திடியன் மலை உயரம் 320 மீட்டர்- கூகுள் - உதவி (நன்றி)
//வா வா சாமி தெரிகிறது என்று கணவர் அழைத்ததைக் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி . ராமர் மலை என்றார்கள். உள்ளே இருந்தது என்ன சாமி? ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இருக்கிறமாதிரி இருக்கிறதே ! என்று கேட்டுக் கொண்டே கணவரின் பக்கம் போய் பூட்டிய கதவு வழியாகப் பார்த்தேன்.
உள்ளே யார் இருந்தார்? என்பதை அடுத்த பதிவில்.//
போன பதிவில் உள்ளே யார் இருந்தார் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன் என்றேன், உள்ளே பெருமாள் நான்கு கரங்களுடன் இருந்தார். வெண்பட்டில் அழகாய் இருந்தார். கண்குளிரப் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அமர்ந்து அவரை நினைத்து ஜபம் செய்து விட்டு மழைக்காக "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி" திருப்பாவை பாடினேன். மலையைச் சுற்றி ஒருகாலத்தில் செழுமையாக இருந்திருக்கிறது.. இப்போது புற்கள் காய்ந்து கிடக்கிறது.
பெருமாளுக்கு முன்புறம் இருந்த கருடாழ்வாருக்குக் கொண்டு போன பூவைச் சார்த்தி வழி பட்டோம். அவர் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம், பெயர் தெரியவில்லை.தெரிந்துகொள்ள பட்டரும் அங்கு இல்லை. பேர் தெரியவில்லை என்றால் என்ன?
வெண்கலமணிகள் நிறைய கட்டி இருக்கிறது.வேண்டுதல் நிறைவேறித்தானே இவற்றைப்
பெருமாளுக்குக் கொடுத்து இருக்கிறார்கள்,கேட்டதைக் கொடுப்பவர் தான். வரங்களைக் கொடுப்பவரை வரதராஜபெருமாள் என்று அழைத்துக் கொண்டேன்.
உள்ளே பெருமாள் நான்கு கரத்துடன்
இருந்தார்.அழகான துவாரபாலகர்
தரை நவீனப்படுத்தியிருக்கிறார்கள்
அலைபேசியில் இவ்வளவு தூரம் தான் ஜூம் செய்ய முடியும்.
கோவில் சுவர்களில் எல்லாம் வந்தவர்கள்
தங்கள் பெயர்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.
நானும் இவ்வளவு தூரம் ஏறிப்பார்த்து இருக்கிறேன் என்பதை நினைத்துக் கொள்ள ஒரு படம்.
கருவறை விமானம்
மழை மேகம்
கருடாழ்வாருக்கு நாங்கள் வாங்கிப் போன பூக்களைச்
சார்த்தி வழிபட்டோம்.
நட்சத்திரக் கல்வெட்டு வலது பக்கச் சுவரில்இருக்கிறது நடுவில் ஓம் என்று இருக்கிறது
கோவிலைச் சுற்றி வந்து இயற்கைக் காட்சிகளை ரசித்தோம்.
(கணவர் வரைந்த படம்)
போலீஸ் தகவல் தொடர்பு (சிக்னல்) டவர் இருக்கிறது .
நாங்கள் கீழே இறங்கி வரலாம் என்று நினைக்கும்போது ஒருவர் வந்தார், வேர்க்க விறுவிறுக்க, சட்டையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டு, தண்ணீர் பாட்டில், உணவு எல்லாம் கொண்டு வந்தார் கையில். அவரிடம் பேசினோம். அவர் தன்னைத் தொலைத்தொடர்புக் காவலர் என்றார்.
இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள், வருவார்கள் என்றார். ஒரு நாள் ஏறி வருவதே எங்களுக்குக் கஷ்டமாய் இருக்கிறதே! உங்களுக்குக் கஷ்டமாய் இருக்குமே என்றதும் என்ன செய்வது வேலை இங்கு தானே என்றார்.
அவரிடம் கூட்டம் வருமா? என்று கேட்டோம் பெளர்ணமிக்கு நல்ல கூட்டம் வரும் என்றார். கார்த்திகை தீபத்திற்கு தீபம் ஏற்ற வருவார்கள் என்றார். பெளர்ணமிக்குக் கிரிவலம் வருவார்கள் என்றும் கூறினார்.
அவரிடம் விடைபெற்று கீழே இறங்க ஆரம்பித்தோம். கீழே இறங்கும்போது கவனம் மிகத் தேவை. படி கீழே வழுக்கி விடும். சில இடங்களில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து இறங்கினேன்.
கீழே இறங்க ஆரம்பித்தோம்.
இன்னொரு காவலரும் வந்தார். வெயில் ஆரம்பித்து விட்டதால் சட்டையை
தலைக்குப் போட்டுக்கொண்டு, மதிய உணவை வாங்கிக் கொண்டு ஏறுகிறார். என்னைப்பார்த்து கவனமாய் இறங்குங்கள் அம்மா என்றார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் ஏறிக்கொண்டு இருந்தார்கள் ஒரு பையன் மட்டும் மேலே வேகமாய் வந்து விட்டார்.
ஒருவர் மலையில் காய்ந்த மஞ்சள் புற்களை அரிந்து மூட்டையாகக் கட்டி மலைப் பகுதியில் கொஞ்ச தூரம் படிகள் இல்லாத பக்கம் வருகிறார். பிறகு சிமெண்ட் படியில் இறங்கிப் போகிறார், அங்கு ஒரு பெண் வாங்கிக் கொண்டு இறங்குகிறார். மீண்டும் மலைப் பாதையில் ஏறுகிறார், அங்கு ஒரு அம்மா புற்களை அரிந்து தருகிறார். மலைப் பக்கம் இருக்கும் ஆண், பெண் இருவரின் உடல் வலிமையும், உழைப்பும் வியக்க வைக்கிறது. தினம் மலை ஏற வேண்டும் என்றால் மன உறுதியும் வேண்டும்.
எவ்வளவு தூரம் இன்னும் ஏற வேண்டும்! அதற்குள் அமர்ந்து விட்டார்கள்.
கைக் குழந்தை, புதிதாக திருமணமான ஜோடி ஒன்று, ஒரு வயதான அம்மா, இரண்டு சிறு பெண்கள் என்று அந்த குழுவில்
இருந்தார்கள் , மேலே என்ன சாமி இருக்கு? திறந்து இருக்கா? தண்ணீர் இருக்கா? என்ற கேள்விகளைக் கேட்டார்கள். தண்ணீர் இல்லை இன்னும் 700 படி ஏற வேண்டும், குழந்தையை வைத்து இருக்கிறீர்கள் தண்ணீர் இருக்கா? என்று கேட்டேன் கொஞ்சம் இருக்கிறது என்றார்கள். நீங்கள் வெள்ளனவே ஏறிப் போனீர்களே பார்த்தோம் என்றார்கள், கைலாசநாதர் கோவிலிருந்து உங்களை பார்த்துவிட்டுத் தான் நாங்களும் வந்தோம் என்றார்கள். இதற்கு முன்பு வந்தது இல்லையாம்.
வரிசையாக ஏற ஆரம்பித்தார்கள், மேலே முன்பே போன பையன் போன் செய்து படி சரியில்லை கவனமாய் வாங்க என்று எச்சரிக்கை செய்தார்.
மலையிலிருந்து கைலாச நாதர் கோவிலும், தாமரைக்குளமும்.சுற்றிவர ஆலமரங்களும்.
தாமரைக் குளமாய்க் காட்சி அளித்து இப்போது ஒரு சொட்டு நீர் இல்லாத இடமாக ஆகிவிட்டது
இன்னும் இரண்டு பக்தர்கள் ஏறி வந்தார்கள் , அவர்களிடம் முதல் தடவையா? என்று. இல்லை இரண்டாவது தடவை என்றார் அவர்களுக்கு நல்ல மன உறுதி என்று நினைத்துக் கொண்டேன், அவர்களும் திறந்து இருக்கா? கோவில் என்று கேட்டார்கள்
கீழே இறக்கி விட்டு விட்டார் மலையப்பன் ஏற்றி விட்டது போலவே பத்திரமாய்.
அதன் பிறகு அருள்மிகு கோபாலசுவாமி திருக்கோவில் போனோம் அந்த கோவில்தான் முதல் பதிவில் வந்தது. முதலில் இவரைப் பார்த்து விட்டுத்தான்
மேலே ஏறுவார்கள் என்று நினைக்கிறேன் அதுதான் முதல் பதிவில் அவரைப்பற்றி பதிவிட்டேன்.
திடியன் மலைக் கோவில் நிறைவு பெற்றது.
வழியில் இருக்கும் விநாயகரை வணங்காமல் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டையும், நாங்கள் முதலில் வணங்க வந்த அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதரைத் தரிசனம் செய்தோமா என்பது எல்லாம் அடுத்த பதிவில்.
வாழ்க வளமுடன்.





