சனி, 18 டிசம்பர், 2010

மார்கழிக் கோலங்கள்





மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும் கோலம் போடுவோம். ஆனால் மார்கழி என்றால் தனிச் சிறப்பு. கண்ணபிரான், மாதங்களில் நான் மார்கழி என்று அந்த மாதத்தின் சிறப்பைச் சொல்லி விட்டார்.தேவர்களுக்கு இந்த மாதம் அதிகாலை நேரம்.இறைவனைத் தொழுவதற்காக சிறந்த மாதமாக இதைக் கூறுகிறார்கள்.வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும்,இனி மேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும்,ஆகையால் அவன் புகழை எப்போதும் பேசுவோம் என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில்.

மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் முதல் எட்டு பாடலில் எட்டு வகை சக்திகள் தோழியாக இருந்து பராசக்தியை வணங்குவதைக் கூறுகிறார்.உலகச் செயல்களைத் தொடங்குவதற்கு பராசக்தி உள்ளிட்ட ஒன்பது சக்திகள் உறக்கம் நீங்கி நீராடிப் புகழ்பாடிய நிலையை மனதில் எண்ணி மகளிரும் வைகறையில் எழுந்து நீராடிப் பாடிய காட்சியை திருவெம்பாவையில் கூறுகிறார்.

உயிர்,கதிரவன்,திங்கள், வான்,வளி,நெருப்பு,நீர்,நிலம் இந்த எட்டு சக்திகளுடன் இறைவனும் சேரும்போது நவசக்திகளாய் மாறுகிறது.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்த இந்த உயிருக்கு(நமக்கு) கை,கால்களை அசைத்து இடுப்பை வளைத்துப் பெருக்கித் தெளித்துக் கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் (கதிரவன்)கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும்(திங்கள்) இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.வான்வெளியில்(வான்) பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும் ஆசிகளும் கிடைக்கும்.நல்ல காற்று(வளி) ஓசோன் வாயு கிடைக்கிறது. ஒளி வடிவமான இறைவனை வணங்கும் போது ஒளி ஆற்றல் (நெருப்பு )கிடைக்கிறது. கோவிலை வலம் வரும் போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.

அந்தக் காலத்தில் அரிசி மாவால் வீட்டின் முற்றத்தில் பலவகை யந்திரவுருக்களால் போடப்படுவதாம் கோலம்.கோலங்கள் தீயசக்திகளை,தீயதேவதைகளை வீட்டினுள் வருவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.

பித்துருக்கள்(தென்புலத்தார்)வீட்டினுள் வருவதற்கு ஏதுவாகவும்,அவர்களிடம் ஆசிபெற ஏதுவாகவும் அம்மாவாசை,சிரார்த்த தினங்களில் வீட்டில் கோலம் இடாத வழக்கமும் உண்டு என்பார்கள்.

ஊருக்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் கோலம் போடு, என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். யாராவது வீட்டை விட்டு அதிகாலையில் வெளியில் போவதாய் இருந்தால் அவர்கள் போவதற்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,அவர்கள் போனபின் தெளிக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவார்கள்.கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும்.

இப்படிப் பெரியவர்கள் சொன்னதைக் கடைப்பிடிப்பதில் நல்லதும், சில சங்கடங்களும் எனக்கு அவ்வப்போது வரும். ஊரிலிருந்து வந்து கொஞ்சம் களைப்பாய் படுத்து இருந்தேன் அவ்வளவுதான் பால்காரர் கோலம் இல்லை என்பதால் ஊரிலிருந்து வரவில்லை என்று பால் பாக்கெட் போடாமல் போய் விட்டார்.(கீழே திண்ணையில் கோலம் போடுவேன்) மேலே வந்து பார்க்க அவருக்கு அவ்வளவு சோம்பல். எளிதான வழி, கோலம் இருந்தால் நான் வந்து விட்டதாய் அர்த்தமாம். என்னசொலவது!

மார்கழி மாதம் வரும் முன் வாசலைச் சரி செய்ய வேண்டும். கல்,புல் எல்லாம் சுத்தம் செய்தல், பசுஞ்சாணம் கொண்டு வரச்சொல்லுதல் என்று நிறைய ஆயத்த வேலைகள் எல்லாம் முன்பு இருக்கும். மண் தரையில் கலர்க் கோலம் போட்டால் அடுத்தநாள் போட பழைய கோலத்தை முதல் நாளே அழித்து மறுநாளுக்குத் தயார் செய்வது, அடுத்த நாள் என்ன கோலம் போடுவது என்று சிந்தித்து அதற்குத் தயார் செய்வது என்று எவ்வளவு வேலைகள்! இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் அந்தக் கஷ்டம் இல்லை.

கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். இல்லையென்றால் கோலம் அலங்கோலம் தான். நம் மனதைப் பிரதிபலிப்பது கோலம். மார்கழி மாதத்தில் அக்கம் பக்கத்தில் என்ன கோலம் போட்டு இருக்கிறார்கள் என்று காலையில் ஒரு சிறு வலம் வருவோம், முன்பு இருந்த தெருவில். அவர்கள் நம் கோலத்தைப் பார்க்க வருவார்கள்,நாங்கள் அங்கு போய்ப் பார்ப்போம். ஒருத்தருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்வோம். அது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் அடுத்தநாள் இன்னும் நன்றாகப் போட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். ஆனால் இப்போது எல்லாம் மாறி விட்டது எல்லாம் ஓட்டம் ஓட்டம் ஓட்டம் தான் நின்று நிதானித்துப் பேச நேரமில்லை. இந்தப்பூவிற்கு இந்தக் கலர் கொடுத்து இருக்கலாம் என்று அபிப்பிராயங்கள் சொல்ல ஆள் இல்லை. பார்வையாளர்கள் அற்ற விளையாட்டுத் திடலில் விளையாடுவது போல் உள்ளது இன்றைய நிலை.

என் அம்மா பெரிய கோலங்கள் போடுவார்கள். தினம் செம்மண் இடவேண்டும். மார்கழி 30 நாளும் சிறப்பு என்பாதால் செமமண் இடவேண்டும் என்பார்கள் அம்மா. அளவாய் நீர்விட்டு கரைத்துக் கோலத்தில் ஓரம் -பூக்களுக்கு நடுவில் -என்று முதலில் செம்மண் இடப் பழுகுவதுதான் சிறுவயதில் பாடம். பின் தான் கோலம் எல்லாம். பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பூசணிப்பூ ,பீர்க்கம் பூ எல்லாம் வைப்பதும் எங்கள் வேலை. என் பக்கத்து வீட்டு ஆண்டாளுக்கும் எனக்கும் யார் வீட்டில் அதிகப்பூ என்று போட்டாபோட்டியாக இருக்கும். அவளுடைய தாத்தா காலையில் அவர்வீட்டுப் பீர்க்கம் பந்தலிலிருந்து நிறைய பூ எனக்குப் பறித்துத் தருவார். இப்போது பூசணிப்பூ பீர்க்கை பூ கிடைக்கவில்லை. பசுஞ்சாணமும் கிடைப்பது இல்லை. அதனால் என்ன பூ கிடைக்கிறதோ அதை வைக்கிறேன், சும்மா கோலத்தின் மீது. பெண் குழந்தை இருந்தால் தினம் பூ வைக்க வேண்டும். சிறு வீட்டுப் பொங்கல் வைப்பார்கள் அந்தபெண்கள். அம்மா கோலத்தில் அழகாய்ச் சிறுவீடு வரைவார்கள். சிமெண்டால் சின்னதாய் ஒரு சமயம் சிறுவீடு கட்டித் தந்தார்கள். பொங்கல் முடிந்தபின்னும் நாங்கள் அதில் விளையாடி இருக்கிறோம்.

கோலம் மனமகிழ்ச்சியை தரும்.இப்பொழுது பெரிய கோலங்கள் போட்டு கலர் கொடுப்பதுதெல்லாம் என்னால் முடிவது இல்லை.சின்ன சின்னக் கோலங்கள் தான். முன்பு என் அம்மா, தங்கை எல்லாம் புதுக் கோலங்களைக் கடிதத்தில் வரைந்து அனுப்புவார்கள்.

மாயவரத்தில் தேர் வரும் போது தேர்க் கோலம் போடுகிறார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு விதமாய்க் கோலம் போடுவதை வழக்கமாய்க் கொண்டுள்ளார்கள்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனைவி,மார்கழி மாதம் கோலம் போடும்போது அக் கோலத்தைச் சுற்றி எழுதுவதற்கு ஒரு பாட்டு சொல்லுங்கள் என்று கேட்க, அந்நேரத்தில் உதிக்கும் சில சொற்றொடரைக் கோத்துச் சொல்வாராம் மகரிஷி. அவ்வாறு அவர் கூறிய பாடல்கள் , ‘’ மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்று கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவந்தது. அதில் உள்ள கவிதைகள் நல் வாழ்விற்கான அறிவு விளக்கங்கள். நான் முதன் முதலில் வலைத்தளம் ஆரம்பித்தபோது’ கிளிக் கோலம்’ ஒன்று போட்டு அதற்கு மகரிஷியின் கவிதை ஒன்று எழுதி என் பதிவை ஆரம்பித்து வைத்தேன். மே 31ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்தேன்.

அந்த பாடல்:

இயற்கை தரிசனம்
-----------------
எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்.

என்பது தான்.

வாழ்க வளமுடன்!
----------------------------------

26 கருத்துகள்:

  1. மங்களமாய் வந்த மார்கழிப் பெண்ணவளைப் போற்றி வணங்குகின்றது "மார்கழிக்கோலங்கள்".

    பதிலளிநீக்கு
  2. அழகழகான கோலங்கள்.

    உங்கள் முதல் பதிவு ஒரு கிளிக்கோலமே. இல்லையா:)?

    //பால்காரர் கோலம் இல்லை என்பதால் ஊரிலிருந்து வரவில்லை என்று பால் பாக்கெட் போடாமல் போய் விட்டார்.//

    :)))! நல்ல வேடிக்கை!

    கோலத்தின் பின்னால் எத்தனை விஷயங்கள்? அறியத் தந்தமைக்கு நன்றிம்மா. அப்பார்ட்மெண்டில் விசேஷ நாட்கள் மட்டுமே வாசலில் அரிசிமாக் கோலம் இடுவேன். இப்பதிவு இம்மாதம் முழுவதும் இட வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  3. கோலத்தை போலவே அழகான வர்ணனை...கோலம் போட ஆசையிருந்தாலும்..அவ்வளவு வித விதமான கோலங்கள் போட வராது.. புள்ளியில்லா கோலங்களே போடுவது வழக்கம்... அம்மா கோலம் போதும்போது பொறாமையாக இருக்கும்... அதைச்சொன்னால்..ஒன்னும் சீமை வித்தையில்லை...பொறுமை வேனும்... பழகனும்... அது தானே இல்லைனு திட்டு விழும்

    நல்லா இருக்கும்மா

    பதிலளிநீக்கு
  4. //இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் அந்தக் கஷ்டம் இல்லை.//
    காலையில் எழுந்த உடன் கோலமா ?
    எப்ப காபி போடறது ?
    எப்ப டிஃபன் சாப்பாடு செய்யறது?
    எப்ப குழந்தைகளை குளிக்க வைச்சு, டிரஸ் போட்டு, ப்ரெக் ஃபாஸ்டு
    கொடுத்து, ஸ்கூல் வேனில் ஏத்திவிடறது?
    எப்ப நம்ம ஒர்க்குக்கு கிளம்பறது ?

    அதனாலே தான் கிரி டிரேடிங்க் லே அற்புதமான கோல
    டிஸைனின் ஒரு ஐம்பது வாங்கி அன்னின்னிக்கு
    இல்ல, வாரத்துக்கு
    ஒவ்வொண்ணா எடுத்து வாசல் தரைலே ஒட்டி வைச்சுடறாங்க...

    மீனாட்சி
    http://movieraghas.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. நன்றாக சொன்னீர்கள் மாதேவி.

    மார்கழி பெண்ணவளைப் போற்றி வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி ராமலக்ஷ்மி.

    ஆம் முதல் பதிவு ஒரு கிளிக்கோலமே.

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் என் அம்மா மாதிரி சிக்கு கோலங்கள் வராது.சிக்கு கோலங்கள் போடுவேன் அதிலும் எளிதான சிக்கு கோலம் போடுவேன்.என் மாமியாரும் அழகான சிக்கு கோலங்கள் போடுவார்கள். உங்கள் அம்மா சொல்வது சரிதான். சித்திரமும் கை பழக்கம் என்பார்கள் தானே மங்கை.

    நன்றி மங்கை.

    பதிலளிநீக்கு
  8. //காலையில் எழுந்த உடன் கோலமா ?
    எப்ப காபி போடறது ?
    எப்ப டிஃபன் சாப்பாடு செய்யறது?
    எப்ப குழந்தைகளை குளிக்க வைச்சு, டிரஸ் போட்டு, ப்ரெக் ஃபாஸ்டு
    கொடுத்து, ஸ்கூல் வேனில் ஏத்திவிடறது?
    எப்ப நம்ம ஒர்க்குக்கு கிளம்பறது ?//

    ஆம், நீங்கள் சொலவது சரிதான் மீனாட்சி அவர்களே !

    அவர்கள் பரபரப்பாய் ஓடிக்கொண்டு அல்லவா இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. மார்கழி மாதத்தில் விடியற்காலை எழுந்து கோலம் போடுவதின் மகிமையை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் நிச்சயம் பெருகும். கோலங்கள் அத்தனையும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  10. எண்ணக் கோலங்கள் வண்ணக் கோலங்கள் போலவே மிக அழகு.

    இன்னும் இந்த நல்ல விஷயங்கள் ஓரளவு கிராமத்துப் பக்கங்களில் உயிர்ப்புடன் இருக்கிறதே என்று திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான் :(

    பதிலளிநீக்கு
  11. அருமையான விளக்கங்களுடன் அழகான கோலங்கள்ம்மா :)

    பதிலளிநீக்கு
  12. அருமையான விளக்கங்களுடன் அழகான கோலங்கள்ம்மா :)

    பதிலளிநீக்கு
  13. பால்காரர் :))

    இங்கே தில்லியில் சிலருடைய வீடு அடையாளம் தெரியாமல் தேடிக்கொண்டிருப்போம், அப்போது வாசலில் கோலம் வைத்து இதுவாகத்தான் இருக்கனும் என்று கெஸ் செய்து கதைவைத்தட்டுவோம்..

    கடிதங்களில் கோலம் அனுப்புவாங்களா ..எப்படி எல்லாம் பயன்பட்டிருக்கு கடிதம் ஆச்சரியமா இருக்கு..

    பதிலளிநீக்கு
  14. புறாவும், பட்டர்பிளையும் நன்றாக இருக்கின்றன...

    நல்லாயிருக்கு உங்க பதிவு...

    பதிலளிநீக்கு
  15. உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி கபீரன்பன்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி அமைதிச்சாரல்.

    நன்றி ஆதவன்.

    நன்றி முத்துலெட்சுமி.

    நன்றி ஸ்வர்ணரேக்கா.

    பதிலளிநீக்கு
  17. இந்த மார்கழியில் கோலங்களைப் பற்றி பகிர்வு ரொம்ப அருமை அம்மா. முத்துலெட்சுமி சொல்வது போல் கோலம் போட்டிருந்தால் அது தமிழர்களின் வீடு என்று தெரிந்து கொள்வோம். நானும் தினந்தோறும் அரிசி மாவினால் தான் கோலம் போடுவேன்.

    பதிலளிநீக்கு
  18. எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவாய் அரிசிமாவு இருக்கும்.நீங்கள் அரிசிமாவில் போடுவது மகிழ்ச்சி ஆதி.

    பதிலளிநீக்கு
  19. ஆஹா மார்கழி கோலங்கள் பெரிய பெரிய கொசுவத்தியா சுத்தவைச்சுடுச்சு!

    காலங்கார்த்தால எழுந்து தெருவுல வந்து உக்காந்துக்கிட்டு,தெருவே போட்டிப்போட்டுக்கிட்டு கலர்க்கோலங்கள் போடுவதை பார்ப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் - அப்ப தரங்கை சாலையில வீடு நல்ல அகலமான இடவசதி - பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோலம் போடுபவர்களுக்கு அதில் இண்ட்ரஸ்ட் கம்மி,டிவியில் கோலங்கள் சீரியலில் கோலங்கள் பார்த்து ரசித்த நாட்களாகிவிட்டது! இப்பவும் சில இடங்களில் மட்டுமே மார்கழிக்கோலங்கள் !

    பதிலளிநீக்கு