நடக்கிறது. எப்படி பழைய கலைஞ்ர்கள் இருப்பது சாத்தியம். ?
யாரைக் குறிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.
இருப்பினும் ஒன்று சொல்லவேண்டும்.
இந்த கர்நாடக இசை காலத்தால் அழிக்க இயலாத ஒன்று.
இதில் புதிய பழைய என்றும் ஒன்றும் இல்லை.
இலக்கணம் மாறவில்லை. இலக்கியம் மாறினாலும்
இசையின் மையப்புள்ளி நகரவில்லை.
இசை ஈசன்.
ஈசன் கற்சிலையாய் காலத்தால் அழியாது நிற்க ,
அவன் இசை பாடுபவர் வருவர் போவர்.
இன்று நான் தாத்தா. என் பேரப்பிள்ளைக்கு.
இன்னும் 100 வருடங்கள் ஏன் ஒரு அறுபது வருடம் கழிந்தபின்
எனது இன்றைய பேரப்பிள்ளை,
அன்றைய தாத்தா ஆவது இல்லையா.
அது போல,இன்றைய சூப்பர் சிங்கர் திவாகரும்,பார்வதியும், சுபானும், சரத்தும், சோனியாவும்,
நாளைய தலைமுறையின்
மதுரை சோமுவாக, எம்.எஸ். ஆக,
ஷேக் சின்ன மௌலானா ஆக , பால முரளி ஆக,
ஜேசுதாஸ் ஆக,
அதே திருவையாறு ஆராதனையில் பங்கு கொள்வார்கள்.
இசையின் ஈர்க்கும் வலிமை மிகவும் பெரிது.
so gmb sir,
musthafa, musthafa, dont worry musthafa, kaalam nam thozhan musthafa.
dont worry.
subbu thatha.
பல முறை நினைத்ததுண்டு - ஒரு முறையாவது இங்கே செல்ல வேண்டும் என.... பார்க்கலாம் எப்போது நிறைவேறுகிறது என.
பதிலளிநீக்குவணக்கம், பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
நீங்கள் முன்பு ஆராதனைவிழாவை பார்த்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
இசை ஈசன்.
இசையின் ஈர்க்கும் வலிமை மிகவும் பெரிது.
உண்மை நீங்கள் சொல்வது.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅடுத்தமுறை ஆராதனை விழாவில் கலந்து கொள்ள வாழ்த்துக்கள்.
கோவையில் பாரதீய வித்யாபவனில் பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடைபெறும் .. நானும் கணவரும் தவறாமல் கலந்துகொள்வோம்..!
பதிலளிநீக்குதஞ்சாவூரில் தியாகப்பிரம்மம் வாழ்ந்த இல்லத்தையும் , அவரது ஆராத்னை விக்ரஹமான சீதா ரமச்சந்திரமூர்த்தியை லஷ்மன் அனுமன சகிதமாக தீபாராதனையுடன் கண்டு தரிசித்து வ்ந்தோம்..
தங்கள் நேரடி தரிசன பகிர்வு மகிழ்ச்சியளித்தது.. .. பாராட்டுக்கள்..!
வணக்கம் இராஜராஜேஸ்வரி.வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் கோவையில் பாரதீய வித்யாபவனில் பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி.
நாங்களும் ஒருமுறை அதில் கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூரில் தியாகப்பிரம்மம் வாழ்ந்த இல்லத்தை பார்த்தது இல்லை பார்க்க வேண்டும்.
உங்கள் அழகான கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
ஆஹா. நேரில் பார்த்த மன நிறைவு. முன்பொரு முறை நேரில் போயிருக்கிறேன். அந்த நாள் நினைவுகள் வந்தன.. இசையும் பக்தியும் கை கோர்க்கும் இடம் அது
பதிலளிநீக்குவணக்கம் ரிஷபன் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மை இசையும், பக்தியும் கை கோர்க்கும் இடம் தான். அமைதியும் ஆனந்தமும் அங்கு கிடைக்கிறது.
அந்தநாள் நினைவுகள் வந்தமை அறிந்து மகிழ்ச்சி.
உங்கள வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
நேரில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது உங்கள் கட்டுரை. You wanted to cover all the points. செருப்பைப் பாதுகாக்கும் பையனின் போட்டோவைப் போட்டதில் ரொம்ப மகிழ்ச்சி. மொத்தத்தில் தமிழ்வாணன் கட்டுரை போலிருந்தது
பதிலளிநீக்குவணக்கம் corpbank, வாழக வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
நேரடி வருணனையாக இருந்தது.
பதிலளிநீக்குமகிழ்வு. படங:களும் நன்று.
இனிய வாழ்த்து..
வேதா.இலங்காதிலகம்.
வணக்கம் வேதா. இலங்கா திலகம்வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துக்கு நன்றி.
வணக்கம் வேதா. இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஆராதனை விழாக்காட்சிகள் நேரில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது.
பதிலளிநீக்குநன்றி.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆராதனை விழாக்காட்சிகளை கண்டு களித்தமைக்கு நன்றி மாதேவி.