ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

ஸ்ரீ ராமநவமி




 "ஸ்ரீ சம்பூர்ண ராமாயணம் " படத்தில் இடம் பெற்ற இந்த பாடலில்  டி.எம்.எஸ் அவர்கள் குரல் மிக அருமையாக இருக்கும். கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில்  மருதகாசி  அவர்கள் எழுதிய  அற்புதமான பாடல். வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். இந்த பாடலில் ஒவ்வொரு வரியும் கவனித்து கேட்க வேண்டிய  வரிகள். தசரதன்  பெருமையாக வாலிபன் போல நடந்தான், என்ற அழகான வரி பாடலில் வரும் போது தசரதனாக நடித்த நாகைய்யா பெருமிதம் பொங்க நடந்து வருவார்.



இந்த பாடலும் மருதகாசி அவர்கள் எழுதியது, கே.வி மகாதேவன் அவர்கள் இசை அமைத்த பாடல். பி.சுசீலா அவர்கள்   பி.லீலா அவர்கள் பாடியது. "லவகுசா"படத்தில் இடம்பெற்ற பாடல்.
என் அப்பாவிற்கு பிடித்த பாடல்கள் இரண்டும். நானும் கேட்டு மகிழ்ந்தேன்.  உங்களுக்கும் பிடிக்கும்.


கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே, 99

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே. 100

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை. 101

கைகேயி மைந்தனைப் பெறுதல்

ஆசையும், விசும்பும், நின்று அமரர் ஆர்த்து எழ,
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற,
பூசமும் மீனமும் பொலிய, நல்கினாள்,
மாசு அறு கேகயன் மாது மைந்தனை. 102


சுமித்திரை இரு மகவு ஈன்றாள்

தளை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்,
கிளையும், அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற,
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வுற,
இளையவற் பயந்தனள், இளைய மென் கொடி. 103

படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர, மறை நவில நாடகம்,
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட,
விடம் கிளர் விழியினாள், மீட்டும், ஈன்றனள். 104

கம்பராமாயணம்- பாலகாண்டத்தில் உள்ள திருஅவதாரப் படலத்தில் உள்ளபாடல்வரிகள்-  நன்றி விக்கிமூலம்.




புதுயுகம் தொலைக்காட்சியில் தரிசனம் செய்தேன். இலக்குவணன், ராமர், சீதை . அபிஷேகம் அலங்காரம் , பூஜை பார்த்தேன். ராமரும், சீதையும் அமர்ந்த கோலம், இலக்குவணன் நிற்கிறார்.

"ஜோதி டிவியில்" பார்த்த இந்த அபிஷேகக்காட்சி நன்றாக இருந்தது.  சல்லடையை பிடித்து கொண்டு கஷ்டபடாமல்  ஸ்டாண்டில் வைத்து விட்டார்கள்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

-கம்பராமாயணம்.

ஸ்ரீராமபிரான் அனைவருக்கும் எல்லா நலங்களும் அருளவேண்டும்.

ஸ்ரீராம் ஜெய ராம்! ஜெய ஜெய ராம் !


வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------


33 கருத்துகள்:

  1. முதல் பாடல் முதன் முறையாக கேட்கிறேன். வசன வார்த்தைகளைக்கூட பாடலாக மாற்றும் சக்தி திரு.டி.எம்.எஸ் அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது அவரது உச்சரிப்பை யாருமே முறியடிக்க முடியாது.

    இரண்டாவது பாடல் சம்பூர்ண ராமாயணம் சிறு வயதில் பலமுறை கேட்டு இருக்கிறேன்.

    ஸ்ரீ ராமநவமிக்கு பொருத்தமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      "எங்கள் ப்ளாக்கில்" ராமர் பாட்டுக்கள் வெள்ளிக்கிழமை பகிர்ந்த போது இந்த முதல் பாடல் நன்றாக இருக்கும் என்றும் இந்த பாடலையும் ஒரு நாள் பகிருங்கள் என்று சொன்னேன்.
      அடுத்த பாடலும் அப்பாவிற்கு பிடித்தமான பாடல் என்றும் சொல்லி இருந்தேன்.
      ராமநவமி அன்று இரண்டு பாடலையும் போடு பதிவு செய்து விட்டேன்.
      முதல் பாடல் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      //வசன வார்த்தைகளைக்கூட பாடலாக மாற்றும் சக்தி திரு.டி.எம்.எஸ் அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது அவரது உச்சரிப்பை யாருமே முறியடிக்க முடியாது.//

      டி.எம்.எஸ் அவர்கள் நீங்கள் சொன்னது போல சிறந்த பாடகர். அவருக்கு நிகர் அவர்தான்.

      அடுத்த பாடல் லவகுசா இப்போது பட பெயரை எழுதி விட்டேன்.

      அடுக்கடி வானொலியில் வைக்கும் பாடல்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
    2. ஆம் லவகுசா படத்தின் பெயரை மறந்து விட்டேன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      ஆமாம், அருமையான பாடல்கள். எத்தனை காலம் ஆனாலும் கேட்பவர்கள் மனதை உருக வைக்கும் பாடல்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. சம்பூர்ணராமாயணம் பாடல் தெடிக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.  நீங்கள் பகிர்ந்து விட்டீர்கள்   எனவே இங்கேயே கேட்டு விட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நானும் உங்களை பாட்டை போடுங்கள் என்று சொன்னேன்.
      பாட்டை கேட்டது மகிழ்ச்சி. நன்றாக இருக்கிறது அல்லவா? பாடல்.

      நீக்கு
  4. 'வாலிபன் போல் நடந்தான்'. எனில் தசரதன் அப்போது கிழவர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லையல்லவா?
      வயதானபின் தான் அவருக்கு குழந்தைகள்.

      நீக்கு
  5. ஜெகம் புகழும் புண்யகதை எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காத பாடல்.  முன்பெல்லாம் அடிக்கடி வானொலியில் ஒலிக்கும் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகம் புகழும் புண்யகதை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதுதான்.
      முன்பெல்லாம் அடிக்கடி வானொலியில் கேட்போம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. அன்பின் கோமதிமா,
    வாழ்க வளமுடன்.
    ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகள்
    நேற்று இதே பாடலை என் பதிவிலும் இட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      ஸ்ரீராம நவமி வாழ்த்துக்களுக்கு நன்றி.
      நீங்களும் பதிவில் இந்த பாடலை போட்டு இருக்கிறீர்களா?
      நல்லது அக்கா.

      நீக்கு
  7. சம்பூர்ண ராமாயணப் பாட்டுகள் அனைத்திலிம்
    டி எம் எஸ் குரல் மெய் சிலிர்க்க வைக்கும். அதுவும் பரதன் பாடும் ''ஏன் பிரிந்தீர் என்னை ஏன் பிரிந்தோரோ ''கேட்டாலே
    மனம் உருகிக் கண்ணீர் வரும்.

    மனித குலத்துக்கு வழி காட்டும் ராம நாமத்தின் மகிமை
    எப்பொழுதும் நம்முடன் இருந்து காக்க வேண்டும்.

    லவகுசா படம் திண்டுக்கல்லில் பார்த்தோம்.
    அந்த இளம் வயதில்
    சீதை படும் கஷ்டங்களை நினைத்து
    ராமர் மேல் கோபம் கூட வந்தது:)

    அருமையான பதிவுக்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பூர்ண ராமாயணபாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
      //டி எம் எஸ் குரல் மெய் சிலிர்க்க வைக்கும். அதுவும் பரதன் பாடும் ''ஏன் பிரிந்தீர் என்னை ஏன் பிரிந்தோரோ ''கேட்டாலே
      மனம் உருகிக் கண்ணீர் வரும்.//

      ஆமாம்.


      அந்த படத்தின் கேஸட் இருக்கிறது.

      அப்புறம் சம்பூர்ண ராமாயணபாடல் கேஸட் இருக்கிறது.

      //மனித குலத்துக்கு வழி காட்டும் ராம நாமத்தின் மகிமை
      எப்பொழுதும் நம்முடன் இருந்து காக்க வேண்டும்.//

      காப்பார் அக்கா.


      //லவகுசா படம் திண்டுக்கல்லில் பார்த்தோம்.
      அந்த இளம் வயதில்
      சீதை படும் கஷ்டங்களை நினைத்து
      ராமர் மேல் கோபம் கூட வந்தது:)//

      ஆமாம் , கண்டிப்பாய் வரும்தான்.
      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  8. இன்றைய தினத்திற்கு ஏற்ற பதிவு. ராம நவமி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலஷ்மி , வாழ்க வளமுடன்

      உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. சிறப்பான பதிவு..
    காலத்தை வென்றிருக்கும் பாடல்களைப் பதிவில் வைத்து ஸ்ரீராமனைக் கொண்டாடி விட்டீர்கள்..

    ஸ்ரீராம ராம ஜெயராம ராம..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்கவளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. ஜகம் புகழும் புண்ய கதை (லவகுசா 1963)..
    காலத்தை வென்றிருக்கும் பாடல்.. இன்னும் பல நூற்றாண்டுகள் சென்றாலும் இளமையாய்த் திகழும் பாடல்.. அறுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்தும் இப்பாடலை வெல்வதற்கு வேறொன்று இதுவரை இல்லை.. இனி வரப் போவதும் இல்லை..

    ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்..

    இதுதான் ஸ்ரீமத் ராமாயணம்..

    இதனை முறையாக நெஞ்சில் பதிவு செய்து விட்டால் வழி கெட்டுப் போகவே முடியாது..

    அன்று விளைந்த சாபம் அழிவதற்கு அந்த ஸ்ரீராமனே அருள் புரிதல் வேண்டும்..

    ஸ்ரீராம ராம ஜயராம ராம...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      ஆமாம், காலத்தை வென்றிருக்கும் பாடல்தான்.
      எப்போதும் இளமையாகத்தான் இருக்கும் நீங்கள் சொன்னது போல.


      //ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்..

      இதுதான் ஸ்ரீமத் ராமாயணம்..//

      ஆமாம்.

      ஸ்ரீராமன் எல்லோருக்கும் நல் வழி காட்டுவான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி, நன்றி.

      நீக்கு
  11. ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....

    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ...

    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
      உங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  12. கோமதிக்கா முதல் பாடல் நினைவு இல்லை ஆனால் படம் பார்த்திருக்கிறேன். வீட்டில் அப்போதெல்லாம் இது போன்ற படங்களுக்குத்தான் வீட்டில் கூட்டிக் கொண்டு செல்வார்கள். அப்படிப் பார்த்த படங்கள் இதுவும் லவகுசாவும்

    லவகுசா பாடல் நல்ல நினைவு இருக்கிறது ஜகம் புகழும் புண்ணிய கதை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      நல்லபடம் என்றால் குடும்பத்தோடு போய் பார்ப்போம்.
      வீட்டில் டிவி வாடகைக்கு எடுத்து(டிவி இல்லாதபோது)டெக்கில் கேஸட் போட்டு பார்த்த படம் சம்பூர்ணராமாயணம் போட்டு பார்ப்போம்.
      ஜகம் புகழும் புண்ணிய கதை பாடலை மறக்கவே முடியாது.

      நீக்கு
  13. டி எம் எஸ் என்ன அழகாகப் பாடியிருக்கிறார் முதல் பாடல்!! அருமை....உச்சரிப்பு எல்லாமே.

    அட ஜல்லடையை ஸ்டாண்டில் வைத்து அபிஷேகம்!! நல்ல ஐடியா....

    பாடல்கள் கேட்டுரசித்தேன் கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி.எம். எஸ் அவர்கள் சிறு வயது பாடல்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கும். அப்புறம் கதாநாயர்களுக்கு ஏற்றார் போல பாட ஆரம்பித்தார் அதும் அந்த நடிகரே பாடுவது போல இருக்கும்.

      அலங்காரம் செய்யும் போது ஸ்டாண்டை எடுத்து விட்டு அலங்காரம் செய்தார்கள்.
      பாடல்களை கேட்டு , படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  14. பாடல்கள் அடிக்கடி கேட்டவை. நேற்று நாங்கள் வடுவூர் ராமரின் அபிஷேஹக் காட்சியைக் கண் குளிரக் கண்டு ரசித்தோம். அந்தக் காலத்துப் படங்கள், பாடல்கள் அனைத்துமே அர்த்தமுள்ளவை. இனிய சங்கீதம் நிரம்பியவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      முன்பு அடிக்கடி இந்த பாடல்களை கேட்போம்.

      வடுவூர் ராமர் அழகு, அவரின் அபிஷேகம் பார்த்தீர்களா நல்லது.

      நீங்கள் சொல்வது போல அந்தக்காலத்துப் படங்கள் பாடல்கள் அனைத்துமே அர்த்தமுள்ளவைதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. இரண்டு பாடல்களும் சிறப்பு. இரண்டாம் பாடல் கேட்ட பாடல். முதல் பாடலையும் இப்போது கேட்டு ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. முதலாவது பாடல் இப்பொழுதுதான் கேட்டேன். இரண்டாவது கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      பாடல்களை கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு