செவ்வாய், 13 ஜூன், 2017

முத்துப்பட்டிக் கல்வெட்டுகள்- முதல் பகுதி









கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.

இம் மலையில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் , கற்படுக்கைகளும் , மகாவீரர் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் அமைந்துள்ளன.

இங்கு வாழ்ந்து வந்த சமணத் துறவிகளுக்காக மலைக்குகையில்
இருபதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு படுக்கையும் வழுவழுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

குகைத்தள முகப்பில் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள், தென்பகுதியில் மகாவீரர் சிற்பங்கள் அதன் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் உள்ளன.  அருகில் இயற்கையாக அமைந்த மற்றொரு குகையினுள் உள்ள  படுக்கைக்கு மேல் கல்வெட்டொன்று உள்ளது.


"சைஅளன்  வுந்தையூர் கவிய் " என்னும் கல்வெட்டு , மலையிலுள்ள பெரிய குகைத்தளத்தின் முகப்புப் பகுதியில் மூன்று பகுதிகளைக் கொண்ட வார்த்தைகளாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி
முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.  விந்தையூரைச் சேர்ந்த சையளன்  என்பவர் இக்குகைத்தளத்தை அமைத்துத் தந்திருப்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.


"திடிக்காத்தான் (ம) ...னம் எய்..." -என்று  குகைத்தளத்தின்  கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டும் கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்துத் தந்த கற்படுக்கையாக
இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.

" நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்" என்றமைந்துள்ளது ஒரு கல்வெட்டு. சிறுகுகைத்தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாகக் காணப்படும் இக்கல்வெட்டு  கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தாகும் . நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி  என்பது சேரர்களின் துறைமுகப்பட்டினத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள  முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும் ,  நாகபேரூரின் தலைவரும்  செய்துகொடுத்த   கொடை எனப் பொருள் கொள்ளலாம்.

குகைத்தளத்தில் தெற்கு நோக்கிக் காணப்படும் இரண்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன.  அரசமரக் கிளைகளின் கீழ் முக்குடைக்கு அடியில்  அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில்   உள்ள தீர்த்தங்கரர்  சிற்பம் உள்ளது. இருபுறமும் இருவர் கவரி வீச அழகாக தீர்த்தங்கரர்  அமர்ந்திருக்கிறார்.  அதன் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை  :-

முதல் கல்வெட்டு:-

"ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர்  மாணக்கர் மகாணந்தி   பெரியார் நாட்டாற்றுப்புறத்து  நாட்டார்பேரால்  செய்விச்ச திருமேனி"

.
பராந்தக  பருவதமாயின ஸ்ரீ வல்லவப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரரின் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரரின்   மாணக்கர்  மகாணந்திப் பெரியார் என்பவர்   நாட்டாற்றுப்புறத்து நாட்டாரின்  பெயரால்  செய்வித்துள்ளார்

அந்தக்காலத்தில்   ஆவியூர்க்கருகிலுள்ள குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்துள்ளது. அப்பள்ளியில் நிறைய மாணவர்கள்  பயின்று உள்ளனர். குரண்டிமலைக்கு அக்காலப் பெயர்தான் பராந்தக பர்வதம்

 இரண்டாவது கல்வெட்டு:-

"ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாசி படாரர்  மாணக்கர் குணசேனதேவர் மாணக்கர் கனகவீரப் பெரியடிகள்  நாட்டாற்றுப்புறத்து அமிர்தபராக்கிரம  நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி  பள்ளிச் சிவிகையார் ரக்ஷ."


இரண்டாவது  கல்வெட்டில் கீழக்குயில்குடி ஊராரின் பெயரால் கனகவீரப் பெரியடிகள் செய்வித்துள்ளார்.  இவர்  குணசேனதேவரின்  மாணக்கர் ஆவார்.  முதல்மாடத்திலிருந்த சிற்பத்தினைச் செய்வித்த மகாணந்திப்பெரியாரின் ஆசிரியர் குறண்டி அஷ்டோபவாசிப் படாரரின் மாணாக்கர் ஆவார்.

அந்தக்காலத்தில் சமணத்தைப் பின்பற்றிய மக்கள் இதை நேர்த்திக்கடன் போல் செய்திருக்கலாம்.


மேலே உள்ளவை பசுமை நடைக் குழுவினருடன் 18. 12. 2016 ல் முத்துப்பட்டி என்ற சமணகுடவறை கோவிலுக்குப் போனபோது  அவர்கள் கொடுத்த கோவிலைப்பற்றிய விவரங்கள் அடங்கிய கையேட்டில் உள்ளதை இதில் கொடுத்து இருக்கிறேன்.

பசுமைநடை அமைப்பாளர்களுக்கு நன்றி.

மலைகளை, இடங்களை, கல்வெட்டுகளை, படுக்கைகளை ,வட்டெழுத்துக்களை, பாறை ஓவியங்களை நாம் அறிந்து கொள்ள இது போன்ற  பயணம் தொடர்கிறது நமக்கு பயணம். எல்லா நேரமும்  நாம் இதில் கொள்ள முடியவில்லை.

இங்கிருந்து பசுமை நடைக் குழுவினர் பெருமாள் மலை நோக்கிப் பயணம்
பசுமைநடை  வெளியிடும் புத்தங்கங்கள்  விற்பனைக்கு -

 மலைகள், சிலைகள், ஓவியங்கள் இடையேயான வரலாற்றை அறிய பயணங்களின் தொகுப்பு 
போகும் பாதை 
ஒற்றையடிப் பாதையாகத் தொடர்கிறது

பெருமாள் மலை

சமணச்சின்னம்  அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள்

பசுமைநடை அமைப்பாளர் திரு. முத்துகிருஷ்ணன்  பேசுகிறார்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விளக்குகிறார்
இவர் கிராமிய   பழம் பாடல்களை சேகரித்து வருகிறார் 
சமணக்குகை ஆய்வுச் சொற்பொழிவைக் கேட்கும் பசுமை நடைக் குழுவினர்

சமணப்படுக்கை உள்ள இடம்

சமணப்படுக்கையில் குழந்தை அமர்ந்து எழுத்துக்களை ரசிக்கிறது


பாறைகளுக்கு இடையே குனிந்து வெளி வருதல்


இதற்குள் சமணப்படுக்கையில் உள்ள எழுத்துக்களைப் பற்றி ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

சமணப்படுக்கையில் பக்கவாட்டில் சமணர்கள் வட்டெழுத்துக்கள் இருக்கிறது.
நடுவில் நம்  இளைய தலைமுறைகள் கல்வெட்டில் தங்கள் பெயர்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.




முக்குடைக்கு அடியில் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர்.


இன்னும் படங்கள்  இருக்கிறது. மலையின் அழகு. போகும் பாதையில் கண்ட காட்சிகள் எல்லாம் அழகு.

 சமணப்படுக்கையை கண்டு களித்தபின் காலை டிபன் இட்லி, சட்னி, சாம்பார்  அடங்கிய   பொட்டலங்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்து மலைக் காட்சிகளை படம் எடுத்து வந்தோம்.

அழகிய  முத்துப்பட்டி ஊரின் காட்சிகள் அடுத்த பதிவில்.
                                                             

வாழ்க வளமுடன்.


திங்கள், 5 ஜூன், 2017

ஓடி விளையாடு பாப்பா -2 வது பகுதி

பிள்ளைப் பருவம் விளையாடிக் களிக்கும் பருவம் . காலை முதல்  இரவு  தூங்கப் போகும் வரை விளையாட விரும்பும் பருவம். பாரதியார் மாலை முழுவதும் விளையாட்டு என்றார். ஆனால் எல்லா நேரமும் விளையாடத் தோன்றும் பிள்ளைப் பருவத்தில்.

என் இளமைப் பருவத்தில்   சந்தோஷமாய் விளையாடிக் கொண்டு இருக்கும்போது அம்மா கூப்பிட்டால் மூஞ்சியைத் தூக்கிக்கொண்டுதான் வீட்டுக்குள் வருவேன். இவ்வளவு நேரம் விளையாடினாய் சிரித்துக் கொண்டு -வீட்டுக்குள் வரும்போது  ஏன் இப்படி  என்று திட்டுவார்கள்.

எத்தனை எத்தனை விளையாட்டு ! ஆற்றோரம் மணல் எடுத்து அழகு அழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடி வளர்த்து என்ற பாட்டில் மணல் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்லி இருப்பார்கள்.
ஆற்று மணலை இப்போதும் வீடு கட்ட  அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - நிஜ வீடு கட்ட.

நான் போகும் இடம் எல்லாம் குழந்தைகள் விளையாடுவதை ரசிப்பேன்.


டயர் வண்டி,  ஓட்டும் கிராமத்துக்குழந்தைகள் (குத்துக்கல் வலசை என்ற ஊரில் எடுத்த படம்.)


சகோதரியின் பேரனும்  அவன் நண்பனும் விஷ்ணு சக்கரம் கையில் சூழல்வதாய் விளையாட்டு
வீடு கட்டக் கொட்டி வைத்து இருக்கும் மணலில் மலை கட்டி அதில் ஏறிச் செடியை நட்டு வைத்து மகிழும் குழந்தைகள்.

இன்று "குழந்தைகளை மரம் நட வைக்க வேண்டும் அதைப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தால் மரத்தை வெட்டும்போது அவர்கள் வெட்டக் கூடாது என்பார்கள்' என்றார்கள், தொலைக்காட்சியில்.   மரத்தின் நன்மைகளைக்  குழந்தைகளுக்கு எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்றார்கள்.

பிஞ்சுக் கைகளால் செடி , மரம் நட வைத்து அவர்களே தண்ணீர்  ஊற்ற வைத்து துளிர்ப்பதை, மொட்டுவிடுவதை, மலர்வதை எல்லாம் ரசிக்க வைக்கலாம்,.

நாங்கள் படிக்கும் போது பள்ளி விட்ட பின் பள்ளித் தோட்டத்திற்குத் தண்ணீர் விடும் பொறுப்பு உண்டு.  குழுவாய்ப் பிரித்து இருப்பார்கள், தோட்டவேலை , கரும்பலகைக்கு  ஊமத்தை இலையும், அடுப்புக் கரியும் அரைத்து பூசுதல், மண்பானையில் தண்ணீர் எடுத்துவைத்தல்  எல்லாம் செய்வோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வோரு குழு செய்யும்.
கழுகுமலை ஊரில் தேரடித் தெருவில் குழந்தைகளின்  பம்பர விளையாட்டு


கலர் கலராய் அழகாய் மரத்தால் செய்த பம்பரங்கள்  முன்பு    இப்போது  பிளாஸ்டிக்  பம்பரம்.
குத்து வாங்காத பம்பரம் இருக்காது, அபீட் எடுத்தால் தான் பம்பரம் விடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்தப் பையனை சுற்றி நின்று பார்க்கப் பார்வையாளர் கூட்டம் இருக்கும்.
அபீட்
டாஸ் போட்டுப் பார்க்கிறார்கள் யார் முதலில்   விளையாடுவது என்று. பெரியவர்கள் விளையாட்டுக்கு ஈடாக விளையாடுகிறார்கள். நிழல் தேடி இவர்கள் விளையாட்டு இடம்பெயர்ந்து கொண்டெ இருக்கும். பெற்றோர்கள் கட்டளை வெயிலில் விளையாட கூடாது என்று. வெயிலில் விளையாடினால் டீ விட்டமின் கிடைக்கும். "வெயிலோடு விளையாடி வெயிலோடு விளையாடி " பாடல் நினைவுக்கு வருதா?

அடிக்கும் வெயில் எல்லாம் உங்கள் தலையில் தான் என்று அம்மா சொல்வது காதில் கேட்குது.
வெயில், மழை, எல்லாம் தெரியாது அடுத்து என்ன விளையாடலாம் என்ற நினைப்பு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பால்கனி அருகில் நின்று குழந்தைகள் தன் சகாக்களை விளையாட அழைப்பதே பார்க்கப் பரவசமாய் இருக்கிருது..


மழையில் தான் நனைய விட மாட்டேன் என்கிறார்கள், மழை தண்ணீரிலாவது விளையாடுவோம். என்று மழைத்தண்ணீரில் விளையாடும் குழந்தைகள். முன்பு முற்றத்தில்  விழும் தண்ணீரை அண்டாக்களில் பிடித்து வைப்பார்கள் அதில் காகிதக் கப்பல் விட்டு மகிழ்வோம். அம்மா கத்திக் கப்பல் செய்து  தருவார்கள்.
.
தாத்தாவும் பேரனும் மரவீடு செய்து விளையாடுகிறார்கள்.

வித விதமாய்க்  கட்டடங்கள்  கட்டி விளையாடுகிறான்  பேரன்

அவன் வைத்து இருக்கும் விலங்குகள்   பண்ணையில் அவைகளுக்கு உணவு அளிக்கிறான்.


பக்கத்தில் உள்ள  கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது அதில் குழந்தைகள் விளையாட கார், கொடைராட்டினம் எல்லாம்  இருந்தது.  பெரிய பெரிய தீம் பார்க்கில்  மின்சாரத்தில் சுற்றுவதில் சுற்றினாலும் பழமையை நினைவூட்ட இது போன்ற கையால் சுற்றும்  விளையாட்டு சாதனங்களும் மறையாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொஞ்சம் பொறுங்கள் இன்னும் இரண்டு  குழந்தைகள் வரட்டும்.

கொடை ராட்டினம், கார் விளையாட்டு எல்லாம் விடியோ எடுத்தேன் ஆனால் இங்கு பகிர்ந்தால் சிலருக்குத் தெரிகிறது, சிலர் தெரியவில்லை என்கிறார்கள்.


எங்கள் குடியிருப்புப் பகுதியில் காலை முதல் இரவுவரை  குழந்தைகள் விளையாடும் உற்சாகக் கூக்குரல் கேட்கிறது . இந்தக் கால குழந்தைகள்  விளையாடுவது  இல்லை  எப்போதும்  வீடியோ கேம்,  ஐபேட்,  செல்போன் கேம் தான்  விளையாடுகிறார்கள் என்பது மறைந்து குழந்தைகளை விளையாட வைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. உடலின் உறுதி செய்வது விளையாட்டு தானே!

பள்ளிக்கு வெளியேயும் குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
விளையாட்டில் வெற்றி தோல்வியைச் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை,விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை,அடிபட்டால் முதல்உதவி செய்யும் குணம், எல்லாம் தானாக வரும். நம் கடமை அவர்கள் நல்ல குழந்தைகளுடன் பழகுகிறார்களா விளையாடுகிறார்களா என்று கவனிப்பதும்,சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.

பள்ளி விடுமுறை முடிந்ததும் இருக்கவே இருக்கிறது  வீட்டுப்பாடம்.

காலமிது காலமிது  விளையாடு  கண்ணே, காலமிதைத் தவறவிட்டால் கிடைக்காது இது போல் பொன்னாள். 

ஓடி விளையாடு பாப்பா   முன்பு எழுதிய  பழைய பதிவைப் படிக்கலாம் முன்பு விளையாடிய விளையாட்டுகளின் பேர் எல்லாம் இருக்கும்.

’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைப்புலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு, கால்களுக்கு நல்ல பயிற்சி தரும். பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு.

துள்ளித் திரிந்த காலம் நினைவுக்கு வருகிறதா?



                                                                வாழ்க வளமுடன்.


புதன், 31 மே, 2017

கிராமியக் கோயில்


பல்லுயிர் ஓம்புக என்று ஒரு கட்டுரையை  தஞ்சையம்பதி என்று வலைத்தளம் வைத்து இருக்கும் திரு . துரைசெல்வராஜூ அவர்கள்  மே மாதம் 22ம் தேதி    சர்வதேச  பல்லுயிர் பெருக்க நாள் அன்று   எழுதி இருந்தார்கள்.  படிக்காதவர்கள் படிக்கலாம் அருமையான கட்டுரை. மரங்கள், குளங்களைப் பாதுகாத்தால் அதில் வாழும்  உயிரினங்கள் வாழும் என்றார். உண்மைதான் குளம், குட்டைகள், ஏரிகள், மரங்களில் எவ்வளவு உயிரினம் அடைக்கலமாக  உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. !

//பாலை நிலத்தைக் கூட இல்லை பாழ் நிலத்தை அல்லவா நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல இருக்கிறோம் என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தார்கள். //

நான் அவர்கள்  பதிவுக்குப் பின்னூட்டம்    போட்டபோது இந்த பொன்மேனி ஐயனார்    கோவிலைப்பற்றியும் அங்கு இருக்கும் மரங்கள், பறவைகள் பற்றியும்  குறிப்பிட்டு இருந்தேன்.

எனக்கும் பல்லுயிர் ஓம்ப வேண்டும் என்று ஆசை உண்டு. இன்னும் இப்படி சில இடங்களில்  கிராமிய மணம் கமழும் கோவில்கள் இருப்பது மனதுக்கு நிறைவு அளிக்கிறது.

கிராமக் கோவில்கள் மரங்கள் சூழ வெகு அழகாய் இருக்கும். ஏரி, குளம் என்று  இருக்கும்  சுற்றுவட்டார மக்கள் அந்த ஏரி, குளங்களில் தண்ணீர் எடுத்துப் போவார்கள். இப்போது கிராமங்களிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு வந்துவிட்டது.

எங்கள் குலதெய்வம்  இருக்கும் மடவார்விளாகம்  (திருநெல்வேலி அருகில்) அமைந்து இருக்கும் இடம் ஆலமரங்கள் , பெரிய ஏரி வயல்கள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடமாய் விளங்கும்.  இந்த முறை போனபோது ஏரியில் தண்ணீர் இல்லாமல் இருப்பதைப் பார்த்து மிகவும் கஷ்டமாய் இருந்தது. வயல்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது.

           
                                     குலதெய்வம் கோவில் ஏரியின் கடைக்கோடியில்
                                                             காய்ந்து கிடக்கும் ஏரி

இங்கு மதுரை வந்தபோது , இந்த பொன்மேனி ஐயனார் கோவிலைப் பார்த்தபோது எனக்கு எங்கள் கோவில் நினைப்பு வந்து விட்டது. இங்குள்ள ஆலமரம், வேப்பமரம், புளியமரம், வில்வ மரம், அருகில் இருக்கும் பனைமரம் எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். காற்று அடிக்கும்போது   பனைமரம் போடும் சலசலப்பு,  எவ்வளவு பறவைகள் இங்குள்ள ஆலமரத்திற்கு வந்து ஆலம்பழத்தைச் சாப்பிட்டு அதன் நிழலில் இளைப்பாறுகிறது.

புளியமரத்தில் பறவைக் கூடு இருக்கிறது.

வேப்பமரத்தில் பழுத்த பழங்களுக்கு கிளிகள் வருகிறது. பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளில் வளர்க்கும், ஆடு, மாடு, கோழிகளுக்குக் கோவில் முன்பகுதி  இடம் தான் வாழும் இடமாய் இருக்கிறது. இப்படி எல்லோருக்கும் அடைக்கலம் தரும் இடமாய்  கோவில்  இருக்க வேண்டும் எப்போதும்.

கோவிலை சீர் அமைப்பவர்கள் பழமையைச் சிதைக்காமல்  காத்தால் நல்லது. மரங்களை வெட்டாமல் குளங்களைச் சீர் அமைத்தால்  அதில் வாழும் பல்லுயிர்களும் வாழும்.

குளம் தூர்வாரப்படுகிறது என்று இன்றைய செய்தியில் சொன்னார்கள். குளங்களில் மீண்டும் நீர் வந்து  எங்கும் இயற்கை  பசுமையாக  இருக்க வேண்டும்.

கோவிலின் முன் பகுதி - ஆடு, மாடு, கோழிகள்,  சுதந்திரமாய்த் திரியும், ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி  குழந்தைகள் விளையாடுவார்கள்

இயற்கைப் பின்னணியில் கோவில் குதிரைகள்
கோழி குஞ்சுகளுக்கு  இரை அளித்துக் கொண்டு இருந்தார் ஒரு பெண் ,கோவில்  வாசலில்
ஆடு, மாடு, கோழி,  சேவல்

ஆகிய செல்வங்களுடன் இந்நாட்டு மன்னர்

நெல்லை காந்திமதி  அம்மன் குளம்
குளத்தில் தண்ணீர் வற்றி குட்டையாகக் காட்சி அளித்தாலும்  அங்கு கிடைக்கும்  உணவுக்காகக் காத்து இருக்கும் முக்குளிப்பான்கள்

தென்காசி ஊரில் உள்ள  குளத்தில்  பறவைகள் (முக்குளிப்பான்கள்}

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள மொட்டை மரத்தில் மோன தவம் செய்யும் இரட்டைவால் குருவி.

மீண்டும் மரம் துளிர்த்து  வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறதோ இந்த  இரட்டை வால் குருவி. ! அதனுடன் சேர்ந்து நாமும் பிரார்த்தனை செய்வோம். 
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
ஏரி, குளம்,  கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி  அளவாய்ப் பொழிய
மக்கள் வளமாய் வாழ்க !

வாழ்க வளமுடன்.

"நாளை சர்வ தேச குழந்தைகள் தினம் "   குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.
.