வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

Buffalo Park Flagstaff

எருமையின்  வெண்கல சிற்பம்


ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அரிசோனாவிற்கு அருகில் இருக்கும்    ஃ பிளாக்ஸ்டாப்  என்ற இடத்தில் அமைந்துள்ள   "எருமை பூங்காவிற்கு" அழைத்து சென்றான் மகன்.  சான் பிரான்சிஸ்கோ சிகரம் என்று அழைக்கப்படும் மிக அழகான மலைச்சிகரம் பின் புலத்தில் தெரியும்  அழகான  பெரிய பூங்கா. அரிசோனாவிலிருந்து 120 மைல் தூரத்தில் உள்ளது . வேறு சில இடங்களும் பார்த்து விட்டு ஞாயிறு மாலை வீடு வந்து சேர்ந்தோம். இந்த பதிவில் பூங்கா இடம் பெறுகிறது.
ஃ பிளாக்ஸ்டாப் வரும் வழி யெல்லாம் மழை.



பூங்காவிற்கு அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் கார் சார்ஜ் ஏற்ற போட்டோம்.

மழை நீர் பைன் மரத்து இலை வழியே  சொட்டுவது பார்க்க அழகாய்  இருந்தது.

பின்    அங்கு இருந்த  மரங்களுக்கு கீழே கற்களுக்கு நடுவில் பூத்து இருந்த காட்டு மலர்களை  ஊரின் அழகை பார்த்தும் அங்கு இருந்த மழையில் நனைந்த மலர்களை படம் எடுத்தோம்.

அடுத்து   நாங்கள் தங்க  அறை எடுத்து இருந்த ஒரு  ஓட்டல்  அறையில் பொருட்களை  வைத்து விட்டு பார்க் வந்தோம்.


அழகிய குதிரை சாரட் வாயில் முன் இருக்கிறது

பரந்து விரிந்து இருக்கும்   இந்த பூங்காவிற்கு மக்கள் உடற்பயிற்சி செய்ய,  மலைச்சிகரங்களில் மலையேற்றம் செய்ய  வருகிறார்கள்.

சைக்கிளில் வலம் வருகிறார்கள், நடக்க முடியாதவர்கள் சக்கர நாற்காலியை அவர்களே ஓட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். குடும்பத்தோடு மாலை நேரம் வந்து  மகிழ்ச்சியாக பொழுது போக்கி செல்கிறார்கள்.

அங்குள்ள மக்களுக்கு குடும்பம் என்றால் அவர்கள் வளர்க்கும் வளர்ப்பு செல்லங்களும் அடக்கம் அவை இல்லாமல் வெளியில் வருவது இல்லை. இரவு 12  மணி வரை நேரம்  திறந்து இருக்கும் பூங்கா.


கொடிமரத்தில் நிறைய பூங்கா இருந்தாலும் இந்த ஜெமினி சாலையில் உள்ள  இந்த  "எருமை பூங்கா"  எல்லா காலங்களிலும்  இயற்கை ஆர்வலர்கள் விரும்பும் பூங்காவாம்.    

அழகிய முகப்பு தோற்றம்

பறவைகளின் சத்தம் மட்டும் கேட்டேன்  அவைகளை படம் எடுக்க முடியவில்லை. குருவிகள், தேன் சிட்டு போன்ற பறவைகள் இருந்தன.


பாதை ஓரங்களில் சூரிய காந்தி பூக்கள் பூத்து இருந்தது , மாலை நேரம் மழை  பெய்து ஓய்ந்து இருந்தது. நாங்கள் வரும் வழி எல்லாம் மழை பெய்தது, பூங்காவிற்கு போகும் போது மழை இல்லை.




நான்  பூங்காவில் கொஞ்ச தூரம் நடந்து விட்டு பின் இந்த கல் ஆசனத்தில்  உட்கார்ந்து கொண்டு  போகிற வருகிற மக்களை வேடிக்கைப்பார்த்தேன். மகனும், மருமகளும் நடைபயிற்சி செய்து வந்தார்கள். ஒரு மைல் தூரம் நடந்து வந்தார்கள்.


பூங்கா வெகு சுத்தமாக இருந்தது.

இந்த இடத்தில் எல்லோரும் அமர்ந்து போட்டோ எடுத்து கொண்டார்கள்.

பேரன் என்னுடன் இருந்தான்.

எப்படி போய் எப்படி வரலாம் என்பதற்கு வரை படம்.

நிறைய பாறைகள் இப்படி   இருந்தது

நடந்து விட்டு இளைப்பாற ஆசனங்கள் உண்டு

பேரன் அதன் அருகில்  அவன் விளையாட்டு சாமான்களை வைத்து வீடியோ செய்தான். நான் அந்த மர சோபாவில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தேன்.

 பேரன் செய்த மிக சிறிய காணொளி தான் பாருங்கள்.

ஓங்கி நிமிர்ந்து இருக்கும் பைன் மரங்கள் அழகு




இந்த மலையில் தான் மக்கள் மலையேற்றம் செய்கிறார்கள்.


கீழே உள்ள மூன்று படங்களும் மகன்  நடைபயிற்சி செய்த போது எடுத்து வந்த படங்கள்.




வானமும், வெண்மேகமும் மலையும் அழகு.  பாறைகளில்  மழை நீர் தேங்கி இருப்பததில் வானம் தெரிகிறது. குட்டி குட்டியாக   மஞ்சள் பூக்கள் பூத்து இருப்பதை பார்க்க அழகு.
இதை பார்க்க நான் வெகு தூரம் நடக்க வேண்டும். மகன் எடுத்து வந்து காட்டினான். 

22 மைல் நடக்கலாம் அவ்வளவு பெரிய பூங்கா. நல்ல தட்ப வெட்பம் இருப்பதால் அனைவரும் இங்கு நடக்க விரும்புகிறார்கள்.

அரிசோனாவின் மிக உயரமான சிகரமான ஹம்ப்ரேஸ் மலை இதிலும் மலையேற்றம் செய்கிறார்கள். இரவு நேரத்தில் நட்சத்திரங்களை புகைப்படம் எடுக்க  நிறைய பேர் இரவு நேரத்தில் வருவார்களாம். இரவு நேரத்தில் வன விலங்குகளையும் பார்க்கலாம் என்கிறார்கள். சூரிய உதயமும் பார்க்க அழகாய் இருக்குமாம்.


இந்த பூங்காவில் தங்கள் வளர்ப்பு செல்லங்களுடன் வந்தது பின்பு வரும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

35 கருத்துகள்:

  1. முதல் படம் எருமையா?  ஆ...  ஏன் எப்படியோ இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      /முதல் படம் எருமையா? ஆ... ஏன் எப்படியோ இருக்கிறது!//

      அங்கு உள்ளவர்களுக்கு வெண்கலத்தில் இப்படித்தான் செய்ய தெரியும் போல!

      நீக்கு
  2. அதிக படங்கள் என்பதால் கொலாஜ் முறையில் வெளியிட்டு விட்டீர்களா?  அதுதான் பைன் மரமா?  

    பூமித்தாய்க்கு 
    நீர்துளிகளால் 
    அர்ச்சனை செய்கின்றன 
    பைன் இலை பேத்திகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிக படங்கள் என்பதால் கொலாஜ் முறையில் வெளியிட்டு விட்டீர்களா? அதுதான் பைன் மரமா? //

      ஆமாம். நிறைய படங்கள் அதனால்தான் கொலாஜ்

      //பூமித்தாய்க்கு
      நீர்துளிகளால்
      அர்ச்சனை செய்கின்றன
      பைன் இலை பேத்திகள்...//

      கவிதை நன்றாக இருக்கிறது.

      நீக்கு
  3. மலர்கள் நனைந்தன மழையாலே...  என் மனமும் குளிர்ந்தது படத்தாலே...!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலர்கள் நனைந்தன மழையாலே... என் மனமும் குளிர்ந்தது படத்தாலே...! //

      மலர்கள் படம் மனதை குளிர்வித்து , நல்ல பாடலை நினைவுக்கு வரவழைத்து விட்டது.

      நீக்கு
  4. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சிட்டிருக்கிறது பூங்கா...  பூங்கானாவின் மனதுக்குள் கைவிடப்பட்ட குழந்தையின் ஏக்கம் இருக்குமோ....  பின்னர் வருவார்கள்தான்.  இந்த நேரத்தின் சூழலைச் சொல்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சிட்டிருக்கிறது பூங்கா... பூங்கானாவின் மனதுக்குள் கைவிடப்பட்ட குழந்தையின் ஏக்கம் இருக்குமோ.... பின்னர் வருவார்கள்தான். இந்த நேரத்தின் சூழலைச் சொல்கிறேன்!//

      மழை நின்றவுடன் மக்கள் வந்தார்கள். நான் கூட்டம் இல்லாதபோது எடுத்தேன். அடுத்த பகுதியில் மக்கள் வருவார்கள்.
      பரந்து விரிந்து இருப்பதால் மக்கள் கூட்டமாக தெரியவில்லை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வெங்கலச்சிலை பிரமாண்டமாக இருக்கிறது ஆனால் எருமை போல தெரியவில்லை.

    மற்ற படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    காணொளி கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //வெங்கலச்சிலை பிரமாண்டமாக இருக்கிறது ஆனால் எருமை போல தெரியவில்லை.//

      நன்றாக செய்து இருக்கலாம்

      //மற்ற படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

      காணொளி கண்டேன்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      படங்கள் அனைத்தும் அழகு...//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. மழைத்துளிகள் தெரித்த கண்ணாடி வழி படங்கள் செம அழகு கோமதிக்கா. எனக்கு அப்படி எடுப்பது ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //மழைத்துளிகள் தெரித்த கண்ணாடி வழி படங்கள் செம அழகு கோமதிக்கா. எனக்கு அப்படி எடுப்பது ரொம்பப் பிடிக்கும்.//

      எனக்கும் பிடிக்கும் கீதா அதனால் தான் எடுத்தேன், முன் பக்கம் மழை சமயத்தில் வைப்பர் வேலை செய்வது பிடிக்கும். நிறைய படங்கள் கார் கண்ணாடி வழியே எடுத்தேன், கொஞ்சம் தான் பகிர்ந்து கொண்டேன், மலைகள், சாலைகள், வயல்கள் எல்லாம் எடுத்தேன்.

      நீக்கு
  8. பைன் மர வழி நீர்த் துளி விழுவது முத்து முத்தாய் மனதை லயிக்க வைக்கிறது படம்.

    சாரட் பார்க்க ரொம்ப அழகா இருக்கு பார்வைக்கு மட்டும்தானோ? நான் நினைத்தேன் அது இந்த வடிவிலான ஒரு வண்டி மோட்டாரில் இயங்கும் ஒன்றாக இருக்கும் நாம் அதில் ஏறி உள்ளே வலம் வரலாம் என்று .

    அங்குள்ள மக்களுக்கு குடும்பம் என்றால் அவர்கள் வளர்க்கும் வளர்ப்பு செல்லங்களும் அடக்கம் அவை இல்லாமல் வெளியில் வருவது இல்லை. //

    ஆமாம் அங்கெல்லாம் அப்படித்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பைன் மர வழி நீர்த் துளி விழுவது முத்து முத்தாய் மனதை லயிக்க வைக்கிறது படம்.//

      நான் எடுத்த இந்த படத்தை விட மகன் எடுத்த பைன் மர இலைகளில் நீர்த்துளி படம் நன்றாக இருக்கும் வேறு சமயம் அதை பகிர்கிறேன்.

      //சாரட் பார்க்க ரொம்ப அழகா இருக்கு பார்வைக்கு மட்டும்தானோ? நான் நினைத்தேன் அது இந்த வடிவிலான ஒரு வண்டி மோட்டாரில் இயங்கும் ஒன்றாக இருக்கும் நாம் அதில் ஏறி உள்ளே வலம் வரலாம் என்று .//

      இப்போதும் இந்த மாதிரி சாரட் வண்டிகள் உண்டு அதில் பயணம் செய்து இருக்கிறோம். முன்பு பதிவுகளில் போட்டு இருக்கிறேன்.
      இதில் நாலு குதிரைகள் இருக்கிறது. இப்போது இரண்டு குதிரைகள் இருக்கிறது. இதை அந்தக்கால நினைவுக்கு வைத்து இருக்கிறார்கள்.
      அங்கு வந்தவர்களின் வளர்ப்பு செல்லங்களை பற்றி அடுத்த பதிவில் வரும் கீதா.

      நீக்கு
  9. அங்கும் ஜெமினி ரோட், என்றெல்லாம் இருக்கிறதே.

    பூங்காவுக்கு போறப்ப மழை இல்லை நல்லதாச்சு இல்லேனா ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும்.

    பூங்காவில் எப்படிப் போய் எப்படி வரலாம்னு வரைபடம் எல்லாம் மிகவும் உதவியாக இருக்கும்.

    பூங்கா வளாகம் மிகப் பெரிதாக இருக்கிறது.

    சில பகுதிகள் இங்கிருக்கும் பூங்காக்கள் போன்று இருக்கின்றன. நம் வீட்டருகில் வீட்டிலிருந்து 15, 20 நிமிட நடையில் நிறைய பூங்காக்கள் உண்டு. அதில் நம் வீட்டருகில் இருப்பவை நல்ல பசுமையாக மரங்கள் அடர்ந்து இருக்கும். நன்றாகப் பராமரிக்கிறார்கள். இதைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்து படங்கள் எல்லாம் எடுத்து வைத்தும் கீதா சுறு சுறுப்பாக எதுவும் எழுதாமல் இருக்கிறாள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கும் ஜெமினி ரோட், என்றெல்லாம் இருக்கிறதே.//

      ஜெமினி ரோடை காரில் ( GPS )வழி சொல்லும் பெண் ஜெமானாய் ரோடு என்பாள் அப்போது எல்லாம் சிரிப்புதான் எங்களுக்கு.

      //பூங்காவுக்கு போறப்ப மழை இல்லை நல்லதாச்சு இல்லேனா ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும்.//

      ஆமாம்.

      //பூங்காவில் எப்படிப் போய் எப்படி வரலாம்னு வரைபடம் எல்லாம் மிகவும் உதவியாக இருக்கும்.//

      நடைபயிற்சியை நேரே போய் நேரே வந்த வழியே வராமல் பல பாதை வழியே போய் வந்தால் அந்த இடத்தின் அழகையும் காணலாம்.

      //பூங்கா வளாகம் மிகப் பெரிதாக இருக்கிறது.//

      22 மைல் சுற்றளவு உள்ளது.

      //சில பகுதிகள் இங்கிருக்கும் பூங்காக்கள் போன்று இருக்கின்றன. நம் வீட்டருகில் வீட்டிலிருந்து 15, 20 நிமிட நடையில் நிறைய பூங்காக்கள் உண்டு. அதில் நம் வீட்டருகில் இருப்பவை நல்ல பசுமையாக மரங்கள் அடர்ந்து இருக்கும்.

      பெங்களூரில் பூங்காவிற்கு பஞ்சமே கிடையாது. பசுமையான மரங்கள் பல காலத்து மரங்கள் தானே அந்த ஊரின் சிறப்பு. இப்போது கொஞ்சம் மெட்ரோ வால் நிறைய அழிக்கபட்டு விட்டது.

      //நன்றாகப் பராமரிக்கிறார்கள். இதைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்து படங்கள் எல்லாம் எடுத்து வைத்தும் கீதா சுறு சுறுப்பாக எதுவும் எழுதாமல் இருக்கிறாள்!//

      நேரம் கிடைக்கும் போது சுறு சுறுப்பை வரவழைத்து கொண்டு எழுதுங்கள்.

      எனக்கும் டைப் செய்வதில் கையில் வலி இருக்கிறது. நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால் இடுப்பு, கால் வலி இருக்கிறது. அதை புறம் தள்ளி வலிய உற்சாகத்தை வளர்த்து கொண்டு பதிவு போடுகிறேன்.
      ஒரு பதிவு போட வெகு நாட்கள் ஆகிறது இப்போது.


      நீக்கு
  10. முதல்சிற்பம் அருமை. இத்தகையை எருமை(?)களை நான் அனிமல் ப்ளேனட் போன்றவற்றில் பார்த்திருக்கிறேன்.

    படங்கள் எல்லாமே அழகு. பூங்காவின் அழகை நன்றாக வெளிப்படுத்துகின்றன.

    இங்கெல்லாம் பாம்பு பயம் கிடையாதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைதமிழன், வாழ்க வளமுடன்

      //முதல்சிற்பம் அருமை. இத்தகையை எருமை(?)களை நான் அனிமல் ப்ளேனட் போன்றவற்றில் பார்த்திருக்கிறேன்.//

      ஓ ! ஆமாம், இந்த மாதிரி எருமைகளும் உண்டு தான்.

      //படங்கள் எல்லாமே அழகு. பூங்காவின் அழகை நன்றாக வெளிப்படுத்துகின்றன.//

      நன்றி.

      //இங்கெல்லாம் பாம்பு பயம் கிடையாதா//

      பேரன் பூங்காவில் புற்களுக்கு இடையே அமர்ந்து வீடியோ செய்யும் போது எச்சரிக்கையாக பார்த்து கொண்டு இருந்தேன். பாம்பு பற்றி அந்த பூங்காவில் எச்சரிக்கை போட வில்லை. வெகு சுத்தமான தரை பகுதியில் நடப்பதால் பயம் இல்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  11. மழையில் நனைந்த மலர்கள் படங்கள் அருமை. அதிலும் அந்த பைன் மரம் வழியே நீர்த்துளிகள் விழுவது அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மழையில் நனைந்த மலர்கள் படங்கள் அருமை. அதிலும் அந்த பைன் மரம் வழியே நீர்த்துளிகள் விழுவது அருமை//

      பனியின் நீர்த்துளி, மழையின் நீர்த்துளி மலர்களில், மரங்களில், செடிகளில் இருப்பதை பார்ப்பது அழகுதான். பைன் மர இலைகளில் மழைத்துளி போல ஒரு அலங்கார மேஜை விளக்கு எங்கள் வீட்டில் இருந்தது, ஆன் செய்தால் குச்சி குச்சியாக இருக்கும் பகுதியில் நீர்த்துளி போல விளக்கு எரியும் பார்க்க அழகாய் இருக்கும், பல வண்ணங்களில் வெளிச்சம் வரும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. கவின் தன் விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடுவது மிக அழகு . வீடியோவை மிக மிக அரசித்துப் பார்த்தேன். ரிமோட் ஜீப் இல்லையா? மீண்டும் மீண்டும் பார்த்தேன் அழகாக எடுத்திருக்கிறார். கவினுக்கு நல்ல திறமை, கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவின் தன் விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடுவது மிக அழகு . வீடியோவை மிக மிக அரசித்துப் பார்த்தேன். ரிமோட் ஜீப் இல்லையா? மீண்டும் மீண்டும் பார்த்தேன் அழகாக எடுத்திருக்கிறார். கவினுக்கு நல்ல திறமை, கோமதிக்கா//

      மாலை நேரத்தில் இரண்டு நாள் போய் இருந்தோம் பூங்காவிற்கு .
      இரண்டு நாள் எடுத்த வீடியோவை சேர்த்து காணொளி செய்வான்.
      லேகோ பொம்மை கார் கீதா .

      நீக்கு
  13. அந்தக் காணொளியின் கொஞ்சம் பெரியதாக முழு காணொளி இருந்தால் யுட்யூபில் போடச் சொல்லுங்கள் அல்லது நீங்க போடுங்க கோமதிக்கா. வண்டி கற்களிள் ஓடுவது அழகா இருக்கு

    மலையடிவாரத்தில் இப்படி ஒரு பார்க் பார்க்கவே ரம்மியம்.

    மலையேற்றம், இரவில் நட்சத்திரங்களை எடுத்தல் என்று அந்த ஊர் மக்கள் எப்படி வாழ்க்கையை இயற்கையோடு அனுபவிக்கிறார்கள் என்பதை நான் பல வருடங்களுக்கு முன்பே கண்டு வியந்திருக்கிறேன், கோமதிக்கா.

    கூடவே ஒரு ஏக்கமும் வரும். நம்ம ஊர்லயும் இதெல்லாம் இவ்வளவு அழகா கொண்டு வரலாமே எவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றன.

    அனைத்து படங்களும் விவரங்களும் ரசித்தேன் கோமதிக்கா!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தக் காணொளியின் கொஞ்சம் பெரியதாக முழு காணொளி இருந்தால் யுட்யூபில் போடச் சொல்லுங்கள் அல்லது நீங்க போடுங்க கோமதிக்கா. வண்டி கற்களிள் ஓடுவது அழகா இருக்கு//

      போடுவான் கீதா. போட்ட பின் உங்களுக்கு லிங்க் அனுப்புகிறேன்.
      கவின் கோடைகால கேம்ப் போய் குறு படம் எடுத்து இருக்கிறான். அது எட்டாம் தேதி ரீலிஸ் ஆகிறது.
      நான் பார்க்க முடியாது, மகள் வீட்டுக்கு நாளை போகிறேன்.

      மலையடிவாரத்தில் இப்படி ஒரு பார்க் பார்க்கவே ரம்மியம்.

      //மலையேற்றம், இரவில் நட்சத்திரங்களை எடுத்தல் என்று அந்த ஊர் மக்கள் எப்படி வாழ்க்கையை இயற்கையோடு அனுபவிக்கிறார்கள் என்பதை நான் பல வருடங்களுக்கு முன்பே கண்டு வியந்திருக்கிறேன், கோமதிக்கா.

      கூடவே ஒரு ஏக்கமும் வரும். நம்ம ஊர்லயும் இதெல்லாம் இவ்வளவு அழகா கொண்டு வரலாமே எவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றன.//

      இயற்கை ஆர்வலர்கள் நம் நாட்டிலும் உண்டு கீதா. வட நாட்டு பக்கம் உள்ள மலைகளில் மலையேற நம் தமிழ்நாட்டு மக்களும் போகிறார்கள். நேபாள் போய் இருந்த போது பார்த்தேன்.

      //அனைத்து படங்களும் விவரங்களும் ரசித்தேன் கோமதிக்கா!//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  14. போடுவான் கீதா. போட்ட பின் உங்களுக்கு லிங்க் அனுப்புகிறேன்.
    கவின் கோடைகால கேம்ப் போய் குறு படம் எடுத்து இருக்கிறான். அது எட்டாம் தேதி ரீலிஸ் ஆகிறது.//

    மிக்க மகிழ்ச்சி கோமதிக்கா. கவின் குறும்படம் எல்லாம் எடுக்கிறார் என்பது எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆசை. எப்படியும் பகிர்வீர்கள் அவர் பகிர்வார் என்பது தெரியும்.

    லிங்க் அனுப்புங்க அக்கா மிக்க நன்றி.

    ஆமாம் இங்கும் வட இந்தியாவில் தென்னிந்தியாவில் ஏறுவாங்க என்பது அறிந்திருக்கிறேன் கோமதிக்கா. இயற்கை ஆர்வலர்கள் இங்கும் ஏறுகிறார்கள் பழனி மலையில் கூட உண்டு.

    ஷிம்லா பகுதியிலும் நம் மக்கள் போகிறார்கள், திருச்சியில் இதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்போது நிறைய வந்துவிட்டன.

    நான் ஆதங்கப்பட்டது சின்ன இடங்களைக் கூட சுற்றுலா தலமாக ஆக்கும் அவங்களைப் போல நம் நாட்டிலும் வர வேண்டும்.

    அதற்கான திட்டங்கள் மத்திய அரசு எடுத்து வருகிறது. சமீபத்தில் செய்த வேலை மூலம் தெரிய வந்தது,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மிக்க மகிழ்ச்சி கோமதிக்கா. கவின் குறும்படம் எல்லாம் எடுக்கிறார் என்பது எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆசை. எப்படியும் பகிர்வீர்கள் அவர் பகிர்வார் என்பது தெரியும்.

      லிங்க் அனுப்புங்க அக்கா மிக்க நன்றி.//

      தனிபட்ட முறையில் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. பேரன் எனக்கு அனுப்பினால் கண்டிப்பாய் இங்கு பகிர்ந்து கொள்வேன். லிங்க் அனுப்புவேன்.


      //நான் ஆதங்கப்பட்டது சின்ன இடங்களைக் கூட சுற்றுலா தலமாக ஆக்கும் அவங்களைப் போல நம் நாட்டிலும் வர வேண்டும்.//

      நம் நாட்டில் சுற்றுலா தலம் இருந்தால் அதை அரசாங்கம் மட்டுமே சரிய செய்ய வேண்டும் என்று இருக்கிறார்கள். முதல் அறிவுப்பு பலகையில் உள்ளதை படித்துப்பார்த்தால் தெரியும் இந்த பூங்கா பொது மக்களுக்காக திறந்து விட்டதிலிருந்து யார் எல்லாம் பொறுப்பு எடுத்து கவனித்து கொள்கிறார்கள் என்று இருக்கும். குறிப்பாக தன்னர்வலர்கள் தொண்டு மகத்தானது, நாம் பயன் படுத்தும் பூங்கா நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காட்டுச்செடி, களைச்செடி களையபட வாருங்கள் தாங்களே மனம் உவந்து வருபவர்கள் வரலாம் என்று அழைப்பு விட்டு இருந்தார்கள் நாங்கள் போய் இருந்த போது. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்பது போல நினைவு சின்னங்கள், பூங்கா எல்லாம் ஆரம்பத்தில் எப்படி இருந்தது இப்போது நிலை என்ன என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.


      நீக்கு
  15. காட்டுப் பூக்கள், சூரியகாந்தி மலர்கள் படங்களும் விவரமும் மற்ற பட்ங்களும் மிக அருமை

    மலை அவ்வளவு தூரம் இருக்கிறதா. அதனால்தான் 12 மணி வரை பார்க் திறந்திருக்கிறதா! ஆச்சரியம் . மலை அருகில் 22 மைல் சுற்றி வர பார்க் என்றால் அது பெரும்பாலும் அட்வென்சரில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் வசதியாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. நல்ல விவரங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //காட்டுப் பூக்கள், சூரியகாந்தி மலர்கள் படங்களும் விவரமும் மற்ற படங்களும் மிக அருமை//

      நன்றி.

      //மலை அவ்வளவு தூரம் இருக்கிறதா. அதனால்தான் 12 மணி வரை பார்க் திறந்திருக்கிறதா! ஆச்சரியம் . மலை அருகில் 22 மைல் சுற்றி வர பார்க் என்றால் அது பெரும்பாலும் அட்வென்சரில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் வசதியாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. நல்ல விவரங்கள்.//

      ஆமாம், உடல் நலத்தில் ஆர்வம் உள்ளவர்களும் அட்வென்சரில் ஆர்வம் உள்ளவர்களும் நிறைய வருகிறார்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    நலமா? பதிவு அருமை. தாங்கள் சென்று வந்த பூங்கா மிக அழகாக இருக்கிறது. முதல் படத்திலுள்ள வெங்கல எருமை சிலை பார்க்க அழகாக இருக்கிறது.

    படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. கலர் கலரான மலர்கள், மழை நீர் முத்தென வடியும் பைன் மர இலைகள் என அத்தனைபடங்களும் அருமை.

    சாலையில் நடப்பதை விட பூங்காவில் நடந்து வருவது நன்றாகத்தான் இருக்கும். விதவிதமான தாவரங்கள் மலர்கள் என பார்த்தபடி நடக்கலாம்.

    தங்கள் பேரனின் படங்களும், அவர் விளையாடிய ஜீப் மாதிரியான காணொளியும் கண்டு ரசித்தேன். தங்கள் மகன், மருமகள் நடந்து விட்டு வரும் வரையில் தங்களுக்கு துணையாக அவர் இருந்தது சிறப்பு. பதிவில் எல்லா படங்களும் நன்றாக உள்ளது. அடுத்த பதிவுக்கும் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழக வளமுடன்

      //நலமா? பதிவு அருமை. தாங்கள் சென்று வந்த பூங்கா மிக அழகாக இருக்கிறது. முதல் படத்திலுள்ள வெங்கல எருமை சிலை பார்க்க அழகாக இருக்கிறது.//

      நலமாக இருக்கிறேன், இடுப்பு, கால்வலி உள்ளது . "அதை பொருட்ப்படுத்தாமல் வாங்க நடக்க முடிந்தவரை நடங்க அப்புறம் உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்று அழைத்து போனான் மகன்.பேரனுக்கு 1 ஆம் தேதி பள்ளி திறந்து விடும் என்று அவனுக்கு விடுமுறை இருக்கும் போது போய் வந்து விடலாம் என்று இரண்டு மூன்று இடங்கள் அழைத்து போனான்.
      ஊருக்கு போய் வந்து பிசியோதிரபிக்கும் அழைத்து போய்வந்தான் என்னை.

      நீங்கள் நலமா ஜலதோஷம் பிடித்து இருக்கிறது சற்று உடல் நலம் சரியில்லை என்று எங்கள் ப்ளாக்கில் சொல்லி இருந்தீர்களே! இப்போது எப்படி உள்ளது? வேலை பளு குறைந்து இருக்கா?
      உறவினர்கள் வந்து போய் விட்டார்களா?

      //தாங்கள் சென்று வந்த பூங்கா மிக அழகாக இருக்கிறது. முதல் படத்திலுள்ள வெங்கல எருமை சிலை பார்க்க அழகாக இருக்கிறது.

      படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. கலர் கலரான மலர்கள், மழை நீர் முத்தென வடியும் பைன் மர இலைகள் என அத்தனைபடங்களும் அருமை.//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

      //சாலையில் நடப்பதை விட பூங்காவில் நடந்து வருவது நன்றாகத்தான் இருக்கும். விதவிதமான தாவரங்கள் மலர்கள் என பார்த்தபடி நடக்கலாம்.//

      ஆமாம்.

      //தங்கள் பேரனின் படங்களும், அவர் விளையாடிய ஜீப் மாதிரியான காணொளியும் கண்டு ரசித்தேன். //

      நன்றி.

      //தங்கள் மகன், மருமகள் நடந்து விட்டு வரும் வரையில் தங்களுக்கு துணையாக அவர் இருந்தது சிறப்பு. பதிவில் எல்லா படங்களும் நன்றாக உள்ளது. அடுத்த பதிவுக்கும் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      வெளியூர் செல்லும் போது எல்லாம் என்னை கவனித்து கொள்வது அவன் பொறுப்பு, அதை சிறப்பாக செய்வான்.

      வாங்க நேரம் கிடைக்கும் போது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  17. படங்கள் எல்லாம் அருமை மா ...

    பல மாதங்களுக்கு பின் இன்று தான் வலைத்தளம் வருகிறேன் ...


    இனி தான் பழையபடி அனைத்தையும் தொடரவேண்டும் ...

    தம்பியின் வீடியோ cute and clear மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்

      படங்கள் எல்லாம் அருமை மா ...

      //பல மாதங்களுக்கு பின் இன்று தான் வலைத்தளம் வருகிறேன் ...//

      வாங்க வாங்க


      //இனி தான் பழையபடி அனைத்தையும் தொடரவேண்டும் ...//

      தொடரட்டும் உங்கள் பதிவுகள்.


      //தம்பியின் வீடியோ cute and clear மா//

      நன்றி அனு.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. எருமை பாக் நன்றாக உள்ளது.

    பைன் மரங்களில் இருந்து சொட்டும் மழைத்துளி அழகு.

    பேரனின் விளையாட்டுப் பொருட்களும் வீடியோவும் நன்று.பாராட்டுகள்.

    மகன் எடுத்த படம்ரோஸ்வண்ணமலர் அழகு.

    பதிலளிநீக்கு