Wednesday, April 20, 2011

திருக்கேதீச்சரம் திருக்கோயில்
திருக்கேத்தீஸ்வரம்
thiruketheeswaram

மாதோட்டம்

11.03. 2011 காலையில் நாங்கள் அனுராதபுரத்தில் இருந்து திருக்கேதீச்சரத்திற்குப் புறப்பட்டோம்.

திருக்கோயிலின் இருப்பிடம்:

A17 பெருஞ்சாலையில் வடக்கு நோக்கிச்சென்று மகமாச்சியா என்ற ஊரில் மேற்கு நோக்கித் திரும்பி A14 சாலையில் செட்டிகுளம், முருங்கன் வழியாக மன்னார் செல்லும் வழியில் சுமார் 110 கிமீ தொலைவு செல்லவேண்டும். (மதவாச்சி என்கிற ஊர் வரையில் ரயில் வசதி உள்ளது. )பிரதான சாலையின் வடபுறம் திருக்கோயில் வளைவு உள்ளது அதன்வழியாக 4.5கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது

பாலாவி

அருகில் பாலாவி என்னும் தீர்த்தக் கரை அமைந்துள்ளது தூயநீர் நிறைந்த பாலாவியில் நீராடும் துறை படிக்கட்டுக்களுடன் உள்ளது. பெண்களுக்கென உடைமாற்றும் அறை உண்டு.
கரையில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது

புராண வரலாறு

ஈழத்து சிவாலயங்களில் வரலாற்றுப் புகழ் மிக்கதாகவும், நாயன்மார்களால் பாடல் பெற்று, மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளைத் தாங்கி உள்ளது.

’ஈழத்துத்திருக்கோயில்கள்-வரலாறு மரபும் ’,’திருக்கேதீச்சரத் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர்’ முதலிய நூல்கள் வாயிலாக இத்தலச்சிறப்புக்கள் எங்களுக்குத் தெரியவந்தன

//ஆதியில் கேதுவினால் பூசிக்கப் பட்டதால் திருகேதீச்சரம் என்றும், பின் மகா துவட்டா என்னும் தேவதச்சன் பூசித்து திருப்பணி புரிந்ததனால் ’மகாதுவட்டாபுரம்’ என்றும் பெயர் பெற்றது என்று கந்தபுராணம், தட்சிண கைலாய மான்மியம் ஆகியவை கூறுகின்றன.. மகாதுவட்டாபுரமே காலப் போக்கில் ”மாந்தோட்டம்” ஆனது.//

சிவபக்தனான் இராவணனைக் கொன்றதால், இராமன் பிரம்மகத்தி தோஷம் பிடிக்காமல் இருக்க, முன்னேசுவரத்தில் பொன் லிங்கமும், திருகோணேசுவரத்தில் இரத்தினலிங்கமும், திருகேத்தீச்சரத்தில் வெள்ளிலிங்கமும் , பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின் இராமேசுவரத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார். திருக்கேதிச்சரம் இராமேஸ்வரத்திற்கு முற்பட்டது என்று வரலாறு கூறுகிறது.


மேலும் இத்தலத்து இறைவனை அகத்தியமுனிவர், மண்டோதரி, அருச்சுனன் முதலியோர் வழிபட்டதாய் கூறப்படுகிறது. அருச்சுனன் தீர்த்தயாத்திரையின் போது ஈழநாட்டிலுள்ள இத்தலத்தை வணங்கி, பின் நாகர் இனப்பெண்ணை மணந்தார் என்றும் புராணம் கூறுகிறது.

கேதீச்சரநாதனை கெளரிநாதர், கேதீச்சரர், மகா துவட்டாபுரநாதர், ஈழக்கைலாயநாதர், தென்கயிலாயநாதர், மத்யசேதுநிவசர், நாகநாதர், இராஜராஜேவரர், நித்தியமணவாளர், பெருந்துறை ஈசன், எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறார்

இத்தலத்தின் புண்ணியதீர்த்தமாகிய பாலாவி ஆறு பற்றி சம்பந்தர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் “மாதோட்டத்து அத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே” என்றும், சுந்தரர் அருளிய திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ”பாலாவியின் கரைமேல்” என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. ”பன்வினை போக்கும் பாலாவி” என்றும், ”பரம்பரன் உருவாய் உற்ற பாலாவி”என்றும் திருக்கேதீச்சரப்புராணம் கூறுகிறது.

திருக்கோயில் வரலாறு

மாந்தோட்டம் முற்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியது.மாந்தை துறை முகமென்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது.உரோமர்,பாரசீகர், அரேபியர், சீனா, இந்தியர் முதலிய பல
தேசத்தவர்களுடன் வர்த்தகத தொடர்புகள் மாந்தை துறைமுகத்துக்கு இருந்துள்ளன.


//தந்தையால் நாடு கடத்தப்பட்டு மாந்தைத் துறைமுகத்திற்கு வந்த கலிங்க இளவரசன் விஜயன் ”திருக்கேத்தீச்சரர் கோயில் திருப்பணியை திருத்தமுற செய்வித்தான்” என்று மகாவம்சத்திலே கூறப்ப்டுகிறது. விஜயன் காலம் கிமு 543. இதிலிருந்து இக் கோயிலின் பழமை தெரியும்.

திருவாசகம் குயிற்பத்திலுள்ள, ”ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பளித்த பெருந்துறை மேயபிரான்” என்பது மாந்தையை குறிக்குமென்பர்.

கி.பி1028ல் இராசேந்திரசோழன் ஆட்சிசெய்த போது இவ்வாலயத்தில் ஏழுநாள் விழாவெடுத்து வைகாசி விசாகத்தில் தீர்த்தவிழா நடத்தியதாகவும், அவன் காலத்தில் கோயில் பெயர்
இராஜராஜேஸ்வரம் என்றும், ஊர் பெயர் இராஜராஜபுரம் என்றும் வழங்கி பாதுகாப்புக்காக கோயிலை சுற்றி நன்னீர், கடல்நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்பட்டு இருந்தது என்றும் இராசேந்திர சோழன் கல்வெட்டு கூறுகிறது.

கி.பி 13ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தர பாண்டியன் இவ்வாலயத்தில் சிற்பவேலைகள செய்தான், 4வது மகிந்தனின் ஆட்சிகாலத்தில் திருகேத்தீச்சுவரம் புண்ணியதலம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பின் விஜயநகர பேரரசர் காலத்திலும் திருக்கேத்தீச்சரம் சிறப்போடு விளங்கியது.//

//கி.பி 1505 ஆம் ஆண்டு போத்துக்கேயர்கள் கோயிலை அழித்து பொருட்களை கொள்ளை அடித்து கோயில் மதில் ,கோபுரம் ஆகியவற்றின் கற்களை கொண்டு ம்ன்னார் துறைமுகத்தை கட்டினர். இதன் பின் மண் மாரியால் கோயில் மண்ணால் மூடப்பட்டு அடர்ந்த காடாய் மாறியது //

//கோயில் நகரம் எனப் புகழ் பெற்ற பெருநகரமாகிய மாதோட்டம் என்னும் நகரமும் பாலாவியாறும் கி.பி 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீசிய பெரும்புயலால் முற்றிலும் அழிந்து சிதைந்தன. பாலாவி என்னும் ஆறு மேடாகி குளமாகியது

போத்துக்கேயரால் அழிக்கப்பட்டபின் சுமார் மூன்று நூற்றாண்டுகளாகத திருகேத்தீச்சுர ஆலயமும், மாந்தோட்டநகரும் மக்களால் மறக்கப்பட்ட இடமாக மாறியது. //

//கி.பி. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் தோன்றி ஞானபானுவாக விளங்கிய ஆறுமுக நாவலர் இலங்கை மாந்தோட்டத்தின் ஒரு பகுதியில் ‘மறைந்து போய் ஒரு மருந்து இருக்கின்றது”, ஒரு திரவியம் இருக்கின்றது”, தேன் பொந்தொன்று இருக்கின்றது” என்று திருக்கேதீஸ்வரத் திருத்தலத்திலெழுந்தருளிய் திருக்கேதீஸ்வர நாதனை இலங்கைச் சைவமக்களுக்கும் சைவ உலகுக்கும் முதன் முதலில் நினைவூட்டி, உணர்வூட்டி, பிரசாரம் செய்து, அறிக்கை ஒன்றையும், துண்டு வெளியீடுகளையும் வெளியிட்டருளினார்கள். இவ்வாறாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நினைவை மக்களுக்கு அறிவித்து உண்ர்த்திய பெருமை ஆறுமுக நாவலர் பெருமான் அவர்கட்கே உரியதாகும்.

அவர் சைவ அன்பர்கள் பலரையும் கூட்டி திருக்கேதீச்சரத்தை கண்டறியச் செய்தார். அன்பர்கள் நகரின் சிதைவுகளை அகற்றிக் கோயிலை புனர்நிர்மாணம் செய்தனர். மறைந்தாகக் கருதப்பட்ட40 ஏக்கர் நிலம் 3100 ரூபாவிற்கு ஏலத்தில் சைவமக்கள் சார்பாக வாங்கி சைவப்பெரியார்கள் நிலத்தில் புதைந்த திருவுருவங்களை கண்டுபிடித்து திருப்பணிகள் செய்தனர். 1903ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

1919 ஆம் ஆண்டு ஆரம்பித்து பலமுறை அன்பர்கள் பலராலும் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அன்பர் திரு. நமசிவாயத்தின் அயராத முயற்சியால் ஆலயம் சிறப்புடன் 2003ல் கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டுள்ளது//

//இவ்வாலயத்தில் திருஞானசம்பந்தர்மடம், சுந்தரர் மடம், நாட்டுக்கோட்டை நகரத்தார் மடம், அம்மன் மடம், பசுமடம், பூநகரி மடம், சபாரத்தினசாமிமடம், சிவராத்திரிமடம், திருவாசக மடம், , திருப்பதி மடம், கெளரீசர்மடம், நாவலர்பெருமான் மடம், விசுவகன்ம மடம், திருக்குறிப்புத்தொண்டர் மடம், என பல மடங்கள் 1990ஆம் ஆண்டு வரை காணப்பட்டன. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தில் அரசுப்படைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி, ஒரு மடம்கூட மிஞ்சவில்லை அழகிய வேலைப்பாடு மிகுந்த தேரும் குண்டுவீச்சில்
தப்பவில்லை. 2003லிருந்து பூஜைகள் நடந்து வருகிறது//

//இலங்கையில் ஆட்சி செய்த சோழ, பாண்டிய மன்னர்களால் சிறப்புடன் விளங்கியது. திருக்கேதீச்சரத்தின் உயர்வு தாழ்வுகளுக்கேற்ப இலங்கை வாழ் மக்கள் வாழ்வும் தாழ்வும் ஏற்பட்டது//என சொல்கிறார்கள்

திருக்கோயில் அமைப்பு

இக்கோயில் ஐந்து நிலைகளுள்ள இராசகோபுரத்தைக் கொண்டுள்ளது. அதன் மேலே ஐந்து கலசங்கள் விளங்குகின்றன. இராஜகோபுரத்தின் அருகில் அமைந்துள்ள உயரமான கோபுரத்தில் இரண்டு டன் எடையுள்ள வெண்கல் ஆலயமணி காணப்படுகிறது.இது இசைக்குறிப்பில் காணப்படும் ’இ’ என்ற நாத ஒலியமைப்பில் இது உருவாக்கப்பட்டதென்கிறார்கள்

கோபுரத்தின் உள் நுழையுமுன் வலதுபுறம் குணவாசல் பிள்ளையார்,இடது புறம் குணவாசல் சுப்பிரமணியர் சந்நிதிகள் உயரமாய் அமைந்துள்ளன. நடுவில் நந்திமண்டபம் பெரிதாக இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் ,கோபுரத்தின் இரு புறமும் சூரிய சந்திரர்களின் சந்நிதிகள் உள்ளன. கொடிமரம்,பலிபீடம்,நந்தி முதலியவை சுவாமி சந்நிதிக்கு நேரே அமைந்துள்ளன, துவார பாலகர்கள் வாயிலில் இருக்கிறார்கள். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

திருக்கேதீச்சரம் இறைவன் பெயர்- திருகேத்தீச்சர நாதர்
இறைவி பெயர்- கெளரிஅம்மை,
தீர்த்தம்- பாலாவி.
தலவிருட்சம் - வன்னி..

கர்ப்பகிரகம்,அர்த்தமண்டபம்,மகாமண்டபம் ஆகியவை உள்ளன.மஹாமண்டபம் அஸ்பெஸ்டாஸ் கூரையோடு விளங்குகிறது.

மூலவர் சிறிய இலிங்கத்திருமேனியுடன் விளங்குகிறார். விமானம் 3 அடுக்குகளைக் கொண்டிருக்கிறது.உள்ளே நுழைந்ததும் தென்பிரகாரத்தில் பதிகம் பாடிய சம்பந்தர், கேதுபகவான், சமயக்குரவர் நால்வர், சேக்கிழார், சந்தானகுரவர், திருமுறைகள் வேதாகமம், பதிகம் பாடிய சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.மேற்குப் பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், சோமாஸ்கந்தர், பஞசலிங்கம், சோமாஸ்கந்தர் ,மகாவிஷ்ணு, மகாலிங்கம், மகாலட்சுமி ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன.

வடக்குப்பிரகாரத்தில் தெற்கு நோக்கி ஆறுமுகர் வள்ளி தெய்வயானை உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். வடகிழக்கில் யாகசாலை,பைரவர் சந்நிதி,பள்ளியறை,நவக்கிரக சந்நிதி ,நடராசர் சந்நிதி , கருவூலம், அமைந்துள்ளன. கர்ப்பகிரகத்தின் வெளிச் சுவரின் தெற்கில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோற்பவர், வடக்கில் பிரம்மா துர்க்கா, சண்டேசர். ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.63 நாயன்மார்கள், சேக்கிழார், நால்வர், சந்தானக் குரவர்கள், நம்பியாண்டார் நம்பிகள், ராசராசன் ஆகியோருக்குச் சிலைகள் உள்ளன. ராசராசனது கையில் திருமுறை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன.

கோயிலுக்கென தேர்கள் உள்ளன.வசந்த மண்டபம் உள்ளது

திருஞானசம்பந்தர் தேவாரம்:

//விருது குன்றமா மேருவி னாணரவாவன லெரியம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றறைபதி எந்நாளும்
கருது கின்றவூர்க் கனைகடல் கடிகமழ் பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரம் கைதொழக் கடுவினை யடையாவே.//

சுந்தரர் தேவாரம்:

//கறையார் கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயும் கேதீச்சரத் தானை
மறையார்புக ழூரன்னடித் தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொல்லக் கூடாகொடு வினையே//

விழாக்கள்

ஐந்து பெரிய தேர்கள் வைகாசி விசாகத்தின் போது பவனி வரும். மகாசிவராத்திரி சமயம் பாலாவி நீர் எடுத்து மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்வர். இதனை தீர்த்தக்காவடி என்பர்.அம்மனுக்குக் கேதார கெளரி விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாலாவி குளத்தில் குளித்து மக்கள் திருகேத்தீச்சரநாதரை வழிபடுகிறார்கள். நாங்கள் போன போது உச்சிகால பூசை நடந்து கொண்டு இருந்ததது அதனால் நேரே கோவில் போய் விட்டோம். பூசைசெய்யும் கட்டளைக்காரர்கள் மட்டும் தான் உள்ளே அனுமதி நாங்கள் வெளியிலிருந்து –மகாமண்டபத்திலிருந்து இறைவனை வணங்கினோம். இத்தலத்திற்குரிய தேவாரப்பாடல்களை சந்நிதியில் நின்று பாடினோம்.

உள்பிரகார வழிபாடு முடியவும் கோயில் நடை சார்ர்த்தும் நேரம் வந்தது..

பின் பாலாவி குளத்திற்குச் சென்று தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு அங்கு இருக்கும் பாலாவிப் பிள்ளையாரை வணங்கி வந்தோம். திருகேத்தீச்சர கோவில் வாசலில் புத்தக கடை, மாலைகள்,கலைப்பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. என் கணவர் திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சனப் பெருவிழா மலர், திருக்கேதீச்சர தலவரலாறு, புத்தகங்கள் வாங்கினார்கள்.

மதிய உணவுக்காக ,சைவ உணவகத்தை தேடித் தேடி போய் மன்னார் கிராண்ட் பஜாரில் உள்ள கமலா உணவகம் போய் உணவு சாப்பிட்டோம்.

பிறகு அன்றிரவு தம்பல்ல என்ற ஊருக்குச் சென்று தங்கினோம்.அடுத்த நாள் நாங்கள் திருக்கோணேஸ்வரம் சென்றோம். அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்..

37 comments:

Chitra said...

அருமையான பகிர்வு. உங்க கூட வந்து நாங்களும் பார்த்த மாதிரி உணரும் படி எழுதி இருக்கீங்க... படங்கள், அழகு.

ராமலக்ஷ்மி said...

நீலவானப் பின்னணியில் படங்கள் யாவும் வெகு அழகு. தகவல்களுக்கு நன்றி.

வெண்கல ஆலயமணியைப் படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லையோ தெரியாது. ஆனால் விவரித்த விதத்திலேயே கற்பனை செய்து கொள்ள முடிகிறது.

கோமதி அரசு said...

நன்றி சித்ரா.

கோமதி அரசு said...

முதல் படத்தை பெரிது செய்துப் பார்த்தால் ஓரளவு மணிக்கூண்டும், மணியும் தெரியும் ராமலக்ஷ்மி.

நன்றி.

எல் கே said...

மாதோட்டம் , பொன்னியின் செல்வனில் படித்துள்ளேன். சைவ மூவரில் ஒருவர் இங்கு வந்துள்ளதாக கேள்வி பட்டுள்ளேன்

Madhavan Srinivasagopalan said...

'மாதோட்டம்' -- இதுதான் எண் கண்ணில் முதலில் / பெரியதாக பட்டது.
காரணம்.. எல்.கே சொன்ன அதே காரணம்.. .

உங்கள் இறைப் பயணம் சிறப்பாக இருக்கிறது.. மேன்மேலும் தொடரட்டும்..

ராமலக்ஷ்மி said...

ஆம் தெரிகிறது:)!

மற்ற படங்களையும் இப்போது பெரிது படுத்தி பார்த்து ரசித்தேன்.

நன்றி.

கோவை2தில்லி said...

படங்களுடன் நல்ல பகிர்வு. நேரில் சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தியது அம்மா.

மாதேவி said...

திருகேத்தீச்சர நாதர் அருமையான தலவரலாறு, ஆலயஅமைப்பு, இறைவன் மகிமை, பாலாவி தீர்தம், என பூரணமான பதிவு.

எம்மையும் மீண்டும் தர்சிக்கச் செல்ல தூண்டுகிறது. மிக்க மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

நானும் கல்கியின் பொன்னியின் செல்வனில் படித்து இருக்கிறேன் மாதோட்டத்தைப்பற்றி, சரித்திர நிகழ்வுகளை அவரை மாதிரி யார் எழுத முடியும்!

நன்றி எல்.கே.

கோமதி அரசு said...

வாங்க மாதவன் , உங்களுக்கும் பொன்னியின் செல்வன் நினைவுக்கு வந்ததா? மகிழ்ச்சி.

மக்கள் டி.வியில் கதை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் பொன்னியின் செல்வனைப் பற்றி.

சரித்திர நாவல் நாடகமாய் வரப்போகிறது மக்கள் டி.வியில், மணிரத்னம் சினிமா எடுக்க போகிறார் என்ற செய்திகள் காதில் விழுகிறது .
அந்த கதாபாத்திரங்களின் சிறப்பை கெடுக்காமல் எடுத்தால் சரி.
நன்றி மாதவன்.

கோமதி அரசு said...

ராமலக்ஷ்மி, நீங்கள் படங்களை பெரிதுப் படுத்தி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
நன்றி ராமலக்ஷ்மி.

கோமதி அரசு said...

நன்றி ஆதி.

கோமதி அரசு said...

மாதேவி, நீங்கள் மீண்டும் திருகேத்தீச்சர நாதரை தரிசித்து உங்கள் பார்வையில் எழுதுங்கள்.

நன்றி மாதேவி.

ஜீவி said...

கண்ணாரக் கண்டு களித்தேன். படங்கள் நாமும் அங்கிருப்பதான உணர்வினைத் தோற்றுவித்தது. உங்களின் விவரிப்புகளோ ஆத்மார்த்தமாக அமைந்து நேரில் இங்கெல்லாம் சென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்தியது. மிக்க நன்றி.

கோமதி அரசு said...

ஜி.வி சார், உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி.

தரிசிக்கும் ஆவலை தந்ததில் மகிழ்ச்சி.

baleno said...

இலங்கையில் நிற்பது மாதிரி ஒரு உணர்வையே ஏற்படுத்தினீர்கள்.நன்றி.

கோமதி அரசு said...

பலினோ, உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

present ,
http://samaiyalattakaasam.blogspot.com/2011/04/blog-post_21.html

appadiyee konsjam ingka vaangka

இராஜராஜேஸ்வரி said...

அழ்கான படங்கள்.அருமையான ப்கிர்வு. பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

அம்பாளடியாள் said...

அழகான படங்கள் அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்.....

இராஜராஜேஸ்வரி said...

ஆத்மார்த்தமான அழகிய படங்களுடனான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

அம்பாளடியாள், உங்கள் முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

மீண்டும் வருக.

இராஜராஜேஸ்வரி said...

ஈழத்து சிவாலயங்களில் வரலாற்றுப் புகழ் மிக்கதாகவும், நாயன்மார்களால் பாடல் பெற்று, மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளைத் தாங்கி உள்ளது.
சிறபாய் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

அருமையான பதிவு. இவ்வளவு விரிவாகச் சொன்னது நன்றாக இருக்கிறது.

M.R said...

திருத்தலங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் படங்களுடன்

பகிர்வுக்கு நன்றி

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முருகானந்தன் அவர்களே.

கோமதி அரசு said...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி M.R.

நண்பர்கள் தின வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

இராஜராஜேஸ்வரிக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

இடுகையா.. படங்களா??.. எது அழகுன்னு ரெண்டும், ஒண்ணுக்கொண்ணு போட்டி போடுது. அருமை.

கோமதி அரசு said...

வாங்க அமைதிச்சாரல், உங்கள் பாரட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

கோமதி அரசு said...

நன்றி M.R.
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்.

கோமதி அரசு said...

நன்றி, Dr. எம்.கே. முருகானந்தன்

உங்கள் முதல் வருகைக்கும் , கருத்துக்கும்.

மாணவன் said...

இனிய வணக்கம் மேம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

மாணவன் said...

இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

KABEER ANBAN said...

ஆறுமாக நாவலர் பற்றி தமிழ் துணைப்பாட நூலில் படித்தது உண்டு. அவர் இத்தகைய பெரிய சைவ கைங்கரியம் செய்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
அழகிய படங்கள் விவரங்களுடன் திருகேத்தீச்வர தரிசனத்திற்கு மிக்க நன்றி