சனி, 21 டிசம்பர், 2019

அஷ்டமி சப்பரத் திருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அஷ்டமி சப்பரங்கள் திருவீதிஉலா வியாழக்கிழமை  19.12. 2019  தேதி அன்று நடைபெற்றது.


முரசு  அறைந்துகொண்டு முன்னே வரும் காளை


அரிசி, பூ தருகிறார்  பெரியவர்
சப்பரங்களுக்கு முன் நடந்து வந்த சிவபக்தர், உடுக்கை ஏந்தி உத்திராட்சங்கள் அணிந்து வந்தார்

சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளிய காட்சி
- நன்றி மாலை மலர்

திருவிழாக் காரணம் தெரிந்த கதைதான் இருந்தாலும் பகிர்வு.

//ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்கும் விதமாக தானியங்களை இட்டுக்கொண்டிருந்தார். அதனை பார்த்த பார்வதிதேவி இதுகுறித்து கேட்டார். அப்போது சிவபெருமான் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படி(உணவு) அளப்பதாக தெரிவித்தார். மறுநாள் சிவபெருமானின் இந்த செயலை பரிசோதிக்க பார்வதி தேவி முடிவு செய்தார்.

அதன்படி ஒரு எறும்பை பிடித்து ஒரு குவளையில் அடைத்து வைத்தார். தான் அடைத்து வைத்த எறும்பிற்கு இறைவன் எப்படி படி அளக்கிறார் என்பதை காண முடிவு செய்தார். சிறிதுநேரம் கழித்து அந்த குவளையை திறந்து பார்த்த போது அந்த எறும்பு அரிசியை தின்று கொண்டிருந்தது. அதனை கண்டு வியந்த பார்வதி தேவி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சிவபெருமானிடம் மன்னிக்குமாறு வேண்டினார். அந்நாளே மார்கழி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பிரதட்சணம் ஆகும்.

இந்த திருவிளையாடலை விளக்கும் வகையில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் தனித்தனியாக ரிஷப வாகனங்களில் சப்பரங்களில் எழுந்தருளுவார்கள்.


இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சப்பரத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். இன்றைய ஒரு திருவிழாவில் மட்டுமே பெண்கள் அம்மன் சப்பரத்தை இழுத்து வருவதை காண முடியும். மேலும் சுவாமி படி அளக்கும் விதமாக தெரு முழுவதும் அரிசி தூவப்பட்டது. அதனை பிரசாதமாக நினைத்து பக்தர்கள் தெருவில் கிடந்த அரிசிகளை எடுத்து சென்றனர்.//

நன்றி-  மாலை மலர்.



சிவனடியார்களும்,  மக்களும் அரிசி கொடுத்தார்கள், நெல்லிக்காய் கொடுத்தார்கள். ஒவ்வொரு வீடு, கடைகளில் இறைவனை வரவேற்க வாசலில் விளக்கு வைத்து இருந்தார்கள். அவர்கள் வீடுகளில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

எனக்கு ஒரு பெரியவர் சிறிது அரிசியும், பூந்தியும் கொடுத்தார். ஒரு அம்மா, நெல்லிக்காய் ஒன்று கொடுத்தார்கள். ஒரு சிறுவன் இரண்டு குட்டி பிஸ்கட் பாக்கெட் கொடுத்தான்.

துந்துபிகள் வாசித்துக் கொண்டு வந்தார்கள். 
பாடியும், ஆடியும் வந்த பக்தர்கள் கூட்டம்
அலைபேசியில் எடுக்கப்பட்ட படங்கள் -மிகத் தெளிவாக இருக்காது

சுவாமி, பிரியாவிடைஅம்மன் வந்த சப்பரம்
அன்னை மீனாட்சி

மீனாட்சி அம்மனை ஓரளவு பார்க்க முடிகிறதா? கையில் தங்கக்கிளி வைத்து இருக்கிறார், மனோரஞ்சித மாலை அணிந்து இருக்கிறார். ஒரு கால் மடித்து ஒரு காலைத் தொங்க விட்டு இருக்கிறார்.
மீனாட்சி அம்மனின் சடைஅலங்காரம்
இப்படி இரு பக்கமும் பக்கவாட்டில் அடைத்து வைத்து இருப்பதால் பக்கவாட்டிலிருந்து இறைவனைப் பார்க்க முடியவில்லை, நேரே பார்த்தாலும் உள்ளே ஒரே இருட்டு. பக்கத்தில் பார்க்கக் கூட்டத்திற்கு மத்தியில் இருந்தால் தான் முடியும்.
இரண்டு தேர்களும் போகிறது.



சவ் மிட்டாய்  சாப்பிட்டு வாயை ரோஸ் கலராக்கிக் கொண்டு குதூகலித்துப் போன பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தேன் படம் எடுக்க முடியாது. அவர்கள் 10, 11 படிக்கும் வளர்ந்த குழந்தைகள்.
திருவிழா என்றால் குழந்தைகளைத் தோளுக்கு மேல் வைத்து காட்டுதல், பலூன் வாங்கித் தருதல்  இல்லாமல் இருக்குமா?

அன்னை மீனாட்சியும், சொக்கரும் அனைவருக்கும்  எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

அன்னை படியளந்தாள் என்று 2016 ல்  பதிவு போட்டு இருக்கிறேன்.
அப்போது யானை, காளை, ஒட்டகம் எல்லாம் வந்ததைப் படம் எடுத்து பதிவு செய்து இருக்கிறேன். இப்போது காளை மாடு மட்டும் வருகிறது. எல்லோர் வீட்டு வாசலிலும் தேர்க் கோலங்கள் போட்டிருந்தார்கள். அதையும் படம் எடுத்துப் போட்டு இருந்தேன். படிக்காதவர்கள் படிக்கலாம்.


                                                                வாழ்க வளமுடன்.

24 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    அஷ்டமி சப்பரத் திருவிழா படங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. நான் இன்றுதான் இந்த திருவிழாவை பற்றி அறிகிறேன். கதை ஏற்கனவை தெரியும். ஆனால் இந்த கதைக்கு காரணமாயிருந்த இந்த திருவிழா பற்றி இப்போது தெரிந்து கொண்டேன்.

    சப்பரங்கள் மிக அழகாக உள்ளன. கட்டியம் கூறியபடி வந்து கொண்டிருக்கும் காளை மாட்டின் அலங்காரங்கள் அழகாக உள்ளது.

    தங்களுக்கும் பிரசாதங்கள் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. படங்கள் நன்றாக வந்திருக்கிறது. அனைத்தையும் ரசித்தேன்.

    மீனாட்சி அம்மன் தரிசனம் படத்தை பெரிதுபடுத்தி பார்த்ததில் நன்றாகவே கிடைத்தது. மற்ற சப்பர தரிசனங்களை யும் தரிசித்து கொண்டேன்.

    திருவிழா என்றால் குழந்தைகளுக்காக அவர்கள் உற்சாகத்திற்காக பலூன், பஞ்சு மிட்டாய், சவ் மிட்டாய் வேறு கலர் கலரான மிட்டாய்கள் தேங்காய் பர்பி போன்றவை இல்லாமலா? படங்களை பார்த்ததும், எனக்கும் குழந்தை பருவ பழைய நினைவுகள் வந்தன.

    உங்களுடன் நாங்களும் திருவிழாவிற்கு வந்த திருப்தியை படங்களும், பதிவும் தந்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      கதைக்கு காரணமான திருவிழாதான்.

      கட்டியம் கூறும் காளைமாட்டுக்கு முன்பு இன்னும் அழகாய் ஜோடித்து இருப்பார்கள்.
      புளியோதரை, தயிர்சாதம், சர்க்கைரைபொங்கல் என்று ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.

      மீனாட்சி அம்மனை கொஞ்சம் ஓரமாய் போய் நின்று படம் எடுத்தேன்.
      பள்ளி , அலுவலகம் உள்ள நாள் அதனால் கொஞ்சம் கூட்டம் குறைவு.
      காலை 5 மணிக்கு கோவிலை விட்டு கிளம்பி விடுகிறார்கள் சப்பரத்தில் . நாங்கள் பார்க்கும் போது 8.30 .

      சவ்மிட்டாய்காரர் மட்டும் தான் அன்று இருந்தார்.
      பதிவில் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  2. படங்கள் தெளிவாகத்தான் இருக்காறது சகோ அருமையான கோணங்களும்கூட

    விவரித்த விதமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      படங்கள் தெளிவு என்றும் கோணங்கள் நன்றாக இருந்தது என்றதற்கும் நன்றி.
      படங்களையும், பதிவையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் அழகு...

    கதையும், நிகழ்வுகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      படங்களையும், கதைமற்றும் நிகழ்வுகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. நகரா மட்டும் வருகிறதா? யானை இருக்கா இல்லையா தெரியலை. ஒட்டகங்கள் எல்லாம் எப்போவோ உயிரை விட்டிருக்கும். அதன் பின்னர் ஒட்டகங்கள் யாரேனும் கொடுத்திருந்தால் தான் இப்போல்லாம் எஸ்.பி.சி.ஏ.காரங்க தடை வேறே இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      நகரா மட்டும் வருகிறது. யானை இருக்கிறது ஆனால் வரவில்லை.
      ஒட்டகங்கள் ஒன்று இல்லை ஒன்றுக்கு உடம்பு சரியில்லை.
      போன பதிவு சுட்டி கொடுத்தேன் அல்லவா அதில் பார்த்தால், யானை, ஒட்டகம் எல்லாம் இருக்கும்.

      நீக்கு
  5. கத்தரிக்காய்க்கும் இன்று மோக்ஷம் (!!!!) கிட்டிய கதையும் தெரியும் அல்லவா? இன்று பல வீடுகளிலும் கத்திரிக்காய் சமைப்பார்கள். இப்போல்லாம் அந்த வழக்கம் இருக்கோ இல்லையோ! யாருக்கானும் நினைவில் இருந்தாலே பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு

  6. கத்தரிக்காய்க்கும் இன்று மோக்ஷம் (!!!!) கிட்டிய கதையும் தெரியும் அல்லவா?

    அஷ்டமி சப்பரதன்று வீடுகளில் கத்திரிக்காய், நெல்லிக்காய், பச்சை மொச்சை சேர்த்துக் கொள்ளவேண்டுமாம் சமையலில். அதை அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
    அது மட்டும் தான் தெரியும் .

    நீங்கள் சொன்னால் எனக்கு தெரிந்த கதையா என்று பார்க்கலாம், சொல்லுங்கள்.
    போன பதிவில் நீங்கள் எண்ணெய் கத்தரிக்காய் செய்வோம் என்று போட்டு இருந்தீர்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்தரிக்காய்க்கு மோட்சமா? கேள்விப்பட்டதில்லையே...

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      அஷ்டமி நாளில் உணவில் சேர்த்துக் கொள்ளபடும் கத்திரிக்காய்க்கு மோட்சம் போல!
      கீதா சொன்னால்தான் எதற்கு அப்படி சொல்கிறார்கள் என்று தெரியும்.
      நானும் காத்து இருக்கிறேன் அறிந்து கொள்ள.

      நீக்கு
    3. கொடூரமான பாபியான பிராமணன் ஒருவன் மதுரையில் திருமங்கலத்தில் கத்திரிக்காய்த் தோட்டம் வைத்துப் பிழைத்து வந்த இன்னொரு பிராமணனைத் தகாத வார்த்தைகளால் ஏசினதோடு அல்லாமல் காலாலும் உதைத்தான். விஷயம் அரசனிடம் செல்ல அரசன் அதை விசாரிக்கிறான். அப்போது அந்தக் கொடும்பாவியான அந்தணன்,"கத்திரிக்காய் மாமிசத்துக்குச் சமானம்! அதை உண்ணுவதும் விற்பதும் பாவம் என்பதால் அந்த அந்தணனைத் தண்டித்தேன்."என்று சொல்லி விடுகிறான். குழம்பிப் போன அரசன் அகத்திய ரிஷியிடம் இது பற்றித் தெளிவு தருமாறு வேண்ட, அகத்தியர் சொல்கிறார். "வார்த்தகன் என்னும் அசுரன் சிவபக்தி மிகுந்தவன். அவன் சிவனுக்கு வழிபாடு செய்யும் சமயம் அங்கே வந்த விஷ்ணுவைக் கவனிக்காமல் அவமரியாதை செய்து விடுகிறான். அவனை அசுர உருவிலிருந்து ஓர் மோசமான செடியாக மாறும்படி விஷ்ணு சபிக்க மனம் திருந்தி வருந்திய வார்த்தகனுக்கு சிவன் ஆறுதல் கூறுகிறார். அவன் செடியாக மாறினாலும் காய்க்கும் காய்கள் அனைவரும் உண்ணத்தகுந்ததாகவும் தனக்குப் ப்ரீதியாகவும் இருக்கும் எனக் கூறுகிறார். அது முதல் நிவனின் நிவேதனங்களில் கத்திரிக்காய்க்கு முக்கிய இடமும் விஷ்ணுவுக்கு ஆகாததாகவும் ஆகி விடுகிறது.

      இந்தப் பாபி மறு பிறவியில் ஓர் இடையனாகப் பிறந்து வளர்ந்து வௌர்கிறான். ஆனாலும் முன்வினை அவனைத் தொடர்கிறது. இப்பிறவியிலும் பாபியாகவே இருக்கிறான். ஆனால் பசுக்களை ரக்ஷித்த ஒரே காரணத்தால் ஈசன் அவனுக்கு முக்தி கொடுக்கத் தீர்மானித்தார். அன்னை மீனாக்ஷி ஓர் பசுவின் வடிவம் கொண்டு அவனுடைய வயலில் மேய அதைக் கண்டு கோபம் கொண்ட அவன் அந்தப் பசுவின் வாலைப் பிடிக்கிறான். அன்னையவள் அப்படியே அவனை இழுத்துக்கொண்டு மதுரையின் ஏழு பிராகாரங்களையும் வலம் வரச் செய்கிறாள். இதன் பலனாக அவனுக்கு அன்னையும், ஈசனும் ரிஷபாரூடராகக் காட்சி கொடுத்து முக்தியும் கொடுக்கின்றனர். அந்த நாள் மார்கழி மாதத் தேய்பிறை அஷ்டமி தினம். ஆகவே மதுரையில் அஷ்டமிச் சப்பரம் எடுக்கின்றனர். அன்னை பசுவாக வந்த காரணத்தால் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுப்பாள். ஐயன் எப்போதுமே ரிஷபாரூடர் என்பதால் அன்னை பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் காட்சி அளிப்பார். நான்கு ஆடி வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு வெளி வீதிகள் மற்றும் சுவாமி சந்நிதியின் இரு பிராகாரங்களை வலம் வருவார்கள். இதற்கு அஷ்டமி பிரதக்ஷிணம் என்றே பெயர் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது.

      நீக்கு
    4. கத்திரிக்காய் மோட்சம் கதை தெரிந்து கொண்டேன்.
      நீங்கள் இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  7. படங்களையும், விவரங்களையும் ரசித்தேன்.  மதுரையில் இருந்திருக்கிறேன் என்று பெயர்.  இதனையெல்லாம் நான் பார்த்ததே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், பழைய பின்னூட்டத்தில் இந்த கருத்தை தான் சொல்லி இருக்கிறீர்கள்.

      அத்தைக்கு திதி கொடுக்க இன்மையில் நன்மை தருவார் கோவில் போனதால் கிடைத்தது எனக்கு இந்த முறை. குட்ஷெட் வீதியில் சாமி வந்த போது பார்த்துவிட்டோம்.

      ஆட்டோ டிரைவர் நல்லவர் எங்கு சாமி சப்பரம் வருதோ அங்கு கொண்டுவிட்டு விடுங்கள் என்றோம் "இப்போது குட்ஷெட் ரோட்டில் வரும் அம்மா" அங்கு விடுகிறேன் என்று கொண்டு விட்டார். சாமியும் வந்தார் பார்த்து கிளம்பி விட்டோம்.

      இப்போது போல் நீங்கள் இருந்த போது விளம்பரங்கள் இருந்து இருக்காது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      'நீதான் திருவிழா பார்த்து இருக்கிறாயே' என்று சொல்வார்கள்.
      இறைவன் அருளால் இந்த முறை பார்த்து விட்டேன்.




      நீக்கு
  8. சப்பரம்... இந்தப் பேரைக் கேட்டு எவ்வளவு ஆண்டுகளாகி விட்டன?

    ஆயிரம் நாகரிக மேல் பூச்சுகள் வரட்டுமே! மதுரை மதுரை தான்!

    வீதியில் வலம் வரும் ரிஷபம்! அற்புதம்!

    காணக்கண் கோடி வேண்டும், இறைவா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான். நாகரீக மேல் பூச்சுக்கள் வந்தாலும் பழமை மாறாத திருவிழாக்கள் மகிழ்ச்சி தருகிறது.

      காணக் கண் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது.
      உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  9. அனைத்துப் படங்களும் அழகு, வழமையை விடக் கொஞ்சம் தெளிவு குறைவு, இருப்பினும் கண்ணுக்கு அம்மன் தெரிகிறா. சூம் பண்ணி எடுத்திருக்கிறீங்க போலும், சில ஃபோன்களில் சூம் பண்ணினால் தெளிவு வருவதில்லை.

    நல்ல அழகிய திருவிழா.. அனைவருக்கும் அம்மனின் ஆசி கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      அம்மனை பார்த்து விட்டது மகிழ்ச்சி. கிறிஸ்மஸ் கடைகளுக்கு போய் வந்து விட்டீர்களா? ஊர் முழுவதும் கொண்டாட்டமாக இருக்குமே!
      விடுமுறையை அனுபவித்து கொண்டு இருக்கும் போது இடையில் வந்து பின்னூட்டம் போட்டது மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  10. அலைபேசியில் படங்கள் எடுத்து எங்களையும் தேரோட்டத்தில் கலந்து கொள்ளச் செய்து விட்டீர்கள். பெண்களே வடம் இழுக்கும் தகவல் எனக்குப் புதிது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      அஷ்டமி சப்பரத்தை மட்டும்
      பெண்கள் இழுத்து வருவார்களாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. கையில் தங்கக்கிளி வைத்து இருக்கிறார், மனோரஞ்சித மாலை அணிந்து இருக்கிறார். ஒரு கால் மடித்து ஒரு காலைத் தொங்க விட்டு இருக்கிறார்...


    ஆஹா என்ன ஒரு அழகிய காட்சி ..


    மிக ரசித்து பார்த்து மகிழ்தேன் அம்மா ...

    பகிர்வுக்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு