Wednesday, July 12, 2017

திடியன் மலை நிறைவுப் பகுதி

கூகுள் படம் - திடியன் மலை (நன்றி)

 திடியன் மலை  உயரம் 320 மீட்டர்-  கூகுள் - உதவி  (நன்றி)

//வா வா சாமி தெரிகிறது  என்று கணவர்  அழைத்ததைக்   கேட்டு   எல்லையற்ற மகிழ்ச்சி . ராமர் மலை என்றார்கள். உள்ளே இருந்தது   என்ன சாமி? ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இருக்கிறமாதிரி இருக்கிறதே ! என்று  கேட்டுக்  கொண்டே  கணவரின் பக்கம் போய் பூட்டிய கதவு வழியாகப் பார்த்தேன்.

உள்ளே யார் இருந்தார்?  என்பதை அடுத்த பதிவில்.//

போன பதிவில்  உள்ளே யார் இருந்தார் என்று  அடுத்த பதிவில்  சொல்கிறேன்  என்றேன், உள்ளே பெருமாள் நான்கு கரங்களுடன் இருந்தார். வெண்பட்டில் அழகாய்  இருந்தார். கண்குளிரப் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அமர்ந்து  அவரை நினைத்து ஜபம் செய்து விட்டு மழைக்காக "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி" திருப்பாவை பாடினேன். மலையைச் சுற்றி ஒருகாலத்தில் செழுமையாக இருந்திருக்கிறது.. இப்போது புற்கள் காய்ந்து கிடக்கிறது.

பெருமாளுக்கு முன்புறம் இருந்த கருடாழ்வாருக்குக் கொண்டு போன பூவைச் சார்த்தி வழி பட்டோம்.  அவர் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம், பெயர் தெரியவில்லை.தெரிந்துகொள்ள பட்டரும் அங்கு இல்லை. பேர் தெரியவில்லை என்றால் என்ன? 

வெண்கலமணிகள் நிறைய கட்டி இருக்கிறது.வேண்டுதல் நிறைவேறித்தானே இவற்றைப்
பெருமாளுக்குக் கொடுத்து இருக்கிறார்கள்,கேட்டதைக் கொடுப்பவர் தான். வரங்களைக் கொடுப்பவரை வரதராஜபெருமாள்  என்று அழைத்துக் கொண்டேன்.

உள்ளே பெருமாள் நான்கு கரத்துடன் 
 இருந்தார்.அழகான துவாரபாலகர்
தரை  நவீனப்படுத்தியிருக்கிறார்கள்
அலைபேசியில் இவ்வளவு தூரம் தான் ஜூம் செய்ய முடியும்.
கோவில் சுவர்களில் எல்லாம் வந்தவர்கள்  
தங்கள் பெயர்களை  எழுதி வைத்து இருக்கிறார்கள்.
 நானும் இவ்வளவு தூரம் ஏறிப்பார்த்து இருக்கிறேன் என்பதை நினைத்துக் கொள்ள ஒரு படம்.


கருவறை விமானம்
மழை மேகம்

கருடாழ்வாருக்கு நாங்கள்  வாங்கிப் போன பூக்களைச் 
சார்த்தி  வழிபட்டோம்.
நட்சத்திரக் கல்வெட்டு வலது பக்கச் சுவரில்இருக்கிறது நடுவில் ஓம் என்று இருக்கிறது

கோவிலைச் சுற்றி வந்து இயற்கைக் காட்சிகளை ரசித்தோம்.
(கணவர் வரைந்த படம்)

 போலீஸ் தகவல் தொடர்பு (சிக்னல்) டவர் இருக்கிறது . 

நாங்கள் கீழே இறங்கி வரலாம் என்று நினைக்கும்போது ஒருவர்  வந்தார், வேர்க்க விறுவிறுக்க, சட்டையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டு, தண்ணீர் பாட்டில், உணவு எல்லாம் கொண்டு வந்தார் கையில். அவரிடம் பேசினோம். அவர் தன்னைத் தொலைத்தொடர்புக் காவலர் என்றார்.

 இன்னும்  இரண்டு பேர் இருக்கிறார்கள்,  வருவார்கள்  என்றார். ஒரு நாள் ஏறி வருவதே எங்களுக்குக் கஷ்டமாய் இருக்கிறதே! உங்களுக்குக்  கஷ்டமாய்  இருக்குமே என்றதும் என்ன செய்வது வேலை இங்கு தானே என்றார்.  

அவரிடம் கூட்டம் வருமா? என்று கேட்டோம் பெளர்ணமிக்கு நல்ல கூட்டம் வரும் என்றார். கார்த்திகை தீபத்திற்கு தீபம் ஏற்ற வருவார்கள் என்றார். பெளர்ணமிக்குக் கிரிவலம் வருவார்கள் என்றும் கூறினார்.

அவரிடம் விடைபெற்று கீழே இறங்க ஆரம்பித்தோம். கீழே இறங்கும்போது கவனம் மிகத் தேவை. படி கீழே வழுக்கி விடும். சில இடங்களில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து இறங்கினேன்.

  
 கீழே இறங்க ஆரம்பித்தோம்.
இன்னொரு காவலரும் வந்தார். வெயில் ஆரம்பித்து விட்டதால் சட்டையை 
தலைக்குப் போட்டுக்கொண்டு, மதிய உணவை வாங்கிக் கொண்டு ஏறுகிறார். என்னைப்பார்த்து கவனமாய் இறங்குங்கள் அம்மா என்றார். 


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் ஏறிக்கொண்டு இருந்தார்கள்  ஒரு பையன் மட்டும் மேலே வேகமாய் வந்து விட்டார்.

ஒருவர் மலையில் காய்ந்த  மஞ்சள் புற்களை அரிந்து மூட்டையாகக் கட்டி மலைப் பகுதியில் கொஞ்ச தூரம் படிகள் இல்லாத பக்கம் வருகிறார். பிறகு சிமெண்ட் படியில் இறங்கிப் போகிறார்,  அங்கு ஒரு பெண் வாங்கிக் கொண்டு இறங்குகிறார். மீண்டும் மலைப் பாதையில்  ஏறுகிறார், அங்கு ஒரு அம்மா புற்களை அரிந்து தருகிறார்.  மலைப் பக்கம் இருக்கும் ஆண், பெண் இருவரின்  உடல் வலிமையும், உழைப்பும்  வியக்க வைக்கிறது.    தினம் மலை ஏற வேண்டும் என்றால்   மன உறுதியும்  வேண்டும்.
எவ்வளவு தூரம் இன்னும் ஏற வேண்டும்!  அதற்குள் அமர்ந்து விட்டார்கள்.

கைக் குழந்தை, புதிதாக திருமணமான ஜோடி ஒன்று, ஒரு வயதான அம்மா, இரண்டு சிறு பெண்கள் என்று அந்த குழுவில் 
இருந்தார்கள் , மேலே என்ன சாமி இருக்கு? திறந்து இருக்கா? தண்ணீர் இருக்கா? என்ற கேள்விகளைக் கேட்டார்கள். தண்ணீர் இல்லை இன்னும் 700 படி ஏற வேண்டும், குழந்தையை வைத்து இருக்கிறீர்கள் தண்ணீர் இருக்கா? என்று கேட்டேன் கொஞ்சம் இருக்கிறது என்றார்கள். நீங்கள்  வெள்ளனவே ஏறிப் போனீர்களே பார்த்தோம் என்றார்கள், கைலாசநாதர் கோவிலிருந்து உங்களை பார்த்துவிட்டுத் தான் நாங்களும் வந்தோம் என்றார்கள். இதற்கு முன்பு வந்தது இல்லையாம்.
வரிசையாக ஏற ஆரம்பித்தார்கள், மேலே முன்பே போன பையன் போன் செய்து படி சரியில்லை கவனமாய் வாங்க  என்று எச்சரிக்கை செய்தார்.
மலையிலிருந்து கைலாச நாதர் கோவிலும், தாமரைக்குளமும்.சுற்றிவர ஆலமரங்களும்.
  தாமரைக் குளமாய்க் காட்சி அளித்து இப்போது ஒரு சொட்டு நீர் இல்லாத இடமாக ஆகிவிட்டதுஇன்னும் இரண்டு  பக்தர்கள் ஏறி வந்தார்கள் , அவர்களிடம் முதல் தடவையா? என்று. இல்லை இரண்டாவது தடவை என்றார்  அவர்களுக்கு நல்ல மன உறுதி என்று நினைத்துக் கொண்டேன், அவர்களும் திறந்து இருக்கா? கோவில்  என்று  கேட்டார்கள் 
கீழே இறக்கி விட்டு விட்டார் மலையப்பன் ஏற்றி விட்டது போலவே பத்திரமாய்.

அதன் பிறகு அருள்மிகு கோபாலசுவாமி திருக்கோவில் போனோம் அந்த கோவில்தான் முதல் பதிவில் வந்தது. முதலில் இவரைப் பார்த்து விட்டுத்தான்
மேலே ஏறுவார்கள் என்று நினைக்கிறேன் அதுதான் முதல் பதிவில் அவரைப்பற்றி  பதிவிட்டேன்.

                       திடியன் மலைக் கோவில் நிறைவு பெற்றது.

வழியில் இருக்கும் விநாயகரை வணங்காமல் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டையும், நாங்கள் முதலில் வணங்க வந்த  அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதரைத் தரிசனம்  செய்தோமா என்பது எல்லாம் அடுத்த பதிவில்.


                                                                வாழ்க வளமுடன்.


34 comments:

KILLERGEE Devakottai said...

விரிவான மலைப்பயணக் குறிப்புகள், கண் கவரும் படங்கள் அழசகோ
அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிகாரி கொடுத்த தண்டனையாக இருக்குமோ...

தொடர்கிறேன் சகோ
த.ம.பிறகு.

நெல்லைத் தமிழன் said...

பரவாயில்லை. கஷ்டமாக இருந்தாலும் கடவுள் தரிசனம் கொடுத்தாரே. சார் போட்டிருந்த படமும், கூகிளில் இருந்து போட்ட முதல் படமும் நல்லா இருந்தது. (முதல் பதிவில் நீங்கள் எடுத்த போட்டோல்லாம் நல்லா இருந்தது. சார் வரைந்தது அவ்வளவு சரியா வரலை. Blink ஆகிறதுனால.GIF சரியில்லை).

ஜனவரியில் போயிருந்தீர்களானால் அவ்வளவு கஷ்டமாக இருந்திராது. சூடு குறைவு.

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் ஒரு முறை சென்று காண வேண்டும் என்ற ஆவல் எழுகிறது சகோதரியாரே
நன்றி

ஸ்ரீராம். said...

மழை மே கம் (may come)என்று எழுதி இருக்கிறீர்கள்! வந்ததா?!!

ஸார் படத்தில் நீங்களும் அவரும்! ஜோர். அந்த ஆப் பயன்படுத்தவில்லையா?

வறண்ட பாறை நிலமாகக் காட்சியளிப்பது உற்சாகத்தைக் குறைக்கும்போல இருக்கிறது!

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
கடவுள் தரிசனம் கொடுத்தார். படங்களை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.
ஜனவரியில் வெயில் குறைச்சலாய் தான் இருக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
மழை வந்தது மாலையில்.
சார் படத்தை பாராட்டியதை சாரிடம் சொல்லி விட்டேன்.
இந்த முறை அந்த ஆப் பயன்படுத்தவில்லை.

//வறண்ட பாறை நிலமாகக் காட்சியளிப்பது உற்சாகத்தைக் குறைக்கும்போல இருக்கிறது!//

ஆமாம் , பசுமை இல்லாமல் கண்களுக்கு வறட்சி, காலந்டைகளுக்கும் மிகுந்த கஷ்டம்
மேயச்சலுக்கு வெகு தூரம் கூட்டி போனார்கள். பார்க்கவே கஷ்டமாய் இருந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.


ஜீவி said...

நல்ல அனுபவங்கள். வர்ணனைகளும் அதற்கேற்பவான படங்களும் அற்புதம்.

ஜீவி said...

நல்ல அனுபவங்கள். வர்ணனைகளும் அதற்கேற்பவான படங்களும் அற்புதம்.

ஜீவி said...

வர்ணனைகளும் அதற்கேற்பவான படங்களும் அற்புதம். எங்களுக்கும் மலை ஏறும் உணர்வும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

Geetha Sambasivam said...

நல்ல விபரங்கள். போகணும்னு ஆவலைத் தூண்டுகிறது. மலையிலும் பெருமாள் தரிசனம் கிடைக்கப்பெற்றதே! பார்க்க முடியலைனா மனசுக்கு வேதனையா இருந்திருக்கும். படங்கள் எல்லாமும் நன்றாகவே இருக்கின்றன. சஸ்பென்ஸ் இன்னமும் உடையவில்லையே! :)

துரை செல்வராஜூ said...

இப்படியெல்லாம் சிரமப்பட்டு -
எத்தனையோ நெஞ்சங்களைத் திடியன் மலை வரதராஜப் பெருமாள் கோயில் பக்கம் திருப்பி விட்டதற்கும் அவனருளே காரணம்..

வழி காட்டிச் சொல்வது, முப்பத்தியிரண்டு அறங்களுள் ஒன்று..

வாழ்க நலம்.. என்றென்றும்!..

கோமதி அரசு said...

வணக்கம் கீதா சாம்பசிவம். வாழ்க வளமுடன்.
மலையில் பெருமாள் தரிசனம் கம்பி கதவுகளின் வழி
கிடைத்ததும் மகிழ்ச்சிதான். உள்ளே திரையிட்டு இருந்தால் என்ன செய்வது?
நீங்கள் சொன்னது போல் மனம் வேதனைப்பட்டு இருக்கும்.
கீழே இறங்கி வந்த பின் தானே விளையாடினார் அதனால் அடுத்த பதிவில் தான் வரும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

//வழி காட்டிச் சொல்வது, முப்பத்தியிரண்டு அறங்களுள் ஒன்று..//

ஓ! அருமை ! வழி காட்டியதும் நீங்கள் சொன்னது போல் அவன் அருள்தான் .

உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

middleclassmadhavi said...

very interesting... waiting for next!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொன்றையும் அருமையாக அழகாக சொல்லி உள்ளீர்கள் அம்மா... நன்றி... ஒரு முறை சென்று வர வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது...

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிவைப் படித்து அருமையான கருத்து சொன்னதற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
உங்கள் காத்திருப்புக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
ஒரு முறை சென்று வாருங்கள், கோவில்கள் நிறைந்த ஊர், கிரி வலம் வரும் பாதையில் நிறைய கோவில்கள் அழகாய் அமைந்து இருக்கிறது, இன்னொரு முறை போய் தான் நாங்கள் பார்க்க போகிறோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மலைப்பயணம், கோயில் உலா அப்பப்பா. படிக்கும்போதே வியப்பாக இருக்கிறது. ஒரு நல்ல கோயிலுக்கு எங்களுக்கு எவ்வித சிரமமுன்றி அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

காமாட்சி said...

உங்களுடன் மானஸீகமாக திடியன்மலைக்குப்போய் சுவாமி தரிசனம் செய்து கொண்டோம் என்று நினைத்துக் கொண்டேன். படிக்கவும்,படங்கள் பார்க்கக் கிடைத்ததுமே போதும்.அழகு படங்கள். மிக்க நன்றி.அன்புடன்

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
மானஸீக பிரார்த்தனை தான் மிக உயர்ந்த பிரார்த்தனை.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

Bagawanjee KA said...

உற்சாகமாய் அந்த நாளைக் களித்து விட்டீர்கள் ,அப்படித்தானே :)

வை.கோபாலகிருஷ்ணன் said...


முழுவதும் ரஸித்துப்பார்த்தேன், படித்தேன். நானே மலை உச்சிவரை ஏறிவிட்டு வந்தது போல ஓர் பிரமிப்பு ஏற்பட்டது.

சார் வரைந்துள்ள ஓவியம் உள்பட வழக்கம்போல அனைத்தும் அழகாகவும் அருமையாகவும் உள்ளன.

என் கணினியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் என் வருகையில் இவ்வளவு தாமதமாகிவிட்டது.

கோமதி அரசு said...

வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.
உற்சாகமாய் நாளைக் களித்தோம் என்பது உண்மையே!
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
திடியன் மலை இரண்டாம் பகுதி படித்தீர்களா?
உங்கள் கணினி பிரச்சனை சரியானது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...//அலைபேசியில் இவ்வளவு தூரம் தான் ஜூம் செய்ய முடியும்.//

இதுவே மிகவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. தங்களால் நாங்களும் தரிஸிக்க முடிந்துள்ளது.

//நானும் இவ்வளவு தூரம் ஏறிப்பார்த்து இருக்கிறேன் என்பதை நினைத்துக் கொள்ள ஒரு படம்.//

என்றும் நினைவில் நிற்குமாறு இது மிகவும் அவசியம் தான். பகிர்வுக்கு நன்றிகள்.

Indhira Santhanam said...

வணக்கம் அம்மா நலம்தானே.எங்களால் போகமுடியாத இடங்களுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் மானசீகமாக. சாருக்கும் உங்களுக்கும் என் வணக்கங்கள்.

கோமதி அரசு said...

வணக்கம் இந்திரா , வாழ்க வளமுடன், நலமா?
நாங்கள் நலம். வெகு நாட்களாக காணவில்லேயே!
மானசீக பிரார்த்தனை நன்று.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

Thulasidharan V Thillaiakathu has left a new comment on your post "திடியன் மலை நிறைவுப் பகுதி":

நல்ல அனுபவம்!!! விநாயகரின் விளையாட்டையும், கைலாசநாதரைக் கண்டீர்களா என்பதையும் அறிய இதோ அடுத்த பதிவிற்குச் செல்கிறோம்...

படங்கள் அருமை. மலை மொட்டை மலையாக இருக்கிறதே! வறண்டு இருப்பதைப் பார்த்தால் ஏறுவதும் கொஞ்சம் ட்ரைதான் போல...மழை மேகம் என்று நீங்கள் சொல்லியிருந்தாலும் நல்ல காலம் நீங்கள் இறங்கி வரும் வரை வரவில்லை இல்லையா. இல்லை என்றால் இறங்குவது இன்னும் கடினமாக இருந்திருக்கும். வழுக்கல் என்று..

தங்கள் கணவர் வரைந்த படம் அழகாக இருக்கு ஆனால் இந்தப் பதிவில் கொஞ்சம் மங்கலாக இருக்கிறதே...

தொடர்கிறோம் ...

Publish

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.

மழை பெய்தால் இறங்குவது கடினம்தான்.
//தங்கள் கணவர் வரைந்த படம் அழகாக இருக்கு ஆனால் இந்தப் பதிவில் கொஞ்சம் மங்கலாக இருக்கிறதே...//
தெரியவில்லையே!

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


மாதேவி said...

திடியன் மலை சிரமமான இனிய தரிசனம்.