வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான்





பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை    இன்று..

பல வருடங்களாய் பார்க்க நினைத்த விழாவை போன வருடம் பார்க்கும் நல் சந்தர்ப்பம் கிடைத்தது.

உறவினர்களுடன் சென்று வந்தேன். நிறைய கூட்டம், பிட்டுக்கு மண்
 சுமந்த கதை சொல்லப்படுகிறது., அது போல் நடித்துக் 
காட்டப்படுகிறது.

மண்டபத்தின் மேல் முக்கிய பிரபலங்கள் மட்டும் அனுமதி ,
கீழ் இருந்து படம் எடுப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.

வேலை செய்யாமல் சுகவாசியாய் பிட்டை சாப்பிட்டு விட்டு 
தூங்கும் காட்சி, அரசர் வந்து பிரம்பால் அடிப்பது, 
சகலமானவர்கள் மேலேயும் அடி விழுவதை 
வேதபாடசாலை மாணவர்கள் முதுகில் அடிப்பட்டதுபோல் நடித்துக் காட்டுவதும், சுவாமி தன்பங்காய் மண்ணைப் போட்டு
 வெள்ளத்தை தடை செய்வதும் மேடையில் நடித்துக் காட்டப்படுகிறது.

அந்த காட்சிகளும், கதையும் கீழே:-


வைகை வெள்ளம்  அடைக்க  ”அவர்வர் பங்குகளை  அடையுங்கள்”
 என்று பறைசாற்றி அழைத்தனர் .

மண்ணை படைத்தவன் மண் சுமந்தான் கரையடைப்பானாக!

                                                
 இறைவனை கூலியாளாக பெற்ற  பிட்டு விற்கும் முதியவள் தனக்கென்று
 விடப்பட்ட பகுதியை அடைப்பதற்குக் கூலியாள் கிடைக்காமல் பெரிதும் 
வருந்திய வந்தி  சோமசுந்தரப் பெருமானை நினைத்து
  “ ஆலவாய் அண்ணலே! பிட்டு விற்றுப் பிழைக்கும் ஏழை, நானோ அனாதை  எனக்கு கூலியாள் கிடைக்க மாட்டானா என்று அழுது வருத்தினார்.

வந்தியின் சோகக்குரலுக்கு செவிசாய்த்து கூலியாளாக வந்தார் .
“கூலி தந்து என்னை வேலைக்கு வைத்துக் கொள்பவர் உண்டா?” 
என்று கூவிக் கொண்டே வந்தார். கூலியின் குரலைக் கேட்டு 
மகிழ்ந்த வந்தி “எனது பங்குக்கு விடப்பட்டகரையை அடைத்து தருவாயா? 
என்று கேட்டார். அடைத்து தருகிறேன் எனக்கு கூலி என்ன தருவாய் ?
என்று பெருமான் கேட்டார்.

நான் விற்கும் பிட்டை தருகிறேன் என்றார் வந்தி. எனக்கு மிகுந்த பசியாக
 இருக்கு உதிர்ந்தபிட்டை கொடு உண்டு இளைப்பாறி உன் பங்கு இடத்தை அடைக்கிறேன் என்றார்.

ஆனால் சிறுபிள்ளை போல் கொஞ்சம் மண்ணைகூடையில் எடுத்து
 போடுவதும், கூடையை தண்ணீரில் போடுவதும் பின் எடுப்பதும் என்று
 விளையாடி அதில் களைத்து வந்தி கொடுத்த பிட்டை தின்று நீர் 
அருந்தி பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பிட்டை பகிர்ந்து அளித்தும்
 விளையாடினார்.

 வேலை வாங்குவோர் கையில் பிரம்புடன்  வந்து உன் பங்கு மட்டும்
 அடைபடாமல் இருக்கே என்று  கேட்டனர் அவர் அழகில் மயங்கி
 அடிக்க மனம் இல்லாமல் இவன் பித்தனா? எத்தனா? சித்தனா?
மன்னரிடம் சொல்வதே முறை என மன்னரிடம் கூறினர்.

அழகில் சிறந்த இந்த கூலியாள் பகுதி மட்டும் அடைபடவில்லை, 
ஆடியும் ஓடியும் களித்துக் கொண்டு இருக்கிறான் என்றனர். அரிமர்த்தன பாண்டியனுக்கு  கோபம் வந்து கரையடைப்பானை அழைத்து  
பொற்பிரம்பால் ஓங்கி அடித்தான்.

உடனே கூலியாக வந்த சோமசுந்தரப் பெருமான் கூடையுடன்
 மண்ணை கரையில் கொட்டி மறைந்தருளினார்.

இறைவன் முதுகில் பட்ட அடி  அனைத்து ஜீவராசிகள் மேலும்
 ஈரேழு புவனங்கள் மீதும் பட்டது..

வானத்தில் காட்சி அளித்து “செங்கோற் பாண்டியா!  
உன் பொருள்கனைத்தும் அறவழியிலே தொகுப்பட்டுத் 
தூய்மையாக விளங்கியவை. அவையனைத்தும் நமக்கும் நம்முடைய மெய்யடியார்களுக்கும்  திருவாதவூரன்  பக்தியுடன் கொடுத்தான், 
 அவனை துன்ப படுத்தினாய்.  அதனால் நரியை பரிகளாக்கினோம், 
பரிகளை மீண்டும் நரிகளாக்கினோம்.; மறுதினமும் கொடுமை 
படுத்தினாய் அதனால் வைகையில் வெள்ளம் பெருக செய்தோம்,  
வந்தியின் துயர் நீக்க கூலிக்காரனாக வந்தோம்,  பிட்டுண்டோம், 
உம்மிடம் பிரம்படி பட்டோம். வாதவூரானை அவனது 
விருபத்தின்படியே  விட்டுவிடுக. நீயும்  கனமதுர நீள் செளக்ய சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு  வாழ்ந்திருபாயாக !” என்று   கூறினார்.

விண்ணிலிருந்து வந்த தெய்வதிருமொழி கேட்டு  மாணிக்கவாசக 
பெருமானை கண்டு அவர் அடிகளில் விழுந்து வணங்கி தன்னை
 மன்னிக்கும் படி வேண்டினான்.

பலதிருபணிகள் செய்து பூஜை, திருவிழாக்கள் செய்வித்து அன்பும் 
அருளும் இன்பமும் நிரம்பிய  நல்லாட்சி  செய்து நற்புதல்வனை 
பெற்று  உரிய காலத்தில்  திருக்குமரனுக்குப் பட்டாபிஷேகம் செய்து
சிவபதவி அடைந்தார்.


தங்ககூடை, தங்க மண்வெட்டியுடன்


கூடையை தலையில் வைத்துக் கொண்டு வேலை செய்யாமல் வேடிக்கைப்
 பார்க்கும்  வந்தியின் கூலி ஆளாய்.




சிவனுக்கு அணியபட்ட நகைகள் போலவே இவரும் அணிந்து, உடல் முழுவதும் விபூதி பூசி இருக்கிறார்.


வில்வ இலையை தலையில் சூடி வந்து வந்தியிடம் உதிர்ந்த பிட்டு
 வாங்குகிறார்.

வந்தி அம்மையார்

மன்னர் வருவதை அறிவிக்கும் முரசுகளுடன் காளை



கரை அடைபட்டதா என்று பார்க்க வந்தார்  மன்னர்

யார் பாகம் அடைக்கபடாமல் இருக்கிறது என்று கோபமாய் கேட்டு 
வருகிறார் மன்னர்  .



மன்னர் வருகிறார் தங்கபிரம்பு எடுத்துக் கொண்டு கோபமாய் 

யார் அடைக்காமல் விளையாடி கொண்டு இருந்தது என்று கேட்கிறார்



வைகை ஆறாக அமைக்கப்பட்ட   தண்ணீர் தொட்டி, அதில் தான் கூடையில் மண் எடுத்து
 கொட்டி இருக்கிறார்.

வகைகரையில் தான் சிவன் என்பதை காட்டி அருளியது

சாமி எழுந்தருளிய மண்டபம். 

நன்றி கூகுள்



பிட்டு விற்கப்படுகிறது. இடிந்த பிட்டு மட்டும் தான் உனக்கு என்று சிவனிடம் வந்தி பாட்டி
சொல்லி விட்டதால் உதிர் பிட்டு தான் விற்கப்படுகிறது.



மன்னர்   வரும் பட்டத்து  யானையாக அலங்கரிக்கப்படும் முன் எடுத்த படம்.



மதுரையில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லும் பாடல்



                       வாழ்க வையகம் ! வாழ்க வையகம்!     வாழ்க வளமுடன் !                                     

========================================================

17 கருத்துகள்:

  1. நிகழ்வுகளுக்கு ஏற்ற படங்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
  2. காட்சிகளும் கதை சொன்ன பாங்கும் அருமை.
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை..

    மாணிக்க வாசகரை ஆட்கொண்டு - நரிகளைப் பரியாக்கியதில் இருந்து வைகையில் வெள்ளம், பிட்டுக்கு மண் சுமந்து வந்தியம்மைக்கு மோட்சம், கரை அடைத்தது - என், ஒவ்வொரு திருவிளையாடலும் அர்த்தம் பொதிந்தவை..

    அழகான படங்கள்.. இனிய பதிவு..

    ஓம் நம சிவாய ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை..//

      இன்னொரு முறை கணவருடன் போய் வந்தேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பது இல்லைதான்.

      திரு விளையாடல் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவைதான். ஒவ்வொரு காரணம். காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பதை உணர்த்துவது போல!

      உங்கள் கருத்துக்கு நன்றி.
      ஓம் நம சிவாய.


      நீக்கு
  4. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னைப்
    பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன"
    பாடலும் நினைவுக்கு வந்தது.
    மதுரை வீரன் படத்தில் இந்தப் பாடல் மிக அருமையாக
    இருக்கும்.

    சிவ பெருமான் நடத்திய திருவிளையாடல்கள்
    பற்றிப் பள்ளிக்கூட நாட்களில் படித்த பிறகு,
    வாரியார் ஐய்யாவின் சொற்பொழிவுகளில்
    கேட்டிருக்கிறேன்.
    எல்லாமே மதுரையில் தான்.

    ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வேத பாடசாலை மாணவர்கள் நடித்துக்
    காட்டி இருப்பது மிக அருமை. அதுவும் மன்னர்
    நிஜத்திலேயே யானை மீது வருவது

    பிரமிப்பாக இருக்கிறது.
    வந்தியின் சிலையும், கூகிள் படமும் மிக நேர்த்தி.

    வைகையில் நீர் இருக்கிறதோ இல்லையோ
    என்று தோன்றியது.
    நன்றி கோமதிமா. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லை அக்கா, வாழ்க வளமுடன்

      //பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னைப்
      பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன"
      பாடலும் நினைவுக்கு வந்தது.//
      டி. ஆர். மகாலிங்கம் அவர்கள் பாடிய பாடல் திருவிளையாடல் படத்தில் மிக நன்றாக இருக்கும்.

      மதுரை வீரன் பாட்டும் நன்றாக இருக்கும் ,எம். எல் வசந்த குமாரி அவர்கள் பாடிய பாடல் போட்டு இருக்கிறேன் கேட்டீர்களா ?

      வாரியார் ஐயா சொற்பொழிவு கேட்டது மகிழ்ச்சி. சாரும் திருவிளையாடல் புராணம் மாயவரம் மயூரநாதர் கோயிலில் தொடர் சொற்பொழிவு செய்தார்கள்.

      புட்டுத்தோப்பு என்ற இடத்தில் அப்படியே நடத்தி காட்டியதை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி வளையல் விற்ற லீலையும் பார்த்தேன்.
      வைகையில் தண்ணீர் இல்லை அதனால்தான் இப்படி தொட்டி கட்டி அதில் த்ண்ணீர் விட்டு நடித்து காட்டினார்கள். மன்னர் யானை மேல் வந்தது தான் மிகவும் சிறப்பு.

      சுவாமி மண்டபத்தில் இருந்தார் அவரை எடுக்க அனுமதி இல்லை.


      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.



      நீக்கு
  5. ஆடல் காணீரோ...   திருவிளையாடல் காணீரோ என்று படங்கள் வழங்கியது ரசிக்கத்தக்கது.  எல்லாப் படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      வரலட்சுமி பண்டிகை நேற்று நல்லபடியாக நிறைவு பெற்றதா?

      ஆடல் காணீரொ திருவிளையாடல் காணீரோ //

      பார்த்தீர்களா?

      நன்றி உங்கள் கருத்துக்கு.

      நீக்கு
    2. ஆம் அக்கா..  இன்று புனர்பூஜை.  மற்றும் நாங்கள் சில வீடுகளுக்குச் வெற்றிலை பாக்கு வாங்க செல்ல வேண்டியதிருக்கிறது.

      நீக்கு
    3. //இன்று புனர்பூஜை. மற்றும் நாங்கள் சில வீடுகளுக்குச் வெற்றிலை பாக்கு வாங்க செல்ல வேண்டியதிருக்கிறது.//
      ஓ நல்லது . வாங்கி வாருங்கள், எல்லோர் ஆசியும் அன்பும் வாங்கி வருவது நல்லது.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  6. அருமையான படங்கள் மா ...

    இப்பொழுது தான் இந்த நிகழ்வுகளை வாசித்து வருகிறேன் ..மேலும் இந்த ஆண்டு கோவிலின் உள்ளேயே நடைபெறும் நிகழ்ச்சிகளை இணைய வழி காணும் பேறு கிடைத்தது ..

    அவற்றை தொகுப்பாக எனது தளத்திலும் பதிவாக்கி கொண்டு வருகிறேன் ...

    தங்கள் படங்களின் வழியாக மிக சிறப்பாக நடைபெறும் நிகழ்வுகளை காணும் பாக்கியம் கிடைத்தது மா ...மிகவும் மகிழ்ச்சி ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      //மேலும் இந்த ஆண்டு கோவிலின் உள்ளேயே நடைபெறும் நிகழ்ச்சிகளை இணைய வழி காணும் பேறு கிடைத்தது ..//

      நானும் அப்படித்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

      உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. பிட்டுக்கு மண் சுமந்த காட்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பிட்டுக்கு மண் சுமந்த கதை - உங்கள் பதிவின் வழி படித்து மீண்டும் உவகை கொண்டேன். நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //பிட்டுக்கு மண் சுமந்த கதை - உங்கள் பதிவின் வழி படித்து மீண்டும் உவகை கொண்டேன்.//

      ஆவணி மூலத்திற்கு சிறப்பு பதிவாய் போட ஆசை அதுதான் மீள் பதிவு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு