வெள்ளி, 13 டிசம்பர், 2024

திருக்கார்த்திகை தீபத்திருநாள் ஜோதி வழிபாடு






ஆதியும், அந்தமும் இல்லா பெருஞ்சோதியன்

லிங்கோத்பவர்.

அண்ணாமலை உறை அண்ணா போற்றி!

கண்ணார் அமுதக் கடலே போற்றி!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

தீபத்திருநாள், 

தீபங்கள் ஒளி வீசும் நாள். கார்த்திகை மாதத்தில் மாலையில் சீக்கீரம் இருட்டி விடும். மாலை  நேரத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு வைத்து இருளை நீக்கினார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள். தை மாதம் பொங்கல் வரை விளக்கு வைப்பது தொடரும். தீப வழிபாடு  மிகவும் போற்றப் படுகிறது. 


அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.


சர்வாலய தீபம்:



சிவபெருமானின் சன்னதியில் இருந்த ஒரு விளக்கின் ஒளி குறைந்த போது,எண்ணெய் உண்ண வந்த ஒரு எலி தன்னை அறியாமல் திரியைத் தூண்டி,விளக்கை பிரகாசப்படுத்தியது. 
இந்த சிவ புண்ணியத்தால் அந்த எலி மறு பிறவியில் மாவலி (மகாபலி)சக்கரவர்த்தியாக, அந்த மகாபலி சக்கரவர்த்தி சிவால யத்தில் ஒரு சமயம் செருக்குடன் வலம் வந்த போது அவன் மீது தீபம் விழுந்து உடம்பு புண்ணாகி வருந்தினான்.


சிவபெருமான் அசரீரியாகி “நீ செருக்குற்றதால் இப்படி செய்தோம் இன்று முதல் எல்லா சிவாலயங்களிலும், இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் நீ தீபம் ஏற்றினால் சாயுச்சய பதவி அடைவாய்” என்று கூறினார். அவ்வாறு ஏற்றி வரும் போது, கார்த்திகை மாதம் வளர் பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் உக்கிர வடிவத்தில் சிவன் பேரொளியாகத் தோன்றினான். அஞ்சிய திருமால் முதலியோர் உக்கிரம் தணிய, பொரி, அவல் முதலியவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் படியாக எப்போதும் திருக்கார்த்திகை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பொரி அவல் முதலியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.

இந்த கார்த்திகைத் திருவிழாவை 1000 ஆண்டுக்கு முன்பே கொண்டாடி இருக்கின்றனர்.திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை மீண்டும் பெண்ணாக்கிய போது ’விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார்.அந்தக் காலத்தில் கார்த்திகை தீப விழாவை விளக்கீடு என்று வழங்கினார்கள்.




விஷ்ணுதீபம் :-



(பகவத்கீதை பாராயணம் செய்தார்கள் அப்போது எடுத்த படம்)


விஷ்ணு ஆலயங்களில் இவ் விழா நடப்பதற்கு காரணம் விரதமகாத்மியத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது:-
 திருமகள் ஒரு அசுரனுக்கு பயந்து ஒரு காட்டில் ஒளிந்து இருக்க அவ் அசுரன் அக் காட்டை கொளுத்தினானாம் அப்போது திருமகள் அந்தரத்தில் சென்று மறைந்தாளாம் அதனை நினவுபடுத்தும் வகையில் தீ ஏற்றுவார்கள்.






ஒளி படும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி தேடி வந்து நின்று அருள் புரிவாள்.அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கார்த்திகை விரதம்:



முருகனைக் குறித்து மேற்கொள்கின்ற விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்றாகும். பரணி நாளில் முருகனின் பெருமையை கேட்டுக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்து, மறுநாள் முருகனை வழிபடுவது இந்த விரதமாகும்.
கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகக் கடவுளுக்குப் பாலூட்டி விரத பலத்தை அடைந்ததை இவ் விரதம் குறிக்கும்.


விளக்கு வழிபாட்டின் பயன்:

கள்ளன் அறிவூடுமே மெள்ள மெ(ள்)ள வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே.

-தாயுமானவர்


விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை. 


அறிவை ஒளிக்கு உதாரணமாய் சொல்கிறார்கள். ‘சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே, தேஜோமய ஆனந்தமே!’ என்று தாயுமானவர் குறிப்பிடுகிறார்.

’அருளானோர்க்கு அகம்புறம் என்று உன்னா
பூரண ஆனந்தமாகி இருள் தீர விலங்கு பொருள் யாது? அந்தப்
பொருளினை யாம் இறைஞ்சி நிற்பாம்.’

‘தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
தீயில் இரும்பென்னத் திகழுநாள்எந்நாளோ?’

என்றெல்லாம் தாயுமானவர் ஜோதிமயமான இறைவனைப் பாடுகிறார்.


காயத்ரீ மந்திரம் ,’ நம்முடைய உயிராற்றலாகவும் துக்கத்தை அழிப்பதாகவும்  இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும், தன்னை விட மேலாக ஒன்றும் இல்லாததும். நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீகப் பரம் பொருள் நமது அறிவை நல்வழியில் ஈடுபடுத்தட்டும்.’என்று இறைவனை ஒளிக்கடவுளாய் உணர்த்துகிறது.

எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக’ என்று அந்த மந்திரம் கூறுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழில் ’தீபமங்கள ஜோதி நமோ நம’ முருகனைப் பாடுகிறார்.





வள்ளலார் தீப வழிபாடு செய்தார்.

’ஏகாந்த மாகிய ஜோதி--என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி--என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி!

அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

அருள் ஒளி என் தனி அறிவினில் விரிந்தே
அருள் நெறி விளக்கெனும் அருட் பெருஞ் ஜோதி ’


’அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே
மருள் கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வநடத் தரசே நான் செய்மொழி ஏற்றருளே.’

ன்று கூறி வள்ளலார் இறைவனை வழிபட்டார்

அறியாமை இருளைப் போக்கி அறிவு ஒளியை தந்த இறைவா எனப் பாடுகிறார்.

கருங்குழியில் வீட்டில் ஒருநாள் இராமலிங்க அடிகள் எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே, எண்ணெய்ச் செம்பன நினைத்து தண்ணீர்ச் செம்பை எடுத்து விளக்கில்  ஊற்றினார். விளக்கு இரவு முழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீரில் விளக்கெரிந்த இந்த  அற்புதத்தை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் வள்ளலார்.

அப்பாடல்:

"மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை என்றார் மேலோர் நானும் பொய்விளக்கே விளக்கென உட் பொங்கிவழி கின்றேன் ஓர் புதுமை அன்றே செய்விளக்கும், புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்!"

நெய்விளக்கே போன்றொருதண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே.’



நன்றி -கூகுள்



அறுபத்து மூன்று நாயன்மர்களில் ஒருவரான கணம்புல்லர் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த்தால் தான் என்னமோ அவர் தான் பிறந்த இருக்குவேளூர் இறைவனுக்கு விளக்கெரித்துத் தொண்டு செய்தார்.

வறுமை வந்த போதும் கணம்புல் என்னும் ஒருவகை புல்லை அறுத்து விலைக்கு விற்றுத் திருவிளக்கு ஏற்றி வந்தார்.ஒரு நாள் புல் விற்கவில்லை அதையே திருவிளக்குக்கு இட்டு எரிக்கமுற்பட,அதுவும் போதாமையால் தம் திருமுடியை விளக்கில் மடுத்து எரித்து மகிழ்ந்து இறைவனின் அருள் பெற்றார்.



நமி நந்தி அடிகள் என்னும் நாயனார் தண்ணீரில் விளக்கு எரித்து இருக்கிறார்.

நன்றி - கூகுள்


மசூதியில் விளக்கேற்றி அது விடிய விடிய எரிவதை பார்ப்பதில் ஷீரடி சாய்பாபாவிற்கு மகிழ்ச்சி. அதற்காக பக்கத்தில் உள்ள இரண்டு கடைகளில் இலவசமாக எண்ணெய் பெற்று வந்தார். ஒருநாள் அந்த வியாபாரிகளின் எண்ணம் மாறியது. ‘நாம் இலவசமாக எண்ணெயைக் கொடுத்து பக்கிரி என்ன விள்க்கேற்றுவது? இனி நாம் எண்ணெய் கொடுக்கக் கூடாது. 

எண்ணெய் இல்லை என்று சொல்லிவிடவேண்டும்’என்று அவர்கள் பேசி வைத்துக் கொண்டார்கள். வழக்கம் போல் எண்ணெய் வாங்கும் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு
பாபா அக் கடைகளுக்குப் போனார்.’ஒரு துளி எண்ணெய் கூட இல்லை. இனி மேல்தான் வர வேண்டும்’ என்று அந்த வியாபாரிகள் கூறினார்கள்.

பாபா கிணற்றடிக்குச் சென்று நீர் இறைத்து அந்த குவளையில் ஊற்றி நன்றாகக் கழுவினார். பின்,அதில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மசூதிக்குச் சென்றார். அந்த த்ண்ணீரை விளக்கில் ஊற்றி ஏற்றினார்.

முன்னிலும் பிரகாசமாய் விளக்கு எரிந்ததாய் சாயி சரிதம் கூறுகிறது.



இசை மேதை தான் சேன் தன் இசையால் விளக்குகளை ஏற்றியதாக வரலாறு உள்ளது.

நன்றி  -கூகுள்.




கார்த்திகை விளக்கேற்றி இறையருள் பெறுவோம்.
அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.






பலகையில் நடுவில் உள்ள குத்துவிளக்கு மகன் இந்த தடவை அனுப்பினான். பெரிய விளக்கை தூக்கி ஏற்றி வைக்க முடியாது  இப்போது, மகன் அனுப்பிய விளக்கை  வசதியாக தூக்கி வைத்து விட்டேன்.


உப்பில்லா கொழுகட்டை, அவல்பொரி உருண்டை, அடை , மாவிளக்கு.


ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் 

இந்த பதிவில் இடம் பெற்ற படங்கள் எல்லாம்  மதுரை எஸ் எஸ். காலனியில் உள்ள பிள்ளையார்  கோவில் படங்கள்.  முன்பு ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் பதிவு போட்டு இருக்கிறேன்.
இப்போது உள்ள படங்கள் "கைசிக ஏகாதசி" அன்று கோவிலுக்கு போய் வந்தேன் அப்போது எடுத்த படங்கள்.

திருவண்ணாமலை நேரடி காட்சியில் பார்த்த படங்கள்  
பதிவில் இடம் பெறுகிறது.


 அனைவருக்கும்   தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-------------------------------------------------------------------------------------------------------------------------

22 கருத்துகள்:

  1. ஆதியும், அந்தமும் இல்லா பெருஞ்சோதியன்//

    மிகவும் பிடித்த வரி. பெருஞ்சோதியன் மாபெரும் சக்தி இப்படித்தான் நான் பொருள் கொண்டு வணங்குவது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //ஆதியும், அந்தமும் இல்லா பெருஞ்சோதியன்//

      மிகவும் பிடித்த வரி. பெருஞ்சோதியன் மாபெரும் சக்தி இப்படித்தான் நான் பொருள் கொண்டு வணங்குவது.//

      நீங்கள் பொருள் கொண்டு வணங்குவது அருமை.

      நீக்கு
  2. கார்த்திகை மாதத்தில் மாலையில் சீக்கீரம் இருட்டி விடும். மாலை நேரத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு வைத்து இருளை நீக்கினார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள். தை மாதம் பொங்கல் வரை விளக்கு வைப்பது தொடரும்.//

    ஆமா...

    அபிதான சிந்தாமணியில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் புதியது எனக்கு, மஹாபலிக்கதை இப்படி ஒன்று இருப்பதும் இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன் அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அபிதான சிந்தாமணியில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் புதியது எனக்கு, மஹாபலிக்கதை இப்படி ஒன்று இருப்பதும் இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன் அக்கா//

      ஆமாம், முன்பு தெரியாமல் சிவ தொண்டு செய்தாலும் இறைவன் அருள்வான் என்பதற்கு மகாபலி கதை உதாரணம்.

      நீக்கு
  3. மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை. //

    அந்த ஞானம் கிடைப்பதுதானே பிரம்மப்பிரயத்தனமாக இருக்கு மானிடராகிய நமக்கு!

    வள்ளலார் தகவல்கள் அனைத்தும் க்டைசி வரை வாசித்து தெரிந்து கொண்டேன்.

    மகன் அனுப்பிய விளக்கு ரொம்ப அழகாக இருக்கிறது

    தீபத்திருநாள் வாழ்த்துகள் அக்கா. . மனத்திருள் போய் மனத்துக்கண் மாசிலன் ஆக எவ்வளவு வழிகள் இருக்கின்றன இல்லையாக்கா?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த ஞானம் கிடைப்பதுதானே பிரம்மப்பிரயத்தனமாக இருக்கு மானிடராகிய நமக்கு!//

      அதுதான் வேதாத்திரி மகரிஷி அகத்தூய்மை செய்ய வேண்டும் என்கிறார். தினம் பாத்திரம் துலக்குவது போல வேண்டாத எண்ணங்களை களைய வேண்டும் என்கிறார்.
      அப்படி செய்தால் நல்லது.

      இறைவன் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்வோம்.
      அது போல நம் மனதில் இறைவன் இருக்கிறான் எனும் போது
      மனதை சுத்தமாக வைத்துக் கொள்வோம் என்பதுதான் அர்த்தம்.

      //வள்ளலார் தகவல்கள் அனைத்தும் க்டைசி வரை வாசித்து தெரிந்து கொண்டேன்.//

      நன்றி கீதா, பதிவு பெரிதாகி விட்டதே என நினைத்தேன்

      //மகன் அனுப்பிய விளக்கு ரொம்ப அழகாக இருக்கிறது//

      இருபக்க குடும்பத்தினருக்கும் தீபாவளி பரிசாக இந்த் குத்துவிளக்கு அனுப்பினான். எல்லோரும் கார்த்திகை தீபத்திற்கு ஏற்றி விட்டார்கள்.

      உங்கள் ஊர் பக்கம் (நம் ஊர்) கேரள மக்கள் தினம் தீபம் தீபம் என்று சொல்லி வாசலில் விளக்கு வைப்பார்கள் தானே!

      //தீபத்திருநாள் வாழ்த்துகள் அக்கா. . மனத்திருள் போய் மனத்துக்கண் மாசிலன் ஆக எவ்வளவு வழிகள் இருக்கின்றன இல்லையாக்கா?!//

      நன்றி கீதா. மனத்துக்கண் மாசிலன் ஆக நிறைய வழிகளை நம் முன்னோர்கள் கதை வடிவாக , பாட்டாக , வாழ்ந்து காட்டியவர்கள் வரலாறு என்று நிறைய இருக்கு கீதா நாம் படிக்க வேண்டும், அதன் படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. தீபத் திருநாளான திருக்கார்த்திகையைப் பற்றி விளக்கமான பதிவு ரசிக்கும்படி இருந்தது. கூடவே ஷீரடி சாய்பாபா பற்றிய தகவல்களையும் கோர்த்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //தீபத் திருநாளான திருக்கார்த்திகையைப் பற்றி விளக்கமான பதிவு ரசிக்கும்படி இருந்தது. கூடவே ஷீரடி சாய்பாபா பற்றிய தகவல்களையும் கோர்த்துவிட்டீர்கள்.//

      நீங்கள் ரசித்து படித்தமைக்கு நன்றி.
      பாபா இப்போது எல்லோராலும் விருப்பபடுகிறார்.
      தண்ணீரில் விளக்கு எறித்தவர்கள் வரலாறு நிறைய இருக்கிறது.
      கடவுள் வந்து விளக்கேற்றி கவிதை எழுத உதவிய வரலாறு இருக்கிறது. தொகுக்க பொறுமை வேண்டும், வாசிக்க விரும்புபவர்கள் விரும்பி படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

      எல்லாவற்றையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  5. உங்கள் வீட்டின் திருக்கார்த்திகை தீபம் பற்றிய செய்தி மகிழ்ச்சி.

    பதிவின் படங்களும் அழகாக இருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் வீட்டின் திருக்கார்த்திகை தீபம் பற்றிய செய்தி மகிழ்ச்சி.

      பதிவின் படங்களும் அழகாக இருக்கின்றன//

      நன்றி நெல்லை. எனக்கு உடல் நிலை சரியில்லை முட்டிவலி நிறைய இருக்கிறது. விளக்கு வைப்பது குறைந்து விட்டது.
      ஓரளவு வைத்து வணங்கி விட்டேன். தனியாக அத்தனை விளக்கை ஏற்றுவது கஷ்டமாக இருக்கிறது. சாரை நினைத்து கொண்டேன், விளக்கு ஏற்ற உதவுவார்கள்.

      நீக்கு
  6. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.  படங்களும், விவரமும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள். படங்களும், விவரமும் சிறப்பு.//

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ஏதோ ஒரு படம் சேர்க்க நினைத்து சேர்க்காமல் விட்டுப்போயிருக்கிறதோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏதோ ஒரு படம் சேர்க்க நினைத்து சேர்க்காமல் விட்டுப்போயிருக்கிறதோ...//

      லிங்கோத்பவர். மட்டும் வர நேரமாகிறது, அந்த இடம் வெற்றிடமாக தெரிந்து இருக்கும். தாய்மானவர் , அருணகிரி நாதர் படங்கள் நினைத்தேன் போட வில்லை, அவர்களுக்கு இடம் விட வில்லை.
      நான் போன கோவிலில் பாபா இருந்தார் அதனால் அவரை பகிர்வு பொருத்தம் என்று போட்டு விட்டேன்.


      நீக்கு
  8. மஹாபலிச் சக்கரவர்த்தியின் முன்கதை இப்படியா?  தெரியாது. 

    யானையும் சிலந்தியும் சிவனுக்கு வீடு கட்டியது போல, மரத்தின் மேல் புலிக்கு பயந்து அமர்ந்து தூங்கி விடாமல் இருக்க வில்வ இலைகள் போட்ட மனிதனைப்போல சிறு செயலுக்கு பெரிய விளைவு.. 

    ஆனால் பாருங்கள்..  இப்போதெல்லாம் மனமுருகி, மனமொன்றி இறைவனைக்க் பாடினாலும் அவர் தோன்றுவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மஹாபலிச் சக்கரவர்த்தியின் முன்கதை இப்படியா? தெரியாது. //

      ஸ்ரீராம் , முன்பு ஜோதி வழிபாடு என்ற தலைப்பில் மகாபலி பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன்..


      //யானையும் சிலந்தியும் சிவனுக்கு வீடு கட்டியது போல, மரத்தின் மேல் புலிக்கு பயந்து அமர்ந்து தூங்கி விடாமல் இருக்க வில்வ இலைகள் போட்ட மனிதனைப்போல சிறு செயலுக்கு பெரிய விளைவு..

      ஆனால் பாருங்கள்.. இப்போதெல்லாம் மனமுருகி, மனமொன்றி இறைவனைக்க் பாடினாலும் அவர் தோன்றுவதில்லை!//

      இது கலி காலம் இறைவன் கூட வர பயப்படுகிறார் போலும்.
      வரங்கள் அவர்கள் இஷ்டத்திற்கு கேட்டு விட்டால் என்ன செய்வது என்று.
      அப்போது ஆசைகள் இல்லாமல் இருந்தார்கள் அவர் கொடுத்தார். இப்போது ஒவ்வொருவருக்கும் கனவுகள், தேவைகள் அதிகம் இருக்கே!

      அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி, நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி. நல்ல விளக்கமான பதிவு. அதிலும், கார்த்திகை மாதம் தொட்டு தை மாதம் வரையிலான மாலை விரைவில் வந்து விடும் இருள் அகற்றும் விழாவிற்கு தாங்கள் தந்த விபரங்கள் மிகவும் நன்றாக உள்ளது. கார்த்திகையில் ஒவ்வொரு விளக்கேற்றும் முறையையும், விவரித்து கூறியது நல்ல பயனுள்ள ஒரு கட்டுரையாக அமைந்து விட்டது. படித்து ரசித்தேன்.

    பதிவை படிக்கையில் மார்கழி காலை கோலங்களும், கோலங்களுக்கு நடுவில் பூசணி பூக்களும், வாசல் படியில் இரு அகல் விளக்குகளும் மனதுக்குள் வந்தன.

    அததற்குரிய ,புராண காரணங்களையும், நால்வர் பாடிய பாடல்களையும் உவமானமாக காட்டி நன்றாக பதிவை தொகுத்துள்ளீர்கள். தவசிறந்த மனிதர்களாகிய ஷீரடி சாய்பாபா, வள்ளலார் ஆகியோரின் தெய்வீக பக்தியையும் தெரிந்து கொண்டேன்.இசை கலைஞர் தான்சேன் அவர்கள் தன் பாடலினால் விளக்கெரிய செய்த சம்பவம் சிலிர்ப்படையச் செய்யும். நடிகர் திலகம் ஒரு படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த படமும், பாடலும் நுனைவுக்கு வந்தன. "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" என்ற பாடல் காதில் ஒலித்தது. அதையும் நீங்கள் பகிர்ந்திருக்கலாம். அருமையான பாடல் அது.

    இவர்கள் தெய்வபலம் பெற்றவர்கள். இன்று தெய்வ அனுக்கிரஹம் பெற்ற இவர்களையும் வணங்கிக் கொள்ள ஏதுவாக பதிவில் அவர்கள் அனைவரையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சகோதரி.

    உங்கள் வீட்டு திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடை பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்கள் மகன் வாங்கி தந்திருக்கும் குத்து விளக்கு அழகாக இருக்கிறது. பூஜை படங்களையும், நைவேத்தியம் படங்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென பிரார்த்தித்து வணங்கிக் கொண்டேன். பிரசாதமும் எடுத்துக் கொண்டேன். இன்றைய நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹறிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி. //


      நன்றி.

      //நல்ல விளக்கமான பதிவு. அதிலும், கார்த்திகை மாதம் தொட்டு தை மாதம் வரையிலான மாலை விரைவில் வந்து விடும் இருள் அகற்றும் விழாவிற்கு தாங்கள் தந்த விபரங்கள் மிகவும் நன்றாக உள்ளது. கார்த்திகையில் ஒவ்வொரு விளக்கேற்றும் முறையையும், விவரித்து கூறியது நல்ல பயனுள்ள ஒரு கட்டுரையாக அமைந்து விட்டது. படித்து ரசித்தேன்.//

      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //பதிவை படிக்கையில் மார்கழி காலை கோலங்களும், கோலங்களுக்கு நடுவில் பூசணி பூக்களும், வாசல் படியில் இரு அகல் விளக்குகளும் மனதுக்குள் வந்தன.//

      ஆமாம். எனக்கும் நினைவுக்கு வந்தது.

      //அததற்குரிய ,புராண காரணங்களையும், நால்வர் பாடிய பாடல்களையும் உவமானமாக காட்டி நன்றாக பதிவை தொகுத்துள்ளீர்கள். தவசிறந்த மனிதர்களாகிய ஷீரடி சாய்பாபா, வள்ளலார் ஆகியோரின் தெய்வீக பக்தியையும் தெரிந்து கொண்டேன்.இசை கலைஞர் தான்சேன் அவர்கள் தன் பாடலினால் விளக்கெரிய செய்த சம்பவம் சிலிர்ப்படையச் செய்யும். நடிகர் திலகம் ஒரு படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த படமும், பாடலும் நுனைவுக்கு வந்தன. "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" என்ற பாடல் காதில் ஒலித்தது. அதையும் நீங்கள் பகிர்ந்திருக்கலாம். அருமையான பாடல் அது.//

      தான் சேன் படம் தேடும் போது சிவாஜி அவர்கள் படம் தவபுதல்வன் படம் வந்தது கூடவே நீங்கள் பகிர்ந்த பாடலும் நினைவுக்கு வந்தது, பதிவில் படங்கள், செய்திகள் அதிகமாகி விட்டது, பாடலை போடவில்லை. இன்னொரு முறை போடுகிறேன்.

      //இவர்கள் தெய்வபலம் பெற்றவர்கள். இன்று தெய்வ அனுக்கிரஹம் பெற்ற இவர்களையும் வணங்கிக் கொள்ள ஏதுவாக பதிவில் அவர்கள் அனைவரையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சகோதரி.//

      கடவுளிடம் அதிக பக்தி கொண்டவர்கள் அவர்கள் வாழ்ந்து காட்டியது நமக்கு நல்லதொரு பாடம். மகாங்களையும் வணங்குவது நம் மரபு. பொய்தவம் கொண்டு வந்த முத்தநாதனையும் மன்னித்து மெய்பொருள்நாயனார் வணங்கி நமக்கு வழி காட்டினார்.

      //உங்கள் வீட்டு திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடை பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்கள் மகன் வாங்கி தந்திருக்கும் குத்து விளக்கு அழகாக இருக்கிறது. பூஜை படங்களையும், நைவேத்தியம் படங்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.//

      நிறைய விளக்கு மேலே இருந்து இறக்கவே இல்லை, என்னால் அத்தனையும் தனியாக ஏற்ற முடியாது. பிரசாதங்களும் குறைத்து கொண்டேன். நிறைய செய்வோம் அப்பம், பிடி கொழுக்கட்டை, நெல் பொரி, அரிசி பொரி என்று அவை எல்லாம் விட்டு விட்டேன்.
      அடை, உப்பில்லா கொழுக்கட்டை, மாவிளக்கு அவல்பொரி உருண்டையோடு இன்னும் அவல் பிரி இருக்கிறது இன்னொரு நாள் செய்து கும்பிட வேண்டும்.
      அனைத்தையும் படித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

      அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென பிரார்த்தித்து வணங்கிக் கொண்டேன். பிரசாதமும் எடுத்துக் கொண்டேன். இன்றைய நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.






      நீக்கு
    2. கார்த்திகை மாத தீப தரிசனப்படங்களின் தரிசனம் கிடைத்தது நன்றி.

      - கில்லர்ஜி தேவகோட்டையிலிருந்து

      நீக்கு
    3. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      வந்து விட்டீர்களா தேவகோட்டை? நலம் தானே?

      //கார்த்திகை மாத தீப தரிசனப்படங்களின் தரிசனம் கிடைத்தது நன்றி.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    4. கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்! கோயிலில் எடுத்தவை, தீபங்களின் படங்கள் மற்றும் பகிர்வு மிக அருமை.

      நீக்கு
    5. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்! கோயிலில் எடுத்தவை, தீபங்களின் படங்கள் மற்றும் பகிர்வு மிக அருமை.//

      உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு