இன்று காலை போட்ட கோலம்
மார்கழி மாதம் வந்து விட்டால் வீடு தோறும் பக்தி மணம் கமழும். அதிகாலை எழுந்து கொள்ளாதவர்களும் மார்கழி மாதம் எழுந்து விடுவார்கள், அனைத்து கோயில்களிலும் பாடல்கள் வைத்து விடுவார்கள். மார்கழி குளிரும் இப்போது குறைந்து இருக்கு, முன்பு போல குளிரவில்லை.
தெருவெங்கும் பஜனை செய்து போவோர் உண்டு. இல்லங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடுவோர் உண்டு. அதிகாலை கோலம் போட்டு , விளக்கு வைத்து குளித்து கோயில் போய் வழி படுவது மகிழ்ச்சியான விஷயம். இந்த பதிவில் திருப்பாவை, திருவெம்பாவை பாடலை பகிர்ந்து இருக்கிறேன், சில நினைவுகளை எழுதி இருக்கிறேன், படித்துப்பாருங்கள்.
முன்பு மார்கழி மாத சிறப்புக்களைப்பற்றி. ஓவ்வொரு மார்கழியிலும் பதிவு போட்டு இருக்கிறேன். அவற்றில் சில இங்கு.
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுமீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகந்தன்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேல் ஓர் எம்பாவாய்
- ஆண்டாள் அருளியது
ஆதியும் அந்தமும் இல்லா அருபெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டிங்ங்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிலோர் எம்பாவாய்
- மாணிக்கவாசகர் அருளியது
மாயவரத்திலிருந்து மதுரை வந்த போது கலைநகர் என்ற இடத்தில் இருந்தோம், அந்த வீட்டுக்கு அருகில் இருந்த கோயில் ஸ்ரீ காளத்தீசுவரர், அம்மன் பேர் ஞானப்பிரசுனாம்பிகை (ஞானப்பூங்கோதை).
அங்கு மார்கழி மாதம் அதிகாலையில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி , மற்றும் திருப்பாவை பாட போவேன், என் கணவர் என்னை அந்த கோயிலில் அதிகாலை விட்டு விட்டு அவர்கள் நடைப்பயிற்சிக்கு போவார்கள்.
முன்பு இந்த கோயிலுக்கு மார்கழி மாதம் பதிவு போட
வலையேற்றி இருந்து இருக்கிறேன், ஏனோ போடாமல் விட்டு இருக்கிறேன், இப்போது என் பழைய மார்கழி பதிவுகளை படித்து கொண்டு இருந்த போது இந்த பதிவு டிராப்டில் இருந்தது படங்களுடன். உடனே இந்த வருட மார்கழி பதிவாக என் மலரும் நினைவுகளுடன் மலர்ந்து விட்டது.
காலை பாடுகிறோம்
பாடி முடிந்ததும் பூஜை
பிரதோஷ பூஜை நன்றாக நடைபெறும்
புதிதாக அரசமரம், வேப்பமரம் கீழ் மேடை கட்டி விநாயகரும், ராகு , கேதுவும் வைத்தார்கள் அப்போது அந்த விழாவில்
இருள் விலகா நேரம் நாங்கள் பாடி முடித்து விடுவோம்,பாடி முடித்தவுடன் பூஜை ஆகிவிடும்
பாட வந்தவர்களுக்கு கோயில் நிர்வாகம் சூடாய் பசும் பால் கொடுப்பார்கள்.
அபிசேகம், அலங்காரம் , முடிந்து பூஜை ஆனதும் சில நேரம் நடைபயிற்சி முடித்து வந்து என்னை அழைத்து போவார்கள். பால் அருந்தி கொண்டு இருந்தால் , "விடிந்து விட்டது மெதுவாக வா" என்று சொல்லி போவார்கள்.
ஒரு நாள் எங்களை எல்லாம் படம் எடுங்கள் என்ற போது எடுத்த படங்கள் இவை. மேலே ஸ்வாமி படங்கள் நான் எடுத்த படங்கள்.
என்னைப்பார் என்று சொன்ன போது முகம் தூக்கி சிரிப்புடன் பார்த்தபோது
தினம் என் இடம் அந்த சுவற்றுப்பக்கம் தான், சாய்ந்து உட்கார வேண்டும், கால் வலித்தால் சிறிது நிற்பேன், யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் என் இருக்கையை வைத்துக் கொள்வேன்.
அப்புறம் நான் படும் சிரமத்தைப்பார்த்து கோவில் நிர்வாகத்தினர் எனக்கு நாற்காலியை கொடுத்து விட்டார்கள், எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும், நான் மட்டும் நாற்காலியில் அமர்ந்து பாடுவது. அதனால் பரவாயில்லை என்று சொன்னேன், எழுந்து கொள்ள கஷ்டபடுவதை பார்த்து மற்றவர்கள் என்னை சமாதானம் செய்து நாற்காலியில் அமர வைத்தார்கள். அந்த அன்பானவர்களை நினைத்து கொள்கிறேன் இப்போது.
வீட்டில் என் கணவரும் காலை விளக்கு முன் அமர்ந்து திருப்பாவை 30 பாடல்களும், திருவெம்பாவை , திருப்பள்ளியெழுச்சி அத்தனை பாடல்களையும் தினம் படித்து விடுவார்கள், அப்புறம் நான் பிரசாதம் செய்து வைப்பதை வைத்து அனைத்து படங்களுக்கும் மலர் சாற்றி பூஜை செய்து விடுவார்கள்.
பிரதோஷத்திற்கும் தேவாரம், திருவாசகம் படிப்போம் அப்பொதும் நாற்காலி கொடுத்து விடுவார்கள் எனக்கும் என் கணவருக்கும்.
சின்ன கோவிலாக இருந்தாலும் எல்லா விஷேகங்களும் நடக்கும். ராகு கால பூஜைக்கு பாடபோவேன், பைரவர் ராகு கால பூஜைக்கு பாட போவேன், சதுர்த்தி, பெளர்ணமி பூஜை என்று எல்லா வற்றுக்கும் கூட்டு வழிபாடு நடக்கும் போவேன்.
அங்கு இருந்த இரண்டு ஆண்டு காலம் அருமையான காலங்கள். இந்த வீட்டுக்கு வந்து பக்கத்தில் ஐய்யனார் கோவிலுக்கு மார்கழி மாத பூஜைக்கு போவோம் நானும் என் கணவரும்.. இந்த கோயிலில் அதிகாலை கோலம் போடும் சிறு பெண்களைப் பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.
பிரதோஷ பூஜை நன்றாக நடைபெறும்
பிரதோஷ சாமி கோவிலை வலம் வரும். சக்கரம் வைத்த சிறு வண்டி இழுத்துக் கொண்டு வருவார்கள்.
ஆடி மாதம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் உண்டு
தேய்மிறை அஷ்டமி, ஞாயிறு ராகு கால வழிபாடு உண்டு பைரவருக்கு
புதிதாக அரசமரம், வேப்பமரம் கீழ் மேடை கட்டி விநாயகரும், ராகு , கேதுவும் வைத்தார்கள் அப்போது அந்த விழாவில்
ஐப்பசி அன்னாபிஷேகம்
ஐப்பசி அன்னபிஷேகம் நடக்கும் அன்று அனைவருக்கும் அன்னதானம் உண்டு. நாம் காய்கறிகள், அரிசி மளிகைப் பொருட்கள் கொடுக்கலாம்.
கார்த்திகை மாதம் சங்காபிஷேகம் நடக்கும்
மாத சதுர்த்தி சங்கடகர சதுர்த்தி இவை சிறப்பாக நடக்கும். சனிபகவான் தனி சன்னதியில் இருப்பார் அவருக்கு சனிக்கிழமை, சனி பெயர்ச்சி சமயம் சிறப்பாக நடக்கும்.
படங்கள் எல்லாம் பழைய கைபேசியில் தூரத்திலிருந்து எடுத்த படங்கள் தெளிவு குறைவாக இருக்கும்.
இப்படி எல்லா விழாக்களுக்கும் கோயில் போய் வந்தவள் இப்போது தொலைக்காட்சியில் எல்லா விழாக்களையும் நேரடி காட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறேன்.
இறைவன் கால்களுக்கு நல்ல பலத்தை கொடுத்தவுடன் கோயில்களை வலம் வர வேண்டும். மருத்துவரிடம் காட்டி மருந்துகள் எடுத்து கொள்வதால் வலி குறைந்து வருகிறது.
இன்று காலை மார்கழி மாதம் என்பதால் எங்கள் வளாக பிள்ளையாரை வணங்கி வந்தேன், குருக்கள் வரவில்லை எட்டுமணிக்கு தான் வருவாராம், நான் 6 மணிக்கே போய் விட்டேன். பிள்ளையாரை வணங்கி வலம் வந்து வீட்டுக்கு வந்து விட்டேன்.
வானொலியில் எம். எல் வசந்தகுமாரி அவர்களின் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை கேட்டேன்.
யூடீயூப்பில் எம். எல் வசந்தகுமாரி அவர்களின் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் முழுதும் கேட்டுக் கொண்டே காலை வேலைகளை தொடர்ந்தேன்.
பாசிப்பருப்பு பாயாசம் செய்து இறைவனை வணங்கினேன்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!.
---------------------------------------------------------------------------------------------------
பழைய நினைவுகளோடு படங்களும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.
பதிலளிநீக்குவாழ்க வையகம்
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//பழைய நினைவுகளோடு படங்களும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.
வாழ்க வையகம்//
உங்கள் கருத்துக்கும் வையகத்தை வாழ்த்தியதற்கும் நன்றி.
மார்கழி மலர்ந்தது போல உங்கள் பழைய நினைவுகளும் மலர்ந்திருக்கிறது. மாமாவின் படத்துடன்...
பதிலளிநீக்குபடங்கள் நல்லாருக்கு.
மார்கழி என்றால் பெரிய கோலம், சீக்கிரம் குளியல், பஜனை, பொங்கல் பிரசாதம், எம் எல் வி இவை அனைத்தும் பிரிக்க முடியாதவையாக இருந்த நாட்கள் கிராமத்தில் இருந்த காலம்.
இப்போது இதில் ம்ம்ம்ம் யோசிக்கிறேன். கோயில் பிரசாதம் மட்டும் என்று தோன்றுகிறது. அருகில் சிவன் கோவில்...
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//மார்கழி மலர்ந்தது போல உங்கள் பழைய நினைவுகளும் மலர்ந்திருக்கிறது. மாமாவின் படத்துடன்...//
ஆமாம் கீதா , நினைவுகளும் மலர்ந்தது உண்மை.
மார்கழி என்றால் , குளிர், அதிகாலை குளியல், மற்ற நாள் போடு கோலங்களை விட பெரிதாக தினம் கோலத்தில் காவி கொடுத்து
மாதம் முழுவதும் சிறப்பு என்று போடுவோம்.
பஜனை, காலை எம்.எல்.வி பாடல், கோவில் பொங்கல் பிரசாதம் என்று இளமை காலங்கள் போனது உண்மை.
அப்புறம் கோவில் வழிபாடு , பிரசாதங்கள் என்று போனது . இப்போது என் வயது காலம் வீட்டிலிருந்து வணங்கினால் போதும் என்று இருக்கிறது.
//இப்போது இதில் ம்ம்ம்ம் யோசிக்கிறேன். கோயில் பிரசாதம் மட்டும் என்று தோன்றுகிறது. அருகில் சிவன் கோவில்...//
இப்போது கூடுதல் பொறுப்பில் இருக்கிறீர்கள், தந்தையை அவர் வயது காலத்தில் பார்த்து கொள்வ்தே பெரிய புண்ணியம் கீதா. கோவிலுக்கு போய் பெறும் புண்ணியத்தை விட இது மேலானது.
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
இனிமையான நினைவுகள். ஸார் இருந்தபோது எழுதப்பட்ட பதிவு வெளியிடப்படாமல் இருப்பது வியப்பென்றால் இப்போது வெளியிடக் கிடைத்திருப்பபது மனதுக்கு உவப்பு.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஇப்படி பதிவுகள் முற்று பெறாமல் நிறைய பதிவுகள் சேமிப்பில் இருக்கிறது. தகுந்த காலத்தை எதிர்பார்த்து.
இந்த பதிவு இன்று என் கண்ணில் பட்டது வியப்புதான் எனக்கும் . மார்கழி பதிவு என்ன எழுதுவது? என்று யோசித்து என் பழைய பதிவை மீள் பதிவாக போட்டு விடலாம் தேடிய போது கிடைத்த பதிவு.
நீங்கள் சொன்னது போல மனதுக்கு மகிழ்ச்சியும், தவிப்பும் ஒரு சேர கிடைத்தது.
நிமிர்ந்து பார்க்கச் சொல்லி ஸார் கேட்டு புகைப்படம் எடுத்திருக்கும் க்ளிக் அருமை. அப்போது அந்தக் கண்களில் அன்பான புன்னகை தெரிகிறது. இப்போது அதே கண்களில் இதைப் பார்க்கும்போது அதே அன்பால் அதன் நினைவால் கண்கள் குளமாகி இருக்கும்.
பதிலளிநீக்கு//நிமிர்ந்து பார்க்கச் சொல்லி ஸார் கேட்டு புகைப்படம் எடுத்திருக்கும் க்ளிக் அருமை. அப்போது அந்தக் கண்களில் அன்பான புன்னகை தெரிகிறது. இப்போது அதே கண்களில் இதைப் பார்க்கும்போது அதே அன்பால் அதன் நினைவால் கண்கள் குளமாகி இருக்கும்.//
நீக்குஆமாம், ஸ்ரீராம், கண்கள் குளமாகி போனதுதான். பின் என் மார்கழி நினைவுகளை மகளிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டேன்,
என்னை திடபடுத்திக் கொள்ள. மகனிடம் மகிழ்வாய் பேசி கவலை படும் மனதை மாற்றிக் கொண்டேன். கவலை உடல் நலத்திற்கு கேடு என்று பிள்ளைகள் சொல்வார்கள்.
அருகிலுள்ள அய்யனார் கோவில் பற்றி நீங்கள் முன்பு படங்களுடன் பதிவிட்டது எனக்கும் நினைவில் இருக்கிறது. எல்லா கோவில்களுக்கும் அலைந்தது ஒரு காலம் என்றால் இப்ப்போது வீட்டிலிருந்தே வணங்கலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
பதிலளிநீக்கு//அருகிலுள்ள அய்யனார் கோவில் பற்றி நீங்கள் முன்பு படங்களுடன் பதிவிட்டது எனக்கும் நினைவில் இருக்கிறது//
நீக்குநினைவு இருக்கா? நல்லது ஸ்ரீராம், நினைவு இல்லை என்றால் மீள் பதிவாக போட்டு விடும் அபாயம் உள்ளது.
. //எல்லா கோவில்களுக்கும் அலைந்தது ஒரு காலம் என்றால் இப்ப்போது வீட்டிலிருந்தே வணங்கலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம். //
ஆமாம், மகனுடன் கோவையில், மதுரையில் சில கோவில்களுக்கு போய் வந்தேன்., சாரின் திதி அன்று பக்கத்தில் இருக்கும் கோவில் (போன பதிவில் போட்ட கோயில்) தெரிந்த ஆட்டோவில் போய் வந்தேன். இனி தனியாக போய் எல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.
தொலைக்காட்சியில் மிக அருமையாக பக்கத்தில் எல்லாம் சுவாமியை தெளிவாக காட்டுகிறார்கள் அதை பார்த்து கொள்கிறேன். அதுவே போதும்.
உங்கள் அக்கறையான பின்னூட்டங்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மார்கழி திருப்பாவை, பாடல்கள் மனதிற்கு மகிழ்வை தருகிறது. தங்களது மார்கழி நினைவாக வந்த மலரும் பதிவு மிக அருமையாக உள்ளது.
படங்கள் அனைத்தும் மிக அழகு. உங்கள் புண்ணியத்தில் கற்பூர ஒளியிலே ஈஸ்வர தரிசனம் கிடைத்தது.
நீங்கள் அப்போது தங்கள் கணவருடன் சேர்ந்திருக்கும் போது சென்று வந்த கோவில் படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. கோவில்களுக்குச் சென்று திருப்பள்ளியெழுச்சி பாட்டெல்லாம் பாடி வந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். அந்த சந்தர்ப்பங்கள் உங்களுக்கு அமைந்தது இறைவன் தந்த புண்ணியந்தான். இறைவனுக்கு நன்றி. 🙏.
தங்கள் கணவரைப் பார்த்து போட்டோவிற்காக சிரித்தபடி முகம் திருப்பி இருக்கும் போட்டோ அருமை. எத்தனை நினைவுகள் இப்படி நம்மோடு தங்கி விடுகிறது. பழைய போட்டோக்களை பார்க்கும் போது ஒரு சந்தோஷம் வருவது உண்மைதான்.
தாங்கள் முன்பு கோவில் வாசலில் கோலம் போடும் பெண்களை குறித்து தந்த பதிவுகள் நினைவில் உள்ளது.
அந்த கோவிலில்தான் எத்தனை பூஜைகள். வழிபாடுகள். விழாக்கள். அனைத்தையும் படிக்கவே மனதிற்கு நன்றாக உள்ளது. தாங்களும் விடாமல் அத்தனை விஷேட தினங்களுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள். தெய்வ பலம் தங்கள் உடல்நலனை காக்கும்.
இப்போது கோவில்களுக்கு போகாமல் வீட்டிலேயே இறைவனை காணும் விழாக்கள் சம்பந்தபட்ட வசதிகள் வந்திருப்பது நன்மைக்குத்தான். உங்களுக்கு மனப்பாடமாகியிருக்கும் பாடல்களை சொல்லி இறைவனை துதியுங்கள். உறவின் துணையுடன் கோவில்களுக்கு பத்திரமாகச் சென்று வாருங்கள்.
முன்பு நானும் இங்கு கூட குளிரை பொருட்படுத்தாமல் அதிகாலை எழுந்து விடுவேன். இப்போது கடந்த இரண்டு வருடங்களாக குளிர் ஒத்து வரவில்லை. அதுவும் இங்கு குளிர் அதிகம் வேறு. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்த ஜலதோஷம் இன்னமும் என்னை விட்டு போவேனா என்கிறது. காலை ஆறுமணிக்கு மேல்தான் எழுந்திருக்கவே முடிகிறது.
மதுரை திருமங்கலத்தில் இருக்கும் போது நான்கு மணிக்கே எழுந்து வாசல் தெளித்து கோலங்கள் போடுவதும் நினைவினில் வந்தது. (அது வாடகை வீடுதான். குடியிருப்போர் (எங்களுடன் சேர்த்து இருவர்) ஆளுக்கு மாதம் ஒருமுறையென வாசல் தெளிப்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும்.) அந்த காலங்களை மலரும் நினைவாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
தங்களின் மலரும் நினைவாக வந்த இந்தப்பதிவு நன்றாக இருக்கிறது. இன்று தாங்கள் இறை அவனுக்காக செய்த பாசிப் பருப்பு பாயாசம் நன்றாக இருக்கும். இறைவன் மன மகிழ்ந்து அருந்தியிருப்பார். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. மார்கழி திருப்பாவை, பாடல்கள் மனதிற்கு மகிழ்வை தருகிறது. தங்களது மார்கழி நினைவாக வந்த மலரும் பதிவு மிக அருமையாக உள்ளது.
படங்கள் அனைத்தும் மிக அழகு. உங்கள் புண்ணியத்தில் கற்பூர ஒளியிலே ஈஸ்வர தரிசனம் கிடைத்தது.//
நன்றி கமலா.
சிறு வயது முதல் அம்மாவுடன் மார்கழி மாதம் கோயில் போவோம்.
அது போல புகுந்த வீட்டிலும் அமைந்தது .
கோவிலை சுற்றி உள்ள மடவிளாகத்தில் இருக்கும் வயதானவர்கள் மட்டும் கோவில் உற்சவங்களை வீட்டில் இருந்தபடி பார்க்கலாம்.
இப்போது வய்தானவர்களுக்கு, போக முடியாதவர்களுக்கு தொலைக்காட்சி புண்ணியத்தில் அனைத்து விழாக்களையும் வீட்டில் இருந்தபடி நன்கு பார்க்க முடிகிறது. அதனால் கோயில் போக முடியவில்லை என்று வருத்தம் இல்லை . கிடைத்தவரை மகிழ்ச்சி.
நீங்கள் சொல்வது போல வீட்டில் இறைவன் துதிபாடல்களை பாடி மகிழலாம். உறவுகளுடன் பத்திரமாக கோயில் சென்று வரலாம்.
//இப்போது கடந்த இரண்டு வருடங்களாக குளிர் ஒத்து வரவில்லை. அதுவும் இங்கு குளிர் அதிகம் வேறு. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்த ஜலதோஷம் இன்னமும் என்னை விட்டு போவேனா என்கிறது. காலை ஆறுமணிக்கு மேல்தான் எழுந்திருக்கவே முடிகிறது.//
உடல்நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள். ஜலதோஷம் பிடித்தால் லேசில் விடாது. குளிர் அதிகம் என்று என் தங்கை சொன்னாள்.
என் தங்கை பேரனை பார்த்து கொள்ள பெங்களூருக்கு மகள் வீட்டுக்கு வந்து இருக்கிறாள் அவள் சொன்னாள். மழையும், குளிரும் வாட்டி எடுக்கிறது என்றாள்.
மெதுவாக எழுந்து கொள்ளுங்கள் முடியவில்லை என்றால் என்ன செய்வது? 6 மணிக்கு மேல் தூங்கவும் விடாது உங்களை, கடமைகள் எழுப்பி விட்டுவிடும்.
//மதுரை திருமங்கலத்தில் இருக்கும் போது நான்கு மணிக்கே எழுந்து வாசல் தெளித்து கோலங்கள் போடுவதும் நினைவினில் வந்தது. (அது வாடகை வீடுதான். குடியிருப்போர் (எங்களுடன் சேர்த்து இருவர்) ஆளுக்கு மாதம் ஒருமுறையென வாசல் தெளிப்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும்.) அந்த காலங்களை மலரும் நினைவாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.//
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. பெரிய பெரிய போட்ட காலங்களை இப்போது நினைத்துப்பார்த்து மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான். இப்போது அடுக்கு மாடி குடியிருப்பு வாசல் சின்னது சின்ன கோலம் தான் போட முடியும். நம் இயலாமையைக்கு வசதியாக இருக்கிறது. இன்று 11 புள்ளி கோலம் போட்டேன், நாளை எல்லாம் 5, அல்லது 6 புள்ளி கோலம் தான்.
//தங்களின் மலரும் நினைவாக வந்த இந்தப்பதிவு நன்றாக இருக்கிறது. இன்று தாங்கள் இறை அவனுக்காக செய்த பாசிப் பருப்பு பாயாசம் நன்றாக இருக்கும். இறைவன் மன மகிழ்ந்து அருந்தியிருப்பார். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
என்னால் முடிந்ததை செய்து வைக்கிறேன், இறைவன் மன மகிழ்ந்து அருந்தி இருப்பார் என்று நீங்கள் சொன்னது மகிழ்ச்சி.
பழைய நினைப்பில் நான் வேலை செய்தால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது, உங்களை சிரமபடுத்தி கொள்ளாதீர்கள் முடிந்ததை செய்யுங்கள் என்று பிள்ளைகள் சொல்கிறார்கள்.
உங்கள் விரிவான, அன்பான கருத்துக்கு நன்றி.
பெரிது பெரிதாக கோலம் போட்ட காலங்களை இப்போது நினைத்துப்பார்த்து மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.
நீக்குஉங்களுக்கு கொடுத்த பதிலில் கோலம் விடு பட்டு இருக்கு.