ஞாயிறு, 17 மே, 2020

மாவிளக்குப் பார்த்தல்


நமக்கு என்னமோ கொழுக்கட்டை என்றாலே இனிப்பாதான் இருக்கணும்னு ஒரு பீலிங். பார்க்க அருமையாக உள்ளது. விளக்குமா (மாவிளக்கு ?) எப்படி செய்வது என்று ஒரு பதிவு போடுங்களேன். அதை சாப்பிட்டு தான் எம்புட்டு நாள் ஆச்சி!


மேடம், சீக்கிரம் அந்த மாவிளக்கு செய்முறை பதிவை போடுங்க। ப்ளீஸ்!



போன பதிவில் விசு அவர்கள் கொடுத்த பின்னூட்டத்தில்  இப்படிக் கேட்டு இருந்தார். மீண்டும் 16 ம் தேதி வந்து கேட்டுவிட்டார். 
நிஜமாக கேட்டாரோ, அல்லது விளையாட்டுக்குக் கேட்டாரோ தெரியாது.நான் மாவிளக்கு பதிவு போட்டு விட்டேன்,


பெரிய கார்த்திகைக்குச் செய்த மாவிளக்கு
சோமவாரத்திற்குச் செய்த மாவிளக்கு
"மாலை மலர்" பத்திரிக்கையில் சர்வ மங்கலங்களும் தரும் மாவிளக்கு விரத வழி பாடு பற்றியும் ,   மாவிளக்கு செய்யும் காலங்கள் மற்றும் செய்யும் முறை பற்றியும் இருக்கிறது படித்துப் பாருங்கள் விசு அவர்களே.

மாலை மலரில் படித்ததில் பிடித்தது.

//இடித்தெடுத்த பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே ‘மாவிளக்கு’ ஆகும். காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது. அரிசி (அன்னம்) - பிரம்ம ஸ்வரூபமாகும். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது இந்த அன்னம்தான். வெல்லம் என்பது மதுரம். அதாவது இனிமை. அம்பிகை மதுரமானவள். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.//

நன்றி :- மாலை மலர்


எங்கள் வீட்டில் செய்யும் காலங்கள்- கார்த்திகை சோமவாரம் (திங்கள் கிழமை) அப்புறம் ஆடி வெள்ளி, தை வெள்ளி- இறைவனுக்கு ஏதாவது வேண்டிக் கொண்டு, கோவிலில்,  வீட்டில்  மாவிளக்கு பார்ப்போம். நாங்கள் 'மாவிளக்கு பார்த்தல்' என்று தான் சொல்வோம்.

ஆடி வெள்ளி, தை வெள்ளியில், ஆவணி ஞாயிறு, ஆகிய காலங்களில் அம்மனுக்கு மாவிளக்கு பார்ப்பார்கள். புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு கார்த்திகை சோமவாரத்தில், சஷ்டியில் முருகனுக்குப் பார்ப்பார்கள்.  பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்திற்கு மாவிளக்கு பார்ப்பார்கள்.

விரதங்களும் உடல் நலமும் -  என்ற  முன்பு எழுதிய எனது பதிவிலிருந்து கொஞ்சம்,- மாவிளக்கு பற்றி வருவதால்.
          
என் அம்மா கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமை (சோமவாரவிரதம்) வீட்டில் என் அப்பாவைத் தவிர எல்லோரையும் கடைப்பிடிக்க வைத்தார்கள். காலையும், மதியமும், உணவு அருந்தாமல், மாலை மாவிளக்கு செய்து பூஜை முடிந்தபின் தான் உணவு.

பள்ளி சென்று வந்தபின் குளித்து பூஜையில் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் பஜனை. அம்மா எப்போது பாடல் முடிப்பார்கள் உணவு தருவார்கள் என்று இருக்கும்..பூஜை முடிந்தபின் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவிளக்குப் பிரசாதம் கொடுத்து வந்தபின்தான் எங்களுக்கு உணவு. அப்பாதான், ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’’ என்பார்கள். 
இந்த விரதத்தைச் சிறு  வயதில் கடைபிடிக்கக் கஷ்டமாய் உணர்ந்தாலும், இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்றும் சோமவார விரதம் கடைப்பிடித்து வருகிறேன்.

எங்கள் வீட்டில் மாவிளக்கு ஒரு யாழ்ப்பாணத்துத் தேங்காய் போலப் பெரிதாக இருக்கும். மூன்று மாவிளக்கு ஏற்றுவார்கள். ஒற்றைப்படையில் தான் எங்கள் வீடுகளில் ஏற்றுவோம்.

நம்ம அதிரா, சஷ்டிக்கு  தினைமாவில் மாவிளக்கு செய்வார் . அதுவும் நன்றாக இருக்கும்.

விசு நீங்கள் கேட்ட செய்முறைக்கு வருகிறேன்.

ஒரு ஆழாக்கு, அல்லது ஒரு கப் பச்சரிசி   எடுத்துக் கொள்ளுங்கள்அதை நன்கு கழுவிவிட்டு  வேறு தண்ணீர் ஊற்றி  ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்பு நீரை  ஒரு சுத்தமான துணியில் வடிகட்டிக் கொள்ளுங்கள் , அந்தத் துணியைக் கீழே விரித்து அரிசியைப்  பரப்பி விடுங்கள். கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும்போது மிக்சியில் திரித்துக்கொள்ளுங்கள்.(முன்பு உலக்கை கொண்டு உரலில் இடிப்போம்) நைஸாகச்  சல்லடையில் சலித்துக் கொள்ளுங்கள். சிலர் சலிக்கமாட்டார்கள், அது 'பிறுபிறு' என்று இருக்கும். சாப்பிட முடியாது வயிற்றுக்கும் ஒத்துக் கொள்ளாது என்று அம்மா சலித்துத்தான் செய்வார்கள். நானும் அப்படியே செய்வேன்.

ஒரு கப் அரிசி மாவுக்கு கால் கப் பொடித்த வெல்லம் போதும்.  அல்லது இனிப்பு வேண்டும் என்றால் மேலும்   ஒரு கைப்பிடி வெல்லத்தூள்    எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் (எங்கள் வீடுகளில் மாவிளக்கு செய்ய என்றே தனியாகப் பாத்திரம் வைத்து இருப்போம்)  அச்சுவெல்லம், அல்லது மண்டைவெல்லம் (பேட்டை வெல்லம்) அல்லது பக்கெட் வெல்லம் எது எடுத்துக் கொண்டாலும் நன்றாகப் பொடித்துக் கொண்டு மாவையும், வெல்லத்தையும் மாவிளக்குப் பாத்திரத்தில் போட்டு  மாவு அளவுக்கு ஏற்றாற்போல்  ஒரு ஸ்பூன் நெய்,அல்லது இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி   ஏலக்காய்ப் பொடி ,  போட்டுக் கையால் நன்கு பிசைய வேண்டும். பிசைந்து அப்படியே மூடி வைத்து விட்டு  பூஜைக்கு செய்ய வேண்டிய வேலைகளைச்  செய்துவிட்டு வந்து கலவையைக் கையால் எடுத்துப் பிடிக்க வருகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் மாவு வெல்லம் கலந்த கலவையை மிக்சியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கலாம். கவனம் தேவை. மிகவும் ஓடி விட்டால் பாயசம் போல் ஆகிவிடும். 

முன்பு மர உலக்கையில் இருப்புப்பூண் போட்டிருக்கும். அதில் உரலில் இரண்டு இடி இடிப்பார்கள் மிக அழகாய் மாவு திரண்டு வந்து விடும்.

எடுத்து மூன்று உருண்டையாக, அல்லது இரண்டு உருண்டையாக, அல்லது ஒன்றோ அவர் அவர் வீட்டு வழக்கப்படி உருண்டை செய்து  நடுவில் குழி செய்துகொண்டு நெய்யை ஊற்றிப் பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டியதுதான். மாவிளக்கில் குங்குமம் நல்ல தரமான குங்குமப்பொட்டு வைக்க வேண்டும். உங்கள் ஊரில் கிடைக்கவில்லையென்றால்  பரவாயில்லை.

தண்ணீர், பால் என்று சிலர் மாவில் விட்டுப் பிசைவார்கள். நாங்கள் அப்படி செய்வது இல்லை. அரிசி மாவு காய்ந்து விட்டால்தான் அப்படி செய்ய வேண்டும். ஈர அரிசி என்றால் இவை எல்லாம் தேவை இல்லை, வெல்லம் கலந்து அழுத்திப் பிசைந்தாலே போதும்.

மகனது ஊரில் கிடைத்த இலையில் மாவிளக்கு -பெரிய  கார்த்திகை  அன்று ஏற்றிய மாவிளக்கு- தோட்டத்தில் இருந்த ரோஸ் கலர் அரளிப்பூ

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு சமயம்  மாவிளக்கு மாவு கொண்டு போக முடியவில்லை  என்றால் கோவில் வாசலில் மாவிளக்கு மாவு விற்பார்கள் வாங்கி, தேன் கலந்து, மாவிளக்குப் பார்த்துவிடுவார்கள்.

எல்லோருக்கும் தெரிந்ததுதான் மாவிளக்கு செய்முறை. விசு அவர்கள் கேட்டதால் இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் 
---------------------------------------------------------------------------------

59 கருத்துகள்:

  1. மா விளக்கு ஏற்றுவது நமது பாரம்பர்யம்....

    இதற்கு ஈடு இணை ஏதுமில்லை...
    அம்பாளை நமது வீட்டுக்குள் அழைத்து வரும் திரு விளக்கு...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

    //அம்பாளை நமது வீட்டுக்குள் அழைத்து வரும் திரு விளக்கு...//

    அருமை.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மாவிளக்கு முன்பெல்லாம் தேலகோட்டை கோவில்களில் சிறப்பாக இருக்கும்.

    இப்பொழுது எல்லாமே குறைந்து போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      நாங்கள் மாயவரத்தில் இருந்த போது வீட்டுக்கு எதிரில் இருந்த காமாட்சி அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை (மூன்றாவது வெள்ளிக்கிழமை )அந்த தெருமுழுவதும் ஒன்றாய் போடுவோம் . மேளதாளத்தோடு வீடுகளிலிருந்து பாத்திரங்களில் மாவிளக்கு ஏந்தி வருவார்கள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். அப்போது அம்மனுக்கு சந்தனகாப்பு செய்வார்கள். பொங்கல், சுண்டல் என்று எல்லோருக்கும் கொடுப்பார்கள்.

      தேவகோட்டை கோவில்களில் இப்போது ஏன் குறைந்து விட்டது செய்பவர்கள் வேறு வேறு உற்களில் நாடுகளில் இருக்கிறார்களோ!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. விசு replied to a comment on "மணிக்கொழுக்கட்டை"

      7 hours ago
      நமக்கு இறைவனுக்கு வேண்டிக்குற பழக்கம் எல்லாம் இல்லைங்க! "தன்னை போல் பிறரை நேசி" அது ஒன்னு தான் என் இறையாண்மை. அதை கடைபிடிக்குறதுக்கே தகிடத்தம் போடுன்னு இருக்கேன். இந்த மாவிளக்கு இனிப்பை பல வருடங்களுக்கு முன் உண்டு இருந்தாலும் அந்த சுவை இன்னும் மனதில் அப்படியே இருக்கின்றது. இதை செய்து சாப்பிட வேண்டும் என்று நெடு நாள் ஆசை. இந்த கொரோனா நாட்களில் நேரம் அதிகம் இல்லத்தில் செலவு செய்ய படுவதால் செய்யலாமே என்று ஒரு ஆசை.
      In Response to a comment by விசு

      நீக்கு
    3. வணக்கம் விசு, வாழ்க வளமுடன்
      //நமக்கு இறைவனுக்கு வேண்டிக்குற பழக்கம் எல்லாம் இல்லைங்க! "தன்னை போல் பிறரை நேசி" //

      இது தான் உண்மையான இறையாண்மை.
      எப்போதும் இது போல் கடைபிடித்து எல்லோரையும் நேசித்துக் கொண்டு இருங்கள்.
      மாவிளக்கு மாவு, தேங்காய் இரண்டும் சேர்த்து சாப்பிடுவது இனிமை.
      என் மகனுக்கு மிகவும் பிடித்தமானது.
      சோமவாரத்தில் மாவிளக்கு செய்யும் போது பெரிதாக மாவிளக்கு செய்யுங்கள் அடுத்த வாரம் மாவிளக்கு செய்யும் வரை வேண்டும் எனக்கு என்பான். அக்கம் பக்கம் வேறு அங்கு கொடுப்பேன். இப்போது எலுமிச்சை அளவு ஆகி விட்டது. அக்கம் பக்கத்தில் கொடுத்து வாங்கும் அளவு பழகவில்லை இன்னும். அதனால் மிகவும் சின்னதாக விளக்கு.

      கொரோனா காலத்தில் இல்லத்தில் நல்ல பொழுதாக குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருங்கள், மாவிளக்கு இனிமையை ரசித்து உண்டு.
      செய்து சாப்பிடுங்கள்.




      நீக்கு
  4. சூப்பர். மிக்க நன்றி. சிறுவயதில் அக்கம்பக்கத்தில் இருந்து தருவார்கள். அந்த காலத்தில் நான் இதை அதிரசம் செய்ய தயாராக வாய்த்த மாவு என்று தான் நினைத்தேன்.

    இந்த வாரம் செய்ய போகிறேன். மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போல் அதிரசம் மாவு போல்தான் இருக்கும்.
      இந்த வாரம் செய்து உங்கள் பழைய நினைவுகளை புதுபித்து மகிழுங்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. மிக அருமையாகச் செய்திருக்கிறீர்கள் அன்பு கோமதிமா.
    தீப ஒளி நன்மைகள் தந்து , தீமைகளைப் புறந்தள்ளும். மாவிளக்கைத் தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //தீப ஒளி நன்மைகள் தந்து , தீமைகளைப் புறந்தள்ளும். மாவிளக்கைத் தரிசித்துக் கொண்டேன்.//

      நீங்கள் சொன்னது அருமை. அப்படியே எல்லா தீமைகளும் நம்மை விட்டு அகலட்டும்(கொரோனா)

      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  6. ஆவ்வ்வ்வ் கோமதி அக்கா இன்று மாவிளக்குப் பதிவோ...

    //நிஜமாக கேட்டாரோ, அல்லது விளையாட்டுக்குக் கேட்டாரோ தெரியாது.நான் மாவிளக்கு பதிவு போட்டு விட்டேன்,//

    ஹா ஹா ஹா அதனாலென்ன... எனக்கும் உங்கள் மாவிளக்கு ரெசிப்பி வேணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      உங்களுக்கு ரெசிப்பி வேணும் என்றது மகிழ்ச்சி.

      நீக்கு
  7. நாங்கள், மாவிளக்குப் போடுறேன் என நேர்ந்து வச்சு, போடுவோம் கோயில்களில்.

    //அப்பாதான், ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’’ என்பார்கள்//
    ஹா ஹா ஹா முன்பும் சொல்லியிருக்கிறீங்கள்.. நினைவுகள் அழியாதவை..

    //எங்கள் வீட்டில் மாவிளக்கு ஒரு யாழ்ப்பாணத்துத் தேங்காய் போலப் பெரிதாக இருக்கும்.//
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் அங்கு பெரிய தேங்காய்கள் இல்லையோ கோமதி அக்கா, எங்கள் நாட்டில் பொதுவாகப் பெரிசுதான்.. மாவிளக்கும் பெரிசாகத்தான் போடுவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேர்ந்து கொண்டு போடுவது தான் கோவில்களில் பெரும்பாலும். நோயை நீக்க வேண்டிக் கொண்டு போடுவார்கள். வைத்தீஸ்வரன் கோவிலில் தையல் நாயகி முன்பு, சங்கரன் கோவிலில் எல்லாம் அதிகமாக பார்த்து இருக்கிறேன். படுத்து இருப்பார்கள் அவர்கள் வயிற்றின் மேல் இலையில் மாவிளக்கு இருக்கும். பார்க்கும் போது மெய் சிலிர்த்து போகும்.

      திருவனந்த புரத்தில் தாத்தாவீட்டில் தென்னைமரத்தில் பெரிய தேங்காயாக இருக்கும் , தாத்தா யாழ்பாணத்து தென்னை என்று சொல்லிச் சொல்லி மனதில் பதிந்து விட்டது.

      உங்கள் ஊரில் இளநீர் குடித்தோம் நிறைய தண்ணீர் இருந்தது.
      எங்கள் வீட்டிலும் மாவிளக்கு பெரிதாகதான் போடுவோம், எங்கள் குடும்பம் பெரிது, அப்புறம் அக்கம் , பக்கம் கொடுக்க வேண்டும்.

      நீக்கு
  8. //நம்ம அதிரா, சஷ்டிக்கு தினைமாவில் மாவிளக்கு செய்வார் . அதுவும் நன்றாக இருக்கும்.//

    ஆஆஆ நான் போட்ட மாவிளக்கை ஆரும் மறக்க மாட்டீங்கள்:)..

    ஓ நீங்கள் அரிசியில் மாவிளக்குப் போட்டிருக்கிறீங்கள் மற்றும்படி முறை ஒன்றாகவே வருது கோமதி அக்கா, நாங்கள் தண்ணிக்குப் பதில் தேன் கொஞ்சம் சேர்ப்போம், இன்னும் தண்ணி தேவை எனில் கொஞ்சம் வாழைப்பழம் சேர்ப்பது வழக்கம்...

    ஆனா இப்படிக் குட்டித்திரி எனில், எப்படி மா அவிந்து வரும்? நீண்ட நேரம் எரிப்பீங்களோ?.. மிக அழகாக இருக்கிறது மாவிளக்கு, பூ எல்லாமும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் திணை மாவு மாவிளக்கை மறக்க முடியுமோ!
      முருகனுக்கு பிடித்த தேனும், திணைமாவும் இல்லையா?

      நான் சங்கரன் கோவிலில் கிடைக்கும் ரேடிமேட் மாவுக்கு தேன் கலந்து போடுவார்கள் என்று போட்டு இருக்கிறேன் பார்த்தீர்களோ.நாங்கள் தண்ணீரே சேர்க்க மாட்டோம்.
      பக்கத்தில் உடகார்ந்து இறை நாமங்களை பாடிக் கொண்டு நெய் ஊற்றிக் கொண்டே இருப்போம். இரண்டு மணி நேறம் விளக்கு எரியும் அதிரா.
      மருமகள் அப்போதுதான் உருக்கிய நெய் கொண்டு வந்து பக்கத்திலேயே வைத்து இருக்கிறாள் பாருங்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. எங்கள் வீட்டில் செய்யும் வழக்கமில்லை. நண்பர்கள் வீடுகளில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      வீட்டில் செய்யும் பழக்கமில்லையா? கோவில்களில் செய்வீர்களா? அதுவும் இல்லையா?

      நீக்கு
  10. செய்முறை அழகான விளக்கங்களுடன் கொடுத்திருக்கிறீர்கள். பள்ளி செல்லும் காலத்திலிருந்தே விரதங்கள் இருக்கத் தொடங்கி இருக்கிறீர்களா? அட..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்முறை கொடுப்பது எனக்கு வராது என்பதால்தான் சமையல் குறிப்பே அதிகமாய் போடுவது இல்லை. அளவு சரியான படி போட வேண்டுமே, அம்மா கண் அளவு கை அளவு சொல்வார்கள். திருமணம் ஆகி வந்தவுடன் மாமியார் தான் ஆழாக்கு அளவுகள் சொல்லித் தந்தார்கள்.

      ஆமாம், பள்ளி பருத்திலேயே விரதங்கள் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டேன். அம்மா கடை பிடிக்கச் சொன்ன விரதங்கள் பூஜைகள் எல்லாம் அதனால் என்ன நன்மைகள் எல்லாம் "விரதங்களும் உடலநலமும்" பதிவில் இருக்கிறது. அப்போது தமிழ்மண போட்டியில் மூன்று பதிவுகள் தேர்ந்து எடுத்ததில் இந்த பதிவும் ஒன்று.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. எங்க வீடுகளில் இரண்டு மாவிளக்குகள். சலிக்கக் கூடாது. பெரும்பாலும் மாரியம்மனுக்கே போடுவதால் சலிப்பதில்லை. ஆனால் மாவை நன்றாக நைசாக அரைத்துவிடுவோம். வெல்லத்தூளைப் போட்டுக் கலந்தாலே உருட்ட வந்துவிடும். இப்போல்லாம் மாவிளக்குத் திரி என்றே விற்கிறார்கள். அதைத் தான் வாங்குகிறேன். என் அம்மா வீட்டில் உதிரியாகவே இருக்க வேண்டும். அதோடு நாட்டுச் சர்க்கரை தான் கலப்பார்கள். வெல்லம் சேர்ப்பதில்லை. அங்கே பெரும்பாலும் வீட்டிலே போடுவார்கள். நானும் வீட்டிலும் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போது கோயிலுக்குப் போகும்படி கிட்டத்தில் இருப்பதால் கோயிலுக்கே போய்ப் போடுகிறேன். மாவிளக்குப் பதிவு நானும் குழுமத்தில் போட்டிருக்கேன். தேடி எடுத்துப் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      மாயவரம் பக்கம் மாரியம்மன், பேச்சி அம்மனுக்கு துள்ளுமாவு என்று செய்வார்கள் அப்படியே இடித்த மாவில் வெல்லம் கலந்து விளக்காய் செய்யாமல் அப்படியே வைத்து வேப்பிலையை மேலே போட்டு கொண்டு வருவார்கள் மாரியம்மன் கோவிலுக்கு.

      வீட்டில் குழந்தை பிறந்தவுடன் வேண்டிக் கொள்வார்கள் துள்ளுமாவு செய்து வணங்குவதாக. நானும் பேத்தி பிறந்தவுடன் அம்மன் கோவிலில் போய் செய்து இருக்கிறேன்.

      மாவிளக்கு திரி கீழே உருண்டையாக மேல் நோக்கி எரிவது போல் திரி உண்டு நானும் வாங்கி இருக்கிறேன் மாயவரத்தில் . மாயவரத்தில் சோமவாரத்திற்கு போட்ட மாவிளக்கு படங்கள் கிடைக்கவில்லை தேடனும் அதில் அந்த திரி போட்டு இருக்கிறேன். உங்கள் அம்மாவீட்டில் செயவது போல் உதிரியாக மாவை வைத்து அதில் விளக்கு எரிவதைப் பார்த்து இருக்கிறேன் கோவிலில். இங்கு வண்டியூர் மாரியம்மன் கோவில் ஆவணி ஞாயிறு நிறைய பேர் மாவிளக்கு போடுவதைப் பார்த்து இருக்கிறேன்.

      நானும் வேண்டி இருக்கிறேன், இந்த கொரோனா காலம் முடிவடைந்தவுடன் மாரியம்மனுக்கு போய் (வேண்டுதலை நிறைவேற்றும் காலம் விரைவில் வர வேண்டும்.)
      செய்ய வேண்டும்.

      நீங்களும் மாவிளக்கு பதிவை பகிருங்கள்.
      உங்கள் முறை, அம்மாவீட்டு மாவிளக்கு செய்யும் முறைகளை சொன்னது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. மா விளக்கு செய்முறை அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      செய்முறை சரியாக சொல்லி இருக்கிறேன் என்று தெரிகிறது.
      நன்றி தன்பாலன்.

      நீக்கு
  13. இனிய நண்பர் விசு அவர்களுக்கும் நன்றி...

    எனது வீட்டில் மனைவி மா விளக்கு செய்வதில் கில்லாடி... அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனைவியும் மா விளக்கு செய்வதில் கில்லாடி என்று தெரிந்து மகிழ்ச்சி.
      அதுதான் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்று போட்டேன்.
      அனைவருக்கும் பிடித்தமானது தானே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      விசு அவர்கள் கேட்டுக் கொண்டதால் போட்ட பதிவு.

      நீக்கு
  14. மாவிளக்கு - வீட்டில் வருடா வருடம் போடுவதுண்டு. இங்கே நான் தனியாக இருப்பதால் செய்வதில்லை. நண்பர்களின் வீடுகளில் மாவிளக்கு போடும்போது எனக்கும் ஒரு பங்கு வந்து விடும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு நண்பர்கள் வீடுகளில் இருந்து மாவிளக்கு வந்துவிடுவது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  15. மாவிளக்கு நல்ல அழகா இருக்கு அக்கா. 2017 ல் ஊரிக்கு போயிருந்தபோது சாப்பிட்டது. ஆனா சின்னப்ள்லையில் சாப்பிட்ட திருப்தி இல்லை. தேனும்,தினைமாவும்தான் மாவிளக்கு. அரிசிமாவில் நான் இப்போதான் கேள்விபடுகிறேன். திரி சிலவேளை விளக்கின் நடுவில் வைத்து அம்மா நெய்விட்டு ஏத்துவா. அவிந்து வரும்.பின் சாப்பிட நல்லாயிருக்கும்.நினைத்தாலே வாயூறுகிறது.
    அழகா இருக்கு உங்க வீட்டு,மகந்து வீட்டு பூஜையறைகள்.
    "மாவிளக்கு பார்த்தல்" புதிதாக இருக்கு. நல்லாயிருக்கு. உங்க செய்முறையும் அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரிசகி அம்மு, வாழ்க வளமுடன்
      சின்னபிள்ளையில் சாப்பிட்ட நினைவுகள் அருமை.
      தேனும், திணைமாவும் நன்றாக இருக்கும் நானும் ஒரு நாள் செய்ய வேண்டும்.
      விளக்கின் நடுவிலும் வைக்கலாம் திரி.
      அம்மாவின் கை பக்குவம் அம்மா செய்த மாவிளக்கு நினைவுகள் வந்து மகிழ்ச்சி படுத்துகிறது உங்களை, அதை கேட்க எனக்கு மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.
      எங்கள் பக்கம் மாவிளக்கு பார்த்தல் என்று தான் சொல்வார்கள்.

      நீக்கு
  16. பள்ளி செல்லும் காலத்திலிருந்தே விரதம்
    வியப்பா இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      பள்ளி செல்லும் காலத்திலிருந்து விரதம் உண்டு.
      என் குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் காலத்திலிருந்து விரதம் இருந்தார்கள்.
      வேலைக்கு போனபின், திருமணம் ஆனதும் தான் விரதம் இருப்பதை விட்டார்கள்.

      நான் தொடர்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. இறைவன் முன் வைத்திருப்பது பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. இதன் விளக்கம் தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கள் வீடுகளில் இப்படியான பழக்கம் இல்லாததால் விரதமும் இல்லை. சுவைத்ததும் இல்லை.

    துளசிதரன்

    கோமதிக்கா ஆஹா மாவிளக்கு. சூப்பர் நாங்கள் புரட்டாசி சனிக்கிழமை ஏற்றுவதுண்டு. நீங்கள் பார்த்தல் என்று சொல்லுவீங்க இல்லையா. விளக்கங்களும் தெரிந்து கொண்டோம்.

    தினைமாவு விளக்கும் ஏற்றுவதுண்டு அக்கா முருகனுக்கு. அது தேன் கலந்து. வேண்டுமென்றால் பழம் கலந்து. குறிப்புகள் சொல்கிறேன் கோமதிக்கா.

    ரொம்ப அழகாக வந்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
      கேரளாவில் பழக்கம் இருக்காது.
      மாவிளக்கு சுவையாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்களும் திணைமாவில் ஏற்றுவீர்களா? மகிழ்ச்சி.
      திணை மாவில் அதிரசமும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  18. கோமதிக்கா தினைமாவு நான் கொஞ்சம் லைட்டாக வாணலியில் வறுத்துக் கொள்வேன் அதிகம் எல்லாம் வேண்டாம். அப்புறம் அதில் ஏலத்தூள், ஒரு கப் மாவு எடுத்துக் கொண்டால் 1/4 கப் (எந்தக் கப்பால் அளக்கிறீங்களோ அதே கப்) தேன் கலந்து அல்லது தேன் கொஞ்ச்ம குறைத்துக் கொண்டு பழம் (நல்ல கனிந்த வாழைப்பழம்) பிசைந்து உருட்டி குழி செய்து அதில் நெய் ஊற்றி ஏற்றுதல். இதில் சிலர் நாட்டுச் சர்க்கரை சேர்க்கிறார்கள். 1 கப் என்றால் பாதி நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் பொடித்து, ஏலத்தூள், அப்புறம் தேன் 5,6 ஸ்பூன் சேர்த்து கலந்து இதே போல். சில தேங்காய் கீறலும் வைக்கிறாங்க மாவோடு. நான் வைப்பதில்லை வேண்டுமென்றால் சாப்பிடும் போது துருவலோ அல்லது கீறலோ சேர்த்துச் சாப்பிடலாம். சிலர் நெய்யும் மாவிலேயே கலந்து உருட்டி நெய்வேத்தியம் செய்கிறார்கள் விளக்கு ஏற்றாமல். நான் முதலில் சொன்னது போலவும் செய்வேன். அல்லது நாட்டுச்சர்க்கரை, தேன் ஏலம் கலந்தும் விளக்கு ஏற்றுவேன் அல்லது சில நாட்களில் வெறுமனே உருண்டையாகப் பிடித்து வைத்துவிடுவேன். அப்போது தேங்காய்க் கீறல். நான் முன்பு ஏதோ ஒரு முருகன் கோயிலில் அவர்கள் கலந்து அப்படியே கொடுத்தார்கள் பிரசாதமாக. உருண்டை கூடப் பிடிக்கவில்லை. தினை மாவு தேன், நெய் அவ்வளவே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவும் இப்படித்தான் செய்வார்கள். இலங்கையில் திணைமாவில்தான் மாவிளக்கு செய்வார்கள். முழு தேங்காய் உடைத்து வைத்து கும்பிடிவோம் இல்லையா கீதா அதை தான் மாவிளக்கும் ஏற்றி வழிபட்ட பின் அதை கீறி தேங்காய் கொஞ்சம், மாவிளக்கு கொஞ்சம் வைத்து சாப்பிட தருவார்கள்.
      திருச்செந்தூரில் திணை மாவு பிரசாதம் முருகனுக்கு எப்போதும் உண்டு. கோவிலில் விற்பார்கள். நன்றாக இருக்கும்.
      சஷ்டி சமயம் எல்லோரும் வேண்டிக் கொண்டு திணைமாவை வெல்லம் அல்லது தேன் கலந்து முருகனுக்கு படைத்த பின் எல்லோருக்கும் கொடுப்பார்கள்.

      உங்கள் செய்முறை குறிப்புக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  19. அரிசிமா மாவிளக்கு மிகவும் அழகாக இருக்கிறது.
    நாங்கள் கோவிலில்தான் தினைமாவில் போடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      கோவிலில் மட்டும் தினைமாவில் செய்வீர்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீங்கள் எப்போது பதிவுகள் போட போகிறீர்கள் மாதேவி?
      விரைவில் போடுங்கள் உங்கள் பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    மாவிளக்கு மா பதிவு நன்றாக உள்ளது. அருமையான செய்முறைகளுடன் மா விளக்கு மா தீபங்களுடன் ஜொலிக்கும் படங்களையும் பகிர்ந்து மிகவும் அழகாக பக்தியுடன் பதிவை இட்டுள்ளீர்கள். நானும் தங்களின் மாவிளக்கு தீபங்களை பக்தியுடன் பணிந்து வணங்கி கொண்டேன்.

    மாலை மலருக்கும் சென்று அங்கும் தீபங்கள் ஏற்றும் முறைப்பற்றி விபரமாக படித்து வந்தேன். தாங்கள் சிறு வயது முதல் விரதங்கள் இருந்து வருவதை ஏற்கனவே பகிர்ந்த பதிவில் படித்துள்ளேன். இப்போதும் படித்தேன். இள வயது முதல் நீங்கள் காட்டும் தெய்வ பக்திதான் உங்களை சகல ஜீவராசிகளிடமும் இரக்க மனம் கொண்டவராக இருக்கச் செய்து வருகிறது. வாழ்க தங்களது தொண்டுள்ளம்..

    தங்கள் மகன் வீட்டில் பார்த்த மாவிளக்கு படங்களும் அருமையாக உள்ளது.

    நாங்களும் அம்மா வீட்டிலிருக்கும் போது சங்கர நயினார் கோவிலுக்கு வேண்டிக் கொண்டால். அங்கு சென்று மாவிளக்கு போடுவோம். அப்புறம் வருடாவருடம் கொலு வைக்கும் போது விஜயதசமிக்கு கொலு வுக்கு மாவிளக்கு ஏற்றுவோம். அன்று முக்கால்வாசி புரட்டாசி சனிக்கிழமையாக வந்து விடும். பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்ற வேண்டுமில்லையா? அதனால் விஜயதசமி அன்றே ஏற்றி விடுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //மாவிளக்கு தீபங்களை பக்தியுடன் பணிந்து வணங்கி கொண்டேன்.//

      மகிழ்ச்சி.

      //மாலை மலருக்கும் சென்று அங்கும் தீபங்கள் ஏற்றும் முறைப்பற்றி விபரமாக படித்து வந்தேன்.//

      நீங்கள் மாலைமலர் பதிவை படித்தது அறிந்து மகிழ்ச்சி கமலா.

      அம்மாவின் வழிகாட்டல்தான் இள வயது முதல் தெய்வ பக்தி. அவன் விருப்பபடிதான் எல்லாம் நடக்கும், நடக்கிறது, நடக்கும் என்ற அசையா நம்பிக்கை. அதுதான் எனக்கு துன்பங்கள் வந்தாலும் அவர் அருளால் மன திடம் கிடைத்து வாழ்கிறேன்.

      //நாங்களும் அம்மா வீட்டிலிருக்கும் போது சங்கர நயினார் கோவிலுக்கு வேண்டிக் கொண்டால். அங்கு சென்று மாவிளக்கு போடுவோம். //

      நம் பக்கம் எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்ற கோமதி அம்மனை வேண்டிக் கொண்டு மாவிளக்கு பார்ப்பார்கள் . அம்மன் அருளால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை.

      புரட்டாசி மாதம் சனிக்கிழமை மாவிளக்கு போடுவார்கள், நீங்களும் போடுவது மகிழ்ச்சி.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  21. அடியோங்கள் ஊரில் மாரியம்மன் பண்டிகை, காமாட்சி அம்மன் பண்டிகைக்கு அந்த அம்மன்களுக்கு மாவிளக்கு எடுப்போம். குல தெய்வத்திற்கு மஹா சிவராத்திரியன்று பொங்கல் வைத்து மாவிளக்கு எடுப்போம்.

    அடியேனது கருடசேவை பதிவுகளை மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். சமயம் கிடைத்தால் சென்று பாருங்கள் அம்மா. https://freetamilebooks.com/ebooks/karudasevai/.

    மிக்க நன்றி அம்மா.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் S.Muruganandam, வாழ்க வளமுடன்.

      //ஊரில் மாரியம்மன் பண்டிகை, காமாட்சி அம்மன் பண்டிகைக்கு அந்த அம்மன்களுக்கு மாவிளக்கு எடுப்போம். குல தெய்வத்திற்கு மஹா சிவராத்திரியன்று பொங்கல் வைத்து மாவிளக்கு எடுப்போம்//
      என் தங்கையின் கண்வர் வீட்டில் சிவராத்திரிக்குதான் குலதெய்வம் கோவில் போவார்கள்.
      எங்கள் வழக்கம் பங்குனி உத்திரம். அன்றுதான் பொங்கல் வைத்து மாவிளக்கு பார்ப்போம்.


      //அடியேனது கருடசேவை பதிவுகளை மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். சமயம் கிடைத்தால் சென்று பாருங்கள் அம்மா. https://freetamilebooks.com/ebooks/karudasevai/.//

      சென்று பார்க்கிறேன் சார்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  22. செய்முறையை படித்தேன்.

    இதுக்கு நாம சரிப்பட்டு வரமாட்டோம்னு ஒரு சந்தேகம் மனதில் வந்துவிட்டது. இருந்தாலும் எப்படியாவது செய்யவேண்டும் என்றும் வைராக்கியம் வேற!

    இந்த வாரத்தில் ட்ரை பண்றேன். வீட்டில் பச்சரிசி இல்லை வெளியே போய் தான் வாங்கணும். பார்க்கலாம்.

    தங்கள் பதிவிற்கு மீண்டும் நன்றி. பதிவுகளின் பின்னூட்டங்களை படித்ததில் கூடுதல் மகிழ்ச்சி, நாம் கேட்ட ஒரு மாவிளக்கில் இவ்வளவு விஷயங்களா? கருது பற்றிமாற்றங்களா?

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் விசு, வாழ்க வளமுடன்

    //இதுக்கு நாம சரிப்பட்டு வரமாட்டோம்னு ஒரு சந்தேகம் மனதில் வந்துவிட்டது. இருந்தாலும் எப்படியாவது செய்யவேண்டும் என்றும் வைராக்கியம் வேற!//
    வைராக்கியம் என்றும் நல்லது ,எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிதான். எப்படியாவது செய்து சாப்பிடுங்க.

    மிகவும் எளிதான குறிப்புதான் . கஷ்டம் இல்லை. அரிசியை ஊறவைத்து பொடித்து வெல்லம் ஏலக்காய், நெய் சேர்த்தால் மாவு ரெடி.

    பச்சரிசி கடையில் வாங்கியவுடன் உங்கள் மனைவியிடம் சொன்னால் செய்து தந்து விடுவார்கள்.

    பதிவுக்கு கருத்து பரிமாற்றங்கள் கிடைக்கும்.

    உங்களுக்கு நிறைய செய்முறைகள் கிடைத்து இருக்கே!
    பின்னூட்டங்களை படித்து இருக்கிறீர்கள்.

    மீண்டும் வந்து கருத்துக்கு சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /பச்சரிசி கடையில் வாங்கியவுடன் உங்கள் மனைவியிடம் சொன்னால் செய்து தந்து விடுவார்கள்.//

      கண்டிப்பாக நீங்கள் கீழேயுள்ள இந்த பதிவை படிக்கவேண்டும். என் பதில் இதில் உள்ளது.

      https://vishcornelius.blogspot.com/2018/08/blog-post_23.html
      --

      நீக்கு
    2. வாங்க விசு , உங்கள் பதிவை படிக்கிறேன்.

      நீக்கு
    3. உங்கள் பதிவை படித்தேன், நல்ல நகைச்சுவை பதிவு.
      "சோம்பேறி பலகாரம்" படித்தேன்.அதன் பெயர் காரணம் தெரிந்து கொண்டேன்.

      மாவிளக்கை நீங்களே செய்து விடுங்கள்.

      நீக்கு
  24. மாவிளக்கு பற்றிய குறிப்பும் விபரங்களும் மிக அருமை! சின்ன வயதில் பார்த்தது. சாப்பிட்டது. மீண்டும் சின்ன வயது ஞாபகங்களைக்கிளறி விட்டீர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் சின்ன வயது நினைவுகள் வந்தது மகிழ்ச்சி.
      உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  25. மாவிளக்கை வணங்கிக் கொண்டேன். எங்கள் வீட்டில் அம்மா ஒரு பெரிய விளக்காக செய்து அதில் இரண்டு திரிகள் போட்டு ஏற்றுவார்கள். நான் இரண்டு தனித்தனி விளக்குகளாக  ஏற்றுகிறேன். இடித்து சலித்த மாவில் வெல்ல சர்க்கரை சேர்த்துதான் செய்வது பழக்கம். வெள்ளம் சேர்ப்பது இல்லை.  ஆடி வெள்ளி, தை  வெள்ளிகளில் கோவிலிலோ அல்லது வீட்டிலோ ஏற்றுவோம். விளக்கு ஏற்றும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. மாவிளக்கு ஏற்றினால் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. வைத்தீஸ்வரன் கோவிலில் வாழைப்பழ விளக்கு கூட ஏற்றுவார்கள்.  என் பெண்ணின் வீட்டில் முருகன் குல தெய்வம் என்பதால் திணை மாவில் தேன் மற்றும் வெல்ல சர்க்கரை சேர்த்து சற்று உதிரியாக கலந்து மாவிளக்கு போடுவார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      மாவிளக்கை வணங்கி கொண்டது மகிழ்ச்சி.

      உங்கள் அம்மா வீட்டில் , உங்கள் வீட்டில், மற்றும் மகள் வீட்டில் மாவிளக்கு ஏற்றும் முறையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.


      //வெள்ளிகளில் கோவிலிலோ அல்லது வீட்டிலோ ஏற்றுவோம். விளக்கு ஏற்றும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. மாவிளக்கு ஏற்றினால் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை//

      நம்பிக்கைதான் நம்மை வாழ வைக்கிறது. குழந்தைகள் நலமாக இருக்கட்டும் அதுதானே நமக்கு வேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  26. இந்த இடுகையை எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை.

    எங்கள் வீட்டிலெல்லாம் மாவும் வெல்லமும் கலந்த பிறகு, ஒரு ஓரத்தில் குழித்துவிட்டு அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றுவார்கள்.

    உங்கள் வீட்டு மாவிளக்கும், கோலத்தில் ஏற்றிய விளக்கும் அட்டஹாசமாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      நானும் நினைத்தேன் நெல்லைத் தமிழனை காணோமே என்று.

      உங்கள் வீட்டில் ஏற்றும் விளக்கைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
      மாவிளக்கு, கோலத்தில் வைத்த விளக்குகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  27. அந்த நாளில் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதைப் பார்த்ததாக நினைவு. காலம் மாறிவிட்டது. சடங்குகள் ஒவ்வொன்றாக மறைந்துகொண்டு வருகின்றன. தங்கள் படங்கள் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் இராய செல்லப்பா சார், வாழ்க வளமுடன்

      கோவில்களில் இன்னும் மாவிளக்கு போடுவது இருக்கிறதே சார்.
      ஆவணி ஞாயிறு, ஆடி வெள்ளி, தைவெள்ளி கோவில்களில் மாவிளக்கு பார்ப்பவர்கள் கூட்டம் நிறைய இருக்கிறது. இளைய தலைமுறையை சேர்ந்தவர்களும் பார்க்கிறார்கள்.
      புரட்டாசி சனிக்கிழமைகளில் போடுபவர்கள் இருக்கிறார்கள்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.



      நீக்கு
  28. கார்த்திகைக்குத் தவறாமல் அம்மா செய்வார்கள். செய்முறையும் படங்களும் விரதம் குறித்த அனுபவப் பகிர்வும் மிக நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      கார்த்திகைக்கு தவறாமல் அம்மா செய்வது அறிந்து மகிழ்ச்சி.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  29. யாருக்கேனும் உடல் நலமில்லை என்றால் உடனே சமயபுரம் அம்மனுக்கு மாவிளக்கு தான் எங்கள் வேண்டுதல் அது நியாபகம் வந்துவிட்டது அம்மா ..

    அடுத்த முறை சமயபுரம் செல்லும் போது மாவிளக்கு செய்ய வேண்டும் ..

    அத்தை வீட்டில் தை வெள்ளி, ஆடி வெள்ளியில் அங்கிருக்கும் அம்மன் கோவிலில் மாவிளக்கு வைத்து பூஜை செய்வார்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான் எளிமையான பிரார்த்தனை மாவிளக்கு பார்த்தல்.
      விரைவில் சமயபுரம் போய் மாவிளக்கு போடும் காலம் வர வேண்டும்.

      தை வெள்ளி, ஆடி வெள்ளி எல்லாம் அம்மனுக்கு எங்கும் கோலாகலம்தான். மாவிளக்குபார்த்தல், திருவிளக்கு பூஜை, சந்தனக்காப்பு அலங்காரம் என்று கோவில் போய் வருவது மக்களுக்கு மனநிறைவு தரக்கூடிய நாட்கள்.

      மீண்டும் அந்த காலங்கள் திரும்பி வர வேண்டும்.

      உங்கள் தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி அனு.

      நீக்கு