சனி, 15 அக்டோபர், 2016

பொன் பெருமாள் மலை

இந்த  சனிக்கிழமைக்கு  பொன் பெருமாள் மலை   போய் சீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்து வந்தோம். முதல் சனிக்கிழமை  ஸ்ரீ பிரசன்ன  வெங்கடேச பெருமாள் . இரண்டாவது சனிக்கிழமை  திருமோகூர் காளமேக பெருமாள் தரிசனம்.

மூன்றாவது நான்காவது சனிக்கிழமைகளில்  பெருமாள் தரிசனம் செய்ய முடியவில்லை. ( நவராத்திரி சமயம் வீட்டில் கொலு வைத்து இருந்ததால் போகவில்லை) இன்று  கடைசி சனிக்கிழமை. பெருமாளை வணங்க வேண்டும் கோவில் போய் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். தினமலரில் பொன்பெருமாள் மலை பற்றி கட்டுரை வந்து இருந்தது. பெருமாள் அழைத்து விட்டார். சென்று தரிசனம் செய்து வந்தோம். அழகான இயற்கை  சூழலில்  கோவில் இருக்கிறது. கோவில் வாசல் முன்பு அழகான விழுதுகள் தொங்கும் ஆலமரம் நிழல் தந்து கொண்டு இருக்கிறது.



தினமலர்  ஆன்மீக மலரில் வந்த படம்.

சீனிவாசபெருமாளை தரிசனம் செய்ய இந்த படிகட்டுகளில் ஏறி போக வேண்டும்


சீனிவாச பெருமாள் இருக்கும் கோவில் விமானம்



மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் இந்த பொன் பெருமாள் மலை அமைந்து இருக்கிறது.

குலசேகரன் கோட்டை என்றும் சொல்கிறார்கள் இந்த ஊரை. அதற்குக் காரணம் :-மதுரையை ஆண்ட குலசேகர பெருமாள் நாட்டின் மேற்கு எல்லையை நிர்ணயம் செய்து கோட்டை அமைக்க விரும்பினான்.  மன்னரது கனவில் தோன்றிய பெருமாள் இந்த மலையை எல்லையாகச் சுட்டிக் காட்டினார். அதனால் இந்த இடம் குலசேகரன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

மதுரை திண்டுக்கல் சாலையில் 30 கி.மீ தூரத்தில் வாடிப்பட்டி.
இங்கிருந்து குலசேகரன் கோட்டை செல்லும் வழியில் 1. கி.மீ தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

தலவரலாறு :-

இராமருக்கும் இராவணன் மகன் இந்திரஜித்துக்கும் இலங்கையில் போர் நடந்த போது  இந்திரஜித் விஷம் மிக்க நாகபாசத்தை வானரப்படை மேல் ஏவியதால் அனைவரும் மூர்ச்சை அடைந்தனர்.
கரடிகளின் தலைவன் ஜாம்பவான் அறிவுரைப்படி  அனைவரின் உயிரைக் காப்பாற்ற   அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்தார்.
அதன் ஒரு பகுதி பூமியில் விழுந்தது. அதுவே பொன் பெருமாள் மலையாக விளங்குகிறது.

அனுமன் சுமந்து வந்த மலை என்பதால் அனுமனுக்கு மலைமேல் கோவில்  அமைக்கப்பட்டுள்ளது.

மலை மேல் போக 562 படிகள் உள்ளன.  சமீபத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. சிறிய மலைதான். படிக்கட்டுகளின் எண்ணிக்கை மிரட்டியது . மேலே போய் அனுமனை தரிசிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது.

மலையடிவாரத்தில் சீனிவாசப்பெருமாள்  இருக்கிறார் அவர் எதிரில் கைகூப்பிய நிலையில் கருடாழ்வார் இருக்கிறார். அனுமன் தனி சன்னதியில் இருக்கிறார்.

 திருப்பதி  பெருமாள் போல் தோற்றத்தில் காணப்படுகிறார். பெருமாள் நந்தகம் என்னும் வாளை அணிந்து இருக்கிறார்.

உற்சவர் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகான அலங்காரத்தில் மூலவர் அருகில் இருக்கிறார். மாலை திருப்பதி பெருமாள் போலவே அலங்காரம் செய்வார்களாம். பவுர்ணமி அன்று மக்கள் கிரிவலம் வருவார்களாம்.
                                               



பெருமாளை தரிசனம் செய்த பின் மலைப் படி பக்கம் போய் பார்த்தோம் ஏறி விடலாமா என்று.  எங்களை விட வயதானவர்கள் ஏறிக் கொண்டு இருந்தார்கள். படியும் சின்னச் சின்னப் படியாக இருந்தது. சூரியனும் சுட்டெரிக்கவில்லை,  மழை வருவது போல் தட்டான்களும் கிட்டப் பறந்தன.




கீழே  இருக்கும் விநாயகரை வணங்கி விட்டுப் படி ஏற ஆரம்பித்தோம்.   மெல்லிய காற்று வீசியது. ஏற ஏற கொஞ்சம் மூச்சு வாங்கியது எனக்கு, வேர்த்து ஊற்றியது, காற்று குறைச்சலாக வீச ஆரம்பித்து விட்டது,  ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஏற ஆரம்பித்தபின் அங்கிருந்து கீழே பார்த்தால் இயற்கை அழகு நம்மை இன்னும் படி ஏறவேண்டுமே என்ற மலைப்பைப் புறம் தள்ளுகிறது.




பட்டாம் பூச்சிகள் அழகு அழகாய் சுற்றிப்பறந்து கொண்டு இருந்தது, தட்டான்கள் சுற்றிப் பறந்தன.



 முன்பு (சிறுவயதில் )

காற்றாடி செய்ய முள் எடுக்கும் மரம் பெரிய பெரிய முட்களுடன் இருந்தது,


ஆவரம் பூக்கள் பூத்து இருந்தது. வழி எல்லாம்   பாறைகளில் பெருமாள் நாமம் வரைந்து இருந்தார்கள்.




சாமி கிட்ட வந்து விட்டோம் வா அம்மா சீக்கிரம் என்று படியில் உட்கார்ந்து அம்மாவை கூப்பிடும்  குட்டி தேவதை. அவள் தங்கை ஓடிக் கொண்டே இருந்தாள்,  நிற்கவில்லை திரும்பியும் பார்க்கவில்லை.
தற்சமயம் தகர கொட்டகைதான்  கோவில் கட்ட நன்கொடை வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள். 


அனுமன் அருளால் அவரைப் பார்க்க மலை ஏறி வந்து விட்டோம். தகரக் கொட்டகையில்   வலது கையில் சஞ்சீவி  மலையைத் தூக்கிக்கொண்டு  கம்பீரமாய்க் காட்சி அளித்தார்.  இடது கையில் கதாயுதம் உள்ளது.

 நான் மெளன விரதம் என்பதால் அனுமன் வரலாறு கேட்கச் சொன்னேன் என் கணவரை,  பட்டரிடம்.

பட்டர் சொன்னது :-நானூறு வருடங்களுக்கு முன் பின்னாடி இருக்கும் கல் விளக்குத் தூணில் இருக்கும் அனுமனை வணங்கி வந்து இருக்கிறார்கள், நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இந்த அனுமன் சிலை வைத்தார்கள் என்று சொன்னார். படிகளும் இப்போது தான் கட்டப்பட்டு இருக்கிறது, சிமெண்ட் படிக்கட்டுகள் தான்.விவேகானந்த கல்லூரி மாணவர்களும் அங்கு இருக்கும் சாமியாரும் கட்டிக் கொடுத்ததாய்ச் சொன்னார்.




  பின்புறம் உள்ள வில்வமரம் தலவிருட்சமாய்  சிவஅம்சமாய் வணங்கப் படுகிறது .   இந்த விளக்குத்தூண் பக்கம் ராமர் பாதம் உள்ளது.



குலசேகர பாண்டிய மன்னர் மலை மீது உள்ள ஆஞ்சநேயருக்கு வழிபாடு செய்யவும், கல் தூணில் நெய் விளக்கேற்றவும் ஏற்பாடு செய்து இருக்கிறார்.


                                                                ராமர் பாதம்


முன் காலத்தில் இந்த கல்லை அனுமனாய் நினைத்து வழி பட்டு இருப்பார்கள் போலும்


அனுமனை  சுற்றி வந்து வணங்கி எல்லோரையும் நலமாய் வைத்து இருக்க வேண்டி வந்தோம். தேகபலம், மனபலம் வேண்டுமே !எதையும் தாங்க! .

இறங்கும் போது எளிதாக இருந்தது சிரமம் இல்லை. நிதானமாய் இயற்கையை ரசித்துக் கொண்டு இறங்கினோம். நிறைய ஆடுகள் மலைமேல் மேய்ந்து கொண்டு இருந்தது.

மலை மேல் ஏறி வந்த ஒரு அம்மா எங்களுக்கு நெல்லிகனி கொடுத்தார்கள். பிஞ்சு நெல்லிகனி கொஞ்சம் துவர்ப்பும் கொஞ்சம் புளிப்புமாய் நன்றாக இருந்தது. போகும் போது சாப்பிட்டுக் கொண்டு போனால் நல்லது என்று நினைக்கிறேன், மூச்சு வாங்கி வாய் உலர்ந்து போகாமல் இருக்கும்.  அடுத்தமுறை செல்லும் போது நெல்லிக்காய் எடுத்து செல்ல வேண்டும் ( ஆசைதான்)   இனி மேல் போக போகிறவர்களிடம் சொல்ல  வேண்டும்.

மலை மேல் இருக்கும் ஆஞ்சநேயரை  காலை 7 மணி முதல்  9 மணி வரை, மாலை 4.30  முதல் இரவு 7 மணி வரை.

 கீழே இருக்கும் பெருமாள்   காலை 7 மணி முதல்  9 மணி வரை.
புரட்டாசி சனிக்கிழமை மட்டும் மதியம் 1 மணி வரை உண்டு என்றார் பட்டர். அடுத்த தடவை வரும் போது மாலை நேரம் வாருங்கள் திருப்பதி பெருமாள் அலங்காரம் பார்க்கலாம் என்றார்.
படி ஏறி செல்லும் வழியில் மூன்று நான்கு பேர் பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

சீனீவாச பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரும் போது வெல்லம் கலந்த அவல்,   துளசி கொடுத்தார்கள்.

பெருமாளுக்கு பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார்கள். பால் பொங்கி வரும் போது குலவை இட்டார்கள் அருமையாக இருந்தது.

மதியம் அன்னதானத்திற்கு தயார் செய்து  செய்து கொண்டு இருந்தார்கள்.


காமிரா எடுத்து செல்லவில்லை கைபேசியில் எடித்த படங்கள் தான்.

 மலை  அடுக்கு மலையாக நீண்ட தூரம் போய் கொண்டே இருந்தது.


மலையின் பின்புறம் இயற்கை அழகு. 

மலை ராமர் பாலம் கட்ட வானரங்கள் எடுத்துப் போட்ட கற்கள் போலவே உருண்டு உருண்டு இருந்தது.
வயலும் மலையும் பார்க்கவே அழகு

ஏசுநாதர் கோவில் தங்க கொடிமரத்துடன் அழகாய் மூன்று கோபுரங்களுடன். இருக்கிறது. (மலை மேலிருந்து எடுத்தபடம்)


மேலே ஏறும் போது கண்ட காட்சிகள்:-

குழந்தையை தூக்கி கொண்டு வந்த அம்மா போன தடவை அழாமல் நடந்து வந்த நீ தூக்க சொல்லி அடம் செய்கிறாயே ! என்று புலம்பி கொண்டு தூக்கி வந்தார்கள் ஐந்து வயது குழந்தையை. (வேறு ஒருவர் இரக்கப்பட்டு சிறிது தூரம் தூக்கி வந்து உதவினார்.)

சில சிறு வயது பெண்கள் ஏனப்பா ? இப்படி மலைமேல் போய் இருக்கிறாய்? கீழே இருந்து இருக்கலாம் என்று சொல்லிக் கொண்டே ஏறினார்கள்.

ஒரு  சிறு பையன்  லிப்ட் வைக்க கூடாதோ! ரோப் கார் வைக்ககூடாதோ!  என்று அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.

ஐயப்ப பக்தர்கள் சொல்வது போல் தூக்கிவிடப்பா, ஏத்தி விடப்பா என்று அனுமனை வேண்டிக் கொண்டு மலை ஏறவேண்டும். தேகபலம் தா, பாதபலம் தா, மனபலம் தா  ஜெயவீர மாருதி .

வாழ்க வளமுடன்.



37 கருத்துகள்:

  1. புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று தங்கள் தயவால் ஓர் புதிய பெருமாளை கண்குளிர தரிஸிக்க முடிந்துள்ளது.

    வழக்கம்போல படங்களும் செய்திகளும் அருமையாக உள்ளன.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  2. கோயிலின் இருப்பிடம், தலவரலாறுகள், ஹனுமன், ராமர் பாதம் என அனைத்தையும் விளக்கி விபரமாகச் சொல்லியுள்ளீர்கள். அங்கு போக நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். மீண்டும் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கோபால கிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். உடனே வந்து விரிவான பின்னூட்டம் தந்து பாராட்டுக்களை அளித்தமைக்கு நன்றி, நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள்.... நல்ல அனுபவம்.

    அய்யர் மலைக்குச் சென்று படிகள் ஏறி சிவனை தரிசித்த நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
  5. அடடே.... குறித்து வைத்துக் கொள்கிறேன். அண்ணனிடமும் சொல்லி விட்டேன். தற்சமயம் சென்னையில் என்னுடன்தான் இருக்கிறார். எனக்கு முன்னால் அவர் போய் தரிசித்து வந்து விடுவாராம். எனக்கு மதுரை வர ஒரு லீவு கிடைக்க வேண்டும்! படங்களும், வர்ணனையும் அழகு.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அழகு
    துறையூருக்கு அருகிலும் ஒரு பெருமாள் மலை உள்ளது

    பதிலளிநீக்கு
  7. பொன் பெருமாள் மலை - புதிதாகக் கேள்விப்படுகின்றேன்..

    ஸ்வாமி தரிசனம் செய்ததை அழகுடன் விவரித்ததற்கு மகிழ்ச்சி..

    பெருமாளே சரணம்!..

    பதிலளிநீக்கு
  8. பொன் பெருமாள் மலைக்கு போன அதிர்ஷ்டம் பொன்னான புகைப்படங்களைக் காண வாய்ப்பாக அமைந்தது.

    அம்மாடி! மலையேறும் படிக்கட்டுகளைப் பார்க்கவே மலைப்பாக இருந்தது.

    மலை மீது ஏறிவந்த அந்த அம்மா நெல்லிக்கனி கொடுத்ததை வாசித்ததும் அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஒளவையார் நினைவு வந்தது.

    ஆன்மிக உணர்வு வற்றாத ஜீவநதி.. அப்படியான பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரில் பார்க்கிற உணர்வை தரும் புகைப்படங்களுடன் பதிவிடும் உங்களுக்கு இறைவனின் அருள் என்றேன்றும் உண்டு. மிக்க நன்றி, கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.

    அய்யர் மலை 1000 படிகளுக்கு மேலே நானும் போய் இருக்கிறேன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஸ்ரீராம் வாழ்க வளமுடன்.

    நேரம் கிடைக்கும் போது பார்த்து வாருங்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    துறையூருக்கும் அருகில் இருக்கும் பெருமாள் மலை பார்த்தது இல்லை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது போல் பெருமாளே நமக்கு சரணம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    நேற்று உற்சாகத்தில் மலையேறி விட்டேன். இன்று உடல்வலி உள்ளது.

    இறைவன் அருளால் முடிந்தவரை இறைவன் உறையும் இடங்களுக்கு சென்று வருவோம். அப்புறம் அவன் விட்டவழி.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. பதிவும் படங்களும் அருமை சகோ. உங்கள் பதிவின் மூலம் நிறைய கோயில்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  15. பக்தி மணம் கமழும் நல்ல பயணம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. இக்கோயிலுக்கு இதுவரை சென்றதில்லை. தங்கள் மூலமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விரைவில் அங்கு செல்லும் நாளை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான தகவல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  18. படங்களும் தகவல் விளக்கங்களும் கூடவே பயணித்துப் பெருமாளைத் தரிசித்த அனுபவத்தைத் தருகின்றன. நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரி சாரதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    நேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஜீவலிங்கம், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. பொன் பெருமாள் மலை.பெயரே புதியதாக இருந்தது. மலை ஏறுவதற்குப் பாதை வளைந்து வளைந்து பார்க்கவே மலைப்பாகவும் அழகாகவும் இருக்கு. எப்படியோ ஏறி இவ்வளவு அழகாக ஒவ்வொன்றையும் விரிவாகக் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள். போய்விட்டுவந்த திருப்தி ஏற்பட்டு விட்டது. ஹனுமான் அடுத்தமுறை கோவிலுக்குள் வீற்றிருப்பார். நெல்லிக்கனி கிடைத்தது சுபசூசகம். நல்ல பக்தியுடன் தரிசித்த உங்கள் கட்டுரை மனதில் நிற்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  25. உங்கள் தயவால், பெருமாள் தரிசனம் ஆச்சு.

    "(முதலில் கீழே இறங்க பலம் வேண்டுமே)" - இந்த வரியைப் படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது. ரொம்பக் கஷ்டப்பட்டு கோவில் தரிசனத்துக்குப்போய், அம்பாளை தரிசிக்கும் சமயம், வேறு எதுவும் வேண்டிக்கொள்ளத்தோன்றாமல், வாசலில் வைத்திருக்கும் செருப்பு பத்திரமாக இருக்கணம் என்று வேண்டிக்கொண்டாற்போல்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் காமாட்சிம்மா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் அடுத்தமுறை அனுமன் கோவிலுக்குள் வீற்றிருப்பார். நெல்லிக்கனி கிடைத்தது சுபசூசகம் நீங்கள் சொல்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.பெரியவர்கள் நல்லாசி கிடைத்தது ஆறுதலாக இருக்கிறது.
    உங்கள் அன்பு என்றும் வேண்டும்.தொடர்ந்து என்பதிவுகளை படித்து வருவது மனதுக்கு மகிழ்ச்சி. நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
    முதலில் அனுமனிடம் எல்லோரையும் நலமாக இருக்க பிராத்தனை செய்து விட்டு, தேகபலம், மனபலம் கொடுக்க வேண்டி விட்டுதான் இறங்க பலம் வேண்டும் என்று போட்டு இருக்கிறேன். நினைவு முழுவதும் இறைவன் நினைவுதான்.

    நீங்கள் சொல்வது போல் ஏறபலம் தந்தவர் இறங்க பலம் தரமாட்டாரா என்ன?

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. அற்புதம். மிக அழகான சூழலில் அமைந்த கோவிலை உங்கள் அருமையான படங்கள் மற்றும் அனுபவக் குறிப்புகள் மூலம் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    காமிரா எடுத்து போய் இருந்தால் நன்றாக எடுத்து இருக்கலாம் இயற்கை காட்சிகளை. கைபேசியில் எடுத்தேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  30. கோவிலுக்கு உங்களோடு நானும் படிகளில் ஏறி,இறங்கியது போல இருந்தது. கை பேசியில் எடுத்திருந்தாலும் படங்கள் நன்றாக இருந்தன.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
    நீங்களும் வந்து தரிசனம் செய்தது மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. படங்கள் நன்றாகவே வந்திருக்கின்றன. இந்தக் கோயில் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. தெரிந்தாலும் இத்தனை படிகள் ஏற முடியுமா என்பது சந்தேகமே! :(

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    படிகள் ஏறி அனுமனை கும்பிட முடியவில்லை என்றால்
    கீழே உள்ள சீனிவாசபெருமாளையும், கீழே உள்ள அனுமனை வணங்கி வரலாம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம், நாங்கள் பொன்மலை பெருமாள் கோவிலுக்கு சென்றோம். ஜெய வீர சஞ்சீவி ஆஞ்சநேயரை தரிசித்தோம். மிகவும் சந்தோசம் நான் வேண்டியதை அந்த ஆஞ்சநேயர் நடத்தி வைக்க வேண்டும்.எனக்கு குழந்தை இல்லை அந்த ஆஞ்சநேயர் அருளால் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தேன். தயவுசெய்து இதை படிப்பவர்கள் எனக்காக ஆஞ்சநேயரிடம் வேண்டி கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  35. @பாரதி, விரைவில் உங்களுக்குக் குழந்தைச் செல்வங்கள் பிறக்க மனமார்ந்த பிரார்த்தனைகள். இறைவன் கைவிட மாட்டான். முடிஞ்சால் விருத்தாசலம் கொளஞ்சியப்பரிடமும் சென்று பிராது கொடுத்து வாருங்கள். வாழ்த்துகள். ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  36. வனக்கம் பாரதி, வாழ்க வளமுடன்.

    //ஆஞ்சநேயர் அருளால் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தேன். தயவுசெய்து இதை படிப்பவர்கள் எனக்காக ஆஞ்சநேயரிடம் வேண்டி கொள்ளுங்கள்.//

    ஜெயவீர சஞ்சீவி, பெருமாள் வரம் தருபவர் இருவரையும் தரிசனம் செய்து வந்து விட்டீர்கள்.
    இறைவன் அருளால் மழலை செல்வம் கிடைக்கும்.
    ஆஞ்சநேயர் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்.
    நாங்களும் வேண்டிக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    உங்களின் வாழ்த்து பலிக்கட்டும்.
    விருத்தாசலம் கொளஞ்சிப்பரிடம் வேண்டி நல்லது நடந்து இருக்கிறது.
    பாரதி, கீதா அவர்கள் சொன்னது போல் போய் வணங்கி வாருங்கள்
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு