வியாழன், 6 மே, 2021

தோட்டத்திற்கு வந்த அணில் பிள்ளைகள்


மகன் வீட்டுத் தோட்டத்தில் குடியிருக்கும் அணில் பிள்ளைகளின் படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

இங்கு நம் ஊர் அணில் போல சின்ன அணில்தான்.
நிற்கும் அழகு
சின்ன கண்களை உருட்டி பார்க்கிறது
ஓடி பிடித்து கண்ணாமூச்சி விளையாடிய போது எடுத்தது 
நான் பார்த்து விட்டேன், "அடியில் இருக்கிறாய் வந்து விடு"

"நீ போ நான் வரலை, கால் வலிக்கிறது உட்கார்ந்து கொள்கிறேன்"
ஏய் நில்லு எங்கே போறே?
நம்ம வீட்டுக்குத்தான்

5 அணில்கள்  நின்றன, படம் எடுக்கும் போது மூன்று மட்டும் தான் சிக்கியது.
அரளி செடியின் நிழலில்


மாலை நேரம் மதில் மேல்
அணில் பிள்ளையின் வீடு இங்குதான் இருக்கிறது.
நாம் பார்த்து விட்டால் குடு குடு என்று ஓடி பொந்துக்குள் மறைந்து விடும். அதன் வால் குஞ்சம் போல் தெரிகிறதா?

அணில்களைப் பற்றி படித்து தெரிந்து கொண்ட பகிர்வு கொஞ்சம் இந்த பதிவில்.  உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கும்.

அணில் ஒரே கூட்டில் வாழ விரும்பாதாம்  10, 15 கூடு கட்டுமாம். எங்கள் வீட்டின் தோட்டத்தில்  இரண்டு  பொந்து இருக்கிறது அவை தான் அவற்றின் வீடு.  6 அணில்கள் இருக்கிறது. ஒரு பொந்தில் போய் இன்னொரு பொந்து வழியாக எட்டிப்பார்க்கும். நாலு குட்டிகள் இருக்கிறது.  


 இப்படித்தான் எட்டிப்பார்க்கும்,நீண்ட நேரம் நின்றும் அந்த காட்சியை  எடுக்க முடியவில்லை, அதனால் பேரனின் சிறு வயது புத்தகத்திலிருந்து இந்த படம். நம் வீடுகளில் கட்டும் அணில் தேங்காய் நார், மற்றும் பஞ்சுகளை வைத்து கூடு கட்டும்.

மண்ணைத்தோண்டி அமைத்த  பொந்துகள் அதற்கு பாதுகாப்பாக இருக்கும் போல! .மரபொந்துகளிலும் கட்டும் ஆனால்  மரபொந்துகளில் பறவைகளால் ஆபத்து வருமாம். வெளியில் போகும் போது மரபொந்தை புற்களை சுருட்டி வைத்து விட்டு வெளியே வருமாம்.

அணில் பிறக்கும் போது தலையில் முடி இல்லாமல், கண்கள் திறக்காமல் இருக்குமாம். பிறந்து 30 , 32 நாளில்  ரோமங்கள் வளருமாம். கண்கள் மேலும் இரண்டு வாரங்கள் கழித்துதான் திறக்குமாம்.(குறைந்தது எட்டு வாரங்கள் ஆகுமாம் கண் திறக்க)  உணவுகளை கொறிக்க பற்களும் அப்போதுதான் வருமாம். பற்களை வைத்தே கொறித்து நிலத்தில்  குழி பறிக்கிறது. மரக்கிளைகளில் பற்களை தேய்த்து அளவாக வைத்து கொள்ளுமாம். இல்லையென்றால் பற்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் அரை அடி  வளர்ந்து கொண்டே போகுமாம்.

குளிர்கால உறைபனியில் உள்ள சமயம் மட்டும்  அணில்கள் எல்லாம்  சேர்ந்து வாழுமாம். வெப்பம் கிடைக்க ஒரே கூட்டில் நெருக்கிக் கொண்டு வாழுமாம்.  குளிர் உள்ளே வராமல் இருக்க கற்றை புற்களை வைத்து வீட்டின் வாயிலை அடைத்து வைக்குமாம். அணில்களை பற்றி படிக்க  சுவாரஸ்யமாக இருக்கிறது. 



எங்கள் தோட்டத்தில் உள்ள அணில்கள் புதிதாக வாங்கி வந்த சூரியகாந்தி செடியின் தளிர் இலைகள் பூக்களை காலி செய்கிறது. மாதுளை நான்றாக வந்து கொண்டு இருக்கிறது காய்க்க ஆரம்பித்தால் இந்த அணில்களுக்கு கொண்டாட்டம் தான்.

மதுரையில் அம்மா வீட்டில் மாதுளைக்கு துணி கட்டி பாதுகாக்க வேண்டும் பழமாகும் சமயம். இல்லையென்றால் கொறித்து தின்றுவிட்டு போய் விடும். கொய்யாவையும் அப்படித்தான் அணிலுக்கு போகத்தான் கிடைக்கும் எங்களுக்கு.

திருவெண்காட்டில் இருந்த போது எங்கள் வீட்டில் கூடு கட்டி வாழ்ந்த அணில்களை பற்றி சொல்லி இருக்கிறேன் முன்பு.

மகள் அணில் பாட்டு பாடுவாள் அப்போது (பள்ளியில் சொல்லி தந்தது) "சின்ன அணிலே மரத்திலே என்ன வேலை செய்கிறாய்? கொறித்து கொறித்து பழங்களை பறித்து பறித்து தின்கிறாய்" என்று. அந்த பாடலை பேத்திக்கும், பேரன்களுக்கு பாடி காட்டி இருக்கிறேன். அவர்களும் குழந்தையாக இருக்கும் போது அணிலைப்பார்த்தால் பாடுவார்கள்.

தென்காசியில்  என் தம்பி மகள் திருமணத்திற்கு போய் இருந்தோம்.அந்த கல்யாணமண்டபத்தை பார்த்துக் கொள்ளும் குடும்பத்தில் ஒரு சிறுகுழந்தை(இரண்டு வயது இருக்கும்) அணிலுடன் விளையாடி கொண்டு இருந்தான் அவன் தோள்மேல் எல்லாம் ஏறி விளையாடியது  . காணொளி எடுத்து இருந்தேன், அதை முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.   முகநூலில் பார்க்கலாம். அலைபேசியில் எடுத்த காணொளி மிக சிறிய காணொளிதான்.  சேமிப்பில் தேடினேன் கிடைக்கவில்லை டெலிட் செய்து விட்டேன் போலும்.

அணில் பிள்ளைகள் வயது நான்கு,அல்லது ஆறு வருடம் தானாம். ஆனால் வீட்டில் வளர்த்தால் 10, 12 வருடம் கூட வாழுமாம். சகல ஜீவன் களும் அன்பை எதிர்ப்பார்க்கிறது.

இன்று வந்த வாட்ஸ் அப் செய்தி.

பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த அணில்பிள்ளைகளை கண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமாம் . எனக்கும் என் பேரனுக்கும் இந்த அணில்களை  பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

அணிலை நான் பார்த்தால் "கவின் அணில் வந்து இருக்கு வந்து பார்" என்று அவனை கூப்பிடுவேன், அவன் பார்த்தால் என்னை கூப்பிடுவான்" சீக்கீரம் வா ஆச்சி" என்பான்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் 

---------------------------------------------------------------------------------------------------

35 கருத்துகள்:

  1. அணில் படங்கள் அழகு. தகவல்களும் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.

    அவைகளுக்கு என்று உணவு வைக்பீர்களா? இல்லை அப்படி வைக்கக்கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      அணில்களை பற்றி படிக்க படிக்க வியப்பாக இருப்பது உண்மை.
      அவைகளுக்கு என்று தனியாக வைக்கவில்லை.
      நம்மூரில் ஜன்னலில் பிஸ்கட், வற்றல் வைப்பேன். மற்றவர்களும் வைப்பார்கள். வந்து சாப்பிடும். இங்கு அப்படி யாரும் வைக்கவில்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அணில்கள் பற்றிய படங்களும் விவரங்களும் சுவாரஸ்யம்.  அணில்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை.  ஏஞ்சல் அணில் பற்றி சொன்ன ஒரு விவரம் ஆச்சர்யமாய் இருந்தது.  அவர் நடைபபயிற்சி மேற்கொண்ட சாலையில்  வழக்கமாக ஒரு அணில் வந்த விவரம் சொல்லி இருந்தார் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      எனக்கும் அணில்களை வேடிக்கைப் பார்க்க பிடிக்கும். அவற்றைப்பற்றி படித்த போது வியப்பாக இருந்தது. ஏஞ்சல் அணிலார் பற்றி பதிவு போட்டது நினைவு இருக்கிறது.

      நீக்கு
  3. பிறந்தவுடன் 32 நாட்களுக்குமேல் பல் வளராமல், முடி வளராமல் பாதுகாப்பே இல்லாமல் இருக்கும் என்கிற தகவல் ஆச்சர்யம்.  எப்படி அந்தக் காலத்தில் அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல் , ரோமங்கள் மட்டும் இல்லை, கண்களுக்கும் அப்புறம் தான் ஒளி (பார்வை) உண்டாகும் என்று படிக்கும் போது வியப்புதான்.
      அண்டம் காக்கா, கழுகு , பூனை எல்லாம் வேட்டையாடி விடுமாம்.
      தோட்டத்தில் மணிப்புறா முட்டைகளை அண்டம் காக்கா வேட்டையாடி விட்டது. ஒரு நாள் அண்டம் காக்கா நல்ல பெரிதாக இருந்தது பார்த்தேன் என்று சொன்னேன் மகனிடம், புறாகுஞ்சை வேட்டையாட வந்து இருக்கும் என்றான். போய் பார்த்தால் கூடு காலி.

      கூடு கலைந்து போய் காலியாக பார்த்த போது மனம் கலங்கி விட்டது இரண்டு மூன்று தினம் முன்பு.

      படைத்தவன் அருள் வேண்டும் எல்லா உயிர்களும் வாழ.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. அணிலை பொருமையாக படம் பிடித்தமைக்கு பாராட்டுக்கள்.

    மேலும் விபரங்கள் தந்தமைக்கு நன்றி. அணிலோடு பழகி வளர்த்த எனது நண்பன் நினைவு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      உங்கள் நண்பர் வளர்த்தாரா! நிறைய வீடுகளில் அணிலை வளர்ப்பார்கள் என்று வளர்த்தால் நல்லது என்றும் கேள்வி பட்டேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அணில் பற்றிய தகவல்களும் படங்களும் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. படங்களுடன் சொல்லி சென்ற தகவல்களும் அருமைம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. அணில் பற்றிய தகவல்களுக்கும் அருமையான படங்களுக்கும் நன்றி. அம்பத்தூர் வீட்டில் ஜன்னல் கம்பிகளுக்கும் கதவுக்கும் உள்ள இடைவெளியில் அணில் கூடு கட்டும். ஜன்னலின் கீழ்ப்பக்கம் எப்போவும் மூடி வைத்திருப்போம். மேல் பக்கம் மட்டும் திறந்திருக்கும் வெளிச்சம்/காற்றுக்கு. கீழே கூடு கட்டி வாழ்ந்திருக்கு. அரிசி மூட்டையைப் பற்களால் கடித்துக் கிழித்து அரிசியை எடுத்துக் கொண்டு ஓடும்! வீட்டிற்குள் சுவாதீனமாக ஓடி விளையாடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      அம்பத்தூர் வீடு எல்லா உயிரினங்களுக்கும் சரணாலயம் அல்லவா!
      மீட்டர் பாக்ஸ் பின்னாடி கூடு கட்டி இருந்தது திருவெண்காட்டில்.

      அணில் வீட்டிற்குள் ஓடி விளையாடுவது மகிழ்ச்சி தரும் தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. ஹூஸ்டனில் அணில்கள் பெரிதாக இருந்தன. காக்கைகள் சிறிதாக இருக்கும். அவற்றைப் பார்த்தால் காக்கைனே நம்ப முடியலை. கரையும்போது தான் தெரிய வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியூஜெர்சியில் பெரிய அணில் இருக்கும் உடம்பில் கோடு இருக்காது. அதனை முன்பு பதிவு செய்து இருக்கிறேன்.
      இங்கு உள்ள அண்டகாக்கைக்கு உணவு வைக்காதீர்கள் என்றே சொல்வார்கள்.

      நீக்கு
  9. அணில் படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பு. படங்கள் மிக அழகாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அணில் படங்கள் அனைத்தும் அருமை. படங்களுக்கு நீங்கள் தந்துள்ள வாசகங்களையும் ரசித்தேன்.

    நிற்கும் அணிலும், மதில் மேல் உள்ள அணில் படங்களும்,நன்றாக அழகாக வந்திருக்கின்றன. அவைகள் கூடு அமைக்கும் விதமே நன்றாக இருக்கும். சணல்,தேங்காய் நார் போன்றவைகளை பற்களால் கிழித்து சுருட்டி பந்து போல் ஆக்கிக் கொண்டு கூடு அமைக்க விரையும் போது நிறைய தடவைகள் பார்த்துள்ளேன். அதன் செயல்கள் சற்று விரைசலாகத்தான் இருக்கும்.

    அணிலை பிடிக்காதவர்கள் யாராக இருக்க முடியும்... தங்களுக்கும், தங்கள் பேரனுக்கும் பிடித்ததில் மிகுந்த சந்தோஷம். நானும் அணிலை பார்த்து ரசிப்பேன். நீங்கள் ஏற்கனவே இயற்கை, மற்றும் பறவைகள் நேசர். இதில் கண்ணெதிரே ஆடி ஓடும் அணிலை உங்களுக்கு பிடிக்காமல் போகுமா? உங்களைப் போலவே அனைத்தையும் ரசிக்கும் உங்கள் பேரனுக்கும் என் வாழ்த்துகள்.

    அணிலைப்பற்றி நீங்கள் சொல்லிய தகவல்களை படித்து தெரிந்து கொண்டேன். தன் குஞ்சுகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டி மரபொந்துகளுக்கு கதவாக அது புற்களை சுருட்டி அடைத்துக் செல்வது வியக்க வைக்கிறது. எவ்வளவு சமயோஜித புத்தியை ஆண்டவன் அதற்கு தந்திருக்கிறான்.

    வாட்சப் வாக்கியங்களை ரசித்தேன். உண்மை... இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் அன்பைத்தான் வேண்டுகின்றன. அன்பு காட்டி வளர்க்கும் போது அது (அணிலார்) மேலும் பல ஆண்டுகள் உயிர் வாழ்கிறது என்னும் போது அன்பின் தன்மை புரிந்து கொள்ள முடிகிறது. அணில் பற்றிய தங்கள் பதிவை படிக்கும் போது மனதுக்கு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      பதிவு உங்களுக்கு பிடித்து ருப்பது மகிழ்ச்சி.
      எனக்கு மன ஆறுதலை தரும் இவைகள்.
      கணினி இல்லா காலங்களில் இவைகளை கவனிப்பது என் பொழுதுபோக்காக இருந்தது. இப்போது அது இன்னும் அதிகமாக இருக்கிறது.

      //அதன் செயல்கள் சற்று விரைசலாகத்தான் இருக்கும்.//
      ஆமாம்.

      பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி கமலா.

      ஒவ்வொன்றும் வேற்று உயிர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இறைவன் அறிவை கொடுத்து இருக்கிறான்.

      வாட்சப் வாக்கியங்கள் பிடித்து இருப்பது அறிந்து நன்றி.
      அன்பு தரும் தெம்பு அனைத்து உயிர்களுக்கும் என்பது உண்மைதான் கமலா.

      பதிவை ரசித்து படித்து விரிவான பின்னூட்டம் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  11. கோமதிக்கா வாவ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இதைப் பார்த்து பார்த்து ரசிப்பதுண்டு. இங்குபங்களூரில் பார்க்கில் அதுவும் ஓரிரு பார்க்கில் தவிர அணில்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. வீட்டருகில் இதுவரை பார்க்க முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை.

    நம்மூரில் இருந்த வரை படம் எடுக்கத் திண்டாடி இருக்கிறேன். இங்கும் கூட ஒரு பார்க்கில் அணில் கண்டதும் படம் எடுத்து வைத்திருக்கிறேன். பதிவுதான் போட இயலவில்லை

    ரொம்ப அழகா இருக்கு அதுவும் நிற்கும் அணில் எல்லாம் செம

    ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      அணிலை உங்கள் நடைபயிற்சியின் போது பார்ப்பீர்கள் இல்லையா?
      வீட்டருகில் பார்க்க முடியவில்லையா? ஏன் மரங்கள் இருக்கிறது இல்லையா?

      நானும் நிறைய அணில் படங்கள் வைத்து இருக்கிறேன் ஒவ்வொரு ஊரில் எடுத்தது.
      இந்த பதிவில் இந்த ஊரில் எடுத்த படம் மட்டுமே!
      படங்களை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. இந்தக் கோடு உள்ளவை சிப்மங்க். அணில்/ஸகுரில் அதற்குக் கோடு கிடையாது. பெரிதாக இருக்கும் மர அணில் என்பாங்க. சிப்மங்க் அணில் வகைதான் சின்னதாக கோடுடன் இருக்கும் இது தரை அணில் என்றும் சொல்லப்படுகிறது. அங்கும் இவை இருப்பது அட போட வைத்தது. கலிஃபோர்னியாவில் இருப்பவை பெரிய அணில் கோடு இல்லாதவை. வால் புஸ் புஸ் என்று தோகை போல இருக்கும் அணிலும் ரொம்பப் பெரிதாக இருக்கும்.

    அணில் பற்றி வாசிக்க வாசிக்க நிறைய வியப்பான தகவல்கள் ஆச்சரியமானவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அணில் பற்றிய செய்திகள் அருமை கீதா.

      நியூஜெர்சியில் கோடு இல்லா பெரிய அணில் இருக்கும் கீதா.

      நீக்கு
  13. சென்னையில் மாமியார் வீட்ட்டில் அணில்கள் கூடு கட்டி குட்டி எல்லாம் போடும். அவற்றைக் காப்பாற்றி அதன பூனைகளிடம் இருந்து காப்பாற்றி ஓட விடுவதுண்டு. அங்கு வீட்டில் கொய்யா,சப்போட்டா மாங்காய் எல்லாம் காய்த்தால் அவ்வளவுதான் அணில் எல்லாவற்றையும் சாப்பிடும் ஹா ஹா ஹாஅ...நானும் மகனும் சொல்லுவோம் போனா போகட்டும் அது சாப்பிடட்டுமே என்று.

    அங்கு தென்னை மரத்தில் விளையாடிய அணிலை படம் எடுத்து பதிவு ஒன்றில் போட்ட நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூரில் வீடுகளில் பயமின்றி கூடு கட்டி வாழும்.
      பூனைகளிடமிருந்து காப்பாற்றுவது கஷ்டம் தான்.
      நானும் ஆச்சிரியபடுவதுண்டு எல்லாவற்றையும் கொறித்து அட்டகாசம் செய்யும் அணில் துணி கட்டி வைத்தால் மட்டும் பழத்தை விட்டு விடுகிறதே! என்று.

      //ஹா ஹா ஹாஅ...நானும் மகனும் சொல்லுவோம் போனா போகட்டும் அது சாப்பிடட்டுமே என்று.//
      சப்பிடட்டும் சாப்பிடட்டும்.


      நீக்கு
  14. ஒவ்வொரு படத்திற்கும் உங்கள் கமென்ட் செம கோமதிக்கா. மிகவும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்து கருத்துக்களை சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  15. அணில் வேகமாக ஓடி விளையாடுவதைப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். பொருமையாக படம் பிடிக்க எப்படி முடிந்தது. துருதுரு கண்கள். அணிலைப்பற்றிய விஷயங்கள் ரஸித்துப் படித்தேன். அபூர்வம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்
      //அணில் ஓடி விளைடாடுவதைப் பார்க்கவே மிகவும் அழகாய் இருக்கும்.//
      ஆமாம், அம்மா.
      பொறுமையாக படம் பிடிக்கவில்லை அவசரம் தான். ஓடி விடும் என்று. இன்னும் கூட அழகாய் எடுப்பார்கள் திறமையானவர்கள்.
      என் படங்களை, பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அம்மா.

      நீக்கு
  16. அன்பு கோமதிமா,
    வாழ்க வளமுடன்.
    அணில் மிக அழகானது. சென்னையில் அணிலின் க்ணி க்ணிக் சத்தம் தொடந்து
    கேட்டுக் கொண்டே இருக்கும்.
    சமையலறை ஜன்னலில் வந்து எட்டிப் பார்க்கும்.
    பூனை கீழே வந்தால் காச்க் மூச் களையபரம் தான்.
    போய் விரட்டி விட்டு வருவேன்.
    அதுக்கும் கத்தல் போடும்:)
    தாங்க் யூ சொல்றதுன்னு நினைப்பேன்.
    அழகான அணில் படங்களும், மேலும் செய்திகளும்
    நன்றாக இருக்கின்றன.
    மிகப் புதிய செய்திகள். அருமை. மிக நன்றி மா.
    எல்லா உயிர்களும் சிறப்பாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா , வாழ்க வளமுடன்
      உங்கள் வீடு தோட்டம் மரம் செடிகளுடன் அழகாய் இருக்குமே! அப்புறம் அதில் அணில் இருக்க பிரியபடுமே!

      அதன் சத்தங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். துணையை அழைக்கும் போது, பகைவர்கள் வந்து விட்டால், உற்சாகத்திற்கு ஒரு சத்தம் என்று இருக்கும்.


      அணில் பதிவு போட அதன் வாழ்க்கை வரலாறை படித்தேன் அக்கா எவ்வளவு கஷ்டங்கள் அது படுகிறது. சின்ன கஷ்டங்களை நம்மால் தாங்க முடியவில்லை.
      இறைவன் உயிர்களை படைத்து அவைகள் வாழ எப்படி எல்லாம் வழி செய்கிறான் !

      //எல்லா உயிர்களும் சிறப்பாக இருக்கட்டும்.//

      ஆமாம் அக்கா, எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் தாயுமானவர் சொன்னது போல்.

      நீக்கு
    2. உங்கள் கருத்துக்கு நன்றி வல்லி அக்கா

      நீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு