வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

சித்தன்னவாசல்



அண்மையில் 'கழுகுமலை' பதிவு போட்ட போது- சமணர் படுக்கை பற்றி குறிப்பிட்டு எழுதிய போது,  அந்த பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்த G.M. பாலசுப்பிரமணியம் சார்,

 //புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல் படுக்கைகளுடனும் சிற்பங்களுடனும் ஒரு இடம் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவுக்கு வரவில்லை. வாழ்த்துக்கள் // 

என்று  சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நான் ”அந்த ஊர் பெயர் சித்தன்னவாசல் , அங்கு மகள் மருமகனுடன் சென்று வந்தோம், அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்”  என்று பதில் அளித்தேன். சாரால் மற்றொரு பதிவு போட வாய்ப்பு கிடைத்து விட்டது.

 தங்கை மகள்  புதுக்கோட்டையில் இருக்கிறாள்,  அவளுடைய குடும்பத்துடன் ஒருமுறை நான் மட்டும் சித்தன்னவாசலுக்கு சென்று இருக்கிறேன்,  மிகவும் அருமையான இடம்.  அப்போது நினைத்துக் கொண்டேன்,  மறுபடியும் குடும்பத்துடன் வர வேண்டும் என்று. போன ஜுனில் விடுமுறைக்கு வந்த  மகள், மருமகன் , பேத்தி, பேரனுடன் நாங்கள் காரில்  சித்தன்னவாசல் சென்றுவந்தோம்.







புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து   அன்னவாசல் செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் அருகில் சித்தன்னவாசல் உள்ளது.


சமணர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைதியான சூழல்களில் தங்கள் இருப்பிடத்தை வைத்திருந்திருக்கிறார்கள்







 இங்குள்ள மலை மீது சமணர்களின் படுக்கைகளும்,  குடைவரை ஓவியம் வரையப்பட்ட  இடங்களும் உள்ளன.  ஏழடி பாட்டம் என்ற இடத்தில் இயற்கையாக அமைந்த குகையில் 17 கல் சமணர் படுக்கைகள் உள்ளன. இப்படுக்கைகளில்  வழுவழுப்பாய் தலையணை போல உள்ளன





கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி கல்வெட்டு இங்கு காணப்படுகிறது.  குடவரை ஓவியங்கள் மூலிகையால் தயார் செய்யப்பட்ட வண்ணங்களால் வரையப்பட்டது. இப்போது  கொஞ்சம் அழிந்து விட்டது. அங்கு முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் வண்ண ஓவியங்களில் தாமரைக் குளத்தில் மலர் பறிக்கும் துறவிகள்,   விலங்குகள் , அன்னம், மீன்கள் ,  அல்லி மலர்கள் எல்லாம் அழகாய் வரையப்பட்டு இருந்தது.  தூண்களின் மேல் புறம் ராஜா, ராணி  நடன் மங்கை ஓவியங்கள் உள்ளன.  முன் மண்டபத்தின் சுவரில் தீர்த்தங்கரர்களில் ஒருவரான பார்சுவநாதர் சிலை இருக்கிறது.  கருவறையில்  மூன்று சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளன.   படம் எடுக்க அனுமதி இல்லை.

குடவரைக்கு செல்லும்  முன் கீழே  தமிழ்நாடு அரசு நுழைவு டிக்கட்  வாங்க வேண்டும்.  மேலே தொல்பொருள் ஆராய்ச்சி துறை வழங்கும் டிக்கட் வாங்க வேண்டும்.

முன்பு நான் போன போது படிகளுக்கு கைப்பிடி கிடையாது. இந்த முறை போன போது அழகிய கைப்பிடிகள் வைத்து இருந்தார்கள்.   ஏறுவதற்கு மிக வசதியாக இருந்தது.

போகும் பாதையில் கல் ஆசனம், சோபா போல் இருந்தது.  அதில் நான், என் மகள், பேத்தி, பேரன் எல்லாம் உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம்.  என்னை பேத்தி மகாராணி போல் கால் மேல் கால் போட்டு அமருங்கள் என்றாள். நானும் அப்படியே உட்கார்ந்து,” மாதம் மும்மாரி பொழிகிறதா? ” என்று ராஜா கேட்பது போல்  கேட்டேன். ஒரே சிரிப்பு தான்.

 ஒரு குகை மாதிரி இருந்த பாறையின்  உள்ளே போய் வந்தோம்.  என் பேரன் அந்த சமயம் மொட்டை அடித்து இருந்தான்.  அவன் ஒரு பாறை மேல் அமர்ந்து தவம் செய்வது போல் அமர்ந்தான்.  “ஆஹா! சின்னம் சிறு  பாலகன்  தவம் செய்கிறானே என்று மகிழ்ந்து இவனுக்கு   வரம் தாருங்கள், சுவாமி!”  என்றதும்  அவனுக்கு  ஒரே சிரிப்பு !

 சமணர் படுக்கை இருக்கும் இடம் போகும் பாதை, மலையின் பின் பகுதியில்  கீழே இறங்கி குறுகலாய் போகிறது. அது திகைக்க வைக்கும்(திகில் ஊட்டும்) பாதைதான்.  அதில் கீழே விழுந்து விடாமல்  இருக்க தடுப்பு போட்டு இருக்கிறார்கள்.











மலை மீது இருந்து பார்க்கும் போது இயற்கைக் காட்சி அழகாய் இருக்கும். மயில் அகவிய ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் மயில் கண்ணுக்கு தெரியவில்லை.





கல் படுக்கைகளை வேலி போட்டுத் தடுத்து வைத்து இருக்கிறார்கள் வெளியிலிருந்து தான் பார்க்க வேண்டும். சமணர் படுக்கை இருக்கும் மலை இடுக்குகளில் வவ்வால்கள் தொங்கி கொண்டு இருந்தது.






பின்பு கீழே இறங்கி இன்னொரு இடத்தில் இருந்த குடவரைக் கோயிலுக்குச் சென்றோம்

குடவரை ஓவியத்தை பார்க்க தனியாக அனுமதி சீட்டு வாங்க வேண்டும்.  அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே முதலில் எங்கள் குடும்பத்தை மட்டும் விட்டார்கள்.

குடைவரை ஓவியங்கள் உள்ள இடம்

  உள்ளே சிறு இடம் தான்.  அங்கு இருந்த தொல்லியல் துறை கைடு நல்ல விளக்கம் சொன்னார். மேல் விதானத்தில் எத்தனை சாமியார் பூக்குடலை வைத்துக் கொண்டு பூப்பறிக்கிறார்கள், அன்னப்பறவை, மற்ற விலங்குகள் எத்தனை என்று நம்மிடம் கேள்வி கேட்டு, பின் அவர் தெரிவித்தார். நமக்கு அவர் சொன்னபிறகு  எல்லாம் பளிச்சென்று தெரிகிறது.

பிறகு உள்ளே மூன்று சமண தீர்த்தங்கரர்கள் சிலை இருக்கும் இடத்தில்  நம்மை நடுவில் நிற்க வைத்து விட்டு ,அவர் அந்த அறையின் மூலையிலிருந்து வாயை அசைக்காமல் தொண்டை வழியாக கைடு சத்தம் செய்கிறார் . அது அந்த அறை முழுவதும் எதிரொலிக்கிறது. மிக அருமையான அதிர்வு ஏற்படுகிறது. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர் என்பதை உறுதிப்படுத்த, நம்மையும் அதுபோல் செய்து பார்க்க சொல்கிறார், நம்மால் முடியவில்லை. உடனே முகமெல்லாம் பூரிப்பாய் மலர்ந்து சிரிக்கிறார்.

அங்கு அருகில் ஒரு பூங்கா இருக்கு. அங்கு கொண்டு போன உணவுகளை  சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்கலாம் என்று பார்த்தால் அங்கு  உணவு உட்கொள்ளக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்து இருக்கிறார்கள்.  பொது  இடத்தை நாம் சுத்தமாக் வைத்துக் கொண்டு இருந்தால் அப்படி அறிவிப்பு வைத்து இருக்க மாட்டார்கள்.

பார்க்கில் அழகான சிலைகள் வைத்து இருந்தார்கள். மகாவீரர் சிலை. புலியை முறத்தால் துரத்திய வீரப்பெண்மணி சிலை, மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி,   அன்ன ரதம் ஆகியவை இருந்தது.














அன்ன ரதத்தில் ஒவ்வொருவரும் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டோம்.



மாயாபஜார் படத்தில் அன்னப் படகில்,” ஆஹா இன்ப நிலாவினிலே, ஒஹோ ஜெகமே  ஆடிடுதே  - மகிழ்ந்து ஆடிடுதே என்ற பாடலை நினைத்துக் கொண்டேன்.



அங்கு குழந்தைகள் விளையாட  சறுக்கு , ஊஞ்சல், சீஸா பலகை எல்லாம்  இருந்தன.   குழந்தைகள் விளையாடினார்கள்.  மரங்களில் நிறைய  குரங்குகள் இருந்தன.





 தண்ணீர் தாகம் எடுத்த குரங்கு தண்ணீர் டியூப்பில் நீர் கசிவு இருந்த இடத்திலிருந்து நீர் பருகியது.  சரியாக வரவில்லை என்று  டியூபில் ஒட்டி இருந்த டேப்பை விலக்கி குடித்தது.

சித்தன்னவாசல்  புகைப்படங்கள் மகள் எடுத்தது. கார்ட்டூன் படம் கணவர்.
இருவருக்கும் நன்றி.

வேறு  இடத்த்தில் மரநிழலில் அமர்ந்து உணவை உண்டு ஓய்வு எடுத்து  ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
                                               ---------------------------------------


52 கருத்துகள்:

  1. அருமையான இடம் அம்மா... படங்கள் எடுத்த உங்கள் மகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...அன்ன ரதம் படமும் பாட்டும் சூப்பர்...

    என் பதிவுகள் இட நேரம் இல்லை... விரைவில் முழுதாக இணையம் வர முயற்சி செய்கிறேன்... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வாங்க தனபாலன், வாழகவளமுடன். நலமா? உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
    உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சித்தன்னா வாசல் எங்கூருங்கம்மா :). நான் பல முறை சென்றிருக்கிறேன்.

    கடந்த முறை சென்ற பொழுது அந்த குகைப்பகுதியிலிந்து (வவ்வால்கள் தொங்கிக் கொண்டிருக்குமே) கீழே பார்த்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தோம். அப்பொழுது மயில் எங்களுக்கு அகவியது கேட்டதைக் காட்டிலும் மலைகளை வெடி வைத்து தகர்க்கும் ஓசையே இடியாக இறங்கி அதனையொட்டியே பேச வேண்டியதாகி விட்டது.

    அதனைப் பற்றி ஒரு சர்ச்சைக்குரிய பதிவும் எழுத வேண்டுமென எண்ணி அப்படியே கிடப்பிலும் போட்டுவிட்டேன். என்றாவது ஒரு நாள் எழுதிவிடுவேன் :) ...

    புகைப்படங்கள் அருமை! அரசு சார் நன்றாக வரைகிறார். இவருடைய டீடைலை உன்னிப்பாக கவனித்தால், R. K. லக்‌ஷ்மன் நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. உங்க கட்டுரைக்கு நன்றி. ஆனால் படத்துக்கு திரு.அரசுக்குப் பெரும் பாராட்டு.

    பதிலளிநீக்கு
  5. நம்மால் செய்யவரவில்லை என்பதை அறிந்து அவர் பூரிப்படைந்தது ..ரொம்ப உண்மை.. தனித்தன்மை தான்..
    இந்த இடத்தை இவ்வருட ட்ரிப்பில் தேர்ந்தெடுத்தது நீங்கள் தான்..

    அந்தப் பாதை செம த்ரில்லிங்க்..

    இந்தமுறையும் கார்டூன் நல்லா வந்திருக்கு..


    பதிலளிநீக்கு
  6. வாங்க தெகா, வாழ்கவளமுடன்.
    உங்கள் ஊர் என்ரவுடன் வந்து விட்டீர்கள் என் பதிவுக்கு இல்லையா?

    கடந்தமுறை நீங்கள் சென்ர போது மலையை வெடி வைத்து தகர்த்தார்களா?
    கேட்கவே கஷ்டமாய் உள்ளது. இயற்கையை அழிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுக்கிறார்கள். பழமையை அழித்து ஏதாவது புதுமை செய்கிறார்கள். உங்கள் கருத்தை எழுதுங்கள்.
    என் பதிவை விட சாரின் கார்டூனுக்கு பாரட்டு அதிகமாகிறது. மகிழ்ச்சி நீங்கள் பாராட்டியதற்கு.

    பதிலளிநீக்கு
  7. வாங்க தருமி சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கு நன்றி. மகளின் படத்திற்கும், கணவரின் கார்டூனுக்கும் உங்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கு மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வா முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.

    வழிகாட்டியின் தனிதன்மையை பாராட்டியே ஆக வேண்டும்.

    சமணர்படுக்கை இருக்கும் இடத்திற்கு போகும் பாதை த்ரில்லங்கை நீங்கள் எல்லோரும் அனுபவித்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

    கார்டூன் பாராட்டுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. அன்ன ரதத்தில் இருப்பது நீங்கள் தானா?
    அழகாக வந்திருக்கிறது போட்டோ.

    தகவல்களும் அருமையாக சொல்லியிருக்கிறிர்கள். சித்தன்ன வாசல் ஓவிங்கள் போட்டோவையும்
    ஒரு பதிவாகப் போடுங்கள் .கண்டு களிக்கிறோம்.
    உங்கள் கணவரின் ஓவியமும் அருமை.

    நன்றி.
    ராஜி

    பதிலளிநீக்கு
  10. சித்தன்ன வாசல் பற்றிய மிகச்சிறப்பான பதிவு.

    தகவல்களும் கொடுத்துள்ள படங்களும் மிகவும் அதிகமாக உள்ளன. இரண்டு பதிவுகளை ஒன்றாக சேர்த்தது போல. ஆனால் மிகவும் சூப்பராக உள்ளன.

    கார்ட்டூன் அனிமேஷன் ஓவியம் சார் வரைந்துள்ளது A1. பாராட்டுக்கள்.

    >>>>>>>>

    பதிலளிநீக்கு
  11. குடவரைக்கோயில் பற்றிய தகவல்கள்

    சமணரின் கல் படுக்கை,

    அன்ன ரதம்

    போன்றவை மிகச்சிறப்பாகப் படமாக்கி வந்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்

    பதிலளிநீக்கு
  12. பாடப் புத்தகத்தில் சித்தன்னவாசல் பற்றிப் படித்தது. அதை விரிவாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.
    அன்னரதத்தில் இருப்பது நாங்கள் தான்.
    மகள் எடுத்த போட்டோ, உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    சித்தன்னவாசல் ஓவியங்கள் எடுக்க அனுமதி இல்லை. அதனால் எடுக்கவில்லை.

    கணவரின் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க வை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
    பதிவு பெரிதாகி விட்டது இரண்டு பதிவாக போட்டு இருக்கலாம். கஷ்டமாகி விட்டதோ படிக்க மன்னிக்கவும்.
    அடுத்தமுறை தொடர் பதிவாக்கி விடுகிறேன்.

    உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    கணவரின் ஓவியத்திற்கு A1 கொடுத்து இருப்பது அவர்களை மேலும் வரைய தூண்டும் பாராட்டு நன்றி.

    படங்கள் என் கணவரும் மகளும் எடுத்தது. உங்கள் இரண்டு பின்னூட்டங்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  15. வாங்க முரளிதரன், வாழ்கவளமுடன்.
    வரலாறை சிறப்பு பாடமாய் எடுத்து படித்ததால் சித்தன்னவாசல் மேல் விருப்பம் அதிகமாகி விட்டது. அது தான் பதிவு கொஞ்சம் அதிகமாகி விட்டது.

    உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. பாடப் புத்தகத்தில் படித்த சித்தன்னவாசல் உங்கள் பதிவு மூலம் நேராகப் பார்த்தாகி விட்டது.

    மலையேறும் வழி செம த்ரில்லிங்! நான் ஒரு தடவை எறிப்பார்த்தேன்.(சும்மா..கற்பனையில் தான்!) ஆனால் கைப்பிடி இருப்பதால் ஏறிவிட முடியும் என்று நினைக்கிறேன். போகும் வழி மிகவும் ரம்யமாக இருக்கிறது.

    நீங்கள் எழுதுவதில் வல்லவராக இருந்தால் உங்கள் கணவர் ஓவியம் வரைவதில் வல்லவராக இருக்கிறார்.

    உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. கட்டுரையைப் புகழ்வதா கார்ட்டூனைப் பாராட்டுவதா? திகைக்கிறேன்...

    பதிலளிநீக்கு

  18. நானும் , நீங்கள் ஒரு பதிவு எழுதக் காரணமாயிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நான் அறுபதுகளில் சென்றது உங்கள் பதிவில்காணும் பல செய்திகள் அப்போது இருந்ததாக நினைவில்லை. சுற்றுலா வளர வேண்டி சில additions கூட்டியிருக்கலாம். நாங்கள் சென்றபோது எந்தக் கட்டுப்பாடோ விவரிப்புகளோ இருந்ததாக நினைவில்லை. நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. mihavum alaga irukerathu.. sellum paathai parkavey bayamaga irukerathu.. eppadi sinna payanai alaithu pooniga. padagal ellam romba nalla iruku..

    பதிலளிநீக்கு
  20. சின்னவயதில் சித்தன்னவாசல் பற்றி பாடத்தில் படித்தது! இப்போது உங்கள் பதிவில் விரிவாக புகைப்படங்களுடன் படித்து ரசித்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  21. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    சமணர் படுக்கை போகும் பாதையில் ஏறி பார்த்து விட்டீர்களா!
    மகிழ்ச்சி.
    என்னுடன் வந்து சித்தன்னவாசலை ரசித்தமைக்கும், எங்களை பாரட்டி வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க கே.பி ஜனா சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்து மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் அப்போது இருந்து இருக்காது இந்த கட்டுபாடு, வழிக்காட்டியின் விளக்கம் எல்லாம்.
    இப்போது சுற்றுலா செல்பவர்கள் கூட்டம் அதிகம், அதனால் இவை எல்லாம் தேவைப்படுகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.
    நான் தான் நன்றி சொல்லவேண்டும் பதிவுஎழுத நீங்கள் காரணமாய் இருந்ததற்கு.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ஃபாயிஷாகாதர், வாழ்க வளமுடன்.

    பேரன் சமணர் படுக்கை போகும் பாதையில் அவனே மகிழ்ந்து ஏறினான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.
    பதிவை ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. சிறப்பான இடம் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் என அசத்தலான பகிர்வு.

    கார்டூன் அருமை! வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  27. மாயாபஜார் படத்தில் அன்னப் படகில்,” ஆஹா இன்ப நிலாவினிலே, ஒஹோ ஜெகமே ஆடிடுதே - மகிழ்ந்து ஆடிடுதே என்ற பாடலை நினைத்துக் கொண்டேன்.

    பொருத்தமான பாடல் வரிகள்..

    படம் அற்புதமாக இருக்கிறது ..

    ரசிக்கவைத்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்களும் .. வாழ்த்துகளும் ..

    பதிலளிநீக்கு
  28. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
    பதிவையும், பாடலையும் ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  29. தாண்டிக் கொண்டு தாண்டிக் கொண்டு சென்றதுண்டு. ரொம்ப சுவாரஸ்யமான இடமாகத் தெரிகிறது. பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. "ஆஹா இன்ப நிலாவினிலே" - ஆஹா! என்ன கற்பனை! டேப்பை எடுத்துத் தண்ணீர் குடித்த குரங்கு மறுபடி டேப்பை அங்கேயே ஒட்டியதா...!!!

    படம் நன்றாக வரைந்திருக்கிறார் அரசு சார்.

    பதிலளிநீக்கு
  30. வாங்க ஸ்ரீராம்,வாழ்கவளமுடன். சித்தன்னவாசல் பார்க்க வேண்டிய இடம் தான், போய் வாருங்கள் குடும்பத்துடன்.

    பாட்டை ரசித்தமைக்கு மகிழ்ச்சி.
    குரங்கு டேப்பை மறுபடியும் ஒட்டவில்லை.
    சார் படத்தை பாரட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. மிக அழகான இடமாக உள்ளது. குகைக்குச் செல்லும் பாதை படங்கள் நன்றாக எடுத்துள்ளீர்கள். பகிர்வு அருமை. கார்ட்டூன் தத்ரூபம். காருக்கு பயந்து ஓடும் நாய் அசத்தல்!!

    பதிலளிநீக்கு
  32. வாங்க ராமலக்ஷ்மி, வாழக வளமுடன்.
    சித்தன்னவாசல் மிக அழகான இடம் தான் ராமலக்ஷ்மி.

    படங்கள் கயல் அப்பாவும், கயலும் எடுத்தார்கள்.

    சார் படத்தை பாரட்டியது மகிழ்ச்சி.

    இப்போது அடுத்தபதிவு என்ன எழுத போகிறாய் என்று கேட்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி படம் வரைய ஆர்வமாய் இருக்கிறார்கள்.
    எப்படியோ எங்கள் பொழுதுகள் ஓடுகிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  33. //மாதம் மும்மாரி பொழிகிறதா? ” என்று ராஜா கேட்பது போல் கேட்டேன். ஒரே சிரிப்பு தான்.//

    ஹா..ஹா.. அதுதான் பெயரிலேயே அரசு வைத்துக்கொண்டிருக்கீங்களே! நிஜமாகவே ராஜாதான்..

    படங்கள் மிக அழகு. தகவல்கள் சிறப்பாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி,மேடம்.

    பதிலளிநீக்கு
  34. அழகிய படங்கள் அழகாக நேரடி காட்சி போல புகைப்படம் எடுத்த தங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  35. வாங்க ரமாரவி, வாழ்க வளமுடன்.
    ஆஹா, நான் நிஜமாகவே
    ராஜாவா!

    உங்கள் அருமையான கருத்துக்கும் வரவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க சசிகலா, வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும்,
    என் மகளுக்கு வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. அழகியபடங்களுடன் கூடிய அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  38. படங்களும் செய்தியும் அருமை.இதுபோல அடுத்த தகவல் எப்போது?

    பதிலளிநீக்கு
  39. வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.

    அடுத்ததகவல் விரைவில்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. மிக அருமையான பதிவு. நான் கேள்விப்படாத இடம்.
    படங்களுடன் மிக அருமை

    பதிலளிநீக்கு
  42. வாங்க டாகடர், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. சமணர் படுக்கை, குகை என அருமையான இடங்கள்.

    அழகிய படங்களுடன் கண்டு களிப்புற்றோம்.

    பதிலளிநீக்கு
  44. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் களிப்பு எனக்கு மகிழ்ச்சி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  45. அருமையான பகிர்வு படங்கள் அழகு.
    http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
    அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  46. வாங்க ஆசியா, வாழக வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    உங்கள் தொடர் அழைப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. சித்தன்னவாசல், தகவல்களும், ஓவியங்களும் அருமை. சபரி பிரமாதமா போஸ் கொடுக்கிறானே...:)

    வவ்வால் படம் நல்ல வந்திருக்கு...

    ஐயாவின் படம் பிரமாதம்.

    செப்டம்பரில் செல்லலாம் என்று நினைத்து போக முடியாமல் ஆகி விட்டது. அடுத்த முறை சென்று வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  48. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
    சபரி எந்த மலையைக் கண்டாலும் இந்த மாதிரி ஒரு போஸ் கொடுத்து விடுவான்.
    வவ்வால் படம் கயல் எடுத்தாள்.
    சாரின் படம் நல்லா இருக்கா நன்றி.
    நேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள் ரோஷிணி நன்கு ரசிப்பாள்.

    பதிலளிநீக்கு
  49. அடேயப்பா. இன்னுமொரு மலைப்பயணமா? முத்தக்கா வராமல் இருந்தால்தான் வியப்பு. சென்ற மலைப்பயணமே எப்படி வராம இருந்தாங்கன்னு நெனச்சென்.

    நல்லதொரு சுற்றுலாத்தலமாகத் தெரிகிறது. ஆனால், அவ்வளவு பிரபலமா ஆகல போல. நீங்க எழுதினதப் பார்த்து போகணும்னு ஆசை வருது. ஆனா, புதுக்கோட்டை என்பதால், முடியாது. ரொம்ப தூரம். :-)))

    சபரி போஸ் அருமை.

    பதிலளிநீக்கு
  50. வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
    வரலாற்று சிறப்பு மிக்கது இந்த சித்தன்னவாசல்.
    பல்லவர் காலம் குடவரை ஓவியமுள்ள இடம். வரலாற்று பாடத்தில் வந்து படித்து இருப்பீர்கள்.
    மக்களிடம் இப்போது தானே சுற்றுலா போக மோகம் வந்து இருக்கிறது.
    சுற்றுலாத்துறை இப்போது இந்த மாதிரி இடங்களை பாதுகாத்து வருகிறது.
    இங்கு எங்கள் ஊருக்கு வாருங்கள் ரொம்ப தூரம் இல்லை போய் வரலாம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  51. அழகான படங்களுடன், அருமையான பகிர்வு அம்மா...

    இங்கும் செல்ல வேண்டும் என குறித்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  52. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    இந்த முறை போன போது நிறைய படங்கள் எடுத்தேன், அதை பதிவாக்க வேண்டும்.
    குழந்தைகள் விடுமுறையில் சென்று வாருங்கள் .
    உங்க்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு