வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா !




பேரனுக்கு சிறு வயது முதல்  கிருஷ்ணா பொம்மை கதை பிடிக்கும், இப்போதும் பார்க்கிறான்.

நான் அங்கு இருந்த போதும் இந்த கதையை காட்டி மகிழ்ந்தான்.  இப்போதும் எனக்கு காட்டி   மகிழ்கிறான். தினம் ஒரு  கதை காட்டி கதை சொல்வான்.  எத்தனை  முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல பார்த்து மகிழ்வான். நானும் புதிதாக கேட்பது போல  அடுத்து என்ன என்று ஆவலுடன் கேட்பேன்,கதை சொல்வதில் அவனுக்கு மகிழ்ச்சி.
கேட்பதில் எனக்கு மகிழ்ச்சி.



கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்த கதை.

இந்த மலைதான் நமக்கு எல்லா வளங்களும்  தருகிறது. மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு உதவுகிறது. மலையில் உள்ள அருவி நம் தாகத்தை தீர்க்கிறது. கனிகளை, காய்களை தருகிறது, மழை மேகங்களை தடுத்து மழையை தருகிறது. அதனால் இந்த மலையை வணங்குங்கள் . 

//குன்று குடையா எடுத்தாய் கழல் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில்  வேல்போற்றி.//



இந்த நாடகத்தில் பகைவர்களுக்கு போர் வீரர் போல காட்சி அளிப்பார். அதை பேரன் "அவர்கள் கண்ணுக்கு மட்டும் தான் அப்படி தெரியும் ஆச்சி என்று சொல்வான்"


2020ல் போட்ட பதிவிலும் கிருஷ்ணஜெயந்தி  கதைகேட்க அழைப்பதை போட்டு இருக்கிறேன். படித்து பாருங்கள்.   நேரம் இருந்தால் பாருங்கள் பழைய பதிவை.


 கிருஷ்ணா காளிங்கனை அடக்கிய கதையை சொல்கிறான் அவன் விளையாடும் பொருட்களை வைத்து சிறு வயதில்.
அவன் கதை சொல்வதை காணொளி எடுத்தேன். தேடினேன் கிடைக்கவில்லை., கிடைத்தால் போடுகிறேன்.

இந்த காளிங்க நர்த்தனம் பிடிக்கும் அவனுக்கு.


கதை ஆரம்பிக்கும் போது மயக்கும் புல்லாங்குழல் ஓசை வரும் அப்புறம் கண்ணன் திரும்பி பார்க்கும் காட்சி அருமையாக இருக்கும். "திரும்ப போகிறார் பாருங்க பாருங்க" என்பான்.


ஹே! மாதவா  பாடல். எனக்கு பிடித்த பாடல் எப்போதும் கேட்பேன். மாதவா பாடல் பாடு என்றால் பாடுவான்.
நண்பர் வீட்டு கொலுவுக்கு பாடுகிறான்.

"சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா "பாடல் பாடுவான்.

பேரன் சின்ன வயதில்  போட்ட கிருஷ்ணர் வேஷம் 

சின்ன சின்ன பதம் வைத்து இப்போது பாடிய பாடலை சேர்த்து கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்துகள் மகன் அனுப்பினான். குழந்தை கண்ணன் விளையாடும் விளையாட்டு இருக்கிறது பாருங்கள். அவன் பாடும் பாடலை கேட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். 


மாயவரத்தில் இருக்கும் போது பேரன் கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணர் வேடமிட்டு இருந்தான்.


மாயவரத்தில் பேரன் வந்து இருந்த போது எடுத்த  கிருஷ்ண ஜெயந்தி படம்
 நடுவில் இருக்கும் கண்ணன் மருமகள் வரைந்த படம்


நாளை கிருஷ்ண ஜெயந்திக்கு மருமகள் செய்த சீடை, முறுக்கு


மகன் செய்த பூஜை பலகையில் கிருஷ்ணர்  

மகன் செய்த பூஜை பலகையில் மருமகள் வரைந்த  வண்ணக்கோலங்களுக்கு நடுவே கிருஷ்ணர்

தம்பி பேத்தி

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் "ஆனந்தா பல்பொருள் அங்காடியில்"  கிருஷ்ண ஜெயந்தி  வாழ்த்து அலங்காரம்.
பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் வைத்து இருக்கிறார்கள்.

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !
 வாழ்க  வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

  1. ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
    வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. படங்களும், விபரங்களும் சிறப்பு.
    பெயரன் பாடுவது அருமை.
    பாடகருக்கான நுணுக்க சப்தம் மிகச் சிறப்பாக வருகிறது. தொடர்ந்து சங்கீதம் கற்றுக்கொள்ள வைப்பது நல்லது.

    சிறப்பான பாடகராக வருவதற்கு எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      பெயரன் பாடுவதை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      பாட்டு கற்றுக் கொள்கிறான்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
    2. ஓ... பாட்டு கற்று வருகிறாரா ? அதுதான் குரலில் இத்தனை நயம் வருகிறது.

      நீக்கு
    3. ஆமாம் பாட்டு கற்று வருகிறான். பல வருடமாய்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  5. தலைப்பிலும், பாடுவதிலும் ''பதம்'' என்று வருகிறதே... இதன் அர்த்தம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதம் என்றால் மெதுவாக பக்குவமாக என்று சொல்வது போல !
      தரை அதிர நடக்காதே , பதமாக நடந்து வா என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருப்பீர்கள்.
      பதமாக நடந்து கொள், பக்குவமாக நடந்து கொள்.
      சோறு வெந்து விட்டதா பதம் பார்ப்பார்கள்.
      தீட்டிய மரத்தில் பதம் பார்த்தல் என்று நிறைய படித்து இருப்பீர்களே ஜி.

      சின்ன பாதங்களால் வேகமாக நடந்து வந்தால் பிஞ்சு பாதங்கள் நோகும் என்பதால் சின்ன சின்ன பதம் வைத்து வா என்கிறார்.
      கிருஷ்ணருக்கு சொல்லவே வேண்டாம் . வெண்ணையை திருடும் போது மெதுவாக சத்தம் இல்லாமல் நடந்து வந்து தானே தன் நண்பர்களுடன் வருவார் வீடுகளுக்கு. பாட்டில் வரும் வார்த்தையை தான் தலைப்பில் வைத்தேன்.

      நீக்கு
    2. பதமா ? பாதமா ? என்ற ஐயம் இருந்தது ஆகவே கேட்டேன். விளக்கம் நன்று.

      நீக்கு
    3. நான் எனக்கு தெரிந்தவரை சொல்லி இருக்கிறேன் ஜி.

      நீக்கு
  6. ஹே மாதவா பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். முற்றிலும் வேறுபட்ட சூழலில், பக்தியை மனதில் கொண்டுவந்து, வேர்களின் தொடர்பை வைத்திருப்பதற்கு அவனது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும்தான் பாராட்டைத் தெரிவிக்கணும். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன். வாழ்க வளமுடன்
      ஹே மாதவா மட்டும் கேட்டீர்களா? சின்ன பதம் வைத்து பாடலையும் கேட்டு பாருங்கள். மருமகளும், மகனும் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவார்கள். கவினும் பண்டிகைகளை மகிழ்ச்சியாக வரவேற்பான்.

      //அவனது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும்தான் பாராட்டைத் தெரிவிக்கணும். வாழ்க வளமுடன்.//

      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  7. படங்களும் காணொளியும் விவரிப்புகளும் அருமை..

    கவினுக்கு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. தங்களுக்கும், தங்கள் மகன், குடும்பதிற்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

    தங்கள் பேரன் கிருஷ்ணன் வேடத்தில் மிகவும் அழகாக உள்ளார். குழந்தை கிருஷ்ணனாக வேடம் அணிவித்து விட்ட போது தயிரை கடைந்து வெண்ணைய் எடுத்துத் தன் தாய்க்கு (அவர் உங்கள் மருமகள்தானே...) தரும் செயல் நன்றாக உள்ளது. சிறு குழந்தைகள் நமக்கு தெரிந்த மாதிரி எத்தனை அலங்காரம் செய்தாலும் கண்ணன் வேடத்தில் அழகாக இருப்பார்கள். அவர்களும் அதை விரும்பி ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு நிறைய நேரம் கலைந்து விடாமல் வைத்துக் கொண்டிருப்பார்கள். கண்ணன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் கடவுள் அல்லவா..?

    தங்கள் மருமகள் வரைந்த கண்ணன் ஓவியமும், இன்றைய கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டிற்காக அவர் செய்த பட்சணங்களும் பார்க்கவே நன்றாக உள்ளது. நம் பாரம்பரியங்களை விடாது கடைப்பிடிக்கும் தங்கள் மகன், மருமகள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. தங்கள் தம்பி பேத்தியும் கிருஷ்ணன் அலங்காரத்தில் நன்றாக உள்ளார். கள்ளம்கபடமற்ற குழந்தைகளை இவ்வேடத்தில்
    பார்க்கும் போது நம் மனது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது இல்லையா? தங்கள் பேரன் கொலுவில் பாடியதும் நன்றாக உள்ளது. அழகாக பாடிய அவருக்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவியுங்கள்.

    அருகில் உள்ள கடையின் கிருஷ்ண அலங்காரமும் நன்றாக உள்ளது. இன்றைய சிறப்புப் பதிவு அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      பேரன் தயிர் கடைந்து வெண்ணெய் கொடுக்கிறான்.
      மருமகள்தான்.
      பிறந்தது முதல் கிருஷ்ண ஜெயந்திக்கு அலங்காரம் செய்து விடுவாள் மருமகள். குழந்தைகள் எல்லாம் கண்ணன் அலங்காரம் செய்து கொள்வார்கள், நீங்கள் சொல்வது போல கலைத்து கொள்ளாமல் நீண்ட நேரம் வைத்துக் கொள்வார்கள். அதை பார்க்கும் போது நமக்கு மகிழ்ச்சி உண்டாவது உண்மை.

      //தங்கள் மருமகள் வரைந்த கண்ணன் ஓவியமும், இன்றைய கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டிற்காக அவர் செய்த பட்சணங்களும் பார்க்கவே நன்றாக உள்ளது. நம் பாரம்பரியங்களை விடாது கடைப்பிடிக்கும் தங்கள் மகன், மருமகள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//

      என் மகன் பண்டிகைகளை அதற்கு செய்யும் பலகாரங்களை விரும்புவான். மருமகளும் அதற்கேற்றார் போல சுவையாக செய்து கொடுக்கிறாள். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      //கண்ணன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் கடவுள் அல்லவா..?//

      ஆமாம், உண்மை.

      கள்ளம் கபடமற்ற குழந்தைகள் செய்யும் குறும்புகள் கண்ணனை நினைவு படுத்தும், மகிழ்ச்சியை தரும்.

      பேரனுக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள் தெரிவித்தது மகிழ்ச்சி. அவனிடம் சொல்கிறேன்.
      பதிவில் உள்ள அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.


      நீக்கு
  9. பேரனுக்கு கிருஷ்ணன் பேரில் அலாதியான ப்ரேமைதான் போல.பாடலை பேஸ்புக்கில் முழுமையாகக் கேட்டேன்.  உங்கள் பேரன் அனைத்திலும்   சுவாரஸ்யம் கொண்டு கற்றுக்கொள்வதில் தாத்தாவைப்போல என்று நினைக்கிறேன். படங்களும் பகிர்வும் சிறப்பு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      ஆமாம், பேரனுக்கு கிருஷ்ணன் பேரில் அலாதியான ப்ரேமைதான்.
      பாடலை கேட்டது மகிழ்ச்சி.
      ஆமாம், கற்றுக் கொள்வதில் அவன் தாத்தா, அப்பா, அம்மா போல.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். படங்கள் யாவும் அருமை. கிருஷ்ணர் வேடத்தில் பேரனும் தங்கள் தங்கை பேத்தியும் அழகு. மருமகள் வரைந்த கிருஷ்ணர் அழகு. மகன் செய்த மேடை மிக நேர்த்தி.

    சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கு நன்றி.
      தம்பி பேத்தி.
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  11. கோமதிக்கா அருமை...அருமை. பேரன் உங்களோடு அன்போடு இருப்பதும் நீங்கள் பாடச் சொன்னதும் அவர் பாடியதும் எல்லாமே இனிய கீதங்கள்! கிருஷ்ணர் வேஷம் போட்ட உங்கள் பேரனும், தம்பி பேத்தியும் செமக்யூட்.

    கவினுக்கு உங்கள் ஜாடை நிறைய இருக்கு கோமதிக்கா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா வாழ்க வளமுடன்
      கவின் பாட்டை, மற்றும் கவின், தம்பி பேத்தி அலங்காரங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      பேரன் அவன் அப்பாவை போலவும் , என் ஜாடையிலும் இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள்.

      நீக்கு
  12. மகன் செய்த பூஜை பலகையா!! அருமை அருமை அது போல மருமகள் வரைந்த கோலம் டிசைனும் செம....வீட்டில் எல்லோருமே கலை விற்பன்னர்கள்னு சொல்லுங்க!!!

    குட்டிக் கிருஷ்ணனாய் கவின் அழகோ அழகு. பாட்டும் வருகிறது...நன்றாகப் பயிற்சி செய்யச் சொல்லுங்க கோமதிக்கா

    சீடை முள்ளு முறுக்கு எல்லாமே நாஊறுகிறது...

    பதிவு அருமை படங்களுடன் பேரன் கவினுடன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மகன் பூஜா மண்டபம் பலகை எல்லாம் செய்வான். பொழுது போக்காய். மருமகள் நன்றாக வரைவாள், கைவேலைகள் செய்வதில் மிகவும் விருப்பம் உடையவள்.
      பலகாரங்களும் நன்றாக செய்வாள்.
      பாட்டு பயிற்சி செய்கிறான். பாடுவதில் விருப்பம் உண்டு அவனுக்கு.
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. அருமையாக உள்ளது பூஜாமண்டபப் பலகையும் அதில் உள்ள கோலமும். பேரன் பாடல் ஏற்கெனவே கேட்ட நினைவு. படங்களும் அருமையாக எடுத்திருக்கீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //அருமையாக உள்ளது பூஜாமண்டபப் பலகையும் அதில் உள்ள கோலமும். //

      நன்றி.

      //பேரன் பாடல் ஏற்கெனவே கேட்ட நினைவு. படங்களும் அருமையாக எடுத்திருக்கீங்க!//

      முகநூலில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து இணைத்து பாடலை பகிர்ந்து இருந்தேன், கேட்டு இருப்பீர்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. பேரனின் இனிய பாடல், படங்கள் அனைத்தும் அழகு. வாழ்த்துகள்.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      பேரனின் பாடலை கேட்டு அவனுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
      வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு