சனி, 24 மார்ச், 2018

அம்பா! நீ இரங்காய் எனில் !

Image may contain: outdoor
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில்

போன மாதம்  சீர்காழிக்கு போய் இருந்தோம். சீர்காழியில் மேலவீதியில் உள்ள புற்றடி மாரியம்மன்  கோவிலுக்குப் போனோம்.  பல வருடங்கள் ஆகி விட்டது அம்மனைப் பார்த்து. மாயவரத்தில் இருக்கும்போது அம்மனைப் பார்த்தது. கோவில் பூசாரி வெகு அழகாய் அலங்காரம் செய்து இருந்தார். போட்டோ எடுக்க அனுமதி இல்லை.  

அம்மன் முன் புறத்தில் சிறிய புற்று இருக்கிறது. அதற்கு அருகில் உற்சவ அம்மன் கொலுவீற்று இருக்கிறார்.

சீர்காழி பெரிய கோவில் அருகில் இருக்கிறது. அங்கு வரும் கூட்டத்தை விட இந்த அம்மனுக்கு கூட்டம்  அதிகம்.  அதிகமாய் வருபவர்கள் கிராமத்து மக்கள்.

                                       
                                அம்மன் திருவீதி உலா போக காளை வாகனம்
                                          
அம்மன் சன்னதிக்கு பின்புறம் தேர் வடிவ 
அழகான படிகளுடன்  சன்னதியில்  ஐயப்பன் 


அம்மனுக்குச்சார்த்தும் புடவைகள் அலங்கார திரைசீலைகளாகாய்  மேல் விதானத்தை அலங்கரிக்கிறது.

அம்மன் சன்னதி சுற்றுச் சுவரில் அழகிய ஓவியங்கள்

பூஜை செய்து பிரசாதம் கொடுத்தார் பூசாரி. சுற்றி வந்து மாரியம்மனை வணங்கிய பின் பிரகாரத்தில் அமர்ந்து அம்மனைத் தியானித்து எழும் போது ஒரு பக்தர், சிறிய வயது தான் அம்மன் கோயில் வாசலில் நின்று கொண்டே அம்மனிடம் பேசிக் கொண்டு இருந்தார் உடனே சிறிது நேரம் அவரை கவனித்தேன். வாய் மட்டும் அசையுது, சத்தம் வெளிவரவில்லை. கண்கள் பேசுது  அவர் வெகு நேரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தார். அவர் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருப்பார் அம்மன்.

என் மனதில்  தோன்றிய அவர் கேட்ட கேள்விகள்:-


சிலரை உயர்த்தியும், சிலரை தாழ்த்தியும் வைப்பது நியாயமா அம்மா?

.நீ என்னை இப்படி வைத்து இருப்பது உனக்கு நல்லா இருக்கா?
நான் ஏன் பிறந்தேன்? என் பிறப்புக்கு அர்த்தம் என்ன ?

என்று கண்ணைத் திறந்து நேருக்கு நேர் பார்த்து கேள்வி கேட்கும் பக்தர்., 


கண்ணை கையால் மூடி மனதுக்குள் புலம்பும் பக்தர்.

தாய் இரங்காயெனில்  சேய் உயிர் வாழுமோ! 
 சகல உயிர்களுக்கும் தாய்  , மாரி போல் கருணை மழை பொழிவாள்.
அம்மா அருள் புரிவாய்  என்று  நானும் வேண்டிக் கொண்டேன்.

                                  Image result for சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில்
அம்மன் சன்னதியில் படம் எடுக்க அனுமதி இல்லை அதனால் இணையத்தில் இருந்து படம்.
                                     Image result for சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில்
                                               தை மாதம் நடக்கும் தேர்திருவிழா

                                      Image result for சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில்
                                                    தீமிதி உத்ஸவம் - அம்மன் அலங்காரம்.

மாரி மனது வைத்தால் மழை பொழியும் என்பார்கள். தண்ணீர் கஷ்டம் தீர நல்ல போதுமான மழையைக் கொடுக்க வேண்டும் மாரியம்மன்.

                                                                               வாழ்க வளமுடன்.

47 கருத்துகள்:

  1. பக்தரின் வேண்டுதல் நிறைவேறட்டும்.
    அனைத்து உயிர்களுக்கும் இறையே துணை.

    மாரியம்மன் கோவில்களில் தற்போது நிகழ்ந்து வரும் கச்சேரிகளில் மிகவும் ஆபாசமாக ஆடுவது வருந்தத்தக்க செயல் மாரி பொழிய வேண்டி அம்மனுக்கு விழா நடத்துபவர்கள் அவள் வாசலிலேயே இந்த கூத்துகளை நடத்துவது மரபானதா ?

    பதிலளிநீக்கு
  2. பக்தரின் படங்கள் மனதை உருக்கியது. அவர் குரலுக்குச் செவி சாய்க்காமல் இருந்துவிடுவாளா பராசக்தி.... அவருக்கு நல்லது நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் சிறப்பு. ப்க்தரின் கேள்விகள் உங்கள் கற்பனையில்..... நல்ல கேள்விகள். அவருக்கு அன்னையின் பதில்கள் கிடைத்திருக்கும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    //பக்தரின் வேண்டுதல் நிறைவேறட்டும்.
    அனைத்து உயிர்களுக்கும் இறையே துணை//

    உங்கள் வேண்டுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
    அனைத்து உயிர்களுக்கும் இறைதான் துணை.
    மாயவரத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் அருமையான
    கர்நாடக இசை கச்சேரிதான் கேட்டு இருக்கிறேன்.

    சில கோவில்களில் நீங்கள் சொல்வது போல் நடக்கிறது போல

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம், சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் நல்லதே நடக்கட்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அன்பு கோமதி. அம்மன் கட்டாயம் செவி சாய்ப்பாள். நமக்கே அவரைப் பார்த்தால் மனம் உருகுகிறதே.
    அவள் லோக மாதா.
    உங்கள் பதிவு மூலம் எங்களுக்கும் அருளுகிறாள்.
    என்றும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

    //பக்தரின் படங்கள் மனதை உருக்கியது. அவர் குரலுக்குச் செவி சாய்க்காமல் இருந்துவிடுவாளா பராசக்தி.... அவருக்கு நல்லது நடக்கட்டும்.//

    என் கணவர் என்னை கோவிலில் இருக்க சொல்லி விட்டு ஒரு வேலையாக வெளியில் போனார்கள், (அவர்கள் வரும் வரை) அதனால் கோவிலில் அமர்ந்து பக்தர் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

    நீங்கள் சொல்வது போல் பக்தரின் குரலுக்கு செவி சாய்த்து அவருக்கு நல்லது செய்ய வேண்டும் பராசக்தி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.

    //படங்கள் சிறப்பு. ப்க்தரின் கேள்விகள் உங்கள் கற்பனையில்..... நல்ல கேள்விகள். அவருக்கு அன்னையின் பதில்கள் கிடைத்திருக்கும் என நம்புவோம்.//

    நீங்கள் சொல்வது போல் அன்னையின் பதில்கள் அவருக்கு கிடைத்து இருக்கும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.

    //அன்பு கோமதி. அம்மன் கட்டாயம் செவி சாய்ப்பாள். நமக்கே அவரைப் பார்த்தால் மனம் உருகுகிறதே.
    அவள் லோக மாதா. //

    ஆமாம் அக்கா, லோக மாதா மனம் உருகி அருள்வாள்.

    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. திருச்செந்தூரில் முருகனிடம்கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த பக்தரைக் கண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நலமா?
    நானும் நிறைய கோவில்களில் இப்படி கடவுளிடம் பேசும் பக்தர்களை கண்டு இருக்கிறேன்.
    இவர் சிறு வயது, கோவிலுக்குள் வரவில்லை வாசலில் இருந்து பேசினார். கையிலும் அலைபேசி இருந்தது, எடுத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  13. ஒரு பக்தர், சிறிய வயது தான் அம்மன் கோயில் வாசலில் நின்று கொண்டே அம்மனிடம் பேசிக் கொண்டு இருந்தார் உடனே சிறிது நேரம் அவரை கவனித்தேன். வாய் மட்டும் அசையுது, சத்தம் வெளிவரவில்லை. கண்கள் பேசுது அவர் வெகு நேரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தார். அவர் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருப்பார் அம்மன்.//

    அட!! உங்கள் கேள்விகள் அனைத்தும் நம் மனதில் எழுவதுதானோ?!! அம்மன் பதில் சொல்லியிருப்பார்....வகைவகையான பக்தர்கள்.

    அம்பா நீ இரங்காய் எனில் புகல் ஏது என்ற பாடல்....நினைவுக்கு வந்தது உங்கள் தலைப்பு அருமை!!!! அருமை!!அவர் கேள்விகளுக்கு அம்மா என்ன பதில்சொல்லியிருப்பார்!!??

    படங்கள் அருமை அக்கா...உங்கள் விவரணமும் ...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அம்மன் தரிசனத்துக்கு நன்றி.

    அவர் வாய் பேச முடியாதவரோ? அவர் அபிநயங்களுக்கு நீங்கள் வசனம் எழுதி விட்டீர்கள் - பொருத்தமாக. மக்களுக்குத்தான் தங்கள் கவலையை இறக்கி வைத்து ஆறுதல் தேட ஒரு இடம் கிடைக்காவிட்டால் என்ன ஆவார்கள்? ஸ்ட்ரெஸ் ரிலீவர்கள் கடவுளும், கோவிலும்.

    பதிலளிநீக்கு
  15. அம்மன் சன்னதிக்கு பின்புறம் தேர் வடிவ அழகான படிகளுடன் சன்னதியில் // அந்தப் படம் ரொம்ப அழகு அக்கா....

    // சிலரை உயர்த்தியும், சிலரை தாழ்த்தியும் வைப்பது நியாயமா அம்மா? // அதானே !! ஆனால் அதற்கு பதில் கர்ம வினை என்று வந்துவிடும்...எனக்குப் புரிந்தாலும் புரிவதில்லை பல சமயங்க்ளில் ஆனால் நம்மைத் தேற்றிக் கொண்டு போக அது ஒன்றுதான் வழி!இறைவன் மீது முழு நம்பிக்கையுடன்...!இல்லை என்றால் மனம் பித்துப் பிடிக்கும்..

    //நீ என்னை இப்படி வைத்து இருப்பது உனக்கு நல்லா இருக்கா?//

    அம்மன் சொல்லுவார்...நான் உன்னை நன்றாகத்தான் வைத்திருக்கேன்...உனக்குத்தான் அது புரிவதில்லை...மனதில் திருப்தி வேண்டும்..மனதைப் பழக்கு!! என்றிருப்பாரோ?!!!

    //நான் ஏன் பிறந்தேன்..என் பிறப்பிற்கு என்ன அர்த்தம்//

    ஒவ்வொரு பிறப்பிற்கும் காரணம் உண்டு..அர்த்தம்,.காரனம் இல்லாமல் எந்தப் பிறப்பும் இல்லை நிகழ்வும் இல்லை...நான் ஏன் பிறந்தேன் என்று கேட்பதைவிட காரணம் என்ன என்பதைவிட இருக்கும் காலத்தில் என்ன நல்லது செய்யலாம் என்று சிந்தி! என்னை சரணடைந்துவிடு..நான் உன்னை அரவணைப்பேன்...வழி நடத்துவேன்.உன் பாதையில் நீ பயணிப்பாய்!!

    என்று சொல்லியிருப்பாரோ அம்மன்?!!! அவள் இல்லையேல் இவ்வுலகம் இயங்கிடுமோ!!! முழு நம்பிக்கை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    //அட!! உங்கள் கேள்விகள் அனைத்தும் நம் மனதில் எழுவதுதானோ?!! அம்மன் பதில் சொல்லியிருப்பார்....வகைவகையான பக்தர்கள்.//

    நம் மனதில் எழுவதுதான் கீதா.

    ஒரு பாடலில் வருமே ! நல்லவர் தாழவும், தீயவர் வாழ்வதும் செய்வது ஏனோ? இது தர்மம் தானோ? , நீயே கதி ஈஸ்வரி எனற பாடலில் வரும்.

    //அம்பா நீ இரங்காய் எனில் புகல் ஏது என்ற பாடல்....நினைவுக்கு வந்தது உங்கள் தலைப்பு அருமை!!!! அருமை!!அவர் கேள்விகளுக்கு அம்மா என்ன பதில்சொல்லியிருப்பார்!!??//

    அந்த பாடல் பிடித்த பாடல் அதுதான் இந்த தலைப்பு.
    கேள்விக்கு என்ன பதில் சொல்லி இருப்பார் ? நீங்கள் சொல்லுங்கள்.
    நல்ல பதில் கொடுத்து அவரை காக்க வேண்டும் அன்னை.

    உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.





    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கீதா , வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்லுங்கள் அம்மாள் என்ன சொல்லி இருப்பாள் என்று இப்போதுதான் டைப் செய்தேன்.

    அதற்குள் அன்னை சொல்லவைத்து விட்டார் உங்களை.

    மூன்று கேள்விகளுக்கு மூன்று முத்தான பதில்கள்.

    //என்னை சரணடைந்துவிடு..நான் உன்னை அரவணைப்பேன்...வழி நடத்துவேன்.உன் பாதையில் நீ பயணிப்பாய்!!

    என்று சொல்லியிருப்பாரோ அம்மன்?!!! அவள் இல்லையேல் இவ்வுலகம் இயங்கிடுமோ!!! முழு நம்பிக்கை!!!//

    இதுதான் நிறைவு கீதா. இறைவனிடம் சரணடைந்து விட்டால் துன்பம் ஏது? அவள் பார்த்துக் கொள்வாள் என்றால் துயரம் ஏது?

    கிராமத்தில் மரம் வைத்தவன் த்ண்ணீர் ஊற்றுவான் என்ற மாறத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.
    காலை எழும் போது கடவுளை நினைப்பார்கள், அப்புறம் கடமை, இரவு படுக்கும் போது கடவுளை நினைப்பார்கள்.
    அவ்வளவுதான் நிம்மதியான தூக்கம்.

    மீண்டும் வந்து அருமையான கருத்தை சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    அவர் வாய் பேச முடியாதவரோ? //

    நான் தூரத்திலிருந்து அவரை படம் எடுத்தேன்.
    அவர் வாய் அசைவது மட்டும் தெரிந்தது. பேச்சு கேட்கவில்லை.
    கோயிலில் இசைதட்டு போட்டு இருந்தார்கள். மதியம் உச்சிக்கால வேளை அபிஷேகத்திற்கு ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது.

    //மக்களுக்குத்தான் தங்கள் கவலையை இறக்கி வைத்து ஆறுதல் தேட ஒரு இடம் கிடைக்காவிட்டால் என்ன ஆவார்கள்? ஸ்ட்ரெஸ் ரிலீவர்கள் கடவுளும், கோவிலும்.//

    நன்றாக சொன்னீர்கள் ஸ்ரீராம்.

    மக்களுக்கு தங்கள் கவலையை இறக்கி வைக்க ஆறுதல் தேட இறைவனை விட நம்பிக்கையான ஒருவர் கிடையாது.

    அந்த பக்தர் அபிராமி பட்டர் போல் சித்தம் முழுவதும் அம்மன் மேல் வைத்தவரோ! என்று நினைக்கிறேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.






    பதிலளிநீக்கு
  19. பக்தர்களுக்குத்தான் முதல் இடம் இறைவன் திருவுளத்தில். இறைவனை மனமாற வேண்டிடும் பக்தருக்கு அவன் அருள் நிச்சயம் கிட்டும். சீர்காழி தலம் பற்றி படித்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் கே. பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.

    //பக்தர்களுக்குத்தான் முதல் இடம் இறைவன் திருவுளத்தில். இறைவனை மனமாற வேண்டிடும் பக்தருக்கு அவன் அருள் நிச்சயம் கிட்டும். //

    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    நம்பி வணங்கும் பக்தர்களுக்கு அவள் அருள் நிச்சயம் கிட்டும் .
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அழகிய தலைப்புடன் இனிய தரிசனம்...அம்மா


    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  22. படங்களும் தகவல்களும் பதிவுக்கு சிறப்பு சேர்க்கின்றன. பெரும்பாலும் சன்னதியை ஒளிப்படம் எடுக்க அனுமதி இருப்பதில்லை. ஆனால் யாரோ எடுத்தது இணையத்தில் இருக்கவே செய்கின்றது. மாரியம்மன் அருளால் மழை பொழியட்டுமாக!

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  23. 'அம்பா நீ இரங்காய் எனில்..' பாபநாசம் சிவனின் நெஞ்சைப் பிளக்கும் கீர்த்தனை.
    'தாயிரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ?'-- இந்தக் கேள்விக்குப் பிறகு ஒன்றுமேயில்லை.
    இந்தப் பாடலை யார் எந்த நேரத்தில் பாடினாலும் மனம் உருகி விடும்.

    நீங்கள் கோயிலில் பார்க்க நேரிட்ட அந்தக் காட்சியே உங்கள் உள்ளத்தில் என்னவெல்லாம் கேள்விகளை விளைத்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

    பாரதியார் கூட இப்படி ஆயிரமாயிரம் கோரிக்கைகளில் பராசக்தியிடம் அருள் வேண்டி யாசித்திருக்கிறார். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறாத பொழுதும் ஆண்டவனிடம் மீக்கூறும் பக்தி-- ஞானவான்களுக்கே சாத்தியப்படும்.

    வேறென்ன சொல்வது?..


    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    //அம்பா நீ இரங்காய் எனில்..' பாபநாசம் சிவனின் நெஞ்சைப் பிளக்கும் கீர்த்தனை.
    'தாயிரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ?'-- இந்தக் கேள்விக்குப் பிறகு ஒன்றுமேயில்லை.
    இந்தப் பாடலை யார் எந்த நேரத்தில் பாடினாலும் மனம் உருகி விடும்.//

    ஆமாம் சார், எப்போது இந்த பாடலை கேட்டாலும், யார் பாடினாலும் மனம் உருகிதான் போகிறது.

    //நீங்கள் கோயிலில் பார்க்க நேரிட்ட அந்தக் காட்சியே உங்கள் உள்ளத்தில் என்னவெல்லாம் கேள்விகளை விளைத்திருக்கும் என்பதை உணர முடிகிறது//

    ஆமாம் சார், யார் பெற்ற பிள்ளையோ? இளம் வயதில் இப்படி இருக்கிறானே ? ஏன் இப்படி ஆனார்? எதனால்? அவர் அப்பா, அம்மா இருந்தால் எவ்வளவு மனம் கஷ்டபடுவார்கள் பிள்ளை இப்படி இருப்பதைப் பார்த்து என்று.
    ஏகப்பட்ட கேள்விகள் மனதில் தோன்றியதுதான்.
    அம்மனிடமும் ஏனம்மா இப்படி என்று கேட்கத்தான் செய்தேன்.


    //பாரதியார் கூட இப்படி ஆயிரமாயிரம் கோரிக்கைகளில் பராசக்தியிடம் அருள் வேண்டி யாசித்திருக்கிறார். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறாத பொழுதும் ஆண்டவனிடம் மீக்கூறும் பக்தி-- ஞானவான்களுக்கே சாத்தியப்படும். //

    ஆமாம் சார், கஷ்டங்கள் தந்தாலும், இன்பங்கள் தந்தாலும் சமமாய் பாவிக்கும் தன்மை ஞானவாங்களுக்கே சாத்தியம்.

    உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி சார்.




    பதிலளிநீக்கு
  25. அந்த பக்தருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது ஏதோ நாமே செய்வதுபோலுள்ளது. பட்டீஸ்வரம் துர்க்கைம்மன் கோயிலுக்கு அடிக்கடிப் போவதுவழக்கம். அப்போது நானே அம்பாளிடம் மனதிற்குள் பேசுவது போல உணர்வு இருக்கும். அத்தகைய உணர்வு வெளிப்பாட்டை இவர் மூலமாக அறிந்தேன். உண்மையில் நம் மனதின் சுமைகள் இதுபோல காலத்தில் குறையும் என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    //பெரும்பாலும் சன்னதியை ஒளிப்படம் எடுக்க அனுமதி இருப்பதில்லை. ஆனால் யாரோ எடுத்தது இணையத்தில் இருக்கவே செய்கின்றது. மாரியம்மன் அருளால் மழை பொழியட்டுமாக!//


    ஆமாம் ராமலக்ஷ்மி, பத்திரிக்கைகாரர்கள் எடுத்த படங்கள் இணையத்தில் இருந்தது.

    மாரியம்மன் அருளால் மழை பொழிய வேண்டும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.

    //உண்மையில் நம் மனதின் சுமைகள் இதுபோல காலத்தில் குறையும் என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.//

    நீங்கள் சொல்வது சரிதான் ஐயா, நாமும் இப்படித்தான் அம்மனிடம் பேசுவோம். மனதோடு பேசுவோம். மனதின் சுமைகள் குறைவது உண்மைதான்.

    உங்கள் அனுபவ கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. //புற்றடி மாரியம்மன்//

    பெயரே அழகாக இருக்கே.. அப்போ அம்மன் எவ்ளோ அழகாக இருப்பா.. இந்தப் பெயருக்குக் காரணம், ஆதி காலத்தில் புற்று இருந்திருக்குமோ.. அருகில் அம்மனைக் கட்டியிருப்பார்களோ. அந்த நந்தி ஒரு வித்தியாசமாக இருக்கே.. அலுமிய பெயின் அடிச்சிருப்பினமோ.. ஒரு வித சைனிங் ஆக இருக்கு.. வாகனத்தைச் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    ஆதிகாலத்தில் மட்டும் அல்ல இப்போதும் புற்று இருக்கிறது. அம்மனுக்கு முன் சிறிய புற்று இருக்கு என்று எழுதி இருக்கிறேன். நந்தி வாகனத்திற்கு
    அலுமினிய பெயிண்ட் தான். அடித்து இருக்கிறார்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. பாதியில விட்டிட்டு ஒடிட்டேன் கோமதி அக்கா:).. இப்போதான் திரும்ப வந்தேன்..

    //அம்மன் சன்னதிக்கு பின்புறம் தேர் வடிவ
    அழகான படிகளுடன் சன்னதியில் ஐயப்பன் ///

    மிக அழகாக இருக்கு.. சபரிமலையை நினைவுபடுத்தவோ படிக்கட்டுக்கள் கட்டியிருக்கினம்..

    பதிலளிநீக்கு
  31. உள்வீதி சின்னதாக இருக்கு, ஓவியங்கள் மிக அழகு.

    //அம்மனுக்குச்சார்த்தும் புடவைகள் அலங்கார திரைசீலைகளாகாய் //

    ஓ அம்மனுக்கும் சாத்தும் சேலைகளையோ இப்பூடி செய்வார்கள்? நானும் சில கோயில்களில் இப்படிப் பார்த்திருக்கிறேன்.. நல்ல ஐடியா.. அதுவும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  32. //கண்கள் பேசுது அவர் வெகு நேரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தார். அவர் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருப்பார் அம்மன்.//

    என்ன பண்ணுவது.. அம்மனும் எவ்வளவு பேருக்குத்தான் பதில் கொடுப்பா.. நம் மன நிம்மதிக்காக வேண்டுகிறோம் கும்பிடுகிறோம் மற்றும்படி அனைத்தும் நம் தலைவிதிப்படியேதான் நடக்கிறது...

    அவரைப் பார்த்தால் மிகவும் மனதளவில் பாதிக்கப் பட்டிருப்பார் எனத் தோணுது... கடவுள் கண்ணுக்கு இதெல்லாம் தெரியுமோ என்னவோ.. வேதனைதான்.

    பதிலளிநீக்கு
  33. இருப்பினும் கோமதி அக்காவை சைபர் கிரைம் ஆட்கள் தேடிக் கொண்டிருகினமாம்:).. தூணுக்குப் பின் மறைந்திருந்து அந்தப் பக்தரை ரகசியமாகப் படமெடுட்த்ஹுப் போட்டமைக்கு:)).. நீங்க எதுக்கும் ஸ்கொட்லாந்துக்கு ஓடி வந்திடுங்கோ மீ காப்பாத்துறேன்.. நம்புங்கோ கோமதி அக்கா:)).. ஹா ஹா ஹா..

    அம்மன் அழகான தேரில் வீதி உலா வருகிறா...

    பதிலளிநீக்கு
  34. //பாதியில விட்டிட்டு ஒடிட்டேன் கோமதி அக்கா:).. இப்போதான் திரும்ப வந்தேன்..

    //அம்மன் சன்னதிக்கு பின்புறம் தேர் வடிவ
    அழகான படிகளுடன் சன்னதியில் ஐயப்பன் ///

    மிக அழகாக இருக்கு.. சபரிமலையை நினைவுபடுத்தவோ படிக்கட்டுக்கள் கட்டியிருக்கினம்.//
    ஆமாம் அதிரா, நானும் நினைத்தேன், பின்பு ஏதோ வேலை போலும் அதுதான் இன்னும் வரவில்லை என்று புரிந்து கொண்டேன்.

    ஆமாம் அதிரா, சபரிமலைக்கு இருமுடி கட்டுபவர்கள் கோயிலில் வைத்துக் க்ட்டுவார்கள் அவர்களை மகிழ்வு படுத்த இந்த படி அமைப்பு.நிறைய கோயிலில் இருக்கும் இது மாதிரி.

    பதிலளிநீக்கு
  35. உள்வீதி சின்னதாக இருக்கு, ஓவியங்கள் மிக அழகு.

    //அம்மனுக்குச்சார்த்தும் புடவைகள் அலங்கார திரைசீலைகளாகாய் //

    ஓ அம்மனுக்கும் சாத்தும் சேலைகளையோ இப்பூடி செய்வார்கள்? நானும் சில கோயில்களில் இப்படிப் பார்த்திருக்கிறேன்.. நல்ல ஐடியா.. அதுவும் மிக அழகு.//

    நெருக்கடியான இடத்தில் இருக்கிறது இந்த கோவில். இருக்கும் இடத்தில் கோயில் கட்டி இருப்பதால் உள்வீதி சின்னது தான்.
    ஓவியங்கள் அழகாய் வரைந்து இருப்பதை நீங்களும் ரசித்தமைக்கு நன்றி.

    முன்பு கோயிலில் சாமிகளுக்கு கொஞ்சம் துணிகள் தான் இருக்கும், துவைத்து தினம் மாற்றுவார்கள். இப்போது பக்தர்கள் நிறைய செய்கிறார்கள், தினம் புது ஆடைகள்தான் துவைத்து காயவைப்பதை எங்கும் பார்க்கமுடியவில்லை.

    மிகுதியாக இருப்பதை இப்படி கோவிலை அலங்கரிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  36. //கண்கள் பேசுது அவர் வெகு நேரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தார். அவர் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருப்பார் அம்மன்.//

    என்ன பண்ணுவது.. அம்மனும் எவ்வளவு பேருக்குத்தான் பதில் கொடுப்பா.. நம் மன நிம்மதிக்காக வேண்டுகிறோம் கும்பிடுகிறோம் மற்றும்படி அனைத்தும் நம் தலைவிதிப்படியேதான் நடக்கிறது...

    அவரைப் பார்த்தால் மிகவும் மனதளவில் பாதிக்கப் பட்டிருப்பார் எனத் தோணுது... கடவுள் கண்ணுக்கு இதெல்லாம் தெரியுமோ என்னவோ.. வேதனைதான்.//

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
    எல்லாம் முன்பே முடிவு செய்யபட்டது நம் விதி.

    மனதளவில் பாதிக்கப்பட்டவர் போல் தான் காணபட்டார்.
    அதுதான் வேதனை.
    கடவுள் கண்ணுக்கு எதுவும் தப்பாது. காலம் நேரம் வரும் வரை பக்தர் இப்படி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  37. //இருப்பினும் கோமதி அக்காவை சைபர் கிரைம் ஆட்கள் தேடிக் கொண்டிருகினமாம்:).. தூணுக்குப் பின் மறைந்திருந்து அந்தப் பக்தரை ரகசியமாகப் படமெடுட்த்ஹுப் போட்டமைக்கு:)).. நீங்க எதுக்கும் ஸ்கொட்லாந்துக்கு ஓடி வந்திடுங்கோ மீ காப்பாத்துறேன்.. நம்புங்கோ கோமதி அக்கா:)).. ஹா ஹா ஹா..

    அம்மன் அழகான தேரில் வீதி உலா வருகிறா.//

    அன்பு தங்கை அதிரா இருக்கும் போது கவலை ஏன்?
    இப்படி ஒருவருக்கு தெரியாமல் எடுப்பது தப்பு தான்.
    அவர் இப்படி சிறு வயதில் (வாழவேண்டிய வயதில்) இருப்பது மனம் வேதனை பட்டதால் எடுத்தேன்.

    உங்கள் அன்பான பின்னூட்டங்க்களுக்கு மிகவும் நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் சகோதரி

    அழகான தலைப்புடன் அழகான அம்மன் கோவில் சிறப்புகள் கூறும் பதிவு மிகவும் ரசித்துப் படித்தேன்.

    கோவிலின் பிரகார படங்களும், தேரும்,மிகவும் அழகாக இருந்தன அனைத்தையும் மிக விளக்கமாகக் கூறிய தங்கள் பதிவின் மூலம் அம்மன் தரிசனம் நானும் சிறப்பாக செய்ய முடிந்தது மிக்க நன்றி.

    பக்தரின் மெளன பிரார்த்தனைகளை தங்கள் கேள்விகளாக மாற்றி அவருக்காக நீங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தது மிகவும் பாராட்டுக்குரியது

    அனைவருக்கும் தாய்தான் நல்லதை தந்து அருள வேண்டும் நானும் தாயை மனமுருகி வேண்டி பிரார்த்திக்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  39. கோவில் விபரம் அருமை. எல்லார் வேண்டுதலையும் அவள் நிறைவேற்றி வைப்பாள்.

    பதிலளிநீக்கு
  40. வணகம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

    பதிவை ரசித்து படித்தமை அறிந்து மகிழ்ச்சி.

    //அனைவருக்கும் தாய்தான் நல்லதை தந்து அருள வேண்டும் நானும் தாயை மனமுருகி வேண்டி பிரார்த்திக்கிறேன்//

    ஆமாம் , நீங்கள் சொல்வது போல் அனைவருக்கும் தாய் நல்லதை அருள வேன்டும்.
    தங்கள் பிராத்தனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.

    //எல்லார் வேண்டுதலையும் அவள் நிறைவேற்றி வைப்பாள்.//

    தங்கள் வருகைக்கும் வேண்டுதலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் நண்பரே.. !

    உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும்.

    தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின்
    எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    பதிலளிநீக்கு
  43. பக்தர்களின் வேண்டுகோள்கள் பலிக்கட்டும். இந்தக்கோயில் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லை. நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் Gossip Tamil உங்கள் வருகைக்கும், அழைப்புக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    சீர்காழி பெரிய கோவில் பக்கம் இருக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு