ஞாயிறு, 13 ஜனவரி, 2019

பொங்கல் வாழ்த்துக்கள்


பொங்கலோ பொங்கல்
மாயவரத்தில் மாடி ஏறும் இடத்தில் உள்ள வாசல் திண்ணையில் போட்ட கோலம்.

மாயவரத்தில் பொங்கல் கொண்டாடிய நினைவு படங்கள் சில பகிர்வு இந்த பதிவில். 

 மாடி வாசலில்  போட்ட கோலம்

//பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று ஆனந்தக் குரலில் ஆரவாரமிட்டு குதூகலிக்கிறோம். பொங்கல் பொங்குவது என்பதே வெப்பத்தின் மிகுதியால்தான். ‘கதிரவனே, உன்னுடைய வெப்பம் மிகுந்ததனால், பானையில் உள்ள இனிப்புப் பொங்கல் பொங்கி வழிகிறது. அதைப் போலவே எங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி பொங்க வேண்டும்’ என்பதாகத்தான் ‘பொங்கலோ பொங்கல்’ என்ற குரலும் குலவைச் சத்தமும் ஓங்கி ஒலிக்கின்றன.// 

எங்கள் ஊரிலும் பால் பொங்கும் போது குலவைச் சத்தம் கொடுப்பார்கள்.

பால்பொங்கிச்சா ? என்று  தான் கேட்பார்கள்.
                                               பால் பொங்கும் போது ஒரு பூஜை 

திருவெண்காட்டில் மாடி வீட்டில்தான் குடி இருந்தேன், அங்கு முன் வராண்டாவில் வைக்க அனுமதித்தார்கள். மாயவரத்தில் வீட்டில் குடி இருக்க ஆரம்பித்தவுடன் கேஸ் ஸ்டவ்வில்தான் பொங்கல்.


சாமி அறையில் சூரியக் கடவுளுக்கு, காகத்திற்கு  நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்குப்  பிரசாதங்கள். 

மார்கழி மாதம் முழுவதும் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்துப் பூ வைக்க வேண்டும். பெண் குழந்தை இருந்தால் தினம் பூ வைக்க வேண்டும். சிறு வீட்டுப் பொங்கல் வைப்பார்கள் அந்தபெண்கள். அம்மா கோலத்தில் அழகாய்ச் சிறுவீடு வரைவார்கள். சிமெண்டால் சின்னதாய் ஒரு சமயம் சிறுவீடு கட்டித் தந்தார்கள்.

பொங்கல் முடிந்தபின்னும் நாங்கள் அதில் விளையாடி இருக்கிறோம்.  சிறுவீட்டுல் பொங்கல் அன்று இலையில் வைத்து இருக்கும் 7, 9, 11 என்று ஒற்றைப்படையில் வைத்த பூக்களைத் தட்டிக்  காயவைத்த வரட்டியில் தான்  பெண் குழந்தை பால் பொங்க வைப்பாள் .பின் இலையில் 7, 9, 11 அடிப்படையில் வைத்த பொங்கல் பிரசாதம், வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், வெல்லக் கட்டிகள், எல்லாவற்றையும் நீர்நிலைக்குக் கொண்டு போய் நீர்நிலைக்குக் கற்பூரம் காட்டிப் பூஜை செய்து கரைத்து வருவார்கள் பெண் குழந்தைகள். சிறுவீட்டுப் பொங்கல்  என்பது காணும் பொங்கல், கன்னிப்பொங்கல் என்று அழைக்கப்படும்  அன்று செய்வது. அன்று எல்லோரும் கட்டு சாதம் கட்டிக் கொண்டு நீர்நிலை இருக்கும் இடங்களில் போய் எல்லோரும் மகிழ்வாய் குடும்பத்துடன்   கொண்டாடுவார்கள்.


வருட வருடம் தொட்டியில் வளர்க்கும் மஞ்சள் தான் பூஜைக்கு

மாயவரத்திலேயே இந்தத் தொட்டிகளை  எல்லாம் விட்டுவிட்டு வந்து விட்டோம்
வருடா வருடம் இரண்டு மஞ்சள்களை நட்டு வைத்து விடுவேன் தொட்டியில்.
இந்த வருடம் வாங்கத்தான் வேண்டும்.

படித்த செய்தி:-

//பொங்கல் பானைகளின் கழுத்தில் சுற்றப்படும் இஞ்சிக் கொத்துகள், மஞ்சள் கொத்துகள் ஆகியவை தாவரவியல்ரீதியில் வெப்பத்தை முக்கியக் கூறாகக்கொண்டவை. ஒன்று, வெப்பம் மிகுந்ததால் விளைந்த தாவரம். இன்னொன்று வெப்பம் குறைந்ததால் விளைந்த தாவரம். ‘கதிரவ மூர்த்தியே, எமக்கு நீ மிகுந்தாலும் நன்மை செய்கிறாய், குறைந்தாலும் நன்மை செய்கிறாய். உனக்கு எம் வந்தனங்கள்’ என்பதைச் சொல்லாமல் சொல்வதே பொங்கல் பானைகளில் இஞ்சிக் கொத்துகள், மஞ்சள் கொத்துகள் கட்டுவதன் காரணம்.//

மாயவரத்தில் அதிகாலையில் எடுத்த செங்கதிரோன்


மொட்டைமாடியில்  சூரியனுக்கு பூஜை (முறத்தில் பக்கத்து வீட்டில் ஏதோ காய வைத்து இருக்கிறார்கள்)



எவ்வளவு நாட்கள் ஆனாலும்  மாயவரம் நினைவுகள் மறக்க முடியாதவை.


2011ம் ஆண்டு போட்ட பொங்கல் பதிவுக்கு நான் வரைந்த கோலம்.
                                    


2012 ம் ஆண்டு  போட்ட வாழ்த்துப் பதிவுக்கு  நான் வரைந்த கோலத்துடன் என் கணவர் கணினியில் வரைந்த  பொங்கல் வாழ்த்து 
                                                 

2013 ம் ஆண்டு போட்ட பொங்கல் பதிவுக்கு என் கணவர் வரைந்து தந்த  பொங்கல் வாழ்த்து ஓவியம்.

                              

செய்யும் விளைந்தது;
தையும் பிறந்தது
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்!-புதுச்
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்!
பொய்கை புதர்செடி
பூக்கள் நிறைந்தன;
பொன்னொளி எங்கணுங் கண்டோம்!-புதுப்
பொன்னொளி எங்கணுங் கண்டோம்!

மாவும் சுளைப்பலா
வாழையும் செந்நெலும்
வந்து குவிந்தது வீட்டில்! - தை
வந்தது வந்தது நாட்டில்!
கூவும் குயிலினம்
கூவாக் குயிலினம்
தாவிப் பறந்தது மேல்வான்!- ஒளி
தாவிப் பறந்தது கீழ்வான்!

சிட்டுச் சிறுவரின் 
செங்கைக் கரும்புகள்
தொட்டுப் பிசைந்தன பொங்கல்! -அதை
இட்டு மகிழ்ந்தனர் பெண்கள்!
வெட்ட வெளியெலாம்
மெல்லியர் பண்ணிசை
மேவும்; சிலம்பொலி கேட்கும்; - தமிழ்
வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்!

------கவிஞர் வாணிதாசன்.

பாட்டாளி மக்களெல்லாம் பல்லாண்டு வாழ்கவே!
வீட்டுக்கு வீடு செல்வம் விரைந்துயர்ந்து பொங்குகவே!
நாட்டிலும் வீட்டிலும் நல்லோர் சொல் செயல்படுக!
ஏட்டறிவோடியற்கையறி வெங்கும் பொங்கித் திகழ்க!

 --வேதாத்திரி மகரிஷி

இந்த வீட்டில் இப்போது வைக்கப் போகும் பொங்கல் பண்டிகை முதல் பொங்கல். இதை மகிழ்வாய்க் கொண்டாட இறைவன் அருள்புரிய வேண்டும்.
எல்லோருக்கும் இந்த ஆண்டு பொங்கல் மனமகிழ்வைத் தர வேண்டும்.

பொங்கல் பண்டிகை பூஜைக்கு தேவையான தேங்காய், வாழை, வெற்றிலை தானியங்கள், காய்கறிகள்  எல்லாம் கஜா புயலால் அடைந்த சேதம் மிகவும் அதிகம். அதை நம்பி வாழ்ந்தவர்கள் அடைந்த இன்னல்கள் அதிகம். அவர்கள் வாழ்வில்  வசந்தம் வீச வேண்டும்.

சூரியன் அருளால் பயிர் பச்சைகள் செழித்து நீர்வளம், நிலவளம் , கால்நடைகள் , பல்லுயிர்களும் வாழவேண்டும்.

சூரியா போற்றி போற்றி ! :-

சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுதந்திரா போற்றி !வீரியா போற்றி! வினைகள் களைவாய்!

காசினி யிருளை நீக்கும்
கதிர் ஒளி வீசி எங்கும்
பூசனை உலகோர் போற்றப்
புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல்
மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய்
செங்கதி ரவனே போற்றி.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

                                                     வாழ்க வளமுடன்.

57 கருத்துகள்:

  1. பொங்கல் நினைவுகளை அழகிய படங்களுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்.
      உங்கள் மகளுக்கு தலைபொங்கல் மகள், மருமகள் இருவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இனிமையான பொங்கல் நினைவுகள். உங்கள் மாயவரம் வீட்டிற்கு நானும் வந்தது நினைவில் பசுமையாக.....

    உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      நீங்கள் மாயவரம் வந்த நினைவுகள் இன்றும் பசுமையாக எனக்கும் இருக்கிறது.
      உங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. நமது பண்டிகைகளில் தான் எவ்வளவு தாத்பரியங்கள் புதைந்து கிடக்கின்றன?.. அவற்றை ஆராய்ந்தால் புதுசு புதுசாகக் கிடைத்துக் கொண்டேயிருக்கும் போலிருக்கு.

    உங்களின் இந்தப் பதிவை பொங்கல் திரட்டு என்றே சொல்லலாம். எவ்வளவு விஷயங்கள்?
    ஒன்றைத் தொட்டால் போதும், நினைவுகளின் நீரூற்று வடிகால் கிடைத்தது போல வந்து கொண்டேயிருக்கின்றன. அத்தனையும் பெற்ற அனுபவங்கள் என்னும் போது மனது நிறைகிறது.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது போல் நிறைய தாத்பரியங்கள் புதைந்து கிடக்கிறது.
      நிறைய நினைவுகள் நெஞ்சில் இருக்கிறது. குழந்தைகளுடன், அப்பா, அம்மா, தங்கைகள், அண்ணன், அக்கா இவர்களுடன் கொண்டாடிய நினைவுகள், மருமகள் மகன், மாமனார், மாமியார் இவர்களுடன் கொண்டாடிய பொங்கல் நினைவுகள் என்று எத்தனை எத்தனை?
      இப்போது யாரும் இல்லாமல் நாங்கள் இருவரும் ஸ்கைப்பில் குழந்தைகளுடன் அவர்கள் எங்கள் பொங்கல் காட்சிகளை பார்க்க கொண்டாடுகிறோம்.
      இந்த வசதியை கொடுத்த விஞ்ஞான முன்னேற்றத்திற்கு நன்றி சொல்லி மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

      வயதானவர்களுக்கு பழைய விஷயங்களை அசை போடுவது பிடிக்கும். பேசினால் கேட்க அன்பான நட்புகள் இருந்தால் கேட்க வேண்டுமா?

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

      உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.





      நீக்கு
  6. அழகான இனிய நினைவுகள் அக்கா ..முழு ஈடுபாட்டுடன் சந்தோஷமா செய்யும் எந்த நல்ல விஷயமும் நினைவில் இருந்து அகலாது அப்படிதான் வீட்டு நிகழ்வுகளும் நினைவுகளும் . இஞ்சி /மஞ்சள் செடிகளின் விவரங்கள் எனக்கு புதுசு .பகிர்வுக்கு நன்றி
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.

      //முழு ஈடுபாட்டுடன் சந்தோஷமா செய்யும் எந்த நல்ல விஷயமும் நினைவில் இருந்து அகலாது அப்படிதான் வீட்டு நிகழ்வுகளும் நினைவுகளும் .//

      அம்மாவுக்குதான் அத்தனை பெருமைகளும் அவர்கள்தான் எங்களை பண்டிகைகளை ஈடுபட்டுடன் செய்ய வைத்தவர்கள், எதிர்ப்பார்க்க வைத்தவர்கள்.
      இஞ்சி, மஞ்ச்ள் செய்தி முன்பு தினமலரில் வந்த செய்தியை எழுதி வைத்து இருந்தேன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  7. ஓ கோமதி அக்கா, நான் நினைச்சுட்டேன்ன் உங்களுக்குப் பொங்கல் வந்திட்டுது, நீங்க பொங்கிப் படமும் போட்டிட்டீங்களென.. ஹா ஹா ஹா.. இது மாயவரம்புப் பொங்கலோ அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      மாயவரம் பொங்கல் தான்.
      அயல்நாட்டில் தான் வசதி பட்ட நேரம் எல்லோரும் கூடி பொங்கல், மற்றும் எல்லா பண்டிகைகளையும் முன்போ, அல்லது வசதி பட்ட நேரத்தில் செய்து விடுகிறார்கள் இல்லையா?

      இங்கு இன்னும் அப்படி வரவில்லை.

      நீக்கு
  8. பொங்கல் கோலத்துக்கு என்ன பாவிச்சிருக்கிறீங்க? இங் போல இருக்கே.., அழகாக பானை, கரும்பு எல்லாம் வந்திருக்கு.

    பொங்கல் என்றால் அது சின்ன வயதில் ஊரில் பொங்கியதுதான்.. இப்பவும் கண்ணுக்குள் நிக்குது.. அப்பாதான் ஒரு பெரிய சதுரக் கோலம் போட்டு , உள்ளே அடுப்பு வைக்கவும் கோலம் போடுவார் மாவால், பின்பு நானும் அக்காவும் ச்சும்மா குட்டிப் பூக்கள் போட்டு விடுவோம்.. அதுக்குள் அம்மா பானை ரெடி பண்ணிடுவா.. நினைக்கவே ஆசையாக இருக்கு.. இப்போ எல்லாம் போச்சு.. அப்பாவும் இல்லை:(... எங்கள் பிள்ளைகளுக்கு இது எதுவும் தெரியாது... இங்கு சும்மா அடுப்பில் பொங்கி படைச்சு கும்பிடுவோம்தான்.. ஆனா ஊரில் வீட்டு வாசலில் செய்வதைப்போல வராது. ஒரு தடவை பொங்கல் நேரம் ஊர் போய் வரோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொங்கல் கோலத்திற்கு சுண்ணம்பு . கிளிஞ்சல் சுண்ணம்பு கிடைக்கும் அதை வாங்கி வெந்நீர் விட்டு வத்தால் சுண்ணம்பு ஆகிவிடும் அதனுடன் கொஞ்சம் சொட்டு நீலம் கலந்து கோலம் போடுவோம். பூச்சி பொட்டு வராது என்று அவ்வாறு போடுவார்கள், முன் காலத்தில் பெயிண்டால் கோலம் போடும் நாகரீகம் வரவில்லை அதனால் பல நாள் இருக்கும் கோலம் , அப்புறம் பூச்சி வராது எனும் காரணத்தால் சுண்ணாம்பில் போடுவார்கள். பாத்திரம் அடுக்கி வைக்கும் மேல் பலகை கழற்றி அதில் கூட முன், பின் கோலம் போட்டு மேலே மாட்டுவார்கள். பார்க்க அழகாய் இருக்கும்.

      பச்சரிசி மாவால் கார்த்திகை மாதம் போடுவார்கள், பொங்கல் சமயம் விளக்கு முன், பூஜை அறை மட்டும் பச்சரிசி மற்ற இடம் சிமெண்ட் . இப்போது டைலஸ், மொசைக், கிரேண்ட் அப்புறம் எங்கிருந்து போட . பொங்கல் கோலம் சிமெண்ட் தரையில் மிக அழகாய் இருக்கும். பல மாதங்கள் இருக்கும்.

      படியில் சுண்ணாம்பு பட்டை, செம்மண் பட்டை அடிப்பார்கள்.

      நீங்கள் சொல்வது போல் நாலுபக்கம் வாசல் வைத்து சதுரமாய் பார்டர் போட்டு நடுவில் கோலம் போட்டு, சூரியன், சந்திரன் வரைந்து அதில் தான் பொங்கல் அடுப்பு வைத்து (கட்டி அடுப்பு) பொங்கல் வைப்பார்கள் முற்றம், அல்லது வீட்டு வாசல்.
      அடுப்புக்கு விறகு கிடையாது பனைஓலை கொண்டு வந்து வீட்டுக்கு வீடு போட்டு காசு வாங்கி போவார்கள்.

      சிலர் மொட்டை மாடியில் வைப்பார்கள்.
      இப்போது காலம் மாறி பானையை கேஸ் ஸ்டவில் வைக்கிறோம். அதுவும் சிலர் குக்கரில் பொங்கல் வைத்து விடுகிறார்கள்.

      உங்கள் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும் என்றால் நீங்கள் ஒரு முறை பொங்கல் வைக்கலாம் தானே!
      மகன் வீட்டில் தோட்டத்தில் பொங்கல் அடுப்பு ரெடி செய்து விட்டான்.
      மண்பானை அவனே செய்தது மண்பானை செய்யும் இடத்தில் போய் கற்றுக் கொண்டு சுட்டு எடுத்து வந்தது. நண்பர்களூடன் நம் ஊரை நினைவு படுத்தி கொண்டாடுகிறான்.
      முன்பும் போட்டு இருந்தேன் அவன் வீட்டு பொங்கலை இன்னொரு முறை போடுகிறேன் வேறு பதிவில்.

      நீக்கு
  9. பால் பொங்கும்போது பூஜையோ? நாங்கள் கை எடுத்துக் கும்பிடுவோம்ம்.. .. கோமதி அக்கா கையிலயும் அழகிய மருதோண்டிக் கோலம்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் ! என்று கூவி, பின் பூஜை செய்து அது எந்த பக்கம் வழிகிறது என்று பார்ப்போம். கிழக்கு பக்கம் வடிந்தால் மிக நன்மை என்பார்கள், அப்புறம் அரிசியை கைகளில் அள்ளி மூன்று சுற்று சுற்றி பானையில் போட்டு கை எடுத்து கும்பிட்டு பின் எல்லா அரிசியை போட்டுவிடுவோம்.
      இரண்டு சிமெண்ட் தொட்டியில் வளர்த்தேன் மருதாணியை அது ஒவ்வொரு பண்டிகைக்கும் எனக்கு சரியாக இருக்கும், இரண்டு கைகள், இரண்டு கால்களில் வைப்பேன். இப்போது வைக்கவில்லை 3 ஆண்டுகளாக . எங்காவது போய் வாங்கி வைக்க மனம் இல்லை. கோன் பிடிக்காது.

      நீக்கு
  10. ஊரில் மஞ்சள், இஞ்சி வளர்த்திருக்கிறோம்ம்.. இங்கு செய்யவில்லை, பச்சை மஞ்சள் உடம்புக்கு மிக நல்லதாமே.. ஆனா இங்கு கடையில் கிடைக்கும்..

    பதிலளிநீக்கு
  11. மொட்டை மாடிப் பூஜை அழகு. பொங்கல் பாடல்கள் அருமை.

    எங்கள் 2,3 ம்ம் வகுப்புப் புத்தகத்திலும் பொங்கல் பாடல் இருக்கு.. எனக்கு சின்ன வயதில் புத்தகமே பாடம்.. வாசிக்க சொன்னால் புக்கை திறந்து வைத்துப் போட்டு பார்க்காமல் வாசிப்பேன்ன்.. எல்லோரும் அதிசயமாகப் பார்ப்பார்கள்.. அப்படித்தான் பாட்டுக்களும்.. இப்போ சில வரிகள் மறந்து போச்சூ..

    தைத்திருநாள் இல்லமெலாம்
    தளிர்த்திடும் தைப்பொங்கல்
    கூவி அழைத்திடும் சேவல்
    குதித்தெழுவோம் குளிப்போம்

    பூ எடுத்துக் கோலமிட்டுக் கும்பிடுவாள் அம்மா
    பாலெடுத்துப் பொங்கலுக்கு பானை வைப்பார் அப்பா..
    இப்படி வரும் பாடல்...

    அழகிய பொங்கல் நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  12. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கோமதி அக்கா.. மற்றும் இங்கு வரும் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      அன்பான பின்னூட்டங்கள்,உங்கள் மலரும் நினைவுகள், வாழ்த்துக்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  13. காலை வணக்கம். கோலங்கள், பழைய படங்கள் எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      கோலங்கள், படங்களை பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. இனிய நினைவுகள். நீண்ட நாட்கள் அல்லது வாழ்க்கையின் முக்கியமான நேரத்தில் வசித்த இடங்களை மறக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவெண்காடு ஊர் வாழ்க்கையின் முக்கியமான நேரங்களை கொண்டதுதான், மாயவரமும் முக்கியமான நேரங்கள் அடங்கியது தான். இரண்டு ஊரையும் மறக்க முடியாது.

      நீங்கள் சொல்வது போல் முக்கியமான நேரங்களில் வசித்த இடங்களை மறக்க முடியாதுதான்.
      இளமை, முதுமை இரண்டு வாழ்க்கையின் அனுபவம், இன்பம், துன்பம் ஆகியயவும் அடங்கியவை.

      நீக்கு
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.

      நீக்கு
  16. இஞ்சிக்கொத்து மஞ்சக்கொத்து வைப்பதற்கான காரணங்கள் சாய்ந்தேன். மஞ்சள்கொத்து வீட்டிலேயே வைத்து விடுவீர்கள் என்பது பாராட்டவேண்டிய செய்தி. எத்தனை நாட்களுக்குமுன்னால் மஞ்சளை நடுவீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொங்கல் அன்று வாங்கும் மஞ்சளை நட்டு வைத்து விடுவேன் பொங்கல் முடிந்தவுடன்.அடுத்த பொங்களுக்கு அறுவடை.
      இஞ்சியும் வைத்து இருக்கிறேன்.
      இஞ்சி கொத்து மதுரையில் இல்லை, மஞ்சள் கொத்து மட்டும் கிடைத்தது.இந்த வருடம் இரண்டையும் நட்டு வைக்கனும் இறைவன் அருளால் அடுத்த ஆண்டும் கிடைக்கவேண்டும்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
      உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  18. அருமையான பொங்கல் நினைவுகள். நாங்களும் இஞ்சி, மஞ்சள், கரும்பு உட்பட வீட்டுத் தோட்டத்தில் விளைவித்திருக்கிறோம். எங்கெல்லாம் மாற்றல் ஆகிப்போனோமோ அங்கெல்லாம் நாங்க நட்டு விட்டு வந்த முருங்கை, மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை போன்றவை இன்னமும் எங்கள் நினைவுகளைச் சுமந்து கொண்டு இருக்கிறது. ஜாம்நகரிலும், ராஜஸ்தான் நசிராபாதிலும் மஞ்சள் விளைவித்துத் தெரிந்த தமிழருக்கெல்லாம் கூப்பிட்டுக் கொடுப்போம். அங்கெல்லாம் கிடைக்காத பொருள்! அம்பத்தூர் வீட்டிலும் பொங்கலன்று காலை தான் மஞ்சளை வெட்டி எடுப்பார். மஞ்சள், இஞ்சி, சித்தரத்தை, பிரண்டை எல்லாமும் இருந்தது. அக்கம்பக்கம் வீட்டுக்காரங்களுக்குக் கொடுப்போம். ஒரு வருஷம் பூஷணி(வெள்ளை) அமோக விளைச்சல்! என்ன செய்யறதுனு தெரியாமல் இருந்தது. அது ஒரு கனாக்காலம். கோலங்கள் எல்லாம் அப்போது விதம் விதமாகப் போட்டாலும் படங்கள் எடுத்து வைக்கலை. அதுவும் அம்பத்தூர் வீட்டில் 3 வாசல், கொல்லைப்புறம், வாசல், சைடில் ஒரு வாசல். மூன்றிலும் கோலம் போடுவேன். கொல்லைக்கிணற்றடியில் தான் சூரியன் கோலம் வரைந்து அங்கே டுகார்ந்து தான் சங்கராந்தி பூஜை செய்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      கரும்பு மகன் வீட்டில் வைத்து இருந்தான்.

      //எங்கெல்லாம் மாற்றல் ஆகிப்போனோமோ அங்கெல்லாம் நாங்க நட்டு விட்டு வந்த முருங்கை, மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை போன்றவை இன்னமும் எங்கள் நினைவுகளைச் சுமந்து கொண்டு இருக்கிறது.//

      அதுதான் மகிழ்ச்சி தரும் செய்தி.

      //மஞ்சள் விளைவித்துத் தெரிந்த தமிழருக்கெல்லாம் கூப்பிட்டுக் கொடுப்போம். அங்கெல்லாம் கிடைக்காத பொருள்!//
      நல்ல செயல், அவர்களுக்கும் மகிழ்ச்சி, நமக்கும் பிறருக்கு உதவ முடிந்த மகிழ்ச்சி.


      எனக்கு மாயவரத்தில் மாடி வீடு. திருவெண்காட்டிலும் மாடி வீடு. அதனால் தொட்டியில் தான் பெரிய பெரிய தொட்டிகளில் அரளி, நந்தியாவட்டை, மருதாணி, பிரண்டை, ஓமவல்லி, அரளி இரண்டு வகை, பன்னீர் ரோஜா, மஞ்ச்சள், இஞ்சி, துளசி எல்லாம் வைத்து இருந்தேன், செம்பருத்தி இரண்டு மூன்று வகை . வைத்து இருந்தேன், எல்லா வற்றையும் அந்த காலனி வாசிகளுக்கு விட்டு வந்தோம்.

      நீக்கு
  19. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புது வீட்டில் வைக்கப்போகும் முதல் பொங்கல் உங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைப் பொங்க வைக்கட்டும். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  20. கீதா உங்களின் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்.
    உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. சிறு வீட்டுப் பொங்கல் வைப்பார்கள் அந்தபெண்கள். அம்மா கோலத்தில் அழகாய்ச் சிறுவீடு வரைவார்கள். சிமெண்டால் சின்னதாய் ஒரு சமயம் சிறுவீடு கட்டித் தந்தார்கள்.//

    ஆஹா கோமதிக்கா எனக்கு என் வள்ளியூர் நினைவு வந்துவிட்டது அங்கு இருந்த போது மட்டுமெ கொண்டாடியிருக்கோம் தெருவில் உள்ள குழந்தைகளுடன்...அது இனிய நாட்கள். பெண் குழந்தைகளை அழைத்து சில மாமிகள் நலுங்கிட்டு விடுவார்கள்....மருதாணி வைத்துவிடுவார்கள்..இன்னும் பல நினைவுகள்..

    உங்கள் கோலங்கள், அண்ணன் கணினியில் வரைந்த டிசைன்ஸ் எல்லாமே சூப்பர். பழைய நினைவுகள் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      கீதா நீங்கள் வள்ளியூர் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. மஞ்சள், கரும்பு பானையில் கட்டுவதன் காரனம் அறிந்தேன் அக்கா....

    அப்புறம் எங்கள் ஊரில் பொங்கலுக்கு முன் வீட்டு வெள்ளை அடிப்பதும் நடக்கும்...வாசலில் வீட்டுத் திண்னை சுவரில் சிவப்பு, வெள்ளை சுண்ணாபு அடிப்பது வழக்கம் முதலில் சுண்ணாம்பு அப்புறம் பெயிண்டாக மாறியது. பல வீடுகளிலும் இது இருக்கும் அப்புறம் கொஞ்சம் மாடர்னாக ஆகிவிட்டது...

    சுண்ணாபில், மஞ்சள், சொட்டு நீலம்/பௌடர், அப்புறம் சிவப்பு பௌடர், இப்படிக் கலர் கலந்து வரைவது வழக்கம். சிமென்ட் தரை பெஸ்ட். இப்போது இது எதுவும் இல்லை...

    நீங்கள் பூஜை செய்வது எல்லாம் சூப்பராக இருக்கு அக்கா..படையல் பலகாரம் அனைத்தும் வெகு சிறப்பு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சள், கரும்பு பானையில் கட்டுவதன் காரனம் அறிந்தேன் அக்கா...//
      நானும் படித்ததை பகிர்ந்து இருக்கிறேன்..
      முன்பு எவ்வளவு வேலை இருக்கும் இப்போது அவ்வளவு வேலை கிடையாது ஆனாலும் முடியவில்லை.
      பொங்கல் வேலையால் மெதுவாய் கருத்துக்கு பதில் சொல்கிறேன்.


      கீதா , உங்கள் நினைவுகளை, பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  23. உங்கள் நினைவுகள் மற்றும் கோலங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. எங்கள் வீடுகளில் பொங்கல் வழக்கம் இல்லையே. தமிழ்நாட்டில் இருந்தவரை களித்ததுண்டு. அதுவும் அம்மா அப்பாவுடன் இருந்தவரை. அதன் பின் தனியாகத்தான் தமிழ்நாட்டில் இருந்தேன். அப்பா அம்மா கேரளா சென்றுவிட்டார்கள்.

    எங்கள் பகுதியில் உள்ள கோயிலில் இன்றிலிருந்து வெள்ளி வரை திருவிழா. நான் இம்முறை பொறுப்பாளராக இருப்பதால் நன்கொடை கலெக்ஷன் என்று பிஸி. வெள்ளி வரை பிசிதான். வெள்ளி என்று மகள் கோயிலில் ஓட்டம் துள்ளல் நடனம் ஆடுகிறாள். நிறைய நிகழ்ச்சிகள் இடம் பெறும். கோயில் பணிகள் கல்லூரி வீட்டு பணிகள் என்று அதனால்தான் பதிவுகள் வாசிக்க நேரம் இல்லாமல் போயிற்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
      நலமா?

      //எங்கள் பகுதியில் உள்ள கோயிலில் இன்றிலிருந்து வெள்ளி வரை திருவிழா. நான் இம்முறை பொறுப்பாளராக இருப்பதால் நன்கொடை கலெக்ஷன் என்று பிஸி. வெள்ளி வரை பிசிதான்.//
      இத்தனை பிசியான நேரத்திலும் கருத்தும், வாழ்த்து சொல்ல வந்தது அறிந்து மகிழ்ச்சி.

      //வெள்ளி என்று மகள் கோயிலில் ஓட்டம் துள்ளல் நடனம் ஆடுகிறாள்.//
      வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு.

      கோயில் பணி, கள்லூரி , வீட்டுபணிகளை சிறப்பாக செய்யுங்கள்.
      பதிவுகள் நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  24. சகோதரி/கோமதிக்கா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் உழவர்/பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இருவர் வாழ்த்துக்களூக்கும் நன்றி .

      நீக்கு
    2. கீதா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  25. அன்பு கோமதி, அனைத்து விழரங்களுக்ம் மிக மிக அழகு. நீங்கள் சூரியனை வணங்கிய பக்குவம் கண்முன் நிற்கிறது.
    கோலம் எல்லாம் சென்னையோடு போயிற்று.
    இங்கிருக்கும் குளிரில் வாசல் பக்கம் தலை காட்ட முடியவில்லை.

    மஞ்சளும் இஞ்சியும்,கருபும் ,புத்தரிசியும் கொண்டு வரும் பொங்கல் இனிக்கட்டும்.
    பழைய நினைவுகளைப் பெட்டகத்தில் போட்டு வைப்போம். புதிய நினைவுகளைப் பதிவோம். என்னாளும் இன்பமுற அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
    குளிரில் வீட்டுக்குள்தான் போட முடியும் , பனி பெய்கிறதே மழையாய்.
    உங்கள் வாக்குப்படி பொங்கல் இனிக்கட்டும்.
    உங்கள் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  27. கண் நிறைந்த படங்கள்...
    மனம் நிறைந்த மலரும் நினைவுகள்...

    கண்கள் கலங்கி விட்டன - ஒரு கணம்..

    மீண்டும் அந்த நாட்களுக்குச் செல்கின்றது மனம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெலவராஜூ, வாழ்க வளமுடன்.

      கண்கள் கலங்கி விட்டன - ஒரு கணம்..//

      உங்களுக்கும் மலரும் நினைவுகள் மனதில் வந்ததா?

      குடும்பத்தை விட்டு நீண்ட தொலைவு செல்லும் போது ஏற்படும்
      பழைய நினைவுகள் நம்மை கலங்க வைக்கும் தான்.
      உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  28. தங்கள் அனைவருக்கும்
    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    எல்லார்க்கும் நலம் விளைய பிரார்த்தனைகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லார்க்கும் நலம் விளைய பிரார்த்தனைகள்//
      நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்து கொள்கிறேன் எல்லோர் நலத்திற்கும்.

      உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
    2. பொங்கல் வாழ்த்துகள். உங்களின் பதிவு கண்டு மிக்க ஸந்தோஷம்். படங்களெல்லாம் மிக்க நன்றாக இருந்தது. மலரும்நினைவுகளைப் படித்தவுடன் நானும் அனுபவித்து அந்த நினைவுகளில் மூழ்கிவிட்டேன். மிவும் தாமதமான வருகை என்னுடயது. மன்னிக்கவும். அன்புடன்

      நீக்கு
    3. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்.
      நீங்கள் அனுபவித்து படித்து கருத்து சொன்னது மிகவும் மகிழ்ச்சி.
      தாமதம் இல்லை, சரியான நேரத்தில் தான் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
      உங்கள் வாழ்த்து கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி.
      மன்னிப்பு எல்லாம் வேண்டாம்.
      பெரியவர்கள் இப்படி வந்து படித்து கருத்து சொல்வது, பதிவுகள் அழகாய் போடுவது உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.
      உங்களுக்கு வணக்கங்கள், நன்றிகள்.

      நீக்கு
  29. மலர்ந்த நினைவுகளும் பகிர்ந்த படங்களும் ஓவியமும் பாடல்களும் மிக அருமை.

    இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  30. இனிய தமிழ்த் திருநாள் வாழ்த்துகள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  31. அழகான நினைவுகளும் அசத்தலான படங்களும் அறிந்திராத தகவல்களுமாய் இனிக்கிறது பொங்கல் பதிவு. அன்பு வாழ்த்துகள் கோமதி மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீத மஞ்சரி, வாழ்க வளமுடன்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு