ஞாயிறு, 15 மார்ச், 2020

கண்ணில் கண்ட காட்சிகள்


கண்ணில்  பட்டதைப் படமாக்கினேன், அதை இங்கே பதிவாக்கி இருக்கிறேன்.

வெயில் காலம் வந்து விட்டால் இந்த பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை அதிகமாய் இருக்கும். இருசக்கர வாகனங்களில் எல்லா வயதினர்களும் இரண்டு, அல்லது நான்கு  குடங்களில் தண்ணீரை எங்கிருந்தோ எடுத்துச் செல்வார்கள்.


வரிசையில் போட பிளாஸ்டிக் குடங்கள் 
கடைகளுக்கு விடுமுறை என்றாலும் இவருக்கு விடுமுறை இல்லை.
சுண்டல், கொழுக்கட்டை,  வடை வியாபாரம் காலையில்

கீதா சாம்பசிவம் அவர்கள் ஸ்ரீராம் வீட்டுக்கு மாட்டி வைக்கச் சொன்ன பூதம், கறுப்புக் கயிறு.

//வீட்டு வாயிலில் கறுப்புக் கயிறில் எலுமிச்சம்பழம், மிளகாய் வையுங்கள். அல்லது பூதத்தை மாட்டி வையுங்கள்.//
மேய்ச்சலுக்கு நிலமும் , தாகத்திற்குத் தண்ணீரும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்கிறார்கள் கால்நடைகள் . இவர்களுக்கு இது கிடைப்பது அரிதான விஷயம் இல்லையா இப்போது?

மாட்டின் நிழலும் , வான் மேகமும்   தண்ணீரில்  தெரிவதைப் பாருங்கள்
வைகை ஆற்றைச் சுற்றி சுவர் முழுவதும் எழுப்பும் வரை இவர்களுக்கு  இவை கிடைக்கும்.

ஆட்டுக்குட்டியின் நிழல் தண்ணீரில் தெரிவதைப் பார்த்தீர்களா? மலை முகட்டின் மேல் நிற்பது போல் இல்லை?

(மேலே உள்ள  படங்கள் எல்லாம் வாகனத்தில் போகிற போக்கில் அலைபேசியில் எடுத்த படங்கள்  )

வெயில் ! வெயில் !

இந்த  சின்ன டிரம் தண்ணீரில் குளியலா? 
"இந்த டிரம் தண்ணீர் எல்லாம் பத்தாது" கோவில் குளத்தில் தண்ணீர் இல்லை

"என்னை ஆத்துக்குக் கூட்டிப் போங்கோ, ஆனந்தக் குளியல் போட"


திருப்பரங்குன்றம் கோவில் முன்பு போயிருந்தபோது எடுத்த படம் முகநூலில் பகிர்ந்து இருக்கிறேன்.இங்கே  பகிர்ந்தேனா என்று நினைவு இல்லை. 

குட்டி யானை டிரம் நீரில் விளையாடி கொண்டு இருந்தது. சும்மா யானை சொல்வதாக  கற்பனை.




என் கணவர் வரைந்த படம்.

அந்தக்காலத்தில் பானையில் கல்லைப் போட்டு தண்ணீரை மேலே வரவழைத்து குடித்த காக்கை.

கோடை காலம் வந்து விட்டதால் தண்ணீர் தேடித் தவிக்கும் பறவைகள்.
பறவைகளுக்கு , விலங்களுக்கும் தண்ணீர் வையுங்கள்.
வெயிலுக்கு இதமாய்  மரக்கிளை   ஊஞ்சலில் அமர்ந்து பாடத் தயார் ஆகிறது ஆண் குயில்
மழை பெய்யும்போது எங்கள் குடியிருப்பில் பெரிய நீச்சல் குளம் உருவாகும் இந்த இடத்தில் 

சஜங்கர் அரண்மனையில் செய்தது போல் மழை நீர் சேகரிப்பு  செய்தால் நன்றாக இருக்கும்.
 எங்கள் ப்ளாக்கில்  திருமதி. ரமா ஸ்ரீநிவாசன் பகிர்ந்த  சஜங்கர் அரண்மனை மழை நீர் சேகரிப்பு.

//ஒவ்வொரு சொட்டு மழை நீரும் ஒவ்வொரு மாடியின் மேல் கட்டப் பட்டிருக்கும் தொட்டியில் சேகரிக்கப் பட்டு மக்களுக்கும் அரண்மனை உபயோகத்திற்கும் அளிக்கப் பட்டது. இதைத் தாண்டியும் விழும் மழை நீர் கட்டிடத்திலேயே அமைக்கப் பட்ட குழாய்கள் வழியாக நிலத்தடி நீர் தொட்டிகளைச் சென்றடைந்து சேகரிக்கப் பட்டது.  1,95,500 லிட்டர் நீர் வரை  சேமிக்கப் பட்டு, அரண்மனைவாசிகளின் தேவைக்கு உபயோகிக்கப்பட்டு வந்தது என்பதை அவ்வரண்மனையில் வரலாறு மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்கின்றோம்.//
-நன்றி ரமா ஸ்ரீநிவாசன்
இப்படி மழை பெய்யும்  நேரம் தண்ணீர் வீணாக வெளியேறுவது  மனதுக்கு கஷ்டம்.  மழைத் தண்ணீரைச் சேமிப்பு செய்தால் வெயில்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்காது. எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். செயலுக்கு வர வேண்டும் .


வீட்டில் மழை நீர் சேமிப்பு செய்யாவிட்டால் இப்படி தண்ணீர் லாரிகளை  நம்பி தான் இருக்க வேண்டும். அதுவும் எவ்வளவு காலம் வரும்?
இவர் கையில் என்ன? 
கொசு மருந்து அடிக்கிறார் 

 31 வரை பள்ளிகள் விடுமுறை. மழலையர் பள்ளி, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை விட்டாச்சு.





"வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
                   வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போடுவோம்"

வெயிலில் விளையாடும் இவர்களை அம்மா, பாட்டி,  சாப்பிடக் கூப்பிட்டு மல்லுக்கட்டி கொண்டு இருக்கிறார்கள்.

                                                                  வாழ்க வளமுடன்

62 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் சிறப்பு.  நைலான் குடங்கள்!  சைக்கிளில் கட்டி எடுத்துப்போன நாட்கள் நினைவுக்கு வருகின்றன.    கடைகள் மூடி இருப்பதால்தான் அவருக்கு வியாபாரம் இன்னும் நன்றாய் இருக்கும்!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      உங்கள் ஞாயிறு படங்களைப் பார்த்தவுடன் நம்மிடம் இருக்கும் படங்களை போடலாம் ஞாபிறு என்று நினைத்தேன். முன்பும் ஞாயிறு பதிவாய் வரும் அறிவிப்பு கொடுத்து போட முடியவில்லை. பார்ப்போம்
      நீங்கள் சொல்வது போல் அவருக்கு நன்கு வியாபாரம் நடக்கும். ஞாயிறு திருமலை நாயக்கர் மஹால் பக்கம் வியாபாரம் செய்கிறார்.

      நீக்கு
  2. கீதா அக்கா சொல்லி இருக்கும் கருப்புக்கயிறு எலுமிச்சம் பழத்துடன் வாங்கி ஏற்கெனவே கதவில் மாட்டி இருக்கிறேன்.  பூதம் மாட்டவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்புக்கயிறு படிகாரம் மாட்டுவார்கள். படிகாரம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்பார்கள்.

      நீக்கு
  3. யானைப்பசிக்கு சோளப்பொரி என்பதுபோல யானைக்குளியலுக்கு டபரா தண்ணீரா?  ஹா..  ஹா..  ஹா...  கொசு அதிகமோ அங்கு? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நீங்கள் சொல்வது போல் யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றதுதான் .
      கொசு அதிகம் இல்லை, இருந்தாலும் மழை காலத்தில் வந்து அடித்து செல்வார்கள்.
      பூத் தொட்டிகளை பார்த்து செல்வார்கள்.

      நீக்கு
  4. ஸாரின் படம் பார்த்த நினைவு இருக்கிறது.  சிறப்பு.  பாஸ் இப்போதிருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் தினமும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் படம் முன்பே போட்டு விட்டேனா ! மொட்டை மாடியில் தினமும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது நல்லதுதான். மகிழ்ச்சி.

      நீக்கு
  5. வீணாகும் தண்ணீர் வேதனை.  ரஸ்ரீ கட்டுரையை சொல்லி இருப்பது சிறப்பு.  

    பதிலளிநீக்கு
  6. வீணாகும் தண்ணீர் வேதனைதான் . உங்கள் குடியிருப்பு வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு செய்கிறார்களா?
    ஒவ்வொரு கோடை சமயமும் யாரவது மழை நீர் சேகரிப்பு செய்து இருப்பதை பகிர்வேன். இந்த முறை ரஸ்ரீ கட்டுரையில் வந்தது நன்றாக இருந்தது அதனால் பகிர்ந்து விட்டேன்.

    உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அருமையான படங்கள் அன்பு கோமதிமா.
    மதுரையையே சுற்றி வந்த மகிழ்ச்சி.
    இத்தனை மழை பெய்தும் சேமிக்க முடியாமல் போகிறதே.
    எங்கள் வீட்டில் கிணற்றில் இருப்பது மழை நீரே.

    வைகையும்,குழந்தைகளும் ,யானைக்குட்டியும்
    வெகு அழகு.
    அவதி இல்லாமல் கழியட்டும் கோடை.
    அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      மழை பெய்தசமயம் சேமித்து இருந்தால் இந்த கஷ்டம் இருக்காதுதான்.
      ஒரு நாளைக்கு தண்ணீர் நாலு லாரி தேவைபடுகிறது குடியிருப்புக்கு.

      கிணற்றில் மழை நீரை சேகரிப்பு செய்தவர்கள் வீடுகள் எல்லாம் தண்ணீர் பற்றாகுறை இல்லாமல் இருக்கிறார்கள்.
      உங்கள் வீட்டில் மழைநீரை கிணற்றில் சேகரிப்பது மகிழ்ச்சி.
      இங்கு இரண்டு மாதமாக மழை இல்லை. கோடை மழை பெய்யும் அப்போது சேகரித்தால் நல்லது.
      உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  8. சாலைக் காட்சிகள் சுவாரஸ்யம். கருப்புக் கயிறில் எலுமிச்சையும் பிளாஸ்டிக்கில் வருகிறதா அல்லது பூசணி வடிவமா? கால்நடைகளுக்குக் கிடைக்கும் நீரில் பிளாஸ்டிக் கழிவுகள். ஆம், ஆடுகள் மலை உச்சியில் இருக்கும் தோற்றத்தைக் கொடுக்கின்றன நீரில் அவற்றின் நிழல்கள். யானைப் பசிக்குச் சோளப் பொரி போல தண்ணீர் தட்டுப்பாடின் பாதிப்பு அதற்கும். சாரின் படம் முன்னர் பகிர்ந்ததென்றே நினைக்கிறேன். எங்கள் குடியிருப்பிலும் கொரானா அச்சத்தால் கோடை விடுமுறை ஆரம்பமாகி குழந்தைகள் குதூகலமாக இருக்கிறார்கள்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

      கருப்புக் கயிறில் எலுமிச்சையும் பிளாஸ்டிகா என்று தெரியாது. பெட்ரோல் பங்கில் அந்த வண்டி நின்று கொண்டு இருந்த போது எடுத்த படம். ஸ்ரீராம் வாங்கி மாட்டி இருப்பதாக சொல்கிறார் அவரை கேட்க வேண்டும்.

      வண்டியில் இருப்பது தேங்காய் போல் இருக்கிறது, அதற்கு அடியில் சங்கு தொங்குகிறது.

      நீர்நிலைகள் எல்லாம் குப்பைகிடங்காமாறி வெகு காலமாக ஆகி விட்டதே ராமலக்ஷ்மி.
      ஆற்றின் அருகில் இருப்போரின் வீட்டுக் குப்பைகள், கழிவு நீர் வடிகாலக இருப்பதை தடுக்க தான் ஆற்றைச்சுற்றி தடுப்பு சுவர் கட்டி வருகிறார்கள்.

      காரில் போகும் போது எடுத்த படங்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது தான் ஆட்டின் நிழல், மாட்டின் நிழல் தண்ணீரில் தெரிவதைப் பார்த்தேன். அதையும் நீங்கள் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      //எங்கள் குடியிருப்பிலும் கொரானா அச்சத்தால் கோடை விடுமுறை ஆரம்பமாகி குழந்தைகள் குதூகலமாக இருக்கிறார்கள்.//

      உங்கள் குடியிருப்பிலும் பிள்ளைகள் விளையாடுவது மகிழ்ச்சி.குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து அடைக்காமல் விளையாடவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டுக்குள் வந்தவுடன் கை, கால் கழுவி விடவேண்டும்.அதை நாம் ஏற்கனவே குழந்தைகளை செய்ய சொல்வோம். இப்போது வலியுறுத்தப்படுகிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் அழகு. ட்ரம் நீரில் குளிக்கும் யானை - அந்தோ பரிதாபம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      யானை ட்ரம் நீரில் விளையாடி கொண்டு இருந்தது. அதைதான் நான் இப்படி போட்டேன்.
      சும்மா கற்பனையாக யானை சொல்வதாக சொன்னேன் வெங்கட்.
      குளிக்க வைக்க எங்காவது கூட்டி போவார்கள் என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. படங்கள் எல்லாம் நன்றாக இருந்தன. மழை பெய்யாத காலத்தில் கொசு மருந்தா?

    பசங்களுக்கு லீவு விட்டாச்சுன்னா, வளாகத்தில் ஒரே சத்தமாக இல்லையா? இங்கு இரவு 11 மணி வரை விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      படங்கள் நன்றாக இருந்தன என்று சொன்னதற்கு நன்றி.
      அந்த படம் இப்போது எடுத்தது இல்லை. ஒரு மழை பெய்தால் கொசு மருந்து அடிக்க வந்து விடுவார்கள். அப்போது எடுத்த படத்தை இப்போது பகிர்ந்தேன்.

      ஆமாம், சத்தமாக இருக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம் இரவு அவர்கள் தூங்க போகும் வரை இருக்கும்.

      நீக்கு
  13. படங்களும் அவைகளுக்கு சொன்ன பாடங்களும் அருமை சகோ சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்.

    தண்ணீரின் மகிமையை நாம் இன்னும் உணரவில்லைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      படங்களையும், கருத்தையும் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் என்று சொன்னதற்கு நன்றி.

      தண்ணீர் மகிமையை நாம் உணர வேண்டும். அளவோடு பயன்படுத்தும் முறையை பின்பற்ற வேன்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. சமீபத்தில் தாய்லாந்தில், சுற்றுலாப் பயணிகள் குறைவால் அங்கிருக்கும் குரங்குகள் உணவு இல்லாமல் ரொம்பவும் அஜிடேடட் ஆக இருக்கும் காணொளியைப் பார்த்தேன். விரைவில் பிரச்சனை தீரணும். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் வைக்கணும்.

    சாரின் படத்தை ரசித்தேன். பறவைக்குப் பதில் விலங்கினை உபயோகித்திருக்கலாமோ? அவைகளும் கஷ்டப்படுகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுலா பயணிகளைதான் பழமுதிர்சோலை குரங்குகளும் இருக்கிறது. தாய்லாந்து குரங்குகள் போல.

      உணவு கிடைக்கவில்லை என்றால் அதன் எதிர்ப்பையும், அடித்து பிடித்து சாபிடும் நிலைக்கும் தள்ளப்படும் தான்.

      திருக்கழுகுன்றத்தில் குரங்குகள் நம் கையில் உள்ளதை பிடிங்கி கொண்டு ஓடும்.
      படியில் ஏறும் போது கம்பு வைத்துக் கொண்டு விரட்டிக் கொண்டு ஏறுவார்கள் .

      பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் தண்ணீர் , உணவு முடிந்தவரை கொடுப்போம்.இப்போது அவை நம்மை அண்டி வாழ்கிறது.

      இந்த படம் சார் இந்த பதிவுக்கு வரைந்து கொடுத்தது இல்லை.
      பறவைகளின் தாகம் பற்றிய பதிவுக்கு வரைந்து கொடுத்தது முன்பு.
      விலங்குகள் தண்ணீர் குடிப்பதை கேட்டு இருந்தால் வரைந்து தந்து இருப்பார்கள்.
      இன்னொரு பதிவில் வரைந்து தரச்சொல்லி போடுகிறேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. படங்கள் அத்தனையும் மிக அழகு. சில படங்கள் மிகவும் யதார்த்தமாக, சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருக்கின்றன. பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  16. அழகான படங்கள் அம்மா...

    குட்டி யானை சேட்டை அருமை...

    காக்கை ஓவியம் சிறப்பு... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    தண்ணீர் வீணாகுவது வருத்தம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் வாழ்க வளமுடன்
      குட்டி யானை எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைத்தேன்.
      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பதிவு படங்களுடன் நன்றாக உள்ளது. வெய்யில் காலம் ஆரம்பித்த பின்னர்தான் நாம் தண்ணீரின் தேவையை உணர்கிறோம். அதுவரை வீணடிக்கும் தண்ணீரை சேமிக்க மறந்து விடுகிறோம். பறவை விலங்கினங்களுக்கு நாம்தான் தண்ணீர் வைக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் சரி. அவைகள் பாவம் என்ன செய்யும்.?

    எ. பியில் இடம்பெற்ற சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் சஜங்கர் அரண்மனை கட்டுரையில் மழைநீர் சேகரிப்பை பற்றி தங்கள் பதிவிலும் கூறியது பொருத்தமாக உள்ளது. அந்தக் காலத்திலேயே மழை நீர் சேகரிப்பை பற்றி மன்னர்கள் யோசித்து அரண்மனை கட்டுமானம் செய்தது குறித்து ஆச்சரியமுற்றேன். நாம் இன்னமும் இயற்கை தரும் மழைநீரை வீணடிக்கிறோம்.

    மேய்க்கும் மந்தைகளும், வான் மேகமும் தண்ணீரில் கண்டு கொண்டேன். ஆமாம் நீங்கள் கூறியது உண்மைதான்...மலை முகட்டில் மேய்வது போல் தெரிகிறது. ஒரு சிறந்த புகைப்பட கலைஞராக எல்லவற்றையும் படமெடுத்து இருக்கிறீர்கள். தங்கள் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தங்கள் கணவர் வரைந்துள்ள ஓவியம் மிகவும் நன்றாக உள்ளது. அவருக்கும் என் பாராட்டுகளை தெரிவியுங்கள்.

    யானைகள் படங்கள் நன்றாக உள்ளது. அவைகளுக்கும் தண்ணீர்தான் பிரதானம். ஒரு சிறு டிரம் தண்ணீர் எப்படி போதும்...

    /என்னை ஆத்துக்குக் கூட்டிப் போங்கோ, ஆனந்தக் குளியல் போட/
    தங்கள் கற்பனை சிறப்பாக உள்ளது.

    எந்த காலத்திலும் கொசுக்கள் என இப்போதெல்லாம் வந்து விட்டது. இங்கும் அடிக்கடி கொசுவுக்கு என மருந்தடிக்கிறார்கள். அதை சுவாசிக்கும் நமக்கு என்ன தீங்குகள் வருமோ? ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திக் கொண்டுள்ளது.

    குழந்தைகளுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சிதான். அவர்களுக்கு எந்த கவலையுமின்றி விளையாட்டிலேயே பாதி நாள் கழிந்து விடும். அந்தப் புகைப்படத்தை பார்த்ததும், நாமும் குழந்தைகளாகவே இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் வருகிறது. அத்தனைப் படங்களும், இந்தப் பதிவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்அது போல
      தண்ணீரின் அருமை கோடையில் தான் தெரியும்.
      தண்ணீருக்கு தவிக்கும் பறவைகள், விலங்களுக்கு வாசலில் தண்ணீர் வைக்கலாம், மொட்டை மாடியில் வைக்கலாம்.

      பழைய காலத்தில் மழை நீரை வீணாக்காமல் இருந்து இருக்கிறார்கள்.
      நாமே பாத்திரங்களில் மழை நீரை பிடித்து இருக்கிறோம் முற்றத்தில் விழும் நீரை.

      மேயும் விலங்குகளின் படங்களை ரசித்து கருத்து சொன்னது அருமை.
      என் கணவருக்கு உங்கள் பாராட்டுக்களை தெரிவித்து விட்டேன்.
      யானையின் கற்பனை உரையாடலை ரசித்தமைக்கு நன்றி.

      கொசு எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் இருக்கிறது நீங்கள் சொல்வது போல்.
      மருந்து அடிப்பது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கிறது. கொரோனா அச்சுறத்தல் நிறைய வந்து விட்டது. எல்லோரும் கவனமாய் இருக்க வேண்டும்.


      //நாமும் குழந்தைகளாகவே இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் வருகிறது.//
      ஆமாம், எனக்கும் தோன்றும்.
      என்றும் குழந்தையாக இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.








      நீக்கு
  18. எல்லாப் படங்களும் சிறப்பு. இங்கேயும் வழக்கம் போல் பறவைகளுக்குத் தண்ணீர், உணவு வைக்கிறோம். முதலில் சாதம் சாப்பிடவில்லை. இப்போக் கொஞ்சம் சாப்பிட ஆரம்பித்துள்ளன. ஆனாலும் ஓமப்பொடி, காராபூந்தி வேண்டும். :)))) என்றாலும் எங்க பால்கனிக் கதவுகளை மூடியே வைத்திருப்பதால் திறந்தால் எல்லாம் ஓடி விடும்! எதிரே உள்ள நெட்டிலிங்க மரத்தில் உட்கார்ந்து கொள்ளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      பறவைகளுக்கு , உணவும், தண்ணீரும் வைப்பது மகிழ்ச்சி.
      குழந்தைகள் போல் பறவைகளுக்கும் தின்பண்டம் பிடித்து இருக்கிறது.
      நெட்டிலிங்க மரத்தில் உடகார்ந்து இருப்பதை பார்க்கவே அழகுதான்.

      நீக்கு
  19. இந்த மாதிரி வாளி, குடங்களை எல்லாம் தண்ணீருக்கு எடுத்துக் கொண்டு போய் அலைந்த காலமே இல்லை. அப்படி எல்லாம் தண்ணீர்க் கஷ்டங்களை அனுபவிக்கவும் இல்லை. கடவுள் அனுகிரஹம். ஸ்ரீராம் அன்றே கறுப்புக் கயிறு கட்டி இருப்பதாகச் சொல்லி இருந்தார்.

    ஆனைக்குட்டி பாவம்! குளத்தில் இறங்கிக் குளித்தால் அதற்கு சுகம். ஆடு, மாடுகள் இருக்கும் கொஞ்ச நீரிலும் இறங்கிக் குடிக்கின்றனவே. சென்னையில் கொரட்டூர் ஏரியைக் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். அரசோ, மாநகராட்சியோ என்ன செய்யப் போகிறது தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீருக்கு கஷ்டபடவில்லை என்பது மகிழ்ச்சி.
      சிலரின் சுயநலத்தால் பலர் கஷ்டப்படுகிறார்கள். குடித்த்ண்ணீரை மோட்டார் போட்டு எடுத்து விடுகிறார்கள் சிலர். அதனால் பலர் வீடுகளுக்கு தண்ணீர் வருவது இல்லை.

      ஸ்ரீராம் கறுப்பு கயிறு கட்டி இருப்பதாய் சொல்லி இருந்தார்.
      ஆடு, மாடுகளுக்கு அந்த நீர் போதும் . ஏரிகளை விற்பதை தடை செய்ய வேண்டும்.
      ஏரியில் வீடு கட்ட விட்டு அப்புறம் அது இடிந்து விழும் போது விழித்துக் கொள்வார்கள்.
      முன்பே தடுப்பதும், மழை நீரை ஏரிகளில் சேகரிக்கவும் வழி செய்ய வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  20. உங்களது ஒவ்வொரு பதிவும் இவ்வுலகம் நமக்கு மட்டுமில்லை அனைத்து உயிர்களுக்கும் சொந்தம்னு உணர்த்துது .படங்கள் எல்லாம் அழகு குட்டி யானை கியூட்டோ கியூட் .டாப்ஸ்லிப்பில் ஒரு குட்டி உருண்டு விளையாடுச்சி என்னுடன் :) அங்கும் ஸ்கூல் விடுமுறை விட்டாச்சா இங்கே மகளுக்கு பல்கலைக்கழகம் மூடிட்டாங்க எப்போ திறப்பாங்கன்னு தெரில 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான் இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல.
      யானை பிடித்து இருக்கா? குட்டி யானையை பார்த்தாலே நமக்கு மகிழ்ச்சிதான் இல்லையா ஏஞ்சல்.
      குட்டி உருண்டு விளையாடிச்சா? மகிழ்ச்சியாக இருந்து இருக்கும் அந்த தருணம்.
      எல்லாம் கொரானா வைரஸ் செய்யும் வேலை.விடுமுறை பிள்ளைகளுக்கு.
      மகளுக்கும் பல்கலைக்கழகம் மூடிட்டாங்களா? நீங்கள் உங்கள் வேலைக்கு போகிறீர்களா? எல்லோரும் பத்திரமாக இருங்கள்.

      நீக்கு
    2. அக்கா நான் மெயின் ஹாஸ்பிடலில் இல்லை அங்கு இருந்தா  பயத்தில் ஓடியிருப்பேன் .இது மனநலம் தனி ஹாஸ்பிடல் .இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் வரலை அங்குள்ளோருக்கு .அது உள்ளேயே இருப்பவர்கள் இனி புதுசா வெளியில் இருந்து அட்மிட் ஆகும்போதுதான் தெரியும் 

      நீக்கு
    3. //இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் வரலை //

      அப்படியே தொடரட்டும் ஏஞ்சல்.
      எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் அதுதான் பிரார்த்தனை.

      உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
      பேரனுக்கும் விடுமுறை விட்டு விட்டார்கள்.

      நீக்கு
  21. //வெயிலுக்கு இதமாய் மரக்கிளை ஊஞ்சலில் அமர்ந்து பாடத் தயார் ஆகிறது ஆண் குயில்../

    குயில் என்று பொதுவாகத் தான் தெரிந்திருந்தது. அவற்றில் ஆண்--பெண் வித்தியாசங்கள் தெரிந்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டவுடன் தான், ஆண் குயில் கூட பாடுமோ என்று நினைப்பு வந்தது. குயில் போலக் குரல் அவளுக்கு என்று சொல்கிறோம். குயில் போல குரல் அவனுக்கு என்று ஏன் சொல்வதில்லை?.. தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      ஆண் குயில் கறுப்பு கலரில் கண்கள் சிவப்பாக இருக்கும்.பெண்குயில் கறுப்பும் வெளுப்பு புள்ளிகளுடன் இருக்கும். இரண்டு பதிவுகளுக்கு முன் கூட பெண்குயில் படம் போட்டு இருந்தேன்.
      பெண் குயிலை விட ஆண் குயில் குரல் தான் நன்றாக இருக்கும்.

      ஆண்குயில் முதலில் தாழந்த குரலில் தன் கூவுதலை ஆரம்பித்து பின் தொடர்ந்து பாடும். பெண் குயில் எடுத்த்வுடன் கிக் கிக் என்ற தொடர்ந்து ஓலிக்கும் பாட்டே பாடும்.
      ஆண் குயில் பாட்டுத்தான் நன்றாக இருக்கும். வேப்பமரத்தில் அமர்ந்து இருக்கும் பெண் குயில் படங்கள் நிறைய பகிர்ந்து இருக்கிறேன் சார்.

      https://mathysblog.blogspot.com/2014/07/blog-post_12.html இந்த சுட்டியில் போனால் பெண்குயில் படங்கள் இருக்கிறது சார்.


      நீங்கள் சொல்வது போல் குயில் போல குரல் அவனுக்கு என்று சொல்லலாம்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  22. நான் லேட்டூ கோமதி அக்கா...

    போஸ்ட் பார்க்க அழகாக இருகு, ஆனா தண்ணீர்ப் பஞ்சத்தை நினைக்க மனம் கனக்கிறது, இலங்கையில் எங்களுக்கு அங்கு தண்ணித் தட்டுப்பாடே இருப்பதில்லை, வீட்டுக்கு வீடு கிணறு இருக்கும் ஊர்களில்..

    பலவர்ணக் குடங்கள் அழகு... பிளாஸ்ரிக்கை தடை பண்ணியும் குடங்கள் விற்கப்படுகின்றன போலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      இலங்கை மரங்கள், நதிகள், அருவிகள் என்று இயற்கை அள்ளி கொடுத்த கொடைகளுடன் இருக்கே!தண்ணீர் பஞ்சம் எப்படி வரும்?
      இங்கு அப்படி இருந்தது தான் . இயற்கை பாழ்படுத்தியபின் தண்ணீர் எங்கிருந்து வரும்?
      ஜனத்தொகையும் அதிகம்.

      அம்மாவீட்டு கிணறு ஒரு காலத்தில் சொம்பில் எட்டி எடுக்கலாம் அவ்வளவு நீர் இருந்தது 1973ல் . அப்புறம் எங்கள் அம்மா வீட்டைச்சுற்றி வீடுகள்வந்து அனைவரும் ஆழ்துளை கிணறு தோண்டியபின் தண்ணீர் கிணற்றில் வற்றி விட்டது.

      பலவர்ண்க் குடங்கள் அழகு மட்டும் இல்லை, தூக்கி வர எளிது தலையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றும் தூக்கி வருவார்கள் . சைக்கிளில், வண்டிகளில் கட்டி வரவும் வசதி.
      இதற்கு தடை இல்லை போலும்.

      நீக்கு
  23. உண்மைதான் பிழைப்புக்காக எவ்வளவு கஸ்டப்படுகின்றனர் மக்கள்... இவர்களுக்கு உடல் நலமில்லை எனில், வீட்டில் சமையலுக்கு என்ன பண்ணுவார்கள் என நினைச்சுப் பார்ப்பதுண்டு நான்.

    ஓ கறுப்புப் பூதம்.. ஸ்ரீராம் வைச்சிருப்பார்.. பின்பு அதைப்பார்த்து அவரே பயந்திருப்பார்ர் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் தினம் பிழைப்புக்கு படும் கஷ்டம் அதிகம் தான். ஒரு நாள் உழைக்கவில்லை என்றாலும் இறைவன் தான் அவர்கள் வீட்டின் சமையலுக்கு உதவ வேண்டும்.

      கறுப்புப் பூதம் வாங்கவில்லையாம் கறுப்பு கயிறு மட்டும் வாங்கி கட்டி இருக்கிறார்.
      கறுப்புப் பூதம் நம்மை பயமுறுத்துகிறது. பூசணியில் இது போல பூதம் வரைந்த படம் மாட்டி இருப்பார்கள் சில வீடுகளில்.

      நீக்கு
  24. ஓ அது வைகை ஆறோ அருமையான இடம், ஆனா குப்பை போட்டு அசிங்கமாக இருக்குது.

    //ஆட்டுக்குட்டியின் நிழல் தண்ணீரில் தெரிவதைப் பார்த்தீர்களா? மலை முகட்டின் மேல் நிற்பது போல் இல்லை?//

    ஹா ஹா ஹா ஓம் அப்படித்தான் தெரியுது...

    ஓ குட்டி யானைப் பிள்ளையைக் கட்டி வச்சிருக்கினமே.. அம்மாவிடம் இருந்து பிரிச்சாச்சோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு, குளம், குட்டை எல்லாம் இப்படித்தான் குப்பை கூளங்களை கொட்டி வருகிறார்கள் மக்கள்.

      மலை முகட்டில் இருக்கும் ஆட்டுகுட்டிகளை ரசித்தமைக்கு நன்றி.

      குட்டி யானை மட்டும் தான் இருக்கிறது கோவிலில்.

      நீக்கு
  25. //என் கணவர் வரைந்த படம்.//

    ஆஆஅ காகமும் தண்ணீர்க்குடமும் கதையைச் சொல்லுது படம்.. அழகு..

    குயிலே குயிலே குயிலம்மா...

    ஓ இப்படிப் பாய்கிறதே தண்ணி, சேர்த்து வைத்தால் நன்று.

    இப்போ நுளம்புக் காலம் தொடங்கி விட்டதோ.. மருந்து அடிப்பவருக்கு வேலை வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவர் வரைந்த தாகம் உள்ள காகத்தின் கதை படம் பிடித்து இருக்கா? நன்றி.

      குயிலே குயிலே குயிலப்பா( ஆண் குயில்)
      மழைத்தண்ணீரை சேமித்தால் நன்றுதான்.

      நுளம்புக்கு காலம் இல்லை நேரம் இல்லை எல்லா நேரமும் இருக்கிறது.

      மருந்து அடிப்பவர் நினைத்துக் கொண்டால் வருவார். மழை பெய்தால் வருவார்.

      நீக்கு
  26. எங்களுக்கும் மார்ச் கடசியோடு விடுமுறை இங்கு, ஆனா கொரோனாவால், ஏழியாக விடுமுறை விடக்கூடும் என எதிர்பார்க்கிறோம்...

    பதிவு அழகு கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
  27. பேரனுக்கும் விடுமுறை சீக்கீரம் விட்டு விட்டு விட்டார்கள். ஊருக்கு வர முடியாமல் இருக்கும் போது விடுமுறை விட்டு என்ன பயன் என்று.

    உங்களுக்கு விடுமுறை இல்லையா?

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. கண்ணில் கண்ட காட்சிகள்...அனைத்தும் வித்தியாசம் மா ...

    ஆட்டுக்குட்டியின் நிழல் தண்ணீரில் தெரிவதைப் பார்த்தீர்களா? மலை முகட்டின் மேல் நிற்பது போல் இல்லை?.....ஆமா மா அழகா இருக்கு ....

    "இந்த டிரம் தண்ணீர் எல்லாம் பத்தாது" கோவில் குளத்தில் தண்ணீர் இல்லை
    ...

    தண்ணி பத்தாது தான் ஆன யானையார் பார்க்க so cute ..

    இங்கும் பசங்களுக்கு விடுமுறை , விளையாட்டு வகுப்புகளுக்கும் அனுப்பவில்லை ...வெளியே விளையாடவும் செல்ல வில்லை ...

    அதனால் முழு நாளும் வரைதல் , கொஞ்சம் படிப்பு , டிவி என வித்தியாசமாக நாட்கள் நகர்கின்றன ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு பிரேம், வாழ்க வளமுடன்
      பதிவில் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      குழந்தைகள் வீட்டிலிருந்து விளையாடுவதும், வரைதல், படிப்பு, டிவி என்று பொழுது போவது நல்லது தான்.

      அவர்கள் வரைவதை ஊக்கப்படுத்தி வாருங்கள் குழந்தைகள் வரைந்த படத்தை பதிவில் போடுங்கள் . நாங்களும் பார்க்கிறோம்.

      நீக்கு
  29. அழகழகான படங்களுடன் பதிவு அருமை...

    ஆனைக்குட்டியின் படங்களும் மழைச்சாரல் படங்களும் மனதிற்கு மகிழ்ச்சி...

    மக்களுக்கும் ஆக்கபூர்வமான எண்ணங்கள் வரவேண்டும்...

    பதிவு பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லுகின்றது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      படங்கள் மனதுக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்று சொன்னது எனக்கு மகிழ்ச்சி.

      மக்களுக்கு ஆக்கபூர்வமான எண்ணங்கள் வருவது நன்மைதான்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  30. ஓடும் வண்டியிலிருந்து எடுத்ததே இத்தனை தெளிவாக வந்திருக்கிறதே! செல்போனை காமிரா மோடில் வைத்திருப்பீர்களா? நான் காணும் சில அழகான காட்சிகளை படமெடுக்கலாம் என்று காமிராவை ஆன் பண்ணுவதற்குள் அந்த காட்சியை தாண்டி விடுவோம். உங்கள் கருத்துக்களும் நன்றாக இருக்கின்றன.ஒருமுறை பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் யானை குழாயில் தண்ணீர் குடித்தது. அதை படமெடுத்தேன். ஆனால் குழாய்க்கும் யானையின் முகத்திற்கும் இடையில் ஒரு தூண் இருந்ததால் யானையின் முகம் முழுமையாக வரவில்லை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      தூரத்தில் எடுக்க வேண்டிய காட்சி வந்தவுடன் ஆன் செய்து விடுவேன். எடுக்கும் தூரத்தில் வந்தவுடன் எடுத்து விடுவேன்.

      சில கோவில் யானைகளை எடுத்து இருக்கிறேன். மணக்குள விநாயகர் கோவில் யானையை நான் பார்க்கவில்லை.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  31. மன்னிக்கவும் அக்கா. எனக்கு இப்போஸ்ட் கண்ணில தட்டுபடவே இல்லை. நீங்க அங்கு சொல்லியிருக்காவிடில் நானும் பார்த்திருப்பேனோ தெரியாது.
    பலவர்ண குடங்கள் எனக்கும் ஆசை. எங்களிடம் இது இல்லை ஊரில்.. எவர்சில்வரில், மண்பானையும்தான் வைத்திருந்தோம்.கோடு போட்ட குடம் போல அந்த டிசைனில் எங்கூரில் மிட்டாய் விற்றார்கள். பாடசாலை நாட்களில்.அடிக்கடி வாங்கி சாப்பிடுவேன்.
    சுண்டல் வியாபாரி பாவம் கஷ்டத்துக்கு பலன் அனுபவிக்கட்டும். பூதம்,கறுப்பு கயிறு ஊரில் கட்டியது. இங்கு செய்யமுடியாது. வீட்டினுள் திருஷ்டி கணபதி வைத்திருக்கிறேன் அக்கா.
    வைகை ஆற்றினை இப்படி அசுத்தமாக்கி வைத்திருக்கிறாங்களே மனதுக்கு கஷ்டமா இருக்கு. தண்ணீருக்கு எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு உங்கள் இடத்தில்... படத்தில் நீங்க கூறியிருப்பதுபோல பிம்பங்கள் அழகா இருக்கு.
    ஆஹா..குட்டியானைபிள்ளை எவ்வளவி அழகா இருக்கார். எனக்கு யானை என்றால் சரியான விருப்பம். எல்லாமே சின்னதில் ரசிக்ககூடியதா இருக்கும்.(ஆடு,பசு,பூனை,நாய்,யானை,குரங்கு என சின்னதில் க்யூட். அதுபோல குட்டி குழந்தைங்களும் க்யூட். சின்ன சின்ன சேஷ்டைகள் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.)
    சார் படம் அழகா வரைந்திருக்கிறார்.
    குயிலார் வந்திருக்கிராஆ.. கூவும்போது அழகா இருக்கும். கேட்டிட்டே இருக்கலாம். தண்ணீர் வீணாகி விடாமல் சேகரித்தால் நல்லது. ஏதாவது குடியிருப்பாளர்கள் ஆவண செய்தால் எல்லாருக்கும் பயன்படும்.
    படங்கள் எல்லாமே ஒரு கதை சொல்கின்றன. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      உங்களை காணோமே என்று நினைத்தேன். அதிரா பதிவில் பார்த்தபின் தான் நான் பதிவு போட்டது உங்களுக்கு தெரியவில்லை போலும் என்று நினைத்தேன்.


      பலவண்ண நைலான் குடம் வெயிட் இருக்காது,என்பதால் வித விதமாய் அழகாய் இருக்கிறது குடம். என்னிடமும் கிடையாது. வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வர இது வசதி.
      பலவர்ணத்தில் மிட்டாய் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.

      வைகை ஆறு என்று இல்லை ஆறுகள் அனைத்தையும் மக்கள் அசுத்தப்படுத்தி தான் வைத்து இருக்கிறார்கள். எப்போதுமே மதுரை, கோவில்பட்டி , சிவகாசி, போன்ற ஊர்களில் தண்ணீர் தட்டுபாடு முன்பே உண்டு. இப்போது இன்னும் அதிகம்.

      சுண்டல் வியாபாரிக்கு மார்ச் 31 வரை இனி கஷ்டம் தான் சுற்றுலா தலங்கள் மூடி இருக்கும் அவருக்கு வியாபாரம் கஷ்டம் தான்.

      கண் திருஷ்டி பிள்ளையார் படம் வைக்கலாம் தான்.

      யானை, ஆடு, மாடு மற்றும் பதிவில் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      தண்ணீர் சேகரிப்புக்கு யாராவது முன் எடுத்து செய்தால் எல்லோருக்கும் நல்லது.
      உங்கள் வரவுக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி அம்மு.
      நீங்களும் பத்திரமாக இருங்கள். வாழ்த்துக்கள்.

      நீக்கு
  32. கோடையும் நீரும் ....வற்றாது இருக்கட்டும் .

    அழகிய படங்கள் பல கதைகள் பேசின.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு