ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம். இப்படி எல்லாம் முன்னோர்கள் கூறுவார்கள். நம் மக்கள் எந்த ஊருக்கு சென்றாலும் நம் இறைவனை
அங்கு குடியேற்றி வழிபட்டு இறைவனின் அருளைப் பெற்று மகிழ்கிறார்கள்.
//குந்தி நடந்து குனிந்தொரு கை கோலூன்றி
நொந்து இருமி ஏங்கி நுரைத்தேறி-வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.//
உடம்பில் நல்ல பலம் இருக்கும் போதே கோவிலை வலம் வந்துவிட வேண்டும் என்பார்கள் அம்மா. அப்பாவுக்கு எந்த ஊர் மாற்றல் ஆனாலும் அந்த ஊரில் உள்ள கோவில்களை தரிசித்து விடுவார்கள்.எங்களையும் கூட்டிப் போய் எங்களுக்கும் அது பழக்கம் ஆகிவிட்டது. என் கணவர் அவர்களும் அந்த மாதிரி ஆன்மீக குடும்பத்தில் வந்ததால் எப்போதும் எந்த ஊர் போனாலும் அந்த ஊர் சிறப்புத் தலங்களைப் பார்த்து விடுவோம்.
அமெரிக்காவிறகு மகனின் வீட்டுக்கு போன போது கேட்ட முதல் கேள்வி பக்கத்தில் கோவில் இருக்கா என்பது தான்.ஒரு கோவில் இருக்கு 30 நிமிடத்தில் சென்று விடலாம் என்றார். பிறகு அங்கு இருந்த 75 நாட்களில் சனி, ஞாயிறு நாட்களில் முக்கியமான பார்க்க வேண்டிய இடங்களுக்கும் கோவில்களுக்கும் சென்றது சிறப்பான தருணங்கள். ஒவ்வொன்றும் நினைவில் வைத்து மகிழக் கிடைத்த ஒப்பற்ற தருணங்கள். ஊருக்கு போய் உறவினர்களுடன் பண்டிகை கொண்டாட முடியாதவர்கள் இங்கு வேவ்வேறு மொழி பேசினாலும் ஒரே குடும்பம் போல கோவில்களில் தங்கள் பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். பண்டிகைகளை அதே நாளில் கொண்டாட முடியாமல் ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்கிறார்கள்.எல்லோருக்கும் தங்கள் உறவினர்களுடன் கொண்டாடிய மகிழ்ச்சி கிடைக்கிறது.
நாங்கள் அங்கு சென்ற திருக்கோயில்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.
ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில்,ஸ்வீடிஸ்பரோ.
நாங்கள் அங்கு இருக்கும் போது சித்திரை விசு பண்டிகைக்கு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் போனோம். தமிழ் வருடப்பிறப்பை மகன் மருமகள் பேரனுடன் போய் தரிசனம் செய்து வந்தோம். இந்த ராஜகணபதி நல்ல அலங்காரத்தில் கண்ணைக் கவர்ந்தார். நடு நாயகமாய் ஸ்ரீ ராஜ கணபதியும், சஹஸ்ரலிங்கேஸ்வரர் வலது புறமும், யோகதக்ஷ்ணாமூர்த்தி இடது புறமும் வெள்ளி கவசத்தில் அழகாய் அருள்பாலித்தார்கள்.
இக் கோயில் ஸ்வீடிஸ்பரோவில் இருக்கிறது. இங்கு சஹஸ்ரலிங்கேஸ்வரர், ஸ்கஸ்ராம்பிகா, ஸ்வாமிநாதஸ்வாமி, யோகதக்ஷ்ணாமூர்த்தி ஆகியோருக்குச் சன்னதிகள் உள்ளன. பஞ்சலோகத்தில் நவகிரகங்களுக்கு சிலைகள் உள்ளன.
பிரதோஷம், சத்யநாராயணபூஜை, சங்கடஹரசதுர்த்தி, வைகாசி விசாகம் எல்லாம் சிறப்பாய் நடக்குமாம். நாங்கள் தமிழ் வருடப்பிறப்புக்கு போனபின் வைகாசி விசாகத்திறகுப் போனோம். அன்று என் பேரனுக்கு அன்னம் ஊட்டினோம். என் மருமகளின் தோழியின் கணவர் காவடி எடுத்தார். நிறைய அன்பர்கள் பால்குடம், காவடி எல்லாம் எடுத்தார்கள். முருகன் அழகாய் கோவிலைச் சுற்றி பவனி வந்தார். முருகனுக்கு அபிஷேகம் ஆகும் போது முருகன் பாடல் பாடதெரிந்தவர்கள் எல்லாம் பாடலாம் என்றார்கள் எனக்கு பிடித்த முத்தான முத்துக் குமாரா முருகைய்யா வா வா என்ற பாடலை பாடினேன். அபிஷேகம் செய்வது போல் வரிகள் வ்ரும் அந்த பாடலில் காரைக்குடி பெண் ஒருவர் பாராட்டினார்கள். என் அம்மாவும் இந்தபாட்டு பாடுவார்கள் என்று அம்மாவை நினைவுகூர்ந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.
பூஜை முடிந்தவுடன் சில பொருட்களை ஏலம் விட்டார்கள். அதில் வரும் பணம் கோவில் பராம்ரிப்புக்கு என்றார்கள். ஆண் குழந்தை உடை, பெண்குழந்தை உடை, சந்தனம், லட்சுமி படம் போன்றவைகள் ஏலம் விடப்பட்டன. குழந்தை இல்லா தம்பதியர் குழந்தை உடைகளை ஏலத்தில் எடுத்தால் அடுத்த விசாகத்தில் குழந்தை பிறக்கும் என்றார்கள். அதற்கு சான்றாய் ஒரு அம்மா பேசினார்கள், எனமகளுக்கு குழந்தை பிறக்க போனவ்ருடம் ஏலத்தில் உடை எடுத்தேன். இந்த வருடம் பேரன் பிறந்து விட்டான் என்று. மகள் பேரனுடன் முருகனுக்கு நன்றி செலுத்த வந்து இருந்தார்கள். நகரத்தார் மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலிருந்து பிரசாதங்கள் எடுத்து வந்து இருந்தார்கள் அதை அனைவரும் உண்டு மகிழ்ந்தோம். நகரத்தார் பெருமக்களின் வள்ளல் தனமை, விருந்து உபசரிப்பு எல்லாம் எல்லோரும் அறிந்ததே.
கோவிலை திரு. குமாரசுவாமி தீட்சிதர் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். திருமணஞ்சேரியை சேர்ந்த குருக்கள்(தற்போது அவரது குடும்பம் மாயவரத்தில் உள்ளது.)திரு. கார்த்திக் நடராஜன் எனற குருக்கள் அங்கு இருக்கிறார். திருபல்லைவனத்திலிருந்து திரு. ஜெகதீசன் நந்தகுமார் என்ற குருக்கள் இருக்கிறார்.
திருக்கோயில் முகவரி 774, paulsboro road, swedesboro Nj- 08085 ph: 703-815-4850.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடம்
வித்யா டெம்பிள் சொசைட்டி, ரஷ்.
இங்கு சிவலிங்க மூர்த்தி, தேவி, கணேஷ்மூர்த்தி, நடராஜர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.
இங்கு சிவராத்திரி, சாரதா நவராத்திரி, குருபூர்ணிமா, கணேஷ சதுர்த்தி, ஸகந்தசஷ்டி ஆகிய திருவிழாக்கள் சிறப்பாய் நடக்குமாம்.
நாங்கள் போன நேரம் உச்சிக் கால பூஜை முடிந்து எல்லோருக்கும் உணவு அளித்தார்கள்.
சாம்பார் சாதம், தயிர்சாதம், ஊறுகாய் கொடுத்தார்கள். கோயிலில் அமைதியும் அழகும் குடி கொண்டு இருந்தது. ஒரு ஓரத்தில் சதயநாராயண பூஜை கதை கேட்டுக் கொண்டு இருந்தார்கள் சில பெண்மணிகள்.
ஜெனிஸ்ஸி நதிக்கரையோரம் ரஷ் நகரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இருப்பிடம்: 6980/6070,east river road, rush,NY 14543
ph: 533-1970
ஸ்ரீ வெங்கடேஷ்வரா லோட்டஸ் டெம்பிள்,Fairfax.Virginia
இங்கு வெங்கடேசப்பெருமாள் -பிரதான தெய்வமாக அருள்பாலிக்கிறார்.ஸ்ரீதேவி,பூதேவியுடன் எழுந்தருளியிருக்கிறார். ராம் பரிவாரம், மகாலக்ஷ்மி தாயார், ஆண்டாள், கிருஷ்ணர், சுதர்சன ஆழ்வார் ஆகியோரின் திருவுருவங்கள் பஞ்சலோகத்தில் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 2003-ல் இருந்து பக்தர்களுக்கு அருள் தந்து வருகிறது.
இங்கு ஆண்டாள் திருக்கல்யாணம், நம்மாழ்வார் அவதார திருநட்சத்திர விழா ஆகியவை நடக்கினறன. நாங்கள் போனபோது நம்மாழ்வார் திருநட்சத்திர விழா நடந்து கொண்டு இருந்தது.’ ஸ்ரீராமானுஜர் நூற்று அந்தாதி’ பாடல்களைப் பாடிக்கொண்டு இருந்தார்கள்.
மாலையில் சாமி வீதிஉலா நடைபெறும் என்றார்கள். ஹனுமான் சாலீசா பாராயணம், ராமபஜனை முதலியன அப்போது நடைபெறும் என்றார்கள். அங்கு புளியோதரை ,பக்கோடா பிரசாதங்கள் விலைக்கு விற்றார்கள். வாங்கி கோவில் அருகிலில் இருந்த பார்க்கில் அமர்ந்து உண்டோம். பத்மஸ்ரீ பாலசுப்பிரமணியன் அவர்கள் அங்கு வந்து கச்சேரி செய்தார்களாம். தாமரை வடிவில் இனி மேல்தான் கோயிலை கட்டப் போகிறார்கள். இப்போது வீடு மாதிரிதான் இருக்கிறது.
கோயில் முகவரி: 12501,braddock road,fairfax,V.A 22030
ph:703-815-4850.
ஸ்ரீ துர்க்கா மந்திர்,Brunswick
அழகான பளிங்குச் சிலைகள். அம்மன் வெகு கம்பீரமாய் காட்சி தருகிறார். இங்கு பிரதான தெய்வமாக ஸ்ரீ துர்க்காதேவி வீற்றிருந்து அருளாட்சி புரிகிறாள்.
சிவன், கணேஷ், ஹனுமான், விஷ்ணு, லக்ஷ்மி, ராதாகிருஷ்ணா, சீதாராம் ஆகியோருக்கு சந்நதிகள் அமைந்துள்ளன. நாங்கள் போனது அன்னையர் தினத்தன்று. குழந்தைகள் ஒரு வாழ்த்துப் பலகையில் தங்கள் அன்னைக்கு வாழ்த்து எழுதிக் கொண்டு இருந்தார்கள். ஆரத்திப் பாட்டு ஆங்கிலத்தில் டைப் செய்து கொடுக்கிறார்கள். ஆரத்தி நேரம் எல்லோரையும் ஆரத்தி செய்ய சொன்னார்கள். வரிசையாக சென்று, வந்தவர்கள் எல்லோரும் ஆரத்தி எடுத்தார்கள். எல்லோருக்கும் தேங்காய், ஆப்பிள் பழம் பிரசாதமாய்க் கொடுத்தார்கள்.
பின் சாப்பாடு கொடுத்தார்கள். அன்னையர் தினத்திறகு மகனும் மகளும் சேர்ந்து சர்ப்ரைஸ்ஸாக எனக்குப் பரிசு அளித்தார்கள் காலையில். மதியம் அன்னை துர்க்கா தேவி ஆரத்தி எடுக்க வைத்து இனிப்பு பணட்ங்கள் மற்றும் வயிறார உணவு கொடுத்து என் அம்மாவை நினைவூட்டினாள். இந்த கோயிலுக்குச் சென்ற போது மிகவும் குளிராக இருந்ததால் காரை விட்டு இறங்கி கோயிலுக்குள் ஓடிவிட்டதால் போட்டோ எடுக்க முடியவில்லை.
இக் கோயிலின் முகவரி: 4240 RT 27north,south,brunswick,NJ 08824 ph:609-3760
சமர்ப்பண்- வடநாட்டுக் கோயில்,Philadelphia.
இக்கோயில் பில்டெல்பியாவில் அமைந்திருக்கிறது.
இங்கு கணேஷ்,மஹாவீர்ஸ்வாமி,ஷிவ பார்வதி,ராதாகிருஷ்ணா,துர்க்கா,ஆகியோரின் திருவுருவங்கள் பளிங்கில் உள்ளன. ராம் தர்பார் உள்ளது. அனுமான் ஆகியோர் உள்ளனர். காலை, மாலை வேளைகளில் ஆர்த்தி நடைபெறுகிறதாம். திங்கள் கிழமைகளில் மாலை வேளைகளில் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மாதமொருமுறை பஜன் உண்டாம். பக்தர்களின் வேண்டுதலுக்குகிணங்க சத்ய நாராயாணா பூஜை செய்து வைக்கப்படுகிறதாம்.
தீபாவளி, ஜன்மாஷ்டமி, நந்தமஹோத்சவம் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றனவாம். நாங்கள் போன நேரம் மாலை ஆரத்தி நேரம் .ஆங்கிலத்தில் டைப் செய்யபட்ட ஆரத்தி பாடல்களை எல்லோருக்கும் கொடுத்தார்கள் எல்லோரும் பாட, ஆரத்தி ஆனது. பிறகு இனிப்புகள் வழங்கினார்கள். அன்று என் மருமகளுக்குப் பிறந்தநாள். கோயிலில் மருமகளுக்கு எல்லா வளங்களும் தரும் படி வேண்டிக் கொண்டு வந்தேன்.
முகவரி: samarpan kindu temple,6515 bustleton avenue,philadelphia,PA,19149,215-537-9537.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா (பாலாஜி) கோயில் :பிரிட்ஜ்வாட்டர்,நியூஜெர்ஸி
நம் ஊரில் கோவில் பார்த்த திருப்தி இங்கு தான் ஏற்பட்டது. கோபுரம், கொடிமரம் எல்லாம் இருந்தது. ராஜகோபுரம் அழகாக உள்ளது. துவ்ஜஸ்தம்பம் முன்னதாக அமைந்துள்ளது. பெருமாள், திருப்பதி பெருமாள் மாதிரி இருப்பார். பக்கத்தில் யாரும் விரட்டாமல் நல்ல மனத்திருப்தியாய் வணங்க முடிகிறது.
கருடன், ம்ஹாகணபதி, அம்பிகை, நந்தி, சிவலிங்கம், அய்யப்பன், சுப்பிரமணியன்,
ஆகியோருக்குத் திருவுருவங்கள் உள்ளன. சத்யநாராயணா, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, ல்க்ஷ்மிநாராயாணா, ராதாகிருஷ்ணர், ராமர், ஆஞ்சநேயர், நவக்கிரஹம், ஆகிய சந்நதிகள் உள்ளன. கல்யாணமண்டபம் உள்ளது.
உபநயனம், ஹோமம், 60,80 பூர்த்திவிழா எல்லாம் செய்து வைக்கப்படுகிறதாம்.
கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட ஆண்டு -1998. ஜனவரி 1ம் தேதி ஆங்கில புது வருட பிறப்புக்கு சிறப்பு தரிசனம் உண்டாம். அன்று கூட்டம் நிறைய வருவதால் வெகு தூரத்தில் காரை நிறுத்திவிட்டு கோயில் ஏற்பாடு செய்துள்ள பஸ்ஸில் ஏறி வரிசையில் நின்று பாலாஜி பக்கத்தில் போய் அவரை சுற்றி வந்து வணங்கலாமாம். குளிருக்கு அணிந்து வந்த ஜாக்கெட் எல்லாம் பாதுகாக்க டெண்ட் வசதி உண்டாம்.மற்றும் நம் தேவைகளை பூர்த்திசெய்ய சேவை செய்பவர்கள் நிறைய பேர் இருப்பார்களாம். பட்டுப்புடவை மற்றும் பல பொருட்கள் கல்யாண மண்டபத்தில் ஏலம் விடப்படுமாம். பாலாஜியை தரிசிக்க வந்த எல்லோருக்கும் பலவிதமான பிரசாதங்கள் வழங்குவார்களாம். நாங்கள் போனபோது சத்யநாராயணபூஜை முடித்தவர்கள் பிரசாதம் வழங்கினார்கள்.
முகவரி:
sri venkateswara temple
780,old farm road
bridgewater,NJ 08807
ph 908-725-4477.
இப்படி நாங்கள் பல திருக்கோயில்களுக்குச் சென்றோம்.
ஆன்மீகப் பயணம் மனதுக்குத் தெம்பு, உடலுக்கு ஆரோக்கியம்.
//நம் வாழ்க்கை முழுவதுமே இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யப்படும் பிரார்த்தனையாகும்.// அன்னை வாக்கு.
நாம் இறை வணக்கம் செய்வோம்.இறை உணர்வு பெறுவோம்.
என்னால அமெரிக்கா வர சான்ஸ் இல்லை. அதனால அங்கு உள்ள கோயில் பற்றி பதிவிட்டதற்கு என் நன்றிகள்..
பதிலளிநீக்குஎனக்கு எல்லாம் புதுசு. நன்றிங்க
பதிலளிநீக்குகோயில் படங்கள் மிக அருமை...
பதிலளிநீக்குஉடை ஏலம் எடுக்கின்ற தகவல் புதியது.
விவரங்களுக்கு நன்றி
பதிலளிநீக்குTemples in cities like Pittsburgh, Chicago are huge...
பதிலளிநீக்குஅமெரிக்க கோவில்கள் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றிம்மா!
பதிலளிநீக்குஅங்குள்ள சிறப்புத் தலங்களைப் பற்றிய விவரங்களுடன் சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குபடங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவங்களும் அழகு.
// என்னால அமெரிக்கா வர சான்ஸ் இல்லை. அதனால அங்கு உள்ள கோயில் பற்றி பதிவிட்டதற்கு என் நன்றிகள்.. //
பதிலளிநீக்குஎனக்குத் தோன்றியவையும் இதே..
Try to visit Boston Lakshmi Temple and Murugan Temple , Lanham MD.
பதிலளிநீக்குநானும் இந்த சௌத் ப்ரன்ஸ்விக் கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.
பதிலளிநீக்குந்யு ஜெர்சியிலிருந்து அருகே ஒரு வட இந்திய கோவில் ராம் மந்திர் அல்லது க்ருஷ்ண மந்திர். மிகவும் அழகு.
அது போல், ந்யூ யார்க் அருகே பமூனா வில் பெருமாள் கோவில்.
ஸ்டாம்ஃபோர்டு பக்கத்தில் ஒரு வினாயகர் கோவில்.
அங்கெல்லாம் கோவில்களில் பக்தியுடன் ஒரு சிரத்தை ஆர்டர்லினெஸ் சுத்தம் தென்படுகிறது. நமது
கல்சர் எனப்படும் பண்பாடுகளின் அசல் காணப்படுகிறது.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
அமெரிக்க கோவில்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டோம் . பகிர்வுக்கு நன்றிம்மா.
பதிலளிநீக்குஅழகிய அமெரிக்கக் கோயில்கள் மனத்தை நிறைத்து நிற்கின்றன.
பதிலளிநீக்குகருன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குநன்றி எல் கே.
நன்றி கருணாகரசு.
நன்றி மாதவி.
தகவலுக்கு நன்றி சித்ரா.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் நாகராஜ்.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி மாதவன்.
உங்கள் தகவலுக்கு நன்றி முடிந்த போது நீங்கள் சொன்ன கோயில் சென்று வருகிறேன்.
சூரி சார், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்குநன்றி ஆதி.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
வெள்ளையான கோபுரமுள்ள கோயில் அழகா இருக்கிறது.
பதிலளிநீக்குஇருந்த கொஞ்ச நாளிலிலேயே நிறைய இடம் பார்த்திருக்கீங்க :)
ஆம், முத்துலெட்சுமி . கொஞ்நாளிலேயே நிறைய முக்கியமான இடங்கள் பார்த்து மகிழ்ந்தோம். நன்றி முத்துலெட்சுமி.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு. சில பழைய ஞாபகங்கள் வந்து போயின
பதிலளிநீக்குநன்றிகள்
நன்றி ராம்ஜி .
பதிலளிநீக்குதெரியாத விஷயங்கள் பலவற்றைத் தெரிஞ்சுக்கமுடிஞ்சது.
பதிலளிநீக்குஉடை ஏலம் எடுப்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று.
பகிர்வுக்கு நன்றிங்க.
சுந்தரா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குபதிவு பல திகட்டாத நான் பார்த்து பரவசப்பட்ட வேறு சில கோயில்களின் நினைவுகளை மீட்டியது. மிக அழகாக பக்தியை குழைத்து எழுதி யிருக்கிறீர்கள்.அது இல்லையென்றால் ஏதோ சுற்றுலா விவரம் மாதிரி ஆகியிருக்கும். புகைப் படங்கள் கூடுதல் சிறப்பு. கோயில்களை அங்கு பராமரிக்கும் சிறப்பு, கோயில் உள் வளாகத்திற்குள்ளேயே அமைந்திருக்கும் ரெஸ்ட் ரூம் வசதி, காலணிகளை விட்டுச் செல்லும் தனிப்பகுதிகள், பிரசாதம் பெறுவது போன்ற உணர்வேற்படுத்தும் சிற்றுண்டி சாலை வசதிகள் என்று புதுமாதிரி உணர்ந்த பல சிறப்புகளை சொல்லியே ஆக வேண்டும். குறிப்பாக தரிசனம் காணவருவோர் பக்தி சிரத்தையுடன் கொண்டு வந்த பழங்கள், பாதாம், முந்திரி, கல்கண்டு போன்றவற்றை பொதுவில் வைத்து அள்ளி அள்ளி அத்தனை பேருக்கும் வழங்குவதும், காசில்லாமல் கோயிலுக்குள் நுழைந்து மனத்திருப்தியுடன் தரிசனம் செய்து வெளிவரலாம் என்கிற நிலையும் நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை என்று பளிச்சென்று தெரிகிறது.
பதிலளிநீக்குஜீவி சார், நான் குறிப்பிட மறந்த செய்திகளை அழகாய் குறிப்பிட்டு விட்டீர்கள். நன்றி.
பதிலளிநீக்குரெஸ்ட் ரூம் வசதியை சொல்லியே ஆகவேண்டும்.
நம் நாட்டில் அந்த வசதி திருக் கோயிலில் செய்து கொடுத்தால் நல்லது. சுற்றுலா செல்பவர்கள் வசதி இல்லாத காரணத்தால் கோயில் சுற்றுப் புறத்தை மாசு படுத்துவது கட்டுப்ப்டும்.
உணவு அருந்தும் இடமும் தனியாக இல்லாததால் கோயிலில் சாப்பிட்டு அங்கேயே இலை முதலியவற்றை வீசி வந்து விடுகிறார்கள். புதிதாக அமைக்கும் தனியார் கோவில்களில் சுத்தத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
அறநிலையத்துறை எடுத்துள்ள கோயில்கள் பல அசுத்தமாய் உள்ளது.
பரவாயில்லை எல்லா தமிழர்களையும் அங்கு சந்திச்சுக்கலாம் இல்ல
பதிலளிநீக்குஇந்தியர்களை அங்கு சந்திக்கலாம்.
பதிலளிநீக்குஎல்லா மொழி பேசுபவர்களும் வந்தார்கள்
ஜலீலா.
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/06/blog-post_8.html?showComment=1402246891229#c7625870185625613669
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-