வந்தேன், வந்தேன் ,
நலமா எல்லோரும்.
பல ஊரு தண்ணீர் குடித்து , சூறாவளி சுற்றுப் பயணம் செய்ததில் உடம்பு கொஞ்சம் சரியில்லை. பேரன் வருகையால் நடைமுறை வாழ்க்கையே மாறி விட்டது. உடல், பொருள், ஆவி, நேரம், காலம் எல்லாம் அவனைச் சுற்றித் தான் ஓடியது. இப்போது அவன் ஊருக்குப் போய் விட்டான். வீடு வெறிச் என்று இருக்கிறது. அவனுடன் இருந்த நாட்களை மனச்சுரங்கத்தில் இருந்து எடுத்து அசை போட்டு கொண்டு இருக்கிறோம். அடுத்த விடுமுறைக்கு அவன் வரும் நாளை எதிர்பார்த்து.
தீபாவளி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் . மகன் ,மருமகள், பேரனை வழி அனுப்பி வைத்து விட்டு 26 ஆம் தேதி தான் ஊரிலிருந்து வந்தேன். கார்த்திகைப் பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் ஊர்ப் பயணம், குடும்ப விழாக்களில் கலந்து கொண்டு 11ஆம் தேதி தான் வந்தேன்.
தீபாவளி சிறப்பாக நடந்தது . அதற்கு முன்பு எங்கள் மாமா, அத்தை திருமணநாள் மற்றும் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது.
தீபாவளி வாழ்த்து சொன்ன ஹுஸைனம்மா ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். அந்த கேள்வியும் அவர்களுக்குப் பதிலும் கீழே:
//மாமனார்-மாமியார் 75 ஆண்டு திருமண வாழ்வு, சதம் தாண்ட என் பிரார்த்தனைகள். இதுவரை திருமண தினம் கொண்டாடியதில்லை என்பது ஆச்சர்யம்தான். சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் இவையெல்லாம் செய்ததில்லையா? நூறு வயதில் செய்வது கனகாபிஷேகம்தானே? அதுவா இப்போது செய்யப்போகிறீர்கள்?//
என்று ஹுஸைனம்மா கேள்வி கேட்டு இருந்தார்கள். அவர்களுக்கு :
சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் , கனகாபிஷேகம் எல்லாம் முன்பே நடந்து விட்டது. அதை எல்லோரும் சேர்ந்து நடத்தி விட்டோம்.
சஷ்டியப்தபூர்த்தி என்பது - 60 வயது பூர்த்தி ஆனவுடன் செய்வது. சதாபிஷேகம் என்பது - 80 பூர்த்தியானவுடன் செய்வது,
கனகாபிஷேகம் என்பது - மகனுக்கு பேரன் பிறந்தால் பேரன் கையால் தங்கக் காசுகள், தங்கப்பூ, வெள்ளிப்பூ போட்டு கனகாபிஷேகம் செய்து வணங்குவது.
நான் இதுவரை திருமண நாள்கொண்டாடவில்லை என்றது முதன் முதலில் திருமணம் செய்த தேதியை வைத்து அடுத்த வருடம் திருமண நாள் கொண்டாடுகிறோமே அதை. அப்படி பார்க்கும் போது அவர்கள் திருமணம் செய்து 75 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நாளைத்தான் பேரன், பேத்திகள் கொண்டாடினார்கள்.
ஹுஸைனம்மாவின் ஆர்வமான கேள்விக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு இதில் பதில அளித்து விட்டேன்.
12.11.2012 ல் திங்கட்கிழமை கோவையில் ’அன்னபூர்ணா உணவகம் ’கங்கா கலைஅரங்கத்தில்’ குடும்ப உறுப்பினர்களும், மற்றும் உள்ளூர் சொந்தங்கள் மட்டும் வைத்து எளிமையாக விழா நடந்த்து.
| விழா அறிவிப்புப் பலகை |
| விழா நாயகர் |
காலை தேவார இன்னிசை கச்சேரி - என் மாமாவிடம் தேவாரம் கற்றுக் கொண்டவர்கள் தன் ஆசிரியரின் மணவிழாவிற்கு மகிழ்வோடு பாடினார்கள்.
| தேவார இன்னிசை |
மச்சினர் பேத்தி பாட்டு பாடினாள். என் தோழி சில பாடல்கள் பாடினாள். பிறகு கேக் வெட்டி மாமாவின் பிறந்தநாளும் 75 வது திருமண நாளும் கொண்டாடப்பட்டது. வந்தவர்களுக்கு விழா நாயகனும், நாயகியும் வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார்கள்.
| பிறந்தநாள் கேக் |
| மணமக்கள் மாலை மாற்றல் |
தீபாவளி 13ஆம் தேதி சிறப்பாக நடந்தது. காலை மருமகள் மூவரும்( என் மருமகளும், மற்ற இரண்டு மருமகளும்) சேர்ந்து வடை, பஜ்ஜி எல்லாம் செய்தார்கள்.
| வடை ரெடியாகுது |
பெரிய மருமகள் தீபாவளி கோலம் வரைந்தாள். இளைய தலைமுறைகள் பொறுப்பை எடுத்துக் கொண்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது.
| கோலம் |
| மத்தாப்பு சுட்டு சுட்டு |
| சுழலும் தரைச்சக்கரம் |
பூப் பூவாய் சிதறும் புஸ்வாணம்
| புத்தாடைகளும் ,பலகாரங்களும் |
| புத்தாடை அணிந்து மாமா அத்தையிடம் ஆசீர்வாதம் |
14ம் தேதி மறு நாள் மாமாவின் நட்சத்திர பிறந்தநாள். அதற்கு கோனியம்மன் கோவில் போய் சாமி கும்பிட்டு வந்தோம்.
அன்று இரவு நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி சென்றோம்.
எங்கள் பேரனை அழைத்துக் கொண்டு குலதெய்வத்தை வணங்கி வர.
குலதெய்வம் இருக்கும் இடம் இயற்கையின் கொடை என்றுதான் சொல்லவேண்டும். அவசியம் பார்க்க வாருங்கள் என் அடுத்த பதிவில்.