வெள்ளி, 12 ஜனவரி, 2024

மார்கழி கோலமும் மகரிஷி கவிதையும்



மார்கழி மாதம் கோல பதிவுகள் போடவே இல்லை, தைபிறக்க போகிறது, அதனால் மார்கழி கோலங்களை பகிர்ந்து விடலாம் என்று இந்த பதிவு. சின்ன  கோலங்கள் தான். எல்லோருக்கும் தெரிந்த கோலங்கள்தான். என் சேமிப்பாக இங்கு பதிவு செய்கிறேன்.

1958 ம் ஆண்டு  வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணைவி  மார்கழி மாதம்  கோலம் போடும் போது அக்கோலத்தைச் சுற்றி எழுத கவிதை கேட்டாராம்.  மகரிஷியும் தினம் தினம்  மனதில் தோன்றும் எண்ணங்களை கவிகளாய்  சொல்லுவராம்., அன்னை லோகாம்பாள் அவர்கள் கோலத்தைச்சுற்றி எழுதிய  அந்த கவிதைகள்  இந்த பதிவில்  இடம்பெறுகிறது. பாடல்கள் "மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து" என்று புத்தகமாய் வெளி வந்தது.
---------------------------------------------------------------------------------------------------

கருத்தும் கடவுளும்

கடவுளை வணங்கும் போது 
கருத்தினை உற்றுப் பார் நீ !
கடவுளாய்க் கருத்தே நிற்கும் 
காட்சியைக் காண்பாய் ஆங்கே.

நான் பதிவு ஆரம்பித்த முதல் நாள்  கிளிக்கோலம் போட்டு வேதாத்திரி அவர்களின் கருத்தை  பதிவு செய்தேன். (முன்பு கோலம் போட்டு மகரிஷி கருத்தை  எழுதுவேன்.)

நன்மையே நோக்கு

எண்ணம் சொல் செயலால் 
எவருக்கும் எப்போதும் 
நன்மையே விளைவிக்க 
நாட்டாமா யிரு

உள்ளத்தில் கள்ளம் வேண்டாம்

உள்ளொன்று வைத்துப்
புறம் ஒன்று பேசினால்,
உள்ளொளி தீயாகி
உடலை கெடுத்துவிடும்

இயல்பும்- உயர்வும்

அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு,
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு. 

ஊக்கம் உயர்வு தரும்
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து,
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்

உழைப்பின் மேன்மை
உழைப்பினால் , உடலும், உள்ளமும், 
உலகமும், பயன் பெறும் உணர்வீர்

தினக்கடன்
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் 
நினைப்பதும், செய்வதும் நித்தியக்கடன்


                                                 விதியும்  மதியும்

இயற்கை சக்தியே விதி,

இதை யறிந்த அளவே மதி

உணர்தலால் அமைதி
எண்ணத்தின் வேகமும், இயல்பும் , அறிந்தோர்க்கு
எண்ணமே இன்பமயம். எண்ணம் அமைதிபெறும்.

உண்ணுங்கால் எண்ணு

உண்ணும் உணவு  கிடைத்தவகை
எண்ணி யுண்ணிடல் என்றும் உன்கடன்.

எம் மதத்தையும் குறை கூறாதே

உம்மதமே உலகத்தில் 
உயர்வென்று பேசுகிறீர் 
எம்மதத்தாரிடம் இல்லை
ஏழ்மை பஞ்ச பாதகங்கள்?


அன்பின் செயல்

அனைத்துயிரும் ஒன்றென்று 
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமையெல்லாம் 
அன்பின் செயலாகும்

கடவுளே - உயிர்

அண்டத்தில் கடவுளாய்
அழைக்கபடுபவன்
பிண்டத்தில் உயிரெனப்
பேசப் படுகிறான் 
கண்டத்தின் மேலே 
கருவில் நிலைத்தவன் 
அண்டத்தும் பிண்டத்தும் 
அவனையே காண்கிறான்


வளர்ச்சி நிலைகள்

அழகு மாறி கொண்டே இருக்கும்
அன்பு ஊறிக் கொண்டே இருக்கும்
தொழுகை தூய்மை வளர்க்கும்
தோல்வி ஜெயத்தில் முடியும்

                           

சிறந்த கலாசாலை

உலகமே  ஒரு பெரிய பழைய பள்ளி,
ஒவ்வொருவருக்கும் தினம் புதியபாடம்,
பலகலைகள் கற்றோர்க்கும் பாமர்க்கும் ,
பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு



மெய்வழி

தெய்வநிலை மனிதரெல்லாம் உணர்ந்தால் அல்லால்!
திருத்தமுள வாழ்வேது? ஆற்றல் அற்றோர்
தெய்வம் உண்டு நம்பித் தினம் வணங்கித்
தேர்வுபெற மதம் கண்டார் அறிவறிந்தோர்

கடவுளும் கடமையும்

கடமையில் உயர்ந்தவர் 
கடவுளை நாடுவார்
கடவுளை அறிந்தவர் 
கடமையில் வாழுவார்.


கோலமும் பாடலும் நாளையும் தொடரும் கோலத்தைப்பார்க்க, கவிதையை படிக்க வருவீர்கள் என்று நம்புகிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------

31 கருத்துகள்:

  1. கோலங்கள் அழகாக இருக்கிறது.

    கவிதை நல்ல கருத்துகளை சொல்கிறது தொடர்ந்து வருகிறேன்.

    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //கோலங்கள் அழகாக இருக்கிறது.//

      நன்றி.


      //கவிதை நல்ல கருத்துகளை சொல்கிறது தொடர்ந்து வருகிறேன்.//

      ஆமாம், நல்ல கருத்துகள். திடர்ந்து வருவேன் என்றது மகிழ்ச்சி.


      //பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.//

      நீங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. மார்கழி கோலங்களும், அதை மலர வைத்த கவிதைகளும் கண்களையும் மனதையும் கவர்கின்றன. பூக்கள் கோலம், சங்கு கோலம், கிறிஸ்மஸ் தாத்தா கோலம், தேர் கோலம், வாத்துக் கோலமென அனைத்தும் நன்றாக உள்ளது

    வேதாந்த மகரிஷி அவர்களின் குட்டி கவிதைகள் அன்றாட கடமைகளை செய்யும் வகையில் கூறப்பட்ட வாசகங்கள் படிக்க படிக்க மனது ஆனந்தம் கொள்கிறது. இப்படி மனதை சந்தோஷமளிக்கும் வகையில் எத்தனை நிறைவான சொற்கள் அவர் கருத்தில் உதித்து நமக்கு கிடைத்திருக்கின்றன. கவிதைகளை பற்றிய நிறைய தகவல்களுக்கும் நன்றி சகோதரி. நீங்கள் அதைப்பின்பற்றி அழகான கோலங்களை நாட்தோறும் வாசலில் இட்டு வருவதற்கும் மகிழ்ச்சி. . நாளையும் உங்களின் அழகான கோலங்களையும், அருமையான கவிதைகளையும் காண வருகிறேன்.நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //அருமையான பதிவு. மார்கழி கோலங்களும், அதை மலர வைத்த கவிதைகளும் கண்களையும் மனதையும் கவர்கின்றன. பூக்கள் கோலம், சங்கு கோலம், கிறிஸ்மஸ் தாத்தா கோலம், தேர் கோலம், வாத்துக் கோலமென அனைத்தும் நன்றாக உள்ளது//

      கோலங்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //வேதாந்த மகரிஷி அவர்களின் குட்டி கவிதைகள் அன்றாட கடமைகளை செய்யும் வகையில் கூறப்பட்ட வாசகங்கள் படிக்க படிக்க மனது ஆனந்தம் கொள்கிறது. இப்படி மனதை சந்தோஷமளிக்கும் வகையில் எத்தனை நிறைவான சொற்கள் அவர் கருத்தில் உதித்து நமக்கு கிடைத்திருக்கின்றன.//

      எளிமையாக அதே சமயம் கடைபிடிக்க எளிதாகவும் அவர் கவிதைகள் இருக்கும்.

      கவிதைகளை பற்றிய நிறைய தகவல்களுக்கும் நன்றி சகோதரி. நீங்கள் அதைப்பின்பற்றி அழகான கோலங்களை நாட்தோறும் வாசலில் இட்டு வருவதற்கும் மகிழ்ச்சி. .//

      என்னால் முடிந்தவரை போட்டு வருகிறேன். இப்போது எழுதுவது இல்லை, நாள்தோறும் சுத்தம் செய்யவருபவர்களுக்கு மிக கவனமாக அழிக்காமல் பெருக்கி துடைக்க வேண்டி உள்ளது. அதனால் சின்னதாக கோலம் மட்டும் போட்டு விட்டு கவிதைகளை படித்து விடுவேன். மார்கழி மாதம் திருப்பாவை, தெருவெம்பாவை படிப்பது போல.

      //நாளையும் உங்களின் அழகான கோலங்களையும், அருமையான கவிதைகளையும் காண வருகிறேன்.நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      பல் வலியுடன், வீட்டு வேலைகளையும் பார்த்து கொண்டு பதிவை படித்து கருத்து சொன்னதற்கும் நாளையும் வருவேன் என்று உற்சாகமாய் சொன்னதற்கும் நன்றி கமலா.

      நீக்கு
  3. கோலங்கள் யாவும் அழகு.  நான் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு இடுக்கில் சிறு குடிசை இருக்கிறது.  அதன் வாசலை பொதுஜனம் பார்ப்பது கூட முயற்சி எடுத்தால்தான் பார்க்க முடியும்.  அந்த வீட்டு வாசலில் தினம் அழகழகான கோலங்கள் பெரிய அளவில் போடபப்டுவதைக் கண்டிருக்கிறேன்.   அந்த சின்னஞ்சிறு குடிசைக்குள் ஒரு பெண்ணின் திறமையும், கற்பனையும் ஒளிந்து அல்லது ஒளித்து வைக்கபப்ட்டுள்ளது என்று நினைத்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கோலங்கள் யாவும் அழகு.//

      நன்றி ஸ்ரீராம்

      // நான் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு இடுக்கில் சிறு குடிசை இருக்கிறது. அதன் வாசலை பொதுஜனம் பார்ப்பது கூட முயற்சி எடுத்தால்தான் பார்க்க முடியும். அந்த வீட்டு வாசலில் தினம் அழகழகான கோலங்கள் பெரிய அளவில் போடபப்டுவதைக் கண்டிருக்கிறேன்.//

      ஆமாம், குடிசை வாசலில் சாணம் தெளித்து பெரிய பெரிய கோலங்கள் பளிச் என்று போடுபவர்ளை பார்த்து இருக்கிறேன்.
      30 புள்ளி 25 புள்ளி கோலங்கள் போடுவார்கள், சிக்கு கோலம் மிக அழகாய் போடுவார்கள்.கோலத்தைச்சுற்றி அழகான பார்டர் கோலம் எல்லாம் போடுவார்கள். மண் தரையில் கோலம் மிக அழகாய் இருக்கும்.

      நான் பெரிய பெரிய கோலங்கள் மண் தரையில் சாணம் தெளித்து திருவெண்காட்டில், மாயவரத்தில் பழைய வீட்டில் போட்டு இருக்கிறேன். அப்போது, அலைபேசி காமிரா இல்லை என்னிடம். காமிரா வந்த பின் மாயவர்த்தில் திண்ணையில் 15 புள்ளி, 20 புள்ளி கோலங்கள் போடுவேன் அதுவே பெரிசு.

      இங்கு வந்தபின் சின்னதாகத்தான் போட முடியும் வாசலில், எனக்கும் அதுக்கு மேல் போட முடியவில்லை.

      //அந்த சின்னஞ்சிறு குடிசைக்குள் ஒரு பெண்ணின் திறமையும், கற்பனையும் ஒளிந்து அல்லது ஒளித்து வைக்கபப்ட்டுள்ளது என்று நினைத்துக் கொள்வேன்.//

      ஒளித்து வைக்கப்படவில்லை ஸ்ரீராம், நீங்கள் பார்த்து விட்டீர்கள், இனி அந்த வழி போக நேர்ந்தால் அந்த பெண்ணை பார்த்தீர்கள் என்றால் கோலம் அழகாய் இருக்கிறது என்று சொல்லுங்கள்.
      நான் கற்பனை செய்கிறேன் நாணம் மிகுந்த மகிழ்ச்சியான முகத்தை.

      நீக்கு
    2. தஞ்சையிலும் மதுரையிலும் வசித்த காலங்களில் வீட்டு வாசலில் அம்மா, அப்புறம் அக்கா, அப்புறம் தங்கை  அழகான பெரிய கோலங்கள் புள்ளி வைத்து / வைக்காமல்  போடுவார்கள்.  பக்கத்துக்கு வீடுகளுடன் போட்டி போல நடக்கும்.  யாரும் போடாத கோலம் போடவேண்டும் என்று மதுரையில் தங்கை விரும்பிய காலங்களில் நான் புள்ளிகள் வைத்து புதிய டிசைன் உருவாக்கிக் கொடுத்ததுண்டு.  அவ்வளவாக வரவேற்பைப் பெறாதவை அவை.

      நீக்கு
    3. அம்மா உடல்நிலை சரியில்லாதபோது நானும் வாசலில் கோலங்கள் போட்டிருக்கிறேன்.  அக்கா திருமணமாகிச் சென்றிருக்க, தங்கை ஹாஸ்டலில் தங்கிப் படித்த காலம் அது.  புள்ளி வைத்த கோலத்தில் கழுகு நன்றாகக் போடுவேன் அப்போது.  அப்புறம் சில எளிதான கோலங்கள்.  வெள்ளிக்கிழமை ஆனால் நடுவில் சதுரம் வரைந்து சுற்றிலும் மலரிதழ் டிசைன்கள்  விதம் விதமாக கற்பனை செய்து யாரும் பார்க்கும் முன் காலை நான்கு மணிக்கே போட்டு விடுவேன்!  பூந்தொட்டியில் ஒற்றை மலருடன் சிறு செடி..  மலர் மட்டும் என்றெல்லாம் கோலங்கள் போட்டிருக்கிறேன்!

      நீக்கு
    4. வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன் பாடல் நினைவுக்கு வந்தாலும் என் அபிமான SPB பாடிய பாடல்..
      https://www.youtube.com/watch?v=91mBxyARWJ0

      நீக்கு
    5. //இனி அந்த வழி போக நேர்ந்தால் அந்த பெண்ணை பார்த்தீர்கள் என்றால் கோலம் அழகாய் இருக்கிறது என்று சொல்லுங்கள்.நான் கற்பனை செய்கிறேன் நாணம் மிகுந்த மகிழ்ச்சியான முகத்தை.//


      ஹையோ...  வம்பா இது!  நான்  மாட்டேன்பா...  நான் தினசரி அந்த இடத்தை ஆட்டோவில் கடப்பேன்.   சரியான பொருளில் நல்லவிதமாக புரிந்து கொள்ளப்படா விடில் உதைத்தான் கிடைக்கும்!  "இங்கே வாங்கோ...  எல்லோரும் பாருங்கோ...  கோலம் போட்டுண்டிருந்தா என் பேத்தி..  அலங்கோலமாக்கி விட்டான்" என்று காமேஸ்வரனை வறுத்தெடுத்த பாட்டி போல  யாராவது காலரைப் பிடித்து விடுவார்கள்!!!!! 

      நீக்கு
    6. நானும் சாரும் மார்கழி மாதம் அதிகாலை கோவிலுக்கு போகும் போது இப்படி பெரிய கோலம் போட்டு கொண்டு இருக்கும் பெண்கள், சிறிமிகளிடம் சொல்லி இருக்கிறோம், நாணத்தோடு மகிழ்ந்து சிரிக்கும் சிரிப்பை பார்த்து இருக்கிறோம்.

      நீங்கள் ரசித்த சினிமா காட்சி மனதில் வந்து விட்டதா?

      நீக்கு
    7. //அம்மா உடல்நிலை சரியில்லாதபோது நானும் வாசலில் கோலங்கள் போட்டிருக்கிறேன். அக்கா திருமணமாகிச் சென்றிருக்க, தங்கை ஹாஸ்டலில் தங்கிப் படித்த காலம் அது. //

      நீங்கள் முன்பு போட்ட கோல பதிவுகளில் சொல்லி இருக்கிறீர்கள்.

      //யாரும் போடாத கோலம் போடவேண்டும் என்று மதுரையில் தங்கை விரும்பிய காலங்களில் நான் புள்ளிகள் வைத்து புதிய டிசைன் உருவாக்கிக் கொடுத்ததுண்டு. அவ்வளவாக வரவேற்பைப் பெறாதவை அவை.//
      நானும் அதிகாலை கோலம் போட்டு விடுவேன்.

      சாரும் உங்களை போல புதிய கோலங்கள் உருவாக்கி தந்து இருக்கிறார்கள். எல்லோரும் சார் தயார் செய்து கொடுத்த கோலம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

      காலையில் பெட் காபியை குடித்தவுடன் வாசலுக்கு வந்து கோலத்தைப்பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொல்லும் முதல் ஆள் அவர்கள்தான். இன்றும் வந்து பார்த்து கருத்து சொல்வதாக நினைத்து கொள்கிறேன். கலர் எப்படி கொடுக்க வேண்டும் இரண்டு கலரை கலந்து அழகிய கலர் உருவாக்குவது எல்லாம் சொல்லி தந்து இருக்கிறார்கள். இப்போது பேருக்கு கலர் கொடுக்கிறேன். வெகு நேரம் குனிந்து கலர் கொடுக்க முடியவில்லை.

      //பக்கத்துக்கு வீடுகளுடன் போட்டி போல நடக்கும். யாரும் போடாத கோலம் போடவேண்டும் என்று //

      என் மார்கழி கோலங்கள் பதிவில் நீங்கள் சொல்லி இருப்பது போல சொல்லி இருப்பேன். காலையில் ஒரு உலா போய் வருவோம் கோலம் பார்க்க. பூசணி பூ எத்தனை வைத்து இருக்கிறோம் "எங்கள் வீட்டில் தானே பெரிய கோலம் பூசணி பூ நிறைய வைத்து இருக்கிறோம் "என்று எல்லாம் அக்கபக்கத்து தோழிகளிடம் சிறு வயதில் பேசி மகிழ்ந்து இருக்கிறோம்.

      நீக்கு
  4. மகரிஷியின் வரிகள் தினம்தோறும் படித்து மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டிய வரிகள்.  சிறு வயதிலிருந்தே தினசரி இவற்றைப் படித்து ஒருவன் வளர்ந்தால் நல்ல முறையில் வளர்ந்து மனிதனாவது திண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகரிஷியின் வரிகள் தினம்தோறும் படித்து மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டிய வரிகள். சிறு வயதிலிருந்தே தினசரி இவற்றைப் படித்து ஒருவன் வளர்ந்தால் நல்ல முறையில் வளர்ந்து மனிதனாவது திண்ணம்.//

      ஆமாம் ஸ்ரீராம், நீங்கள் சொல்வது உண்மை. சிறு வயதிலிரிந்து மனவளகலையை கற்றுக் கொண்டால் நலமாக இருக்கலாம்,

      சிறு வயதிலிருந்தே தினசரி பயில வேண்டும் என்று பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு சொல்லி கொடுக்க போவோம். இப்போது சிறப்பாக நடக்கிறது. எனக்குதான் கலந்து கொள்ள முடியவில்லை. வெகு தூரத்தில் இருக்கிறது மன்றம்.
      மாயவரத்தில் வீட்டுக்கு அருகில் இருந்தது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. //வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன் பாடல் நினைவுக்கு வந்தாலும் என் அபிமான SPB பாடிய பாடல்..
      https://www.youtube.com/watch?v=91mBxyARWJ0//

      பாடல் கேட்டேன். நன்றாக இருக்கிறது.

      நீக்கு
  5. கோமதிக்கா கோலங்களும் அதோடு வேதாத்ரி மகரிஷி அவர்களின் வாக்குகளும் மிக மிக அருமை. அவரது வாக்குகள் என்னை மிகவும் ஈர்க்கும். அதில் மனம் செல்லும் உளவாங்கிக் கருத்தில் கொள்ள. மிக யதார்த்தமாக இருக்கும் அவரது வாக்குகள்.

    கடவுளை வணங்கும் போது
    கருத்தினை உற்றுப் பார் நீ !
    கடவுளாய்க் கருத்தே நிற்கும்
    காட்சியைக் காண்பாய் ஆங்கே.//

    உண்மை! ரொம்பப் பிடித்தது.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா கோலங்களும் அதோடு வேதாத்ரி மகரிஷி அவர்களின் வாக்குகளும் மிக மிக அருமை//

      நன்றி கீதா

      . //அவரது வாக்குகள் என்னை மிகவும் ஈர்க்கும். அதில் மனம் செல்லும் உளவாங்கிக் கருத்தில் கொள்ள. மிக யதார்த்தமாக இருக்கும் அவரது வாக்குகள்.//

      ஆமாம். மகரிஷியின் கவிதை உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி கீதா.

      நீக்கு
  6. உள்ளொன்று வைத்துப்
    புறம் ஒன்று பேசினால்,
    உள்ளொளி தீயாகி
    உடலை கெடுத்துவிடும்//

    ஆமாம். நம் மனதில் எதிர்மறை வர வர அது நம்மை அப்படியே கெடுத்துவிடும் நம் உடலை நோய்க்கான வித்து.

    விதியும் மதியும்
    இயற்கை சக்தியே விதி,

    இதை யறிந்த அளவே மதி//

    அருமையான வாக்கு!

    எம் மதத்தையும் குறை கூறாதே

    உம்மதமே உலகத்தில்
    உயர்வென்று பேசுகிறீர்
    எம்மதத்தாரிடம் இல்லை
    ஏழ்மை பஞ்ச பாதகங்கள்?//

    மிகவும் கவர்ந்த வாக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா, நமக்கு புரியும் படியான கவிதை. உங்களை கவர்ந்த வாக்கு எல்லோருக்கும் பிடிக்கும்.

      நீக்கு
  7. கிறிஸ்துமஸ் தாத்தா கோலம் வாவ்! கோமதிக்கா இப்ப தெரிகிறது உங்கள் மகனுக்கு இப்படியான திறமைகள் உங்களிடமிருந்தும் மாமாவிடமிருந்தும் அப்படியே வந்திருக்கு! கவின் வரை அது ஊன்றிவிட்டது! ரசித்தேன் கோலத்தை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிறிஸ்மஸ் தாத்தா கோலம் என் அம்மா நான்கு கோமாளிகள் என்று பத்திரிக்கையில் வந்த கோலத்தை வரைந்து அனுப்பினார்கள் தபாலில். முன்பு ஒரு பதிவில் சொல்லி இருப்பேன், புதிதாக கோலம், சமையல் குறிப்பு எல்லாம் தபாலில் வரும் அம்மாவிடமிருந்து.

      அதை என் கணவர் கிறிஸ்மஸ் தாத்தாவாக வரையலாம் என்று சொல்லி கொடுத்தார்கள். கீதா. முன்பு சிமெண்ட் தரையில் பத்திரிக்கையில் வரும் கிறிஸ்மஸ் தாத்தாபடங்களை பார்த்து சாக்பீஸில் வரைந்து கொண்டு அப்புறம் கலர் கொடுப்பேன் மாயவரம் திண்ணையில். இப்போது கோலபொடியிலேயே போடுகிறேன், ஓரளவு வந்து இருக்கிறார். வருடா வருடம் கிறிஸ்மஸ் தாத்தா கோலம் போட்டு விடுவேன்.
      மாமா, மகன், கவின், மகள், மருமகள் போல என்னால் வரைய முடியாது. அவர்கள் எல்லாம் நன்றாக வரைவார்கள்.

      நீக்கு
  8. உலகமே ஒரு பெரிய பழைய பள்ளி,
    ஒவ்வொருவருக்கும் தினம் புதியபாடம்,
    பலகலைகள் கற்றோர்க்கும் பாமர்க்கும் ,
    பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு//

    ஆமாம் உலகமும் அனுபவங்களுமே நமக்குச் சிறப்புப் பாடம். அருமையான வாக்கு,

    கோலமும் பாடலும் நாளையும் தொடரும் கோலத்தைப்பார்க்க, கவிதையை படிக்க வருவீர்கள் என்று நம்புகிறேன்.//

    வந்துவிடுகிறோம் கோமதிக்கா.

    கோலங்கள் சிறிதானாலும் வெகு அழகு. அனைத்தும் ரசித்துப் பார்த்து வாசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகரிஷியின் கவிதையை கோலத்தை ரசித்து பல கருத்துக்கள் கொடுத்து உறசாகப்படுத்தி தொடர்ந்து வருவதாய் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  9. கோலங்கள் மிகவும் அழகாக இருக்கிறன.. நல்ல கருத்துள்ள கவிதைகள் ..

    காலத்தின் கட்டாயம்..

    சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //கோலங்கள் மிகவும் அழகாக இருக்கிறன.. நல்ல கருத்துள்ள கவிதைகள் ..//

      ஆமாம் நல்ல கருத்துள்ள கவிதைகள்.

      //காலத்தின் கட்டாயம்..

      சிறப்பான பதிவு..//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. எல்லாக் கோலங்களும் அழகு. அதற்குக் கீழே கொடுத்திருக்கும் வேதாத்ரி மகரிஷி அவர்களின் வரிகள் மிக அருமை. அதில் கடவுளும், கடமையும், கடவுளே உயிர், எம்மதத்தையும் குறை கூறாதே, இவை எல்லாம் நம் மதத்தின் சிறப்பை பறை சாற்றுபவை, //ஆற்றல் அற்றோர்
    தெய்வம் உண்டு நம்பித் தினம் வணங்கித்
    தேர்வுபெற மதம் கண்டார் அறிவறிந்தோர்//

    அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன் , வாழ்க வளமுடன்

      எல்லாக் கோலங்களும் அழகு. அதற்குக் கீழே கொடுத்திருக்கும் வேதாத்ரி மகரிஷி அவர்களின் வரிகள் மிக அருமை.//

      நன்றி.

      //அதில் கடவுளும், கடமையும், கடவுளே உயிர், எம்மதத்தையும் குறை கூறாதே, இவை எல்லாம் நம் மதத்தின் சிறப்பை பறை சாற்றுபவை, //ஆற்றல் அற்றோர்
      தெய்வம் உண்டு நம்பித் தினம் வணங்கித்
      தேர்வுபெற மதம் கண்டார் அறிவறிந்தோர்//

      கவிதைகளை, கோலங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  11. கோலங்கள் மிக அழகு. அதைப்பார்த்தவுடன் தோன்றிய எண்ணங்களும் சிறப்பு.

    உம்மதமே உலகத்தில்
    உயர்வென்று பேசுகிறீர்
    எம்மதத்தாரிடம் இல்லை
    ஏழ்மை பஞ்ச பாதகங்கள்? - இது மிகச் சிறப்பாக என் மனதில் பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன். வாழ்க வளமுடன்

      //கோலங்கள் மிக அழகு. அதைப்பார்த்தவுடன் தோன்றிய எண்ணங்களும் சிறப்பு.//

      நன்றி. மகரிஷிக்கு அந்த எண்ணங்கள் தோன்றியது. மார்கழி மாதம் இந்த பாடல்கள் எங்களுக்கு தோன்றும்.

      //உம்மதமே உலகத்தில்
      உயர்வென்று பேசுகிறீர்
      எம்மதத்தாரிடம் இல்லை
      ஏழ்மை பஞ்ச பாதகங்கள்? - இது மிகச் சிறப்பாக என் மனதில் பட்டது.//

      ஆமாம் சிறப்பானதுதான்.
      ஸ்ரீரங்கம் போய் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். தரிசனம் நன்றாக ஆச்சா?
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. அத்தனை கோலங்களையும் ரசித்தேன். மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //அத்தனை கோலங்களையும் ரசித்தேன். மிக அருமை.//

      அத்தனை கோலங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு