வியாழன், 9 ஜூலை, 2026

களக்கோட்டீஸ்வரர் சாஸ்தா துணை




ஜூன் மாதம் 11 ஆம் தேதி  மகன் குடும்பத்தோடு குலதெய்வம் கோயில் போய் வந்தேன்.
அங்கு எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கும் என் சேமிப்பாகவும் இந்த பதிவில்  இடம் பெறுகிறது.


 







 
 எங்கள் குலதெய்வம்  :- இந்த பதிவில் பச்சைபசேல் என்று கண்ணுக்கு குளுமையாக வயல்வெளி காட்சிகள் இருக்கும்.

ஏரி, வயல்கள், கோவிலின் அருகே ஆலமரங்கள்  என்று மிகவும் ரம்மியமாக இருக்கும். அந்த காட்சிகள் எல்லாம் கண்ணுக்கு குளுமையாக இருக்கும் கவின் சிறு வயதில் போன போது  உள்ள பதிவு. கோயிலை சுற்றி விளையாடுவான்.



அதற்கு முன்போன பதிவில் இந்த  படம் இடம் பெற்றது கோயில் பெயர் காரணம் இருக்கும்.

எங்கள் குலதெய்வத்திற்கு களக்கோடி சாஸ்தா என்று பெயர்.  அவர் இருக்கும் இடத்தைச்  சுற்றிலும் வயல் வெளி,  அறுவடையின்போது நெற்கதிர்களை அங்கு தான் போட்டு அடித்து நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வார்கள். களத்துமேட்டுக்குக் கடைசியில் உள்ளதால் களக்கோடி சாஸ்தா என்ற பெயர்.

பூர்ணா மற்றும் புஷ்கலா தேவியர்களுடன்  ஸ்ரீ களக்கோட்டீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

நெல்லைமாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாப்பான்குளம்- மட்வார் விளாகம் எனும் இடத்தில் இருக்கிறது எங்கள் கோயில்.



                         

வீர பத்திரர் சாமி. வாசலில் இடது பக்கம் இருக்கும் சன்னதி



அகோர வீரபத்திரர் திருவெண்காட்டில் இப்படித்தான் இருப்பார். 
இன்னும் உயரமாக இருப்பார்







களக்கோடி சாஸ்தா என்றுதான் அழைப்போம். இப்போது களக்கோட்டீஸ்வர சாஸ்தா என்று அழைக்கிறார்கள்.


   இரண்டுகுடும்பம்  வந்து இருந்தார்கள், மொத்தம்  20  பேர் இருப்போம்
அவர்கள் அபிஷேகத்திற்கு கொடுத்து இருந்தார்கள், நாங்கள் பிரசாதம் வெண்பொங்கல்,சர்க்கரை பொங்கல் செய்ய சொல்லி இருந்தோம் குருக்களிடம். .அனைவர் பேரிலும் அர்ச்சனை மட்டும் செய்தோம்.

நாங்கள் சென்று வந்த அடுத்த வாரம்  எங்கள் குடும்பத்தினர் பொங்கல் வைத்து அனைத்து மூர்த்திகளுக்கும்(பிள்ளையார், முருகன், வீரபத்திரர் மாடசாமி, நாகர்கள், சப்தகன்னியர்கள்,  பேச்சியம்மன்,பிரம்மராட்சசி, மற்றும்    யானை வாகனம்)அபிஷேகம் செய்து  வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தார்கள்.

மற்ற சாமிகள் உள்ள பதிவு 

குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன் 

இதில் மேலும் படங்கள் இருக்கிறது.

நிற்க முடியாது வெகுநேரம் என்பதால் நாற்காலி போட்டார்கள் அமர.
மகன் எங்கள் குடும்பத்தினர் அனைவர் பேர் நட்சத்திரம் இவற்றை பிரிண்ட்அவுட்  எடுத்து வந்து இருந்தான் . அதை சொல்லி அனைவர் பேரிலும் அர்ச்சனை செய்யப்பட்டது.


தீபாராதனை

நல்லபடியாக மன நிறைவாக பூஜை ஆனது. மாலைமரியாதைகள் செய்தார் குருக்கள்.

நாங்கள் செய்ய சொன்ன பிரசாதங்களை  வந்து இருந்த அனைவருக்கும் வழங்கினார் , பிறகு வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் என்று கொடுத்தார்.
நாங்கள் வேறு இடங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும் வீட்டுக்கு மறுநாள் தான் போவோம் என்பதால்  முன் இருக்கும் கோயில் மண்டபத்தில் யாராவது இருப்பார் கொடுத்து விடலாம் என்று வாங்கி கொண்டோம். 


எங்கள் பூஜை முடிந்த சமயம் வேறு  ஒரு குடும்பம் பொங்கல் வைத்து வழிபடவந்தார்கள். கோயில் வாசல் முன்பொங்கல் வைக்க வேண்டும்.
பொங்கல் வைத்த இவர்களும் சாமி கும்பிட்டு விட்டு சுடச் சுட பொங்கல் கொடுத்தார்கள்.





நாங்கள் எப்போது போனாலும் உழவு தொழில் ஏதாவது நடந்து கொண்டு இருக்கும்,  நாற்று நடுவார்கள் அல்லது பச்சை பசேல் என்ற வயல்களை பார்த்து இருக்கிறோம். அறுவடை செய்து  களத்தில்  கதிர் அடித்து வண்டிகளில்  ஏற்றிக் கொண்டு இருப்பார்கள். இந்த தடவை உழுது போட்ட வயல்களை பார்த்து ஏமாற்றம் ஆகி விட்டது.



ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன, பறவைகள் அமர்ந்து இருக்கப் பார்த்து இருக்கிறேன் படங்களை பகிர்ந்து இருக்கிறேன். இப்போது ஆடுகள் மேய்வதை பார்க்கிறேன்.

கருமேகம் சூழ்ந்து  இருட்டி கொண்டு வந்தது .



தூரத்தில் தெரியும் அந்த கோயில் வரை வயல் வெளிதான் இருக்கும்.

மகன் பல்வேறு பறவைகளின் ஒலியை வீடியோ செய்து இருந்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி  வித்தியாசமான ஒலி செய்தன, ஆனால் இங்கு அது பதிவேற மறுக்கிறது. இயற்கை அழகை அள்ளி தருவதோடு மனதுக்கு ஒரு  அமைதி ஆனந்தம் அளிக்கும் கோயில்.


ஏரியில் காற்று அதிகம் வீசியதால் அலை அலையாக நீரின் நடனம்

 மகன் ஏரியில் இறங்கி எடுத்து வந்த படம்




பலவிதமான கொக்குகள் வரும். இந்த முறை சாம்பல் நிற கொக்குகள்தான்


மகன் , மருமகள், பேரன் ஏரிக்குள்  இறங்கியவுடன்  கொக்குகள் பறந்து கரை யேறி விட்டனவாம்.


சாம்பல் , வெள்ளை  செந்நிற கொக்குகள்

மேலே இருக்கும் பறவைகள் அனைத்தும் இந்த மாதிரி பறவைகள் தான். இதை மட்டும் பக்கத்தில் எடுக்க முடிந்தது என்றான். 

மகன் எல்லா படங்களையும்  அலைபேசியில் எடுத்தான் பேரன் தான் காமிராவில் எடுத்தான் .
 

ஏரியில் இருக்கும் சிறிது நீரையும் ஆகாயத் தாமரை செடி  மறைத்து கொண்டு இருக்கிறது.

(மரமும்  நான் காரிலிருந்து எடுக்க மறைத்து கொண்டு இருக்கு)

கோயில் பக்கம் ஏரி தெரியாது கரை உயர்ந்து இருக்கும் வர வர ஏரி கரை  சிறிதாகி ஏரி  தெரியும் 


மழை காற்று பலமாக வீச ஆரம்பித்து விட்டது. சிறிய காணொளிதான்பாருங்கள். நான் எடுத்த காணொளி


மழை வந்து விட்டால் கோயிலிருந்து வெளியே போகும் பாதையில் நடக்க முடியாது கார் சேற்றில் சிக்கி கொள்ளும். வழியில் உள்ள ஆற்றில் நீர் ஓட ஆரம்பித்து விடும் கார் போகாது. நடந்து போக வேண்டும்.  குருக்கள்" அம்மா உங்களுக்கு நடக்க முடியாது விரைவாக காரில் ஏறி ஆற்றை கடந்து விடுங்கள் என்றார்."


கோயிலிருந்து வரும் பாதை செம்மண் ரோடு மழை  வந்து விட்டால் சேறும் சகதியுமாக ஆகி விடும்.,டயர்கள் மண்ணில் சிக்கி கொள்ளும் அப்புறம் கிளப்ப முடியாது அதனால் அந்த பாதையை, மழைக்கு முன்   ஆற்றை கடந்து விட்டால் போதும் பயம் இல்லை.


 மகன்,மருமகள், பேரன்  ஏரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அதில் இறங்கி அக்கரையில் இருக்கும் பிள்ளையாரை பார்க்க போய் விட்டார்கள் . 




பக்கத்தில் போய் பார்த்தது இல்லை, மகன் அருமையாக பக்கத்தில் பார்த்த உணர்வை தருவது போல படம் எடுத்து வந்து காட்டி விட்டான் எனக்கு.


 போன ஆண்டு மகனுடன் போன போது ஏரி முழுவதும் நீர் நிறைந்து இருந்தது, இநத் ஆண்டு கொஞ்சம் தான் நீர் இருந்தது பேரன் ஏரியில் இறங்கி
 பார்க்கிறான் .


அவர்களை அழைத்து வந்தார் டிரைவர் அதன் பின் விரைந்து மதுரையை நோக்கி பயணப்பட்டோம்.


இடுப்பிலே  பெலட், காலில் பெலட், கைத்தடி இவற்றுடன் மெதுவாக நடந்து வந்தேன்.

"சீக்கீரம் வாங்க ,பார்த்து  வாங்க , மழை வரும் முன் காரில் ஏறிவிடலாம்"

என்று அழைத்து வருகிறான் பேரன்.





குழந்தைகள் எல்லாம் இந்த விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவார்கள். பழைய பதிவில் அதை பகிர்ந்து இருக்கிறேன்.


இந்த பாதையை கடந்து வந்து விட்டோம்  (ஆறு ஓடும் பகுதி)

கடந்து விட்டோம் மழையும் வலுக்க துவங்கி விட்டது.

ஆற்றை தாண்டி வந்தால் வரும் ஒரு கோயில்.


அந்த கோயில் மண்டபத்தில் அமர்ந்து இளைப்பாறி கொண்டு இருந்தவர்களுக்கு பிரசாதம் கொடுத்து வந்தார் டிரைவர். 

அங்கு இருக்கும் மாடுகளுக்கு வாழை பழங்களை கொடுத்து வந்தார்.




இந்த கோயில் திருவிழாக்கள் ஒரு காலத்தில் நன்றாக நடந்து இருக்கும் போல


அப்போது தேர்திருவிழாவில் சாமியை எழுந்தரள செய்ய வைக்கஏற்படுத்திய மண்டபம் இப்போது , செடிகள்,மரங்கள் முளைத்து கிடக்கிறது. 

இதை அடுத்து திருநெல்வேலி செல்லும் சாலையை நோக்கி பயணம்  இப்படியாக குலதெய்வ கோயில் வழிபாடு நிறைவு பெற்றது.



ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு மாதிரி எங்கள் குலதெய்வம் கோயில் 
காட்சி தரும்.  எல்லோருக்கும் எல்லா நலன்களை அருள வேண்டும் களகோட்டி சாஸ்தா 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. எங்கள் குலதெய்வம் சாத்தியப்பா எனப்படும் பாலசாஸ்தாவும் பூரணா புஷ்கலாவுடன்தான் காட்சி அளிக்கிறார்.  களக்கோடி பெயர்க்காரணம் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //எங்கள் குலதெய்வம் சாத்தியப்பா எனப்படும் பாலசாஸ்தாவும் பூரணா புஷ்கலாவுடன்தான் காட்சி அளிக்கிறார். களக்கோடி பெயர்க்காரணம் தெரிந்து கொண்டேன்.//

      உங்கள் குலதெய்வம் பேர் அருமை. பால சாஸ்தா மனைவியருடன் இருக்கிறாரா?

      நீக்கு
    2. ஆமாம். நானும் ஒரு பதிவு படங்களுடன் வெளியிடுகிறேன் விரைவில்.

      நீக்கு
    3. //ஆமாம். நானும் ஒரு பதிவு படங்களுடன் வெளியிடுகிறேன் விரைவில்.//

      மகனுக்கு திருமணம் முடிந்தவுடன் அழைத்து சென்று வந்தீர்களா?
      பதிவு போடுங்கள்.

      நீக்கு
  2. கோவில் அழகாய் இருக்கிறது.  பெரிய கோவி​லாய் தெரிகிறது.  உழுதுபோட்ட வயல்களாயிருந்தாலும் அந்த புகைப்படம் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவில் அழகாய் இருக்கிறது. பெரிய கோவி​லாய் தெரிகிறது. உழுதுபோட்ட வயல்களாயிருந்தாலும் அந்த புகைப்படம் அருமையாக இருக்கிறது.//

      ஆமாம், பெரிய கோயில் தான் மாற்றங்கள் நட்ந்து கொண்டே இருக்கிறது. எனக்கு முன்பு இருந்த பழமையான கோயில் மிகவும் பிடிக்கும்.
      என்னுடைய முந்திய குலதெய்வ பதிவுகளை பார்த்தால் மாற்றங்கள் தெரியும்.

      வயல் அழகுதான்.

      நீக்கு
  3. அந்த இடத்துக்கு சொந்த வண்டியில்தான் செல்ல வேண்டும் போலுள்ளதே..  பஸ் போக்குவரத்துக்கு வழியில்லை போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த இடத்துக்கு சொந்த வண்டியில்தான் செல்ல வேண்டும் போலுள்ளதே.. பஸ் போக்குவரத்துக்கு வழியில்லை போல..//

      நம் சொந்த வண்டி சின்னதாக இருந்தால் மழை காலத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடினால் போக முடியாது. நாங்கள் வாடகை கார் தான் எடுத்து போனோம். பெரிய வண்டி வேன் கொஞ்சம் போகும். சின்ன வண்டிகள் சிக்கி கொள்ளும்.

      அப்போதும், இப்போதும் பஸ்மெயின் ரோட்டில் நின்று விடும் அங்கு இறங்கி நடந்து தான் வர வேண்டும் முன்பு இப்போது ஆட்டோ கிடைக்கிறது .

      முன்பு மாட்டு வண்டி வைத்து கொண்டு வருவோம் ஆழ்வார் குறிச்சியிலிருந்து. காலங்கள் சென்ற பின் வண்டி வசதிகள் வந்து விட்டது.

      நீக்கு
  4. சிமெண்ட் தரையுடன் கூடிய மரம். காற்று.. காணொளியை ரசித்தேன் அக்கரை பிள்ளையார் அனுகிரஹம் எப்போதும் கிடைக்கும், இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிமெண்ட் தரையுடன் கூடிய மரம். காற்று.. காணொளியை ரசித்தேன் அக்கரை பிள்ளையார் அனுகிரஹம் எப்போதும் கிடைக்கும், இருக்கும்.//

      ஆமாம். ஆலமரத்து சல சலப்பும் காற்றும் நன்றாக இருந்தது அதை அனுபவிக்க முடியாமல் மழைக்காக ஓடி வர வேண்டியது ஆகி விட்டது.
      பிள்ளையார் அனுகிரஹம் எப்போதும் கிடைக்கும் என்றது மகிழ்ச்சி.

      நீக்கு
  5. கோவில் பற்றிய விவரங்களும் படங்களும் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவில் பற்றிய விவரங்களும் படங்களும் அருமை..//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. படங்களும் விவரங்களும் நன்றாக உள்ளன. ஆனாலும் ஒரு கதை போன்ற கோர்வை கிட்டவில்லை. நீங்கள் கோர்வையாக எழுதுபவர். வயது காரணம் சிரத்தை அதிகம் செய்ய முடியாமல் இருந்திருக்கலாம். பதிவு ஒரு திருப்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்தரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //படங்களும் விவரங்களும் நன்றாக உள்ளன.//

      நன்றி.
      //ஆனாலும் ஒரு கதை போன்ற கோர்வை கிட்டவில்லை. நீங்கள் கோர்வையாக எழுதுபவர். வயது காரணம் சிரத்தை அதிகம் செய்ய முடியாமல் இருந்திருக்கலாம். பதிவு ஒரு திருப்தி.//

      நீங்கள் சொல்வது போல வயது ஒரு காரணம் என்றாலும் , கால் வலியால் எதுவும் எழுத தோன்றவில்லை. நிறைய படங்களை வலையேற்றி வைத்து இருக்கிறேன். பதிவு போட நேரமில்லாமல் ஊர்களுக்கு போய் கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது அவசரமாக எழுதியதால் கோர்வையாக இல்லை போலும்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. வயல் வெளிகளுக்கு நடுவே அழகான ஆலயம். உங்கள் பதிவு வழி நாங்களும் தரிசனம் கண்டோம். எங்கள் குலதெய்வம் கோவில் நினைவுக்கு வந்தது. சூழல்கள் காரணமாக இரண்டு வருடங்கள் செல்ல முடியாத நிலை.செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //வயல் வெளிகளுக்கு நடுவே அழகான ஆலயம். உங்கள் பதிவு வழி நாங்களும் தரிசனம் கண்டோம்.
      எங்கள் குலதெய்வம் கோவில் நினைவுக்கு வந்தது. சூழல்கள் காரணமாக இரண்டு வருடங்கள் செல்ல முடியாத நிலை.செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செல்ல வேண்டும்.//

      செம்டம்பர் மாதம் போய் வாருங்கள். இறைவன் அருள்புரிவார்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. குலதெய்வம் கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. களக் கோட்டீஸ்வரர் பெயர் காரணம் தெரிந்து கொண்டேன்.
    "எங்கள் குலதெய்வம்" என்ற உங்கள் முந்தைய பதிவுக்கு சென்று அங்குள்ள இயற்கை சூழ்ந்த படங்களையும், பதிவையும் படித்து ரசித்து வைத்தேன். அங்கு சிறு குழந்தை கவினையும் கண்டு வந்தேன். கவின் முக ஜாடை இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்.. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆசிகள். இப்போது உங்களுக்கு எங்கு சென்றாலும் பக்கபலமாக இருந்து உதவி. உங்கள் மேல் பாசமாக இருக்கிறார். அதற்கும் என் அன்பான வாழ்த்துகள் . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. குலதெய்வம் கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. //

      நன்றி.

      களக் கோட்டீஸ்வரர் பெயர் காரணம் தெரிந்து கொண்டேன்.
      "எங்கள் குலதெய்வம்" என்ற உங்கள் முந்தைய பதிவுக்கு சென்று அங்குள்ள இயற்கை சூழ்ந்த படங்களையும், பதிவையும் படித்து ரசித்து வைத்தேன். அங்கு சிறு குழந்தை கவினையும் கண்டு வந்தேன். கவின் முக ஜாடை இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்.. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆசிகள். இப்போது உங்களுக்கு எங்கு சென்றாலும் பக்கபலமாக இருந்து உதவி. உங்கள் மேல் பாசமாக இருக்கிறார். அதற்கும் என் அன்பான வாழ்த்துகள் . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      பழைய பதிவை படித்து கவினுக்கு உங்கள் அன்பான வாழ்த்துகள், ஆசிகள்சொன்னதற்கு நன்றி.
      எங்கு வெளியில் சென்றாலும் அவன் தாத்தாவை போல தரையை பார்த்து நடங்க ஆச்சி, பார்த்து வாங்க என்று சொல்லாமல் இருக்க மாட்டான்.
      கவனமாக பார்த்து கொள்வான் இரண்டு ஆச்சிகளையும். (மருமகளின் அம்மாவையும்) நன்கு பார்த்து கொள்வான்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    களக்கோட்டீஸ்வர சாஸ்தாவை நமஸ்கரித்து கொண்டேன். எங்கள் அம்மா வீட்டின் குலதெய்வம் சாஸ்தாதான். திருநெல்வேலியில் மாயமான்குறிச்சி என்ற ஊரில் உள்ளது. எங்கள் குலதெய்வம் வல்லநாடு அம்மன். .தூத்துக்குடி அருகே.

    நீங்கள் எடுத்தப் புகைப்படங்கள் அருமையாக உள்ளது. கருமேகம் சூழும் படங்களை மிகவும் ரசித்தேன். வயல் வெளி படங்கள், ஆடு மேயும் படங்கள், பறவைகளின் படங்கள், ஏரியின் படங்கள் என அனைத்தும் அருமை. .ஒவ்வொன்றாக பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.

    கோவிலில் உங்கள் அனைவருக்கும் நல்ல மரியாதைகள் செய்து உங்கள் அனைவரின் மனதை நிறைவாக்கிய குருக்களுக்கு மிக்க நன்றி.

    மழை வந்து விட்டால், கோவிலுக்குச் போகும் இடத்திலுள்ள அந்த ஏரி. நிரம்பி விடும் என்பது ஆச்சரியம். சிறிய மழைக்கே அப்படியா? அல்லது மழை காலத்தில் பெய்யும் பெரிய பெரிய மழைக்கு ஏரி நிரம்புமா. ?

    நல்லவேளை..! எவ்வித சிக்கலுமின்றி குலதெய்வ வழிபாடு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///களக்கோட்டீஸ்வர சாஸ்தாவை நமஸ்கரித்து கொண்டேன். எங்கள் அம்மா வீட்டின் குலதெய்வம் சாஸ்தாதான். திருநெல்வேலியில் மாயமான்குறிச்சி என்ற ஊரில் உள்ளது. எங்கள் குலதெய்வம் வல்லநாடு அம்மன். .தூத்துக்குடி அருகே.//

      அப்படியா மகிழ்ச்சி. தூக்குடியில் சிறு வயதில் இருந்து இருக்கிறேன். அப்பா அங்கு வேலைப்பார்த்தார்கள்.

      நீங்கள் எடுத்தப் புகைப்படங்கள் அருமையாக உள்ளது. கருமேகம் சூழும் படங்களை மிகவும் ரசித்தேன். வயல் வெளி படங்கள், ஆடு மேயும் படங்கள்,பறவைகளின் படங்கள், ஏரியின் படங்கள் என அனைத்தும் அருமை. .ஒவ்வொன்றாக பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.//

      பறவைகள் படங்கள் ஏரி படங்கள் மகன் எடுத்தான் ஏரிகரை மேல் ஏற வில்லை. போகிற வழியில் ஏரியின் கரை தணிவாக இருக்கும் அதை மட்டுமே காரிலிருந்து நான் எடுத்தேன்.

      .//ஒவ்வொன்றாக பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.//

      ரசித்தமைக்கு நன்றி.

      //கோவிலில் உங்கள் அனைவருக்கும் நல்ல மரியாதைகள் செய்து உங்கள் அனைவரின் மனதை நிறைவாக்கிய குருக்களுக்கு மிக்க நன்றி.//

      குருக்கள் இப்போது களக்காட்டில் இருக்கிறார் போன் செய்தவுடன் பிரசாதங்கள் அர்ச்சனை சாமன்கள் மாலைகள் எல்லாம் வாங்கி வந்து சிறப்பாக செய்து கொடுத்தார் . நிறைவாக இருக்கிறதா மனதுக்கு என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவ்வளவு தூரம் வர கஷ்டபட்டு குறுக்கள் மாறி கொண்டே இருப்பார்கள். இப்போது பல வருடமாக இவர் இருக்கிறார். கோயிலுக்கு வரும் அன்பர்கள் அனைவரிடமும் அன்பாக பேசி விரைவில் பூஜைகளை செய்து கொடுப்பார்.

      //மழை வந்து விட்டால், கோவிலுக்குச் போகும் இடத்திலுள்ள அந்த ஏரி. நிரம்பி விடும் என்பது ஆச்சரியம். சிறிய மழைக்கே அப்படியா? அல்லது மழை காலத்தில் பெய்யும் பெரிய பெரிய மழைக்கு ஏரி நிரம்புமா. ?//


      அந்த பக்கம் வயல்கள் எல்லாம் அந்த ஏரி பாசனத்தை நம்பி இருக்கிறது. தண்ணீர் பெருமழை பெய்தால் திடீர் ஆற்றின் வழியாக வந்து வயல்களில் பாயும். அந்த மாதிரி அமைப்பு கோயில் பக்கம் ஏரிகரை உயர்ந்து இருக்கும் கோயிலுக்கு நீர் வராது. போக போக ஏரி கரை தாழ்ந்து அதிக மழை பெய்தால் ஏரி உடைப்பு ஏற்படாது . அந்த பக்கத்து மக்களுக்கு குளிக்க , துணி துவைக்க வசதியாக இருக்கும். முன்பு ஒரு தடவை ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு ஆற்றை கடந்து போன படம் பொட்டு இருக்கிறேன். மக்கள் குளித்து, துணி துவைக்கும் படம் போட்டு இருக்கிறேன்.

      மாடுகள் ஏரி தண்ணீரை குடித்து அப்படியே கடந்து அக்கரை போகும்.

      //நல்லவேளை..! எவ்வித சிக்கலுமின்றி குலதெய்வ வழிபாடு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி//

      போன் செய்து கேட்டு ஆற்றில் நீர் இருக்கிறதா என்று கேட்டுதான் போவோம். சிறி நீர் இருந்தால் கார் போய் விடும். போன முறை மகனுடன் சென்று வந்தேன் கொஞ்சம் நீர் இருந்தது.

      நீங்கள் சென்று வந்த கோயில் பதிவு போடுங்கள்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.


      நீக்கு
  10. எல்லோருக்கும் எல்லா நலன்களை அருள வேண்டும் களகோடி சாஸ்தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //எல்லோருக்கும் எல்லா நலன்களை அருள வேண்டும் களகோடி சாஸ்தா//

      உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  11. எங்கள் குலதெய்வத்தையும் தரிசித்த மன நிறைவு...

    சாஸ்தா சரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்கள் குலதெய்வத்தையும் தரிசித்த மன நிறைவு...

      சாஸ்தா சரணம்..//

      நன்றி, எல்லோருக்கும் குலதெய்வம் தான் சாஸ்தா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. //பதிவும் படங்களும் சிறப்பு//

      நன்றி உங்கள் கருத்துக்களுக்கு

      நீக்கு
  13. அக்கா கோயில் படம் பார்த்ததுமே முன்ன நீங்க படம் போட்டது நினைவில் வந்துவிட்டது. இரண்டாவது படம்...யெஸ் அதே அதே...அப்ப வயல் படங்கள், பொங்கல் வைச்சது எல்லாம் போட்ட நினைவு.

    களக்கோடி சாஸ்தா படங்கள் எல்லாம் அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன் , வாழ்க வளமுடன்

      //அக்கா கோயில் படம் பார்த்ததுமே முன்ன நீங்க படம் போட்டது நினைவில் வந்துவிட்டது. இரண்டாவது படம்...யெஸ் அதே அதே...அப்ப வயல் படங்கள், பொங்கல் வைச்சது எல்லாம் போட்ட நினைவு.//

      உங்கள் நினைவாற்றல் தெரியுமே கீதா.


      //களக்கோடி சாஸ்தா படங்கள் எல்லாம் அழகு!//

      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  14. கவின் மிகவும் வளர்ந்துவிட்டார். அப்பா சாயல், அம்மா சாயல் கொஞ்சம் என்றாலும் முன்ன உங்க சாயல் இப்ப தாத்தாவின் சாயல் கலந்து கட்டி இப்பத் தெரிகிறார்.

    பாட்டியைப் போல பேரனும் கேமராவுடன்!!

    நல்லபடி பூஜை எல்லாம் நடந்தது மிக்க மகிழ்ச்சி.

    முன்பு வயல்கள் பச்சை பசேல் சமயம் போயிருநீங்க என்று நினைக்கிறேன் இப்ப அறுவடை முடிந்த வயல்கள் இதுவும் அழகாக இருக்கு அக்கா. வயல்கள் ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் அழகாக இருப்பது போலதான்..உழும் பருவம் விதைக்கும் பருவம், நாற்றுப் பருவம், கதிர்ப்பருவம் அறுவடைப்பருவம் என்று ஒவ்வொரு சமயம் ஒரு அழகு!

    அறுவடைக்குப் பிறகு மிச்சம் மீதி உதிர்ந்திருக்கும் நெல் மணிகளையும் காய்ந்த இலைகள்ச் சாப்பிடும் ஆடுகள்!

    நீரின் நடனம்! ஆகா...ஏரியில் தன்ணீர் குறைவு. முன்ன ஏரி நிறைய இருந்த படம் நினைவுக்கு வந்தது அக்கா. வயல்கள் அறுவடை மழையும் இல்லையே இந வருடம்....

    அக்கா பெயின்டட் ஸ்டார்க்....வர்ணநாரை/மஞ்ச மூக்கு நாரைகள் போலத் தெரிகின்றன. எல்லாமே இந்த நாரைகள். இப்ப சீசன் முடிஞ்சு வெளிய வந்திருக்கு போல. ரொம்ப அழகா இருக்கு...

    ஒன்று பறக்குதே...நானும் பறக்கும் வர்ண நாரை வந்து உட்கார்ந்து உடனே எழுந்து பறப்பதைப் போட்டிருக்கிறேன் கோமதிக்கா...

    அக்கா இது மஞ்சமூக்கு நாரை அல்லது வர்ண நாரை அலல்து பூநாரைன்னு சொல்லுவோமே அதுக்கா..

    என்னதான் சொல்லுங்கள் கேமரா கேமராதான் அக்கா. அலைபேசியில் எடுப்பவை என்னவோ ரொம்ப ருகில் இருந்தால் ஓகே அல்லது அத்தனிய தெளிவாக இருப்பதில்லை.

    காணொளி சூப்பர்க்கா...

    உங்கள் அருகில் பேரன் நிற்க இப்ப ரொம்ப உயரமாகிவிட்டார் என்று தெரிகிறது

    விழுதுகளைப் பார்த்ததும் (ஊஞ்சலாடுவாங்கன்னு நீங்க சொன்னதும்..) பிதாமகன் படத்ஹில் வரும் ஒரு பாடல் இளங்காத்து வீசுதே பாடலில் விழுதுகளில் ஆடும் காட்சி வரும்..அது நினைவுக்கு வந்தது.

    ஆறு குறுக்கால பாயுமோ நடுவில் இருப்பக்கமும் பிரிவது போன்ற இடைவெளி தெரியுது.

    கண்ணாடியில் நீர்த் துளிகள் படம் ரொம்ப அழகு ரசித்தேன்.

    தேர்திருவிழாவில் சாமியை எழுந்தரள செய்ய வைக்கஏற்படுத்திய மண்டபம்//

    ஆமாம் எங்க ஊரிலும் உண்டு!

    பதிவும் படங்கள் எல்லாம் சூப்பர் அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவின் மிகவும் வளர்ந்துவிட்டார். அப்பா சாயல், அம்மா சாயல் கொஞ்சம் என்றாலும் முன்ன உங்க சாயல் இப்ப தாத்தாவின் சாயல் கலந்து கட்டி இப்பத் தெரிகிறார்.//

      ஆமாம் கீதா.

      //பாட்டியைப் போல பேரனும் கேமராவுடன்!!//

      ஆமாம், அவனுக்கும் பறவை, மலர்கள் பிடிக்கும்.

      //நல்லபடி பூஜை எல்லாம் நடந்தது மிக்க மகிழ்ச்சி.//

      ஆமாம்

      //முன்பு வயல்கள் பச்சை பசேல் சமயம் போயிருநீங்க என்று நினைக்கிறேன் இப்ப அறுவடை முடிந்த வயல்கள் இதுவும் அழகாக இருக்கு அக்கா. வயல்கள் ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் அழகாக இருப்பது போலதான்..உழும் பருவம் விதைக்கும் பருவம், நாற்றுப் பருவம், கதிர்ப்பருவம் அறுவடைப்பருவம் என்று ஒவ்வொரு சமயம் ஒரு அழகு!//

      ஆமாம் கீதா, ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு அழகுதான்.

      //அறுவடைக்குப் பிறகு மிச்சம் மீதி உதிர்ந்திருக்கும் நெல் மணிகளையும் காய்ந்த இலைகள்ச் சாப்பிடும் ஆடுகள்!//

      ஆமாம், காய்ந்த புற்களும் அதற்கு உணவுதான்.

      //நீரின் நடனம்! ஆகா...ஏரியில் தன்ணீர் குறைவு. முன்ன ஏரி நிறைய இருந்த படம் நினைவுக்கு வந்தது அக்கா. வயல்கள் அறுவடை மழையும் இல்லையே இந வருடம்...//

      ஆமாம். மழை பெய்தால் வயல் வேலை ஆரம்பித்துவிடும்.

      //அக்கா பெயின்டட் ஸ்டார்க்....வர்ணநாரை/மஞ்ச மூக்கு நாரைகள் போலத் தெரிகின்றன. எல்லாமே இந்த நாரைகள். இப்ப சீசன் முடிஞ்சு வெளிய வந்திருக்கு போல. ரொம்ப அழகா இருக்கு...

      ஒன்று பறக்குதே...நானும் பறக்கும் வர்ண நாரை வந்து உட்கார்ந்து உடனே எழுந்து பறப்பதைப் போட்டிருக்கிறேன் கோமதிக்கா...

      அக்கா இது மஞ்சமூக்கு நாரை அல்லது வர்ண நாரை அலல்து பூநாரைன்னு சொல்லுவோமே அதுக்கா..//

      ஆமாம், கீதா, நாரைகள் வயலை சுற்றி கொண்டே இருக்கும் "நாராய் நாராய் பூ போடு "என்று சொல்லி கைகளை சுற்றுவோம் நகங்களில் வெள்ளையாய் இருந்தால் நாரை பூ போட்டதாக நினைப்போம் சிறு வயதில்.
      மகனும் அத்தனை நாரைகளும் பறக்கும் போது எடுத்து வந்தான் , அது வலையேற மறுத்து விட்டது.

      //என்னதான் சொல்லுங்கள் கேமரா கேமராதான் அக்கா. அலைபேசியில் எடுப்பவை என்னவோ ரொம்ப ருகில் இருந்தால் ஓகே அல்லது அத்தனிய தெளிவாக இருப்பதில்லை.

      காணொளி சூப்பர்க்கா...//
      நன்றி கீதா.

      //உங்கள் அருகில் பேரன் நிற்க இப்ப ரொம்ப உயரமாகிவிட்டார் என்று தெரிகிறது//

      உயரம் தான் , என் அருகில் மேலும் உயரமாக தெரிவான்.

      //விழுதுகளைப் பார்த்ததும் (ஊஞ்சலாடுவாங்கன்னு நீங்க சொன்னதும்..) பிதாமகன் படத்ஹில் வரும் ஒரு பாடல் இளங்காத்து வீசுதே பாடலில் விழுதுகளில் ஆடும் காட்சி வரும்..அது நினைவுக்கு வந்தது.//

      ஆமாம் அதில் பயமாக இருக்கும் மிக வேகமாக ஆடுவார்கள்.
      குழந்தைகள் மிதமாக ஆடுவார்கள்.

      //ஆறு குறுக்கால பாயுமோ நடுவில் இருப்பக்கமும் பிரிவது போன்ற இடைவெளி தெரியுது.//

      இல்லை கீதா, இருபக்கம் பாதை நடுவில் தான் ஓடும்.

      //கண்ணாடியில் நீர்த் துளிகள் படம் ரொம்ப அழகு ரசித்தேன்.//
      நன்றி கீதா.

      //தேர்திருவிழாவில் சாமியை எழுந்தரள செய்ய வைக்கஏற்படுத்திய மண்டபம்

      ஆமாம் எங்க ஊரிலும் உண்டு!//

      தேர் திருவிழா நடக்கும் எல்லா கோயில்களிலும் இருக்கும்.

      //பதிவும் படங்கள் எல்லாம் சூப்பர் அக்கா//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.


      நீக்கு
  15. கிராமத்து படங்களைப் பார்க்க ரொம்பவே குளிர்ச்சியாக இருக்கிறது.

    மகன் குடும்பத்துடன் குலதெய்வக் கோயில் தரிசனம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //மகன் குடும்பத்துடன் குலதெய்வக் கோயில் தரிசனம் அருமை//

      போன முறை மகனும் , நானும் மட்டும் போனோம்.
      இந்த முறை மருமகள், பேரனுடன் போய் வந்தது மனநிறைவு.

      நீக்கு
  16. கோவில் பிரசாத விநியோகம், கடவுளர் படங்கள் என அனைத்தையும் ரசித்தேன்.

    ஜூன் மழை வரும் நேரம். ஐஊன் முதலிலிருந்து குற்றாலச் சாரல், மழை நினைவுக்கு வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவில் பிரசாத விநியோகம், கடவுளர் படங்கள் என அனைத்தையும் ரசித்தேன்.

      ஜூன் மழை வரும் நேரம். ஐஊன் முதலிலிருந்து குற்றாலச் சாரல், மழை நினைவுக்கு வருது//
      முன்பு எல்லாம் கூட்டம் இருக்காது கோயில்மணியை பூஜை சமயம் அடித்தால் வயலில் வேலைப்பார்ப்பவர்கள் வருவார்கள் அவர்களுக்கு கொடுப்போம் பிரசாதம். இப்போது கோயிலுக்கு தினம் கூட்டம் வருகிறது. முன்னோர் வழிபாடும், குலதெய்வ வழிபாடும் இப்போது அதிகமாகி இருக்கிறது.

      இந்த முறை வயலில் வேலை இல்லை அவர்கள் யாரும் வரவில்லை, பக்தர்கள் வந்து இருந்தவர்களுக்கு கொடுத்தோம்.

      ஆமாம், குற்றாலச்சாரல் , சாரல் மழை காற்று மிக அருமையாக இருக்கும்.

      மகன், மருமகள், பேரன் மட்டும் மணிமுத்தாறு அணைகட்டு போய் வந்தார்கள். அருவியும் காற்றும் நன்றாக இருந்தது என்றார்கள்.

      நீக்கு
  17. நுங்க, பலாப்பழம் கிடைக்குமே. கவினுக்கு வாங்கிக் கொடுத்தீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நுங்க, பலாப்பழம் கிடைக்குமே. கவினுக்கு வாங்கிக் கொடுத்தீங்களா?//

      மதுரையில் தங்கை வீட்டு போன போது நுங்கு வாங்கி கொடுத்தாள் , பலாபழம் வழியில் எங்கோ சாப்பிட்டதாக சொன்னார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  18. கோவில், வயல், கிராமத்துக் காட்சிகள் என அழகான ஊர்.

    வர்ணக் கொக்கு அழகாக உள்ளது.

    குலதெய்வ வழிபாடு மனதுக்கு நிறைவாக இருந்திருக்கும் இறையருளால் நலமே இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //கோவில், வயல், கிராமத்துக் காட்சிகள் என அழகான ஊர்.

      வர்ணக் கொக்கு அழகாக உள்ளது.

      குலதெய்வ வழிபாடு மனதுக்கு நிறைவாக இருந்திருக்கும் இறையருளால் நலமே இருங்கள்.//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு
  19. அழகான கோயில். படங்களும், பகிர்வும் அருமை. சிறப்பான தரிசனம் அமைந்ததில் மகிழ்ச்சி. ஏரி மழைக்காலம் வந்ததும் நிரம்பக் கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //அழகான கோயில். படங்களும், பகிர்வும் அருமை. சிறப்பான தரிசனம் அமைந்ததில் மகிழ்ச்சி. ஏரி மழைக்காலம் வந்ததும் நிரம்பக் கூடும்.//

      ஆமாம், மழை பெய்தால் ஏரி நிறையும்.

      உங்கள் கருத்துக்குநன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு