வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழையோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
----அப்பர் தேவாரம்
திருவுடை யார்திருமால் அயனாலும்
உருவுடை யார் உமையாளை ஓர் பாகம்
பரிவுடை யார் அடைவார்வினை தீர்க்கும்
புரிவிடை யார் உறை பூவணம் ஈதோ
---- சுந்தரர்.
மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணி பொன்கொழித்து
ஓடநீரால் வைகை சூழும் உயர்திருப் பூவணமே.
---திருஞானசம்பந்தர்.
தென்பாண்டி நாட்டுத் தேவாரத் தலங்களில் திருப்பூவணம் 11 வது தலம்.
மதுரையிலிருந்து கிழக்கே 19 கி,மீ தொலைவில் உள்ளது. இதைப் புஷ்பவனம் என்றும் கூறுவார்கள்..
மூலவர் சுயம்பு லிங்கமாய் இருக்கிறார்.
இறைவன் பெயர் - புஷ்பவனநாதர் , பூவணநாதர், பாஸ்கரபுரீசர், பிதிர்மோக்ஷபுரீசர், பிரம்மபுரீசர் ,ஏகஸ்யசிதம்பரேசர், திருப்பூவணேசர்
அம்மன்- செளந்தர நாயகி, வடிதம்மை, சுவர்ணவல்லி, அன்னபூரணி,அழகியநாயகி, அழகிய மின்னம்மை, மின்னாள் என்பன.
தனி சன்னதியில் இருக்கிறார்.
தல விருட்சம் - பலா.
தீர்த்தம் = மணிகர்ணிகை. வகைநதி., வசிட்ட இந்திர தீர்த்தங்கள்.
இத்தலத்திற்கு மறுபெயர்கள் -புஷ்பவனம், புஷ்பவனகாசி, புஷ்பபுரம், பாஸ்கரக்ஷேத்திரம். பிதிர்மோக்ஷபுரி, பிரம்மபுரி, ஏகசிய சிதம்பரம், பூவணம்,
பூவணக்காசி, பூவை என்பனவாம்.
தீர்த்தத்திற்கு மறு பெயர்கள்:-
வையை, மணிகர்ணிகை, அல்லது மணிகுண்டம், தேவிகுண்டம், பாபநாசம், பிரம்மதீர்த்தம், லக்ஷ்மிதீர்த்தம், மார்க்கண்டேயர் தீர்த்தம், நளதீர்த்தம், விஷ்ணுதீர்த்தம், ஆகியன .
இத்தலத்தில் உமையம்மை வைத்து வளர்த்த மரம், கிருதயுகம் முதலிய நான்கு யுகங்களில் முறையே பாரிசாதம், வில்வம், வன்னி, பலா மரமாக இருக்கிறது. இப்போது பலாமரமாக இருக்கிறது.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர், “பூவணமதனில் பொலிந்தினிதருளித்,தூவணமேனி காட்டிய தொன்மையும்”
எனக் குறிப்பிடுகின்றார்.
கரூர்த்தேவர் பாடிய திருவிசைப்பாப் பதிகமும் உள்ளது, இக்கோவில் இறைவனுக்கு.
திருவிளையாடல் புராணத்தில்இரசவாதம் செய்த படலத்தில் இத்தலம் குறிக்கப்படுகிறது.
அப்பர், சம்பந்தர். சுந்தரர், பாடிய தேவாரமும், கந்தசாமிப் புலவர் இயற்றிய திருப்பூவணநாதர் உலாவும் பெற்ற சிறப்புத் தலம்.
இத்தலத்தில் எலும்பானது மலர் அல்லது சிலையாகும்(கல்லாகும்) என்பது ஐதீகமாம்.
அந்தக் காலத்திலும் வைகையில் தண்ணீர் இல்லை போலும்! அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரூம் இறைவனை தரிசிக்க வரும் போது வைகை நதியிலுள்ள் மணல்கள் எல்லாம் சிவலிங்கமாய் தோன்றியதாம், அதனால் அதை மிதிக்க அஞ்சி இறைவனை தொழ இறைவன் அவர்களுக்காக நந்தியை சற்றே சாய்ந்து இருக்கும்படி சொன்னாராம் ,அதன்படி நந்தியும் சாய்ந்து வழிவிட , மூவரும் மறுகரையிலிருந்தே இறைவனை தரிசனம் செய்து தேவாரம் பாடினார்களாம்.
“ செப்பு மூவர் சொற்றமிழ்த்துதிக்க விருப்போடு வந்து வையை மணற் சிவலிங்கமென மனத்தெண்ணி முன்பு வட கரைக் கவர் நின்று தமிழ் பாடும்பொழுதே இடப மாமுதுகு சாயும் வகையே செய்துமுன் மூவர் தரிசிக்க மகிழ்நேசர்’ எனக் கூறுகிறது தலவரலாறு.
திருவிளையாடற் புராணத்தில் உள்ள செய்திகள்:-
பொன்னனையாள் என்ற நாட்டியப் பெண் பொன்னால் இறைவர் உருவம் செய்ய விரும்பி, தன்னிடமிருந்த பொன் நகைகளை உருக்கி உருவம் செய்விக்கத் தொடங்கியபோது உருவம் செய்யப் போதுமான பொன் இல்லாத காரணத்தால் பாதியில் சிலை செய்வது நின்று போய்விட்டது. பொன்னனையாள், சிலை செய்யமுடியவில்லையே ! என்று வருந்திய போது சிவபெருமான் சித்தர் வேடத்தில் வந்து, பெண்ணே! உன் வீட்டில் இருக்கும் ஈயம், பித்தளை , இரும்பு முதலிய உலோகப்பொருட்களை கொண்டுவா தங்கமாக்கித் தருகிறேன், என்று சொல்லி அவற்றைப் பொன்னாக்கிக் கொடுக்க, தடைப்பட்ட இறைவன் திரு உரு முழுமை பெற்றது.அது மிகவும் அற்புதமாய் அமைந்து விட்டது.பொன்னனையாள் சிலையின் கன்னத்தைக் கிள்ளி அணைத்து முத்தமிட்டாள். இன்றும் அந்த முத்த,நகக்குறி உள்ளது என்று புராணம் கூறுகிறது.
கந்தசாமிப் புலவர் எழுதிய திருப்பூவணநாதர் உலாவில் உள்ள தலப் பெருமைகள் :-
சூரியன், நான்முகன், நாரதர், திருமால், திருமகள், நளமகராஜன், முடியுடைமூவேந்தர்கள், வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.
துர்வாசமுனிவரால் ஒளியிழந்த சூரியன் இங்குள்ள மணியோடையில் மூழ்கி, தன் ஒளியைப் பெற்றார்.
நான்முகன் கயிலையில் இறைவனை வழிபடும் போது ஊர்வசி மேல் மையல் கொண்டதால் இறைவன் அளித்த சாபம் இத்தல இறைவனை வணங்கியவுடன் நீங்கப்பெற்றார்.
திருமகள் வாலகில்லிய முனிவரை அவமதித்த குற்றத்தால் திருமாலை பிரிய நேர்ந்தது. அக்குற்றம் நீங்கத் திருமகள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு திருமாலுடன் சேர்ந்தார்.
காளிகச்சோதிகள் நாரதர் சொற்படி இங்கு வந்து மணியோடையில் மூழ்கிப் பிதிர்க்கருமங்கள் செய்து அவர்களுக்கு வீடுபேறு பெற்றுத் தந்தார்.
கல்வெட்டு:-
கோனரின்மை கொண்டான் தனது எட்டாம் ஆட்சியாண்டில் திருப்பூவணநாதருக்கு கோயிலுக்கு நிலம் வழங்கியதும், குலசேகர தேவன் தனது 25 ஆம் ஆட்சியாண்டில் தினந்தோறும் 1008 வேதபாராயணஞ் செய்தவர்களுக்கு உணவிற்காக நிலம் அளித்த விபரமும் சொல்லப்படுகிறது.
ஒரு செப்பேடு ராஜகெம்பீர சதுர்வேதி மங்கல சபைக்கு 25 காசுகள் வழங்கியதை அறிவிக்கிறது.
திருவுலா நாயகருக்கு அருள்மிகு செளந்தர நாயகர் , அழகிய நாயகர் என்ற பெயர்கள் உள்ளன். அழகிய தோற்றத்தை கண்டு கன்னத்தை கிள்ளிக் கொஞ்சியதால் பொன்னையாளின் நகத்தழும்பை பெற்ற மூர்த்தி இவர்.
பொன்னையாள் திருவுருவம் கோபுர வாயிலில் உள்ளது. நல்ல பெரிய உருவமாய் உள்ளது. எதிர்ப் பக்கத்தில் சிவகங்கை மன்னன் திருவுருவமும் உள்ளது.
(கோயிலுக்கு உள் போகும் போது இறைவனுக்கு பூஜையைப் பார்க்க வேகமாய் போனதால் போட்டோ எடுக்கவில்லை. வரும் போது அடுத்த கோவில் மாணிக்கவாசகர் பிறந்த ஊருக்கு செல்லும் அவசரத்தில் படம் எடுக்கவில்லை.)
பொன்னனையாள் மடம் . பொன்னனையாள் மண்டபம் என்றும் இரண்டு கட்டிடங்கள் உள்ளன. இவை அம்மையார் சிவனடியார்களுக்கு உணவு அளித்த இடமும்,மதுரை சோமசுந்தர கடவுள் பொன்னையாள் பொருட்டு சித்தராக வந்து காட்சிக் கொடுத்து ரசவாதம் செய்த இடமும் ஆகும்.. கோரக்க சித்தர் ஆலயம் இத்தலத்திலுள்ளது.
கோவில் ஸ்வாமி சன்னதியில் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் செளந்தரநாயகி அம்மன் திருக்கல்யாண திருக்காட்சி படம் இருந்தது.
(சிவபெருமானது வார்த்தையை கேளாது தக்கன் யாகத்திற்கு சென்ற குற்றத்திற்காக உமையம்மை இறைவனை பிரிந்து திருப்பூவணம் அடைந்து தவம் செய்து சிவபெருமானை மணக்கிறார்).
உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர்,, 63 நாயன்மார்கள், சப்தமாதாக்கள், மகாலக்ஷ்மி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், சந்திரன், நவக்கிரகம், முதலிய சன்னதிகள் உள்ளன. நடராஜர்
சன்னதி வாசலில் பதஞ்சலிமுனிவர், வியாக்ரபாதர்முனிவர் சிலைகள் உள்ளன.
தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு மேல் விதானத்தில் நன்கு காற்று, வெளிச்சம் வரும்படி சாளரங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

உள்பிரகாரம் பழுது பார்த்துக்கொண்டிருப்பதால் தட்சிணாமூர்த்தி சந்நிதியுடன் திரும்பவேண்டியுள்ளது. உள் பிரகாரம் தற்போது முழுவதுமாகச் சுற்றி வர முடியாது என்று போர்டு வைத்து இருக்கிறார்கள்.

நடராஜர் சன்னதி வாசலில் ஒரு பக்கம் பதஞ்சலி.
மற்றொரு பக்கம் வியாக்ரபாதர்.
தூண்களில் அழகிய சிற்பங்கள்
இரவு சுவாமி பள்ளியறை போகும் பல்லாக்கு
அழகிய காமதேனு வாகனம்
கைலாய வாகனம்
நந்தி வாகனம்
அம்மன் சன்னதியில் உள்ள தூணில் அழகிய ஏக பாதர் சிலை
அழகிய வானரம்
இரணியவதம்
கருடவாகனத்தில் விஷ்ணு
சுவாமி சன்னதி ,அம்மன் சன்னதி மதில் சுவர்களில் இப்படி அழகிய வாக்கியங்கள் எழுதப்பட்டு இருக்கிறது.
அம்மன் சன்னதியில் சிறு மண்டபத்தில் அழகிய வேலைப்பாடு.அழகிய இரு தூண்களின் வழியாக என் கணவரின் விரல்கள்.
சுவாமி சன்னதிக்கு வெளியே இருக்கும் தூணில் இருக்கும் பைரவருக்கும் வழிபாடு நடக்கிறது.

ஆலயமணி

சுவாமி சன்னதி அருகில் மணி மண்டபம்
கருவூர்த்தேவர் பாடிஅருளிய திருவிசைப்பாவில், இறைவன் பெருமையைக் காட்டிலும் பெரியதில்லை, அன்புடையோர் உள்ளத்தில் அவர் எளிமையாக வந்து தங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இறையில்புகளைப்பற்றியும் பூவணத்தின் வளத்தைப்பற்றியும் அவர் சொல்கிறார்.
சம்பந்தர் இத்தலத்தில் மூவேந்தர் வழிபட்ட சிறப்பு, ஊரின் இயற்கை வளம்,மாடமாளிகை,தேரோடும் வீதி பற்றியும் கூறியுள்ளார்.இத்தலத்து இறைவனை வணங்க நன்மைகள் பெருகும்,இன்பம் உண்டாகும் என்கிறார்.
சுந்தரர் தம் தேவாரத்தில் இறைவனின் பெருமைகளை பலவாறு எடுத்துக்கூறி, பூவணம் ஈதோ உள்ளது சென்று வழிபட்டு நலம் பெறுக என்று கூறுகிறார்.
நாவுக்கரசர் இததலத்து இறைவனை பாடியருளிய திருத்தாண்டகம் மிக சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானின் தனி அடையாளங்கள் இந்தப் பாட்டில் கூறப்படுகிறது. பாடல்கள் தோறும் அப்பெருமானை நினைக்க அவரது திருவுருவம் நெஞ்சில் தோன்றுமென்று கூறுகிறார்.
வாழ்க வளமுடன்!
--------------------------------