வியாழன், 16 ஏப்ரல், 2026

வாழ்த்தும் பயனும்

 


உலக அமைதிக்காக  உலக சமுதாய சேவா சங்கத்தில் நாளை அமாவாசை  அன்று  "உலக நல வேள்வி" என்ற கூட்டுப்பிரார்த்தனை நடக்க போகிறது.  வாழ்த்தால்  என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை வேதாத்திரி மகரிஷி சொன்ன "வாழ்த்தும் பயனும்"    இடம்பெறுகிறது இந்த பதிவில், போரில்லா உலகம் வேண்டும் என்ற பாடலும் இடம்பெறுகிறது.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

.
வாழ்க வளமுடன்:
.
"மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தாலன்றி வாழ்த்தவே முடியாது. அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும்போது ஒரு வலுவு ஒரு தெளிவு அந்த அமைதி நிலை அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுருவி நிறைந்து அந்த உயிர்க்கலப்பு ஏற்படக்கூடிய நிலை இவை எல்லாம் அதிகமாகும்.

அந்த நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (interaction) ஏற்படுகின்றது. ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம். இரண்டு தடவை நாலு தடவை செய்யச் செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால், அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக்கொண்டிருக்கும், அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அந்த தொடர் அறுபடாது இருக்கும்.


அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றிவிட முடியும். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும். எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட முடியும். நல்லவர்களாக மாற்றிவிட முடியும்.

தவம் முடித்த பிறகு வாழ்த்துகிறோம். தவத்தில் இருக்கும்போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் Alpha Wave க்கு வந்து விடுகிறோம். அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (Subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்துவிடும். அந்த இடத்தோடு அங்கேயிருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம். 'வாழ்க வளமுடன்' என்ற அந்த எண்ணத்திற்கு வலுவு அதிகம். உதாரணமாக ஒரு வில் இருக்கிறது அம்பு இருக்கிறது. அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று.


எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்; அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதைக் கொண்டு வருகிறோமோ அங்கேயிருந்து கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கு கூட வேகம் அதிகம், செயல்படும் வேகம் அதிகம். ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக் கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம். சீக்கிரமாகச் செயலுக்கும் வந்துவிடும். நமக்காக என்னென்ன வேண்டுமோ அதைச் செயல்படுத்துவதற்குச் சில நாட்களானாலும் சரி, பிறருக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
.
* * * * * * * * * * * * * * * * * *

"வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு இனிய
நட்புறவை வளர்க்கிறது"
.

"வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய நிலைக்கு
அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு
வலுவும் தெளிவும் ஏற்படுகிறது"
.

"வாழ்த்து வீண் ஆகாது. வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் என்று சொல்லச் சொல்ல
உடல் மனம் நன்றாக இருக்கும்"
.

"வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான
திருமந்திரமாகும்"
.


வாழ்த்து:

வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க
வாழ்க அறநெறி வாழ்க மெய்ஞானம்!
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

போர் நிறுத்த  நடவடிக்கை  நல்லபடியாக நடந்து அமைதியும் 
நல்லிணக்கமும்  வர வேண்டும். அமைதியை நிலைநிறுத்த வேண்டும்.

உலல நல வேள்வியாக வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! என்று சொல்லிக் கொண்டே  இருக்கும் தொடர் பிரார்த்தனை நடக்க போகிறது. 10 மணி முதல் மதியம் 1.30 வரை காரைக்கால் மனவளக்கலை மன்றத்தில். அவர்கள் அனுப்பி வைத்தார்கள் முடிந்தவர்கள் கண்டிப்பாய் கலந்து கொள்ளுங்கள் என்று.

நாளை   உலக சமுதாய சேவா சங்கங்களில்  நடைபெற இருக்கிறது. முடிந்தவர்கள் அவர் அவர் ஊரில் இருக்கும் மன்றங்களில் இந்த வேள்வியை  நடத்தலாம் நடக்கும் போது கலந்து கொள்ளலாம். முடியாதவர்கள் வீட்டில் ஒரு 108 தடவை சொன்னால் போதும்.

ஒவ்வொருவரும் 108 தடவை சொல்ல முடியவில்லை என்றால் தினம் அதிகாலை எழுந்தவுடன் 10 தடவையாவது சொன்னால் போதும். இந்த வையகம் வாழ்ந்தால் நாமும் வாழலாம்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் முக்கிய நோக்கமே தனி  மனித அமைதியின் மூலமாக குடும்பம் மற்றும் உலக சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்துதல் தான்.


போர் நிறுத்தம் ஏற்பட்டு நாடுகளிடையே அமைதி நிலவ முழு மனதாக பிரார்த்தனை செய்வோம்.



மகிழப்பூ கவிதைகள் என்ற இந்த தளத்தில் போரில்லா  நல் உலகம் வேண்டும் என்ற இந்த பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது கேட்டுப்பாருங்கள். உஷா ராணி என்பவர் எழுதி இருக்கிறார். பாடியவர் யார் என்று போடவில்லை நன்றாக பாடுகிறார்கள்.

எனது எனது என்றிட  எங்கும்
முழங்கும் போர் பறை!

எல்லாம்  நமது என்பதே
அமைதி காணும் வழிமுறை

நிலையாமை ஒன்றே நிசமே!
பகைமை கொல்லும் விஷமே!

இந்நிலம் இன்று என் வசம்
நாளை இந்நிலம் யார் வசம்

அறிவியல் கற்று என்ன?
பரிணாமம் பெற்று என்ன?

போரிடும் மனித இனமே!
ஏனோ மிருக குணமே!

எண்ணத்தில் அன்பு கனியட்டும்
மனிதம் மனதில்   மலரட்டும்.

போர்கள் எல்லாம் மறையட்டும்
அமைதி எங்கும் நிறையட்டும்

பாடல் வரிகள் , இசை , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது சிறிய காணொளிதான் கேட்டுப்பாருங்கள்.

கூட்டுதவத்தின் முடிவில் நாங்கள் சொல்வது:-

நம் மனதில் அமைதி நிலவட்டும்
நம்மை சுற்றிலும் அமைதி நிலவட்டும்
உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
அமைதி அமைதி அமைதி

அது போல இந்த பாடலில் நிறைவு  வரிகள்  அமைதி எங்கும் நிறையட்டும். என்ற வரிகள் எனக்கு பிடித்தது.


வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக