ஞாயிறு, 13 மே, 2018

மீனாட்சி அன்னையின் அன்னை

இன்று காலை புதுமண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காலபைரவரைத் தரிசனம் செய்து வரலாம் என்று போய் இருந்தோம்.

நாங்கள் போன நேரம் காலை மணி  7.30 , அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள் அதனால் எட்டுமணி ஆகும், வெளியில் அமருங்கள் என்று குருக்கள் சொன்னார்.

அதற்குள் பழைய சொக்கநாதரைத் தரிசனம் செய்து வந்து விடலாம் என்று பழைய சொக்கநாதர் கோவில் போனோம். சொக்கநாதருக்குக் காலை அபிஷேகம் நடந்து முடிந்தவுடன் தீபாராதனை காட்டி அபிஷேக விபூதி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. 

மீனாட்சி அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகி இருந்தது. மஞ்சள் புடவையில் மங்கலகரமான தரிசனம்.  குங்கும பிரசாதம் பெற்றுக் கொண்டு கோவிலை வலம் வந்தோம்.

முருகன் தெய்வானையுடன் மட்டும் காட்சி கொடுத்தார் உற்சவ மூர்த்தியாக. அடுத்து லிங்கோத்பவர் , சண்டேஸ்வரர், இடைக்காட்டு சித்தர்  ஆகியோரைத் தரிசனம் செய்தோம். நடராஜர், சிவகாமி கல்லில்  வடிக்கப் பட்ட சிலை அழகாய் இருந்தது.

சின்ன நவகிரக சிலைகள், அம்மன் முன்புறம் விநாயகர், சுவாமி முன்  ஆறுமுகரும், பழனி ஆண்டவ முருகனும் இருந்தார்கள். தரிசனம் செய்து விட்டு  நாங்கள் பைரவரைத் தரிசனம் செய்யப் போனோம்.

பைரவர்  பெரிய மூர்த்தியாக இருந்தார்.பைரவர் சன்னதி முன் விநாயகர், முருகன் இருந்தனர். உட் பிரகாரத்தில்  பைரவ அஷ்டகம்,  பைரவர் அஷ்டோத்திர பாடல்கள் அடங்கிய பலகைகள் இருந்தன சுவற்றில்.




பின் அங்கிருந்து எழுகடல் தெருவில் உள்ள   மொட்டைக் கோபுரம் (ராயர் கோபுரம்) சென்றோம். கோபுரத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பிய போது வழியில்  "மீனாட்சி அம்மன் தாயார் காஞ்சனமாலை அம்மன் கோவில்" என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து அங்கு சென்றோம்.

உள்ளே சென்றவுடன் வலது புறத்தில் மலயத்துவசபாண்டியன், காஞ்சனமாலை இருவரும் அரசவையில் இருக்கும் கோலத்தில் இருக்கிறார்கள். சுதைச் சிற்பங்களாய் இருக்கிறார்கள்.

அவரைத் தரிசனம் செய்து தாழ்வான வாசலில் குனிந்து போனால் சுவாமி சன்னதி. குனிந்து வரவும் என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது சுவற்றில்.

அங்கும்  காலை அபிஷேகம் ஆக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தார் குருக்கள்.

அம்மனும், சுவாமியும் ஒரே கருவறையில் இருக்கிறார்களாம், சுவாமி மட்டும் தெரிந்தார் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என்ற போது காலை 9 மணிக்கு மேல் தான் பார்க்க முடியும் என்றார்கள் பூஜை முடிந்தவுடன் உள்ளே அனுமதிப்பார்களாம். 

வெளியே நவகிரக சன்னதி. நவகிரகங்கள் தங்கள் மனைவிகளுடன் இருந்தார்கள். கேது பகவான் தாடி எல்லாம் வைத்துக் கொண்டு, நாமம் அணிந்து பார்க்க நரசிம்மர் போல் காட்சி அளித்தார்.

அடுத்த முறை அம்மனைத் தரிசனம் செய்யலாம் என்று வந்து விட்டோம்.
அன்னையர் தினத்தில் உலக மக்களின் அன்னை மீனாட்சி அன்னையின் அன்னையைத் தரிசனம் செய்த மன நிறைவுடன் வீடு வந்து சேர்ந்தோம்.
அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். அன்னை மனம் கொண்ட தாயுமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

என் அன்னையும் நானும்.
Image may contain: 2 people, including Gomathy Arasu

Image may contain: 2 people, indoor
கணவரின் அன்னை
காலபைரவர் திருக்கோவில்  முன்னால் கடை - பக்கவாசல் வழியாக உள்ளே போனால் பைரவர் கோவில்

கோவில் பக்கத்தில் அழகர் திருவிழா சமயம் கருப்பண்ணசாமி போல் வேடம் அணிந்து வருபவர்களுக்கு ஆடை அலங்காரப் பொருட்கள்.

பழைய சொக்கநாதர் கோவில்
தனியாகக் காளைவாகனத்தில் மீனாட்சி
கணவன் , மனைவி குழந்தைகளுடன் -தனியாக- சுவாமியுடன் சேர்ந்து என்று காட்சிகள்
மொட்டைக்கோபுரம் என்று நான் சொல்லும் ராயர் கோபுரம்
கலைவேலைப்பாடுகளைப் பார்க்க முடியாமல் அதன் அருகே கடைகள்

விற்பனைப் பொருட்கள் அடங்கிய மூட்டைகள்- கலைஅம்சம் பார்க்க முடியாது
மீனாட்சி அன்னையின் அன்னை கோவில்

வெண்கொற்றக் குடையின்கீழ்  மலையத்துவசபாண்டியன், காஞ்சனமாலை


கோபுர வாசல்

வெயிலுக்கு ஏற்ற நுங்கு, பதனி எல்லாம் வண்டியில் வியாபாரம் செய்கிறார்
பழைய சொக்கநாதர் கோவில் பக்கம்.
------------------------
வாழ்க வளமுடன்.
----------------------------------

41 கருத்துகள்:

  1. அழகிய காட்சிகளின் தரிசனம் விடயங்களையும் பகிர்ந்த விதம் அருமை.

    அன்னையர் தின வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    அன்னையர் தினத்தன்று அற்புத தரிசனம் கிடைக்கப் பெற்றீர்கள். உலகத்தை காத்தருளும் நம் அனைவருக்கும் தாயான அன்னை மீனாட்சியின் அன்னையை தரிசனம் செய்ய, அதுவும் அன்னையர் தினமான இன்று அவரை தரிசிக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல எங்களுக்கும் அந்த பாக்கியத்தை அருளியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி சகோதரி...

    சென்று வந்தவிடத்தின் படங்கள் அனைத்தும் அழகு. மொட்டை கோபுரம், மீனாட்சி அம்மனின் அன்னை கோவில் என நானும் பார்த்த நினைவு வருகிறது. ஆனால் சரியாக எப்போது பார்த்தோம் என்ற ஞாபகமும் வரவில்லை.

    தங்கள் தாயாரும், மாமியாரும், தாங்களும் எடுத்த புகைப்படங்கள் மிகவும் அழகாயிருந்தது. அன்னையர் களுக்கு எனது வணக்கங்கள். தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். பகிர்ந்த நினைவுகள், பார்த்தவிடங்கள் என பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. பழைய சொக்கநாதர் சிம்மக்கல் பக்கம் தளவாய் அக்ரகாரம் முடிவில் அல்லவா? அங்கிருந்து இந்த ராய கோபுரம், எழுகடல் தெருவில் அல்லவோ இருக்கு? இப்போ இதைத் தான் மொட்டை கோபுரம் என்கிறார்களா? நாங்கல்லாம் குழந்தையா இருந்தப்போ வடக்கு கோபுரத்தைத் தான் மொட்டை கோபுரம் என்பார்கள். அங்கே கோபுரத்தடியில் மொட்டை கோபுரத்தான் என்னும் கருப்பண்ணசாமி கோயில் இருக்கு அல்லவா? அதனால் அப்படிச் சொல்வார்கள். குழந்தைகளுக்கு மொட்டைகோபுரத்தான் கோயில் பூசாரி மந்திரித்து விபூதி கொடுப்பார். பூசுவார்கள். அழும் குழந்தைகள் முன்னெல்லாம் நிறைய வரும். காஞ்சனமாலை கோயில் எழுகடல் தெருவில் அம்மன் சந்நதி எல்லாம் தாண்டிச் செல்ல வேண்டும் இல்லையா? அன்னையர் தினத்தன்று அன்னையைச் சந்தித்த உங்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் மீதான் இங்கின இன்று 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ..

    அன்னையர்தின வாழ்த்துக்கள் கோமதி அக்கா.. வருகிறேன் மிகுதிக்கு..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கோவில் தரிசனங்கள் எழுதி மதுரை நினைவுகளைக் கிளறி விடுகிறீர்கள்! படங்கள் மூலம் தரிசனம் செய்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. மீனாட்சி அம்மனுக்கு அம்மாவா? அரச தம்பதியரா? நான் இதுவரையிலும் பார்த்ததே இல்லை. என் பெரியவன் சின்னவனாய் இருந்தபோது ரெகுலராக மொட்டை கோபுரத்தில் மந்திரித்த விபூதி தீருவதற்கு முன் வாங்கி விடுவோம்.

    பதிலளிநீக்கு
  8. நவகிரகங்கள் எல்லாம் மனைவிவிகளுடன் இருக்கிறார்களா? இத்தனை நாட்கள் இதை எல்லாம் பார்க்காமல் என்ன மதுரைவாசி நான்! பழைய சொக்கநாதர்கோவில் என்றால் யானைக்களுக்கும் சிம்மக்கல்லுக்கும் நடுவே இருக்கும் கோவிலா?

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
    அன்னையின் அன்னை கோவில் இன்று நினைக்காமல் கிடைத்த ஒன்றுதான்.
    என் கணவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இரண்டு நாளாய் முட்டி வலி, பல்வலி என்று இரவு தூங்கவில்லை. பல் டாகடர் ஒருவாரமாய் இருக்க மாட்டேன் ஊரில் இருக்கிறேன் என்றார்.

    கோவிலுக்கு போக முடியவில்லை என்று வருத்தபட்டுக் கொண்டு இருந்தேன். காலை நீ பைரவர் கோவில் போக வேண்டும் என்றாயே! இன்று போய் வருவோம் என்று அழைத்து சென்றார்கள்.

    அன்னையர்களுக்கு , வணக்கங்கள், வாழ்த்துக்கள் சொன்னதற்கும்
    மற்றும் அன்பான கருத்துக்கும் நன்றி கமலா.






    பதிலளிநீக்கு
  10. இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,,,/

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    நான் மதுரைக்கு புதுசு மாதிரிதான் கீதா.
    தளவாய் அக்ரகாரமாம என்பது தெரியாது தங்கையை கேட்டால் தெரியும்.
    ஸ்ரீராம் சொல்வது போல் சிம்மகல்தான்.
    நாங்கள் முன்பு பஸ்ஸில் வரும் போது சிம்மகல் பஸ் நிறுத்தம் இறங்கி நடந்து வருவோம்.
    பழைய சொக்கநாதர், ராயகோபுரம் பக்கம் உள்ள காலபைரவர் கோவில் பார்த்து பல ஆண்டுகள் ஆகி விட்டது என்று இன்று போனோம்.

    //மொட்டை கோபுரத்தான் என்னும் கருப்பண்ணசாமி கோயில் இருக்கு அல்லவா?//

    நீங்கள் சொல்வது போல் வடக்கு கோபுரம்தான் மொட்டை கோபுரம்.நான் எழுகடல் தெருவில் உள்ள ராய கோபுரத்தை மொட்டையாக இருப்பதால் மொட்டை கோபுரம் என்பேன் அதன் படியே இங்கு பதிவு செய்து விட்டேன்.

    நாங்களும் வளைகாப்பு சமயம் கருவளையில் கொண்டு வைத்து வேண்டி வருவோம் கருப்பண்ணசாமியிடம், அப்புறம் குழந்தையை தூக்கி கொண்டு போய் வருவோம்.
    குழந்தை அழுது கொண்டே இருந்தால் கருப்பண்ணசாமி விபூதியை தொட்டிலில் கட்டி விடுவோம்.

    //காஞ்சனமாலை கோயில் எழுகடல் தெருவில் அம்மன் சந்நதி எல்லாம் தாண்டிச் செல்ல வேண்டும் இல்லையா//

    ராயர் கோபுரவாசலை கடந்து உள்ளே போனால் பாதியில் வந்து விடுகிறது காஞ்சனமாலை அம்மன் கோவில்.

    உங்கள் விரிவான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.




    பதிலளிநீக்கு
  12. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    வாங்க மெதுவாய்.முதலில் வந்தது தேவகோட்டைஜி.
    உங்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    வாங்க மெதுவாய்.முதலில் வந்தது தேவகோட்டைஜி.
    உங்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    மதுரை நினைவுகள் வந்தது அறிந்து மகிழ்ச்சி.

    பூலகோத்தில் மலைத்துவசன், காஞ்சன்மாலை இருவரும் சிவபெருமானிடம் பல்லாண்டு காலமாக தவமிருந்து வரம் பெற்றனர்.

    நானும் இவ்வளவு வருஷமாய் பார்க்கவில்லை , அன்னையர் தினத்தில்தான் பார்க்கவேண்டும் என்று இருக்கிறது.

    அடுத்தமுறை போய் தான் அந்த கோவில் விவரங்கள் கேட்க வேண்டும் குருக்கள் காலை பூஜை வேலையாக இருக்கும் போது அவரை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று வந்து விட்டோம்.

    மொட்டை கோபுர சாமி முனீஸ்வரர் .(சிவன் அம்சம் முனீஸ்வரர்)
    அம்மன் சன்னதி பக்கம் உள்ள சாமி கருப்பண்ணசாமி , மதுரை வீரன்.

    //நவகிரகங்கள் எல்லாம் மனைவிவிகளுடன் இருக்கிறார்களா? இத்தனை நாட்கள் இதை எல்லாம் பார்க்காமல் என்ன மதுரைவாசி நான்! பழைய சொக்கநாதர்கோவில் என்றால் யானைக்களுக்கும் சிம்மக்கல்லுக்கும் நடுவே இருக்கும் கோவிலா?//

    நிறைய கோவில்களில் தேவியருடன் அவர்கள் வாகனங்களுடன் இருக்கும் நவகிரங்கள் ஸ்ரீராம். கேது மட்டும் கொஞ்சம் மாறுதல் , மதுரை வாசியாக இருந்தாலும் எல்லோரும் எல்லாம் போக முடியாது, அது இருக்கிறது எக்கசக்கமான கோயில்கள்,
    முடிந்தவரை பார்ப்போம்.

    சிம்மக்கல் அருகில் இருக்கும் கோவில்தான் பழைய சொக்கநாதர் கோவில்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  15. வணக்கம் blogge, வாழ்க வளமுடன்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. கோமதி அக்கா.. காத்திருந்து காத்திருந்து அம்மனைத் தரிசித்த விதம் அழகு.. கோயில் சென்றாலே மன நிம்மதி தானாக வந்து விடுகிறது.

    நீங்கள் குட்டிப் பெண்ணாக இருந்தபோது சுட்டிப்பெண்ணாகத் தெரிகிறீங்க.. வளர்ந்த பின் ரொம்ப அமைதி..

    இரு அம்மாக்களும் ரொம்ப அமைதியான சுபாவமாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  17. வைரவர் கோயில் அழகு.. ஆனா புனரமைக்கப்படாமல் இருக்கிறதோ? அங்குதான் அடிக்கொரு கோயில் இருக்கே. எதைத்தான் கவனிப்பார்கள்..

    சொக்கநாதர் ரோட்டோரம் இருக்கிறார், கோயில் உள் பக்கம் இருட்டாக இருக்கே.

    பதிலளிநீக்கு
  18. என்ன ஒரு அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஆனா அதுவும் தேடுவாரில்லாததுபோல இருக்கே.

    காஞ்சனமாலை என்பது ஒரு அம்மனோ? . நான் படித்த ரமணிச் சந்திரனின் ஒரு கதைப்புத்தகக் கதையிலே.. பெண்ணின் பெயர் “காஞ்சனமாலை” எனக்கு மிகப் பிடித்திருந்தது அது. வேப்பமர நிழலிலே அழகிய கோயில் எனக்கு இப்படியான இடங்கள்தான் அதிக நேரம் இருக்கப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  19. அனைத்தும் அழகிய படங்கள்.. வெயில் வந்துவிட்டமையால் நொங்கு சீசன் ஆரம்பமாகிவிட்டது போலும்.. போன தடவை இங்கு எங்கள் தமிழ்க்கடைக்கு வந்திருந்துது நொங்கு.. பழக்கமில்லையாதலால் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை.. நாம் சாப்பிட்டோம்.. அது கொஞ்சம் முத்தியிருந்தது.

    பதிலளிநீக்கு
  20. கோமதி அக்கா உங்கள் அம்மா இளமையில் இருபக்கமும் மூக்குத்தி போட்டிருக்கிறா.. பின்பு ஏன் போடவில்லை மற்றப் படத்தில்?..

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    காலை நேரம் வெயிலுக்கு முன் போக வேண்டும் என்று கூட்டி போனார்கள்.
    ஆனால் கோவிலில் சுவாமிகள் குளித்து ரெடியாகி அலங்காரம் பண்ணிதானே காட்சி அளிக்க வேண்டும்.

    காத்திருந்து தரிசனம் ஆச்சு.

    சுட்டிபெண்ணாக தெரிகிறதா? இப்போது அமைதியா?
    நன்றி நன்றி.
    அன்னையர் இருவரைப்பற்றி சரியாக சொன்னீர்கள் அதிரா. இருவரும் அமைதி, பொறுமை அந்தளவு நான் கிடையாது.

    மீண்டும் வந்து அன்பான கருத்து சொன்னதற்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  22. அதிரா,

    //என்ன ஒரு அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஆனா அதுவும் தேடுவாரில்லாததுபோல இருக்கே//

    ஞாயிறு என்பதால் கடைகள் இல்லை . சிற்ப வேலைப்பாடுகள் பார்க்க முடியாதபடி கடைகள் நிறைய இருக்கும்.
    காஞ்சனமாலை ராணி.மீனாட்சி அம்மனின் தாயார். காஞ்சனமாலை கடல் நீராட ஆசைபட்டதால் மீனாட்சி தன் கணவர் சோமசுந்தரத்திடம் சொல்ல அவர்" ஒரு கடல் என்ன ஏழுகடல்களையும் வரவழைத்து விடுவோம் என்று வரவழைத்தார். அங்கிருந்த வாவியில் பொங்கியது ஏழுகடலும்" இப்படி திருவிளையாடல் புராணம் சொல்கிறது.
    அவர் கணவரை இழந்து விட்டதால் எப்படி வாவியில் நீராடுவது என்று கவலை பட்டதால் மலயதுவசனை இந்திரலோகத்திலிருந்து வரவழைத்து இருவரும் சேர்ந்து நீராட வைத்து காஞ்சனமாலையும், மலையத்துவசனும் புண்ணிய தீர்த்தம் ஆடிக் கரையேறினர், சிவலோகத்திலிருந்து விமானம் வந்து இருவரையும் அழைத்து சென்று விட்டது. புராணம் சொல்கிறது.

    கோவிலில் சுதை சிற்பம் மட்டும் தான் இருக்கிறது.
    உள்ளே அம்மன் பெயர் தடாதகை , சுவாமி பேர் சோமசுந்தரர்.

    பதிலளிநீக்கு
  23. துளசி: படங்கள் அனைத்தும் ரொம்ப அழகாக இருக்கிறது. உலகநாயகியின் பெற்றோர்? இதுவரை அறிந்ததில்லை. மொட்டைக் கோபுரம்..எவ்வளவு வருஷம் ஆகிற்று பார்த்து....நான் எழுதியிருக்கும் புதினத்தில் மதுரைதான் களம். தங்களுக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். தாயுமானவராய் வாழும் தந்தையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

    கீதா: படங்கள் அனைத்தும் அழகு! அம்மைக்கே அம்மையா? புதிதாக உள்ளதே. அந்தப் படமும் அழகு. உங்கள் சிறு வயது ஃப்போட்டோவில் இப்ப இருக்கும் ஜாடைதான்...உங்கள் அம்மாவும் அழகு.. அக்கா அண்ணாவும் அண்ணாவின் அம்மாவும் ஒரே ஜாடை. அப்படியே. இரு அன்னையருடனும் புகைப்படம்..

    ஹை நுங்கு. நிறைய சாப்பிட்டு வருகிறோம் இங்கு. பிடிக்கும்...

    மொட்டை கோபுரத்தின் கலை நயம் ரொம்ப அழகாக இருக்கிறது. நுணுக்கமாய்...

    அன்னையர் தின வாழ்த்துகள் அனைத்து அன்னையருக்கும்!

    பதிலளிநீக்கு
  24. அதிரா, காஞ்சனமாலை கோவில் வேப்பமரம் குளர்ச்சிதான்.
    வெயில் காலம் வந்து விட்டதால் நுங்கு விற்கிறார்கள்.


    இளம் நுங்குதான் சாப்பிட வேண்டும் முத்தியது சாப்பிட்டால் வயிர்று வலி வரும் என்று அம்மா சொல்வார்கள். அதையும் வேஸ்ட் செய்ய மாட்டார்கள் முத்தலை வெயில் காலத்தில் மிக்ஸியில் போட்டு துருவி உடம்பு தேய்த்து குளிக்க சொல்வார்கள் வேர்குரு வராது.

    பதிலளிநீக்கு
  25. அதிரா, அப்பா இறந்தபின் மூக்குத்தி, வளையல் அணிவதை விட்டு விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.

    அன்னையின் அன்னை பற்றி படித்து இருக்கிறோம் , ஆனால் கோவில் பார்த்தது இல்லை, நானும் இதுதான் முதல் முறை.
    புதினம் மதுரைதான் களமா? வெளி வந்து விட்டதா புதினம் என்ன கதை?
    //தங்களுக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். தாயுமானவராய் வாழும் தந்தையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!//

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    வண்ககம் கீதா, வாழ்க வளமுடன்.

    //அம்மைக்கே அம்மையா? //

    உங்கள் வார்த்தையை கேட்கும் போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது. எங்கள் ஊர் பக்கம் அம்மாவை உன் அம்மை என்ன செய்யுறா? என்று பக்கத்து வீட்டு அம்மா கேட்பது இன்னும் நினைவு இருக்கிறது. இப்போது மம்மி, அம்மா என்று அழைக்கிறார்கள்.
    இரு அன்னையரை ரசித்தமைக்கு நன்றி.
    நுங்கு வாங்கவில்லை கோவில்களுக்கு போகும் போது தூக்கி போக வேண்டுமே என்று .எனக்கும் நுங்கு பிடிக்கும்.
    கோபுரத்தின் கலைநயம் அருமையாக இருக்கிறது.அடுத்த தடவை காமிரா எடுத்து போய் எடுக்க வேண்டும். இந்த படங்கள் அலைபேசியில் எடுத்த படம்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.







    பதிலளிநீக்கு
  27. விக்கிரமாதித்தன் கதையாக மதுரை ஆறு மாதம் அமெரிக்கா ஆறு மாதம் என என இங்கிருக்கிற சூழலில் மதுரை குறித்தான பதிவுகள் படிக்கையில் கூடுதல் சந்தோஷம் மிகக் குறிப்பாக உங்கள் பதிவுகள் வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    குழந்தைகளுடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அருமை அம்மா... இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. நல்ல வேளை நிறையக் கோவில்கள் இருக்கும் ஊரில் வசிக்கும் பாக்கியம்கிடைத்திருக்கிறதுவாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  33. சென்ற மாதம் மீனாக்ஷியம்மன் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தோம்...
    வழக்கம் போல அன்னையின் தரிசனம் ஆராஅமுது...

    ஆயினும் பயணத்திட்டம் நிறைய இருந்ததால் திருக்கோயிலுக்குள்
    அதிக நேரம் இருக்க முடியவில்லை...

    தங்கள் தயவால்
    அன்னையின் அன்னையைத் தரிசனம் கண்டோம்...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார் , வாழ்க வளமுடன்.
    நிறைய கோவில் இருக்கும் ஊரில் இருப்பது பாக்கியம் தான்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்கவளமுடன்.
    போனமாதம் மதுரை வந்தீர்களா? அடுத்த முறை வந்தால் சொல்லுங்கள்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  36. மிக அழகிய படங்களுடன்...

    நாங்களும் தரிசனம் பெற்றோம்..அம்மா..


    பதிலளிநீக்கு
  37. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. புகைப்படங்களோடு விவரங்களும் நன்று! உங்கள் பதிவுகளில் புகைப்படங்கள் மிகவும் தெளிவாக இருக்கும். காமிராவா? செல்ஃ போனா?

    பதிலளிநீக்கு
  39. புகைப்படங்களோடு விவரங்களும் நன்று! உங்கள் பதிவுகளில் புகைப்படங்கள் மிகவும் தெளிவாக இருக்கும். காமிராவா? செல்ஃ போனா?

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
    செல் ஃபோனில் எடுத்த படங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு