திங்கள், 11 ஏப்ரல், 2011

முன்னேஸ்வரம் திருக்கோயில்

Munneswaram


இருப்பிடம்
இத்தலம் கொழும்புவிலிருந்து 82 கி.மீ தொலைவில் உள்ளது. கொழும்புவிலிருந்து வடக்கே A3 நெடுஞ்சாலையில் சிலாபம் (chilaw)சென்று , கிழக்கில் திரும்பி 7 கி.மீ சென்றால் இக்கோயிலை அடையலாம். புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. சிலாபத்தில் இருந்து இங்கு செல்ல நகரப்பேருந்து உள்ளது.

தலச்சிறப்பு

இலங்கையில் சிறப்புப் பெற்ற சிவன்கோயில் ஐந்து. அவை ,முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டேஸ்வரம் ஆகியவை. இவற்றில் முன்னதாகப் போற்றக்கூடியதாக முன்னேஸ்வரம் இருக்கிறது.

புராணவரலாறு:

இலங்கையிலுள்ள புராதன சிவாலயங்களுள் காலத்தால் முற்பட்ட, தொன்மைமிக்க சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது, இந்த முன்னேசுவரம் திருக்கோயில். பிரம்மாவால் உலகம் படைக்கப்பட்டபோதே இவ்வாலயமும் படைக்கப்பட்டது என்று புராணம் கூறுகிறது.. ‘ஈழத்துத் திருக்கோயில்கள்-வரலாறும் மரபும் ’ என்றநூலிலிருந்து சில முக்கிய குறிப்புகளை சேகரித்து எங்களை அழைத்து சென்ற மனோகர் டிராவல்ஸ்க்காரர் கொடுத்து விட்டார் .இல்லை யென்றால் நமக்கு தெரியாது.

முன்னேசுவரம் குபேரன், இராவணன் இராமபிரான் ஆகியோரால் வழிபடப்பட்டதாய் வரலாறு சொல்கிறது. எனவே கி.மு. 4400 ஆண்டுகட்கு முற்பட்டதாகவே இந்தக் கோயில் இருக்க வேண்டும். இராம, இராவண யுத்தத்தோடு முன்னேஸ்வரம் தொடர்புபட்டுள்ளது.

இலங்கை வரலாற்றிலும் முன்னேஸ்வரம் சொல்லப்பட்டுள்ளது

//கலிங்க தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு, இலங்கை வந்த விஜயன் வருகையுடன் இலங்கைச் சரித்திரம் ஆரம்பமாவதாக இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி நூலாகிய மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது. கி.மு. 543 ஆம் ஆண்டு, கெளதமபுத்தர் நிர்வாண தசையடைநத நாளில் இலங்கைக்கு வந்ததாக மஹாவம்சம் குறிப்பிட்டுள்ளது. விஜயன் இலங்கைக்கு வந்து இலங்கையின் ஆதிகுடிகளான நாகர், இயக்கரை வென்று தனது ஆட்சியை நிலைப்படுத்திய காலத்தில் சைவசமயத்தின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவனாகக் காணப்பட்டுள்ளான். //

//விஜயன் இலங்கையின் வடகரையில், கீரிமலைச்சாரலிலே நகுலேச்சுரமென அழைக்கப்பட்ட தம்பலேசுவரம் என்னும் சைவாலயத்தையும், தென்கரையிலுள்ள தெயவந் துறையிலே சந்திரசேகரன் கோயிலையும் , கதிர்காமமாகிய கதிரமலையிலே முருகவேளூக்கோர் ஆலயத்தையும் கட்டுவித்ததுமன்றி, மாந்தோட்டத்திற் சிதைந்திருந்த திருக்கேதீஸ்வரர் கோயிற் திருப்பணியையுந் திருத்தமுறச் செய்வித்தான். திருகேதீச்சரமும் சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரமும் விஜயனுக்கு முன்னுள்ள புராதன ஆலயங்கள். இராவண சம்மாரத்தின் பின் இராமபிரான் முன்னேஸ்வரத்திலிறங்கி அங்குறையும் பெருமானை வணங்கிச் சென்றாரெனச் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூல் கூறுகிறது.//

//ஆலயமூர்த்தியின் பெயர் முன்னைநாதர் என்றும், அம்பாளின் திருநாமம் வடிவழகாம்பிகை என்றும் அழகிய தமிழ்ப்பெயராகக் காணப்படுவது இதன் பழமைக்கு எடுத்துக்காட்டு. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அருள்வாக்கை வெளிப்படுத்தும் அற்புதக் கோயிலாக முன்னேஸ்வரம் காண்ப்படுகின்றது. ஆதியில் தமிழர்கள் பரந்து வாழ்ந்த பிரதேசமாகக் காணப்பட்டது. தற்காலத்தில் பல்வேறு இனத்தவர்களும் வாழும் நிலப்பரப்பாய் உள்ளது.//

//இஸ்லாமியர், கிறிஸ்தவர், பெள்த்தர்கள் இவ் ஆலயத்தில்வந்துவழிபடுகின்றனர். திருவிழாவின் போது இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தின் அடிப்படையில் எல்லா மதத்தினரயும் வரவேற்கும் மரபு, இக்கோயிலின் மரபாகும்.. உற்சவ காலங்களில் கோயிலுக்கெனக் கொடுக்கப்படும் பொருட்களைப் பொறுப்பேற்பது,பிரசாதங்களை
கட்டளைக்காரர்களுக்குக் கொடுப்பது போன்ற சிலபணிகளை எல்லா மதத்தவர்களும் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். இப்படிப் பொறுப்பேற்றுககொள்ளும் சகல இனத்தவர்களுக்கும் மரியாதை செய்யப்படும்.இந்த நிகழ்ச்சி சமரச சன்மார்க்க உணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகக் காணப்படுகிறது//


திருக்கோயில் அமைப்பு விவரம்:









கிழக்கு நோக்கிய கோயில். இராசகோபுரம் இல்லை.கோவிலுக்கு எதிரே திருக்குளம் உள்ளது. அங்கு பிள்ளையார் திருவுருவம் உள்ளது. கோயிலுக்கு வடக்கில் ஒரு வாசல் உள்ளது.

கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம் உள்ளது. வலது புறம் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் சந்நிதிகள் உள்ளன.முன்னேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியும், வடிவாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளன. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,சோமாஸ்கந்தர், பைரவர், மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர், நடராஜர் நவக்கிரகம், பைரவர் சந்நிதிகள் உள்ளன. அறுபத்துமூவர் ஐம்பொன் சிலைகள் பளபளப்பாகவும்.அழகிய புதிய பலவண்ணப் பட்டாடை உடுத்தியும் உள்ளன.

சிறுத்தொண்டநாயனார் , தன்னுடைய தலையில் ஒரு தலையை( சீராளன்) தாங்கி நின்றுகொண்டிருக்கிறார்.

லிங்கோத்பவர் சந்நிதி சிறப்புடையது. போர்ச்சுக்கீசியர்கள் இக்கோயிலைத் தாக்கி அழித்தபோது தப்பிய உருவச்சிலை இது என்கிறார்கள்






கோயிலுக்கு வெளியே வடகிழக்கில் 4 தேர்கள் உள்ளன. தேர்கள் நிற்க உயரமான மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது.




தெற்குத் தேர்வீதி அருகில் அருச்சனைப் பழக்கடைகள் நிறைய உள்ளன. பல வகையான பழங்களைத் தட்டில் வைத்து தருகிறார்கள். நம்மூரில் வீட்டு விஷேடங்களில் வெற்றிலைத் தட்டில் பழங்கள் தேங்காய் வைப்பது போல்
தட்டில் பெரிய பெரிய வெற்றிலைகள் வைத்து (பாக்கு கிடையாது) நடுவில் எல்லாப்பழங்களையும் பாதியாகவோ அல்லது முழுதாகவோ நம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப வைத்துக் கொடுக்கிறார்கள். நம் ஊரில் தேங்காய் வெற்றிலைப் பாக்கு, பழம் வைத்து அர்ச்சனை செய்வோம். பாக்கு இல்லை என்றால் நல்லதல்ல என்பார்கள் அங்கு ஏன் பாக்கு வைப்பதில்லை எனத்தெரியவில்லை.


நாங்கள் சென்ற சமயம் உச்சிக்கால பூசைகள் நடந்துகொண்டிருந்தன. பூசை முடிந்ததும் வெற்றிலையில் விபூதி பிரசாதம் கொடுத்தார்கள்.

தொடர்பு முகவரி:
எஸ். வெங்கடகிருஷ்ண ஐயர், முன்னேஸ்வர தேவஸ்தானம், சிலாபம்
போன் 032-2223341, 0718371655

நடராஜர் மடம்

தெற்கு வீதியில் ஒரு நடராஜர் மடம் இருக்கிறது அதில் திருச்சியிலிருந்து அங்கு குடும்பத்துடன் இருக்கும் ஒரு அடியார் கவனித்து கொள்கிறார். அங்கு நடராஜர் படம் வைத்து வழிபடுகிறார்கள். நாங்கள் அங்கு சென்ற சமயம் அங்கு இருந்த குழந்தை பூஜை செய்தாள். நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்றெல்லாம் அன்பாய் வினவினார்கள்.




மதியவேளை உணவு, கோயில் குருக்கள், தான் நடத்தும் ஒட்டலில் ஏற்பாடு செய்து தந்தார். தெற்குத் தேர் வீதியில் உணவகம் இருந்தது. வாழை இலையில் உணவு படைத்தார். (மற்ற நாட்களில் மதிய உணவு சாப்பிட்ட ஓட்டல்களில் வாழை இலை இல்லை. எவர்சில்வர் தட்டில், மேலே பட்டர் பேப்பர் போட்டு சாப்பாடு வைக்கிறார்கள்.) அவர் சாப்பாடு தயார் செய்யும் வரை, கோவிலில் பணிபுரியும் ஒரு ஐயர் வீட்டில் தங்கி இளைப்பாறினோம்.. அவர் எங்களுடன் சென்னையிலிருந்து வந்த ஒருவருக்குத் தெரிந்தவர்கள். அவர்கள் வீட்டில் ஒரு வயது முதிர்ந்த அம்மா இருந்தார்கள். அவர் நன்கு பேசினார். வெகு காலமாய் அங்கு தான் இருப்பதாய் சொன்னார்கள். உறவினர்கள் சென்னையில் இருக்கிறார்கள் விஷேடம் என்றால் சென்னைக்கு வருவோம் என்றார்கள். அவர்கள் மருமகள் நன்கு உபசரித்தார்கள். செவ்இளனீர் வாங்கி வந்து கொடுத்தார்கள். விடை பெறும் போது வெற்றிலை பாக்கு பூ பழம் தட்சினை எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள் அடிக்கடி வாங்க என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்தது அடிக்கடி வரும் நிலையிலா ஊர் இருக்கு என்று நினைத்து கொண்டேன்.அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு
புறப்பட்டோம்.

முன்னேஸ்வரத்தை ஒட்டியுள்ள பகுதிகள் பறவைகளின் சரணாலயங்களாகக் காணப்படுகின்றன






முன்னேஸ்வரத்தை அடுத்து மறுநாள் நாங்கள் சென்ற தலம் திருக்கேதீஸ்வரம்.அதை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

24 கருத்துகள்:

  1. அங்கும் இந்தளவில் கோவில்கள் இருக்கின்றனவா ?
    கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  2. அவர் சாப்பாடு தயார் செய்யும் வரை, கோவிலில் பணிபுரியும் ஒரு ஐயர் வீட்டில் தங்கி இளைப்பாறினோம்.. அவர் எங்களுடன் சென்னையிலிருந்து வந்த ஒருவருக்குத் தெரிந்தவர்கள். அவர்கள் வீட்டில் ஒரு வயது முதிர்ந்த அம்மா இருந்தார்கள். அவர் நன்கு பேசினார். வெகு காலமாய் அங்கு தான் இருப்பதாய் சொன்னார்கள். உறவினர்கள் சென்னையில் இருக்கிறார்கள் விஷேடம் என்றால் சென்னைக்கு வருவோம் என்றார்கள். அவர்கள் மருமகள் நன்கு உபசரித்தார்கள். செவ்இளனீர் வாங்கி வந்து கொடுத்தார்கள். விடை பெறும் போது வெற்றிலை பாக்கு பூ பழம் தட்சினை எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள் அடிக்கடி வாங்க என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்தது அடிக்கடி வரும் நிலையிலா ஊர் இருக்கு என்று நினைத்து கொண்டேன்.அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு
    புறப்பட்டோம்.

    முன்னேஸ்வரத்தை ஒட்டியுள்ள பகுதிகள் பறவைகளின் சரணாலயங்களாகக் காணப்படுகின்றன


    .... அழகையும் பரிவையும் பக்தியையும் கொட்டி தந்த பதிவு. அருமை.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வும்மா! புகைப்படங்களும் உங்கள் கட்டுரையும் நன்று.

    பதிலளிநீக்கு
  4. //அடிக்கடி வாங்க என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்தது அடிக்கடி வரும் நிலையிலா ஊர் இருக்கு என்று நினைத்து கொண்டேன்.// :(

    அழகான கோயில், அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  5. விளக்கமான பகிர்வு. படங்கள் யாவும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. இந்தப் பதிவும் மனதை மிகவும் கவர்ந்தது. புகைப்படங்கள் பளிச். அவற்றைப் பார்க்கப் பார்க்க இம்மாதிரியான திருத்தலங்களைப் பார்க்காதவரும் பார்க்கும் பாக்கியம் கிடைத்த உணர்வேற்படுகிறது.
    விலாவரியான தங்கள் வருணனை வழக்கம் போலச் சிறப்பு.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. முன்னேஸ்வரம் படங்களுடன் நல்ல பதிவு.

    இனிய சித்திரை புதுவருட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. பின்னூட்டம் போட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

    வலைத் தொடர்பு 10 நாட்களாய் இல்லை. அதனால் உடன் பதில் அளிக்க முடியவில்லை.

    இன்று தான் சரியானது.

    கோமதி அரசு.

    பதிலளிநீக்கு
  9. மாதவன், கோவில் ஆராதனைகள் மிக சிறப்பாக நடக்கிறது அங்கு.

    இறைவன் அருள் பூரணமாய் அங்கு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. செந்தில் குமார்,, ஆன்மீக பதிவுதான்.
    உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சித்ரா, ஆழ்ந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி மாதேவி.

    உங்களுக்கும் சித்திரை புது வருட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வலையுலக அன்பர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

    வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று மனநிறைவாய் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. நிறைய கோவில்களுக்குச் சென்றிருபீர்கள் போல?
    //முன்னேசுவரம் திருக்கோயில். பிரம்மாவால் உலகம் படைக்கப்பட்டபோதே இவ்வாலயமும் படைக்கப்பட்டது என்று புராணம் கூறுகிறது//
    இவ்வளவு பழமையான கோவிலை உங்கள் மூலமாக நாங்களும் தெரிந்து கொண்டோம்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ஜிஜி, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு