திங்கள், 29 ஜூலை, 2013

கற்றதும் பெற்றதும்

உங்களுக்கு எல்லாம் நல்லா தெரிந்த கோவை தில்லி என்ற வலைத்தளத்தை வைத்து இருக்கும் ஆதிவெங்கட்  அவர்கள், என்னை என்  கணினி அனுபவங்களை சொல்ல அழைத்து இருக்கிறார்கள். நான் தற்சமயம் என் மகன் வீட்டில் நியூஜெர்சியில் இருக்கிறேன். என் பேரனுடன் பொழுது போவதாலும் என் கணினி அனுபவங்களை முன்பே நான் எழுதி இருப்பதாலும் அதையே உங்களுக்கு கொடுக்கிறேன்.

திருமணம் ஆகி, குழந்தைகள் பிறந்தபின், தமிழ், ஆங்கில தட்டச்சு படித்தேன்.  என் கணவரும், நானும் தட்டச்சு ஆரம்பத்தில் படிக்க வில்லை,   இருவரும் கற்றுக் கொண்டோம்.  தமிழ் தட்டச்சு வாங்கினால் உபயோகமாய் இருக்கும் என்று நினைத்து இருவரும் கற்றுக் கொண்டோம்,  இருவரும் பாஸ் செய்தோம். தமிழ்  தட்டச்சு   இயந்திரம் வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம் ஆனால் ஏனோ வாங்கவில்லை.

எல்லோரும் தங்கள் கணினி  அனுபவங்களை வெகு அழகாய் சொல்லிவிட்டார்கள் என் அனுபவம் குழந்தையின் அனுபவம் போல். நான் இதில் கற்றுக் கொண்டது மிக குறைவு. ஆனாலும், மகன் , மகளுடன் கணினியில்  பேசுவது- அவர்களைப் பார்ப்பது-  அதுவே பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டு இருந்த காலம். இப்படிஎனக்கு என்று வலைத்தளம் அமைப்பேன் என் எண்ணங்களைப் பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்றெல்லாம் நான் அப்போது நினைத்தது இல்லை. ஒரு வலைத்தளத்திற்கே நான் இப்படி சொல்கிறேன், ஒவ்வொருவர் தனக்கு என்று பல வலைத்தளம் வைத்துக் கொண்டு அதில் திறம்பட எழுதி வருகிறார்கள்.

வலைத்தளம்  அமைத்து எழுத ஆரம்பித்த  மூன்றாவது பதிவு  கணினி அனுபவப்பதிவு :

//கற்றல் நன்றே!

” கற்றல் நன்றே கற்றல் நன்றே
வலைக் கல்வி கற்றல் நன்றே”

நானும் வலைக் கல்வி கற்றுக்கொள்கிறேன். முதல்குரு என் பேத்தி. ஒரு விளம்பரத்தில் ’மெளசைப்பிடி பாட்டி’ என்று பேத்தி சொல்வதும், பாட்டி ’எலியையா?’ என்று பயந்து, பின் சிரிப்பது போல் வரும். அது மாதிரி நானும் என் பேத்தியிடம மெளசை  பிடிக்க முதன் முதலில் கற்றுக் கொண்டேன். மேலும் அவளுடன் கணிப்பொறி விளையாட்டு,ஓவியங்களுக்கு கலர் கொடுத்தல் எல்லாம் கற்றுக் கொண்டேன்.

அடுத்த குரு என் மகள். வாழ்க்கைக் கல்வி கற்றுக் கொடுத்தேன் அவளுக்கு. அவள் எனக்கு வலைக் கல்வி கற்றுக் கொடுத்தாள்.

மகள்,மகன், மருமகள் எல்லோரும் நல்ல வலைத்தளங்களை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார்கள். ஒரு மாதமேயான என் பேரனும் வருங்காலத்தில் எனக்குக் கற்றுக் கொடுப்பான்.

வலைத்தள நண்பர்களும் என்னை வரவேற்று ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
எல்லோருக்கும் என் நன்றி.//
                                                                        *  *  *

பண்புடன் இணைய இதழுக்காக எழுதிய கட்டுரை இளமையின் ரகசியம் தீராக்கற்றல்  என்ற பதிவில்  இருந்து:

//நம்மிடம் கற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கை வருகிறது. கற்கும் ஆசை உள்ள தாய்மார்களுக்கு  குருவாக  குழந்தைகள், பேரன், பேத்திகள் சொல்லித்தரத்தயாராய் இருக்கிறார்கள்.  இவர்களிடம் என்ன படிப்பது என்று எண்ணத்தை தள்ளி வைத்துவிட்டு  மாணாக்கர்களாய் சேர்ந்து  நிறையக் கற்றுக் கொள்கிறார்கள். முதலில் கணினி இயக்கக் கற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் மிக அவசியமான தேவைகளில் கணினிப் படிப்பும் ஒன்று என்று ஆகி விட்டது. வெளி நாட்டில், வெளியூரில் வாழும் குழந்தைகளை முதலில் நேரில் பார்த்துப் பேச, அவர்கள் நம்மைப் பார்க்க, கணினி இன்றியமையாத தேவை ஆகிறது.  பிறரை எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் தாமே கற்றுக்கொண்டு அதை இயக்கி அவர்களுடன் உரையாடுகிறார்கள்.

       இப்போது யாரும் கடிதம் எழுதுவது இல்லை. ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுத வீட்டு முகவரி வாங்கிக் கொண்ட காலம் மாறி, உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள் என்று கேட்டு வாங்கும் காலம் ஆகி விட்டது.  அதனால் நமக்கு என்று மின்னஞ்சல் முகவரி வைத்துக் கொண்டு  வீட்டுப்பண்டிகைகளில் எடுத்த படங்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று வந்தபோது அவர்களுடன் எடுத்த படங்கள் என்று தங்கள் பிள்ளைகளுடன் பகிரும் போது அவர்களுக்கும் உறவினர்களிடம்  உள்ள நெருக்கம் அதிகமாவதை உணர்கிறார்கள். //

ஒவ்வொரு பதிவிலும் இணையத்தின் நன்மைகளை எழுதி இருக்கிறேன்.

2007 ஆம் வருடம் என் மகன் அமெரிக்கா சென்றான், வேலை நிமித்தமாய். அப்போது அவன் கணினியை எங்களுக்கு கொடுத்துச் சென்றான்.
 கணினியை இயக்க , பத்திரிக்கைகள் படிக்க எல்லாம் சொல்லிக் கொடுத்தான்.
ஆரம்பத்தில் என் மகள்  அனுப்பும் வலைத்தளங்களைப் படிப்பேன்,  பின் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொடுத்தாள் நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு தினம் ஒரு பக்கம் நோட்பேடில் அடித்துப்பார்த்துக் கொள்வேன்.
அப்புறம் பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் கொடுக்க ஆரம்பித்தேன்.

பதிவில் பிடித்த வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்வது சொல்லிக் கொடுத்தாள். அதனால் மிக எளிதாக பின்னூட்டங்கள் கொடுத்தேன்.
தினம் தினம் புதுப்புது சந்தேகங்கள் வரும். அதற்கு என் மகன், மகள் பொறுமையாக பதில் சொன்னார்கள். ஹேங் அவுட் ஆகி  கணினி இயங்காமல் இருக்கும்போது அதிலிருந்து வெளி வந்து கணினியை இயக்க சொல்லிக் கொடுத்தார்கள்.   கூகுளில் நமக்கு தேவையானவைகளைத் தேட, யூ டியுப்பில் சினிமா பாடல்,  பக்தி பாடல்கள் , நல்ல கர்நாடக கச்சேரிகள், எல்லாம் கேட்கப் பழகினேன்.

விடுமுறைக்கு வந்த என் மகள் , அம்மா நீங்களும் வலைத்தளத்தில் எழுதலாமே ஒன்றும் கஷ்டம் இல்லை என்று என்னை வலைத்தளம் ஆரம்பிக்க வைத்தாள்.

என் மருமகள் ”திருமதி பக்கங்கள்” என வலைத்தளத்திற்குப் பெயர் சூட்டினாள், என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து. எனக்கு வலைக் கல்வியை மகள், மகன், மருமகள், பேத்தி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப் படுத்தும் என் கணவருக்கு நன்றி.

2009 மே மாதம் 31 ம் தேதி ’கிளிக்கோலம்’ என்ற கோலம் போட்டு, மகரிஷியின் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து கவிதையுடன் என் வலைத் தளத்தை ஆரம்பித்தேன்.

//எண்ணமே இயற்கைதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்.//


2010ஆம் வருடம் என் கணவர்,  பேரனைப் பார்க்க நாங்கள் அமெரிக்க சென்ற போது எனக்கு  மடிக்கணினி வாங்கித் தந்தார்கள்.  இருவருக்கும் தனித்தனியாகக் கணினி இருந்ததால் நான் அவர்களுக்கு தொந்திரவு இல்லாமல் படிக்க ,எழுத முடிந்தது. இப்படி எழுத வந்ததில்  பெற்ற அன்பு உறவுகள் அதிகம்.

முதலில் எழுத வந்த போதே குழந்தை தட்டுத் தடுமாறி, தளர் நடை செய்யும் போது அதற்கு உற்சாகம் கொடுத்து நடக்கச் செய்வது போல்  சக பதிவர்கள் பெரும் ஊக்கம் கொடுத்தார்கள், சந்தனமுல்லை, ஆதவன், ஜலீலா,  வேதா இலங்கா திலகம், முத்துலெட்சுமி , திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் எல்லாம் விருதுகள் கொடுத்து மேலும் எழுதத் தூண்டியவர்கள்.
வல்லி அக்கா என்று  அன்பாய் அழைப்பேன் அவர்கள் மற்றும் ஆதவன், சந்தனமுல்லை, ஆசியா, எல்லாம் தொடர் கட்டுரை எழுத அழைத்து ஊக்கப்படுத்தினார்கள்.

கபீரின் கனிமொழி என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் சிறப்பு இடுகைகள் வழங்கினார். அதில் சிறப்பு விருந்தினராய்
கே.ஆர்.எஸ்   என்னும் Kannabiran Ravishankar
இந்த சிறப்பு இடுகை வழங்கினார்.
புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு! (கபீர் பற்றி 10 கேள்விகள்)  வினாடி வினா விளையாட்டு நடத்தினார்.  அதில் கலந்து கொண்டு சரியான விடைகளைச் சொன்னவர்கள்:
நா.சொக்கன்
முகிலரசி
கோமதி அரசு

வெற்றிப் பட்டியலில் இடம் பெற்று , ராமகிருஷ்ணவிஜயம்  இதழ்  ஒரு ஆண்டுக்குப் பெற்றேன்.  அதை மறக்க முடியாது.

போனமுறை அமெரிக்க வந்த போதுதான் தேவதை இதழ் ஆசிரியர் நவநீதகிருஷ்ணன்  என்னைத்  தொடர்பு கொண்டு,  குருந்தமலை குமரன் என்ற பதிவைத் தேவதையில் போட்டுக் கொள்ளவா ? என்று  அனுமதி கேட்டார் நம் ஆன்மீக கட்டுரை முதன் முதலில் பத்திரிக்கையில் பார்த்ததில்  மகிழ்ச்சி. மூன்று பதிவுகள் அதில் இடம் பெற்றது. மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் மார்கழி கோலங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி வலை உலகத்தில் எதையும் எதிர்பார்க்காது மற்றவர்களை  ஊக்கப்படுத்தி மகிழ்ச்சி கொள்ளும் இதயங்கள்  உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக  வை. கோபாலகிருஷ்ணன் அவர்களைச் சொல்ல வேண்டும்.  தொடர் விருதுகளாக நான்கு விருதுகள் கொடுத்து அசத்தினார்.  அவருக்கு 2012 ஆம் வருடம் கிடைத்தவிருதுகள் 12 .  அதை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டார். என் வலைத்தளம் பற்றிய செய்தி  தினகரன் செய்தித்தாளின் இணைப்பான வசந்தம் இதழில் இடம் பெற்ற போது எனக்கு தெரியாது . அதை எனக்கு மெயில் அனுப்பினார். முதல் பாராட்டு, வாழ்த்து அவர்களுடையது.


இப்படி அன்பாய் வந்து தகவல் தெரிவித்து அதைப் பார்க்க அந்தப் பக்கத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினார்.

 சகோதரி ஜலீலாவும் வாழ்த்துடன் அந்த பக்கத்தை புகைப்படம் எடுத்து  இணைத்து அனுப்பி இருந்தார்.

வலைச்சரத்தில் என் பதிவுகள் இடம் பெறும்போது எல்லாம் முதலில் வந்து தகவல் தந்து வாழ்த்தும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், என் பதிவு சிலருக்கு படிக்கமுடியாமல் துள்ளிகுதித்தபோது தானாக முன் வந்து அதைச் சரி செய்ய ஆலோசனைகள் வழங்கினார் தனபாலன் . ஹுஸைனம்மாவும் அப்படி துள்ளிக்குதிக்கும் துடுக்கை அடக்க உதவியவர்கள். பதிவுகள் வரவிலலை என்றால் நலமா எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கடிதம் வந்து விடும், ஹுஸைனம்மாவிடமிருந்து.

முன்பு எல்லாம் பதிவுகளில் போட்டோ இணைக்க எனக்குத் தெரியாது. கற்றுக் கொண்ட பின், போட்டோவுக்காகப் பதிவு போல் ஆகி விட்டது. ஒரு பதிவுக்கு ஒரு படம் தேவைப் பட்டது - கிடைக்கவில்லை என்றவுடன் ராமலக்ஷ்மி அதை அனுப்பிப் போட்டுக் கொள்ளச் சொன்னார்கள் (குண்டு காக்கா கதையில் குண்டாய் ஒரு காக்காய் தேவைப்பட்டது)

ஆதி சொன்னது போல் எந்த ஊருக்குச் சென்றாலும் இந்த ஊரில் இந்த பதிவர் இருக்கிறாரே  அவர்களை சந்திக்க முடியுமாஎன்று எண்ணத்தோன்றுகிறது. இரண்டு முறை ஆதி ,வெங்கட்  பதிவர் தம்பதிகளை டெல்லியில்  சந்தித்து மகிழ்ந்தோம்.

 ஒருமுறை பெங்களூருக்குச் சென்றிருந்தபோது அங்கு நடந்த பதிவர் சந்திப்பில் என்மகளோடு போய்க்கலந்துகொண்டேன்.அப்போதுதான் நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து இருந்தேன். அப்போது தான் திருமதி .ராமலக்ஷ்மி  அவர்கள்  அறிமுகம் ஆனார்கள். இனிமையான அன்பான  பெண்மணி. இன்றும் மெயில் மூலமும், தொலைபேசியிலும் உரையாடிக் கொள்வோம்.  சென்னை செல்லும் போதேல்லாம் வல்லிசிம்ஹன் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.
அன்பானவர். கோவையில் மங்கை, யாழினி , வின்சென்ட்ஆகியோரைச் சந்தித்து இருக்கிறேன்.

கடகம் என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ஆயில்யன், சென்ஷி, அபி அப்பா, துளசி கோபால் எல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். மதுரையில் சீனாசார், தருமி, மற்றும் புதிய பதிவர்களை சந்தித்து இருக்கிறேன்.  மயிலாடுதுறையில் ஆயில்யனின்  திருமண வரவேற்பில்  நிறைய பதிவர்களைச் சந்தித்தேன்.

எங்கள் பிளாக் வைத்து இருக்கும் ஸ்ரீராம் ,திருக்கடையூருக்குச் செல்ல மயிலாடுதுறை வந்த போது, அவர்களுக்கு ,கோமதி அரசு ஊர் அல்லவா ! என்ற நினைவு வந்ததாம். சங்கரன் கோவில் கோமதி அம்மனைப் பற்றி பதிவை திருமதி ராஜராஜேஸ்வரி எழுதிய போது கோமதி அரசு நினைவுக்கு வந்தார் என்று கோபாலகிருஷ்ணன் சார் சொல்லி இருந்தார்.  இப்படி எல்லோருக்கும் உறவினர்கள் போல்  வலை உலக நட்பு உறவுகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அடிக்கடி வந்து பின்னூட்டங்கள் இடுபவர்கள் வரவில்லை என்றால் அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது சகபதிவர்களிடம்.   திருமதி.லக்ஷ்மி அவர்கள் நீண்ட நாட்களாக பதிவு எழுதவில்லை அவர்களை அமைதிச்சாரலிடம் விசாரித்தேன்.

கணினி அறிவு அவ்வளவாய் இல்லை என்றாலும் நானும் ஏதோ எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

வலைத்தள நண்பர்களும் என்னை வரவேற்று ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
எல்லோருக்கும் என் நன்றி.

ஒரு மாதமேயான என் பேரன் வருங்காலத்தில் எனக்கு கற்றுக் கொடுப்பான் என்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது  அவனுக்கு நான்கு வயது . அவனிடம் நிறைய  கற்றுக் கொள்கிறேன். அவன் எப்போதும் ஐபேடும் கையுமாய் இருக்கிறான். எங்களுக்கு நிறைய வித்தைகள் அதில் காட்டுகிறான். அவன் இங்குள்ள நூலகம் போய் அங்குள்ள கணினியில் அவனுக்கு பிடித்தவைகளைப் பார்ப்பது, புத்தகங்கள் ,  கதை , கார்ட்டூன் சிடிகள் எல்லாம் எடுத்து வருவது செய்கிறான். தாத்தா உனக்கும் புத்தகம் எடுத்துக்கோ என்றான் தாத்தா நிறைய புத்தகங்கள் எடுத்து வந்து இருக்கிறார்கள்.








                         புத்தகம் தேடும் தாத்தா

                                 அன்பு பேரன்











இப்படி கணினி கற்றுக் கொண்டதால் கற்றதும், பெற்றதும் இனிமையான அனுபவங்கள். எனக்குக் கணினி அறிவு குறைவு,  பெற்றவை நிறைய நட்புகளின் அன்பு.  நம்மாலும் எழுத முடிகிறது , நம் பதிவைப் படிக்கவும் அன்பர்கள் இருக்கிறார்கள் என்ற மனநிறைவு ஏற்படுகிறது.
என்னை தொடர் பதிவு எழுத அழைத்த ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி.

தங்கள் கணினி அனுபவத் தொடரை  எல்லோரும் எழுதி இருப்பார்கள் என நினைக்கிறேன்.   கணினி அனுபவங்களைத் தொடர விரும்புவர்கள் எழுதலாம்.

                                                            வாழ்க வளமுடன்.

                                                  -----------------------------------------------

64 கருத்துகள்:

  1. வணக்கம்
    பதிவு மிக அருமையாக உள்ளது கண் பார்த்தால் கைசெய்யும் என்பார்கள் அது போல கனிணியின் முன் 1 மணித்தியாலயம் சிலவுசெய்தால் கற்று விடலாம்
    பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நீண்ட கட்டுரையாக எழுதி அசத்தியுள்ளீர்கள். ரஸித்துப்படித்தேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. கணினியில் நமக்கு வரும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் குருநாதர்களாக நம் குட்டியூண்டு வ்யது பேரன், பேத்திக்ள் தான் இன்று மிதவும் உதவுகிறார்கள்.

    மகள், மகன், மருமகளும், மரும்க்ன் போன்றோரும் நமக்கு சமய்த்தில் உதவிசெய்வது கூடுதலாக செளகர்யம் தான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. போட்டோக்கள் எல்லாமே மிக அழகாக RICH & ROYAL LOOK ஆக நியூ ஜெர்ஸியிலிருந்து கொடுத்துள்ளது மேலும் இந்தப்பதிவினை மெருகூட்டியுள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  5. நம் குழந்தைகள் + பேரன் பேத்திகள் எந்த நாட்டில் இருந்தாலும், நாம் நம் கணினி இணைப்பின் மூலம் பேசவும், பார்க்கவும் முடிகிறது என்பது மிகவும் சந்தோஷமான சமாசாரமாகவே உள்ளது.

    இதனால் அவர்கள் தூர தேசத்தில் இருப்பினும் நம்முடன் கூடவே ஒரே வீட்டில் இருப்பது போன்ற உணர்வையும் நெருக்கத்தையும் த்ருவது கணினி தான்.

    அதை அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. //இப்படி வலை உலகத்தில் எதையும் எதிர்பார்க்காது மற்றவர்களை ஊக்கப்படுத்தி மகிழ்ச்சி கொள்ளும் இதயங்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

    குறிப்பாக வை. கோபாலகிருஷ்ணன் அவர்களைச் சொல்ல வேண்டும்.

    தொடர் விருதுகளாக நான்கு விருதுகள் கொடுத்து அசத்தினார்.

    அவருக்கு 2012 ஆம் வருடம் கிடைத்தவிருதுகள் 12 . அதை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    என் வலைத்தளம் பற்றிய செய்தி தினகரன் செய்தித்தாளின் இணைப்பான வசந்தம் இதழில் இடம் பெற்ற போது எனக்கு தெரியாது .

    அதை எனக்கு மெயில் அனுப்பினார். முதல் பாராட்டு, வாழ்த்து அவர்களுடையது.//

    நான் மறந்தாலும் நீங்கள் மறக்காமல் எல்லோரையும், எல்ல நிகழ்வுகளையும், அழகாக கோர்வையாகச் சொல்லியுள்ளீர்க்ள்.

    மிக்க நன்றி, மேடம்.

    ஏதோ ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் மகிழ்ச்சிப்பகிர்வு தானே, இதெல்லாம்.

    இதில் பெறுபவரை விட கொடுப்பவருக்கு கூடுதல் ம்கிழ்ச்சியே கிட்டுகிறது.

    நிறைய பேர்களுடன் ஓர் ந்ல்லுறவை வளர்த்துக்கொள்ள முடிகிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. //சங்கரன் கோவில் கோமதி அம்மனைப் பற்றி பதிவை திருமதி ராஜராஜேஸ்வரி எழுதிய போது கோமதி அரசு நினைவுக்கு வந்தார் என்று கோபாலகிருஷ்ணன் சார் சொல்லி இருந்தார்.//

    ஆமாம், மேடம், கோமதி என்ற பெயரில் எனக்குள்ள ஒரே உறவு தாங்கள் மட்டுமே.

    அதனால் நான் அவ்வாறு திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்குக் கொடுத்த பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன்.

    அம்பாள் பெயரைக்கேட்டதும் எனக்கு உங்கள் ஞாப்கம் தான் வந்தது.

    நியூஜெர்சிக்கு போவதாக என்னிடம் நீங்க சொல்லிவிட்டுப்போனீர்கள்.

    மறுநாளே அவர்களின் அந்தப்பதிவு வெளியிடப்பட்டிருந்தது. ;)))))


    //இப்படி எல்லோருக்கும் உறவினர்கள் போல் வலை உலக நட்பு உறவுகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.//

    ஆமாம், மிகவும் உண்மை தான்.

    //அடிக்கடி வந்து பின்னூட்டங்கள் இடுபவர்கள் வரவில்லை என்றால் அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது//

    என்னைப்போலவே நீங்களும் நினைக்கிறீர்கள். ஆச்சர்யமாக உள்ளது.

    பதிவுக்குப்பாராட்டுக்கள், நன்றிகள்.

    வெளிநாட்டுப்பயணம் வெற்றிகரமாக சந்தோஷமாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  8. //எண்ணமே இயற்கைதன் சிகரமாகும்
    இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்.//

    அழகாகப் பகிர்ந்த இனிய நினைவுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  9. அடடே.. இப்ப நீங்க அங்கே போயிட்டீங்களா..

    பதிவின் பெயர்க்காரணம் சுவாரசியம். எந்தத் தொழில்நுட்பமும் நம்மினும் இளையவரே விற்பன்னராக இருப்பது இயற்கை.. கணினி, தகவல் துறைகளில் குறிப்பாக இளைஞர்களே வெற்றிக்கொடி பிடிக்கிறார்கள்.

    லைப்ரரி படங்கள் அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. கற்கும் ஆசை உள்ள தாய்மார்களுக்கு குருவாக குழந்தைகள், பேரன், பேத்திகள் //காலம் மாறினாலும் நம்மையும் மாற்றிவிட்டது

    பதிலளிநீக்கு
  11. உங்கள் அனுபவங்கள் பலவற்றையும் அழகி பகிர்ந்துள்ளீர்கள். தட்டச்சு செய்ய ஆரம்பித்ததிலிருந்து இன்று பதிவு எழுதுவது வரை எல்லாமே அழகிய பதிவாய் மலர்ந்திருக்கிறது.

    உங்கள் பேரனுக்கு என் ஆசிகள். நன்கு பேரனுடன் விளையாடி மகிழுங்கள் .
    வாழ்த்துக்கள்......

    பதிலளிநீக்கு
  12. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது போல் கொஞ்சம் கட்டுரை பெரிதாகி விட்ட்து.

    எல்லோரும் உதவி செய்வது மகிழ்ச்சி தான். பேரனுடன் நூலகம் போன போது ஆதி தொடர் கட்டுரைக்கு அழைப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அங்கு எடுத்த படங்கள் இக் கட்டுரைக்கு பொருத்தமாய் இருந்ததால் போட்டு விட்டேன். நீங்கள் ரசித்தமைக்கு நன்றி.
    கோமதி என்ற பெயரில் இருக்கும் ஒரே உறவு என்று நீங்கள் சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
    உறவினர்களிடமிருந்து , அலைபேசி அழைப்பு இல்லை என்றால் என்னாச்சு போன் செய்யவில்லையே இப்படி செய்யாமல் இருக்கமாட்டார்களே ! என்று நினைப்பது போல் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் அளித்தவர்கள் சில பதிவுக்கு வரவில்லை என்றால் ஏன் வரவில்லை எனநினைக்க தோன்றுகிறது.
    உங்களுக்கும் அப்படித்தான் என்று படிக்கும் போது
    நம் போன்றவர்கள் மனநிலை அப்படித்தான் என நினைக்க தோன்றுகிறது.

    உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் ஆறு பின்னூட்டங்களுக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் அங்கே போய் விட்டீர்களா?
    அம்மா நலமா?
    //கணினி, தகவல் துறைகளில் குறிப்பாக இளைஞர்களே வெற்றிக்கொடி பிடிக்கிறார்கள். //

    நீங்கள் சொல்வது சரிதான்.
    அலைபேசியில் நிறைய விஷயங்கள் எனக்கு பிடிபட மாட்டேன் என்கிறது ஆனால் சிறு குழந்தைகள் அதை அழகாய் கையாள்கிறார்கள்.
    நாளுக்கு ஒரு மாடல் தொழிழ்நுட்பம் மாறுகிறது. ஏதோ எனக்கும் கொஞ்சம் தெரிகிறது என்று பெருமை பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  14. அன்பு கோமதி,
    வாழ்கவளமுடன்.

    வெகு அழகான பதிவு. குழப்பமில்லாத வகையில் ஒரு ஆசிரியைக்கான பொறுமையோடு
    விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள்.எனக்கும் தட்டச்சுதான் கைகொடுத்தது. நான் எழுத நாளாகும்.பேரன் மகன் மருமகளோடு இனிய பொழுதுகள் சேர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. சுவாரஸ்யமான இனிமையான அனுபவம் ரசிக்க வைத்தது... உதவி செய்த மற்ற பதிவர்களையும் குறிப்பிட்டதும் அருமை... நன்றிகள்...

    படங்கள் அருமை... மகள், மகன், மருமகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  16. படிப்படியாக கணினிக்குப் பழக்கமானதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பதிவில் என்னையும் நினைவு கூர்ந்திருப்பது மனதுக்குச் சந்தோஷம் தந்தது.

    பதிலளிநீக்கு
  17. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பேத்தியின் வாயிலாக கணினி கற்ற நீங்கள் அழகாக உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். நாங்கள் உங்கள் பேத்திக்கும் வாழ்த்தும் நன்றியும் சொல்கிறோம்.

    பதிலளிநீக்கு
  18. ஆம். கணினி மூலமாகக் கற்றதும் பெற்றதும் ஏராளமே. சிறப்பாகப் பகிர்ந்துள்ளீர்கள். மறக்க முடியாத இனிய மாலையாக அமைந்திருந்தது நம் சந்திப்பு. அப்போது அதிகம் எழுத ஆரம்பிக்கவில்லை நீங்கள். பின்னரும் ரொம்ப நாள் என் பதிவுகளில் கருத்துரை இடுவது நீங்கள்தான் எனத் தெரியாமல் இருந்திருக்கிறேன்:)! பேரன் நன்கு வளர்ந்து விட்டான். விடுமுறை இனிதாக அமைய என் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  19. அருமையான பதிவாக இருந்தது அம்மா. சுவாரஸ்யமாக சொல்லிச் சென்றுள்ளீர்கள். தங்களையும், ஐயாவையும் இருமுறை சந்தித்தது குறித்து எங்களுக்கும் மகிழ்ச்சி. அடுத்த முறை தங்களின் இல்லத்திற்குத் தான் வர வேண்டும். அதற்கான வாய்ப்பு அமையட்டும்.

    கயல்விழிக்கும் மற்றவர்களுக்கும் தான் முதலில் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களால் தான் எங்களுக்கு இப்படியொரு அருமையான பதிவர் + வழிகாட்டி கிடைத்துள்ளார்.

    என் அழைப்பை ஏற்று உடனே எழுதியதற்கு நன்றிம்மா.

    பேரன், மகன், மருமகளோடு இனிமையான பொழுதுகள் அமையட்டும்.

    பதிலளிநீக்கு

  20. நான் பெருமையுடன் சொல்லிக் கொள்வது என் பேரன் தகப்பன் சாமி அல்ல தாத்தா சாமி என்று. என் இரண்டாம் பேரன் எட்டு வயது இங்கு வந்தால் எனக்கு கணினி விளையாட்டுக்கள் ஆடிக் காண்பிப்பான். அருமையான பகிர்வு பதிவு.

    பதிலளிநீக்கு
  21. அடடே, நலமே நியூ ஜெர்ஸி போய்ச் சேர்ந்தாச்சா! ஊரும், உறவுகளும் நலம்தானே?

    பதிவுலகில் விருது கொடுத்தவர்கள், ஊக்குவித்தவர்கள், வழிகாட்டியவர்கள் என்று எல்லாரையுமே அழகாக நினைவோடு சொல்லிருக்கீங்க. பெரியோர் பண்பு.

    //இருவரும் பாஸ் செய்தோம். ஆனால் ஏனோ வாங்கவில்லை.//

    பாஸ் பண்ணிட்டீங்க, ஆனா வாங்கலைன்னு சொல்லிருக்கீங்களே? எதை - சான்றிதழையா?

    //இளமையின் ரகசியம் தீராக்கற்றல்//
    அந்தக் கட்டுரை எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.

    பதிவர்களைச் சந்திக்க எனக்கும் மிகவும் ஆசையாக இருக்கும். அமீரகத்தில், ஸாதிகாக்கா வருகைய முன்னிட்டு, நாங்கள் பெண்பதிவர்கள் சேர்ந்து சந்தித்துகொண்டது மிக இனிய அனுபவம். ஆனால், இந்தியா வரும்போது பதிவர்களையெல்லாம் சந்திக்க வாய்ப்போ, நேரமோ அமைவதேயில்லை என்ற வருத்தம் மிக உண்டு எனக்கு. உறவுகளுக்கு முன்னிலை கொடுக்க வேண்டிய கட்டாயம். அதுவும் அவசியமல்லவா?

    // திருமதி.லக்ஷ்மி அவர்கள்//
    அவர்கள் நலமா? அவ்வப்போது நினைப்பதுண்டு. வேறு கடமைகள் நிமித்தம் காணாமல் போனவர்கள் நிறைய உண்டு.

    பதிலளிநீக்கு
  22. தொடர் பதிவை அழகான மலரும் நினைவுகளுடன் தொகுத்து தந்திருக்கீங்க. அறியும் ஆவலிருந்தால் வாழ்நாள் முழுதும் கற்றல் இனிதானதொரு அனுபவமே.

    பதிலளிநீக்கு
  23. வழக்கம் போல் மனசில் இருப்பதை கொட்டிவிட, பதிவும் வழக்கம் போலச் களை கட்டி விட்டது. நூலகத்தின் படம் பார்த்த பொழுது அந்நாட்டின் நூலகச் சிறப்பு நினைவில் மீண்டும் வந்தது.

    அப்பாதுரை

    //அடடே.. இப்ப நீங்க அங்கே போயிட்டீங்களா.. //

    அடடே.. அப்பாஜி! இப்ப நீங்க இங்கே வந்திருக்கீங்களா..

    பதிலளிநீக்கு
  24. வாங்க ரூபன், வாழ்க வளமுடன். முதலில் வந்து அருமையான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.
    உங்கள் பின்னூட்டம் சமூகம் என்ற பிரிவில் ஒளிந்து கொண்டு இருந்தது , ஜிமெயிலில் நிறைய மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள் அதனால் உங்கள் மெயில் பார்க்க காலதாமதம் ஆனது மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  25. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், அழகான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. இனிமையான நினைவுகள்.......

    கற்பதில் என்றுமே தவறில்லை!

    சிறப்பாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....

    பதிலளிநீக்கு
  27. அருமையான கட்டுரை
    அடியெடுத்து வைக்கையில் ஊக்கப்படுத்தியவர்கள்
    அனைவரையும் அறிமுகம் செய்து பாராட்டியது
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.நீங்கள் சொல்வது சரிதான். காலம் மாறும் போது நம்மையும் காலம் மாற்றுகிறது உண்மை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு நன்றி. பேரனுக்கு உங்கள் வாழ்த்துக்கள் நலம்பயக்கும் பேரனுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன். பதிவு நன்றாக இருக்கிறது என்று சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்பத்தில் பின்னூட்டங்கள் போட்டு கொண்டு இருந்தேன் அப்போது நீங்கள் கோவில்கள் பற்றி எழுத சொல்லிக் கொண்டு இருப்பீர்கள்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு

  31. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். நீங்களனுப்பிய இர்ண்டு தகவல்கள் ஜிமெயிலில் வேறு இடத்தில் இருந்தது primary, social,என்று போய் விட்டது அதை இப்போது தன் பார்த்தேன். உங்களுக்கு மிகவும் நன்றி.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    கணினி பழக்கமானது பெரிய கதை தான். உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்., உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.என் பேத்திக்கு வழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.நீங்கள் சொல்வது உண்மை தான், கணினி மூலம் கற்றதும், பெற்றதும் ஏராளம் தான். நானும் எப்போதும் பெங்களூர் சந்திப்பை நினைத்துக் கொள்வேன். உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் நாங்கள் 18 ம் தேதி இரவு மூன்று மணிக்கு பெங்களூரில் தான் விமானம் ஏறினோம். மயிலாடுதுறையிலிருந்து 7 மணிக்கு உங்கள் ஊர் வந்தோம். அன்று நல்ல மழை உங்கள் ஊரில்.
    விமானநிலையம் அழைத்து செல்ல மகனின் நண்பர் வந்தார. உங்களை நினைத்துக் கொண்டேன்.
    பேரன் வளர்ந்து விட்டான்.உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.விடுமுறையில் ரோஷ்ணியை அழைத்துக் கொண்டுவாருங்கள் எங்கள் வீட்டுக்கு.
    நானும் கயல்விழி மர்றும் எல்லோருக்கும் நன்றி சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். வலைத்தளம் மூலம் உங்கள் எல்லோர் அன்பையும் பெற முடிகிறதே! உங்கள் தொடர் அழைப்புக்கு நன்றி. உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
    நாங்கள் நலம். இங்கு மகன், மகள் பேரன் நலம்.
    பதிவில் சிலவரி விட்டு போய் இருந்ததை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
    //பாஸ் பண்ணிட்டீங்க, ஆனா வாங்கலைன்னு சொல்லிருக்கீங்களே? எதை - சான்றிதழையா?//

    தமிழ் டைப்மெஷின் வாங்குவதாய் இருந்தோம் ஆனால் ஏனோ வாங்கவில்லை. என்று வர வேண்டும்.
    அவர்கள் அப்போது முனைவர் பட்டத்திற்கு படித்துக் கொண்டு இருந்தார்கள் . வீட்டில் தமிழ் தட்டச்சு இருந்தால் நல்லது என்று நினைத்தார்கள். அவர்களுக்கு கல்லூரியில் தமிழ்த்துறை தலைவர் ஆனவுடன் கல்லூரியில் தட்டச்சு கொடுத்து விட்டதால் வாங்கவில்லை. அப்புறம் கணினி கொடுத்தார்கள் அதை இயக்க கணிணி ஒரு மாதம் கற்றார்கள்.

    //உறவுகளுக்கு முன்னிலை கொடுக்க வேண்டிய கட்டாயம். அதுவும் அவசியமல்லவா?//
    உண்மை, அவர்களும் மிக முக்கியம் இல்லையா!

    பிள்ளைகள் ஊரிலிருந்து வந்தால் உறவினர் வீடுகளுக்கு போகவே நேரம் சரியாக இருக்கும் திரும்பி பார்ப்பதற்குள் ஊருக்கு போகும் நாள் வந்து விடும்.
    லக்ஷ்மி அக்கா நலம் என்றும், அவர்கள் வீட்டில் உறவினர்கள் வருகை என்றும் அவர்களுடன் மகிழ்வாய் இருக்கிறார்கள் என்றார்கள் அமைதிச்சாரல்.
    எனக்கு ஆரம்பத்தில் வந்து பின்னூட்டம் கொடுத்து உற்சாகப்படுத்திய நிறைய பேர் இப்போது எழுதுவதே இல்லை நீங்கள் சொல்வது போல் வேறு கடமைகளில் இருக்கிறார்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  37. வாங்க நிலாமகள், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் நானும் சிறு வயதிலிருந்து ஏதோ கற்றுக் கொண்டே இருக்கிறேன். ஆனால் விடா முயற்சி இல்லை அது தான் எல்லா படிப்பும் பாதி பாதி. புதிதாக படிக்கும் போது அது இனிமையான அனுபவம் தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    கபீரன்பன் அவர்கள் பதிவைப்பற்றி எழுதும் போது கபீரன்பன் வலைத்தளம் மூலம் தான் உங்கள் வலைத்தளம் நான் வந்தது. நீங்கள் என் வலைத்தளம் வந்தது. உங்கள் பின்னூட்டங்களும் நன்றாக எழுத வேண்டும் என்ற ஆசையை கொடுப்பது.

    இங்குள்ள நூலகம் நன்றாக இருக்கிறது.
    அப்பாதுரை சார் அங்கு வந்து இருக்கிறார்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  39. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன். கற்பது தவறில்லை எந்த வயதிலும் கற்கலாம் தான்.என் நினைவுகளை பகிர்ந்து கொள்ள அழைத்த ஆதிக்கு நன்றி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் என் பதிவுகளுக்கு ஆரம்பத்தில் வந்து உற்சாகம் ஊட்டியவர்களில் சிலர் எல்லாம் வேவ்வேறு பணி நிமித்தமாய் இப்போது வலைப் பக்கமே வராமல் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் எல்லாம் வந்து பின்னூட்டம், தமிழ்மண ஓட்டு எல்லாம் தருவது மகிழ்ச்சியே!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வாங்க பாலசுப்பிரமணியன் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான் பேரக்குழந்தைகள் தாத்தாசாமிகள் தான்.நானும் என் பேரனுடன் வீ கேம், கார் ரேஸ் விளையாடுகிறேன், கலரிங் செய்வது கதை, பாட்டு, எல்லாம் கேட்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. எப்படியோ ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நாமும் இப்போது ‘தளர் நடை’ போடுகிறோம். நன்றாக அர்த்தமுள்ள நடைதான்.

    அரசு சார் அவருடைய படங்களுக்காக மட்டுமாவது பதிவு ஆரம்பிக்க வேண்டுமென்ற என் வேண்டுகோளை உங்கள் மூலம் சமர்ப்பிக்கிறேன். அழகான படங்கள் எல்லோருக்கும் தெரிய வந்தால் மகிழ்வு தானே!

    பதிலளிநீக்கு
  43. வாங்க தருமி சார். வாழ்க வளமுடன்.நீங்கள் சொல்வது போல் தளர்நடை இப்போது அர்த்தமுள்ள நடையாக மாறிவருவது உண்மைதான். குழந்தைகள் பக்கத்தில் இல்லாத போது மனதுக்கு தெம்பு அளிப்பது கணினி தானே!

    அரசு சார் என் ஒரு சில பதிவுகளுக்கு ஓவியம் வரைந்து தந்து இருக்குறார்கள்.பணி ஓய்வு பெற்றபின்னும் கல்லூரியில் வேலை பார்க்கிறார்கள், உள்ளூரில் கோயில் சார்ப்பாய் வரும் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருக்கிறார்கள். கோவில்களில் தொடர் சொற்பொழிவுகள் செய்வார்கள் (சேவையாக)அவர்களுக்கு நேரம் போய் விடுகிறது. நானும் குழந்தைகளும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் வலைத்தளம் ஆரம்பிக்க சொல்லி. நீங்கள் சொன்னதை சொல்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. உங்கள் அனுபவங்களை விரிவாகத் தந்துள்ளீர்கள். ரசனை.

    பதிவுலகின் அன்புள்ளங்களையும் நன்றிகூறியது அருமை.

    பேரனுக்கு வாழ்த்துகள். இனிய நாட்கள் மகிழ்ச்சியாக மலர்ந்து மணம்வீசட்டும். பின்பு எங்களுடன் பகிர்ந்திடுங்கள். காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  45. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் தொடர்ந்து வந்து அருமையான் பின்னூட்டங்கள் தந்து உற்சாகப் படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர்.
    பேரனுக்கு உங்கள் வாழ்த்துகள் மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. அருமையான பகிர்வு.விடுமுறை இனிதாக அமைய என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  47. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.
    வாசிக்க சுவையாக உள்ளது.
    இனிய வாழ்த்து.
    எனக்கும் எழுத அழைப்பு வந்துள்ளது.
    இன்னும் எழுதவில்லை. விரைவில் எழுதுவேன்.
    பேரன் நியூயெர்சி அனுபவங்கள் சுவையாக அமையட்டும்.
    இறையாசி நிறையட்டும்.

    கடிதத்திற்கு நன்றி. மிக மகிழ்ந்தேன்.
    வேதா .இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் கோமதி.
    நான் தான் ரொம்பவும் தாமதமாக வநிதிருக்கிறேன்.
    இளையவர்கள் தான் நமக்கு குருவாக அமைகிறார்கள். எனக்கும் இதே கதைதான்.
    நூலகம் பார்க்க ரம்மியமாக இருக்கிறது.
    பேரனுடன் இனிமையாக பொழுது கழிந்து கொண்டிருக்கும்.
    பதிவுலகம் தந்த தோழியான உங்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  49. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  50. வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன். ஊருக்கு போய் இருப்பீர்கல் போலும் அதனால் தான் வரவில்லை என்று நினைத்தேன். நூலகம் மிக ரம்மியமாய் தான் இருக்கிறது. பேரனுடன் இனிமையாக பொழுது கழிந்து கொண்டு இருக்கிறது.
    உங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்களுக்கு நன்றி. நட்பு வாழ்க! வளர்க!
    என்றும் அன்பான நட்பு தொடர வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க வேதா இலங்கதிலகம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கணினி அனுபவம் படித்தேன், அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  52. உங்களுடைய கணினி அனுபவங்களை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் வாழ்நாள் முழுமைக்கும் ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கின்றன. நாம் காணும் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் நமக்கு ஏதாவது கற்றுகொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். மிக அழகாகச் சொன்னீர்கள். பகிர்வுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  53. வாங்க கீதமஞ்சரி, வாழ்க வளமுடன், நீங்கள் சொல்வது உண்மை. நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் வாழ்நாள் முழுமைக்கும் ஏதாவது இருந்து கொண்டே தான் இருக்கிறது.
    அருமையான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  54. நான்கு வயதில் ஐ பேட். ஆச்சரியம் தான்.

    பதிலளிநீக்கு
  55. வாங்க ஜோதிஜி , வாழ்க வளமுடன்.
    இப்போது உள்ள குழந்தைகள் எல்லாம் நிறைய விஷயங்கள் தெரிந்து இருக்கிறார்கள்.
    காலம் அது போல் இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  56. உங்கள் கணினி அனுபவம் மிக அருமை.
    யாரையும் மறக்காமல் பெயரையும் சேர்த்து எழுதி இருக்கிறீர்கள்
    மிக அருமையான பகிர்வு கோமதி அக்கா
    நாமும் சந்திக்கனும் ஆனால் எப்போது வாய்ப்பு கிடைக்குமோ..

    பதிலளிநீக்கு
  57. இப்ப சமீபத்தில் இங்கு வந்த என் தங்கை மகன் 3 வயது அவரிடம் ஒரு கேம் விளையாட கற்று கொண்டேன்.
    சொல்லிகொடுத்துட்டு அவருக்கு மிக பெருமை..
    இப்படி இல்ல ஆண்டி இப்படி, நானும் ஓ அப்படியா , இன்னும் அவர் முகத்த பார்க்கனுமே..

    பதிலளிநீக்கு
  58. வாங்க ஜலீலா, வாழ்கவளமுடன்.
    எப்படி மறக்க முடியும் ஜலீலா
    வலைத்தளம் தந்த உறவுகளை!

    இறைவன் அருளால் வாய்ப்பு கிடைக்கும் போது சந்திப்போம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  59. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  60. எத்தனை தான் ருசியான உணவென்றாலும் வயிறு நிறைந்துவிட்டால் நம்மால் உண்ண முடியாது...

    ஆனால் படிக்கும் விஷயம் அப்படி இல்லை கண்டிப்பா.. கட்டுரை ரொம்ப பெரிதாகிவிட்டதுன்னு வை.கோ அண்ணாக்கு எழுதி இருக்கீங்க கோமதிம்மா..

    ஆனால் நான் ரசித்து வாசித்தேன்... ரசித்து ரசனையுடன் பகிர்ந்த பகிர்வல்லவா? அப்ப எப்படி இருக்கும் ருசிக்கவும் ரசிக்கவும் தந்த பகிர்வு அற்புதமாக இருந்தது..

    படிச்சுட்டே வந்தேன்..அடடா முடிஞ்சுட்டுதே என்று தான் எனக்கு தோணித்து.. பெரிய கட்டுரைன்னு நீங்க சொன்னதை அப்புறம் தான் படிச்சேன்..

    பார்க்கும் படிக்கும் கண்ணோட்டத்தை பொறுத்து தான் எல்லாமே..

    ஈடுபாட்டோடு எந்த ஒரு செயலையும் ஆரம்பித்துவிட்டால் அதன் பலன் கண்டிப்பாக அற்புதமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் உங்க பகிர்வு கோமதிம்மா..

    இப்ப இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் இந்தியாவில்.... பிள்ளைகள் வெளிநாட்டில்.. பிள்ளைகளை விட்டு பிரிய நினைக்காத மனம் தினமும் பிள்ளைகளை பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டு பேசிக்கொண்டு ஒவ்வொரு நாளும் போவதேதெரியாத அளவு சந்தோஷமாக போகும்.. எப்படின்னா இப்படித்தான் நீங்க சொன்னது போலவே தான்..

    ஆனால் பிள்ளைகளை வெளிநாட்டில் தொடர்புக்கொள்ள கணிணிப்பற்றி தெரிந்திருந்தால் மட்டும் போதாது.. அதை பயன்பாட்டில் வைத்திருக்கவேண்டும்..அது ரொம்ப முக்கியம்...

    உங்க பகிர்வு அதைத்தான் சொன்னது..

    குழந்தையாய் ஆரம்பித்த நடை.. இதோ இன்று கம்பீர நடைப்போட்டு செல்கிறதே நல்லவைகளை அனுபவங்களை அறிவுரைகளை கதைகளை எல்லாம் சொல்லிக்கொண்டு....

    பிள்ளைகளிடம் இருந்து குழந்தைகளிடம் இருந்து இப்ப பேரக்குழந்தைகளிடம் இருந்து கற்க ஆரம்பித்துவிட்டோம்.. இதைச்சொல்லும்போதே நமக்குள் தான் எத்தனை பூரிப்பு. எத்தனை சந்தோஷம்...

    விருதுகள் வழங்கிய வை.கோ அண்ணா, ஜலீலாம்மா இன்னும் பலர், பின்னூட்டம் பதித்து ஊக்குவித்த தனபாலன் சார் இன்னும் பலர், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய பலர், இதழ்களில் கூட கட்டுரை பிரசித்து பிரசித்தமாகி...படங்கள் தான் எடுத்ததை உங்களுக்கு கொடுத்த ராமலஷ்மிம்மா..

    இன்னும் இன்னும் இன்னும் உங்க சாதனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கவேண்டும் கோமதிம்மா..

    ரசித்து வாசித்தேன்...

    திருமதி பக்கங்கள் என்ற உங்க வலைப்பூவுக்கு பெயர் வைத்த மருமகள், மகள், மகன், கணவர் பேரக்குழந்தைகள் எல்லோருக்குமே என் மனம் நிறைந்த நன்றிகள்... இப்படி ஒரு அற்புதமான எழுத்தாளரை அறிமுகப்படுத்தியதற்கு.. நீங்க தான்பா...

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு கோமதிம்மா..

    பதிலளிநீக்கு
  61. வாங்க மஞ்சு, வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பான பின்னூட்டம் படித்து கண்களில் நீர் துளிர்த்து விட்டது.

    எலும்பு தேய்மானம், மருத்துவர் கணினியில் அதிகம் உட்கார கூடாது என்று சொல்லியும் இவ்வளவு அழகாய் விரிவான பின்னூட்டம் அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் உடல் நலம் பெற்று நிறைய எழுத வேண்டும்.


    புரட்டாசி மாதமும், பேபி அக்காவிற்கு முதலில் வந்து அருமையான விரிவான பின்னூட்டம் கொடுத்ததையும், அதை வலைச்சரத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்டதையும் மறக்க முடியாது.
    அன்பின் மிகுதியால் என்னை அற்புதமான எழுத்தாளர் என்று சொல்வது புரிகிறது.


    குடும்பம் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னால் எழுத வந்து இருக்க முடியாது.

    //பிள்ளைகளை வெளிநாட்டில் தொடர்புக்கொள்ள கணிணிப்பற்றி தெரிந்திருந்தால் மட்டும் போதாது.. அதை பயன்பாட்டில் வைத்திருக்கவேண்டும்..அது ரொம்ப முக்கியம்...//

    உண்மைதான். நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் போக தாமதம் செய்வோம் கணினி இயங்கவில்லை என்றால் உடனே கணினி சரி செய்பவரை அழைத்து விடுவோம், அவரும் எங்கள் பிள்ளை மாதிரி எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உடனே வந்து சரி செய்து தருவார்.

    நீங்கள் குழந்தைகளுடன் பேச வேண்டுமே! அது ஒன்று தானே! உங்களுக்கு மகிழ்ச்சியை தருவது என்று சொல்வார். அவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.

    வாழ்க்கை என்றால் என்ன ? என்று பேரனிடம் கேட்டால் வாழ்க்கை என்றால் தேங்யூ என்கிறான்.

    வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லிக் கொண்டு இருப்பது தானே மகிழ்ச்சி.

    இந்த அன்பான வலை உலக நண்பர்களை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

    உங்கள் அன்பான வருகைக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி மஞ்சு.

    பதிலளிநீக்கு
  62. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    தினம் தெய்வீக பதிவுகளை தரும் உங்களுக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.
    உங்கள் இறைசேவை வாழ்க!

    பதிலளிநீக்கு
  63. //புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு! (கபீர் பற்றி 10 கேள்விகள்) வினாடி வினா விளையாட்டு நடத்தினார். //

    இது எனக்குத் தெரியாது!:)))) ஒருவேளை எங்காவது ஊருக்குப் போயிருந்திருப்பேன். தாமதமான வாழ்த்துகள் பரிசு பெற்றதுக்கு. உண்மையிலேயே கணினி மூலம் பெற்ற உறவுகளின் அன்பு மிக மிக ஆழமாகத் தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  64. வாங்க கீதா, வாழ்க வளமுடன்.
    புதிரா? புனிதமா? என்னும் வினாடி வினா விளையாட்டில் நீங்கள் கலந்து கொண்டு இருந்தால் முதல் பரிசை தட்டி சென்று இருப்பீர்கள்.கணினி டைப் செய்யும் வேகம் அப்படி அல்லவா?
    கணினி மூலம் பெற்ற உறவுகளின் அன்பு மிக் மிக ஆழமாகத் தான் உள்ளது நீங்கள் சொல்வது போல். நம் பதிவில் அவர்கள் பின்னூட்டம் காணவில்லை என்றால் அவர்கள் ஏன் வரவில்லை என்ன காரணம் உடம்பு சரியில்லையோ, ஊருக்கு போய் இருப்பார்களோ!என்ற நினைவுகள் வந்து மனதை அலைக்கழிக்கிறது.

    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு