திங்கள், 9 ஜனவரி, 2012
திருக்கயிலை யாத்திரை -பகுதி -5
09.09.2012
மறுநாளும் மழையும் மேகமூட்டமுமாகவேயிருந்தது.இன்று
முழுதும் கயிலை மலை கண்ணுக்குத் தெரியவேயில்லை.
காலையில் ஏரிக்கரையில் டெண்ட்கள் அடித்து அதற்குள்
வெந்நீர் வைத்துக் குளிக்கத் தந்தார்கள்.அந்தக்குளிர் நேரத்தில்
வெந்நீரில் குளிப்பது சுகமாக இருந்தது.இருந்தாலும் குளித்து
முடித்து ஆடை உடுத்துகிறபோது முன்னைவிடக் குளிர்ந்து நடுக்கியது.
மழை குறைந்திருந்த நேரத்தில் மானசரோவர் ஏரிக்கரையில்
நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு யாகத்தை நடத்தினோம்.
நாங்கள் கொண்டு சென்றிருந்த வேள்விப் பொருட்கள்
அனைத்தையும் தொகுத்து வேள்வியைச் செய்தோம். மூன்று
முறை கயிலை சென்று வந்த அனுபவம் நிறைந்த இளமுருகு
ஐயா வேள்வியை நடத்திவைத்தார். வேள்வி சமித்துகளை
எல்லோர் கையிலும் கொடுத்து வேள்வியில் சேர்க்க வைத்தார்.
வேள்வி நிறைவு பெற ஒருமணி நேரத்திற்கு மேலாகியது.
அதுவரை மழை இல்லை. திருமுறைகள் ஓதப்பட்டன.
பூசைகள் நிகழ்த்தப்பட்டன. கேசரி மாதிரி ஒரு இனிப்பு,
பழங்கள், அவல், முந்திரி, கல்கண்டு, உலர்ந்த திராட்சை,
பாயாசம் போன்ற பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
கல்கண்டு, உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் எல்லாம் பூஜை
செய்து பின் எடுத்து வைத்துக் கொண்டோம். ஊருக்கு வந்து
உறவினர், நண்பர்களுக்குக் கொடுக்க.
மதிய உணவுக்குப்பின்னர் அங்கிருந்து தார்ச்சென் என்னும்
ஊரை நோக்கிப்( dharchen)நோக்கிப் புறப்பட்டோம். மானசரோ
வருக்குச் சற்றுத் தொலைவில் ’இராட்சஸ்தல்’ என்னும் ஏரி
உள்ளது.அங்கு இராட்சதர்கள் வந்து குளிப்பதாக ஐதீகம். இராவணன்
அங்கு வந்து குளித்ததாகவும் கூறுகிறார்கள்.
மாலையில் கயிலையின் அடிவாரத்தில் உள்ள தார்ச்சென் என்னும்
சிற்றூருக்கு வந்து சேர்ந்தோம். மிகக் குளிர். கடல் மட்டத்தில்
இருந்து 15000 அடி உயரம்.
”தார்ச்சென் கெஸ்ட் ஹவுஸ் ”என்னும் விடுதியில் தங்கினோம்.
பெரும்பாலும் இங்கு உள்ள ஊர்களில்
சோலார் விளக்குகள் தான் .
மாலை 6 மணிமுதல் சுமார் 9 மணி வரைதான் அது எரியும்.
அதன் பிறகு இருள்தான். ஊர்ப்பொது விளக்குகளும் சோலார்தான்.
ஜெனெரேட்டர் சில சமயங்களில் தான் போடுகிறார்கள்.இரவு
வழிபாடு செய்தோம்.
திருச்சியிலிருந்து வந்திருந்த இரண்டு பெண் பயணிகள் தங்களில்
ஒருவருக்கு உடல் நலம் குறைந்ததால் ஜீப் ஏற்பாடு செய்து
காட்மாண்டு சென்று பின் இந்தியா திரும்பினர். கயிலைப்
பயணத்தைத் தொடர முடியவில்லை.
10.09.11
இன்று எங்களில் நால்வரைத் தவிர மற்றவர்கள் கயிலையைச்
சுற்றிவரும் பாதையான பரிக்கிரமாவுக்குப் புறப்பட்டுச்
சென்றார்கள். நாங்கள் இந்தியாவிலிருந்து கிளம்பும் போதே
பரிக்கிரமா வேண்டாம்,யமத்வாரிலிருந்து பார்க்கும் தரிசனம்
போதும் என்று முடிவு செய்து விட்ட படியால் பரிக்கிரமா
செல்லவில்லை.
நாங்களும் ’யமத்வார் ’என்ற இடம் வரை பேருந்தில் சென்றோம்.
யமத்துவாரில் கயிலையின் மேற்கு முகம் சற்று தெரிகிறது.
மலை சற்று அருகில் தெரிகிறது. அழகான காட்சி.
யமத்வாரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதன் ஒரு வழியாகச்
சென்று மறுவழியில் வெளியே வரவேண்டும். அப்படி சென்று
வந்தால் யமபயம் கிடையாதாம்.
உள்ளே மணியொன்று உள்ளது. அதை அடித்தோம்.. அந்த
கோயிலின் உள்ளே நிறைய துணிகள் கிடந்தன. வந்தவர்கள்
அவர்கள் அணிந்து வந்த ஆடைகளில் ஒரு சிலதை அங்கு
விட்டிருந்தனர் ஏன் என தெரியவில்லை. நான் இங்கு ஏன்
இப்படி துணிகளைப் போட்டு இருக்கிறார்கள் என்று கேட்டுக்
கொண்டு இருந்தேன். யாருக்கும் காரணம் தெரியவில்லை.
காற்றில் என் தலையில் கட்டி இருந்த ஸ்கார்ப் பறந்து போய்
விட்டது.( பஸ்ஸில் ஏறிய பின் தான் ஸ்கார்ப் காணவில்லை
எனத் தெரிந்தது.)என் துணிகளில் ஒன்றும் அங்கு இருக்க
வேண்டும் என்பது இறைவனின் எண்ணம் போலும்.
பலவண்ணக்கொடித் தோரணங்கள் அங்கு கட்டப்பட்டுள்ளன.
திபெத்தின் பல இடங்களில் அப்படிக் கட்டியிருந்தார்கள்.சில
இடங்களில் கற்களை எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி
அதன் மேல் எருமைக் கொம்புடன் உள்ள தலையை வைத்து
இருந்தார்கள்.
அது அவர்களின் வழக்கம் போலும்.
பரிக்கிரமா செல்பவர்களுக்கு அங்கு குதிரைகள் ஒதுக்கிக்
கொண்டிருந்தார்கள்.பயணத்திற்குப் பயன்பட யாக் எருமைகளும்
நின்றுகொண்டிருந்தன.
சுமார் 1 1/2 மணி நேரம் அங்கிருந்த பின் பரிக்கிரமா செல்லாத
நாங்கள் பஸ்ஸில் திரும்பிவிட்டோம். அந்த இடத்தில் நிறைய
மக்கள்அங்கு தங்கள் தங்கள் வழக்கப்படி பூஜைகள் செய்து
திரும்புகிறார்கள்.
பரிக்கிராமாவை முன்னிட்டுச் சில பயணிகள் கம்பு ஊன்றியவாறு
நடந்து சென்று கொண்டிருந்தனர்.
யமத்துவாருக்கும் அவர்கள் நடந்தேவந்தனர். அருகில் நீரோடை
சலசலத்து ஓடிக்கொண்டு இருந்தது.காகங்கள் ஆங்காங்கே
காணப்பட்டன. அவை சற்றுப் பெரிதாக உள்ளன. அவற்றின்
குரல்களில் உள்ள கரகரப்பு இல்லை.சீனமொழியில் கத்துவது
போல் மூக்கொலியில் ஒலிக்கின்றன. மிக அருமையான சாலை
ஒன்று யமத்வார் வரை போடப்பட்டு வருகிறது.
அங்கு அரசாங்க அலுவலகங்கள் இருப்பதால் அதனை
முன்னிட்டுச் சாலைகள் நன்றாகப் போடப்பட்டு வருவதாகக்
கூறுகின்றனர். கயிலை மலையைச் சுற்றிலுமே சாலை போடச்
சீன அரசு தயாராக இருப்பதாகவும் ஆனால் தங்கள் வாழ்க்கை
பாதிக்கும் என்று குதிரைக்காரர்கள் கூறுவதால் போடவில்லை
என்றும் கூறப்படுகிறது. அவர்கள், மக்கள் கயிலை யாத்திரை
வரும் போது தான் பொருளஈட்டுகிறார்கள்.
எங்கள் நால்வருக்காக ஒரு சமையல் ஆள் எங்களுடனே தங்கி
எங்களைக் கவனித்துக் கொண்டார்.
இவர்தான் எங்களை கவனித்துக் கொண்டவர். அவர் பெயரை
திரும்ப உங்களிடம் சொல்ல முடியவில்லை. பெயரில் என்ன
இருக்கிறது! அன்பானவர்.
நேரா நேரத்திற்கு உணவு அளித்து நன்கு கவனித்துக் கொண்டார்.
விடுதியின் அருகிலிருந்து பார்த்தால் கயிலைக் காட்சி தெரிகிறது.
நாங்கள் அங்கிருந்தே கயிலைக் காட்சியை மீண்டும் மீண்டும்
கண்டோம்.
11.09.11
இன்று தார்ச்சென் ஊரைச்சுற்றிப் பார்த்து வந்தோம்.இன்று
மதியம் பரிக்கிரமா சென்றவர்களில் 7 பேரைத் தவிர மற்றவர்கள்
கயிலையின் வடக்கு முகத் தரிசனத்தோடு திரும்பி விட்டார்கள்.
மூச்சுத்திணறல்,முதலிய காரணக்களால் அவர்கள் முழுதும்
சுற்றாமல் திரும்பினராம்.
எங்களுடன் வந்த சூலூர் ஆர்.வி.எஸ் குழுவினர் மானசரோவில்
கயிலையைப் பார்த்த கையோடு காரில் காட்மண்டு திரும்பினர்.
(கல்லூரி மற்றும் அறக்கட்டளை ஸ்தாபனர்)
நாங்கள் மாலை மீண்டும் கயிலைமலை தரிசனம் செய்தோம்
12.09.11
இன்று பரிக்கிரமா சென்றவர்கள் அனைவரும் திரும்பினர்.
காலை 6 மணிக்குக் கயிலை தரிசனம் செய்துவிட்டுப்
புறப்பட்டோம்.கயிலையை விட்டுப் பிரிய மனமில்லை.
பிரியாவிடை பெற்றோம்.திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே
வந்தோம்,எங்கள் கண்பார்வையில் இருந்து மறையும் வரை.
வழியில் zongba வில் தங்கினோம்.'மட் ஹவுஸ்'.இங்கு
நல்ல வேளையாக இரவு முழுதும் விளக்குகள் எரிந்தன.
அடுத்த பகுதியில் கயிலை யாத்திரைக் கட்டுரை நிறைவடையும்.
//காற்றில் என் தலையில் கட்டி இருந்த ஸ்கார்ப் பறந்து போய்
பதிலளிநீக்குவிட்டது.( பஸ்ஸில் ஏறிய பின் தான் ஸ்கார்ப் காணவில்லை
எனத் தெரிந்தது.)என் துணிகளில் ஒன்றும் அங்கு இருக்க
வேண்டும் என்பது இறைவனின் எண்ணம் போலும். //
துணி போனால் பிணி போனால் போல என்று பழமொழியொன்று சொல்லுவார்கள். அதனால் தங்களின் இந்தப்பயணத்தில் ஸ்கார்ப் காணாமல் போய் விட்டது என்று நினைக்கிறேன்.
அழகழகான படங்கள் நிறைய கொடுத்து, பயண அனுபவங்களை மிகச் சிறப்பாகப் பொறுமையாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் vgk
அருமை!!!
பதிலளிநீக்குஅந்த மட்டக்குதிரைகள் எவ்வளவு கொடுத்து வைத்த ஆத்மாக்கள் பாருங்களேன். அனுதினமும் பரிக்ரமா !!!!!
போன ஜென்மத்துப் புண்ணியவான்களோ என்னவோ!!!!!
டார்சென்னில் சுடுநீர் கிடைக்குமே., பணம் கொடுத்து குளிக்கும் வசதி இருக்கும். அதை பயன்படுத்தினீர்களா?
பதிலளிநீக்குவேள்வி நிறைவு பெற ஒருமணி நேரத்திற்கு மேலாகியது.
பதிலளிநீக்குஅதுவரை மழை இல்லை. திருமுறைகள் ஓதப்பட்டன.
பூசைகள் நிகழ்த்தப்பட்டன.
"திருக்கயிலை யாத்திரை - அருமையாய் பகிர்வு. நன்றி
//என் துணிகளில் ஒன்றும் அங்கு இருக்க
பதிலளிநீக்குவேண்டும் என்பது இறைவனின் எண்ணம் போலும்.//
சில நிகழ்வுகள் மிகவும் அர்த்தம் பொதிந்தவை. ஏன், எதனால் என்கிற கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை.
அந்த இடத்தை விட்டு நீங்கள் நீங்கி வெகு தூரம் வந்த பிறகு, 'யமத்வாரில் ஏதாவது துணியை விட்டு வரவேண்டுமே?.. நீங்கள் அப்படி என்னத்தை விட்டு வந்தீர்கள்?" என்று யாராவது கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி அந்த ஸ்கார்ப் பறந்து போயிருக்கா விட்டால், அடடா! அப்படிச் செய்யாமல் போய்விட்டோமே' என்று எவ்வளவு வருத்தமாக இருக்கும்?..
அப்படி ஸ்கார்ப் பறக்காமலிருந்தால், யாராவது கேட்டிருப்பார்களோ, என்னவோ!
'.. என்பது இறைவனின் எண்ணம் போலும்' என்கிற நினைப்பு உங்கள் ஆன்மிக முதிர்ச்சியைக் காட்டுகிறது.
படங்கள் அருமை. உங்கள் அமைதியான விவரிப்பு அதனினும் அருமை.
மிக்க நன்றி, கோமதிம்மா!
நிறைய விவரங்களோடு கட்டுரை நன்றாக இருக்கிறதம்மா... எங்களுக்கு எப்போது அழைப்பு வருமோ தெரியவில்லை.... :)
பதிலளிநீக்குதுணி போனால் பிணி போனால் போல என்று பழமொழியொன்று சொல்லுவார்கள். அதனால் தங்களின் இந்தப்பயணத்தில் ஸ்கார்ப் காணாமல் போய் விட்டது என்று நினைக்கிறேன்.//
பதிலளிநீக்குவாங்க கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வார்த்தை பலிக்கட்டும். பிணி இல்லாமல் இருப்பது நல்லது தானே!
முதல் வருகை தந்து பாரட்டும் , வாழ்த்தும் அளித்த உங்களுக்கு நன்றி.
அந்த மட்டக்குதிரைகள் எவ்வளவு கொடுத்து வைத்த ஆத்மாக்கள் பாருங்களேன். அனுதினமும் பரிக்ரமா !!!!!//
பதிலளிநீக்குவாங்க துளசி, அனுதினமும் பரிக்ரமா! கொடுத்து வைத்தவர்கள் தான்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நிகழ்காலம், எங்களுக்கு தெரியவில்லை. தங்கி இருந்த இடத்தில் எங்களுக்கு உணவு சமைப்பவர் தான் வெந்நீர் தந்தார்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வேள்வி நிறைவு பெற ஒருமணி நேரத்திற்கு மேலாகியது.
பதிலளிநீக்குஅதுவரை மழை இல்லை. திருமுறைகள் ஓதப்பட்டன.
பூசைகள் நிகழ்த்தப்பட்டன. //
வாங்க இராஜராஜேஸ்வரி, மனநிறைவான பயணம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அந்த இடத்தை விட்டு நீங்கள் நீங்கி வெகு தூரம் வந்த பிறகு, 'யமத்வாரில் ஏதாவது துணியை விட்டு வரவேண்டுமே?.. நீங்கள் அப்படி என்னத்தை விட்டு வந்தீர்கள்?" என்று யாராவது கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி அந்த ஸ்கார்ப் பறந்து போயிருக்கா விட்டால், அடடா! அப்படிச் செய்யாமல் போய்விட்டோமே' என்று எவ்வளவு வருத்தமாக இருக்கும்?..
பதிலளிநீக்குஅப்படி ஸ்கார்ப் பறக்காமலிருந்தால், யாராவது கேட்டிருப்பார்களோ, என்னவோ!//
வாங்க ஜீவி சார்,
நீங்கள் சொல்வது உண்மை. காசிக்கு சிறு வயதில் போனோம், அங்கு ஏதாவது பிடித்த காய் , பழம் போன்றவைகளை விட வேண்டுமாம் எனக்கு தெரியவில்லை வந்தவுடன் எல்லோரும் கேட்டார்கள்.
உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.
நிறைய விவரங்களோடு கட்டுரை நன்றாக இருக்கிறதம்மா... எங்களுக்கு எப்போது அழைப்பு வருமோ தெரியவில்லை.... :)//
பதிலளிநீக்குவாங்க வெங்கட், உங்கள் பாராட்டுக்கு நன்றி.
அவன் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது!அவன் அருளால் உங்கள் எண்ணம் விரைவில் ஈடேறும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க. மீண்டும் விரைவில் வர பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஅழகிய படங்களும் விரிவான விவரங்களுமாக சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்கு/பலவண்ணக்கொடித் தோரணங்கள் /
ஆம் எல்லா திபெத்திய கோவில்களிலும் இதைக் காணலாம். அதற்கு காரணமும் உண்டென சொல்வார்கள்.
படங்களும் பதிவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇன்னிக்குத்தா எல்லா பதிவும் படிச்சேன் திருக்கையிலை யாத்திரையில் நாங்களும் கலந்துகொண்டமாதிரியே இருந்தது.
பதிலளிநீக்குஅழகான படங்கள் நிறைய கொடுத்து, பயண அனுபவங்களை மிகச் சிறப்பாகப் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க சித்ரா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
பதிலளிநீக்குவிரைவில் உங்கள் பதிவுகள் வர வாழ்த்துக்கள்.
வாங்க ராமலக்ஷ்மி, திபெத்திய கோவில்கள எல்லா வற்றிலும் இந்த தோரணங்கள் தான்.
பதிலளிநீக்குநேபாளத்திலும் தோரணங்கள் காணப் படுகிறது.
இலங்கையில் புத்தர் கோவிலில் இந்த மாதிரி துணி தோரணம் உண்டு.
வாங்க லக்ஷ்மி அக்கா, பதிவுகள் எல்லாம் படித்து கருத்து சொன்னதற்கு
பதிலளிநீக்குநன்றி.
வாங்க லக்ஷ்மி அக்கா, பதிவுகள் எல்லாம் படித்து கருத்து சொன்னதற்கு
பதிலளிநீக்குநன்றி.
வாங்க காஞ்சனா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
பதிலளிநீக்குநிறைய புது செய்திகள் அறிந்தேன். சிற்றூர்களில் சோலார் விளக்குகள் பயன்பாடு ஆச்சரியமானது.
பதிலளிநீக்குமுதல் பதிவிலேயே கேட்க நினைத்தேன். பதிவுகளில் அறிந்துகொள்ளலாம் என்றிருந்தேன். அதாவது, கயிலை யாத்திரை என்பது, இமய மலைக்குச் செல்லும் யாத்திரைதானே? அதில் குறிப்பிட்டு இந்த மலை என்று உண்டா? அந்த மலை பெயர் என்ன?
மலையை மட்டும்தான் தரிசிப்பதா? அல்லது அங்கு கோயில் எதுவும் உண்டா?
இந்த யாத்திரை செல்வது குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமா? அல்லது எப்போது வேண்டுமானாலும் போகலாமா? (எனில் குளிர் இல்லாத மாதங்களில் செல்வது வயதானவர்களுக்கு எளிதல்லவா)
பரிக்ரமா வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா ? அதுவும் அவன் சித்தம்தான்.
பதிலளிநீக்கு//என் துணிகளில் ஒன்றும் அங்கு இருக்க வேண்டும் என்பது இறைவனின் எண்ணம் போலும்..//
கூத்தாடுபவன் ஆட்டுவிக்கவும் செய்கிறான்
//..அவற்றின்
குரல்களில் உள்ள கரகரப்பு இல்லை.சீனமொழியில் கத்துவது
போல் மூக்கொலியில் ஒலிக்கின்ற..//
:))
வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பேற்று பல நல்ல ஆசிரியர்களையும் அவர்களின் வலைப் பக்கங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுகள். அங்கே கபீரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி
பொங்கல் வாழ்த்துகள்
ஹுஸைனம்மா, நீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லோருக்கும் பயன் படுகிற மாதிரி கேட்கிறீர்கள்.
பதிலளிநீக்குமலை பகுதிகளுக்கு கம்பிகள் மூலமாக நீண்ட தொலைவுக்கு மின்சாரத்தை கொண்டு போவது கடினம். திபெத் பகுதியில் மின்சார உற்பத்தி குறைவு. இருப்பதாய் தெரியவில்லை.அதனால் தான் சோலார் சிஸ்டம்.
இமயமலைக்கு பல் வேறு காரணங்களுக்கு போவார்கள். இமயமலை என்பது லடசக்கணக்கான சதுர மைல் பரப்பளவை உடையது. (எவரெஸ்ட்,அன்னபூரணா, கஞ்சன் சங்கா போன்ற மலைகள் உள்ளன)
கயிலையைப் பார்க்க வேண்டும் உத்தேஷத்துடன் செல்லக்கூடிய பயணம் மட்டுமே கயிலை யாத்திரை என கூறபடும்.
கோயில் கிடையாது பனி மூடிய கயிலைமலையைதான் வணங்குகிறோம்.
இதன் பெயர்’ நொடித்தான் மலை’ என தேவராத்தில் கூறப்படுகிறது.
எவ்வாறு , எந்த மாதம் போவது என்பனப் பற்றிய செய்திகள் நிறைவு பகுதியில் நீங்கள் பார்க்கலாம்.
கபீரன்பன்,
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.
வலைச்சர தொகுப்பை படித்தது அறிந்து மகிழ்ச்சி.
நல்ல பயணக்கட்டுரை....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
பதிலளிநீக்குஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
//அருமை!!!
பதிலளிநீக்குஅந்த மட்டக்குதிரைகள் எவ்வளவு கொடுத்து வைத்த ஆத்மாக்கள் பாருங்களேன். அனுதினமும் பரிக்ரமா !!!!!
போன ஜென்மத்துப் புண்ணியவான்களோ என்னவோ!!!!!//
துளசி அம்மா சொல்றது எத்தனை உண்மை பாருங்க !! ஆனா,
இந்த மாதிரி க்ஷேத்ராடனம் செய்யவேண்டும் அப்படி என்றாலே ஒரு கொடுப்பினை வேண்டும்.
அதுவும் முன்வினைப்பயன் .
என்னைப் பாருங்க !! நான் 80 ல, எங்கேங்கயோ சுத்தினேன். இந்த யமத்வாரத்துக்கு போக முடியல்லையே !!
ஒரு வேளை அங்கு போனவங்க எதுனாச்சும் விட்டுட்டு வரணும்னா, நான் மறந்து போய் என் உயிரை விட்டுட்டு
வந்திருப்பேனோ என்னவோ !! இந்த உயிர் கூட ஒரு அர்த்தத்தில் ஆன்மாவைச் சுற்றி இருக்கிற
துணி தானே !!
சுப்பு ரத்தினம்.
வாங்க rishvan, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூவை வந்து பார்க்கிறேன்.
இந்த உயிர் கூட ஒரு அர்த்தத்தில் ஆன்மாவைச் சுற்றி இருக்கிற
பதிலளிநீக்குதுணி தானே !!//
உண்மைதான் சூரி ஐயா.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிக மிக நன்றி.
காளஹஸ்தி என்று நினைக்கிறேன். அங்கும் இது போல் உடுத்தியிருக்கும் உடைகளை அங்கேயே விட்டு விட்டு வர வேண்டும் என்றார்கள்.
பதிலளிநீக்குகயிலை தரிசனம் அபாரம்....
வாங்க ஆதி, நீங்கள் சொல்வது புது செய்தியாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
திருக்கைலை தர்சனம் பெற்றோம். மனமும் குளிர்ந்தது.
பதிலளிநீக்குதிருக்கயிலை தரிசனத்தில் மனகுளிர்ந்தீர்களா?
பதிலளிநீக்குநன்றி.