வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும்



திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல் சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலம்.
பரங்கிப்பேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர் கோவில்


இறைவன் -ஆதிமூலேஸ்வரர்
இறைவி -அமிர்தவல்லி
தல மரம் -வில்வம், வன்னி
தீர்த்தம் -வருண தீர்த்தம்
புராண பெயர் -வருண ஷேத்திரம்
கிராமம்/நகரம் -பரங்கிப்பேட்டை
மாவட்டம் -கடலூர்
மாநிலம் -தமிழ்நாடு

காஷ்யப முனிவர் ஒரு முறை  சிவனை எண்ணி யாகம் நடத்தினார்.  அந்த யாகத்தை நிறுத்த வருணன் மழையை ஏற்படுத்தினான். இதனால் முனிவர் வருணனை சபித்தார். வருணன் சக்தி இழந்தான். பின் அவன் சிவபெருமானை வணங்கி சாபம் தீர்ந்தான். வருணன் சிவபெருமானை   இததலத்திலேயே இருந்து அருளும்படி வேண்டினான். அப்படி இங்கே தங்கியுள்ள அந்த இறைவனுக்கு ஆதிமூலேஸ்வரர் என்று பெயர்.

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள் .நாமும் மழை வேண்டி இப்போது அவரை வணங்குவோம்.

சித்திர குப்தர் 12 வயதில் இறந்து விடுவார்  என்று விதி இருந்தது. அவரது தந்தை  வசுதத்தன் மிகவருந்தியபோது, சித்ரகுப்தன் இததலத்து சிவனை வழிபடுவோம் என்று தன் தந்தையிடம் சொன்னார். ஆதிமூலேஸ்வரரை வழிபட்டார்கள்.

 மார்க்கண்டேயரை  சிவபெருமானே  வந்து காப்பாற்றினார். இத்தலத்தில்  தன் துணைவியைப் பெருமைப்படுத்த அம்பாளை விட்டு எமனை தடுக்கச் சொல்கிறார்.  அம்பாள் எமனிடம்,  ”சித்திரகுப்தன் சிறந்த சிவபக்தன் -அதனால் அவனை விட்டுவிடு ” என்கிறார். சிவபக்தர்களை அவ்வளவு சீக்கிரம் எமன் நெருங்கமாட்டார் என்பார்கள்.

மார்க்கண்டேயனை கொல்ல வந்த எமனை சிவன் இடது காலால் உதைத்தார் ,அந்த இடது பாகம் பார்வதி தேவியுடையது என்பார்கள். சேய்க்கு இரங்கும் குணம் தாய்க்குத்தான் உண்டு என்று  மார்க்கண்டேயர் வரலாறும், சித்திர குப்தன் வரலாறும் சொல்கிறது. சிவனின் ஆணைப்படி   சித்திரகுப்தனை எமன் கொல்லாமல் விட்டதுடன் தன் உதவியாளராகவும் ஏற்றுக் கொண்டார்.

இக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் சித்திரகுப்தன் சன்னதி உள்ளது.
இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அமிர்தம் போல் அருளை அள்ளி வழங்குவதால் அம்பாள்,அமிர்தவல்லி  என்று அழைக்கப்படுகிறார். அம்மன்சிலைக்கு கீழ் ஸ்ரீசக்கரம் உள்ளதாம் . சித்திரை மாதம் சிவன், அம்பாள் இருவர் மீதும் சூரிய ஒளி படுமாம் . அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுமாம்.

இங்கு ஆயுள் விருத்தியடையவும், மரண பயம் நீங்கவும் , நோய் தீரவும் மிருத்யுஞ்சய ஹோமம் செய்கிறார்கள்,  சஷ்டிஅப்தபூர்த்தி, சதாபிஷேகம்,  செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர் ,அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.  சிவன் கோவில்களில் அர்த்தஜாமபூஜை முடிவில் பைரவருக்கு பூஜை நடக்கும். இந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம். சிதராபெளர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம்  நைவேத்தியம் செய்கிறார்கள்.


சுண்ணாம்பு கலப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட பாத்திரம்

விமானம்

தெற்குப் பிரகாரம்

துர்க்கையை வலம் வந்து வணங்கலாம்


சித்திரகுப்தர் திருவுருவம்

இக்கோவிலில் ராமேஸ்வரம் ராமலிங்கசுவாமி, காசி விஸ்வநாதர், நீலகண்டர், நீலாயதாட்சி, சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பாதாளலிங்கம், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
திருநள்ளாறில் கிழக்குப் பார்த்துகொண்டு நின்று சனீஸ்வரர் அருள்வது போல் இங்கும் இருக்கிறார். 




மாசி மகத்தன்று தீர்த்தவாரி. அருகில் இருக்கும் கடலுக்குச் சென்று வருணனுக்கு விமோசனம் கொடுக்கும் விழா நடக்குமாம். தைஅமாவாசை, ஐப்பசி கடைமுழுக்கு நாட்களில் தீர்த்தவாரி உண்டாம்.
இக் கோவிலை தரிசிக்கும் நேரம் காலை 7 மணி முதல், 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு எட்டுவரை. நாங்கள் போனபோது 11மணி பக்கம். குருக்கள் வேறு ஏதோவிழாவுக்கு வெளியே போய் விட்டார். போவதற்கு முன் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விட்டு போய் இருந்தார். 
காஞ்சி மகாபெரியவரின் தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர் இது என்று சொல்கிறார்கள்.
நாங்கள் பரங்கிப்பேட்டை கோவில்களை தரிசித்து விட்டு    அப்படியே சிதம்பரம் போனோம். அங்கு  அம்மன்  சந்நிதி பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் இருக்கும் சித்திரகுப்தரையும்  தரிசித்தோம்.
சிதம்பரம்-அம்மன் சந்நிதி
ஆயிரக்கால் மண்டபமும் சிவகங்கைத் தீர்த்தமும்

சிதம்பரம் -வடக்குக் கோபுரம்

என்றும் 12வயதாய் இருக்கும் சிவபக்தராகிய  அவரை வணங்கினால் நமக்கும் நல்லது நடக்கும் நம்பிக்கையில் வணங்குகிறார்கள் என நினைக்கிறேன்.
ஒருமுறை அபிஷேகம் பார்த்து இருக்கிறோம். அண்டா அண்டாவாக அனைத்து அபிஷேகங்களும் இருக்கும், இந்த முறை ஏகப்பட்ட தீபங்கள் ஏற்றி வழிபட்டார்கள். பக்தர்கள் தங்கள் கணக்கை சித்திரகுப்தர் நல்லபடியாக எழுதவேண்டும், எமதர்மராஜாவிடம் நம்மைபற்றி நல்லவிதமாக சொல்ல வேண்டும் என்று எடுக்கும்   முயற்சி போலும்!. நல் எண்ணம், நற்செயல், நற்பண்புகளுடன் நாம் வாழ்ந்தால் அவர் நல்லபடியாக நம்மைப் பற்றி நாலுவார்த்தை நல்லதாய் எழுதப் போகிறார்.

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று 
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே’ 

என்பது தேவாரம். திருஇன்னம்பர் என்ற பாடல் பெற்றதலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மனிதர்கள் செய்யும் நற்செயல்கள், தீயசெயல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வார் என்று திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் கூறுகிறது. சித்திரகுப்தர் அதற்காக நியமிக்கப்பட்டவர் போலும்! 
                                 வாழ்க வளமுடன்.
                                     ------------

34 கருத்துகள்:

  1. முதல் முறையாக இந்தக் கோவிலைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். கோவில் படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சித்திர குப்தருக்கு தனிக்கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உண்டு.

    படங்கள் உங்கள் பதிவுகளின் சிறப்பு. இந்த மாதிரி தலங்களுக்குச் சென்று தரிசிக்க முடியாதவர்களுக்கும் படங்களைப் பார்த்தாவது திருப்தி அடைய அவை உதவியாக இருக்கின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

      //சித்திர குப்தருக்கு தனிக்கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உண்டு.//

      பத்திரிக்கையில் படித்து இருக்கிறேன். நேரில் பார்த்தது இல்லை.
      முடிந்தவரை படம் எடுத்து போடுகிறேன்.
      தொலைக்காட்சியில் இப்போது மிக தெளிவாக கோவில் காட்டுகிறார்கள் அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    அழகான சித்ரகுப்தன் கோவில். நீங்களும் அழகாக கோவில் படங்களை எடுத்து போட்டு அருமையாக விளக்கம் தந்து பகிர்ந்துள்ளீர்கள். முன்பு தினமலர் ஆன்மிக இதழில் இக்கோவிலைப் பற்றி படித்ததாய் நினைவு. ஆயினும், நீங்கள விவரித்தது அதுவும் சித்ரகுபத விரத நாளான இன்று படித்தது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. பொருத்தமாக கதைகளையும் உவமானம் காட்டி மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள்.

    /பக்தர்கள் தங்கள் கணக்கை சித்திரகுப்தர் நல்லபடியாக எழுதவேண்டும், எமதர்மராஜாவிடம் நம்மைபற்றி நல்லவிதமாக சொல்ல வேண்டும் என்று எடுக்கும் முயற்சி போலும்!. நல் எண்ணம், நற்செயல், நற்பண்புகளுடன் நாம் வாழ்ந்தால் அவர் நல்லபடியாக நம்மைப் பற்றி நாலுவார்த்தை நல்லதாய் எழுதப் போகிறார்./

    உண்மையான வார்த்தைகள். நாம் நல்லெண்ணங்களுடன் வாழ்ந்தால், இந்தப் பிறவியில் இல்லையென்றாலும், அடுத்த பிறவியிலாவது நல்லதாக நடக்கும்படி அமைத்து எழுதட்டும். அதைதான் நான் வேண்டிக் கொண்டேயிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

      //நாம் நல்லெண்ணங்களுடன் வாழ்ந்தால், இந்தப் பிறவியில் இல்லையென்றாலும், அடுத்த பிறவியிலாவது நல்லதாக நடக்கும்படி அமைத்து எழுதட்டும். அதைதான் நான் வேண்டிக் கொண்டேயிருக்கிறேன்.//

      நன்றாக சொன்னீர்கள், இந்த பிறவியில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் போன பிறவிதான் காரணம் என்று சொல்லுவது உண்மையென்றால், இந்த பிறவியில் எண்ணும் நல்லெண்ணங்கள் அடுத்தபிறவியில் பலிக்கட்டும்.
      காரைக்கால் அம்மையார் வேண்டியது போல் மீண்டும் பிறப்பு உண்டென்றால் உன்னை மறவாத நிலை வேண்டும் என்று கேட்போம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அருமை அம்மா...

    அருமையான படங்களும், சிறப்பான விளக்கங்களும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. சித்ரகுப்தன் கதை நன்று.

    கோவில் படங்கள் சிறப்பு.

    இக்கோவில் பற்றி இது வரை அறிந்ததில்லை. தகவலுக்கு நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      சித்ரகுபதன் கதை நிறைய இருக்கிறது. இந்த கோவிலின் தலவரலாறு கதை இது.
      2013ல் போய் பதிவு போட்டு இருந்தேன் மீள்பதிவுதான் வெங்கட்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.
    தரிசித்தேன் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. படங்களுடனான பதிவு அருமை. சித்திரகுப்தர் கதை சுவாரஸ்யம். ஆனால் ஆட்சியாளரை (சிவபெருமானை) தெரியும் என்பதாலேயே அரசாங்க ஊழியரை (எமனை) கடமையைச் செய்ய விடாமல் தடுப்பது நியாயமா?!!! ஹா... ஹா... ஹா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      //ஆட்சியாளரை (சிவபெருமானை) தெரியும் என்பதாலேயே அரசாங்க ஊழியரை (எமனை) கடமையைச் செய்ய விடாமல் தடுப்பது நியாயமா?!!! ஹா... ஹா... ஹா...!//

      என்ன செய்வது !

      சிபாரிசு பலமாக இருந்தால் தான் தப்பித்துக் கொள்ள முடியும்.
      அதற்கு தானே மூலவரை பிடித்துக் கொள்ள சொல்கிறார்கள்.(பவர் அதிகம் இருப்பவரை பிடித்தால் தானே நல்லது)
      கடமை செய்ய சொன்னால் செய்வார், வேண்டாம் என்றால் வேண்டாம் எமனுக்கு என்னவாகபோகிறது சின்ன உயிரை கொண்டு போவதில்?





      நீக்கு
  9. தமிழக மக்களுக்கு, குறிப்பக சென்னை மக்களுக்கு மழை எப்போது வரும் என்று கவலை. எத்தைத் தின்னால் பித்தம் தெளியுமென்கிற நிலை! வறட்சி பாடாய்ப்படுத்துகிறது. வருணன் மனம் வைக்கவேண்டும். மதுரையிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை என்று தினமலரில் செய்தி படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழை வரும் சென்னைக்கு, இந்த ஆண்டு போதுமான மழை இருக்குமாம்.
      இங்கு இரண்டு தூறல் போட்டது. மண்வாசனை வந்தது அவ்வளவுதான்.
      திருச்சி பக்கம் மழை என்றார்கள், ஆதி, கீதா எல்லாம்.
      அழகர் வந்தால் மழை பெய்யும் என்பார்கள் .
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. பரங்கிப்பேட்டைக்கு ஆதி திருப்பெயர் ஒன்று இருந்திருக்குமே....

    நல்ல தகவல்களுடன் அழகான படங்கள்...

    திருநாவுக்கரசர் அருளிய திருப்பாடல் தான் எத்தனை எத்தனை அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது!....

    இதையெல்லாம் உணர்ந்து விட்டால்
    துன்பங்களே இல்லை...

    ஓம் நம சிவாய....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      பரங்கிப்பேட்டைக்கு ஆதி பெயர் இருந்து இருக்கலாம், தெரியவில்லை.
      இணையத்திலும் தேடினேன் கிடைக்கவில்லை.

      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  11. இனியகாலை வணக்கம் கோமதிக்கா

    சித்திரகுப்தருக்குக் கோயில் இருப்பது பற்றி இப்பத்தான் அறிகிறேன். படங்கள் விவரணம் அருமை. சித்ரகுப்த கோயிலுக்கான கதையும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      சித்திரகுப்தருக்கு தனிக் கோவில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது.

      நீக்கு
  12. புதியதொரு கோயில் பற்றி அறிந்தேன். படங்களும் விவரணம், கதை எல்லாமே அருமை சகோதரி. மிக்க நன்றி

    துளசிதரன்

    கீதா: அந்த ஒரே கல்லில் செய்திருக்கும் கிண்ணம் போன்ற பாத்திரம் செமையா இருக்கு அக்கா.கோபுரமும் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      கல் கிண்ணம் என்னை கவர்ந்தது அதுதான் படம் எடுத்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. நான் பார்க்க விரும்பிய, விடுபட்ட கோயில்களில் ஒன்றுக்கு அழைத்துச்சென்றுள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்
      நீங்கள் பார்க்காத கோவிலுக்கு அழைத்து சென்று இருக்கிறேன் என்று கேட்கும் போது மகிழ்ச்சி. பக்கம் தான் போய் பார்க்கலாம் நீங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. அருமையான பதிவு கடலூருக்குப் பலமுறை போயிருந்தும் இந்தக் கோயில் பற்றி அறியவில்லை. சிதம்பரத்திலும் காஞ்சிபுரத்திலும் பார்த்திருக்கோம். அதுவும் காஞ்சியில் தேடிப் போய்ப் பார்த்து விட்டு வந்தோம். அடுத்த முறை சிதம்பரம் போனால் கடலூரிலும் இந்தக் கோயிலைப் பார்க்க வேண்டும். விபரமான தகவல்களுடன் கூடிய அருமையான படப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      நாங்கள் காஞ்சி கோவில் போனது இல்லை.
      இந்த கோவில் போய் வாருங்கள் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  15. சுண்ணாம்பு கலக்கும் கல் கிண்ணத்தைப் பார்த்ததும் எங்கள் மாமனாருக்கு வெற்றிலை போடுவதற்குச் சுண்ணாம்பு தாளித்து வைப்போம். அது மனதில் நினைவு வந்தது. கொதித்துக் கொண்டு ஆவியாக வரும் துணியில் கட்டி வைப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல சுண்ணாம்பு வீட்டில் தயார் செய்வார்கள்.
      வெள்ளை அடிக்க கிளிஞ்சல் சுண்ணாம்பு வாங்கி இரும்பு வாளியில் போட்டு கொதிக்கும் தண்ணீரை ஊற்றினால் கொதித்து ஆவியாகி குமிழ் குமிழாக முட்டையிட்டு அடங்கும் வரை வைத்து இருந்து அப்புறம் நீலம் கலந்து அடிப்பார்கள் பார்த்து இருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. அழகான படங்களோடு நல்ல பதிவு. சித்திரகுப்தன் வரலாறு முதன்முறையாக கேள்விப்படுகிறேன். மிக்க நன்றி.
    திருவண்ணாமலையில், உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு வெளியே நவகிரகங்கள் சந்நிதிக்கு அருகில் சித்திரகுப்தருக்கு தனி சந்நிதி உண்டு. அவரை நேரிடையாக தரிசிக்க கூடாது, பக்கவாட்டில் இருக்கும் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும் என்பார்கள். காரணம் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
      சித்திரகுப்தன் வரலாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கதை சொல்கிறார்கள்.
      இந்த கோவிலின் தலவரலாறு இந்த கதை சொல்கிறது.
      திருவண்ணாமலை நிறைய தடவை போய் இருக்கிறேன். ஆனால் சித்திரகுபதரை பார்த்த நினைவு இல்லை. இனி போகும் பாக்கியம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி.

      நீக்கு
  17. தகவல்களும் படங்களும் மிக அருமை.

    இது வரை இக்கோயில் அறிந்ததில்லை. பகிர்விற்கு மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. திருக்கடையூரின் விரிவான தலவரலாற்றுத் தகவல்களைப் படங்களுடன் அறியத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
    திருக்கடையூர் இல்லை ராமலக்ஷ்மி பரங்கிப்பேட்டை தலவரலாறு.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு