சனி, 22 அக்டோபர், 2016

கூடல் அழகர் கோவில்

கூடல் அழகர் பெருமாள் கோவில் கோபுரம்

இன்று காலை(22.10.16) சனிக்கிழமை என்பதால் பெருமாள்  கோவில் போவது  என்று முடிவு செய்தோம்.   பலவருடங்களுக்கு முன் பார்த்த  கூடல் அழகரைப் பார்த்து வந்தோம். இப்போது கோவில் பழமையும், புதுமையும் நிறைந்ததாய் இருக்கிறது. 

மூலவர் விமானம் கோபுரத்தின் பின்புறம் தெரிகிறது

மேல்தளத்திலிருந்து - ஐந்து கலசத்துடன் ராஜகோபுரம்
 தாயார் சன்னதி விமானம் (மேல் தளத்திலிருந்து எடுத்தது)
ஆண்டாள் சன்னதி விமானம்
மேல் தளக் காட்சி


அஷ்டாங்க விமானம் 
சூரியநாராயணர் நின்ற கோலத்தில் ( அருள்வழங்கும் திருக்கோலத்தில்)
அஷ்டாங்க விமானத்தில் உள்ள நம்மாழ்வார். 
மேல் தளத்தில் பள்ளி கொண்ட பெருமாளாய் (அழகிய கண்களால் நம்மைப் பார்க்கிறார்.)
சக்கரத்தாழ்வார் விமானம்
மணவாள மாமுனிகள் சன்னதி  விமானம்

தூரத்தில் தெரியும் மீனாட்சி அம்மன் கோபுரம்  - மேல் தள வாசலிருந்து எடுத்த படம்
கால் சூடு தெரியாமல் இருக்க வெள்ளை சிமெண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்டாள் சன்னதி செல்லும் வழி


 மதுரை பெரியார்  பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கூடல்  அழகர் கோவில்  மிக அழகான கோவில் கலை சிற்பங்கள் நிறைந்த கோவில்.  நின்றும், இருந்தும், கிடந்த கோலத்தில் பெருமாள் காட்சி தருவார். 108 திவ்ய தேசதலத்தில் ஒன்று.  பெரியாழ்வார் மங்களாசாஸனம் செய்து இருக்கிறார். (பல்லாண்டு பல்லாண்டு என்று தொடங்கும் பாடல்  பாடி இருக்கிறார்.)

மூலவரை யாரும் மறைக்க முடியாது.  பரமபத படத்தில் உள்ளது போல்  ஆதிசேஷன்  ஆசனத்தில் ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலம். உள்ளே   போய் பக்கத்தில் பார்க்க 10 ரூபாய் கட்டணம். நன்றாக தரிசனம் செய்தோம்.  கருவறையை வலம் வந்து மீண்டும் வணங்கி பிரசாதம் பெற்று வெளியே வந்து ராமர்   , கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகளைத் தரிசனம் செய்தோம். எல்லோரும் கம்பித் தடுப்புக்குள்  இருக்கிறார்கள் அழகாய் அலங்காரத்துடன்.

மூலவர் எதிரில்  உற்சவர்  சுந்தர்ராஜப் பெருமாள் கொலுவீற்றுஇருக்கிறார், அவருக்குத்தான் அர்ச்சனைகள் எல்லாம். 

பின் அஷ்டங்கவிமானத்திற்கு போக பத்து ரூபாய் அனுமதி சீட்டு வாங்கி சில படிகள் ஏறி மேல் தளத்திற்கு போய் நின்ற கோலத்தில் உள்ள   சூரிய நாராயணரையும் , அதற்கு மேல் சில படிகள் ஏறி பள்ளி கொண்ட பெருமாளையும் பார்த்தோம். அழகான மூலிகை வர்ணம் பூசிய திருமூர்த்தங்கள். கண்ணை கவரும் வகையில் இருக்கிறது.  கம்பி கேட் போட்டு பூட்டி வைத்து இருக்கிறார்கள்,  உள்ளே போக அனுமதித்தால் சூடன், விளக்கு எல்லாம் வைத்து புகை படிய செய்து விடுவார்கள் மூர்த்தங்களை வர்ணங்கள் நிறம் மாறி விடும்.  மேல்தளத்திலும் கால் சுடாமல் இருக்க வெள்ளை சிமெண்ட பூசி வைத்து இருக்கிறார்கள். அஷ்டங்க விமானத்தில் உள்ள சிலைகள் அழகு. வைண்வ கோவில் விமானத்தில் திருகடையூர் காலசம்ஹார மூர்த்தி, பிச்சாடனார்,  சுப்பிரமணியர் சிலைகள் உள்ளன.


அடுத்து சக்கரத்தாழவார்   சன்னதி சென்றோம் சன்னதியில் மஞ்சள்   கொடுத்தார்கள் பெற்றுக் கொண்டு அவரை வலம் வந்து பின்னால் உள்ள  யோக நரசிம்மரைச்  சேவித்து வந்தோம்.

தாயார் சன்னதி செல்லும் வழியில் உள்ள தூணில் தசாவதார காட்சி சிலைகள் அழகாய் காணப்படுகிறது. ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,  விச்வக்சேனர்,   ஆகியோர்   சிலைகள்  சன்னதி போகும் வழியில்  உள்ளது.

தாயார் சன்னதி முன் உள்ள தூண்களில் அஷ்டலட்சுமி சிலைகள் காணப்படுகிறது. முதல் தரிசனம்  அலங்காரத்துடன் உள்ள  உற்சவ அன்னை . மூலவர் மரகதவல்லி தாயார் பெரிய தேவியாக அழகாய் வீற்றிருக்கிறார். பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.

தாயார் சன்னதி அழகிய  வண்ண துணியால் செய்த தோரணங்களால் அழகு செய்யப்பட்டுள்ளது.  தூண்களில் அழகிய சிலைகள் காணப்படுகிறது. மர மூடி போட்ட கண்ணாடி பிரகாரத்தின் மூலையில் வைக்கப்பட்டுள்ளது.
                                          

ஆண்டாள்,  சன்னதி போவதற்கு முன் நீண்ட பிரகாரத்தின் சுவற்றில் திவ்ய தேச படங்கள் அழகாய் வரைய பட்டு இருக்கிறது  அதை ரசித்துக் கொண்டே வந்த போது  ஒரு அம்மா காவேரி அம்மன் கும்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்..

நான் வணங்கினேன் காவிரி அம்மனையும், அந்த அம்மாவையும் அவர்கள்  எனக்கு  மஞ்சள், குங்குமம் வைத்துவிட்டு    இரண்டு வாழைப்பழங்கள் பிரசாதமாய்  தந்தார்கள்.

ஐப்பசி மாதம் முழுவதும் நாள் தோறும் இப்படி கும்பிடுவார்கள் சிலர் வீடுகளிலும் கும்பிடுவார்கள். என் அண்ணி வீட்டில் கும்பிடுவார்கள்.

பக்கத்தில் ஒருவர் ஜோதிடம் பார்த்துக் கொண்டு இருந்தார். பின் 


  ஆண்டாள்  சன்னதி சென்றோம். உற்சவ ஆண்டாளை  முன்புறம் வெகு அழகாய்  அலங்காரம் செய்து வைத்து இருக்கிறார்கள், உள்ளே மூலவரும் நல்ல அலங்காரத்துடன்.  ஆண்டாள் சன்னதியில் திருப்பாவைப் பாடல்கள் காட்சிகள் ஓவியமாய் வரையப் பட்டுள்ளது.   ஆண்டாள் சன்னதி பின் நந்தவனம் உள்ளது. நந்தவனத்தில் கண்ணன் சிலை உள்ளது வர்ணத்தில்.

  ஆண்டாள் சன்னதியை வலம் வந்தோம். ஆண்டாள் சன்னதியில் துளசி மாடம் கண்ணாடியுடன் அழகாய் உள்ளது. ராமனூஜரின் மறு அவதாரம் மணவாளமாமுனிகள் என்று  எழுதப்பட்ட சன்னதி அழகாய் காட்சி அளித்தது.

 அடுத்து வெளியே வந்தால் நவக்கிரக சன்னதி.  நவக்கிரகத்தை வலம் வந்த பின் பிரசாத கடையில் பிரசாதம் வாங்கினோம் அரிசியும், உளுந்தும் மிளகும் கலந்து செய்த அடை  போல் ஒரு பலகாரம்-நடுவில் கனமாய் ஓரத்தில் மொறு மொறுப்பாய்  இருந்தது. இனிப்புக்கு அப்பம் வாங்கினோம்.

  மீனாட்சி அம்மன்  கோவிலில் விசிறி சேவையில் உள்ள பெரியவர் இங்கும்  வந்து  விசிறி வீச அந்த காற்றை அனுபவித்து அவருக்கு நன்றியும், வணக்கமும் சொல்லிச்  சிறிது நேரம் அமர்ந்து இறைவனை மனக்கண்முன் கொண்டு வந்து வணங்கி விடைபெற்றோம்.


வெளியே  பசு மாட்டை வைத்துக்கொண்டு அகத்திகீரை வாங்கி போடுங்கள்,  நன்கு சாப்பிடும் இந்த பசு என்று  ஒரு அம்மா அழைத்துக் கொண்டு இருந்தார்கள் , பசு மாட்டின் கயிறைத் தன் காலடியில் பிடித்து வைத்துக் கொண்டு அதைத் தடவி கொடுத்துக் கொண்டு எல்லோரையும் அழைத்துக்கொண்டு இருந்தார். நாங்களும் வாங்கிக் கொடுத்தோம்.



                                                     வாழ்க வளமுடன்.
                                                          ------------------------------

22 கருத்துகள்:

  1. படங்களும் பதிவும் வழக்கம்போல் மிகவும் அருமையாக உள்ளன. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. தங்களுடைய அழகிய பதிவின் வழியாக கூடலழகரைத் தரிசனம் செய்தேன்..

    மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  3. கோயிலுக்கு செல்லும் ஆர்வத்தை உண்டாக்கிவிட்டீர்கள். விரைவில் அங்கு செல்வேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மதுரைக்கு பல முறை சென்றிருந்தும் தரிசிக்காத கோவில் எங்கே என்ன என்று சொல்லி இருக்கலாமோ

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    மதுரை பெரிய பேருந்து நிலையம் அருகில் தான் இருக்கிறது.
    மதுரை கூடல் நகர் அழகர் கோவில் எல்லோருக்கும் தெரியும் என்பதால்
    இருப்பிடம் குறிக்க வில்லை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அழகிய படங்கள். கோவில் படங்கள் பார்க்கப் பாக்க அலுக்காது. ராமலக்ஷ்மி கூட ஒருமுறை இந்தக் கோவிலின் மேல் தளத்தைப் படமெடுத்துப் போட்டிருந்தார். ஆனால் அவர் அருகில் தங்கியிருந்த இடத்திலிருந்து எடுத்திருந்தார் என்று நினைவு. மேலே செல்ல விடுகிறார்களா? படம் எடுக்கத் தடை இல்லையா? இவ்வளவு வருடங்கள் மதுரையில் இருந்தும், ஒருமுறை கூட மேலே சென்று பார்த்ததில்லை. அதே போலத்தான் பல வருடங்கள் தஞ்சையில் இருந்திருக்கிறேன். பெரிய கோவில் மேலேயும் ஏறிப் பார்த்ததில்லை!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஶ்ரீராம் , வாழ்க வளமுடன். மேல் தளம் போக அனுமதி உண்டு அனுமதி சீட்டு ஒரு நபருக்கு 10 ரூபாய் . படம் எடுக்க கூடாது என்று எங்கும் போடவில்லை. அதனால் எடுத்தேன். தஞ்சை கோவில் உள்புறம் நிறைய ஓவியங்கள் உண்டு சிறப்பு தரிசனம் செய்தோம் சாரின் அண்ணாவால். உங்கள் கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்கள்.... 2016 அக்டோபர்... நான் ஏப்ரலுக்கு அப்புறம் (தந்தையின் மறைவு) மதுரை வரவில்லை!

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      பழைய பின்னூட்டத்தை படித்தீர்களா?
      அண்ணன் அங்க்கு வந்து விடுகிறார்கள். அண்ணன் அமகனும் அங்குதான் வேலைபார்க்கிறார்கள் உங்கள் வீட்டிலிருந்து என்று சொன்ன நினைவு.
      அப்புறம் எங்கே இங்கு வருவது?
      மீண்டும் வந்து படித்தற்கு நன்றி.

      நீக்கு
    3. ஆனாலும் மதுரையில் முடிக்க வேண்டிய ஓரிரண்டு வேலைகளும், மீண்டும் பார்க்க வேண்டிய இடங்களும் இருக்கின்றனவே... வரவேண்டும்... எப்போது என்று சொல்ல முடியவில்லை. பார்ப்போம்.

      நீக்கு
    4. ஸ்ரீராம், மதுரையில் முடிக்க வேண்டிய வேலைகள் நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள். மீண்டும் பார்க்க வேண்டிய இடங்களையும் பார்க்க வாருங்கள். நேரம் வரும் போது சரியான படி நடக்கும்.
      நன்றி. வாழ்க வளமுடன்.

      நீக்கு
  12. பயணம் செய்யாமல்... பணங்கொடுக்காமல்... படி ஏறாமல்... மானசீகமாக உங்களுடன் வந்து கூடலழகரைத் தரிசித்துவிட்டோம். நன்றி கோமதி மேடம்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    மானசீகமாய் வணங்குவது மிகவும் உத்தமம் கீதமஞ்சரி.
    பூசலநாயனார் மனதில் கோவில் கட்டி வணங்கினார். இறைவன் அவர் கட்டி கும்பாபிஷேகம் செய்த கோவிலுக்கு தான் எழுந்தருளினார் முதலில்.
    உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு. ஒரு காலத்தின் தினம் தினம் போய்க் கொண்டு இருந்த கோயில் இது. அதிலும் வைகுண்ட ஏகாதசிக்கு சுவர்க்க வாசல் திறப்புக்கு இந்தக் கோயிலுக்கும், வடக்கு மாசி வீதியில் உள்ள வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்கும், (யாதவா கிருஷ்ணன் கோயில் என்பார்கள்) போய் தரிசனம் பார்த்த நினைவுகள் எல்லாம் வந்து மோதின. அதிலும் வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் இராப்பத்து, பகல் பத்து உற்சவத்தின் போது திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரம் பார்த்த நினைவு இன்னமும் மனதில் பசுமையாக இருக்கிறது. வையாளி சேவையும், பூப்பல்லக்கும், அந்தக் கோயிலில் கொடுக்கும் தைலச் சக்கையும்! பொற்காலம்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் பொற்காலத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
    இளமை காலம் பொற்காலம் தான்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  16. போன மாதம் நாங்களும் கூடல் அழகரை சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்...என்ன ஒரு அழகான கோவில்...

    விரைவில் எங்கள் தளத்திலும் இவரை காணலாம்...

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.

    உங்கள் தளத்தில் பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு