செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மே தினம்

மே  1 ஆம் தேதி தொழிலாளர் தினம்.

அனைத்துத்  தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  உழைப்பாளிகள் ஆன உழவர்களை வள்ளுவர் போற்றுகிறார் :-

//சுழன்றுமேர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை.//

எந்தத் தொழில் செய்தாலும் அதைத்  தெய்வமாகப் போற்றி,  தன்
திறமையைக் காட்டி முன்னேற வேண்டும் என்று சொல்வார்கள். அதைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அழகாய்ப் பாடலாக்கி வைத்து இருக்கிறார்.

அவர் புரிந்த தொழில்கள் பல! முதலில் உழவுத் தொழில்.
17 தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார்.
 இதை ப, ஜீவானந்தம் அவர்கள், கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிவைத்து இருந்த கைக்குறிப்பை படித்துச் சொன்னது.
அவை ;
1.விவசாயி
2. மாடு மேய்ப்பவன்
3.மாட்டு வியாபாரி
4. மாம்பழ வியாபாரி
5.இட்லி வியாபாரி
6. முறுக்கு வியாபாரி
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத்தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12.தண்ணி வண்டிக்காரன்
13.அரசியல்வாதி
14.பாடகன்
15,நடிகன்
16.நடனக்காரன்
17. கவிஞன்

இத்தனை தொழில் புரிந்த பட்டுக்கோட்டை அவர்களை இந்த தொழிலாளர் தினத்தில் நினைவுகூறலாம்.

அவர் பலதொழில்கள் பற்றிப் பாடி இருக்கிறார்.

தொழிலாளர் தினம் என்றால்,” செய்யும் தொழிலே தெய்வம்” பாடல் எல்லாவானொலியிலும் ஒலிபரப்புவார்கள்
.
இப்போது தொலைக்காட்சிகளிலும் இடம்பெறுகிறது
.
தொழில் செய்யும் போது தூங்ககூடாது என்பதை அழகாய்,” தூங்காதே தம்பி தூங்காதே” என்று பாடல் மூலம் சொல்லி இருப்பார். திரு எம்,ஜி,ஆர் அவர்கள் நாடோடி மன்னனில் பாடி, அவருக்குப் புகழ் சேர்த்த பாடல்.   விவசாயி எவ்வளவுதான் பாடு பட்டாலும் விவ்சாயிக்கு கையும், காலும் தான் மிச்சம் என பாடுகிறார், எத்தனை தொழிலாள்ர்களைப் பாடி இருக்கிறார். மிகவும் கேட்காத பழைய பாடல்களை தொகுத்து உங்களுக்கு  பகிர்ந்து இருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
                                                                                                                                             
//செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி – கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி                          (செய்யும்)
பயிரை வளர்த்தால் பலனாகும் – அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த
வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குலமானமுண்டு
வருங்காலமுண்டு அதை  நம்பிடுவோம்.           (செய்யும்)

சாமிக்குத் தெரியும் , பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை -அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்தபலனை==இதைப்
பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம்.                   (செய்யும்)

காயும் ஒரு நாள் கனியாகும் – நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும் – நம்
கனவும் நினைவும் நிலையாகும் – உடல்
வாடினாலும் பசி மீறினாலும் – வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம்                           (செய்யும்)//

திரைப்படம் ---- ஆளுக்கு ஒரு வீடு வருடம் 1960

                                                                      ------

                                                          உழைப்பு தேவை

//படிப்பு தேவை --- அதோடு
உழைப்பு தேவை--- முன்னேற
படிப்பு தேவை= அதோடு
 உழைப்பும் தேவை!

உண்மை  தெரியும்
உலகம் தெரியும்
படிப்பாலே --நம்
உடலும் வளரும்
தொழிலும் வளரும்
உழைப்பாலே---எதற்கும்  (படி)

பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்
பலப்பல உண்டு --மன
பக்குவம் கொண்டு
மக்கள்முன்னேறக்
காரணம் ரெண்டு---அதுதான்
வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடுகட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத் தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும்தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி. நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிர் விவரம்கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி!--எதற்கும் (படி)

ஜனத்தொகை மிகுந்தாலும்
பசித்துயர் மலிந்தாலும்
பணத்தொகை மிகுந்தோர் --மேலும்
பணம்சேர்க்க முயல்வதாலும்
உழைத்தால் தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும்---மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின்நிலைமை
மோசமாக முடியும்---- எதற்கும்     (படி)//

திரைப்படம்--- சங்கிலித்தேவன்.    1960

                                                 -----------------

            கரம் சாயா  விற்பவர்   
                                                             
//சாயா  சாயா கரம் சாயா கரம் சாயா
ஓரணாதான்யா சாப்பிட்டு போய்யா
ஒடம்பை பாருய்யா வாய்யா வாய்யா
வேலைக்கில்லாமே வீண்செலவாகும்
மூளைக்கு மருந்து சாயா
வேடிக்கையான ஜோடிக்கு சீமான்
ஜாலிக்கும் விருந்து சாயா.

வேளைக்கு வேளை  வீட்டுக்கு வீடு
வேண்டிய  நண்பன் சாயா
வெளியிலே அறையிலே  கடையிலே கப்பலிலே
சபையில் குடிப்பது சாயா ஏன்யா? ( கரம்சாயா)

கொழுத்துத் தேயிலே குளிரும் பனியிலே
கொழுக்கும் மலையிலே வெளைஞ்சுது;
கொறைஞ்ச வெலையிலே மிகுந்த சுவையிலே
குணமும், மணமும் நிறைஞ்சது

மேடையிலே பேசும் லீடரும் போலீஸ்
வீரரும் விரும்பிக் கேட்பது;
நாடகம் சினிமா நாட்டியமாடும்
தோழரும் வாங்கி சுவைப்பது
மூலையில் தூங்கும் சோம்பலும் நீங்கும்
ஏலமும் சுக்கும் கலந்தது;
இரவிலே பகலிலே ரயிலே, வெயிலிலே
ஏரோப் பிளேனிலே கிடைப்பது     (கரம்சாயா)//

படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
                                                          ------------------

                                     தாயத்து விற்பவர்
                                     ----------------------------        
ஒரு பாட்டில் தாயத்து விற்கும் தொழிலாளியிடம்
பணம் வருமானத்திற்கு ஏதாவது வழி இருக்கா இதிலே என்று கேட்கிறார்  ஒருவர்

அதற்கு தாயத்து விற்கும் வியாபாரி சொல்லும் பதில்:

//ஒடம்பை வளைச்சு நல்லா ஒழைச்சி பாரு - பாரு
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உக்கார்ந்து கிட்டு சேக்கிற பணத்துக்கு
ஆபத்திற்கு அது உனக்கெதுக்கு ?//

என்கிறார்.
திரைப்படம் மகாதேவி  வருடம்1957

நாங்க இதயமுள்ள கூட்டம் என்று சொல்லும்
வாசனை திரவியம் விற்பவர் பாடுவது:

//சட்டையிலே தேச்சுக்கலாம்
சகலருமே பூசிக்கலாம்
கைகுட்டையிலே நனைச்சுக்கலாம்
கூந்தலிலே  தெளிச்சுக்கலாம்.
கொஞ்சம் பட்டாலும் போதுமுங்க
வாடை பல நாள் இருக்குமுங்க//

திரைப்படம்-- சங்கிலித்தேவன் வருடம் 1960
                                            ------

நிழற்படம் எடுப்பவர் பாடும் பாட்டு

//காப்பி ஒண்ணு எட்டணா
கார்டு சைசு பத்தணா
காணவெகு ஜோரா யிருக்கும்
காமிராவைத்தட்டினா

பிள்ளைகுட்டி கூடநிண்ணு
பெரிதாகவும் எடுக்கலாம்
பிரியம்போல காசு பணம
சலிசாகவும் கொடுக்கலாம்.

தனியாக வந்தாலும்
கூட்டமாக வந்தாலும்
சார்ஜ் ஒண்ணுதான் வாஙக- ஒரு
சான்ஸ் அடிச்சுப்பாக்க வாருங்க.//

திரைப்படம்
படித்தபெண் வருடம்-- 1956


இந்தப் பாடல்கள் எல்லாம்  எங்கள் வீட்டில் இருந்த  புத்தகத்திலிருந்து எடுத்தவை.

புத்தகத்தின் பெயர்

‘மக்கள்கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்”

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்   பாடல்களை தொகுத்தவர் பி.இ. பாலகிருஷ்ணன் அவர்கள்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட் வெளியிட்டு இருக்கிறது. அந்தக்காலத்தில் அதன் விலை 10 ரூபாய்.

//உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.//

----வேதாத்திரி மகரிஷி

                                                 வாழ்கவளமுடன்

60 கருத்துகள்:

  1. தொழிலாளர் தினம் பற்றிய மிகவும் அழகான பதிவு..

    பாடல்கள் எல்லாமே அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. தொழிலாளர் தினத்துக்கான மதிப்பை இன்றைக்கு உணரும் பொழுது இளமையில் மே தினத்தின் விடுமுறையை மட்டும் அனுபவித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

    ப.கோ பாடல்கள் கொஞ்சம் சிவப்புச்சாயல் எனினும் எளிமை மனைதைக் கவர்ந்தது.

    தவறாக நினைக்காதீங்க.. வேதாத்திரி மகரிஷி யார்? மகரிஷி அவருடைய குடும்பப்பெயரா, இல்லை வசிஷ்டர் விசுவாமித்ரர் மாதிரி ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொண்ட பட்டமா? ரமணருக்கு மக்கள் கொடுத்தது போலவா? அல்லது இப்போதெல்லாம் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொள்கிறார்களே (கோவிந்தபுரம் மடம் பெயர் மறந்துவிட்டது - க்ருஷ்ணப் ப்ரேமி?) அது மாதிரியா? நிஜமாகவே தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தொழிலாளர் தினம் பற்றிய மிகவும் அழகான பதிவு.. பாடல்கள் எல்லாமே அருமை.பாராட்டுக்கள். வாழ்த்துகள் அம்மா...

    பதிலளிநீக்கு
  4. 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி. இரவு.
    சிகாகோ நகரம்.

    8 மணி நேரமாக தங்கள் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தாக்கப் பட்டதற்காக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலகம் மூண்டது.

    அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
    நீண்ட விசாரணை.

    1887-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி.
    தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ்,ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தூக்கிலிடப் படுகின்றனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறையிலேயே மாண்டார்.

    விசாரணையின் போது நீதிமன்றத்தில் இவர்கள் பிரகடனம் செய்தவை தொழிலாளர் சரித்திர குறிப்புகள் ஆயின. 'எங்கள் குரல் வளையை நெறிக்கலாம். ஆனால் எங்கள் குரல் மூலம் கிளர்ந்தெழப்போகிற தொழிலாள ர் உரிமைக் குரலை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்ற இவர்கள் வாசகங்கள் அடுத்து வந்த நாளைய சரித்திரத்தை எழுதின.

    இது தான் மேதின வரலாறு.



    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் ரசிக்க வைக்கும் பாடல்கள்... பாராட்டுக்கள்... சிறப்பான பாடல்களை தொகுத்து DD Mix -ல் வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன்... அதிக மின்வெட்டினால் எதுவும் செய்ய முடியவில்லை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    நேரம் கிடைப்பின் இன்றைய பகிர்வை வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

    பதிலளிநீக்கு
  6. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் முதலில் வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. மே தின சிறப்புப் பகிர்வு அருமை. பாடல்கள் அனைத்தும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  8. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
    பட்டுக்கோட்டையார் பாடல்கள் பொதுவுடமை சார்ந்த கவிதைகள்.

    வேதாத்திரி மகரிஷி உலக சமுதாய சேவா சங்கம் என்று 1958ம் வருடம் ஆரம்பித்து நடத்தி வந்தார்.95ம் வயதில் 28. 03. 2006 அன்று இறைநிலையோடு இணைந்து விட்டார்.

    முன்பு எனக்கு ஒற்றைத்தலைவலி,மற்றும் ஒவ்வாமையால் அடிக்கடி தும்மல் வரும் அதனால் கஷ்டபட்ட போது உறவினர் ஒருவர் இந்த அமைப்பைப்பற்றி சொல்லி இதில் நாடி சுத்தி, கபாலபதி என்ற பயிற்சி எடுத்துக் கொண்டால் இந்த தொந்திரவு இருக்காது என்றார்கள் 1994 இல் உறுப்பினர் ஆனேன். அன்றிலிருந்து அந்த பயிற்சிகள் தியானம் எல்லாம் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாய் இருக்கிறேன். பின் அதில் தரும் ஆசிரியர் பயிற்சியும் எடுத்து கொண்டேன்.எங்கள் ஊரில் இருக்கும் மனவளக்கலை மன்றத்தில் முடிந்தவரை சேவை செய்கிறேன்.
    உடற்பயிற்சி, காயகல்பம், அகத்தவம், அகத்தாய்வு எல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
    இப்போது வேதாத்திரி மகரிஷி ஆன்மீக மற்றும் உள்ளூணர்வு கல்வி நிலையம் ஆழியாறில் செயல்படுகிறது. (vision for wisdom)
    அவருக்கு, ரமணருக்கு மக்கள் கொடுத்தது போல் தான் கொடுத்திருக்கிறார்கள். வேதாத்திரியை பின் தொடருபவர்கள் அவருக்கு கொடுத்தபெயர் மகரிஷி.
    அவருக்கு அருள் தந்தை, பாமரமக்களின் தத்துவஞானி என்ற பெயர்கள் கொடுத்து இருக்கிறார்கள்.உல்க அமைதிக்காக ஐக்கிய நாடு சபையில் பேசி இருக்கிறார்.
    Website;WWW.vethathri.org
    மேலும் இவரைப்ப்ற்றி தெரிந்து கொள்ளலாம் இந்த வலைத்தளத்தில்
    பாரதிதாசன் பல்கலைக்கழகமும்,இந்த ஆன்மீக மன்றமும் இணைந்து கல்லூரிகளில் பட்டயக்கல்வி நடத்துகின்றன.தனியாகவும் மன்றங்களில் சேர்ந்து இப்பட்டயக் கல்வி பயிலலாம்.பள்ளிகளிலும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க விஜி பார்த்திபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    //எங்கள் குரல் வளையை நெறிக்கலாம். ஆனால் எங்கள் குரல் மூலம் கிளர்ந்தெழப்போகிற தொழிலாள ர் உரிமைக் குரலை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது'//

    இப்படி எத்தனை பேர் தங்கள் இன்னுயிர் ஈந்து தொழிலாளர்கள் நன்மைக்கு பாடு பட்டு இருக்கிறார்கள் அவர்கள் தியாகம் வாழ்க!.

    பாராதி தாசன் பாடி இருப்பார் தியாகம் செய்த தோழர்களைபற்றி.
    //சித்திரச் சோலைகளே!
    உமை நன்கு திருத்த இப்பாரினிலே
    முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
    உங்கள் வேரினிலே////
    வேராக இருந்து தொழிலாள்ர்கள் மேன்மைக்கு பாடு பட்டவர்களை நினைந்து தொழிலாளர்கள் உற்றுமையாக நாடு நலம்பெற பாடு பட வேண்டும்.
    உங்கள் வரவுக்கும்
    மேதின வரலாறை விரிவாக சொன்னதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், பாடலை ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அன்பு கோமதி,அருமையான பதிவு.

    நல் உழைப்பால் உயரும் அனைவருக்கும் நம் மனம் நிறைந்த வாழ்த்துகளைச் சொல்ல வேண்டும். இதுவரை இன்னல்கள் அனுபவித்து வந்த தொழில்களைச் சேர்ந்தவர்கள் நலம் பெறவேண்டும். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  13. தொழ்லாளர் தினத்தை உங்கள் தேர்ந்த பாடல்களுடன் கொண்டாடுகிறேன். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    அப்பாதுரை ஒண்ணுமே தெரியாதமாதிரி கேப்பாரு.. அடிச்சு கூட கேப்பாரு.. சொல்லிடாதீங்க!

    பதிலளிநீக்கு
  14. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் பதிவை படித்தேன்.
    பாடலும், திருக்குறளும் அப்பா, மகனுக்கு அளிக்கும் ஆலோசனைகளும் மிக அருமை,

    //சிறப்பான பாடல்களை தொகுத்து DD Mix -ல் வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன்... அதிக மின்வெட்டினால் எதுவும் செய்ய முடியவில்லை...//
    இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு தொழிலாளர் அமைப்பும் விழா கொண்டாடுகிறார்கள். நீங்களும் இன்னோரு பதிவு தொழிலாளர் தினத்திற்கு பதிவிடலாம்.
    எங்கள் விருப்பத்திற்காக.
    உங்கள் வரவுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் இதுவரை இன்னல்கள் அனுபவித்தவர்களும் இனி நலமாய் இருக்க வேண்டும்.
    நல்ல வாழ்த்துக்கள் அக்கா
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க மோகன்ஜி ,வாழ்கவளமுடன்
    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    அப்பாதுரை சாருக்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும் சார், அவர் கேள்வி கேட்டுவிட்டார் அதனால் பதில் அளித்துவிட்டேன்.

    உங்கள் முதல்வருகைக்கு நன்றி சார்.



    பதிலளிநீக்கு
  17. பட்டுக் கோட்டையார் பாடல்கள் பகிர்வுக்கு நன்றி. இன்று தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் இந்த தின சம்பந்தமாகப் போட்ட ஒரே படம் 'தொழிலாளி' என்று நினைக்கிறேன். மே தினப் பாடல்களில் ரேடியோவில் காதில் விழுந்தது ரஜினியின் உழைப்பாளிப் பாடலும், கமலின் 'புஞ்சை உண்டு நஞ்சை உண்டு' பாடலும்!

    பதிலளிநீக்கு

  18. பட்டுக் கோட்டை ! - செந்தமிழ்ப்
    பாட்டுக் கோட்டை!
    கட்டு மலா்போல் - சொற்கள்
    கமழும் மூட்டை!

    நாட்டுக் கவியைப் - போற்றி
    நவின்றாய் தோழி!
    கேட்டுக் குளிர்ந்தோம் - மின்னும்
    கிழக்கென வாழி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஸ்ரீராம் , வாழ்கவளமுடன்.
    நானும் தொலைகாட்சிகளில் பழையபாடல் வைக்கும் நேரம் கேட்டுப்பார்த்தேன். செய்யும் தொழிலே தெய்வம் பாடல் வைக்கவில்லை.
    காரைக்கால் வானொலி நிலையத்தில் வைத்தார்கள்.
    தொழிலாளியில் வரும் “ ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நானொரு தொழிலாளி ’பாடல் நன்றாக இருக்கும். காலம் மாறுகிறது மக்களின் ரசனையும் மாறுகிறது. உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
    மோகன் ஜியின் அப்பாதுரை பற்றிய பின்னூட்டத்திற்கு உங்களின் சிரிப்பு நன்று.

    பதிலளிநீக்கு
  20. வாங்க கி.பாரதிதாசன் கவிஞர், வாழ்கவளமுடன்.
    கவிதை பின்னூட்டம் அருமை.
    பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாட்டுக்கோட்டைதான் குறுகிய காலத்தில் எவ்வளவு நல்ல பாடல்கள் கொடுத்து இருக்கிறார்!
    உங்கள் கருத்துக்கும்
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.பொருத்தமான பகிர்வு.பகிர்வு சிந்தனையைத் துண்டும் வகையில் அருமை.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ஆசியா, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பாட்டுக்கோட்டை கட்டிய பட்டுக்கோட்டையார் பற்றிய இப்புத்தகத்தை நானும் வாசித்து வியந்திருக்கிறேன். அவரது பாடல்களில் வகைவகையான தொழில்களின் பெருமை விரவிக்கிடக்க அவரது வாழ்க்கையின் அனுபவங்களே சான்று. தொழிலாளர் தினத்தில் அவரை நினைவுகூர்ந்தமைக்கும் அவரைப் பற்றிய அற்புதத் தகவல்பகிர்வுக்கும் காலத்தால் அழியாத பாடல் வரிகளுக்கும் மிகவும் நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  24. மேதினத்தை உங்கள் பாணியில் சொல்லி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி யிருக்கிறீர்கள் கோமதி. பாராட்டுக்கள்.
    நானும் பட்டுக் கோட்டையாரின் பாடலுக்கு ரசிகை.

    எல்லா பாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  25. தொழிலாளர் தினத்துக்கு அருமையான சமர்ப்பணம்! ரொம்ப நாட்களுக்குப்பிறகு 'செய்யும் தொழிலே தெய்வம்' பாடலை நினைக்க வைத்து விட்டீர்கள். முன்பெல்லாம் சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலித்துக்கொன்டிருந்த பாடல் அல்லவா இது! பாடகியரில் ஒருத்தர் ஏ.பி.கோமளா. இன்னொருத்தர் யாரென்று நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  26. வாங்க மனோ சாமிநாதன், வாழ்கவளமுடன்.
    சிலோன் ரேடியோவில் நானும் கேட்டு இருக்கிறேன்.பாடியது ஏ.பி கோமாளா , ஜமுனாராணி என்று நினைக்கிறேன்.
    தேன்கிண்ணத்தில் முன்பு பகிர்ந்து கேட்டு இருக்கிறேன் அவர்கள் யார் பாடியது இசை அமைப்பு யார் என்று எல்லாம் போட்டு இருப்பார்கள் தேடினால் கிடைக்கவில்லை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. தாமதத்திற்கு மன்னிக்கவும் .மேதினம் பற்றி இவ்வளவு தெளிவான பதிவை தாமதமாக படித்தமைக்கு.நல்ல விரிவான தெளிவான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  28. தெரியாத ஒன்றை ஒருவர் கேட்டால் இப்படியா விமரிசிப்பது. நீங்கள் செய்ததுதான் சரி. தகவல்கள் தெரியாதவருக்கும்போய்ச் சேருமே. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  29. ,” செய்யும் தொழிலே தெய்வம்”

    உழைப்பாளர் தினம் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  30. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
    எப்போது வேண்டும் என்றாலும் கருத்து சொல்லலாம், எதற்கு மன்னிப்பு எல்லாம்!
    நீங்கள் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் , பாராட்டுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  32. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. பாடல்கள் எல்லாமே அருமை.பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  34. உழைப்பாளர் தினத்திற்கு ஏற்ற பதிவு.
    பட்டுக்கோட்டை கல்யான்சுந்தரத்தைப் பற்றிய செய்தி இதுவரை தெரியாதது.
    வாழ்த்துக்கள்....
    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  35. வாங்க கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
    நீங்களும் மக்கள் கவிஞன் புத்தகத்தை படித்து இருக்கிறீர்களா மகிழ்ச்சி.
    அவருடைய பாடல்கள் எல்லாம் எஅனக்கு பிடிக்கும் ஏதாவது சமயத்தில் அவர் ப்[ஆடலை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன், பகிர்ந்து கொண்டேன்.
    உங்கள் வரவுக்கும், விரிவான அழகிய பின்னூட்டத்திற்கும் நன்றி கீதமஞ்சரி.
    நீங்கள் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
  36. வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.
    போனபதிவில் உங்களை காணவில்லையே! ஊருக்கு போய் இருந்தீர்களா?

    நீங்களும் பட்டுக்கோட்டை பாடல்களுக்கு ரசிகை என்பது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வாங்க காஞ்சனாராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வாங்க காஞ்சனாராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்கவளமுடன்.
    உங்களுக்கு ஆயுசு 100 இப்போது தான் உங்கள் பின்னூட்டத்தை தேடினேன் வந்து விட்டீர்கள்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. மிக மிக அருமையான பதிவு.

    பாடல்களும், விஷயங்களும்,பின்னூட்டத்தில் வேதாத்திரி மகரிஷி மற்றும் தங்கள் சேவை குறித்த பகிர்வும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  41. தொழிலாளர் தினம் சிறப்பான பகிர்வுங்க.

    சென்ற வருடம் நானும் பதிவிட்டேன் இந்த வருடம் ஊருக்கு சென்றுவிட்டேன். அற்புதமான பாடல் வரிகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  42. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
    ஊருக்கு போய் இருந்தீர்களா?
    பதிவையும், பின்னூட்டத்தையும், படித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  43. வாங்க சசிகலா , வாழ்கவளமுடன்.
    நினைத்தேன், நீங்கள் ஊருக்கு போய் இருப்பீர்கள் என்று.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. பெயரில்லா5 மே, 2013 அன்று 12:14 PM

    தொழிலாளர் தின நீண்ட ஆக்கம் மகிழ்வு தந்தது.
    நிறைய கடும் உழைப்பு செய்துள்ளீர்கள்.
    இனிய வாழ்த்து.
    (தாமத வரவிற்கு மன்னிப்புடன். நேரத்தோடு போராடுகிறேன்.)
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  45. வாங்க வேதா. இலங்காதிலகம். வாழ்கவளமுடன்.
    உங்கள் இனிய வாழ்த்துக்கு நன்றி.
    நேரத்தை ஒதுக்கி கருத்து கூறியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. விவரங்களுக்கு ரொம்ப நன்றி.

    இவரை நான் 1978 வாக்கில் சென்னை நுங்கம்பாக்கம் அருகே transcendental meditation முகாம் ஒன்றில் சந்தித்திருக்கிறேன். மறந்தே போனது.

    (இவர் ஒரு நாத்திகர் தெரியுமோ? :)

    //.எங்கள் ஊரில் இருக்கும் மனவளக்கலை மன்றத்தில் முடிந்தவரை சேவை செய்கிறேன்.

    உங்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  47. உரிய நாளில் பட்டுக் கோட்டையார் பாடல்களை அழகாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். தாமதமாக வந்து விட்டேன்.மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  48. வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.

    //கடவுளை வணங்கும் போது ,
    கருத்தினை உற்றுப் பார் நீ!
    கடவுளாய்க் கருத்தே நிற்கும்
    காட்சியை காண்பாய் ஆங்கே.

    அண்டத்தில் கடவுளாய்
    அழைக்கப் படுபவன்
    பிண்டத்தில் உயிரரெனப்
    பேசப்படுகிறான்
    கண்டத்தின் மேலே
    கருவில் நிலைத்தவன்
    அண்டத்தும் பிண்டத்தும்
    அவனையே காண்கிறான். //

    எல்லா உயிர்களிலும், எங்கும் நீக்கமற கடவுளை காண்பவர் வேதாத்திரி மகரிஷி.
    அவரை உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன், தெரிந்து இருக்கிறது மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. வாங்க மூங்கில் காற்று முரளிதரன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.மன்னிப்பு எதற்கு எப்போது வேண்டும் என்றாலும் வரலாம்.வரவுதான் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  50. தொழிலாளர் தினத்தில் அருமையான பல பாடல்களைப் பகிர்ந்து சிறப்பித்துள்ளீர்கள்.

    அறிந்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
  51. அப்பாதுரை சார், வேதாத்திரி மகரிஷியின் இறை வணக்கம் பாட்டு இன்னொன்று கேளுங்கள் உங்களுக்கு பிடிக்கும்.
    எல்லாம் வல்ல தெய்வமது
    எங்கும் உள்ளது நீக்கமற
    சொல்லால் மட்டும் நம்பாதே
    சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
    வல்லாய் உடலில் இயக்கமவன்
    வாழ்வில் உயிரில் அறிவுமவன்
    கல்லாற் கற்றார் செயல் விளைவாய்க்
    காணும் இன்ப துன்பமவன்

    அவனின் இயக்கம் அணுவாற்றல்
    அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
    அவனில்தான்நீ, உன்னில் அவன்
    அவன் யார்? நீ யார்? பிரிவேது?
    அவனை மறந்தால் நீ சிறியோன்
    அவனை அறிந்தால் நீ பெரியோன்
    அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
    அறிவு முழுமை அது முக்தி.
    வேதாத்திரி மகரிஷி அவர்களின் அறிவுக் கோயிலில் விக்ரகமற்ற அரு-உருவ ஜோதியை தரிசிக்கின்றோம்.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  52. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  53. அனைத்தையும் படைத்து காத்து ரட்சித்து அழித்து அண்டசராசரம் எங்கும் பரவி நிற்கும் அழியாத விராட்ஸ்வரூப சக்தியூற்றான கடவுள் திடீரென்று கண்டத்தின் மேலே பிண்டத்தில் உண்டென்பது - கடவுளுக்குத் தரும் எஸ்கேப் ஸ்விச். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிற மாதிரி. நம்முள் ஆண்டவன் இருக்க வேண்டிய அவசியம்? இருந்தால் நாம் ஏன் தீயவழிகளில் போகவேண்டும்?

    காற்றிலும் நீரிலும் கடலிலும் கடவுளைக் காண்பது கடவுளுக்குத் தரும் அவமதிப்பு என்று தோன்றுகிறது. கடவுள் மறுப்பு எனும் நாத்திகத்தில் இந்தக் குழப்ப்ம் இல்லை.

    அவனில் நீ உன்னில் அவன் போன்ற வரிகளின் வெற்றுத்தன்மை காலத்தில் புரியும் என்றே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  54. நேரம் கிடைத்தால் கலர்சட்டை பக்கம் வாங்களேன்?

    பதிலளிநீக்கு
  55. உழைப்பவர் உலகில் வேர்வையும், வறுமையும் மட்டுமே சொந்தமாகிப்போனது.
    அவர்கள் பற்றிய விழிப்புணர்வு இங்கு இருக்க வேண்டியவர்களுக்கு இருக்கிற்தா என்பது கேள்விக்குறியே?

    பதிலளிநீக்கு
  56. வாங்க அப்பாதுரை சார்,வாழ்க வளமுடன்.

    //நம்முள் ஆண்டவன் இருக்க வேண்டிய அவசியம்? இருந்தால் நாம் ஏன் தீயவழிகளில் போகவேண்டும்?//

    இப்படி நம் முன்னோர்கள் நம்முள் ஆண்டவன் இருபதாய் சொல்லி வைத்த காரணம் நல் வழி படுத்த தான். சிறு வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். நீ நல்ல குழந்தையாய் இருந்தால் கடவுள் உனக்கு படிப்பு தருவார், நீ கேட்பதை எல்லாம் தருவார் என்று நம் இன்ப துனபத்தில் கலந்து கொள்ளும் ஒரு நண்பன், ஒரு தோழன், நம் நலனில் அக்கறை உள்ளவன் என்று வளர்த்து விட்டார்கள்.
    அதில் நம்பிக்கை இல்லாத குழந்தை தப்புகளை செய்கிறது, தீயவழிகளில் போகிறது நல்லதை சரியாக சொல்லும் வழி காட்டுதல் இல்லாத குழந்தைகள் தவறான வாழ்க்கைக்கு போகிறார்கள்.

    மூச்சு விட திணறும் போதும், தண்ணீருக்காக தவிக்கும் போதும்,
    கடல் தரும் பொக்கிஷங்களை அனுபவிக்கும் போதும் (மழை, உப்பு ) கடவுளுக்கு தரும் மரியாதை தெரியும்.
    உங்கள் வரவுக்கும் ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி சார்.
    உங்கள் கலர்சட்டை படித்து கருத்து சொல்லி இருக்கிறேன்.


    பதிலளிநீக்கு
  57. வாங்க விமலன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  58. மிக அருமையான பகிர்வு ,
    எல்லாம் அருமை கோமதி அக்கா

    பதிலளிநீக்கு