வியாழன், 26 ஆகஸ்ட், 2021

மனக்கவலை நீக்கும் மாமதியே போற்றி!

காலை பொழுதில் பூ பறிக்க தோட்டம் சென்றேன். 

அப்போது காலை( 6.30) முழுநிலா மிக அழகாய் தெரிந்தது.


 அதிகாலை நிலா மதுரை வீட்டிலும் எடுத்து இருக்கிறேன், ஆனால் காலை நேரம்  முழு நிலா எடுக்கவில்லை இதுவரை. இந்த ஊரில் தான் எடுத்தேன்.  சூரிய உதயம் போல் சந்திரோதயம் பார்த்தேன். பெளர்ணமி அன்று எடுத்த நிலா, மாலை நேரம் எடுத்த நிலா என்று நிலா  பகிர்வு இந்த பதிவில்.

     மாலையில் எடுத்த நிலா-  நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

சந்திரோதயம்

காரில் போய் கொண்டு இருக்கும் போது  சந்திரன் உதயமாகி கொண்டு  இருப்பதைப் பார்த்து நிறுத்தி எடுத்த படம். அன்று காமிரா எடுத்து செல்லவில்லை.  அதனால் அலைபேசியில் எடுத்த படம்.     இந்த ஊரில் திடீர் என்று காரை எங்கும் நிறுத்த முடியாது . நாங்கள் பார்த்த இடம் நல்லவேளை பாதையை விட்டு விலகி நிறுத்தி  எடுக்க வசதியான இடமாக இருந்தது. முதலில் நான் இறங்கவில்லை "நீங்களே எடுத்து வந்து விடுங்கள்" என்றேன். சீட் பெல்டை கழற்றி பின் மாட்ட வேண்டும் அதற்கு அலுப்பு பட்டுக் கொண்டு அப்படி சொன்னேன். பின்பு மனது கேட்காமல் இறங்கி அவசரமாக எடுத்த படங்கள் கீழே வரும் மூன்று படங்கள்.

அலைபேசியை அவசரமாக ஜூம் செய்து விட்டேன் அதனால் அவ்வளவு நன்றாக வரவில்லை.
நான் எடுத்த படம் நன்றாக வரவில்லை என்று மகன் மருமகளிடம்   சொன்னேன்
மருமகள் "நான் எடுத்ததை உங்களுக்கு அனுப்புகிறேன் அத்தை" என்று  அனுப்பினாள்.  அவள் எடுத்த இரு படங்களை. 

இரவு வீட்டுக்கு வந்த போது தோட்டத்தில்  இருந்துப் பார்த்தால் தெரியும் நிலாவை  காமிராவில் எடுத்தேன்

மஞ்சள் நிலாவைப் பார்த்து கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் எடுத்து இருக்கிறேன்.
 

//காமிராவில் எடுத்த படங்களை சேமித்து வைத்து இருந்த  பாஸ்போர்ட் என் கவனக்குறைவால் கீழே விழுந்து விட்டது. அதை  சரி செய்ய  மகன் கடையில் கொடுத்து இருக்கிறான்.  நினைவுகளை பத்திரமாக போற்ற எடுத்து வைத்து இருந்தது வரவில்லை என்றதும் மனம் மிகவும் வருத்தம் அடைந்தது//


என்று ஒரு பதிவில்  சொல்லி இருந்தேன் அல்லவா!   நினைவு இருக்கும் உங்களுக்கு.

இப்போது சரி செய்ய முடியாது என்றும் , முயற்சி செய்கிறோம் , நிறைய செலவு ஆகும் என்று சொன்னார்களாம்.  (ஒரு இலட்சம் வரை ) நான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

 கணினி பழுது அடைந்த போது படங்களை பாஸ்போர்டில் சேமித்தேன். நல்லவேளை  மகனும் தன் கணினியில் சேமித்து வைத்து இருந்தான். அதனால் மீண்டும் ஒரு பாஸ்போர்டில் எடுத்து கொடுத்து விட்டான். பழைய படங்கள் கிடைத்து விட்டது.

இந்த ஊரில் அலைபேசியில் எடுத்தவை இருக்கிறது. காமிராவில் எடுத்தவைதான் போய் விட்டது.


இனி முடிந்த போது நான் எடுக்கும் படங்களை  இங்கு சேமிக்க எண்ணம். இறைவன் திருஉள்ளம்படி நடக்கும்.

சந்திரன் தரிசனம்  மனகவலையை நீக்கி ஆனந்தம் தருவது . 

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

--------------------------------------------------------------------------------------------------


30 கருத்துகள்:

  1. சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
    சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா!!!
    உங்கள் நிலாப் படங்கள் உண்மையிலேயே
    மன சங்கடங்களைப் போக்கும் விதத்தில்
    அற்புதமாக இருக்கிறது.

    நல்ல வேளையாகப் படங்கள் மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி
    அன்பு கோமதி.. உங்கள் பெயரிலிருக்கும் மதி
    உங்களுக்குத் தெரிவதில் ஆச்சரியம் இல்லை.

    இந்த ஊர்தான் மாலை மதியை மறக்கிறது.
    காலை மதியைக் கொண்டாடுகிறது:)
    காலை நாலு மணிக்குக் கண்முன் வந்து நிற்கிறது.
    அப்பொழுது வெளியே போய் எடுக்க முடியாதே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
      சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா!!!//

      இந்த பாட்டு எனக்கும் பிடித்த பாட்டு. முன்பு பகிர்ந்து இருக்கிறேன் நிலா பதிவில்.


      //உங்கள் நிலாப் படங்கள் உண்மையிலேயே
      மன சங்கடங்களைப் போக்கும் விதத்தில்
      அற்புதமாக இருக்கிறது.//

      நன்றி அக்கா.


      நல்ல வேளையாகப் படங்கள் மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி//

      பழைய படங்கள் மட்டும் கிடைத்து இருக்கிரது. இங்கு இந்த ஆறு மாதங்களில் எடுத்த படங்கள் கிடைக்கவில்லை அக்கா. பதிவில், முகநூலில் போட்டது மட்டுமே உள்ளது.

      //அன்பு கோமதி.. உங்கள் பெயரிலிருக்கும் மதி
      உங்களுக்குத் தெரிவதில் ஆச்சரியம் இல்லை.//

      அக்கா ! மதுரையில் இருக்கும் வீட்டிலிருந்து அதிகாலை நிலா 4.30 , 5 மனிக்கு பார்க்கலாம். முழுமதி தெரியாது, வீட்டின் அமைப்பு அப்படி. அய்யனார் கோயிலுக்கு பெளர்ணமி பூஜைக்கு போவோம் அந்த கோயில் வாசலில் இருந்து நிலா படம் எடுப்பேன்.

      //காலை நாலு மணிக்குக் கண்முன் வந்து நிற்கிறது.
      அப்பொழுது வெளியே போய் எடுக்க முடியாதே!!//

      ஆமாம், அந்த நேரம் வெளியில் குளிராக இருக்கும், தனியாக வெளியே போக முடியாது இல்லையா?





      நீக்கு
    2. // சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
      சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா!!! //

      சூப்பர் பாட்டு அம்மா...   உற்சாகமான சுசீலாம்மாவின் குரல் மனதில் கேட்கிறது.

      நீக்கு
    3. // உற்சாகமான சுசீலாம்மாவின் குரல் மனதில் கேட்கிறது.//

      நான் இந்த பாட்டு அடிக்கடி கேட்பேன்.

      நீக்கு
  2. இதே போலத்தான், உங்களைப் போலவே எங்கிருந்தாலும் நிலா முகம் பார்க்க வேண்டும் எனக்கு.
    நல்லதொரு தோழி அவள்.
    மஞ்சள் நிலாவும், மலைகளும் அற்புதக் காட்சி.
    அலைபேசியில் அலைந்தாலும் வீடு வந்த பிறகு
    தரிசனம் கொடுத்துவிட்டாள் மதி அன்னை.
    மனம் நிறை வாழ்த்துகள் மா.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதே போலத்தான், உங்களைப் போலவே எங்கிருந்தாலும் நிலா முகம் பார்க்க வேண்டும் எனக்கு.//

      ஆமாம் அக்கா, முன்பு நீங்களும் நிலா படங்கள் போடுவீர்கள்.

      //நல்லதொரு தோழி அவள்.
      மஞ்சள் நிலாவும், மலைகளும் அற்புதக் காட்சி.//

      நாங்கள் பார்த்த காட்சி மலையின் பக்கம் எழுந்து கொண்டு இருந்தது சுற்றி வந்து எடுக்க போகும் போது கொஞ்சம் மேலே எழுப்பி விட்டது.
      //வீடு வந்த பிறகு
      தரிசனம் கொடுத்துவிட்டாள் மதி அன்னை.//

      ஆமாம் அக்கா.

      //மனம் நிறை வாழ்த்துகள் மா.
      வாழ்க வளமுடன்.//

      உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.





      நீக்கு
  3. சந்திரனின் படங்கள் அழகு.  நான் அலைபேசியில் எடுத்தா நன்றாகவே வருவதில்லை.  கண்கள் காணும் அழகை அதே அழகில் கேமிராவில் சிறை செய்ய முடிவதில்லை.  உங்கள் படங்கள் அருமை.  உங்கள் மருமகள் எடுத்திருக்கும் படங்கள் தெளிவாக, அழகாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      அலைபேசியில் தான் நிறைய படங்கள் எடுத்து இருக்கிறேன். அன்று என்னவோ அவசரத்தில் எடுத்தது வரவில்லை.

      //உங்கள் படங்கள் அருமை. உங்கள் மருமகள் எடுத்திருக்கும் படங்கள் தெளிவாக, அழகாக வந்திருக்கின்றன.//

      மிகவும் நன்றி ஸ்ரீராம்.


      மகன், மருமகள் எல்லாம் நிறைய படங்கள் அலைபேசியில்தான் எடுக்கிறார்கள்.

      நீக்கு
  4. மஞ்சள் நிலா அழகா?  வெள்ளைநிலா அழகா?  என் வோட்டு வெள்ளை நிலாவுக்குதான்...  மஞ்சள் நிலா குளிக்காத அழுக்கு நிலா போலவும், குளித்து வந்ததும் இருக்கும் பளிச்சென்று இருக்கும் நிலா வெள்ளை நிலா போலவும் தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மஞ்சள் நிலா அழகா? வெள்ளைநிலா அழகா? என் வோட்டு வெள்ளை நிலாவுக்குதான்...//

      நீலவானில் வெள்ளை நிலா அழகு. கறுப்பு வானத்தில் மஞ்சள் நிலாவும் அழகு, வெள்ளை நிலாவும் அழகு.

      //மஞ்சள் நிலா குளிக்காத அழுக்கு நிலா போலவும், குளித்து வந்ததும் இருக்கும் பளிச்சென்று இருக்கும் நிலா வெள்ளை நிலா போலவும் தோன்றும்!//

      நல்ல கற்பனை.

      நீக்கு
  5. ஒரு லட்சம் ஆகுமா?  அம்மாடி..   ஆனால் இங்கும் அப்படிதான் கேட்டார்கள்.  வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.  ரீட் ஆகாத ஹார்ட் டிஸ்கிலிருந்து எடுக்க அவ்வளவு பணம் கேட்டார்கள்.  உங்கள் படங்கள் திரும்பக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ரீட் ஆகாத ஹார்ட் டிஸ்கிலிருந்து எடுக்க அவ்வளவு பணம் கேட்டார்கள். உங்கள் படங்கள் திரும்பக் கிடைத்ததில் மகிழ்ச்சி.//

      எல்லாம் கிடைக்கவில்லை ஸ்ரீராம்.


      சாரின் நிறைய கட்டுரைகள், இருந்தது. அதனால் அப்படி கேட்டு இருக்கிறார்கள்.
      நான் என் பதிவுகளை சேமித்து வைத்து இருந்தேன். மகன் எடுத்து வைத்து இருந்தது மட்டும் கிடைத்தது.

      மற்றவை கிடைக்கவில்லை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. அழகான காட்சிகள் சகோ பொறுமையாக எடுத்து இருக்கின்றீர்கள்.

    //நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா//
    படங்கள் மிகவும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. அனைத்து படங்களும் அழகு... மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      அனைத்து படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் மிக அழகு! நில‌வொளியில் களித்த இளம் வயது நாட்கள் நினைவுக்கு வருகின்றன. சினேகிதிகளுடன் கதைகள் பேசிய நாட்கள் அவை. மஞ்சள் நிலா எப்போதாவது மழை பொழிந்து தெளிந்த வானத்தில் பார்த்திருக்கிறேன். " மஞ்சள் நிலாவுக்கு ஒரே சுகம்" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் மிக அழகு! நில‌வொளியில் களித்த இளம் வயது நாட்கள் நினைவுக்கு வருகின்றன. //

      நன்றி, இளம் வயது நாட்கள் நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.

      மஞ்சள் நிலா நினைவுகளும், பாடலும் அருமை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. நிலாப் படங்கள் அனைத்தும் அருமை. சந்திரனைப் பார்ப்பதே மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //சந்திரனைப் பார்ப்பதே மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.//

      உண்மை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. நிலாப்படங்கள் அழகு. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் பார்க்க முடியவில்லை. அது என்ன பாஸ்போர்ட். மெமரி கார்டா? புரியவில்லை. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் Jayakumar Chandrasekaran சார், வாழ்க வளமுடன்
      நிலாப்படங்கள் அழகு//
      நன்றி.

      நிலாவில் வடை சுடும் பாட்டியைப் பார்க்க முடியவில்லை//
      பாட்டி வடை கொடுக்கிறார் காக்கா அவர் கையில் கொத்தி சாப்பிடும் காட்சி தெரிகிறதே!

      //அது என்ன பாஸ்போர்ட். மெமரி கார்டா? புரியவில்லை.//

      படங்கள் சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க் .
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. அழகான நிலாப்படங்கள். ஹார்ட் டிஸ்கைத்தான் பாஸ்போர்ட் என்கிறீர்களா? அல்லது மெமரி கார்டா? பென் டிரைவ்? புதுசா இருக்கு பாஸ்போர்ட் என்பது.
    நல்லாப் படங்கள் எடுக்கிறீர்கள். மகன், மருமகள் எடுத்த படங்கள் இன்னும் சிறப்பு. நிலவே நீ சாட்சி என மனதில் தோன்றியது இவற்றைப் பார்க்கையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      https://mathysblog.blogspot.com/2021/08/blog-post.html

      இந்த பதிவில் நான் அதன் படம் போட்டு இருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை .
      படங்கள் சேமித்து வைத்துக் கொள்வது.

      மகன், மகள், மருமகள் எல்லோரும் நன்றாக எடுப்பார்கள்.நான் இன்னும் கற்ருக் கொண்டுதான் இருக்கிறேன்.


      //நிலவே நீ சாட்சி என மனதில் தோன்றியது இவற்றைப் பார்க்கையில்.//

      பாடல் நல்ல பாடல் பிடித்த பாடல். நிலா பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.
      நிலவு நிறைய விஷயங்களை வைத்து இருக்கிறது. நமக்கும், நிலவுக்கும் மட்டும் தெரிந்தது நிறைய இருக்கும் தானே!.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது.

      நீக்கு
  12. நிலவு, கடல், சூரியன் போன்ற இயற்கையின் எழிலைக் காண அலுப்பே இல்லை. நீங்கள் எடுத்த முழுநிலவு படங்கள் அனைத்தும் அழகும்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன்

      //நிலவு, கடல், சூரியன் போன்ற இயற்கையின் எழிலைக் காண அலுப்பே இல்லை//

      உண்மை வெங்கட்,அலுப்பே இல்லை இவைகளை பார்க்க.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. படங்களும் பதிவும் அழகோ அழகு.. அருமை.. நமது ஜோதிஷக் கலையில் சந்திரன் மனோ காரகன்.. மனதுக்கு இதமானவன்...

    ஆயினும் சந்திரனை பெண்ணாகப் பாவிப்பதும் உண்டு..

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே!.

    - என்று ஒரு திரைப்படப் பாடல்..

    அப்போதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு வெண்ணிலா, கலைமதி, இளமதி, வளர்மதி, சந்திரா என்றெல்லாம் பெயர் வைப்ப்பார்கள்...

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
    //படங்களும் பதிவும் அழகோ அழகு.. அருமை.. நமது ஜோதிஷக் கலையில் சந்திரன் மனோ காரகன்.. மனதுக்கு இதமானவன்...//

    நன்றி. நீங்கள் சொல்வது சரிதான் மனதுக்கு இதமானவன்.



    ஆயினும் சந்திரனை பெண்ணாகப் பாவிப்பதும் உண்டு..

    //என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே!.//

    ஆமாம், புலவர்கள், கவிஞர்கள் எல்லோரும் பெண்ணாக பாவித்துதான் கவிதை, பாடல் எழுதுவார்கள்.
    பெண் குழந்தைகளுக்கு பேரும் வைப்பார்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. மிக அழகான படங்கள். நீங்கள் சூம் செய்தது வரைந்தது போல் இருக்கிறது. 'மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்..'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      நான் எடுத்த் அபடம் வரைந்தது போல் இருக்கா நன்றி.
      படங்களை ரசித்துப்பார்த்து அழகான பாடலையும் பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு