Tuesday, April 25, 2017

மாற்றம் ஒன்றே மாறாதது


.    வீடு மாற்றம் ஏற்பட்டதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.   அந்த வீடு சில வசதிகள்   , இந்த வீட்டில் சில வசதிகள் இரண்டையும் ஒப்புமை படுத்திக் கொண்டு குழம்பிக் கொண்டு இருந்த மனதைத் தெளிவு படுத்த மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லிக் கொண்டேன் .  

அதைப் பற்றி  சில கட்டுரைகளைப் படிக்கும் போது, மனநல மருத்துவர்   திருநாவுக்கரசு அவர்கள் தினமலரில் கொடுத்த கட்டுரை  கீழே  :-


//இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது. பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது. குழந்தை பெண்ணாகிறாள்; பெண் தாயாகிறாள். இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.

மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவை நிலையானது என, நம்பப்படுகிறது. 
ஆனால்,  அனுபவத்தில் என்ன காண்கிறோம்? அன்பு வெறுப்பாகிறது; வெறுப்பு பாசமாகிறது; கோபம், சாந்தமாகிறது; சாந்தத்தை கோபம் காலி செய்கிறது. அதாவது மனிதனின் குணம் மாறி கொண்டே இருக்கிறது.
ஏன்? தேவை, வசதி, வாய்ப்பு, சூழ்நிலைக்கு ஏற்ப, ஆபத்தை தவிர்த்து, நன்மை கருதி, குணம் மாறுபடுகிறது; மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது; மாற்றம் மட்டும்தான் நிலைத்திருக்கும் என்கிறோம்.
மாற்றம் வரும்போது, அதை மனிதன் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இதை புரிந்து கொண்டால், மாற்றத்தை சந்திக்கும் போது, ஏமாற்றம் அடைய வேண்டி இருக்காது. //

- மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர், மனநலம் கிளீனிக், சென்னை.


 வீடு மாற்றி ஒரு மாதம் ஆகப்போகிறது. முதல் கவலை பறவைகளுக்கு உணவு வைக்க சரியான இடம்,

உணவு வைக்க   வைத்து இருக்கும் மண் பாத்திரம், தண்னீர் வைக்கும் மண் பாத்திரம் வைக்க சரியான இடம் இல்லை. 
பால்கனியில் வைத்த போது.அதற்கு வசதியாக  இல்லை போலும் உணவு தண்ணீர் எடுக்க வரவே இல்லை . கீழே இறங்கி உணவு எடுக்கப் பயப்படுகிறது.

Image may contain: indoor
பறவைகளின் வரவுக்குக் காத்து இருந்த உணவு , தண்ணீர்
Image may contain: outdoor
எதிர் வீட்டு ஜன்னலில் வைக்கும் பிஸ்கட்டைச் சாப்பிடும் அணில்
அதைப் பார்த்து நானும் வைத்தேன். அணில் , சிட்டுக்குருவி வந்து இறை எடுத்தன ஆனால் நாம் நடமாடும் சின்ன அசைவைப் பார்த்தாலும் பயந்து ஓடி விடுகிறது.

எதிர் வீட்டு பால்கனியில் இது போல் தகரம் அதில் எவர்சில்வர் தட்டு வைத்து இருக்கிறார்கள்.
 
மற்றும் ஒரு வீட்டில்  அலுமினிய டிரே  வைத்து இருக்கிறார்கள். (மைசூர் பாகு விள்ளல்  தட்டு)  அது போல் என்னிடமும் இருக்கிறது அதை மாட்டிப் பார்க்க வேண்டும்.

அது போல் வாங்கும் வரை  வீட்டில்  இருந்த  இடியாப்பத் தட்டை எடுத்து கம்பியில் மாட்டிக் கொடுத்தார்கள் அதுவும் பறவைகளுக்கு  திருப்தி தரவில்லை. 


தண்ணீருக்கு ஏதாவது செய் தாகம் தாகம் என்கிறது. 

இந்த ஜன்னல் வசதியாக இருக்கிறது இந்த இரண்டு பாத்திரங்களையும் வைத்து இருக்கிறேன்  பார்ப்போம் 

Image may contain: bird 

இந்த பக்கம் நிழலுக்கு வந்து அமரும் பறவைகள்  அப்போது பார்த்தால் சாப்பிடும் என்ற நம்பிக்கை. நம்பிக்கை ஒன்று தானே வாழ்க்கை.

எத்தனையோ கவலைகள் இருக்க இவர்களுக்கு இந்த கவலை என்று நினைக்காதீர்கள். எனக்கு மனதுக்கு மகிழ்ச்சியை  உற்சாகத்தை தருவது பறவைகள்  இவைகள் நன்றாக இருத்தால் இயற்கை நன்றாக இருக்கும் இயற்கை நன்றாக இருந்தால் நமக்கு  நல்லது தானே?


வாழ்க வளமுடன்!


==========================
39 comments:

KILLERGEE Devakottai said...

பறவைகளைக் குறித்தும் கவலைப்படுவதற்கு தனிப்பட்ட மனம் வேண்டும்.

சமீபத்தில் சில புகைப்படங்கள் பார்த்தேன் ஒரு கிராமத்தில் பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் செத்து கூட்டம் கூட்டமாக விழுவதை மக்கள் கூட்டி அள்ளினார்கள் பார்க்க வேதனையாக இருந்தது.

புகைப்படங்களை பொறுமையாக எடுத்தது பாராட்டத்தக்கது.

தங்களது தளம் கணினியில் திறக்கிறது
த.ம. இணைந்த பிறகு....

துளசி கோபால் said...

//எத்தனையோ கவலைகள் இருக்க இவர்களுக்கு இந்த கவலை என்று நினைக்காதீர்கள். எனக்கு மனதுக்கு மகிழ்ச்சியை உற்சாகத்தை தருவது பறவைகள் இவைகள் நன்றாக இருத்தால் இயற்கை நன்றாக இருக்கும் இயற்கை நன்றாக இருந்தால் நமக்கு நல்லது தானே?//

இது... இதுதான் பிடிச்சுருக்கு! எனக்கும் பறவைகளைப் பார்க்கலைன்னா மனசு சமாதானமே இருக்காது. ரஜ்ஜுவுக்கும்தான் :-)

இவ்ளோ குளிரிலும் காலை 6 மணிக்கு பனிப்புகையா இருக்கும் நேரத்திலும் கூட ப்ளாக் பேர்ட் என்னும் வகையில் ஒருத்தர் வந்து பறவைக்கான குளியல் தொட்டியில் நல்லா அமிழ்ந்து அமிழ்ந்து குளிச்சுட்டுச் சிலுப்பிக்கிட்டுப் போவார். எனக்குத்தான் நாணக்கேடு. சுடுதண்ணி கேக்குதே என் உடம்பு:-)

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்ன காட்சியை முகநூலில் பார்த்தேன், தண்ணீர் இல்லாமல் பறவைகள் கூட்டம் கூட்டமாய் மடிந்த காட்சியை.
மனதுக்கு மிகவும் வேதனை அளித்த காட்சி.
தங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துளசி, வாழ்க வளமுடன்.
நீங்களும் சமையல் அறை ஐன்னல் வழியே பறவைகளை கண்டு களிப்பீர்கள் . ரஜ்ஜூம் பறவைகளுடன் விளையாடும்.
பறவைகள் குளிர் ரத்தம் உயிரினங்கள் என்பார்கள். குளிர் தாங்கும் வெப்பம் தாங்காது.
.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி துளசி.

துரை செல்வராஜூ said...

தாங்கள் இயற்றும் நல்ல காரியங்களால் மகிழ்ச்சி..

தங்களுடைய நல்லெண்ணம் பறவையினங்களை அழைத்து வரும்..
கவலை வேண்டாம்..

வாழ்க நலம்!..

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வழக்கம்போல் மிகவும் அழகான அருமையான படங்களுடன் கூடிய பயனுள்ள பதிவு.

//மனதுக்கு மகிழ்ச்சியை உற்சாகத்தை தருவது பறவைகள். இவைகள் நன்றாக இருத்தால் இயற்கை நன்றாக இருக்கும் இயற்கை நன்றாக இருந்தால் நமக்கு நல்லது தானே? //

ஆம் உண்மைதான். பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
மனம் சோர்வு அடையும் போது எல்லாம் பறவைகள் தான் உற்சாகத்தை தரும் டானிக்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

மாற்றம் ஒன்று தானே மாறாதது... உண்மை தானம்மா....

பறவைகளுக்குத் தண்ணீரும் உணவும் - நல்ல விஷயம். அதுவும் இந்தக் கோடையில் தண்ணீர் தாகம் தீர்ப்பது நல்லது. பாராட்டுகள் கோமதிம்மா...

Angelin said...

//எத்தனையோ கவலைகள் இருக்க இவர்களுக்கு இந்த கவலை என்று நினைக்காதீர்கள். எனக்கு மனதுக்கு மகிழ்ச்சியை உற்சாகத்தை தருவது பறவைகள் இவைகள்,//

எனக்கும் அக்கா ..இந்த குழந்தைங்களை பார்க்கலைன்னா அந்த நாள் எனக்கு தூக்கம் வராது ..
அந்த வெள்ளை புறாவும் சாம்பல் புறாக்களும் அழகா இருக்காங்க ..இன்னும் உங்களைப்போல சிலர் தட்டு நீர் வைப்பது சந்தோசம் அக்கா ..இறைவன் ஆசிர்வதிப்பார் ..
முதலில் தயங்கினாலும் பிறகு பழகிட்டா தினமும் வருவாங்க உங்க பறவை தோழர்களும் அணில் தோழமைகளும் ..

Ramani S said...

பறவைகளுக்கும் சேர்த்துத்தான்
வீடு என்பது என்கிற மனோபாவம்
தங்களைப் போல் அனைவருக்கும்
வருமாயின் நகரம் நிச்சயம்
சொர்க்கமாகித்தானே ஆகவேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்களுடன்....

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
மாற்றங்களை ஏற்று கொள்ள மனதை பக்குவ படுத்தி வருகிறோம். புது இடம் எங்களுக்கு பழக்கம் ஆக வேண்டும். பறவைகளுக்கும் எங்களிடம் பழக்கம் ஆக வேண்டும் .
இந்த குடியிருப்பில் எல்லோரும் உணவு வைக்கிறார்கள் தண்ணீர் வைக்கவில்லை , தண்ணீருக்கு தவிக்கிறது பறவைகள்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
உங்கள் வீட்டுக்கு நிறைய பறவைகள் வருவார்களே!
வித விதமான புறாக்கள் இருக்கிறது எங்கள் வாளகத்தில், இந்த இரண்டும் எதிர்வீட்டு ஜன்னலில் நிழலுக்கு இளைப்பாறும். இன்று சிட்டுக்குருவிகள் தன் குஞ்சுக்ளுக்கு இறை எடுத்து சென்றது மகிழ்ச்சி அளித்தது.

உங்கள் வரவுக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி .

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
இங்கு சிட்டுக்குருவியும், புறாவும், புல் புல் பறவைகளும் வீடுகளில்
கூடு கட்டி வசிக்கிறது. இங்கு எல்லோரும் உணவு வைக்கிறார்கள் பறவைகளுக்கு.

உங்கள் வாக்குபடி இயற்கை சூழ நகரம் சொர்க்கம் ஆகட்டும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

மாற்றம் சில சமயங்களில் படுத்துகிறது என்பதை ஒத்துக்கொள்வேன். பள்ளி நாட்களில் ஊர் மாறி பள்ளி செல்ல ஆரம்பித்த உடன் பள்ளி செல்லவே விருப்பமில்லாமல் நான் பட்ட அவஸ்தை.. அப்போது பட்ட கஷ்டங்கள்!

பறவைகள் வரக் கொஞ்சம் தாமதமாகலாம். ஆனால் பழகி வர ஆரம்பித்து விடும்.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
எங்கள் அப்பாவிற்கும் ஊர் ஊராக மாற்றல் உண்டு.
எனக்கும் பள்ளி அனுபவங்கள் உண்டு. புது வீடு, புது பள்ளி, புது தோழிகள் என்று பழகும் வரை சில கஷ்டங்களை , மகிழ்ச்சிகளை அனுபவித்து இருக்கிறேன்.

என் அம்மா எப்படி ஊர் ஊராக மாறினார்கள் என்று அம்மவை நினைத்துக் கொண்டு இருக்கிறேன். பொருட்களை சேகரிக்கும் போது தெரியவில்லை அதை பத்திரபடுத்தி இடம் மாற்றுவது பெரிய கஷ்டமாய் இருந்தது.

அடுத்து மகிழ்ச்சியை நிம்மதியை கொடுத்த பறவைகள் அவைகள் வந்து விட்டால் மகிழ்ச்சிதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

ராமலக்ஷ்மி said...

மாற்றங்கள் நிகழும் போது ஒப்பீடுகள் நம்மை அறியாமலே வந்து விடுகின்றன. விரைவில் மாற்றத்தில் இருக்கும் நன்மைகளை எடுத்துக் கொண்டு தொடரப் பழகி விடுகிறோம். அதுவும் இயற்கை மற்றும் பறவைகளுடனான தொடர்பு மனதுக்கு என்றும் இதமே. அருமையான பகிர்வு.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் மற்றத்தில் இருக்கும் நன்மைகளை எடுத்துக் கொண்டு வாழ பழகி விடுகிறோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

கோமதி அரசு said...

மாற்றத்தில் இருக்கும் நன்மைகளை

G.M Balasubramaniam said...

குயில்களின் ஓசை கேட்கும் குயில்களைப் பார்க்க முடியாது பறவைகளுக்கும் அணில்களுக்கும் வைக்கு உணவு காணாமல் போய்விடும் நாம் இருந்தால் அவை வரத்தயங்குகின்றன, நம்பிக்கை குறைவோ

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.
இங்கும் குயில்கள் மரத்தில் அமர்ந்து பாடுகிறது.
நம்பிக்கை ஏற்படும் வரை பக்கத்தில் வர அச்சம் தான் அவைகளுக்கு.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

வீடு மாறிட்டீங்களா? இப்போ போயிருப்பது முன்னிருந்த வீட்டுக்குப் பக்கமா? அல்லது வேறே பக்கமா? பறவைகளுக்கு நாங்களும் ஒரு துத்தநாகத் தகடு பதிச்சு அதிலே தம்பளரில் தண்ணீர், மண் பாத்திரத்தில் தண்ணீர், தட்டில் சாப்பாடு என வைத்து வந்தோம். இப்போத் தான் என்ன பண்ணுதுங்களோ தெரியலை! :(

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பறைவைகளைப் பார்க்கவே பால்கனியில் அமர்கிறேன். வெய்யிலின் உக்கிரத்துக்க அவைகள் நீச்சல் குளத்தையே நாடுகின்றன. கொஞ்சம் நிழலாடினால் பறந்துவிடும் கறுப்புக் குருவி.
உங்கள் தர்மசிந்தனை அவைகளைப் போய்ச்சேரும் கோமதி.
கவலை வேண்டாம். மாறிய இடம் மகிழ்ச்சி தரவேண்டும். வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
வீடு மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. முன்னிருந்த வீட்டுக்கு தூரம், வேறு பக்கம்.
உங்கள் வீட்டில் பற்வைகளுக்கு உணவு வைத்து இருப்பதை உங்கள் பதிவில் பார்த்து இருக்கிறேன். அவை எல்லாம் கீதாவை தேடிக் கொண்டு இருக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
வெய்யிலின் உக்கிரத்தில் பறவைகள் தண்ணீருக்கு தவிக்கும் காட்சியும், மடியும் காட்சியும் பத்திரிக்கைகளில் பார்க்கும் போது கொடுமையாக இருக்கிறது.
பறவைகளை பார்ப்பது ஒரு அருமையான பொழுது போக்கு, மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும் . உங்கள் வரவுக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

பரிவை சே.குமார் said...

மிக நல்ல செயல் அம்மா....
படங்கள் அழகு....

Bagawanjee KA said...

பறவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை என்பார்கள் ,உங்களைப் போன்றவர்கள் இருக்கும் போது அது உண்மையென்றே தோன்றுகிறது :)

நெல்லைத் தமிழன் said...

வீடு செட்டில் ஆகிற வரைல கொஞ்சம் கஷ்டம் இருக்கும். அப்புறம், புது இடம் ரொம்பவும் பழகிவிடும்.

எல்லோரும் பறவைகளையும் மனதில் கொண்டு தண்ணீர் உணவு வைப்பது நெகிழவைக்கிறது. 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பகவான் ஜி வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரிதான் பறவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லைதான்.
இயற்கையை நம்பி வாழ்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
வீடு செட்டில் ஆகிற வரைல கொஞ்சம் கஷ்டமாக இருந்தது இப்போது பழகி விட்டது நீங்கள் சொல்வது போல்.
இந்த மனம் பழைய வீடு இருந்த இடத்தின் சுற்றுபுறங்களையும், இப்போது இருக்கும் இடத்தின் சுற்றுபுறங்களையும் நினைத்து கொஞ்சம் சஞ்சலபட்டது.

பறவைகளை பிரிந்த சோகம், குழந்தைகள் வந்து உடன் ஊர் திரும்பி விட்டது ஒரு பக்கம், உறவினர்கள் வீடு தூரமாய் இருப்பதாயும் எப்படி வந்து போவது என்று கவலை பட்டார்கள் அது ஒரு பக்கம் பலவித எண்ணங்களின் அலைககழிப்பால் அதற்கு என் மனதுக்கு தேறுதலாக எழுதிய பதிவு.

எல்லோருக்கும் காலை உணவை இறைவனைக்கு படைத்து விட்டு காகத்திற்கு வைத்து விட்டு உணபதை காலம் காலமாய் கடை பிடித்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பிலும் தொடர்வதை பாராட்டத்தான் வேண்டும் இல்லையா?

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

காமாட்சி said...

இந்தப்பறவைகளைப் பார்க்கும் ஸுகம் இருக்கிரதே அது எல்லோருக்கும் கிடைக்காது. அதற்காக கவலைப்டவும் ஆரம்பித்து விடுகிறோமே அதுவும் பாசம்தான். இங்கும் எனக்கு ஒரு பறவை ஜோடி பொழுதைப் போக்கக் கிடைத்துள்ளது. புதுவீடு. புதுப்பறவைகள். சினேகமாகிவிடும் உங்களுக்கு. தண்ணீர் தேடாது கிடைத்தால் அவைகளுக்கும் எவ்வளவு மகிழ்ச்சி. மிக்க அழகாக பறவைகளின் படங்களும், அதன் சாப்பாடுகளும். சீக்கிரமே அவைகள் பழகிவிடும். உங்கள் அன்பிற்கு அவைகள் கொடுத்து வைத்துள்ளன. அன்புடன்

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
நலமா நீங்கள்?
பக்கத்து குடியிருப்பு சுவரில் குருவி கூடு கட்டி உள்ளது குஞ்சுகள் இரண்டு மூன்று இருக்கு, தாய், தந்தை குருவிகள் நான் வைக்கும் சோற்று பருக்கைகளை குஞ்சுகளுக்கு ஊட்டும் அழகே மந்துக்கு நிறைவாய் இருக்கிறது. அவைகளின் கீச் கீச் சத்தம் காலை முதல் மாலை வரை கேட்கிறது. பழக்கமான தட்டு கேட்கிறது மண் பாத்திரங்க்கள் பிடிக்கவில்லை போலும்! நீங்கள் சொல்வது போல சினேகமாகிவிடும்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

Chellappa Yagyaswamy said...

காலை ஏழரை மணியானால் இரண்டு காக்கைகள் வந்து கூப்பிடும். சூடான பண்டம் கொடுத்தால்தான் சாப்பிடும். காக்கைக்கு வைத்த பண்டைத்தன் மீதியை ஒரு குயில் வந்து சாப்பிடும். குருவிகள் இல்லை. நீங்கள் செய்வதுபோல் இன்னும் சற்றே வசதியான அமைப்பை செய்தால் பிற பறவைகள் - மைனா முதலியன வரக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன். (சென்னையில்)

- இராய செல்லப்பா நியூஜெர்சி

-

கோமதி அரசு said...

வணக்கம் செல்லப்பா சார், வாழ்க வளமுடன்.
(என் அப்பாபெயர் செல்லப்பா இதை உங்க்களிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது சொன்னேன்.)
மாயவரத்தில் எல்லா பற்வைகளும் காலை 6 மணிக்கு உணவு மேடைக்கு ஆஜர் ஆகிவிடும்.
இங்க்கு இன்னும் பழகவில்லை, இங்க்கு காக்கா, அணில், சிட்டுக்குருவி, புறா, மைனா, புல் புல் பற்வைகள் வருகிறது. குயில்கள் தூரத்தில் மரத்தில் கூவுகிறது பக்கத்தில் வரவில்லை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

கார்த்திக் சரவணன் said...

என்போன்றே மனம் கொண்டவர் நீங்கள்... நன்றி...

கோமதி அரசு said...

வணக்கம் கார்த்திக் சரவணன், வாழ்க வளமுடன். மகனுக்கும் அம்மாவின் மனதா?
நன்றி சரவணன் வரவுக்கும், கருத்துக்கும்.

மாதேவி said...

புதுவீட்டில் கீச்...கீச்..விருந்தாளிகளுடன் இனித்திருங்கள்.

கோமதி அரசு said...

வண்ககம் மாதேவி, வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கு நன்றி.