வியாழன், 3 ஜூலை, 2014

மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மே மாதம் 29ம் தேதி மதுரைக்குப் போனபோது  சில கோவில்களுக்குப் போய் இருந்தோம் (மடப்புரம் ,திருப்பூவணம், திருமோகூர், ஆனமலை நரசிம்மர் கோவில், திருவாதவூர்.)

 மதுரை மேலூருக்கு தெற்கே 9 கிலோ மீட்டர்தொலைவில் திருவாதவூர் உள்ளது. 
                                    
                           
   
மாணிக்கவாசகரின் அவதாரத்தலமாகிய திருவாதவூரில் அருள்மிகு திருமறைநாயகி உடனுறை திருமறைநாதர் திருக்கோவில் உள்ளது.
இக் கோவில் மாணிக்கவாசகருக்கு சிலம்பொலிஒலிக்க செய்த இடம். பழமை வாய்ந்த கோவில். இப்போது புது பொலிவுடன் இருக்கிறது, மிக அழகாய்.
                                 
                      திருமறைநாதர், திருமறைநாயகி, மாணிக்கவாசகர்


                                   
                                                                 பைரவ தீர்த்தம்
                                     
                                                               தலவிருட்சம் மகிழமரம்
                                     
    மகிழமரம் வேலி போட்டு கம்புகள் முட்டுக் கொடுத்து பாதுகாக்கப்படுகிறது
                                    
            வானரங்களும் யாரும் மரத்தை தொடாமல் பார்த்துக் கொள்கிறது.
                                     
கோவிலுக்கு உள் நுழையும்  போது முதலில் அழகாய் மண்டபம் - பழுது பார்க்கப்படுகிறது.          
                                     
ஸ்வாமி சன்னதி  உள் நுழைவாயிலில்,  குருந்த மரம் அடியில் மாணிக்க வாசகருக்கு  தீட்சை கொடுக்கும் காட்சி சித்தரிக்கப் பட்டு இருக்கிறது.
சிவன் இக் கோவிலில் சுயம்பு ரூபமாய் இருக்கிறார். அவரது தலையில் பசுவின் கால்தடம் இருக்குமாம்.


உள் பிரகாரத்தில் மாணிக்க வாசகருக்கு தனி சன்னதி
மாணிக்கவாசகர்

தட்சிணாமூர்த்தி சன்னதி
இறைவனுக்கு சந்தனம் அரைக்கும் இடம் 
சந்தனம் அரைத்து எடுத்தபின் அதை கழுவிவிட வசதியாக துவாரம் 

உட்பிரகாரம்
அம்மன் சன்னதி செல்லும் வழி

அம்மன் சன்னதி

அம்மன் சன்னதி அருகில் பசுமடம்.
அம்மன் சன்னதி கோடியில்  சிவலிங்கம்


                                     
                                                  தேர் மண்டபம் அருகில் தேர்.
                                         
வைகாசி மாதம் நடக்கும் பிரமோற்சவத்தில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில்  ஒன்பதாம் திருநாள் திருத்தேர் உலா.

இக் கோவிலில் மாசி மாதம் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெறும். வைகாசி, , ஆனி உற்சவம்., ஆவணிமாத மூலத்திருவிழா , திருக்கார்த்திகை  உற்சவம் எல்லாம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இங்கு சனிபகவான், பைரவர் வழிபாடும் சிறப்பாம். வாதநோய்கள் நீங்குவதாகவும் மற்றும் பக்தர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்  என்ற நம்பிக்கையும் இங்கு வரும் பக்தர்களுக்கு இருக்கிறதாம்.
                                         

     நாங்கள் போன போது ஆனி மக உற்சவத்திற்கு தயார் ஆகிறது கோவில்


திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்த இல்லம் ஊரின் தெற்குத் திசையில் ஒரு சிறுகோவிலாக விளங்குகிறது. அந்தக் கோவில் சில நேரம் திறந்து இருக்கும் சில நேரம் மூடி இருக்கும்.  மூடி இருந்தாலும் பரவாயில்லை வெளியிலிருந்தாவது அவரை வழிபடலாம் என்று போனோம். 


சிவபெருமானே குருவாய் குருந்தமரநிழலில் வீற்றிருந்து  இருந்து தீட்சை அளித்தகாட்சி கோபுரவாயிலில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

நால்வர் வழிபாடு :-

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழிதிருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி.
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.  

நேற்று மாணிக்கவாசகரின் குருபூஜை.

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே.

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்டமுழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்  கரியோய் நீ 
வேண்டிஎன்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும்அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்றுண்டென்னில் 
அதுவும்உன்றன் விருப்பன்றே.

நாமும் இறைவனை சிக்கென பிடித்துக் கொள்வோம். அவருக்கே தெரியும் நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று. தாய்க்கு தானே தெரியும் குழந்தைக்கு எப்போது பசிக்கும், எப்போது எது  தேவை என்று.  தாயைப் போன்ற இறைவன் நமக்கு எல்லாம் அருள்வார்.

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

திருவாசகம்  அளித்த மாணிக்கவாசகர் திருத்தாள் போற்றி!

                                                          வாழ்க வளமுடன்.
                                                   ----------------------------------

திங்கள், 23 ஜூன், 2014

என் கேள்விக்கென்ன பதில்?

அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள்.  10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள். அம்பாளடியாள் கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்து இருந்தார்கள்.


இப்போது  என் பதில்களை  படித்துப்பாருங்கள்.

1.உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

100 வது பிறந்த நாளை  கொண்டாட வேண்டுமென்றால் அந்த சமயத்தில் என் உடல் நலம், மனநலம், குடும்ப நலம் எல்லாம் நலமாக இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி  மகிழ்ச்சியாக 100 வது பிறந்த நாளை கொண்டாடுவேன்.

 என் மாமனார் 105 வயதுவரை வாழ்ந்தார்கள் 100வது பிறந்த நாளை மிக மகிழ்ச்சியாக  உற்றம், சுற்றத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.


2.என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் ?

வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம், பிறரிடம் பேச, பழக.  விழிப்புணர்வுடன் இல்லையென்றால் மிகவும் கஷ்டம்.
இந்தக் கால கட்டத்தில்  இணைய பயன்பாடு, ஐபோன், ஸ்மார்ட் போன்,  கற்றுக் கொள்ள வேண்டியகாலமாய் உள்ளது.  விஞ்ஞானம் வளர வளர அடுத்து அடுத்து நிறைய கற்றுக் கொள்ள  தேவைகள் ஏற்படுகிறது.
இப்போது இணையத்தில்,  அலைபேசியில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது, வாட்ஸ் அப், பேஸ்டைம் என்று.  பேச போட்டோ அனுப்ப கற்றுக் கொண்டேன் இப்போது. என் குழந்தைகள், பேரக்குழந்தைகள் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்-  கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அவர்களிடம்.


3.கடைசியாக  நீங்கள்  சிரித்தது எப்போது ,எதற்காக ?....

என் பேரன் போனவாரம் தன் வேடிக்கைப் பேச்சால் சிரிப்புமூட்டினான். அவன் நல்ல நடிகன் திறம்பட நடித்து நம்மை ஏமாற்றுவான் அப்போது சிரித்தேன்.   குழந்தைகளிடம் விளையாடும் போது நானும் குழந்தையாகி போவேன்.எல்லோரும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.  வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்.


4..  24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன ?....

புத்தகம், படிப்பேன்,, டிரான்ஸ்சிஸ்டரில் பாடல்கள் கேட்பேன்.
அந்தநாளும் வந்ததே!என்று மின்வெட்டு சமயம் மின்வெட்டால் என்ன என்ன நன்மை என்று எழுதி இருக்கிறேன். பழையகாலம் போல்  மொட்டைமாடியில் குடும்பத்தினருடன் வானத்து நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக உரையாடி(பழங்கதை பேசி)மகிழ்ச்சியாக இருப்பேன்.    தொலைக்காட்சி பெட்டி, கணிப்பொறி வந்தபின் நம் பொழுதுகள் அதில் போய்விட்டதே!

5.உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?....

இன்றுபோல் என்றும் வாழ்க!  ஒருவரை  ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, மனம் ஒத்து வாழுங்கள் என்று சொல்வேன். இருபக்க குடும்ப உறவினர்களிடமும் அன்பாய் இருங்கள் என்று சொல்லி இருக்கிறேன் அது போல் என் குழந்தைகள் நடந்து வருகிறார்கள்.


6. உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?...

உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு  மூல காரணம் என்ன  என்று ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கத்தால்  உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப் பட வேண்டும் முதலில்.  அவர்களின் பசிபிணியை போக்கி,  கல்வி அறிவை மேம்படுத்தி, அவர்கள் மனம் நலம் காத்தால்  உலகத்தில் பிரச்சனைகள் ஏற்படாது என்பது என் எண்ணம்.

7. உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?...

என் கணவரிடம்.(கணவரே பிரச்சனையாக இருந்தால் பிள்ளைகளிடம் ! )

8. உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார் அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?..
.
உண்மையான பதில் வேண்டும் என்றால்  முதலில் மனம் வருந்துவேன் என்பது தான், பிறகு போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்று நாம் அந்த தவறை செய்ய வில்லை- பின் ஏன் வருந்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு  ’இன்னல் புரிவோர், எதிரிகளாக இருப்பினும் அவர்களும் மனம் திருந்தி வாழ வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி இருப்பேன்.

9 .உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

பிறருக்கு துக்கம் என்றால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது நம் பண்புதானே!

அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்களை தைரிய படுத்துவேன். அவர்கள் எங்கும் போக வில்லை உங்களுடன் தான் இருக்கிறார்கள் கவலை படாதீர்கள்  என்று. முன்பு நம் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள் எண்ணெய் முந்தியா? திரி முந்தியா என்று  யார் முந்தி செல்வார்கள் யார் பிந்தி செல்வார்கள் என்று தெரியாது. இறைவன் எப்போது நாம் இந்த உலகத்திற்கு வர வேண்டும், எப்போது அவனிடம் வரவேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து விடுகிறார்.  இருக்கும் வரை அவர் நினைவுகளுடன் வாழுங்கள் என்று ஆற்றுப்படுத்துவேன்.

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

தனியாக இருந்தால்  பாடல் கேட்பது பிடிக்கும்,  அதுவும் நல்ல பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும்.  தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள், அதில் பாடல்கள்,  கேட்பேன் தனிமையை இனிமை ஆக்குவது இசைதான். மன அமைதி தருவது இசை. தனிமையை போக்குவது இசைதான். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் பாடல்கள் கேட்டுக் கொண்டு செய்வது எனக்கு பிடித்த ஒன்று.

அப்பா! எப்படியோ கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டேன்.
அம்பாளடியாள் அழைப்புக்கு நன்றி.
அம்பாளடியாள் அழைத்த போது நான் ஊரில் இல்லை நேற்றுத்தான்  வந்தேன் ஊரிலிருந்து.

நிறைய பேர் எழுதி விட்டார்கள் . அதனால் எழுத விருப்பப்படுபவர்கள் எழுதலாம். திண்டுக்கல் தனபாலன், கீதமஞ்சரி, எழுதிய பதிவுகளைப் படித்தேன் அசத்தி இருக்கிறார்கள். சூரி சார் கேள்வி கேட்க , மீனாட்சி அக்கா பதில் அளிக்கும்  காணொளி மிக அருமை.

                                                     வாழ்க வளமுடன்.

செவ்வாய், 20 மே, 2014

இறைவன் படைப்பில் அதிசயங்கள்!

எறும்பைப் பற்றி சிறு வயதில் படித்த கதை நினைவு இருக்கும் எல்லோருக்கும்.தண்ணீரில் தத்தளித்த எறும்புக்குப் புறா மரத்திலிருந்து இலையைப் பிய்த்துப் போட, எறும்பு அதைத் தெப்பமாய் உபயோகித்துத் தப்பித்தது.தப்பித்த எறும்பு புறாவை வேட்டையாட வந்த வேடன் காலில் கடித்து  புறாவைக் காப்பாற்றியது என்று கதை.. பிறருக்கு உதவும் மனப்பான்மைக்கும், செய்நன்றி மறவாமல் இருக்கவும் சொல்லப் பட்ட கதை. 

எறும்பு பூஜித்த கோவில் - எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூரில் இருக்கிறது. 

இப்போது என்ன இந்த எறும்பு பற்றி சொல்கிறேன் என்றுபார்க்கிறீர்களா?

கோவையில் இந்தமுறை போன போது  எங்கள் வீட்டுஅருகில் இருந்த புங்கமரத்தில் வித்தியாசமாய் இருந்த காய்ந்த இலையின் மொத்த சேகரிப்பை பார்த்தேன் . அது என்ன என்று பார்க்கும்போது தான் தெரிந்தது, அவை எறும்புக் கூடு என்று . பின் எப்படி கட்டுகிறது என்று தினம் தினம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.  அதைப் படிப்படியாக எடுத்து இங்கு கொடுத்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் அருகில் உள்ள வேப்ப மரம். மற்றும் தூங்குமூஞ்சி மரத்திலும் கூடு கட்டி உள்ளது   எறும்பு.
 
                          என்னைக் கவர்ந்த காய்ந்த இலையின் சேகரிப்பு.

ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்த ஓர்ப்படியின் பேத்தியும்(சிறுமி) என்னுடன் வெகு ஆர்வமாய்  எறும்பு ஆராய்ச்சி செய்ய உதவினாள். தூங்குமூஞ்சி மரத்தில் இருக்கும் கூட்டை அவள்தான் மொட்டைமாடியில் போய் பார்த்து வந்து ,’ காமிராவை எடுத்துக் கொண்டு வா ஆச்சி வந்து பார் இங்கும் கூடு கட்டி இருக்கு’ என்றாள்,போய்ப்  பார்த்தால் அதுவும் எறும்புக் கூடுதான் அதுவும்  புங்க மரத்தில் இலையால் கூடு கட்டிய அதே எறும்பு  வகை தான். பின் வேப்பமரத்தை பார்த்தால் அதிலும் கட்டி இருப்பது தெரிந்து கொண்டேன்.

தரையில் நிமிசமாய் மண்ணைக் குவித்து வைக்கும் எறும்புப் புற்றையும், செடிகளில் வெண் பஞ்சாய் கூடு வைத்து செடியை சாகடிக்கும் எறும்புகளை பார்த்து இருக்கிறேன். இப்படி இலைகளை மடித்து கூடு கட்டும் எறும்பை இப்போது தான் பார்த்தேன்.

அமெரிக்கா போனபோது ஒரு படகுத் துறைக்கு அருகில் இருந்த மரத்தில் குளவி இலைகளால் கூடு கட்டியதை பார்த்தேன். அதை என் மருமகள் எடுத்த படம் கீழே பகிர்ந்து இருக்கிறேன் .



என்  சின்னக் காமிராவில் எடுத்த படம்

                 
           குளவி கூடு கட்டி உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் பரிதியின் ஒளி  

கோவையில் எடுத்த எறும்பு கூடு உருவாகும் படங்கள் பின் வருவது. இது நான் எடுத்த படங்கள்.
                   



               ஒன்றுக்கு ஒன்று பேசிக்கொண்டு வேலை பார்க்கும் அழகு.

இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் எவ்வளவு அறிவைக் கொடுத்து இருக்கிறான் என்று வியந்து பார்க்க வைக்கும் காட்சி
மடித்துத் தைக்கும் அழகு. தையல் குருவி இரண்டு இலைகளை தைக்குமே அது போல்
இலைகளில் மடிப்பு இடையே வெண் இழைகள்

பஞ்சு போன்ற இழைகளால்  இலைகளை மடித்து பொட்டலம் போல் கட்டும் விந்தை
புங்கமரத்து இலைகளையும்  கிளைகளையும்இணைத்து கட்டும் எறும்புகள்

தூங்குமூஞ்சிப் பூவின் காய்ந்த கொப்பை சேர்த்த்து இழை பின்னி , பின் இலைகளை இணைக்கிறது கூடாய்



தூங்கு மூஞ்சி மரத்தின் பூ, இலைகள் மாலையில் மூடிக் கொண்டாலும் விழித்து இருக்கும் பூ.
வேப்பமரத்தில் வேப்பமர இலைகளால் கட்டிய கூடு
என் பேரன் அடிக்கடி பார்க்கும் அனிமேஷன்  படம்- ’Bug's life ’  நானும் அதை அவனுடன் விரும்பிப் பார்ப்பேன். எறும்பு சுறு சுறுப்பு என்றுதான் தெரியும் ஆனால் அதன் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது,  பிற உயிரினங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள எவ்வளவு கஷ்டப்படுகிறது,  உணவை சேகரிக்க எத்தனை பாடு படுகிறது என்று எல்லாம் அழகாய் காட்டும் படம்.

அது போல் புங்க மரத்தில் கூடு கட்டும் எறும்புகளின் உழைப்பைப் பார்த்தேன். இலைகளில் விலக்கி, சரியாக பார்க்க முற்பட்ட போது அவை அங்கும் இங்கும் கலைந்து பின் மறுபடியும் தன் வேலையில் கண்ணும் கருத்துமானதை பார்க்கும் போது எறும்புகளின் மேல் தனிப் பாசமே வந்து விட்டது.
நம்மிடம் எறும்புகள் போல் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால்    எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சின்ன வேலையில் இடைஞ்சல் வந்தால் எவ்வளவு கோபம், எவ்வளவு மனத்துயர் படுகிறோம். எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களின்    வாழ்வில் வெற்றி நிச்சயம்! 

                                                         வாழ்க வளமுடன்!



செவ்வாய், 6 மே, 2014

அம்மா என்றால் அன்பு

                    

அம்மா என்றால் அன்பு.   அன்பு என்றால் அம்மா. சொல்லச் சொல்ல இனிக்கும், அம்மா என்னும் அழைப்பு. அவரவர்களின் அம்மா அவரவர்களுக்கு என்றுமே சிறப்புதான்.(உயர்த்திதான்)

மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

 முன்பு எல்லாம் அன்னையர் தினம் என்று கொண்டாடி அம்மாவுக்கு வாழ்த்து சொன்னது இல்லை. என் அம்மாவுக்கு இப்போது வாழ்த்து சொல்கிறேன்:-

 ”அம்மா! அன்னையர் தின வாழ்த்துக்கள்  அம்மா!. உங்கள் அன்புக் குழந்தைகளுக்கும், ஆசைப் பேரக்குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்க அம்மா! அவர்களை எப்போதும் ஆசீர்வாதம் செய்துகொண்டுதான் இருப்பீர்கள் என்றாலும் இப்போது உள்ள குழந்தைகள் அந்த அந்த நாள் வாழ்த்துக்களை விரும்புகிறார்களே! ”

சிறு குழந்தையாக இருக்கும்போது குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு இதை யார் சொல்லிக் கொடுத்தா?  என்றால் - அம்மா. இவ்வளவு அழகாய் யார் தலைவாரி விட்டா? என்று கேட்டால் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க ’அம்மா’ எனும் குழந்தை. யார் இந்த டிரஸ் வாங்கித் தந்தா? அழகாய்  இருக்கே! என்றால் ,’அம்மா’ என்று எதைக் கேட்டாலும் ’அம்மா’ என்று  குழந்தை   சொல்லும். திருமணத்திற்குப் பின்னும்,  ’எங்க அம்மாவீட்டில்’ என்று சொல்வதை விட முடியாது.  இப்படி அம்மா பெருமை பாடுவது காலம் முழுவதும் தொடரும்!

இப்போது விளம்பரங்கள் எல்லாம்  அம்மாவுக்குத்  தான் தெரியும்  குழந்தைகளைப் பற்றி என்று சொல்கிறது.

”எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
 மண்ணில் பிறக்கையிலே  
அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் 
அன்னை வளர்ப்பதிலே”

என்று அதிலும் அன்னைக்குத்தான் பெருமையும், சிறுமையும். குழந்தைகள் குற்றம் செய்தாலும் பெற்றோர்களை - குறிப்பாய் அம்மா வளர்ப்பைத் தான் குற்றம் சொல்லும் உலகம். ”மக்கள் குற்றம் பெற்றோர் தலைமேல் ”என்று. எவ்வளவு பெரிய விஷயத்தை ஒருசின்ன கருத்துப்படத்தின்  மூலம் விளக்கி விட்டார்கள் விகடன் பத்திரிக்கையில்.
அந்த கருத்துப்படத்தைப் பாருங்கள் கீழே . கருத்தின் மூலம்  பாடமும் சொல்லித் தருகிறது அன்றைய விகடன்  :--
(கீழே பகிர்ந்த படங்கள் எல்லாம் விகடன் பவழ விழா மலரில் இருந்து எடுத்த படங்கள்.  1926 - 2002)

                                           

தாய் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு தரும் அன்பு என்பது பொக்கிஷத்தில் சேமித்தவை போல வாழ்நாள் முழுமைக்கும் கிடைக்கும். அள்ள அள்ளக் குறையாதபொக்கிஷம் அது!

என் தாயின் நினைவுகள் சில:--

அதிகாலையில்  எழவேண்டும், கடவுளை வணங்க வேண்டும்
அந்த அந்த நேரத்தில் அந்த அந்த வேலையை முடிக்க வேண்டும். அதில் முக்கியமானது நேரத்திற்கு சாப்பிடுவது.  நேரத்திற்குச் சாப்பிட்டாலே உடலுக்கு ஆரோக்கியம். வீட்டுவேலைகளும் நேரத்திற்கு நடக்கும் என்பது அவர்களின் கருத்து. நேரம் தவறி உண்பவர்களைப் பார்த்தால் இந்த வயிற்றுக்கு தானே சம்பாதிக்கிறீர்கள் வயிற்றை காயப்போடலாமா இவ்வளவு நேரம் என்று கடிந்து கொள்வார்கள்.

 துணி காயப்போட்டால் காய்ந்தவுடன் மடித்து விட வேண்டும். கொடியிலிருந்து எடுத்தவுடன் மடித்தால் ஒரு அழகு, அதை அங்கே போட்டு இங்கே போட்டு மடித்தால் நன்றாக இருக்காது என்பார்கள்.
பீரோவில் அழகாய் துணிமணிகள் மடித்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பானையில் சுருட்டி வைத்த மாதிரி இருக்கு  என்பார்கள்.
மதியம் தூங்கக் கூடாது. பொழுதை வீணாய்க் கழிக்காமல் ஏதாவது கைவேலை செய்தல், நல்ல புத்தகம் படித்தல், சுவாமி புத்தகங்கள் படித்தல் என்று செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் படிக்கும் தோத்திர புத்தகங்களுக்கு அட்டை போட்டு சுத்தமாக வைத்து இருப்பார்கள் கொஞ்சம் கிழிந்து விட்டால்  கனமான அட்டை வைத்து   தைத்து  அட்டை போட்டு விடுவார்கள். எனக்கு பள்ளி நோட்டுக்கள், புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அம்மா தான் அட்டை போட்டுத் தருவார்கள், நான் செய்ததே இல்லை. (என் குழந்தைகளுக்கு என் கணவர் போட்டு கொடுப்பார்,அப்புறம் அவர்களே போட்டுக் கொண்டார்கள்.)

அம்மா வித விதமாய் ஜடை பின்னுவார்கள். என் மகள் , மற்றும் அண்ணன், தங்கை தம்பி  மகள்கள் எல்லாம்  ஆச்சியிடம் ஆசையாக பின்னிக் கொள்வார்கள்.

கண்கண்டால் கை செய்ய வேண்டும் என்பார்கள். பின்னல் கைவேலை எல்லாம் அந்த அந்த சீஸனுக்கு எது புதுசோ அதை செய்து விடுவார்கள் அவை ஒவ்வொரு கொலுவுக்கு வந்து விடும் எனக்கு.

கொலுவில்அம்மாவின் கைவேலைப்பாடுகள்  இடம்பெற்று அம்மாவின் நினைவுகளை தந்து கொண்டே இருக்கிறது.
புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பைண்ட் செய்தோ அல்லது கைப்பட எழுதியோ  வைத்துக் கொள்வார்கள். அவற்றை அம்மாவின் பொக்கிஷ பகிர்வுகள் என்று  முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

ஆண்களுக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும்.  பெண்களுக்கு ஓய்வே கிடைப்பது இல்லை (அவர்களே விருப்ப ஓய்வு பெற்றால்தான் உண்டு). அவர்கள் தன் குழந்தைகளுக்கு, தன் குழந்தைகளின் குழந்தைகளுக்கு, , மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள், அன்பு தரும் பலத்தால்.  அதை விகடனில்  பகிர்ந்து இருப்பார்கள்.
அவற்றைக் கீழே பார்த்து மகிழுங்கள்.:---



இப்படிப் பட்ட நினைப்பும் அன்பும் அரவணைப்பும் தான் அவர்களை நீண்ட நாள் வாழ வைக்கிறது. ”அணைத்து வளர்ப்பவளும் தாய் அல்லவா! அணைப்பில் அடங்குபவளும் அவள் அல்லவா!

அன்புக்கு ஏங்கும் பெற்றோர் நிறைய இருப்பார்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைத் தாருங்கள், அன்பாக அணைத்து அம்மா சாப்பிட்டாயா என கேட்டுப்பாருங்கள்  மகிழ்ந்து போவார்கள் வேறு ஒன்றும் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இல்லை.

முன்பு நாலு நாளுக்கு ஒருமுறை நாலுவரி  கடிதம் எழுது என்று கேட்டார்கள் பெற்றோர்கள்.  -அப்புறம் தொலைபேசி வந்தபின் - அடிக்கடி போன் செய் என்றார்கள்.  இன்னும் தகவல் நுட்பம் வளர்ந்தபின் இணையத்தில்  இன்று என்ன சாப்பிட்டாய்?என்று நேரில் பார்த்துக் கொண்டே பேசும் வளர்ச்சி பெற்றபின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது.

இப்போது அடிக்கடி ஸ்கைப்பில் வா உங்களைப் பார்க்க வேண்டும்  என்று தூரத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் பெற்றோர் கேட்கும் காலம் ஆகிவிட்டது.

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்  அவர்கள் எழுதிய  தினசரி தியானத்திலிருந்து ஒரு சிறு பகிர்வு:-

தாயின் உள்ளம்:-
தன் குழந்தையிடத்துக் குற்றம் ஒன்றும் காணாது குணமே காணும் பாங்குடையவள் தாய். என் தாயே, உனதருளாலன்றி உய்யும் ஆறு நான் அறிகிலேன்.

கடவுளை நோக்கி நாம் ஒரு அடி சென்றால் அவர் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறார்.. பெற்ற தாய் படைத்துள்ள  உள்ளக் கசிவு கடவுளின்கருணையேயாம். தாயின் உள்ளத்தை அறிபவன் கடவுளின்கருணையை அறிபவன் ஆகிறான்.

எத்தன்மைக் குற்றம்
இயற்றிடினுந் தாய்பொறுக்கும்
அத்தனமை நின்னருளும்
அன்றோ பராபரமே.
===================தாயுமானவர்

அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்! தாய்மை உணர்வு  உடைய அனைத்து  தாயுமானவர்களுக்கும்  வாழ்த்துக்கள்!


அன்னையர்தினம் , அன்பின் வழி , அம்மாவின் பொக்கிஷங்கள்,
-இவை நான் முன்பு எழுதிய பதிவுகள்.

வாழ்க வளமுடன்!
-------------

சனி, 3 மே, 2014

கழுகுமலை மிளகாய்பழ சித்தர் ஜீவசமாதி

நம் நாட்டில் சித்தர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். சிலர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து மறைந்தும் போகிறார்கள். சிலர்  காலம் காலமாய் பேசப்படுகிறார்கள். சிலர் நிறைய அற்புதங்களை ,   சித்து விளையாட்டுகளை செய்து காட்டுவார்கள். சிலர் அற்புதமான மருத்துவம் அறிந்தவர்களாய் இருப்பார்கள். சித்தர்கள் திருமூலர் போல்  கூடு விட்டுப் பாயும் கலை அறிந்தவர்களாக இருப்பார்கள். திருமூலருக்குத் திருவாவடுதுறையில் ஜீவசமாதி உள்ளது.  வருடம் ஒரு பாடலாய் மூவாயிரம் வருடம் வாழ்ந்து மூவாயிரம் பாடல் அடங்கிய திருமந்திரம் தந்தார் நமக்கு.

நமக்கு தெரிந்த சித்தர்கள் 18 . எங்கள் ஊரில்  பெரிய கோவிலில்(மயூரநாதர்) குதம்பைச் சித்தர் ஜீவசமாதியில் இருக்கிறார்.

நான் இங்கு சொல்லப்போகும் சித்தர் கழுகுமலையில் வாழ்ந்து சித்தியடைந்த மிளகாய்ப்பழசித்தர் பற்றி.

கிரிவலப்பாதையில் உள்ள அந்த சித்தரின் சமாதிக்கு சென்ற பங்குனி  உத்திரநாள் அன்று  (13/4/2014) போய் இருந்தோம்.

250 வருடத்திற்கு முன்பு அவர் ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். புரட்டாசி அமாவாசை அன்று அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது என்றார்கள்.
அவர் மேல் பக்தி உள்ளவர்களின்  கண்களுக்கு இன்னும் தெரிகிறார் என்றார்கள்.

கழுகாசல மூர்த்தி கோவில் யானை  , சித்தர் கோவிலின் வாசலின் அருகில் வரும் போது முட்டி போட்டு  வணங்கிவிட்டுத்தான் செல்லுமாம். அவர் மேல் நம்பிக்கை வைத்து  வேண்டுதல்களை வைத்து வணங்கிச் செல்பவர்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் வந்து தன்னால் முடிந்த காணிக்கைகளை செய்வார்களாம்.

நோய் உற்ற போது மிளகாயொன்றை  எடுத்து சித்தரை மனதில் நினைத்துக் கொண்டு விபூதியை பூசிக் கொண்டு மிளகாயை தண்ணீரில் போட்டு விட்டு பின் மறுநாள்  சித்தரை மனதில் நினைத்து நோய் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குடித்தால் நோய் குண்மாகும் என்று சொல்கிறார்.
-இவை எல்லாம் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொன்னவை.

சித்தருக்குப் பூஜை செய்கிறார்கள்
விளக்கின் ஒளி வெள்ளத்தில் சித்தர்
தலைமுறை தலைமுறையாக இவர்கள் குடும்பம் தான் கோவிலைப் பார்த்துக் கொள்கிறார்களாம் ,  அம்மா சித்தரைப்பற்றி சொல்கிறார்கள்.
கோவிலைப்பற்றி விபரங்களை சொல்லும் தாயும் மகனும்

உள் வாசலில் வாகனங்களை வைக்காதீர்கள் என்று கொட்டை எழுத்தில் எழுதினாலும் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.(பூசாரியின் வாகனம் போலிருக்கிறது)
ஜீவசமாதியின் முகப்பு வாசல்

பூவரசம் பூ 
வானைத் தொடும் வேப்பமரம், பூவரசு மரம்- சமாதி அருகில்
வேப்பமர நிழலில் கல் மண்டபம்  - இன்றும் இந்த மண்டபத்தில் சித்தர் வந்து அமர்வதையும் அதன் பக்கத்தில் நடந்து போவதையும் பார்த்ததாய் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொல்கிறார்கள்.

மிளகாய்ப் பழ சித்தர் கழுகுமலைப்பகுதியில் வாழ்ந்து இருக்கிறார் . அவருடைய உணவு மிளகாய்ப் பழங்கள் மட்டும் தானாம். தினம் காடுகளில் மலைகளில் சுற்றி வருவாராம் மிளகாய்ப் பழம் சாப்பிட்டு விட்டு தவத்தில் அமர்ந்து இருப்பாராம்.

சிறுவயதில் வீட்டில் மிளகாய்ப் பழம் சாப்பிடுவாராம். சித்தரின் பெற்றோர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறாய் என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். அது முதல், மலைதான் அவரின் வீடாய் மாறி விட்டது.
சித்தர் சமாதியைப் பார்த்துக் கொள்ளும் வயதான பெண்மணி கூறிய செய்திகள் இவை. அவரும் அவர்மகனும் நமக்கு செய்திகள் சொன்னார்கள்.  விபூதி, மிளகாய் பிரசாதமாய் கொடுக்கப்பட்டது.

கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கி கொடுங்கள் என்றார்கள் . நாங்கள் எண்ணெய் வாங்க கடைக்கு போக வேண்டுமே அதனால் அவர்களிடம் பணம் கொடுத்து விட்டோம்.

உங்கள் வேண்டுதல்களை சொல்லிச் செல்லுங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் மிளகாய்ப்பழ சித்தர். அடுத்தமுறை வரும் போது உங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு மகிழ்ச்சியாக வந்து வணங்கி செல்லுங்கள் என்றார்கள். எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?    என்று கேட்டுக் கொண்டார்கள். எல்லோர் நலனுக்கும் சித்தரிடம் சொல்லி பூஜை செய்தார்கள்.
நாங்களும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தோம்.

                                                  வாழ்க வளமுடன்
                                                   ---------------------------