திங்கள், 21 மார்ச், 2016

ஸ்ரீ மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்











                                                                கோவில் உள் வாசல்

ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஜனவரி மாதம் போய் வந்தோம். என் கணவர்  பல வருடங்களாய் பார்க்க எண்ணிய கோவில்.  என் கணவர் 42 வருடமாய் தேவாரப் பாடல் பெற்ற தலங்களைத் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இக் கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடியது. (தேவார பாடல்பெற்ற தலங்கள் 274) . இறையருளால்   ஸ்ரீசைலம் கோவிலுடன்  தேவாரப்பாடல் பெற்ற தல யாத்திரை நிறைவு பெற்றது.

                                           கர்நூல் ரயில் நிலையம்

கச்சிகுடா ரயிலில்  மதியம் 12 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி  மறுநாள் காலை  9 மணிக்குக்  கர்நூல் போய்சேர்ந்தோம்.. பின் அங்கிருந்து டாக்ஸியில் ஸ்ரீசைலம் பயணம் செய்தோம். ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் டாக்ஸி கேட்டால் இல்லை. ஆட்டோ தான் இருக்கிறது என்றார்கள். எல்லோரும் இந்தி, தெலுங்குதான் பேசுகிறார்கள். என் மகள் உடன் வந்து இருந்ததால் அவள் இந்தியில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தாள். அவர் ஒரு போர்ட்டரை அழைத்து,  பக்கத்தில் இருக்கும் ஒரு டிராவல்ஸ்க்கு  அழைத்து செல்லச் சொன்னார். ஆட்டோ டிரைவருக்கு நன்றி சொல்லி  டிராவல்ஸ் இருக்கும் இடம்   சென்றோம் நடக்கும் தூரம் தான் இருக்கிறது. அவர் ஆபீசைக் காலையில் திறக்கவில்லை . பக்கத்துக்கடைக்காரர் போனில் பேசி வரவழைத்தார். 

                               
டிராவல்ஸ் ஆபீஸ்

                                 
                          டிராவல்ஸ் நடுத்தும்  இஸ்லாமிய பெரியவர்

உடனே சுறுசுறுப்பாய்  ஸ்கூட்டரில் வந்து விட்டார். போனில் பேசி டாக்ஸியை வரவழைத்து   நம்மை வாழ்த்தி அனுப்பினார். திரும்பி வருவதற்குப் போன் செய்யுங்கள் இங்கிருந்து வண்டி அனுப்புகிறேன் என்று  சொன்னார்.  உரையாடல் எல்லாம் இந்திதான். எல்லாம் என் பெண் தான் பேசினாள்.

சின்னவயது டிரைவர். அதிகம் பேசாமல் கர்மமே கண்ணாய் மலைப் பாதையில் கவனமாய் வண்டி ஓட்டினார். போகும் பாதையின் இருபுறமும் மூங்கில் காடுகள். மரத்தைச் சுற்றிப் புற்றுகள் பெரிது பெரிதாக வளர்ந்து இருந்தது.

           ஸ்ரீ சைலம் போகும் பாதை  இருபுறமும் எல்லாம் மூங்கில் காடுகள்


                                                             மூங்கில் காடு

வழியில்  ஒரு கடையில்  மதியம்  உணவை முடித்துக் கொண்டோம். சப்பாத்தி ஆர்டர் செய்தால், மைதா ரொட்டிதான் வந்தது  நல்லா இல்லை. அதை பேருக்குச் சாப்பிட்டோம்.  மலைப்பாதையில் கொண்டை ஊசிகளை கொண்ட பயணம் என்பதால் கொஞ்சமாய் உணவு  உட்கொண்டோம்.

மூன்று மணிநேரம் பயணம் செய்து ஸ்ரீசைலம்  வந்தடைந்தோம். மல்லிகார்ஜுனா சதன் என்ற தேவஸ்தான சத்திரத்திற்குச் சென்றோம்..  சாப்பாட்டு மேஜை, நாற்காலிகள் , சோபா செட்கள்,  முன் அறையில் இருந்தன. அடுத்ததாக படுக்கை அறை,டிவி,ஏசி கெய்சர்,கண்ணாடி அலமாரி என சகல வசதிகளுடன் நன்றாக இருந்தது.  வெந்நீரில் குளித்துவிட்டு    பக்கத்தில்  இருக்கும் ஓட்டலில்  பால், காப்பி,  டீ  பருகி விட்டு  நடக்கும் தூரத்தில் உள்ள   கோவிலுக்கு ஆட்டோவில் போனோம். (பக்கத்தில் என்று தெரியாது) டிக்கட் 100 , 500 .  காமிரா, செல்போன் அனுமதி இல்லை என்று போட்டு இருப்பதைப் பார்த்து காமிராவையும் , செல்போனையும் அறையில் கொண்டு போய் வைத்து விட்டு 100 டிக்கட் எடுத்து உள்ளே சென்றோம்.

போகும் வழியில் பெரிய நந்தியை தரிசனம் செய்தோம், அதன்  எதிரில் உற்சவ அம்மனும் சுவாமியும் அலங்காரமாய்  இருக்கிறார்கள்   அர்ச்சனை  சாமான் என்று  10 ரூபாய்க்கு ஒரு மஞ்சள் பையில் கொஞ்சம் பூ போட்டு தருகிறார்கள். அதை சுவாமிக்குப் போட்டு விட்டு ஆரத்திக் காட்டி  . அர்ச்சகரே நமக்கு நெற்றியில் பொட்டு வைத்து விடுகிறார். (கையில் தருவது இல்லை)

அப்புறம் கோவில் வாசலின் நடைப் பக்கம், இரண்டு பெரிய திண்ணைகள் இருக்கிறது. இருபக்கமும் இரண்டு அர்ச்சகர் அமர்ந்து கொண்டு எல்லோருக்கும் சந்தனம் தீட்டி விடுகிறார் நெற்றியில்.  சுவாமி தரிசனம் செய்ய உள்ளே போகிறோம். வெகு தூரத்திலிருந்து சாமியைப் பார்க்க முடிகிறது. சிறிய சிவலிங்கம் சுயம்பு வடிவம். அதற்கு பெரிய  தங்க நாகாபரணம் சாற்றி வைத்து இருக்கிறார்கள். 500 ரூபாய் கட்டியவர்கள் இறைவனைக் கட்டித் தழுவி  வணங்கி வெளி வந்தனர். நாமும் 500 ரூபாய் கட்டி இருக்கலாமோ என்ற நினைப்பு வந்து போனது.

                   
                                          மல்லிகார்ஜுன சுவாமி தங்க கோபுரம்

                    

                            அம்மனைத் தரிசிக்கச்செல்லும் படிக்கட்டுகள்
                                             
. அடுத்து அம்மன்  சன்னதி  போய் அம்மன்  பிரமராம்பாள் தரிசனம், கீழே சிவபெருமான். மேலே 30 படிகள் ஏறிப் போனால் அம்மன்  வெகு அலங்காரமாய் இருக்கிறார்,  கருவறைப் பக்கம் வரை வரிசையாய் சென்று தரிசிக்கலாம். அம்மன் முன் ஸ்ரீ சக்கரம் உள்ளது  அதற்கு பணம் கட்டி குங்குமார்ச்சனை செய்கிறார்கள்.  அம்மனை தரிசித்து விட்டு வெளியே வந்தால்  பச்சைப்பயிறு சுண்டல் கொடுத்தார்கள்.


                     அம்மனை தரிசிக்க சென்று கொண்டு இருக்கும் பக்தர்கள்



அம்மனை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் இருக்கும் சிவனும் நந்தியும்.


எட்டு நந்திகள் வரிசையாய்  நந்திகளுக்கு முன் சிவலிங்கங்கள் எட்டு இருக்கின்றன..


                         சிவலிங்கங்கள் கீழே இருக்கின்றன.அவற்றிற்கு விமானங்கள்.



நடராஜர் சன்னதி

சிவலிங்கங்களும் நந்திகளும் இருக்கும் மண்டபமும், அம்மன் கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளும்.


எதிர்ப்புறம் பூக்கள் அழகாய்த் தொங்குவது  பள்ளியறை. அதற்குக் கட்டணம்  உண்டு உள்ளே செல்ல , அழகான தங்க ஊஞ்சலில்  பட்டு மெத்தை போடப் பட்டு இருக்கிறது,  நம் கைகளால் ஆட்டி விட்டவுடன்  பூ தருகிறார்கள் அதை அதில் தூவி வணங்கி வெளியே வரவேண்டும். 

வலது கை பக்கம் ஒருவர் போகிறார் அல்லவா அவர் பக்கத்தில் தெரியும் கம்பி தடுப்புக்கு கீழே சரஸ்வதி ஆறு போகிறது. (அந்தர் வாகினி என்று சொல்கிறார்கள்)

படிகளில் இறங்கிக் கீழே வந்தால் ஒரு இடத்தில்  சுவாமி, அம்மன், உற்சவர்கள் அழகான  அலங்காரத்தில் காட்சி அளித்தார்கள். அந்தக் காட்சியைப் பெண் காவலர்கள், ஆண் காவலர்கள், மற்றும்  முக்கிய பிரமுகர்கள் எல்லாம் சாமியைக் கட்டிபிடித்து நின்று போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தார்கள். 

நம்மை  செல் கொண்டு போக வேண்டாம் என்று சொல்லி விட்டு இவர்கள் எல்லாம் கொண்டு வந்து இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

( செல்போன் கொண்டு போக வில்லியே பின் இப்படி இந்த படங்கள் என்று வியப்பது  தெரிகிறது மறுநாள் கொண்டு போய் எடுத்தோம் காலை யாரும் கொண்டு போக வேண்டாம் என்று சொல்ல வில்லை டிக்கட்டும் எடுக்க வில்லை, தர்மதரிசனம் தான்.)


கீழே ஆதி மல்லிகார்ஜுனர்  ஒரு கம்பி கதவு போட்ட அறையில் இருக்கிறார் .அவரைப் பார்த்தால் மரத்தை வெட்டிய பின் மீதி இருக்கும பாதி பாகம் போல்  இருந்தது..  அந்த சுவாமிக்கு ஒரு குடும்பத்தினருக்கு 200 கொடுத்தால் நாமே அபிஷேகம் செய்யலாம் என்றார்கள்.  அந்த மல்லிகார்ஜுனரைத்தான் தொட முடியவில்லை,  ஆதி மல்லிகார்ஜூனரையாவது தொட்டு வணங்குவோம் என்று 200 கொடுத்து டிக்கட் வாங்கி உள்ளே சென்றோம்.

நம் கையை சுவாமிக்கு நேரே வைத்துக் கொள்ளச் சொல்லி நம் கையில் முதலில் தண்ணீர், பின் பால் என்று மாற்றி மாற்றி ஊற்றிப் பின்  சந்தனம் கொடுத்து பூசச் சொல்கிறார்கள்,

  பூ ,பொட்டு எல்லாம் நம்மை வைக்கச் சொல்கிறார்கள். அதன் பின் தலையை சுவாமி மேல் வைத்து வணங்கச் சொல்கிறார்கள்.  ஆரத்தி காட்டிய பின்  நம்மை வெளியே போகச் சொல்கிறார்கள்.

கோசாலை,ஒன்று அங்குள்ளது. சிவாஜி வணங்கிய  பவானியை வணங்கி வெளி வருகிறோம்.

மூலவரைத்  தொட்டு வணங்க வில்லையே என்ற குறை மறுநாள் நீங்கியது.
அது எப்படி என்பதைப்பற்றியும், கோவிலின் சிறப்பு நந்தியின் சிறப்பு பற்றியும்  நாளை தொடரும்.

                                                                  வாழ்க வளமுடன்
                                                                    ------------------

19 கருத்துகள்:

  1. இறைவனை கட்டித்தழுவ 500 ரூபாயா ?
    புகைப்படங்கள் அனைத்தும் அருமை சகோ நானும் இலவச தரிசனம் கண்டேன் நன்றி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. படங்களும் பதிவும் தகவல்களும் அருமை.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டிருந்தபோது கர்நூல் இரண்டுமுறை போய் வந்துள்ளேன். ஸ்ரீசைலம் போனது இல்லை.

    //என் கணவர் 42 வருடமாய் தேவாரப் பாடல் பெற்ற தலங்களைத் தரிசனம் செய்து வருகிறார்கள்.//

    ஆஹா, இதைக்கேட்கவே மிகவும் நல்ல செய்தியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான படங்கள். உங்கள் புண்ணியத்தில் நானும் ஸ்ரீசைலம் கண்டேன். நன்றிம்மா..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அம்மா
    இறைவனை வணங்க பணமா...?
    ஆலய தரிசனத்தை நேரில் கண்டது போல உணர்வு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. ஒரு புதிய கோவிலை அறிந்த மகிழ்ச்சி ...படங்களும் அழகு

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பதிவு..

    தேவாரத் திருத்தலங்கள் அனைத்தையும் தரிசித்த ஐயா அவர்களுக்கு எளியேனின் அன்பு வணக்கங்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வாழ்க வளமுடன்.
    இப்போது எல்லா கோவில்களிலும் இறைவனை தரிசிக்க சிறப்பு கட்டணம் உண்டு.
    தென்னிந்தியாவை தவிர மற்ற மாநிலங்களில் இறைவனை தொட்டு வணங்கலாம்
    காசு கொடுத்தால் இன்னும் சிறப்பு வழிபாடு.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நாங்கள் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கும் கோயிலைப் பற்றி அருமையான தகவல்களுடன் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ. புகைப்படங்கள் அருமை..

    பதிலளிநீக்கு
  9. நான் பார்க்க ஆசைப்படும் கோயில்களில் இதுவும் ஒன்று. காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். தங்களது பதிவின்மூலம் முதல் தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களுடன் கர்நூலில் இருந்தீர்களா?
    பெரிய பாக்கியம் அதைவிட வேறு என்ன வேண்டும்?

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ரூபன் , வாழ்க வளமுடன்.
    பெரிய கோவில்களில் இறைவனை வணங்க பணம் தான்.
    மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த , கோவில்களுக்கு வருமானம் வர என்று
    எல்லா பெரிய கோவில்களிலும் பணம் தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் துரைசெல்வராஜு சார், வாழ்க வளமுடன்.
    முன்பு ஒரு கோவில் பதிவில் சார்
    இன்னும் ஒரு கோவில் பார்த்தால் அவர்கள் பாடல்பெற்ற தல
    வழிபாடு நிறைவு பெறும் என்று எழுதி இருந்தேன்.
    அப்போது நீங்கள் வாழ்த்தினீர்கள் , நல்லோர் வாழ்த்து நலமே செய்யும்
    எங்கள் சாரும் தேவாரப் பாடல் பெற்ற கோவில் வழிப்பாட்டை நல்லபடியாக நிறைவு செய்தார்கள்
    நன்றி உங்களுக்கும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
    விடுமுறையில் சென்று வாருங்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் ஆராய்ச்சிக்கு பக்கத்தில் இருக்கும் நவபிரம்மாக் கோவில் பயன்படும்.
    கலையம்சம் நிறைந்த கோவில்.
    உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  16. அழகிய படங்கள். நான் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் லிஸ்ட்டில் இருக்கும் கோவில்! எப்போது? தெரியாது! நேரம் வர வேண்டும்! தம வாக்களித்திருக்கிறேன். சுற்றிக் கொண்டே இருக்கிறது. சற்றே நேரமாகும் வாக்கு விழ!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நம் உடலில் பலம் இருக்கும் போதே போய் பார்த்துவிட வேண்டும்.
    நேரம் கிடைக்கும் போது பார்த்துவிடுங்கள்.
    கருத்துக்கும் ,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அருமையான படங்கள். எட்டு நந்திகளும் வரிசையாகக் காண அழகு. /(தேவார பாடல்பெற்ற தலங்கள் 274). இறையருளால் ஸ்ரீசைலம் கோவிலுடன் தேவாரப்பாடல் பெற்ற தல யாத்திரை நிறைவு பெற்றது./ மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு