ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அழகரும், கண்ணனும்



அழகர் வந்தார், மூன்றுமாவடி என்ற இடத்தில் அவரைத் தரிசனம் செய்தோம்.

என் கணவர் இன்று காலை 7மணிக்கு அழகரைப் பார்த்து வரலாம் என்றார்கள்.  அழகர் மலையிலிருந்து காலை மூன்று மணிக்கு புறப்பட்டு வருகிறார், எதிர்சேவை செய்வோம் என்றார்கள்.  என் மனம் மகிழ்ச்சியில் திளைத்து விட்டது.

10ம் நாள் திருநாள் மீனாட்சி பூம்பல்லாக்கு . அதைப் பார்க்கப் போய் வந்த பின் பல மணி நேரம் நின்றதால் இருவரும் சோர்ந்து போய் விட்டோம், இனி பக்தி மார்க்கம் இல்லை ஞான மார்க்கம்தான் என்று என் கணவர் சொன்னார்கள்,  அதனால் மறு நாள் தேர்பார்க்கப் போகவில்லை. எப்போதும் தங்கை வீட்டுக்குப் போய் வடக்கு மாசி வீதியிலிருந்து தேர் பார்ப்போம் .இந்த முறை போகவில்லை சங்கரா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து விட்டோம்.

 போன வருடம் மீனாட்சி திருவிழா இரண்டு மூன்று நாள் விழா பார்த்தோம் அழகரை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் கண்டு களித்தோம்.

முன்பு சிறு வயதில்  அப்பாவோடு  மேம்பாலத்திலிருந்து அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்ப்போம். பாஸ் கிடைக்கும். பிறகு என் கணவரின் அண்ணாவின் தயவில் மேம்பாலத்தின் மேலே இருந்து அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியை கண்டு களித்து இருக்கிறோம்.

அப்புறம் கூட்டத்திற்கு பயந்து போவது இல்லை. வர வர மக்கள் கூட்டம் அதிகமாகிறது. அன்பர் கூட்டத்தைப் பார்ப்பதே புண்ணியம் என்பார்கள்.

வழி எல்லாம் அன்பர்கள் கூட்டம், தண்ணீர் பந்தல், நீர் மோர் கொடுப்பவர்கள், பிரசாதங்கள் கொடுப்பவர்கள் என்று வழி நெடுக கூட்டம் தான். போலீஸார் இந்த பக்கம் போகக் கூடாது , அப்படி போகக் கூடாது என்று மக்களை வழி நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு தண்ணீர்ப் பந்தல் இடத்தில் மூன்று மதச் சின்னங்கள் போட்டு இருந்தார்கள், அங்கு பாதிரியார்கள் மூன்று பேர் நீர் மோர் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். வண்டியில் போய்க் கொண்டு இருந்ததால் பாதைக் காட்சிகளைப் போட்டோ எடுக்க முடியவில்லை.காரில் பயணம் செய்து இருந்தால் எடுத்து இருப்பேன்.

   




கண்சிமிட்டும் நேரத்தில் தெரியும் அழகரைப் பார்த்துக் கும்பிட்டுப் படம் எடுப்பதற்குள்  விசில் கொடுத்து விடுகிறார் , நகர்ந்து விடுகிறது பல்லாக்கு.


 மக்கள் கூட்டத்திற்கு இடையே புகுந்து அழகரைத்
தரிசனம் செய்தோம்.காலை 8மணி என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவு 



மஞ்சள் துணி சுற்றிய செம்பு மேல் பூ வைத்து கற்பூரம் காட்டி வழிபட்டார்கள். செம்புக்குள் நாட்டுச் சர்க்கரை, பூந்தி வைத்து வழிபட்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்கள்.



அந்தப் பக்கம் ஒரு பட்டர், இந்தப்பக்கம் ஒரு பட்டர் இருவரும் அழகரை மறைத்துக் கொள்கிறார்கள்.


எதிர்வெயில் தூரத்தில் -கையை மேலே தூக்கி அலைபேசியில் எடுத்த படம்.
மக்கள் எல்லோரும் அழகரை எதிர் சேவை செய்த காட்சி அழகு.






முதுகில் சாட்டையால் அடிக்கும் அப்பா - காசு வாங்கும் மகன்
அவர் மனைவி குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு உருமி மேளத்தைத் தட்டினார்.









கடவுள் வேடமிட்டவர்கள் உண்டியலைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு வந்தார்கள்.





பலூன் விற்பவர்களிடம் பலூன் வாங்கும் சிறுவர்களை திருவிழா காசு கொடுத்தால் சேர்த்து வைத்தால் என்ன ? பொம்மையும் , பலூனும் வாங்கி காலி செய்யனுமா என்று கேட்டுக் கொண்டு இருந்தார் அம்மா.

ஒரு அம்மா இன்னொரு அம்மாவிடம் சொல்லிக் கொண்டு போகிறார், நீ வா, அவ வருவா, பை நிறைய பேரன் பேத்திகளுக்கு பலூன் , பொம்மை என்று சப்பு சவறுகளை வாங்கிக் கொண்டு வருவா  என்று.

என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. திருவிழாக்கு வரும் உறவினர்கள் தரும் காசு, எங்கள் வீட்டில் பிறந்த நாள், சித்திரை விசு, பொங்கல், தீபாவளி என்று கொடுக்கும் காசுகளை உண்டியலில் சேமிக்கச் சொல்வார்கள்.  எங்களுக்கு வேண்டிய விளையாட்டு சாமான்களைப்  பிறகு வாங்கி தருவார்கள்.


அழகரைப் பார்த்து விட்டு வரும் போது  கூட்டத்தில் வண்டி(இரு சக்கர வாகனம் தான்) ஓட்ட முடியாது என்று மாற்றுப் பாதையில் வரும் போது முட்டுச் சந்துகளாய் இருக்கே என்று மாறி மாறி வெவ்வேறு தெருக்கள் வழியாகப் போனோம்.ஐயர் பங்களா அருகில் ஒரு தெரு வில் ஒரு கட்டிடம் இருந்தது. வெளிச் சுவற்றில் "ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே!" என்ற வாசகங்களும் கண்ணன் இரு கை நீட்டி அழைக்கும் தோற்றத்தில் கட்டிட முகப்பில் சிலையும் இருந்தது.



கண்ணன்  ' அன்பு குழந்தைகளே என்னிடம் வாருங்கள்  உங்களுக்காகக் காத்து இருக்கிறேன்' என்று போட்டு இருந்தது.

கண்ணன்  அழைக்கும்போது போகாமல் இருக்க முடியவில்லை போய்ப் பார்த்தோம், கண்ணனை. இருவர் ஹரே ராம  மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
நாங்களும்  ஒரு இரண்டு நிமிடம் ராம மந்திரத்தை அமர்ந்து சொன்னோம்.

பின் சுவற்றில் எழுதி இருந்தவற்றைப் படித்துக்கொண்டு இருந்தேன், என்னிடம் வந்தவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்ப மாட்டேன் என்று எழுதி இருந்தது.
வெளியே வரும்போது  தீர்த்தமும், என் கை நிறையும் அளவு பெரிய மாம்பழமும் , மல்லிக்கைப் பூவும்  கொடுத்தார்கள்.  என் கணவருக்கு சாக்லேட் கொடுத்தார்கள்.
கண்ணன் சொன்ன வாக்கின்படி கையை நிறைத்து விட்டார்.

எங்கள் குடும்ப  நன்மைக்கும், உலக நன்மைக்கும் வணங்கி வந்தோம்.


துளசி மாடமும்  கண்ணனும்

 எல்லோரையும் மகிழ்வித்து  மகிழ வேண்டும்


பிரார்த்தனை மையத்தின் நோக்கம் நன்றாக இருக்கிறது.

எல்லோர் வீடுகளிலும் அழகான கோலங்கள், காவி கொடுத்து, கலர்ப் பொடியால் கோலம் என்று. அந்த வழியாக வர மாட்டார் அழகர் இருந்தாலும் அழகர் மலையிலிருந்து மதுரை வருவது அவர்கள் வீட்டுக்கே வந்த மாதிரிதானே! 

ஒவ்வொரு வீட்டிலும் விருந்தினர் வருகை. உற்சாக ஆரவாரம் ஒவ்வொரு வீட்டிலும்.

தங்கை குழந்தைகள், பேத்தி  வந்து போனார்கள் எங்கள் வீட்டுக்கும்.



  தங்கை பேத்தி வருகைக்காக நான் வரைந்த முயல் கோலம் வாசலில்

சோம்பி கிடக்கும் எங்களைப் போன்ற வயதானவர்களை சுறுசுறுப்பாக்கும் மழலை செல்லங்கள் வாழ்க வளமுடன்.!

வாழ்க வையகம்! வாழ்கவையகம்! வாழ்க வளமுடன் !
-----------------------------------------------------------------------------------

25 கருத்துகள்:

  1. //இரண்டு புறமும் இரண்டு பட்டர்கள் மறைத்துக் கொண்டார்கள்//

    இதுதான் எனக்கு பிடிப்பதில்லை அழகரை தூக்கலாம், வணங்கலாம் சரி பட்டர்களையும் சுமக்க வேண்டுமா ?

    அவர்கள் தீபாராதனை காட்டும்போது மேலே ஏறினால் போதாதா ?

    எங்கள் குடும்ப நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் தங்களது உயர்ந்த சிந்தனைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    மறைக்காமல் உட்கரலாம். வண்டியில் வைத்து தள்ளியது போல்தான் இருந்தது.

    இப்போது எல்லோரும் நாட்டையும், உலகத்தையும் வாழ்த்த வேண்டும் ஜி

    இதுவும் சுயநலம்தான் உலகம் நன்றாக இருந்தால் தான் நாமும் நன்றாக இருப்போம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இத்தனை கூட்டத்திலும் அருமையான படங்களை எடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். ஆம், திருவிழாக்கள் குதூகலத்தைக் கொடுத்தாலும் கூட்ட நெரிசல் தயக்கத்தைக் கொடுக்கும்.

    பகிர்வு அருமை. முயல் கோலம் அழகு.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள் - உங்கள் மூலம் நாங்களும் அழகரை தரிசித்தோம்.

    ஒரு முறையாவது சித்திரைத் திருவிழாவினை நேரில் காண வேண்டும் - எப்போது வாய்க்குமோ?

    பதிலளிநீக்கு
  5. எதிர்சேவை என்றால் எதிரே நின்று சேவிப்பதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ராமலஷ்மி, வாழ்க வளமுடன்
    கூட்டம் , போக்குவரத்து இரண்டும் காரணம் திருவிழா காண தயங்குவதற்கு.
    பகிரவையும், முயல் கோலத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    ஒரு முறை வாருங்கள், திருவிழா சமயம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  8. அழகான படங்கள்! தகவல்கள் முழு விவரங்கள். உங்கள் வழி கண்டு களித்தோம்.
    நீங்கள் முடங்கிக் கிடக்கிறீர்களா? வேண்டாமே . நீங்கள் பசுமை நடை செல்கிறீர்கள். வாசிக்கின்றீர்கள். இதோ அழகர் பற்றி சொல்கின்றீர்கள். மழலைகள் வந்தால் அது மகிழ்ச்சிதான்....அது சரியே....உங்கள் கோலம் அழகாக இருக்கிறது

    ----இருவரின் கருத்தும்

    கீதா: அக்கா கோலம் செம....முயல்..நிறைய திறமைகள் உங்களிடம். திருவிழா என்றால் அப்போதெல்லாம் பலூன், பிபி, வாட்ச், ஊதினால் விரிந்து சத்தம் எழுப்பும் பலூன் கலர்க்கண்ணாடி, ரிப்பப், வளையல் என்று பல...கலர் மிட்டாய்.கடலை என்று.அது தனி...முகமூடிகள் சொல்ல விட்டுப்போச்சு...திருவிழா என்றாலே குதூகலம்தான்...எங்கள் ஊர் சித்திரைத்திருவிழா தேர் எல்லாம் நினைவுக்கு வந்தது....பதிவையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
    என்னதான் உற்சாகமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் உடலும், மனமும் சோர்வு அடைந்துவிடும். குழந்தைகள் வந்தால் டானிக் சாப்பிடுவது போல்.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    அம்மன் திருவிழாவில் ஜல் ஜல் என்று சவ்மிட்டாய் மாலை, வாட்ச் செய்பவர் போனார்.
    நீங்கள் சொல்வது போல் வித விதமான பொருட்கள் குழந்தைகளுக்கு கேட்காமல் வாங்கி கொடுக்கும் பெற்றோர் , கேட்டும் வாங்கி கொடுக்காத பெற்றோர் என்று விழாவில் பார்க்க முடிகிறது.
    கோலம், பதிவை ரசித்தமைக்கு நன்றி கீதா.




    பதிலளிநீக்கு
  10. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். மதுரைக்கு வருபவரை வரவேற்று வழிபடுவதைதான் அப்படி சொல்கிறார்கள். வழி எல்லாம் உபசாரம் செய்து வரவேற்று வழிபடுவதுதான் எதிர்சேவை.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. மதுரையில் இருந்த காலங்களில் வீட்டிலிருந்தே திருவிழா காட்சிகளை ரசித்ததுண்டே தவிர கோவில் பக்கமோ, அழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்கவோ போனதில்லை. திருக்கல்யாணம் ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். கூட்டம்... அலர்ஜி. நாங்கள் முதலில் கோ. புதூரிலும், பின்னர் ரெஸ் கோர்ஸ் காலனியிலும் இருந்தோம்.

    பதிலளிநீக்கு
  12. அய்யர் பங்களா அருகில் நாராயணபுரத்தில் சில காலம் வசித்தோம். அந்த இடங்களில் எல்லாம் இப்போது எவ்....வளவு மாற்றங்கள்!

    பதிலளிநீக்கு
  13. திருவிழாப் படங்கள் சுவாரஸ்யம். முகநூலிலும் ரசித்தேன். ஒருவர் தண்ணீர் பீச்சியபடியே வருவார். இன்னொருவர் பெரிய விசிறியால் விசிறிக்கொண்டே வருவார் இன்னொருவர்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    சின்னவயதாக இருக்கும் அப்போது நீங்கள் இங்கு இருந்த போது இல்லையா?
    அப்போதே திருவிழா பார்க்க போகவில்லை என்பது ஆச்சிரியம் தான்.

    இப்போதும் தாத்தா விசிறி கொண்டு வருகிறார், தண்ணீர் பீச்சுபவர்கள் காலையில் இல்லை.
    போலீசார், மக்கள் மீது தண்ணீர் பீச்சாதீர்கள், பெருமாள் மட்டும் பீச்சுங்கள் என்று அறிவித்தபடியே இருக்கிறார்கள்.

    மதுரையில் என்று இல்லை எல்லா ஊர்களும் முதலில் பார்த்தது போல் இல்லை, மாறிக் கொண்டே இருக்கிறது.


    இன்று அழகர் இறங்குவதை சங்கரா தொலைக்காட்சியில் பார்த்து விட்டோம்.
    மதுரையிலிருந்து கொண்டு திருவிழாபார்க்கவில்லை என்று சொல்லக்கூடாது என்று இரண்டு திருவிழாக்களிலும் ஒரு நாள் திருவிழா பார்த்து விட்டோம் என்று வருகை பதிவு செய்து விட்டோம், மீனாட்சி, பெருமாளிடம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. அழகான அழகர் படங்கள். தரிசனம் ஆகியது நன்றி.

    பட்டாச்சார்யார்கள் தங்கள் கடமையைச் செய்யவேண்டி உள்ளது. பகவானை விட அவனுக்கு சேவை செய்யும் அடியவர் முக்கியமல்லவா?

    ஹரேகிருஷ்ணா கோவிலையும் கண்டு களித்தேன். இங்கும் (பஹ்ரைனில்) ஹரே கிருஷ்ணா கோவில் உள்ளது. காலையில் பிரசாதம் தருவார்கள். சடங்குகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கிடையாது. பக்தி ஒன்றுதான் முக்கியம்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
    பட்டர்கள் அவர்கள் கடமையை செய்ய வேண்டியது தான். பகவானுக்கு சேவை செய்கிறார்கள் என்பது உண்மையே.

    அவர்கள் நலம் கருதியும், பெருமாளை தரிசனம் செய்ய காத்து இருக்கும் பக்தர்கள் அழகரை பட்டர் மறைக்கிறார் என்பதை சொல்வதை
    தடுக்கவும் வேறு மாற்று ஏற்பாடு செய்யலாம்.

    நீங்கள் சொல்வது போல்தான் பக்தி ஒன்றுதான் முக்கியம் இங்கும்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நின்று கொண்டே வருகிறார்கள் பட்டாச்சார்யா
    ர்கள் அவர்களுக்கும் கஷ்டம் தானே

    பதிலளிநீக்கு
  18. எதிர்சேவை என்பது விருந்தினர் வரும் வழியிலேயே பாதி தூரம் நாமும் போய் எதிர்கொண்டு கூட்டி வருவது. அழகரை அழைத்து வருவதை எதிர்சேவை என்போம். பட்டாசாரியார்கள் வரும் பல்லக்க் பாட்டரியால் தள்ளப்படுவது தான் என்றாலும் அவங்க உட்கார்ந்து கொண்டு வரலாமோ? இங்கே பல்லக்கைத் தூக்கித் தான் வருகிறார்கள். பட்டாசாரியார் அரங்கனுக்கு அருகே நிற்க மாட்டார்கள். ஆகவே அரங்கன் உலாவின் போது தரிசனம் செய்ய வசதியே. பல்லக்கை நிறுத்தும்போதும் யாரும் பல்லக்கின் மேலெல்லாம் ஏறுவதில்லை. கீழே நின்ற வண்ணமே எல்லா உபசாரங்களும் செய்வார்கள். ஆனால் பல்லக்குத் தூக்கிகள் பல்லக்கை முட்டுக் கொடுத்துக் கொண்டு நிற்கையில் பல்லக்கிலும் ஒரு தோள் இருக்குமாகையால் சுற்றி நின்றே ஆகணும்.

    பதிலளிநீக்கு
  19. சில எழுத்துகள் இகலப்பை மூலம் சரியா வரலை. சுரதாவையும் திறந்து வைத்துக் கொண்டு கருத்துச் சொல்ல வேண்டி இருக்கு. முக்கியமாய் ள், ளா, ளி, ளீ போன்றவற்றில் எல்லாத்துக்கும் ளீ தான் வருது! ற், றாவும் தகராறு. ண் போட்டால் அப்புறமா வர எழுத்து வராமல் ௶ இப்படி வந்துடும்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    எதிர்சேவை விளக்கம் அருமை.
    மாயவரத்தில் சாமி வரும் யாரும் சாமியை மறைக்க மாட்டார்கள்.

    இங்கே தான் குருக்கள் , பட்டர்கள் நின்றபடி வருகிறார்கள்.

    வெகு நேரம் காத்து இருந்தும் பார்க்க முடியவில்லை ஆதங்கத்துடன் மக்கள் பேசி கொண்டு போகிறார்கள்.

    டைப் செய்வதில் நிறைய நிறைய பொறுமை வேண்டி இருக்கிறது இப்போது.

    அலைபேசியில் டைப் செய்யும் போது முந்திக்கொண்டு அதுவே சில வாக்கியங்களை அடிக்கும்
    கவனமாய் இருக்க வேண்டி இருக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  21. அழகர் அழகாக வந்துவிட்டார். நீங்கள் விவரித்திருக்கும் விதம் மிக மிக அருமை.
    எனக்கும் கூட்டத்தில் செல்ல அலர்ஜி தான். அப்பா தோள் மேல் உட்கார்ந்து ஒரே ஒரு தடவை
    பார்த்திருக்கிறேன்.
    பட்டாச்சாரியர்கள் பெருமாளை அணத்தபடியே தான் வருகிறார்கள்.
    பாதுகாவலாக வருகிறார்களோ.
    ஆகிருதி குறைவாக இருக்கிறவர்களையாவது போடலாம்.
    படங்கள் அத்தனையும் அற்புதம். வாழ்க வளமுடன் கோமதி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
    அழகரை அணைத்தபடி அவர் காரணம் அவர்கள் பிடிமானம் வேண்டுமே!

    நீங்கள் சொன்னது போல்தான் சார் சொன்னார்கள். ஒல்லியான உயரம் குறைந்த பட்டர் வந்தால் அழகர் தெரிவார் என்று.



    அப்பாவின் தோள் மீது பார்த்த காட்சியை கண்ணால் காண்கிறேன் அற்புதம் அக்கா.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரி

    அருமையான திருவிழா படங்கள். தங்கள் புண்ணியத்தில் நானும் கள்ளழகரை தரிசனம் செய்து கொண்டேன். திருவிழா சமயங்களில் என் அப்பா கொடுத்த காசுகளை நானும் சேர்த்து வைத்து பின் உபயோகப்படுத்தி கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது..இத்தனை கூட்டத்திலும் அற்புதமாக படம் எடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    கண்ணனை தரிசித்த சம்பவமும், கை நிறைய பிரசாதம் பெற்றுக்கொண்டதும் மகிழ்ச்சியை தருகிறது. நாம் எதையும் கேட்காமலேயே கொடுப்பவன் இல்லையா கிருஷ்ணன். பயண அனுபவங்கள் நன்றாக இருந்தது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
    சிறு வயது நினைவுகள் வந்ததா? மகிழ்ச்சி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    கேட்காமல் கொடுப்பவன் தான் கண்ணன் நன்றாக சொன்னீர்கள்.
    அழைத்து கொடுத்தான்.

    பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு