ஓடி விளையாடு பாப்பா என்று பாரதி சொன்னார்.மாலை முழுவதும் விளையாட்டு என்றார். ஆனால் இப்போது குழந்தைகளை நாம் விளையாட விடுகிறோமா என்றால் இல்லை. தினம் ’படி படி’ தான். பள்ளி விட்டு வந்தாலும் சிறிது நேரம் விளையாட விடுவது இல்லை. வீட்டுப் பாடங்கள் முடி,படி என்பது தான் பெற்றோர்களின் தாரக மந்திரம்.
பாரதிதாசன் அவர்களின் குடும்ப விளக்கில் குழந்தை வளர்ப்புப் பற்றி வருவதில் விளையாட்டைப் பற்றி குறிப்பிடுகிறார்.குழந்தைகள் தன் பிஞ்சுக் கால்களால் தத்தித் தத்தி ஓடி விளையாடும் போது அம் முயற்சியைப் பாராட்டி அதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிறார்.
அமிழ்தே அமிழ்தே ஓடிவா அன்பின் விளைவே ஓடிவா
கமழும் பூவே ஓடிவாஎன் கண்ணின்மணியே ஓடிவா
பச்சைக் கிளியே ஓடிவாஎன் பாடும் தும்பி ஓடிவா
மெச்சும் குயிலே ஓடிவாஎன் விரியும் சுடரே ஓடிவா
என்றெல்லாம் குழந்தையை வருணித்து அதே நேரத்தில் ஓடியாடி விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வகைசெய்வதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களில் பொன்னூசல்(ஊஞ்சல்) அம்மானை,பூப்பந்து ஆகிய விளையாட்டுக்களைப் பாடிக் கொண்டே ஆடுவார்கள்.பந்தாடிப் பாடும் பாடலைக் கந்துகவரி என்பார்கள்.
இந்த விளையாட்டுக்கள் எல்லாம் மனதுக்கும் உடலுக்கும் நல்ல உரம் அளிக்கும்.
ஓடி,ஆடி விளையாடினால் தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம்.மாலை சூரியஒளியில் ’டி’ வைட்டமின் இருப்பதாய்ப் பெரியவர்கள் சொல்லி விளையாட விடுவார்கள்.
இயற்கையில் கிடைக்கக்கூடிய சூரிய ஒளி மிகச்சிறந்த கிருமிக் கொல்லியாகும். உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் ’டி’ சத்தைத் தோல் மூலமாகப் பெறுவார்கள்.சூரிய ஒளியில் விளையாடினால் நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம். எங்கே குழந்தைகள் வீட்டிற்கு வருவதற்கே இருட்டிவிடும் என்றால் விடுமுறை நாட்களில் ஆவது விளையாட விட வேண்டும்.
’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு,கால்களுக்கு நல்ல பயிற்சி தரும்.பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு.
என் அம்மா தன் டைரிக்குறிப்பில் பாண்டி விளையாட்டுக்கு ஒரு பாட்டு எழுதி வைத்து இருந்தார்கள்.
அது:
பாண்டிவிளையாடு
------------------
பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ
பாட்டி எனக்குப் பரிசளித்த
பல்லாங்குழியைப் பாரிதோ
மாமா நேற்று வாங்கித் தந்த
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ
சேரருக்கு மங்கலங்கள்
செப்பி விளையாடலாம்
சோழருக்குச் சோபனங்கள்
சொல்லி விளையாடலாம்
இன்னும் பாண்டி யாடலாம்
ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம்
கட்டும் பாண்டியாடலாம்
களைத்து விட்டால் நிறுத்தலாம்
எய்யாப் பாண்டியாடலாம்
ஏய்த்து விட்டால் நிறுத்தலாம்
பசும் பாண்டியாடலாம்
பசித்தவுடன் நிறுத்தலாம்
பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ.
பாண்டி விளையாடினால் நல்ல பசி எடுக்கும். பசி எடுத்தவுடன் விளையாட்டை நிறுத்திவிட்டு
சாப்பிடப் போய் விடுவார்கள் போலும். அந்த காலத்தில் நல்ல ஆரோக்கியமாக குழந்தைகள் இருந்தார்கள்.இப்போது ஒரு மழை விழுந்தால் போதும், உடனே சளி பிடித்து விடுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.
நல்லா சிரித்து,ஓடி விளையாடி குழந்தைகள் எல்லாம் குதூகலமாய் இருக்க வேண்டும்.
பள்ளிக்கு வெளியேயும் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
விளையாட்டில் வெற்றி தோல்வியைச் சம்மாகப் பாவிக்கும் மனப்பான்மை,விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை,அடிபட்டால் முதல் உதவி செய்யும் குணம்,எல்லாம் தானாக வரும்.நம் கடமை அவர்கள் நல்ல குழந்தைகளுடன் பழகுகிறார்களா விளையாடுகிறார்களா என்று கவனிப்பதும்,சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.
இப்போது கம்யூட்டர் கேம்,வீ கேம்,எல்லாம் வந்துவிட்டது. அதை அளவோடு விளையாடிவிட்டு வெளியே சென்று விளையாடினால் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
பசங்க கிரிக்கெட்,வாலிபால்,கபடி,என்று விளையாடலாம்.நாகர்கோவில்,கன்னியாகுமரி பக்கமெல்லாம் பெண்களும் இந்த விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள்.அங்கு பெண்கள் தற்காப்புக் கலையும் பயில்கிறார்கள்.
குழந்தைகளுக்கு ஒரே மாதிரி வேலைகள் சலிப்பூட்டும்.இதையே குழந்தைகள் ’போர்’ என்று குறிப்பிடுவர்கள்.இதை போக்குவதற்கு விளையாட்டு துணை புரியும்.
ஓடி விளையாடி,கூடி விளையாடி உடல் நலத்தோடும்,மனநலத்தோடும் குழந்தைகள் எல்லாம் வாழவேண்டும்.
வாழ்க வளமுடன்!
வாழக நலமுடன்!
.
