வியாழன், 13 பிப்ரவரி, 2025

உலக வானொலி தினம்

 

பிப்ர்வரி 13  உலக வானொலி நாள்


உலக வானொலி தினம் 2011 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று யுனெஸ்கோ சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. 


(மார்ச்,5,2012) ல் போட்ட பதிவை மீள் பதிவாக 


2017   பிப்ரவரி 13 ல் போட்டு இருக்கிறேன்.

பின்னூட்டம் எல்லாம் படித்து பாருங்கள்.


தமிழகத்தில் மின்சாரம்த் தட்டுப்பாடு ஏற்பட்ட போது வானொலிப் பற்றி கட்டுரை எழுதி இருந்தேன் , அதை இன்று உலக வானொலி தினத்தில் மீள் பதிவாய் பதிவிடுகிறேன்.

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின் வெட்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. இணையதளத்தில் இணைய முடியவில்லை. இன்வெர்ட்டருக்கோ, சார்ஜ் ஆகும் அளவு மின்சாரம் இல்லை. இப்படி இருக்கும் போது நமக்கு கை கொடுப்பது பாட்டரி போடும்வசதி
 உள்ள   டிரான்ஸ்சிஸ்டர்தான்..

நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தும் இடையூறுகளால் , முன்பு நாம் தெளிவாக கேட்டுக்கொண்டு இருந்த மத்திய அலை வரிசை, சிற்றலை வரிசையில் வானொலி 
நிகழ்ச்சிகளை சரிவர கேட்க முடியாமல் இருந்தது. பண்பலையில் மட்டுமே கேட்க முடிந்தது.
 இப்போது மின்சாரத் தடையால் மற்ற மின்சாதனங்கள் இயங்காததால் மத்திய அலை
 வரிசையை நன்கு கேட்கமுடிகிறது. மின் பற்றாக்குறையால் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இது !

முன்பெல்லாம் ,வானொலியில் காலை ‘வந்தே மாதரம்’, ‘மங்கள இசை’, ‘பக்தி பாடல்’, ‘
நேயர் விருப்பம்’, சினிமா பாடல், நாடகம், ‘இசை விருந்து’ என்று, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒலித்துக் கொண்டே
 இருக்கும். அந்த நாளும்இப்போது மீண்டும் வந்து விட்டது 
மின்சாரப் பற்றாக்குறையால.




வெகு நாட்களுக்குப் பிறகு டிரான்ஸிஸ்டருக்கு சென்ற வெள்ளிக்கிழமை யன்று பேட்டரி 
போட்டு காலை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தேன்.

குறள் அமுதம், சான்றோர் சிந்தனை, மங்கள இசை ஆங்கிலத்தில் செய்திகள் முடிந்து பக்தி இசை தொடங்கியது. எனக்கு பிடித்த பாடல்கள் ‘முருகனுக்கு ஒருநாள் திருநாள் ‘ என்ற சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல், எல்.ஆர். ஈஸ்வரியின் ‘இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே ! அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே! எல்லாம் கிடைக்குமே!’ என்ற பாடலும் ,பி. லீலாவின் ‘வரவேண்டும் எனது அரசே! அருணோதய ஒளி பிரகாசா!’ என்றபாடலும், ‘யா அல்லா!ஈடில்லா ஏகாந்தம் நீயே அல்லா! யார் இங்கே வேறே கதியே! மாமறையே போற்றும் நீதியே! நாடியே வேண்டினேன்’ என்று உருகி பாடினார் நாகூர் ஹனிபா. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு கொஞ்சம் நில்லு எங்கள் திருநபியிடம் போய் சொல்லு சலாம் சொல்லு , என்ற பாடலும் நாகூர் ஹனீபா பாடினார். இந்த பாடலும் மிக நன்றாக இருக்கும். எனக்கு தெரியாத இன்னொரு பாடகர் ‘இறை தூதர் நபியே! மறை தூதர் நபியே! ‘என்று பாடினார். 

எல்லா மதத்திற்கும் உள்ள பாடலை வானொலிதான் இன்றும் இணைத்துத் தந்துகொண்டு
 இருக்கிறது.


வானொலி நிலயம்.டில்லி படம் - கூகிள்

பாடல் முடிந்து ‘விவசாய நிகழ்ச்சி’, ‘நலம் நேரம்’ என்று டாக்டரின் ‘ஆலோசனை நேரம்’, மாநிலச் செய்திகள்:
அடுத்து ‘பாடும் பண்பலை’,அடுத்து ‘தகவல் நேரம்’,என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

மீடியம் அலை வரிசையும் நன்கு கேட்பதால் அதில் 
வெள்ளிக்கிழமை வைக்கும் ‘காந்திய சிந்தனை’யை கேட்க முடிகிறது. ‘வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ! ‘பாடலை இசை அரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் தேன்குரல் இழைய இழைய பாடிய பாடலைக் கேட்டு ரசித்தேன். சத்திய சோதனையிலிருந்து சிலபகுதிகளைப் படித்தார்கள். அன்று காந்தி மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் செய்யும் அனுபவத்தை பெற அதில் பயணித்து காசி சென்றதை காசி பயணம் என்ற தலைப்பில் எழுதியதைப் படித்தார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று மகளிர் சங்கத்தின் பல்சுவை நிகழ்ச்சி, வைத்தார்கள். கஸ்தூரிபாய் மகளிர்சங்கம் தொகுத்துஅளித்த பல்சுவை நிகழ்ச்சி. பாரதியார் பாட்டு, ஹோலி பண்டிகை பற்றிய செய்தி, நாடகம் முதலியவை இருந்தன. நாடகத்தில் கொடுக்கப் பட்ட சிறிது நேரத்தில் படிப்பினை ஊட்டும் கதை ஒன்றைச் சொல்லி விட்டார்கள், நாடகத்தைக் காட்சி காட்சியாய் விவரித்த போது மிக நன்றாய் இருந்த்து.

மீரா பஜன், சமையல் குறிப்பு, குழந்தைப் பாதுகாப்பு என்று பல நிகழ்ச்சிகள் இருந்தன. வெயிலில் குழந்தைகளுக்கு வேர்க்குரு வாராமல் பாதுகாப்பது, பரீட்சை நேரத்தில் குழந்தைகளை நன்கு சாப்பிட வைத்துச் சரியான நேரத்தில் தூங்கவைப்பது, சரியான நேரத்தில் படிக்கவைப்பது என்று நிறைய டிப்ஸ்கள் வழங்கி அசத்தி விட்டாட்கள்.


மகளிர் தின வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று. . அதில் கணினி சாதனையாளர்


 கே. புவனேஸ்வரி அவர்கள் பேசினார்கள். கணினியின் சேவை குறித்து பேசினார். 
“கண் தெரியாதவர்களும் கணினியை இயக்கி திருக்குறளை படிக்கலாம் ; தமிழில் எழுதுபவர்கள் நிறைய நல்ல கட்டுரைகள எழுதுகிறார்கள், அதைப் படிக்கலாம் ; குழந்தைகள் கணினியில் யாரோடு பேசுகிறார்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனமாய் பார்த்து அவர்களை வழி நடத்த வேண்டும். பெண்கள் ஐ.டி துறையில் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் வேலையை மனபூர்வாமாக் செய்யவேண்டும்.அழுகை, கோபம் இரண்டையும் பெண்கள் விட வேண்டும், மென்மை தனமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்று பெண்கள் முன்னேறுவதற்கான சில வழிகளைக் கூறினார்கள். 

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி அரசின் தலமைச் செயலர் சத்தியவதி அவர்கள் ‘பெண்மையைப் போற்றுதும்’ என்ற தலைப்பில் பேசினார்கள். 

“பெண் சிசு கொலையைத் தடுக்க வேண்டும், வறுமை காரணமாய் சிசுக்கொலையை செய்கிறவர்களை விட செல்வந்தர்கள் தான் இந்த செயலை அதிகமாய் செய்கிறார்கள். கீழ் மட்டத்து மக்களை விட உயர் மட்டத்து மக்கள், படித்த பணக்காரர்கள் தான் பெண்சிசுக் கொலையைச் செய்கிறார்கள். இதற்கு உதராணம் பஞ்சாப் என்றார்கள். அங்கு அதிகமாய் பெண் சிசுக் கொலை நடை பெறுகிறது ” என்றார்கள்..

பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாய் செயல் பட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் கணவர், சுற்றம் சொல்படி நடக்க வேண்டி உள்ளது. அவர்கள் சுத்ந்திரமாய் செயல்பட வேண்டும் “என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

“பெண்கள் ஆண்களுக்கு சமமாய், ஐ.டி துறையில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்யும் போது மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
அதற்கு ஆண்கள் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கவேண்டும் ” என்றார்கள் 

“ஆண்கள் வீட்டு வேலை செய்ய கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இருபாலரும் மனமாற்றம் பெற வேண்டும். பெண்மை வாழ்க! என போற்றுவோம்” என்றார்கள்.

எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை இச்சமயத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன் 


வானொலி நிகழ்ச்சிகள் பற்றி மேலும் பார்ப்போம்:

முன்பு எல்லாம் வியாழக்கிழமைகளில் நாடகம், ஞாயிறுகளில் சினிமா ஒலிச்சித்திரம் என்று வானொலியில் நிகழ்ச்சிகள் தருவார்கள். 

‘மெரினா’வின் நாடகங்கள் நன்றாக இருக்கும், ‘தனி குடித்தனம்’ என்ற நாடகம் நன்றாக இருக்கும்.


படம் -கூகிள்

நல்ல இசை கச்சேரிகள், ‘விரும்பிக் கேட்டவை’ என்ற சினிமா பாடல்கள் தொகுப்பு, ‘ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’ வழங்கும் குழந்தைகள் நிகழ்ச்சி, சேர்ந்திசை, நிலைய வித்வான் களின் வாத்திய இசை, எல்லாமே மறக்க முடியாதவை.



படம் - கூகிள்

வானொலியில் தர இருக்கும் நிகழ்ச்சிகளை ‘வானொலி’ என்ற பத்திரிகை மூலம் முன்னதாக அறிந்துகொள்ளலாம். அதை என் கணவர் வாங்குவார். நல்ல நிகழ்ச்சிகளை அடிக்கோட்டிட்டு வைத்து இருப்பார்கள் மறக்காமல் கேட்க.

இசைச்சாரலில்’ வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு கர்நாடக இசை கேட்கலாம்.



 டிரான்ஸ்சிஸ்ட்டரில் பாட்டு கேட்கும் போது என் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது விட்டது. 1970-ஆம் ஆண்டு. நானும் என் அண்ணனும் ‘விவிதபாரதி’யில் போட்டி போட்டுக் கொண்டு இந்திப் பாடல், ‘தேன் கிண்ணம்’ கேட்டு மகிழ்ந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.கிரிக்கெட் நடக்கும் காலங்களில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வானொலி என்றால் இலங்கை வானொலியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. வர்த்தக ஒலிப்பரப்பை எல்லோரும் விரும்பிக் கேட்பார்கள். தமிழ்நாட்டில் ஒலிக்காத இடம் இருக்காது. 
இலங்கை வானொலி என்றால் திரு. மயில்வாகனன் அவர்களை மறக்கமுடியாது என்று என் கணவர் கூறுவார்கள்.


இலங்கை வானொலியில் தேசிய ஒலிபரப்பில் சிவன் ராத்திரி சமயம், கோயில் நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்வார்கள். கந்த சஷ்டி சமயம் சஷ்டி கவசம், ஒலிபரப்புவார்கள்.

அது ஒரு பொற்காலம் !

முன்பு மழைக்காலத்தில் டிரான்சிஸ்டருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் , வெயில் வரும் போது டிரான்சிஸ்டரை காயவைத்து எடுப்போம். விடாத மழையால் மின்சாரம் தடைபடும் போது வானொலி கேட்க முடியாது. டிரான்சிஸ்டர்மட்டுமே கதி. அதனால் அப்போது வரும் பாட்டரி விளம்பரங்கள் நிறைய வரும் வாரப்பத்திரிக்கையில்.


ரேடியோ விளம்பரங்கள், இப்போது குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போல ரேடியோ கேட்ட காலங்கள்.


 அம்மாவின் கதை சேமிப்பில் இடையில் வரும் விளம்பரங்க்கள்.


சென்னை, மதுரை, கோவை போன்ற நகரில் நிறைய எஃப் எம் ஒலிபரப்புகள் கேட்கிறது. எங்கள் மயிலாடுதுறையில் சில எஃப் எம் கள்தான் கேட்கும். காரைக்கால் பண்பலை நன்கு கேட்கும் அதில் இன்று ஒரு தகவல் அளித்து வந்த திரு.தென்கச்சி சுவாமி நாதன் அவர்களை மறக்க முடியாது.

தினம் ஒரு தலைப்பில் நேயர்களை பேச வைப்பது, விடுகதை நேரம் அது இது என்று 

இப்போதும் நாள்தோறும் காரைக்கால் வானொலி நிலையம் புதுச் செய்திகளை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. 


அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள்.  10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள்.

அதில் பத்தாவது கேள்வி தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? என்று அதற்கு என் பதில் இனிய பாடலகள் கேட்பது தான் .


10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

//தனியாக இருந்தால்  பாடல் கேட்பது பிடிக்கும்,  அதுவும் நல்ல பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும்.  தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள், அதில் பாடல்கள்,  கேட்பேன் தனிமையை இனிமை ஆக்குவது இசைதான். மன அமைதி தருவது இசை. தனிமையை போக்குவது இசைதான். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் பாடல்கள் கேட்டுக் கொண்டு செய்வது எனக்கு பிடித்த ஒன்று.//


வானொலி கேட்பதையும்,. புத்தகம் வாசிப்பதையும், தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தவுடன் மக்கள் மிகவும் குறைத்துக் கொண்டார்கள். இப்போது மறுபடியும், வானொலி கேட்பதும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமும் வந்து கொண்டு இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் விற்கும் புத்தகங்கள் அதற்கு சாட்சி. 

மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டதும் பழைய நினைவுகள் வந்து இளமை திரும்பியதில் மகிழ்ச்சிதானே! 


அம்பாள்டியாளுக்கு நான் கொடுத்த பதில்களை படித்துப்பாருங்கள்.

9 வது கேள்விக்கு நான் கொடுத்த பதில் :-

 9 .உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

பிறருக்கு துக்கம் என்றால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது நம் பண்புதானே!

அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்களை தைரிய படுத்துவேன். அவர்கள் எங்கும் போக வில்லை உங்களுடன் தான் இருக்கிறார்கள் கவலை படாதீர்கள்  என்று. முன்பு நம் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள் எண்ணெய் முந்தியா? திரி முந்தியா என்று  யார் முந்தி செல்வார்கள் யார் பிந்தி செல்வார்கள் என்று தெரியாது. இறைவன் எப்போது நாம் இந்த உலகத்திற்கு வர வேண்டும், எப்போது அவனிடம் வரவேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து விடுகிறார்.  இருக்கும் வரை அவர் நினைவுகளுடன் வாழுங்கள் என்று ஆற்றுப்படுத்துவேன்.


முன்பு அம்பாள்டியாளுக்கு  சொன்ன பதில்தான் அது இப்போது எனக்கு பொருந்துகிறது.

10 வது கேள்விக்கு நான் கொடுத்த பதில் இப்போது பொருந்துகிறது.

 இப்போது தனியாக இருக்கும் போது  நான் செய்வது. மகன் வாங்கி கொடுத்த  ரேடியோவில்  நிறைய எஃப் எம் ஒலிபரப்புகள், மற்றும் கர்நாடக இசை, பக்தி பாடல்கள், இசை அமைத்தவர்கள்  பாட்ல்கள், பின்னணி பாடியவர்கள் , இந்தி பாடல்கள் அனைத்தும் கேட்டு வருகிறேன்.  


வானொலி தின வாழ்த்துகள்.

                               வாழ்க வையகம் !  வாழ்க வையகம்! வாழ்கவளமுடன் ! 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

39 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    நானும் காலண்டரில் இன்று உலக வானொலி தினம் என மாலைக்கு மேல்தான் படித்தேன். உடனே அதை பற்றிய உங்கள் பதிவையும் கண்டேன். என்ன பொருத்தம் என வியந்து கொண்டேன். நாளை பதிவனைத்தையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //நானும் காலண்டரில் இன்று உலக வானொலி தினம் என மாலைக்கு மேல்தான் படித்தேன். உடனே அதை பற்றிய உங்கள் பதிவையும் கண்டேன். என்ன பொருத்தம் என வியந்து கொண்டேன். நாளை பதிவனைத்தையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//


      காலையிலிருந்து எனக்கு இன்று கொஞ்சம் வேலைகள் உடனே பதிவை எடுத்து போட முடியவில்லை, மாலைதான் நேரம் கிடைத்தது.

      பதிவை படித்து விட்டு மெதுவாக நேரம் கிடைக்கும் போது வாங்க.
      சகோதரி அம்பாள் அடியாள் கேட்ட கேள்விகளையும் அதற்கு நான் அளித்த பதில்களையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் அவசியம் படிங்க. இறைவன் நம்மை எப்படி எல்லாம் முன்பே தயார் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட நேரம் இப்போது.

      உங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  2. மின்வெட்டு போல வெள்ளத்தின்போது நான்கைந்து நாட்கள் மின்சாரம் இல்லாதபோதும் கைகொடுத்தவை டிரான்சிஸ்டர் வானொலிதான்.  துரதிருஷ்டவசமாக அது எங்களிடம் இல்லை.  அதிர்ஷ்டவசமாக பழகிய நோக்கியா செல் இருந்தது.  அதுவும் புல் சார்ஜில்!  ரேடியோ கேட்க அது கைகொடுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //மின்வெட்டு போல வெள்ளத்தின்போது நான்கைந்து நாட்கள் மின்சாரம் இல்லாதபோதும் கைகொடுத்தவை டிரான்சிஸ்டர் வானொலிதான்.//

      அந்த மாதிரி சமயங்களில் டிரான்சிஸ்டர் தான் கை கொடுக்கும்.

      //துரதிருஷ்டவசமாக அது எங்களிடம் இல்லை. //
      கெட்டு போய் விட்டதா?

      //அதிர்ஷ்டவசமாக பழகிய நோக்கியா செல் இருந்தது. அதுவும் புல் சார்ஜில்! ரேடியோ கேட்க அது கைகொடுத்தது.//

      பழைய நோக்கியா செல் இருந்தது நல்லதுதான் பாடல்கள், மற்றும் செய்திகளை கேட்க வசதி இல்லையா?


      திருமணம் ஆகி திருவெண்காடு வந்த போது எனக்கு எனக்கு உற்ற துணை பிலிப்ஸ் டிரான்சிஸ்டர் தான். பெரிய குடும்பம் என் வீடு அவர்களை பிரிந்து திருவெண்காடு வந்த போது ஒரு வெறுமையை உண்ர்ந்தேன். அதை போக்கியது டிரான்சிஸ்டர்தான் காலை முதல் இரவு வரை கேட்போம்.

      நீக்கு
  3. இலங்கை வானொலி பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா? எல்லோருக்கும் மயில்வாகனம் சர்வானந்தா பிடிக்கும் என்றால் எனக்கு கே எஸ் ராஜா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இலங்கை வானொலி பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா? எல்லோருக்கும் மயில்வாகனம் சர்வானந்தா பிடிக்கும் என்றால் எனக்கு கே எஸ் ராஜா!//

      கே எஸ் ராஜாவும் பிடிக்கும், பாட்டும் கதையும், பாட்டும் கானமும் எல்லாம் தொகுத்து வழங்குவார். நீங்கள் கேட்டவை நிகழ்ச்சி மறக்க முடியாது.

      நீக்கு
  4. விவிதபாரதியில் நாள் முழுக்க தமிழ், ஹிந்தி பாடல்கள் கேட்டுக்கொண்டே இருப்போம்.  வீட்டில் உள்ள பைண்டிங் புத்தகம் கையில்,  அப்பாவின் ஈஸிசேரில் (அவர் ஆபீஸ்) அமர்ந்து படித்துக் கொண்டே பாட்டு..  பாட்டு..  பாட்டு...! 

    பாடம் படிக்காமல் உருப்படாமல் போனது இப்படிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விவிதபாரதியில் நாள் முழுக்க தமிழ், ஹிந்தி பாடல்கள் கேட்டுக்கொண்டே இருப்போம். வீட்டில் உள்ள பைண்டிங் புத்தகம் கையில், அப்பாவின் ஈஸிசேரில் (அவர் ஆபீஸ்) அமர்ந்து படித்துக் கொண்டே பாட்டு.. பாட்டு.. பாட்டு...! //

      அப்பா வெளியே போய் இருக்கும் போது அப்பாவின் ஈஸிசேரில் அமர்ந்து படித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை.

      //பாடம் படிக்காமல் உருப்படாமல் போனது இப்படிதான்!//

      நல்லபடியாக வேலையில் இருந்து ஓய்வு பெற்றபின் உருப்படாமல் போனேன் என்று சொல்லலாமா?

      நீக்கு
    2. இப்படி என்னை உருவாக்குவதற்கு என் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று எனக்குதான் தெரியும்! அந்நிலை வருவதற்குள்...அப்பப்ப்பா... அதனால்தான் அப்படி சொன்னேன்.

      என் வீட்டாருடன் ஒப்பிடும்போது நான் உருப்பட்டது மிகக்குறைச்சல்!!

      நீக்கு
    3. //இப்படி என்னை உருவாக்குவதற்கு என் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று எனக்குதான் தெரியும்! அந்நிலை வருவதற்குள்...அப்பப்ப்பா... அதனால்தான் அப்படி சொன்னேன்.//

      அப்பாவுக்கு எப்போதும் நன்றியும் , அன்பும் .
      கண்டிப்பும், கவனிப்பும் கொடுப்பது அப்பாவின் குணம்.


      //என் வீட்டாருடன் ஒப்பிடும்போது நான் உருப்பட்டது மிகக்குறைச்சல்!!//

      ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமைகள் இருக்கும். அதை வைத்து உருப்படுவார்கள்.

      நீக்கு
  5. கேரவானில் ரேடியோ இதுவரை முயற்சித்ததில்லை.  பார்க்க வேண்டும்.  ஆனால் இந்த பண்பலை ஒலிபரப்புகளில் முக்கால் நேரம் பேசியே கொன்று விடுவார்கள்!  பொறுமையே போய்விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரவானில் ரேடியோ இதுவரை முயற்சித்ததில்லை.//
      நன்றாக இருக்கும் சென்னையில் இருப்பதால் பண்பலை இலிபரப்புகள் நன்றாக கேட்கும்.

      //பார்க்க வேண்டும். ஆனால் இந்த பண்பலை ஒலிபரப்புகளில் முக்கால் நேரம் பேசியே கொன்று விடுவார்கள்! பொறுமையே போய்விடும்.//

      ஏதாவது கேள்வி கேட்டு மக்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும், பெண்கள், குழந்தைகள் , பெரியவர்கள் என்று இன்னும் பாடல் கேட்பது கேள்விகளுக்கு பதில் சொல்வது என்று இருப்பதற்கு அவர்கள் தான் காரணம். நான் 106. 4 ஹலோ எஃப் கேட்கிறேன். காலை ஜெயராம் என்பவர் அழகாய் பேசுகிறார் ஆத்திசூடி, ஆன்மீக செய்திகள்.

      புதிய , பழைய பாடல்கள், இரவு கிராம போன் நிகழ்ச்சி பாடல்கள் நன்றாக இருக்கும். தூக்கம் வராத இரவுகளில் பாடல்கள் கேட்டுக் கொண்டே தூங்கி விடுவேன்.

      நீக்கு
    2. உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. வானொலி தினம் - இனிய நினைவுகள். எங்கள் வீட்டில் இருந்த வால்வு ரேடியோவில் கேட்ட பாடல்கள், நாடகங்கள், சினிமா ஒலிச்சித்திரம் என அனைத்தும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      //வானொலி தினம் - இனிய நினைவுகள். எங்கள் வீட்டில் இருந்த வால்வு ரேடியோவில் கேட்ட பாடல்கள், நாடகங்கள், சினிமா ஒலிச்சித்திரம் என அனைத்தும் நினைவுக்கு வருகிறது.//

      ஆமாம், நாடகங்கள், ஒலிச்சித்திரம் கேட்டதை மறக்க முடியாது.
      உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  7. நினைவுகளை மலரச் செய்யும் பதிவு. 2012_ஆண்டு பதிவிலும் கருத்தினைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //நினைவுகளை மலரச் செய்யும் பதிவு. 2012_ஆண்டு பதிவிலும் கருத்தினைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.//

      ஆமாம், உங்கள் சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. முன்பெல்லாம் ,வானொலியில் காலை ‘வந்தே மாதரம்’, ‘மங்கள இசை’, ‘பக்தி பாடல்’, ‘//

    ஆமாம் அக்கா நல்ல நினைவு இருக்கு. இது கேட்கும் போதே மனம் ஒரு குதூகலம் அடையும். என் தாத்தா ட்ரான்ஸிஸ்டர் தான் கேட்பார்.

    நேயர் விருப்பம்’, சினிமா பாடல், நாடகம், ‘இசை விருந்து’ என்று, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒலித்துக் கொண்டே
    இருக்கும். //

    ஆமாம். எனக்கு என் ஆறாவது வகுப்பிற்குப் பிறகு அம்மாவின் அம்மா வீடுக்கு வந்துவிட்டதால் இதெல்லாம் போயே போச் அங்க.

    பல நினைவுகள் வருது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //ஆமாம் அக்கா நல்ல நினைவு இருக்கு. இது கேட்கும் போதே மனம் ஒரு குதூகலம் அடையும். என் தாத்தா ட்ரான்ஸிஸ்டர் தான் கேட்பார்

      எனக்கு என் ஆறாவது வகுப்பிற்குப் பிறகு அம்மாவின் அம்மா வீடுக்கு வந்துவிட்டதால் இதெல்லாம் போயே போச் அங்க.

      பல நினைவுகள் வருது//
      உங்கள் தாத்தாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      அம்மா வீட்டுக்கு வந்த பின் கேட்கா முடியாமல் போனது வருத்தம்.


      நீக்கு
  9. எல்லா மதத்திற்கும் உள்ள பாடலை வானொலிதான் இன்றும் இணைத்துத் தந்துகொண்டு இருக்கிறது.//

    இப்ப இருக்கா அக்கா? இப்போதெல்லாம் எஃப் எம் இல்லையா?

    “பெண் சிசு கொலையைத் தடுக்க வேண்டும், வறுமை காரணமாய் சிசுக்கொலையை செய்கிறவர்களை விட செல்வந்தர்கள் தான் இந்த செயலை அதிகமாய் செய்கிறார்கள். கீழ் மட்டத்து மக்களை விட உயர் மட்டத்து மக்கள், படித்த பணக்காரர்கள் தான் பெண்சிசுக் கொலையைச் செய்கிறார்கள். இதற்கு உதராணம் பஞ்சாப் என்றார்கள். அங்கு அதிகமாய் பெண் சிசுக் கொலை நடை பெறுகிறது ” //

    உண்மை அக்கா. இப்ப இது வேறு வகையில் போகிறது பஞ்சாப் ஹரியானா பெண் குழந்தைகளுக்கு ஏக டிமான்ட்!!! இதைத்தான் நான் ஒரு கதையில் எழுதியிருந்தேன். வட கர்நாடகா பெண் குழந்தைகளை கிழவன்மார்கள் விலை கொடுத்து வாங்கியது கொரோனா சமயத்தில் நடந்தது.

    மனம் வேதனை அடைந்த தருணம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப இருக்கா அக்கா? இப்போதெல்லாம் எஃப் எம் இல்லையா?//

      இப்போதும் இருக்கிறது. அதற்கு எஃப் எம் தேர்வு செய்ய வேண்டும்.
      கோடை எஃப் எம்மில் கேட்கலாம்.

      //உண்மை அக்கா. இப்ப இது வேறு வகையில் போகிறது பஞ்சாப் ஹரியானா பெண் குழந்தைகளுக்கு ஏக டிமான்ட்!!! இதைத்தான் நான் ஒரு கதையில் எழுதியிருந்தேன். வட கர்நாடகா பெண் குழந்தைகளை கிழவன்மார்கள் விலை கொடுத்து வாங்கியது கொரோனா சமயத்தில் நடந்தது.

      மனம் வேதனை அடைந்த தருணம்//

      கேட்கவே கஷ்டமாக இருக்கிறது கீதா.

      நீக்கு
  10. பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாய் செயல் பட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் கணவர், சுற்றம் சொல்படி நடக்க வேண்டி உள்ளது. அவர்கள் சுத்ந்திரமாய் செயல்பட வேண்டும் “என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

    “பெண்கள் ஆண்களுக்கு சமமாய், ஐ.டி துறையில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்யும் போது மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
    அதற்கு ஆண்கள் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கவேண்டும் //

    நல்ல கருத்துகள்.

    “ஆண்கள் வீட்டு வேலை செய்ய கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இருபாலரும் மனமாற்றம் பெற வேண்டும். பெண்மை வாழ்க! என போற்றுவோம்” என்றார்கள்.//

    சூப்பர்.

    இப்ப மகளிர் தினம் வருமே...

    பாலமுரளி கிருஷ்ணா பாடிய பல பாடல்கள் குறிப்பாக பலுகே பங்கார, ஏகிருகநனு இதெல்லாம் அப்படிக் கேட்டவை.

    அது போல சேஷகோபாலன் பாடிய காக்கைச் சிறகினிலேவும் ராம மந்த்ரவ அதும் இரு நிகழ்ச்சிகளின் இடையில் இடைவெளியை நிரப்ப போடுவாங்க.

    இலங்கை வானொலியை மறக்க முடியுமா!! எனக்கு ரொம்பப் பிடித்த வானொலி

    மயில்வாகனன், ராஜேஸ்வரி சண்முகம், அப்துல்ஹமீது எல்லாரையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ராஜேஸ்வரி சண்முகம் அவங்க நாங்க இருந்த வீட்டுக்கு எதிரில் இருந்தான என்னைத் தன் மடியில் வைத்து ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நான் பாடி, கதை சொல்லி என்று....பல நினைவுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளிர் தினத்தில் கேட்ட கருத்துகளை பகிர்ந்தேன் அது உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      //மயில்வாகனன், ராஜேஸ்வரி சண்முகம், அப்துல்ஹமீது எல்லாரையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ராஜேஸ்வரி சண்முகம் அவங்க நாங்க இருந்த வீட்டுக்கு எதிரில் இருந்தான என்னைத் தன் மடியில் வைத்து ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நான் பாடி, கதை சொல்லி என்று....பல நினைவுகள்//

      நீங்கள் இலங்கையில் வசித்து இருக்கிறீர்கள் அல்லவா ? முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.ரேடியோ நிக்ழச்சியில் பாடி கதை சொன்ன நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி கீதா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //இனிமையான தொகுப்பு... அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. அக்கா என் கருத்துகள் வந்தனவா? நெட் படுத்துகிறது.

    ஒருகருத்து வெளியிட்டுவிட்டுச் சென்றேன். பார்த்தா இப்ப அழுமூஞ்சி பொம்மைய காட்டி எரர்னு சொல்லுது

    இலங்கை வானொலி பற்றிச் சொல்லியிருந்தேன் என்று நினைக்கிறேன். மயில்வாகனன, ராஜேஸ்வரி சண்முகம், அப்துல்ஹமீது, திரு ராஜா எல்லோரையும் அப்ப நேரில் பார்த்து அதுவும் ராஜேஸ்வரி அவங்க எங்க வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தாங்க, என்னை அவங்க மடியில் வைச்சுக்குவாங்க....அப்புறம் வானொலி நிலையத்துக்குக் கூட்டிப் போய் கதை, பாட்டு எல்லாம் பாட வைச்சாங்க!

    அந்த நினைவுகள் எல்லாம் வந்தன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா என் கருத்துகள் வந்தனவா? நெட் படுத்துகிறது.//

      வந்து இருக்கிறது கீதா , நான் தான் மெதுவாக பார்க்கிறேன்.
      வந்து விட்டது இலங்கை கருத்து.

      //ஒருகருத்து வெளியிட்டுவிட்டுச் சென்றேன். பார்த்தா இப்ப அழுமூஞ்சி பொம்மைய காட்டி எரர்னு சொல்லுது//

      எல்லாம் வந்து விட்டது.

      நீக்கு
  13. வானொலி அழகா இருக்கு கோமதிக்கா...இப்பவும் கேட்கறீங்க இல்லையா!

    எனக்கும் பிடிக்கும் ஆனால் மொபைலில் வரும்னு நினைக்கிறேன் எஃப் எம். பார்க்க வேண்டும். கிடைத்தால் கேட்டுப் பார்க்க வேண்டும். நேரம் எப்பன்னுதான் யோசிக்கிறேன்!!!!

    மீள் பதிவு என்று சொன்னாலும் நான் இப்போதுதான் வாசிக்கிறேன் கோமதிக்கா. நல்ல நினைவுகள். உங்கள் அம்மா சேகரித்து வைத்திருந்த தொகுப்பில் இடையில் விளம்பரம் எல்லாம் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வானொலி அழகா இருக்கு கோமதிக்கா...இப்பவும் கேட்கறீங்க இல்லையா!//

      இப்போதும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன் கீதா.


      //எனக்கும் பிடிக்கும் ஆனால் மொபைலில் வரும்னு நினைக்கிறேன் எஃப் எம். பார்க்க வேண்டும். கிடைத்தால் கேட்டுப் பார்க்க வேண்டும். நேரம் எப்பன்னுதான் யோசிக்கிறேன்!!!!//

      கணினியில் கேட்கலாம். மொபைலில் கேட்கலாம். தமிழ் வானொலி என்று என் மருமகள் என் மொபைலில் தரம் இறக்கி தந்தாள் அதில் தான் எல்லா பண்பலைகளும் கேட்கிறேன்.பழைய பாடல் , புதுப்பாடல், மிகவும் சிரந்த பாடல், மற்றும் பிடித்தமான பாடகர், பாடகி, இசைஅமைப்பாளர்கள் பாடல்களை கேட்டு மகிழலாம். பக்தி பாடல், கர்நாடக இசை கேட்கலாம்.

      //மீள் பதிவு என்று சொன்னாலும் நான் இப்போதுதான் வாசிக்கிறேன் கோமதிக்கா. நல்ல நினைவுகள். உங்கள் அம்மா சேகரித்து வைத்திருந்த தொகுப்பில் இடையில் விளம்பரம் எல்லாம் ரசித்தேன்//

      அதனால் தான் மீண்டும் பகிர்ந்தேன் கீதா. அம்மாவின் பகிர்வை ரசித்தமைக்கு நன்றி கீதா.
      என் கேள்விக்கு என்ன பதில் படித்தீர்களா?

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  14. ​கொஞ்சம் நீண்ட பதிவு தான். நல்ல நினைவாற்றல் உங்களுக்கு. வானொலி நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் எவ்வளவு துல்லியமாக விவரிக்கிறீர்கள் என்பதில் வியக்கிறேன். நன்று.
    ரேடியோ விளம்பரங்கள் எப்படி பாதுகாட்டு இருந்தன. சேர்த்து வைத்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //கொஞ்சம் நீண்ட பதிவு தான். நல்ல நினைவாற்றல் உங்களுக்கு. வானொலி நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் எவ்வளவு துல்லியமாக விவரிக்கிறீர்கள் என்பதில் வியக்கிறேன். நன்று.
      ரேடியோ விளம்பரங்கள் எப்படி பாதுகாட்டு இருந்தன. சேர்த்து வைத்ததா?//

      என் அம்மாவின் 61, 62 ல் குமுதம் பத்திரிக்கையில் வந்த அறிஞர்களின் பொன்மொழிகள் சேகரிப்பு தொகுப்பில் இடை இடையே வரும் ரேடியோ விளம்பரங்கள்.

      பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
      முன்பு அம்மாவின் பொக்கிஷ பதிவில் அந்த புத்தகம் இடம்பெற்று இருக்கும்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. வானொலி தினமும் அதன் நினைவலைகளும் நன்றாக உள்ளது.

    இதில் இலங்கை வானொலியையும் அன்றைய நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் நினைவு கொண்டது அருமை.

    நாங்கள் வட பகுதியில் வாழ்ந்தபோது மின்சாரம் இல்லாத சண்டைக் காலத்தில் வானொலி கேட்பது என்பது கிடைத்தற்கரிய பொக்கிசமாக எமக்கு அப்போது இருந்தது.
    அதன் பின் வானொலி கேட்பது குறைந்துவிட்டது.

    இப்பொழுது வானொலியும் இல்லை என்றாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //வானொலி தினமும் அதன் நினைவலைகளும் நன்றாக உள்ளது.

      இதில் இலங்கை வானொலியையும் அன்றைய நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் நினைவு கொண்டது அருமை.//


      வானொலி என்றால் இலங்கை வானெலியை நினைக்காமல், பேசாமல் இருக்க முடியாது. பாட்டுக்கு பாட்டு, பாட்டும் கதையும் எனக்கு பிடித்தவை.

      சிவன் ராத்திரி நேரடி ஒலிப்பரப்பு செய்ததை நினைக்காமல் இருக்க முடியாது.

      //நாங்கள் வட பகுதியில் வாழ்ந்தபோது மின்சாரம் இல்லாத சண்டைக் காலத்தில் வானொலி கேட்பது என்பது கிடைத்தற்கரிய பொக்கிசமாக எமக்கு அப்போது இருந்தது.
      அதன் பின் வானொலி கேட்பது குறைந்துவிட்டது.//


      ஆமாம் , அந்த காலங்களில் வானொலி கேட்பது பொக்கிஷம் தான்.
      அது போல தொலைக்காட்சி வாங்கிய போது இலங்கை ரூபவாஹினி இருந்தது அது ஆர்ம்பிக்கும் போது அதன் இசை பிடிக்கும்.
      அப்புறம் அதுவும் இல்லாமல் போய் விட்டது.

      பொங்கும் பூ புனல், இரவின் மடியில், இசையும் கதையும் எல்லாம் மீண்டும் ஒலிபரப்ப படுகிறது என்று சொன்னார்களே !

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.




      நீக்கு
  16. வானொலி எனக்கு நிறைய நினைவுகளைக் கொண்டுவரலே. அப்பாவின் ரேடியோவில் எப்போதாவது கேட்போம். நான் ஆர்வமா கிரிக்கெட் கமென்டரி காவஸ்கர் வெஸ்ட் இன்டீஸ் தொடர் கேட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //வானொலி எனக்கு நிறைய நினைவுகளைக் கொண்டுவரலே. அப்பாவின் ரேடியோவில் எப்போதாவது கேட்போம்.

      நான் ஆர்வமா கிரிக்கெட் கமென்டரி காவஸ்கர் வெஸ்ட் இன்டீஸ் தொடர் கேட்டிருக்கேன்.//

      நீங்கள் ஆர்வமா கிரிக்கெட் கமென்டரி கேட்டத்தை பகிர்ந்து விட்டீர்கள்.
      நினைவை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வானொலி அவசியத்தைப் பற்றிய பதிவு முமுவதும் வாசித்தேன். நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். அந்த காலத்தில், எங்கள் அண்ணா படித்து முடித்ததும் வேலைக்கு சென்ற பின்தான் அவர் ஆர்வமாக வானொலி பெட்டி வாங்கினார். இத்தனைக்கும் அப்போது அவரின் மாதாந்திர வருமானம் கம்மிதான். ஆனாலும், அவர் ஆசைப்பட்டு சேர்த்து வைத்து அதைத்தான் முதலில் வாங்கினார். வீட்டில் எல்லோரும், மற்றும் அக்கம்பக்கம் உறவுகள் அனைவரும் விடுமுறை நாட்களில் அதன் முன் அமர்ந்து பாட்டுக்கள் கேட்டதும், ஞாயிறு மதியம் ஒலிச்சித்திரம் கேட்டதும் நினைவுக்குள் மலர்கிறது.

    நீங்கள் ஒன்று விடாமல் மிக அழகாக நினைவு வைத்து கோர்வையாக பகிர்ந்துள்ளீர்கள். உங்கள் கணவரும் வானொலி புரோகிராம்களை உங்களுடன் சேர்ந்து கேட்டதும் சிறப்பு. மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இலங்கை வானொலியை மறக்க முடியுமா? எத்தனை பாடல்கள், அதை எப்படியெல்லாம் தொகுத்து தந்தார்கள். அதன் சிறப்பை எப்போதும் நினைவில் கொள்வோம். அதை தொகுத்து நல்ல தமிழில் நமக்களித்தவர்களை மறக்க முடியுமா? அதெல்லாம் ஒரு பொற்காலம்.. தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் "இன்று ஒரு தகவலை" இப்போதும் நான் சொல்லாத நாளில்லை. எத்தனை குட்டி கதைகளை நல்ல கருத்துள்ள கதைகளை நமக்குத் தந்துள்ளார். அந்த நேரம் வந்ததும் எந்த வேலையாக இருந்தாலும், விட்டு விட்டு அவர் பேச்சை கேட்க அமர்ந்து விடுவேன். .

    வலைத்தளத்தில், சுற்றி வரும் பதிவாக வந்த என் கேள்விக்கென்ன பதில் சகோதரி அம்பாள்யடியாள் அவர்களின் மூலமாக உங்களுக்கு வந்த தொடர் பதிவை படித்தேன். ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் நன்றாக பதில்கள் தந்துள்ளீர்கள். கருத்துரைகளும் , மற்றைய பதிவர்களின் பாராட்டுகளும் பதிலுக்கு நீங்கள் தந்த கருத்துக்களும் படிக்க நன்றாக இருந்தது.

    அதைப்படித்து வருகையில், இந்தச் சுற்றுப்பதிவு சகோதரர் கில்லர்ஜி மூலமாக எனக்கும் வந்து, நானும் ஏதோ பதில்களை தந்தது நினைவுக்கு வந்தது. ஆனால், நான் உங்கள் அளவுக்கு நல்ல பதில்களை தரவில்லை எனபதென்னவோ உண்மைதான். மேலும், அப்போதுதான் நான் பல பதிவுகளை எழுதி அறிமுகமாகி கொண்டிருந்தேன். அதனால் அது நிறைய கருத்துரைகளை பெறவில்லை. ஆனால் அதைப்பார்த்ததும் அதையும் தற்போது ஒரு மீள்பதிவாக வெளியிடலாம் என்ற ஆசை வருவதையும் தடுக்க இயலவில்லை. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நான் கடந்த மூன்று தினங்களாக பதிவுலகம் வர இயலவில்லை அதனால் தங்கள் பதிவுக்கு தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும் சகோதரி. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. வானொலி அவசியத்தைப் பற்றிய பதிவு முமுவதும் வாசித்தேன். நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். அந்த காலத்தில், எங்கள் அண்ணா படித்து முடித்ததும் வேலைக்கு சென்ற பின்தான் அவர் ஆர்வமாக வானொலி பெட்டி வாங்கினார். இத்தனைக்கும் அப்போது அவரின் மாதாந்திர வருமானம் கம்மிதான். ஆனாலும், அவர் ஆசைப்பட்டு சேர்த்து வைத்து அதைத்தான் முதலில் வாங்கினார்.//

      சேர்த்து வைத்து ஒரு பொருள்வாங்கினால் அது மிகவும் சிறப்பு. தன் உழைப்பில் வாங்கிய பொருள் என்ற பெருமிதம், அதை பத்திரமாக பாதுகாக்கும் மனபான்மை எல்லாம் வரும்.

      //வீட்டில் எல்லோரும், மற்றும் அக்கம்பக்கம் உறவுகள் அனைவரும் விடுமுறை நாட்களில் அதன் முன் அமர்ந்து பாட்டுக்கள் கேட்டதும், ஞாயிறு மதியம் ஒலிச்சித்திரம் கேட்டதும் நினைவுக்குள் மலர்கிறது.//

      ஆமாம். அவை என்றும் மறக்காது.

      //நீங்கள் ஒன்று விடாமல் மிக அழகாக நினைவு வைத்து கோர்வையாக பகிர்ந்துள்ளீர்கள். உங்கள் கணவரும் வானொலி புரோகிராம்களை உங்களுடன் சேர்ந்து கேட்டதும் சிறப்பு. மனமார்ந்த பாராட்டுக்கள்.//

      அப்போது வானெலி மட்டும் தான்.இப்போது தொலைக்காட்சி , யூடியூப் , அது இது என்று பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நிறைய இருக்கிறது.தியேட்டர் போகாமல் சினிமாக்கள் பார்க்கிறோம்.
      உங்கள் பாராட்டுக்கு நன்றி..

      //வலைத்தளத்தில், சுற்றி வரும் பதிவாக வந்த என் கேள்விக்கென்ன பதில் சகோதரி அம்பாள்யடியாள் அவர்களின் மூலமாக உங்களுக்கு வந்த தொடர் பதிவை படித்தேன். ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் நன்றாக பதில்கள் தந்துள்ளீர்கள். கருத்துரைகளும் , மற்றைய பதிவர்களின் பாராட்டுகளும் பதிலுக்கு நீங்கள் தந்த கருத்துக்களும் படிக்க நன்றாக இருந்தது.//

      நன்றி.

      //சகோதரர் கில்லர்ஜி மூலமாக எனக்கும் வந்து, நானும் ஏதோ பதில்களை தந்தது நினைவுக்கு வந்தது. ஆனால், நான் உங்கள் அளவுக்கு நல்ல பதில்களை தரவில்லை எனபதென்னவோ உண்மைதான். மேலும், அப்போதுதான் நான் பல பதிவுகளை எழுதி அறிமுகமாகி கொண்டிருந்தேன். அதனால் அது நிறைய கருத்துரைகளை பெறவில்லை. ஆனால் அதைப்பார்த்ததும் அதையும் தற்போது ஒரு மீள்பதிவாக வெளியிடலாம் என்ற ஆசை வருவதையும் தடுக்க இயலவில்லை. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      பழைய பதிவின் சுட்டி கேட்கலாம் என்று நினைத்த போது நீங்களே சொல்லி விட்டீர்கள் பகிர ஆசை என்று பதிவு போடுங்கள், படிக்க ஆவலாக இருக்கிறேன்.


      //நான் கடந்த மூன்று தினங்களாக பதிவுலகம் வர இயலவில்லை அதனால் தங்கள் பதிவுக்கு தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும் சகோதரி. நன்றி.//

      மன்னிப்பு கேட்க வேண்டாம் நேரம் இருக்கும் போது படித்து கருத்துகள் வழங்கலாம்.
      எனக்கும் தொடர்ந்து ஏதோ வேலகைள் வர தாமதம் ஆகிறது.

      உங்கள் மீள் வரவுக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி.






      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      உங்கள் ஊக்கம் மிகுந்த பதிலுக்கு நன்றி சகோதரி. அந்தப் பதிவை நேற்றே கொஞ்சம் தயார் செய்து வைத்திருந்தேன். இப்போது உங்கள் ஊக்கம் தந்த பதிலைப் பார்த்ததும் அதை பூர்த்தி செய்து என் தளத்தில் வெளியிட்டு விட்டேன். தங்களுக்கு முடியும் போது வந்து படித்து கருத்து தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன் சகோதரி. மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      கண்டிப்பாய் வருகிறேன்.
      நன்றி.

      நீக்கு