மாயவரத்தில் இருந்த போது கொண்டாடிய போது எடுத்த படம்.
சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு. மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள். காலை கண்விழித்தவுடன் இநத மங்கல பொருட்களைப் பார்த்தால் ஆண்டு முழுவதும் வளமாய் இருக்கலாம் என்று நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளார்கள்.
எங்கள் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கைநீட்டம்(பணம்) வழங்குவார்கள்.
வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து தான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவது போல் நம் முன்னோர்கள் தமிழ்ப்புத்தாண்டில் இனிப்பு, கசப்பும் என்று எல்லா சுவைகளும் கலந்து உண்ணும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். நம் உணவில் ஆறுசுவைகளும் இருக்க வேண்டும் என்பார்கள். அதை ஒழுங்காய் கடைபிடிப்பது தமிழ்ப்புத்தாண்டில் தான். இனிப்புக்கு வெல்லம் போட்ட அவல், புளிப்புக்கு மாங்காய் பச்சடி, கசப்புக்கு வேப்பம்பூ ரசம் (நான் மாங்காய் பச்சடியில் கொஞ்சம் போட்டு விடுவேன்.)
என்று உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.
வெயில் காலத்தில் வேப்பமரத்தின் காற்று எல்லோருக்கும் மிக தேவையாக இருக்கிறது. கிராமப்புரத்தில் கோடைக்காலத்தில் வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது, கயிற்றுக் கட்டிலை மரத்தடியில் போட்டு தூங்குவது என்று இயற்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.
சித்திரை மாதத்தில், புளி, மாங்காய், மாம்பழம், பலா, வாழை மஞ்சள், இஞ்சி என்று எல்லாம் நிறைய கிடைக்கும். மக்கள் வருடத்திற்கு வேண்டியவைகளைப் பதப்படுத்தி சேமித்து வைத்துக் கொள்வார்கள். வேப்பம்பூ இப்போது தான் கிடைக்கும். அதைக் காயவைத்து, மோரில்உப்புடன் போட்டு வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வார்கள்.
அதன் மருத்துவப்பயன் அறிந்தமையால் வேப்பம்பூவை வெந்நீர் விட்டு டீ டிகாக்ஷன் போல் இறக்கி, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடித்தால், வாதம், பித்தம், அகலும். வாய்க்கு ருசி, வயிற்றுக்கு பசி ஏற்படும், சரும நோய்கள் விலகும் என்பார்கள்.
சித்திரை மாதம் வசந்தகாலம் என்பார்கள். இந்த சமயத்தில் பூக்கள், பழங்கள் , காய்கறிகள் என்று இயற்கை அள்ளி கொடுக்கும். அவற்றை நாம் இறைவனுக்கு நிவேதனம் செய்து வழிபட்டு எல்லோரும் நலமாக இருக்க வேண்டிக்கொள்ளலாம்.
பழங்கள்:
சமைக்காத உணவுகளாக பழங்கள் பச்சைக் காய்கறிகள், சாப்பிடலாம். அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை உண்பது நல்லது. சமைக்காத உணவாக பழங்களை, பச்சைகாய்கறிகளை உண்ணலாம். இந்த சீஸனில் மா, பலா, வாழை பழங்கள், மற்றும் எல்லா பழங்களும் நிறையகிடைக்கும். “கனிகள் தின்னப் பிணிகள் போகும் என்பார்கள்.”
மா, பலா, வாழை பயன்களை பற்றி 2022 ஆம் ஆண்டு போட்ட பதிவில் போட்டு இருக்கிறேன்.
பழம் சாப்பிடுவதால் அது உணவாகவும் இருக்கிறது, மருந்தாகவும் இருக்கிறது. குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும்,
நார்ப்பொருள்கொண்டதாகவும், குடலின் புளிப்புத் தன்மையை
அகற்றுவதாகவும் இருக்கிறது.
மா, பலா, வாழை பயன் களும் , எங்கள் வீட்டில் காலையில் செய்யும் தமிழ்ப்புத்தாண்டு இனிப்பு செய்முறை குறிப்பும் இருக்கும் படித்து பாருங்கள்.
மேலும் மகா கவி பராதியார் பாடல், வாலி எழுதிய சுபதினம் பாடலும் இருக்கும்.
கணவர் கணினியில் வரைந்து தந்த முக்கனிகள் படம் .
முக்கனிகளுமிருக்கிறது.
மேஜை மீது நித்திய கொலுவாக வீற்று இருக்கும் கொலுபொம்மையில் உள்ள சுவாமிகளுடன் இந்த வருடம் கனிகாணல்.
நாம் தமிழ்ப்புத்தாண்டில் இறைவனுக்கு என்று வழங்கும் பிரசாதங்கள் எல்லாம் என்ன பயன்களைத் தருகின்றன, உணவில் கசப்புச் சுவையை ஏன் கலந்து உண்ணச் சொல்கிறார்கள்? அதன் காரணம் என்ன?
நம் வீட்டை அலங்கரிக்கும் மாவிலை, வாழை மரத்தின் பயன்கள் என்ன என்பதையும் ஏன் அதை நம் முன்னோர்கள் பயன் படுத்தினார்கள் என்பதை எல்லாம் எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள் என்ற புத்தகம் மூலம் சொல்கிறார் Dr. C.K.திரு. மாணிக்கவாசகம். அவர்கள் எழுதியதைப் படித்தேன் அதில் சில பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:-
பஞ்சபூதத்திற்கும் உரிய மூலிகைகள் :
நிலம் - அருகம்புல்
நீர் - மாவிலை,
நெருப்பு – வாழைஇலை
காற்று – வேப்பிலை.
ஆகாயம் – வெற்றிலை
அருகம்புல்:
அருகம்புல் பிள்ளையாருக்கு சமர்ப்பிக்கிறோம். அது நோய்களை நீக்கும் “ஆகாதது அருகம்புல்லில் ஆகும்”என்பது பழமொழி.வாரம் ஒரு முறை கஷாயம் வைத்து குடித்தால் வலியும், வியாதியும் இன்றி வாழலாம். இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, தோல் நோய்கள், புற்று நோய், இதய நோய் போன்ற நோய்களையும் போக்கும் குணம் அருகம்புல்லுக்கு உண்டு.
மாவிலை:
மாவிலை கஷாயம் நீரின் மூலமாகப் பரவும் நோய்களைப் போக்குகிறது.கங்கை நீர் என்று கலசங்களில் நீரை எடுத்து
மாவிலை வைத்து கும்பாபிஷேகங்களிலும், புதுமனை புகுவிழாவிலும், மற்றும் விழாக்களிலும் வைத்து வணங்கி, அந்த நீரை மாவிலைகளால் தெளித்துத் தூய்மைப்படுத்தி, பின் மக்கள் மீதும் வீடுகள் மீதும் மற்றும் எல்லா இடங்களிலும், தெளிப்போம். தூய்மையான நீரை தெளித்து சுற்றுப்புறத்தை தூய்மை ஆக்கிறோம். வீட்டில் மாவிலை கட்டுவதும் காற்றில் உள்ள நீரைச் சுத்தப்படுத்துகிறது. மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள நீர் நிலைகளையும் சுத்தம் ஆக்கும்.
வாழைமரம் கட்டும் காரணம் :
விஷமுறிவுக்கு வாழை என்பார்கள். திருமணம், கோயில் விழாக்கள் வாயில்களில் வாழை கட்டுவதற்கு காரணம், விழாக்களின் போது தீங்கு இழைக்க கூடிய ஜந்துக்களை விரட்டவும், தவறி விஷஜந்துக்கள்
தீண்டிவிட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்ய வேறு எங்கும் தேடிக்கொண்டு இருக்காமல் உடனே அருகில் கட்டி இருக்கும் வாழை மரத்திலிருந்து வாழைப்பட்டையை எடுத்து தீமூட்டி அனலில் வாட்டி,வதக்கி சாறு எடுத்து அரை டம்பளர் உள்ளே கொடுத்து, பின் சாறு எடுத்து உடல் முழுக்க பூசிவிட்டால் விஷக்கடியிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள். இப்படி நல்லது கெட்டது என்று மக்கள் கூடும் இடங்களில் வாழைமரம் கட்டும் காரணம் இது தான் என்பார்கள். ஆதிகாலத்தில் வீடுகள் கோயில்கள் எல்லாம் காட்டுப் பகுதி சூழ்ந்த இடங்களில் தானே இருந்தன!
வேப்பிலை சக்தி கடவுளுக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கு வேண்டிய சக்திக்கும் தான். வேப்பிலை கஷாயம் அருந்தி வந்தால், உடலிலுள்ள நோய்க் கிருமிகள் அழிவதுடன் கிருமிகள் உற்பத்தி ஆகாமல் அன்றாட உடல் உறுப்பு தேய்மானத்தை தடுத்து உடலைப் புதுப்பிக்கிறது. பிணியின்றி வாழ வைக்கிறது. கசப்பு சுவை பிடிக்காது என்பதால் அதைச் சாப்பிடாதவர்களுக்கு உடலில் இருக்கும், எலும்பு மூட்டுக்கள், பாதங்களின் தசைகள், பற்கள், என்று பல உறுப்புக்கள் தேய்மானம் ஆகிறது. கசப்பு உண்டு வந்தால், தேய்மானம் தடுக்கப் படுகிறது. பாவைக்காய், சுண்டைக்காய், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெற்றிலை:
கடவுளுக்குப் படைப்பதற்கு மட்டும் அல்ல வெற்றிலை ,அறுசுவை உணவை அளவோடு உண்டபின் வெற்றிலை போட்டுக் கொள்வதால் உண்ட உணவு நல்ல முறையில் செரித்து உடலுக்கு சக்தி கிடைக்கும். அதனால்.இப்படி பண்டிகையில் சேர்த்து கொள்ளும் பொருட்கள் எல்லாம் காரண காரியமாய் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த "பராபவ" ஆண்டு, அச்சம், கவலை, நோய், நொடி முதலியவற்றை போக்கி மனநிறைவாய், மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.
இந்த ஆண்டு ஆன்மிகம் தழைத்தோங்கி, வழிபாடுகள் அதிகரிக்கும் . புதிய தொழில் தொடங்கவும், விவசாயம் செழிக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையவும், பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவும், பெண்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. என்று புத்தாண்டு பலன் படித்தேன் . இறைவன் அருளால் அப்படியே நடக்கட்டும்.
இனிய புத்தாண்டில் இறைவன் அருள்வார்.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
மகன் ஊரில் அரிசோனா தமிழ்ச்சங்கத்தில் ஞாயிறு
அன்று புத்தாண்டு
கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது.
வெற்றிப் படிக்கட்டில் ஏறி
விட்டான் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கவினும், மகனின் நண்பர் மகளும் அப்பளம், வடை பரிமாறினார்கள்.
பரிமாறும் முறையும் கற்றுக் கொள்கிறார்கள்.
போட்டி நடந்தது.திருக்குறள் ஒப்பித்தல், ஓவிய , புகைப்பட
போட்டி, மற்றும் சமையல் போட்டி மாறுவேட போட்டிகள்
நடந்து இருக்கிறது. மாறுவேட போட்டிக்கு நடுவராக
மருமகள் கலந்து கொண்டார்.
விழா இனிதாக நடந்தது என்று சொன்னார்கள் எனக்கு
படம் அனுப்பினார்கள் நானும் கலந்து கொண்ட
மகிழ்ச்சி.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------------------------------







.jpg)
கோமதிக்கா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் சூப்பர்!
பேரன் கவின் புகைப்பட போட்டியில் முதல் பரிசு வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
பேரன் close up ல் பார்க்கும் போது உங்கள் ஜாடையில் தெரிகிறார்.
அப்பா செய்த வெற்றிப் படிக்கட்டில் மகன்!!!! என்ன ஒரு அழகான நிகழ்வு இல்லையா!
உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!
கீதா
வணக்கம் கீதா ரெங்கன் வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
படங்கள் எல்லாம் சூப்பர்!
பேரன் கவின் புகைப்பட போட்டியில் முதல் பரிசு வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//
நன்றி கீதா
//பேரன் close up ல் பார்க்கும் போது உங்கள் ஜாடையில் தெரிகிறார்.//
ஓ ,அப்படியா மகிழ்ச்சி.
//அப்பா செய்த வெற்றிப் படிக்கட்டில் மகன்!!!! என்ன ஒரு அழகான நிகழ்வு இல்லையா!
உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!//
ஆமாம், கீதா மகிழ்ச்சிதான்.
எங்க வீட்டிலும் விஷுக்கனி உண்டு. கைநீட்டம் உண்டு. இப்பலாம் ம்ஹூம் எதுவும் இல்லை! அதெல்லாம் ஊரில் இருந்தவரை. விஷுக்கனி மட்டும் இப்பவும் தொடர்கிறேன். இனிப்பு செய்வதில்லை ஆனால் பழங்கள் வைக்கலாமே!!
பதிலளிநீக்குகீதா
//எங்க வீட்டிலும் விஷுக்கனி உண்டு. கைநீட்டம் உண்டு. இப்பலாம் ம்ஹூம் எதுவும் இல்லை! அதெல்லாம் ஊரில் இருந்தவரை. விஷுக்கனி மட்டும் இப்பவும் தொடர்கிறேன். இனிப்பு செய்வதில்லை ஆனால் பழங்கள் வைக்கலாமே!!//
நீக்குஇப்போது எல்லாம் குறைந்து வருகிறது. பிள்ளைகளுக்கு வீடியோ மூலம் கை நீட்டம் கொடுத்தேன். வீட்டுவேலையில் உதவி செய்பவருக்கு கைநீட்டம் கொடுத்தேன்.
//பழங்கள் வைக்கலாமே!!//
ஆமாம், பழங்கள் வைத்து வழிபடலாம்.
பாயாசம், வடை, மற்றும் மாங்காய் பச்சடிஎல்லாம் செய்வார்கள்.
நான் அவல் இனிப்பி, இட்லி மட்டும் செய்தேன். சட்னியில் புளிப்பு கொஞ்சம் சேர்த்து கொண்டேன். இனிப்பு, புளிப்பு இன்றைய உணவில் இடம்பெற்றது. இரவு இரண்டு வாழைப்பழம் அவ்வளவுதான்.
மனம் வேலைசெய்ய ஆசைபட்டாலும் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.
ஓய்வை விரும்புகிறது. நேற்று பூஜை அறை சுத்தம் செய்வது, கனிகளை எடுத்து வைப்பது சுவாமி படங்களுக்கு பூ வைப்பது , பிரசாதம் செய்வது இதுவே பெரிய வேலையாக மலைப்பை கொடுக்கிறது.
காலையில் சாப்பிடும் பழ உணவு, பொன் போன்றது. மத்தியானம் வெள்ளி போன்றது. இரவில் ஈயம் போன்றது என்கிறார்கள்.//
பதிலளிநீக்குஅதேதான். அக்கா. இரவு உணவை மிகச் சிம்பிளாக, அதுவும் நேரமே சாப்பிடுவது நல்லது என்பது என் அனுபவத்தில். எனக்கு அது எங்கு சென்றாலும் வசதியாக இருக்கிறது.
கீதா
//அதேதான். அக்கா. இரவு உணவை மிகச் சிம்பிளாக, அதுவும் நேரமே சாப்பிடுவது நல்லது என்பது என் அனுபவத்தில். எனக்கு அது எங்கு சென்றாலும் வசதியாக இருக்கிறது.//
நீக்குஇரவு பழ ஆகாரம் எளிமை, வசதிதான். எல்லோரும் வலியுறுத்துவது படுக்கைக்கு போகும் 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை முடித்து இருக்க வேண்டும் என்பதுதான்.
பழம் சாப்பிடுவதால் அது உணவாகவும் இருக்கிறது, மருந்தாகவும் இருக்கிறது. குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும்,
பதிலளிநீக்குநார்ப்பொருள்கொண்டதாகவும், குடலின் புளிப்புத் தன்மையை
அகற்றுவதாகவும் இருக்கிறது.//
ஆமாம்.
உங்க வீட்டு நித்ய கொலுவுடன் கனிகாணல் படம் சூப்பர்!!
பலவற்றின் நன்மைகள் குறிப்புகள் நல்ல குறிப்புகள் கோமதிக்கா.
பேரன் எடுத்த புகைப்படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. மலேசியா முருகன் கோவில் படம்!
கொண்டாட்டப் படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக அவர்களின் மகிழ்ச்சியைக் காட்டுகின்றன. எனக்குச் சில சமயம் தோன்றும். இங்கு விட இங்கு இப்போதெல்லாம் இப்படிக் கொண்டாட்டங்கள் அரிதாகிவிட்டன...எனவே அங்கு இப்படி எல்லோரும் கூடிக் கொண்டாடுவது இன்னும் சிறப்பாக இருக்கிறதோ என்றும் மகிழ்வாக இருக்கும் என்றும் எனக்குத் தோன்றியது.
பரிமாறும் முறையும் கற்றுக் கொள்கிறார்கள்.//
நல்ல விஷயம்.
உங்கள் மருமகள் மாறுவேடப் போட்டிக்கு நடுவராக இருந்தது சிறப்பு!
அங்கும் இப்படிச் சாப்பாடு கிடைப்பது இப்போதெல்லாம் நன்றாக வளர்ந்துவிட்டது. 25 வருடங்களுக்கு முன்னர் இப்படி இருந்தது இல்லை!
உணவு எல்லாம் நல்லாருக்கு பார்க்க!
சிறப்பான மகிழ்வான கொண்டாட்டம்.
கீதா
//உங்க வீட்டு நித்ய கொலுவுடன் கனிகாணல் படம் சூப்பர்!!
நீக்குபலவற்றின் நன்மைகள் குறிப்புகள் நல்ல குறிப்புகள் கோமதிக்கா.//
நன்றி.
//கொண்டாட்டப் படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக அவர்களின் மகிழ்ச்சியைக் காட்டுகின்றன. எனக்குச் சில சமயம் தோன்றும். இங்கு விட இங்கு இப்போதெல்லாம் இப்படிக் கொண்டாட்டங்கள் அரிதாகிவிட்டன...எனவே அங்கு இப்படி எல்லோரும் கூடிக் கொண்டாடுவது இன்னும் சிறப்பாக இருக்கிறதோ என்றும் மகிழ்வாக இருக்கும் என்றும் எனக்குத் தோன்றியது.//
உறவுகளுடன் கொண்டாட முடியாத பண்டிகைகளை நட்புகளுடன் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
//நல்ல விஷயம்.
உங்கள் மருமகள் மாறுவேடப் போட்டிக்கு நடுவராக இருந்தது சிறப்பு!
அங்கும் இப்படிச் சாப்பாடு கிடைப்பது இப்போதெல்லாம் நன்றாக வளர்ந்துவிட்டது. 25 வருடங்களுக்கு முன்னர் இப்படி இருந்தது இல்லை!
உணவு எல்லாம் நல்லாருக்கு பார்க்க!
சிறப்பான மகிழ்வான கொண்டாட்டம்.//
ஆமாம் கீதா. இப்போது எல்லாம் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.
உணவுக்கு கஷ்டபட வேண்டாம்.
சிறுதானியத்தில் உணவு பண்டங்கள் கிடைக்கிறது. சிறுதானியங்கள் நல்ல சுத்தமாக கிடைக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
JKC ஸார் நாளைதான் விஷுகனி என்று சொல்லி இருந்தார். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குJKC ஸார் நாளைதான் விஷுகனி என்று சொல்லி இருந்தார். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.//
ஆமாம் , சார் சொல்வது சரிதான் கேரளவில் நாளை அதிகாலையில் தான்.
புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
புத்தாண்டு தினத்தின் பழக்க வழக்கங்கள் பலவற்றையும் பட்டியலிட்டிருப்பது சிறப்பு.
பதிலளிநீக்கு//புத்தாண்டு தினத்தின் பழக்க வழக்கங்கள் பலவற்றையும் பட்டியலிட்டிருப்பது சிறப்பு.//
நீக்குபழசும், புதுசுமாக பதிவை உருவாக்கி இருக்கிறேன்.
கவின் புகைப்படப்போட்டியில் வெற்றி பெற்றிருப்பதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஎல்லா பணிகளிலும் கவின் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் பாராட்டுக்குரியது.
//கவின் புகைப்படப்போட்டியில் வெற்றி பெற்றிருப்பதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.//
நீக்குகவினுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் சொன்னதற்கு நன்றி.
//எல்லா பணிகளிலும் கவின் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் பாராட்டுக்குரியது. //
நன்றி ஸ்ரீராம்.
மெனுவில் விவரம் படம் வாயிலாக... நல்ல ஐடியா.
பதிலளிநீக்கு//மெனுவில் விவரம் படம் வாயிலாக... நல்ல ஐடியா.//
நீக்குமகன் எடுத்த படம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுரையும் படங்களும் சிறப்பு. கோபுரம் போட்டோ லைட் & ஷேடு
பதிலளிநீக்குமுறையில் அருமையாக இருக்கிறது.
வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுரையும் படங்களும் சிறப்பு. கோபுரம் போட்டோ லைட் & ஷேடு
முறையில் அருமையாக இருக்கிறது.//
பேரன் எடுத்த படத்தை அருமையாக இருப்பதாய் சொன்னதற்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்களுக்கு நாளைதான் விஷுகனி காணல். வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
சிறப்பான படங்களுடன் அழகிய பதிவு...
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள். கனி காணல் அருமை. பேரன் ஒளிப்படப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்குப் பாராட்டுகள். தந்தை அமைத்துக் கொடுத்த வெற்றிப் படியில் மேலும் சிகரங்கள் பல தொடட்டும். விருந்து மெனு நன்று.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி , இனிய புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்கு//கனி காணல் அருமை. //
நன்றி.
//பேரன் ஒளிப்படப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்குப் பாராட்டுகள். தந்தை அமைத்துக் கொடுத்த வெற்றிப் படியில் மேலும் சிகரங்கள் பல தொடட்டும். விருந்து மெனு நன்று.//
பேரனை பாராட்டி , வாழ்த்தியதற்கு நன்றி ராமலக்ஷ்மி.