Saturday, August 8, 2015

மூவர் கோவில், கொடும்பாளூர்

கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில்  என்று அழைக்கப்படும் கோவிலுக்கு  சனிக்கிழமை  சென்று வந்தோம்.  சோழர் காலத்து கோவில்.  என் கணவர் அவர்கள் பி.ஏ இந்தியப்பண்பாடு படிக்கும்போது இந்த கோவிலைப்பற்றிப் பாடம் வந்ததாம். வெகு காலமாய் போகவேண்டும் என்று நினைத்த இடம் . போன வாரம்  1ம் தேதி சனிக்கிழமை போய் வந்தோம்.

இந்த ஊருக்கு திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலை கடந்து சென்று இடதுபுறம் திரும்பி செல்ல வேண்டும்.   ஒரு கடையில் நின்றவரிடம் கொடும்பாளூர் எப்படிப் போக வேண்டும் என்று கேட்டவுடன் கடையில் நின்ற வயதானவர் மூவர் கோவிலா? என்று கேட்டார்.  அப்புறம் வழி சொன்னார். அப்புறம் ஒரு இளைஞர் ஐவர் கோவிலா என்று கேட்டார் அப்படி பேர் இருக்கு போல!  அந்த வழியாகத்தான் போகிறேன் வாருங்கள் என்று எங்கள் காருக்கு முன் டூவீலரில் போய் வழி காட்டினார். மெயின் ரோட்டிலிருந்து  கோவில்  போகும்  சாலை பிரியும் போது விடைபெற்று சென்றார். 


கோவிலுக்கு செல்லும் சாலை ஒற்றையடி பாதை போல் இருக்கிறது குண்டும், குழியுமாய் இரண்டு பக்கமும் வயலும், திடலுமாய் இருக்கிறது. ஓ! என்று ஆளரவம் இல்லாமல்.
                  

கோவில் தொல்லியல்துறை பொறுப்பில் உள்ளது. பார்த்துகொள்பவர் ஒருவர் இருக்கிறார்.  அங்குள்ள வேப்பமரத்திலிருந்து விழும் கொட்டைகளை வயதான அம்மா குனிந்து சேகரித்துக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களும் போய்விட்டார்கள். நாங்கள் இருவர் மட்டும் தான் அந்த கோவிலை சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்தோம்.  நிறைய பேராக போனால் நன்றாக இருக்கும் இந்த கோவிலுக்கு.

மூன்று கோவில்களில் சிவலிங்கங்கள் இருந்து இருக்கின்றன. இப்போது இரண்டு கோவில்கள் இருக்கின்றன, அதில் ஒரு கோவிலுக்குள் மட்டும் சிவலிங்கம் நல்ல உயரமாய் இருக்கிறது. இன்னொன்றில்  வேண்டாதபொருட்களைப் போட்டுப் பூட்டி வைத்து இருக்கிறார்கள்.

                    

இந்த மூவர் கோயில் வரலாறு பின் வருகிறது.  அந்த  பலகையில் உள்ளது போல் சிறப்புடன் முன்பு இருந்து இருக்கிறது. இப்போது எல்லாம் சிதிலமடைந்து காலத்தின் சாட்சியாக நிற்கிறது. கலையம்சம் நிறைந்த  சிற்பங்கள் உடைந்து அங்கு பல இடங்களில் சிதறி கிடக்கிறது.கிணறு அழகாய் இருக்கிறது, படிகள் நிறைய போய் முடியும் இடத்தில் ட வடிவில்  பிரிந்து போகிறது. வட்டமாய் ஒரு கிணறு இருக்கிறது. அதை போட்டோ எடுக்க செருப்பை கழற்றிவிட்டு மேலே ஏறினேன் அவ்வளவுதான் ஒட்டுமுட்கள் பாதம் முழுவதும் குத்தி அடுத்த அடி எடுத்து வைக்கமுடியாமல் போய் விட்டது. என் கணவர் செருப்பை தூக்கி போட்டார்கள் அதன் பின் முட்களை அகற்றி விட்டு செருப்பை போட்டுக் கொண்டு கிணற்றை படம் எடுத்தேன். மறக்க முடியாத நல்ல அனுபவம்.                                                     யாளியின் வாய்க்குள் மனித உருவம்
யாளிக்கு வெளியேயும், யாளியின் வாய்க்குள்ளேயும்  மனிதன் சண்டை போடுகிறான்.             யானையும் யாளியும், யாளியின் நகங்கள் எவ்வளவு கூர்மை?


                                                                          கல்வெட்டு.

விடுமுறை இருக்கும் போது இது போன்ற கலைச்சிற்பங்கள்  உள்ள இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்று வரலாம்.
                                                                  வாழ்க வளமுடன்.

40 comments:

Dr B Jambulingam said...

குடும்பத்துடன் இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். தமிழகத்தில் பார்க்கவேண்டிய முக்கியமான கோயில்களில் மூவர் கோயிலும் ஒன்று. அனைவரும் காணும் வகையில் அழகான புகைப்படங்கள் மற்றும் செய்திகளுடன் நுட்பமாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.

துரை செல்வராஜூ said...

கொடும்பாளூர் செல்லும் பேறு இன்னும் வாய்க்கவில்லை..

காலத்தை வென்ற கலைப் பொக்கிஷங்களைக் கண்முன் நிறுத்துகின்றது - தங்கள் பதிவு!..

வாழ்க நலம்!..

ஜீவி said...

சோழப் பேரரசு என்றாலே பேராசிரியர் கல்கியின் நினைவுகள் மனசில் படிகின்றன.

கொடும்பாளூர் என்றதுமே அருள்மொழிவர்மனின் காதல் கன்னி, இளைய பிராட்டியார் குந்தவை தேவியாரின் உயிர்த் தோழி இளவரசியார் வானதியின் நினைவு வந்தது.

மூவர் கோயில் பற்றிய விவரக் குறிப்பில் காணப்படும் அரசர் பூதி விக்கிரம கேசரியின் சகோதரர் மகள் தானே வானதி தேவியார்?..

ஆர்வம் தன்னாலே அக்கறையைக் கொண்டிருக்கும் என்பார்கள். தேர்ந்த தெளிவான புகைப்படங்கள் நேரில் பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி பெருமை பெற்றன. அதற்காக மனம் கனிந்த நன்றிகள், கோமதி அம்மாவுக்கும் அரசு சாருக்கும்.


ஸ்ரீராம். said...

எவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்? எப்படி இருக்கிறது? அந்த இடத்துக்கு செல்லும் ஆசையைத் தூண்டி விட்டீர்கள். புகைப்படங்கள் மிகக் கவர்கின்றன.

மனோ சாமிநாதன் said...

கொடும்பாளூர் என்று படித்ததுமே கல்கியின் 'வானதி' என்றழைக்கப்பட்ட வானவன்மாதேவி நினைவுக்கு வந்தார். அப்புறம் அகிலனின் 'வேங்கையின் மைந்தனில்' வந்த பூதி விக்கிரமகேசரியின் வழித்தோன்றலாகிய இளவரசன் இளங்கோவும் நினைவுக்கு வந்தார்!
அழகிய சிற்பங்களுடன் உள்ள‌ இக்கோவிலை அழகாய்ப்படமெடுத்திருக்கிறீர்கள் கோமதி! கோவில் ஒரு அமானுஷ்யமான அமைதியுடன் இருக்கிறது, இல்லை?

G.M Balasubramaniam said...

கடவுளின் இருப்பிடம் என்பதைவிட கலைகளின் இடம் என்பதே சரியாக இருக்கும் போல் தோன்றுகிறது.கொண்டாட ஆட்கள் இல்லாத இடமாய்ப் போய் விட்டதே.போனதில்லை. போக வாய்ப்பிருக்குமா தெரியவில்லை.அருமையான படங்கள். அவசரப் படாமல் எடுத்தவை போல் தெரிகிறது வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

செல்ல வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது...

கொடும்பாளூர் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி அம்மா...

KILLERGEE Devakottai said...


புகைப்படங்கள் எடுத்தவிதம் அழகோ அழகு வாழ்த்துகள்.
த.ம.+ 1

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
மூவர் கோவிலை நீங்கள் குடும்பத்துடன் பார்த்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார்,
நீங்கள் சொன்னது போல் காலத்தை வென்ற
கலை பொக்கிஷம் தான் மூவர் கோவில்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
கொடும்பாளூர் அழைத்து வந்து விட்டதா உங்களை?
//அரசர் பூதி விக்கிரம கேசரியின் சகோதரர் மகள் தானே வானதி தேவியார்?..//


கொடும்பாளூர் இளவரசி, வேளான் மகள் என்று பொன்னியின் செல்வன் கதையில் படித்த நினைவு இருக்கிறது .படித்து பார்க்க ஆவல் வந்து விட்டது, அரசர் பூதி விக்கிரம கேசரியின் மகளா என்று அறிய.

உங்கள் கருத்துக்கும், படங்களை பாராட்டியதற்கு நன்றி சார்.

சாருக்கு நானும் நன்றி சொன்னேன் இந்த கோவிலுக்கு என்னை அழைத்து சென்றதற்கு.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
உங்களுக்கு எல்லா படங்களும் பார்க்க முடிந்ததா?
இன்னும் நிறைய படங்கள் எடுத்தேன், எல்லாம் போட்டால் பார்க்க கஷ்டம்
என்று போடவில்லை.
மண்டபம் இருந்த இடங்கள், அங்கு உள்ள மரங்கள் என்று நிறைய இருக்கிறது படங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

கோமதி அரசு said...

வணக்கம் மனோசாமிநாதன், வாழ்கவளமுடன்.
நலமா? பொன்னியின் செல்வனும், வேங்கையின் மைந்தனும்
நினைவுக்கு வந்து விட்டதா?
நீங்கள் சொல்வது போல் அமானுஷ்யமான அமைதிதான்.
கிணறுக்கு போகும் படியில் இறங்கி பார்க்க ஆசைதான்,
ஆனால் அங்கு நிலவிய அமைதியும்
உச்சி வெயிலும் தடை செய்து விட்டது என் ஆசையை.
நிறைய கூட்டமாய் போனால் நன்றாக இருக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்னது போல் கலையின் இருப்பிடம் தான்.
விளம்பர உலகம், அதனால் வ்இளம்பரம் செய்தால் வருவார்கள்
மக்கள்.
நீங்கள் சொன்னது போல் அவசரம் இல்லாமல் தான் எடுத்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

பலமுறை திருச்சி மதுரை சாலையில் பயணித்தும்
இக்கோயிலுக்கு இன்றுவரை செல்லாமல் இருந்திருக்கின்றேன்
அடுத்த முறை செல்லும் போது அவசியம்கோயிலைக் காண வேண்டும்
என்ற ஆவல் எழுகிறது சகோதரியாரே
படங்கள் ஒவ்வொன்றும் அருமை
நன்றிசகோதரியாரே

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
சென்று வாருங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், மற்றும் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்று வாருங்கள். அவர்களும் ரசிப்பார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.வெங்கட் நாகராஜ் said...

கொடும்பாளூர் கோவில் தகவல்கள் வியப்பு தருகின்றன. எத்தனை அழகான சிற்பங்கள் - சிதிலமடைந்து இருப்பது மனதில் வருத்தம் உண்டாக்கியது.

தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

Nagendra Bharathi said...

சரித்திரப் பதிவு. ஆசிரியர் கல்கியின் 'வானதி' ஞாபகம் வருகிறது

கவிஞா் கி. பாரதிதாசன் said...


ஐயா வணக்கம்!

இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

கோமதி அரசு said...

ராமலக்ஷ்மி has left a new comment on your post "மூவர் கோவில், கொடும்பாளூர்":

சிரமம் பாராமல் கிணற்றைப் படம் எடுத்துக் காணத் தந்து விட்டீர்கள்.தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி. //

ஐ போனில் பார்த்தேன் மெயிலை பப்ளிஷ் செய்யவில்லை என்றால் இப்படி ஆகிவிடுகிறது,
மன்னிக்கவும் ராமலக்ஷ்மி.

உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

ரூபன் has left a new comment on your post "மூவர் கோவில், கொடும்பாளூர்":

வணக்கம்
அம்மா
அறியாத ஆலயம் பற்றி வெகு சிறப்பாக விளக்கம் கொடுதுத்துள்ளீர்கள். அழகிய புகைப்படுத்துடன்... பகிர்வுக்கு நன்றி அம்மா. த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வ்ணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் பின்னூட்டமும் இப்படி ஆகி விட்டது பப்ளிஷ் செய்ய முடியவில்லை மன்னிக்கவும்.
அடுத்த முறை கவனமாய் இருப்பேன்.
உங்கள் கருத்துக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வ்ணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
நீங்கள் சொல்வது போல் வருத்தம் தான் ஏற்படுகிறது.
அப்படியே இருந்து இருந்தால் இன்னும் அழகாய் இருந்து இருக்கும்.

ஏதோ தொல்லியல் துறை எடுத்துக் கொண்ட
காரணத்தால் மீதியாவது நமக்கு காணக்கிடைத்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

கோமதி அரசு said...

வணக்கம் பாரதிதாசன் ஐயா, வாழ்க வளமுடன்.
நீங்கள் என் பதிவை வலைச்சரத்தில்
அறிமுகபடுத்தியதற்கு
நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் நாகேந்திர பாரதி, வாழ்க வளமுடன்.
கல்கியின் பொன்னியின் செல்வனில் வானதி
கொடும்பாளூர் இளவரசி என்றே நிறைய இடங்களில்
குறிப்பிட படுவாள் அதனால் வானதியும் கொடும்பாளூரும்
மறக்க முடியாது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

இளமதி said...

விழித்த கண் மூடாமல் இட்ட பதிவையும் படங்களையும்
பார்த்து நின்றேன் அக்கா!

அருமையான கோவில். இன்று இப்படி சோபயிழந்து
சித்திலப் பட்டுக் கிடப்பது நெஞ்சுக்குள் வலிக்கிறது..!

என்ன செய்வது.. சிவனுக்கும் இந்தக் கதியானதே!..

நல்ல பகிர்வு அக்கா! நன்றியுடன் வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
சோழர்க் காலத்து கோவில் , படையெடுப்பில்
சில கோவில்கள் தப்பித்து காலத்தை வென்று இருக்கிறது, சில
சித்திலப்பட்டு இருக்கிறது. மிஞ்சியவற்றை முடிந்தவரை பாதுகாத்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

mageswari balachandran said...

வணக்கம்,
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் படித்த ஊர்,,,,,
அழகிய புகைப்படங்கள், அருமையான பதிவு,,,
அவசியம் சென்று பார்க்கனும்.
நன்றி.

‘தளிர்’ சுரேஷ் said...

பழமையான ஆலயத்தை பார்க்க கொடுத்தமைக்கு மிக்க நன்றி! வாய்ப்பு கிடைக்கையில் சென்று பார்க்க ஆவல் உள்ளது! நன்றி! படங்கள் தெளிவாகவும் அழகாகவும் அமைந்தது சிறப்பு! நன்றி!

கோமதி அரசு said...

வணக்கம் மாகேஸ்வரி பாலசந்திரன், வாழ்க வளமுடன்.
உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
முடிந்தபோது சென்று பார்க்கலாம்.

கோமதி அரசு said...

வணக்கம் தளிர்சுரேஷ், வாழ்க வளமுடன்.
வாய்ப்பு கிடைக்கையில் சென்று வாருங்கள்.
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

பரிவை சே.குமார் said...

படங்கள் அழகு அக்கா...
வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் அழகு! வெகு அழகு! எத்தனை வரலாற்று பெருமை வாய்ந்த கோயில்! பார்க்க வேண்டும்... இவ்வளவு அழகான சிற்பங்கள் சிதலமடைந்து இருக்கின்றனவே...தகவல்கள் அறிந்துக் கொண்டோம்....

எப்படியோ உங்கள் பதிவு விடுபட்டிருக்கின்றது...இன்று பார்த்த போது தெரிந்தது சகோதரி...தாமதம்..மன்னிக்கவும்...மிக்க நன்றி சகோதரி தங்களின் விரிவான தகவல்களுக்கு..

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
எதற்கு மன்னிப்பு எல்லாம், எப்போது முடியுமோ
அப்போது படித்து கருத்திடலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

kg gouthaman said...

கொடும்பாளூருக்கே சென்று வந்தது போல உணர்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொரு படத்தையும் அணு அணுவாகப் பார்த்து இரசித்தேன்.

கோமதி அரசு said...

வணக்கம் gouthaman சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

Kuberan C R said...

வணக்கம் எங்கள் குல தெய்வம் "களரி மூர்த்தி" ஐயாவின் கோவிலை இணைய தளத்தில் தேடிக்கொண்டு இருந்த போது "மூவர் கோவிலில்" அவருக்கான சிலை இருக்கிறது என்று "விக்கிப்பீடியாவில்" பதிவிட்டிருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கோவிலுக்கு நானும் என் குடும்பத்துடன் சென்று வழிபட சித்தமாய் இருக்கிறேன். நீங்கள் அங்கு சென்றிருந்த போது "களரி மூர்த்தி" ஐயாவின் சிலையை பார்த்தீர்களா?

உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!

கோமதி அரசு said...

வணக்கம் குபேரன், வாழ்க வளமுடன்.
மூவர் கோவிலில் வழிபடும் தெய்வங்கள் இல்லை."களரி மூர்த்தி" ஐயாவின் சிலையை பார்க்கவில்லை.
மூவர்கோவில் போகும் வழியில் நிறைய சின்ன சின்ன கோவில்கள் இருக்கிறது. அங்கு போய் நீங்கள் அந்த ஊர் மக்களிடம் கேட்டால் “களரி மூர்த்தி” ஐயா கோவில் பற்றிய விவரங்கள் தெரியும்.
உங்களுக்கு குலதெய்வம் வழிகாட்டுவார்.

Kuberan C R said...

மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்