சனி, 7 ஏப்ரல், 2012

உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் ஏப்ரல், 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக சுகாதார தினத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படுவது முதுமையும் ஆரோக்கியமும்.

மூத்த குடி மக்கள் வாழ்நாள் முழுவதும் உடல் நலத்தோடு இருக்க அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பது , அரசு மருத்துவமனைகளில் முதுமக்களுக்கு ஏற்படும் உடல்,மனம் சார்ந்த கோளாறுகளைப் போக்க தனிப் பிரிவு ஏற்படுத்தி அவர்களைப் பாதுகாப்பது போன்ற திட்டங்களை அமுலாக்குதல் இவை எல்லாம் உலக சுகாதார தினத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் 7.5 சதவீதம் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அதிகமாய் இருப்பது, தமிழ்நாடு, கேரளா, இமாசல்பிரதேசம்.

உடலை நலமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி, மனதை நலமாக வைத்துக் கொள்ள, மனதை ஒருநிலைப்படுத்த தெய்வ வழிபாடு, தியானம் சொல்லப்படுகிறது. இவைகளை கடைப்பிடித்தால் மறதி நோயிலிருந்து விடுபடலாம். முதுமையில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்ற செய்திகள் வலியுறுத்தப்படுகிறது.


சுத்தம் சோறு போடும் என்பார்கள். கூழானாலும், குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பார்கள். நம்மை-நாம் வாழும் வீட்டை- சுற்றுப்புறத்தை சுத்தமாய் வைத்துக்கொள்ளவேண்டும். குப்பைகளை மூடிவைத்து குப்பைக்காரார் வரும் போது அந்த வண்டியில் போட வேண்டும். நம் வீடு சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா நேரமும் குப்பைகளைத் தெருவில் கொட்டக்கூடாது. அது காற்றில் பறந்து சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும்.

இந்த வெயில் காலத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் வரும் . அந்தக்காலத்தில் உள்ள பெரியவர்கள் அம்மை நோய் வந்த வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே கொட்டமாட்டார்கள். அந்தக் குப்பைகளை சேர்த்து வைத்து இருப்பார்கள். தலைக்குத் தண்ணீர் விட்டபின் தான் அதை, புதைப்பார்கள் அல்லது எரிப்பார்கள். ஏனென்றால் அம்மை புண் ஆறும்போது அதன் மேல் பாகம் உதிரும். அதை வெளியில் போட்டால் அதன் மூலம் நோய் பரவும் அதைத் தடுக்கத்தான் சாஸ்திரம் மாதிரி, அம்மை போட்ட வீட்டில் குப்பையை வெளியில்கொட்டக் கூடாது என்றனர். நோய் கண்டவர்களைப் பார்க்கப் போகும் ஆண்கள் ,வீட்டில் உள்ளஆண்கள் சவரம் செய்து கொள்ளக் கூடாது என்பர். அதற்கு காரணம் சவரம் செய்து கொள்ளும்போது ஏதாவது காயங்கள் ஏற்பட்டு இருந்தால் அதன் வழியாக நோய் பரவி விடும் என்றுசொன்னார்கள்.


தண்ணீர் மூலம் பரவும் வியாதி காலரா:

குடிதண்ணீர் சுத்தமாய் இருக்க வேண்டும், மூடிஇருக்க வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும். இதையே முன்னோர்கள், நீரைச் சுருக்கிக் குடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்போது மாம்பழம், பலாப்பழ சீஸன் . ஈக்கள் நிறைய மொய்க்கும் காலம் . அதனால் உணவுப்பொருட்களை மூடி வைத்து உண்ண வேண்டும். அதற்கு பெரியவர்கள், ”கரண்டியை சாதபாத்திரத்தில் இருந்தால் சொக்கார் வீட்டுக்கு செல்வம் போய்விடும்” என்று அச்சுறுத்தி கரண்டியை வெளியே எடுத்து நன்கு மூட வைத்தார்கள். சிறு குழந்தைகளுக்கும், திறந்து

இருக்கும் உணவு பொருட்களை வாங்கி உண்ணக் கூடாது என்று சொல்லி வளர்க்கலாம்.வெயில் காலத்துக்கு ஏற்ற உணவை உண்ண பழக்க வேண்டும். இளநீர், நுங்கு,, மோர்,எலுமிச்சை ஜீஸ், தர்பூசணி, மற்றும், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தவேண்டும். குளிர்பானங்கள், ஜஸ்கீரீம், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஏர்கூலர் உபயோகிப்போர் தண்ணீரை தினம் மாற்ற வேண்டும். அதில் கொசு முட்டையிட்டு காய்ச்சல் பரவும் நோய் கிருமிகளை உற்பத்தி செய்து விடும்.

அகச்சுத்தம்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்தறன்
ஆகுல நீர பிற. -திருக்குறள்.


//ஆசை ய்றுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசையறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.// -திருமந்திரம்.


நோய் வராமல் இருக்க,மனச்சுத்தமும் தேவை. ஆசை, சினம், கவலை, எல்லாவற்றையும் சீர் செய்தால் நோய் வராமல் தவிர்க்கலாம்.
ஆசைக்கோர் அளவில்லை, ஆனால் நாம் நினைப்பதை எல்லாம் அடையமுடியவில்லை. நாம ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். ’நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்தெய்வம் ஏதும் இல்லை , நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை. ’

கைஅளவு உள்ளம் வைத்து கடல் போல ஆசை வைத்து என்று கவிஞர் சொன்னது போல்ஒவ்வொருவருக்கும் ஆசைகள் அளவிட முடியாத அளவில் இருக்கிறது. ஆசை நிறைவேறாத போது அல்லது தடை ஏற்படும் போது கோபம் ஏற்படுகிறது. ’கிட்டாதாயின் வெட்டெனமற’ என்ற முதுமொழிக்கு ஏற்ப ஆசையை முறைப்படுத்தி விட்டால் நலமாய் , வளமாய்வாழலாம். போதுமென்ற மனம் இருந்தால் வாழ்வில் நிறைவு வரும். அமைதியாய் ஆனந்தமாய் வாழலாம்.


//மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போதறியா வொண்ணா(து )
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடைய கோவே.//

திருநாவுக்கரசு தேவாரம்.

சினம் நம்மையும் பாழ்படுத்தி, நம்மை சேர்ந்தவர்களையும் பாழ்படுத்திவிடும்- குடும்பம், அக்கம்பக்கம் நண்பர்கள், நாம் வேலை செய்யும் இடம், உற்றார், உறவினர் என்று . கோபத்தில் நம்உடலும் கெடுகிறது. அல்சர், இரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் வருகிறது. கோபத்தால்,படபடப்பு, வார்த்தைகள் தடித்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிட்டு பின் வருத்தப்பட்டு பலன் இல்லை. வள்ளுவர், சினத்திற்கு முதலில் நா காக்க வேண்டும் என்கிறார்.
இனிமையும் மகிழ்ச்சியும், வேண்டும் என்றால் -அதுவும் முதுமையில் எல்லோர் நட்பும்,உதவியும் வேண்டும் என்றால் -சினம் தவிர்க்க வேண்டும்.
கவலையும் ஒரு நோய் தான் .

கவலைக்கு கவலை கொடுக்க வேண்டும். இவனை, இவளைக் கவலைப்பட செய்யமுடியவில்லையே என கவலை நம்மை பார்த்து ஓட வேண்டும் .அப்போது நம்மிடமிருந்த நோய் ஒடிவிடும். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். கவலையைப் போக்க வழி - வேண்டாத சிந்தனை,எல்லோரிடமும் ஏதாவது எதிர்ப்பார்ப்பு ஆகியவற்றை விட்டுவிடுவது, எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்
முடிந்தால் கவலை. அப்படி ஆகி விடுமோ, இப்படி ஆகி விடுவோம் என்ற அச்சத்தால் கவலை உருவாகிறது. கவலைப்படாமல் இருந்தால் நலமாக வாழலாம்.

முதியோர்கள் எல்லோரிடமும் நல் உறவு வைத்துக் கொண்டால், ஒவ்வொருவருக்கும் ஏற்ற முறையில் பேசி பழகினால் நல்லது. உதாரணம்- குழந்தைகளிடம் குழந்தைகள் மாதிரி பேசுவது. இளவயதுக்காரர்களிடம் அவர்களுக்கு பிடித்த கிரிக்கெட், மற்றும் பல விஷயங்களை பேசுவது.

அவர்கள், ’இந்த பெரிசுக்கு வேலை இல்லை, நம்மை அறுக்கிறது” என்று சொல்ல மாட்டார்கள்.’அந்த தாத்தா, பாட்டிக்கு எல்லா உலக விஷயங்களும் தெரியும்,
மிக நன்றாகப் பேசுவார்கள், நேரம் போவதே தெரியாது அவர்களுடன் பேசினால்’
என்று கூறுவார்கள். சிறியவர்களிடம் பெரியவர்களும் உலக விஷயங்களை அறிந்துகொள்ளலாம். சிறியவர்களும் அதனால் மகிழ்வார்கள்.

முதியவர்கள் பொருளாதாரத்தில் தன்நிறைவு பெற்று இருந்தால் எந்த கவலையும்
இல்லாமல் சந்தோஷமாய் இருக்கலாம், அதற்கு முதுமைக்கு வேண்டிய பொருளை இளமையில் சேமித்து வைத்து இருக்க வேண்டும் . பிறர் கையை எதிர்பார்த்து இருப்பதே முதுமையில் நோயாகிவிடும்.

இப்போது எல்லா முதியவர்களும் தனியாகத் தான் வாழவேண்டி உள்ளது. அது காலத்தின் கட்டாயம் ஆகி விட்டது. பிள்ளைகள் வெளி நாட்டில் பெற்றோர் இங்கு என்று இருக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். நாம் தன்னம்பிக்கையுடன் வாழ்வை நடத்தி சென்றால் அவர்கள் அங்கு நலமாய் வேலை செய்வார்கள். முன்பு இருந்த முதியவர்களுக்கு குழந்தைகளை அடிக்கடி பார்க்கவோ, பேசவோ வசதி வாய்ப்பு இல்லை .ஆனால் இப்போது நமக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. அதில் திருப்தி பெற்று கொள்ளவேண்டியது தான்.

முதியவர்களும் குழந்தை போல:-

முதியவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்கள் ஏதாவது உதவி செய்ய முன் வந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு தெம்பை கொடுக்கும். தினம் சிறிது நேரம் அவர்களுடன் பேசுவது நல்லது. சாப்பிட்டீர்களா என்று கேட்பது, அவர்களுடன் உணவு அருந்துவது , மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களாய் இருந்தால் அதை நேரத்திற்குச் சாப்பிட்டார்களா என்று கேட்பது நல்லது. அப்போது நம் மேல் எல்லோரும் பாசமாய், அன்பாய்
இருக்கிறார்கள் என்பதே அவர்களை மேலும் உற்சாகப் படுத்தும்.

ஏதோ முதுமை காரணமாக, அல்லது நோயின் தாக்கத்தால் கோபமாய் வார்த்தைகளை பேசினால் அவை கேட்காதது போல் நடந்து கொள்ள வேண்டும். குழந்தை போல் பிடிவாதம் பிடிக்கும் முதியவர்களை (குழந்தைக்கு தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காகக் குறும்புகள் செய்யும்) ஏதாவது நோயை சொல்லி தன்னை எப்போதும் கவனிக்க வேண்டும் என்று நினைக்கும் முதியவர்களுக்கு எதைப் பற்றியும் யோசிக்க இடம் கொடுக்காமல்
அவர்களை வேறு பொழுது போக்குகளில் ஈடுபடச் செய்து அவர்களை சுறுசுறுப்பாய் இயங்க வைத்தால் நலமாக இருப்பார்கள்.

உலக சுகாதார தினத்தில் தாய் சேய் நலமும் பாதுகாக்கப்படவேண்டும் என்று
சொல்லப்படுகிறது.

குழந்தைகளை அன்பாய் நல்ல மனவளம், உடல் நலம் மிக்கவர்களாக வளர்த்தால் அவர்கள் பெற்றோர்களை நன்கு மதித்து சமூகத்தில் பிறர் போற்றும் மக்களாய் வாழ்வார்கள்.தாய் கருவுற்று இருக்கும் போது ஊட்டம் மிகுந்த உணவுகள் சாப்பிட்டு, நல்ல சிந்தனையுடன், மகிழ்ச்சியுடன் இருந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டால் அந்த குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல குழந்தைகளாய் வளர்வார்கள். ஆரோக்கியமான சூழலில் வளரும் குழந்தைகள் மன உறுதியும், திறமையும் உடையவர்களாய் வளருவார்கள்.
பெரியோரை மதித்தல், இறை பக்தி, கீழ்ப்படிதல் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் தானாக வரும்.

நாளைய சமுதாயம் நலமாக வளமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!












31 கருத்துகள்:

  1. ஆரோக்கியமான சூழலில் வளரும் குழந்தைகள் மன உறுதியும், திறமையும் உடையவர்களாய் வளருவார்கள்.
    பெரியோரை மதித்தல், இறை பக்தி, கீழ்ப்படிதல் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் தானாக வரும்.

    நாளைய சமுதாயம் நலமாக வளமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!


    அருமையான கருத்துகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. முதல் முதலாய் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

    எப்போதும் எனக்கு உங்களைப் பற்றி ஆச்சிரியம் உண்டு, தினம் பதிவு, எல்லோர் பதிவுகளையும் படித்து பின்னூட்டம் அளித்து அவர்களை உற்சாகப் படுத்துவது எப்படி உங்களுக்கு சாத்தியம் ஆகிறது ?
    வாழ்க உங்கள் எழுத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. சினம் தவிர்த்தல், பிறர் கவலை ஆற்றுதல் மற்றும் மீளுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்த பகிர்வு அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமையான பதிவு.
    அற்புதமான பல நல்ல விஷயங்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான பதிவு.
    அற்புதமான பல நல்ல விஷயங்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. சுகாதார தினத்தில் மிக அருமையான பகிர்வைத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. இன்றைய தினத்திற்கு பொருத்தமான அருமையான பகிர்வு கோமதிஅரசு.

    பதிலளிநீக்கு
  8. இப்பதிவு மூலம் குறித்துக்கொள்ளப்படவேண்டிய நல்ல குறிப்புகளையும் தகவல்களையும் அளித்து தரம் வாய்ந்த பகிர்வு என்பதினை நிரூபித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. ஓஹோ அப்படியா இன்றைக்கு உலக சுகாதாரத்திற்கென ஒதுக்கப்பட்ட நாளா ? பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. சுகாதார தினம் அன்று மிக அருமையான தகவல்களுடன் நல்ல பகிர்வு!

    நல்ல பகிர்வுக்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  11. வாங்க ராமல்க்ஷ்மி , பதிவு உங்களுக்கு
    பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க மாதேவி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ஸாதிகா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. நல்ல பதிவு....சுகாதாரம் என்பது மனம் சம்பந்தப்பட்டது என்பதை நன்றாக வலியுறுத்தி உள்ளது இந்தப் பதிவு..

    பதிலளிநீக்கு
  17. வாங்க ரத்னவேல் நடராஜன் ஐயா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க பாசமலர்,ஒவ்வொருவரும் மனம் வைத்தால் தான் வீட்டை, நாட்டை, உலகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க தமிழானவன், உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. உலக சகாதார தினத்தை மிகச் சிறப்புப் படுத்தியுள்ளீர்கள். யோகா செய்தாலே அத்தனையையும் வெல்லலாம். மிக மிக நல்ல பதிவு. பலர் பயன் படுத்தவும் முடியும். நிறைந்த வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  21. வாங்க வேதா.இலங்காதிலகம், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. வாங்க வைரை சதீஸ், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. மிகவும் அருமையான தகவல்களை பகிர்ந்து இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  25. வாங்க ஜலீலா, நலமா? உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. பஜகோவிந்தம் 15 ல் "தளர்ந்தன கைகள்! வெளுத்தன முடி! உதிர்ந்தன பற்கள்!
    நடப்பதோ தடியுடன்! மண்டிக்கிடப்பதோ அளவில்லா ஆசை" என்று குறிப்பிட்ட போதும்'
    முதுமை ஒரு இனிமை யாகும் "உடல், மனம், மற்றும் புத்தியை " செம்மையாக கையாண்டால்.

    பதிலளிநீக்கு
  27. பஜகோவிந்தம் 15 ல் "தளர்ந்தன கைகள்! வெளுத்தன முடி! உதிர்ந்தன பற்கள்!
    நடப்பதோ தடியுடன்! மண்டிக்கிடப்பதோ அளவில்லா ஆசை" என்று குறிப்பிட்ட போதும்'
    முதுமை ஒரு இனிமை யாகும் "உடல், மனம், மற்றும் புத்தியை " செம்மையாக கையாண்டால்.//

    வாங்க சந்திர வம்சம், பஜகோவிந்தம் பாடல் பகிர்வுக்கு நன்றி.

    நீங்கள் சொல்வது போல் உடல், மனம், மற்றும் புத்தியை செம்மையாக கையாண்டால் முதுமையும் இனிமைதான். நன்றி கருத்து பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  28. //உடலை நலமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி, மனதை நலமாக வைத்துக் கொள்ள, மனதை ஒருநிலைப்படுத்த தெய்வ வழிபாடு, தியானம் சொல்லப்படுகிறது..//

    'மனவளக்கலை' பற்றிச் சொல்லியிருந்த அத்தனை ஆலோசனைகளும் நாம் எளிமையாக கடைபிடிக்கத்தக்கதாய் இருந்தது மட்டுமல்ல, நாம் ஏன் இப்படியான
    முக்கியமான விஷயங்களில் கூட அக்கறை கொள்ளாமல் இருக்கிறோம் என்கிற கேள்வியையும் எழுப்பியது.

    முன்பெல்லாம் அன்றாட வாழ்க்கைப் பணிகளோடேயே இணைந்ததாய் எளிய உடற்பயிற்சிகளும் இருந்தமையால்
    அதற்கென்று தனியான செயல்பாடு இல்லாமல் தேக ஆரோக்கியம் காப்பாற்றப்பட்டு வந்தது.

    இப்பொழுதெல்லாம் அப்படியில்லை.
    இறைவன் கொடுத்த இரண்டு கால்களை உபயோகப்படுத்தி நடப்பதைக் கூட 'வாக்கிங்' என்ற பயிற்சியாக்கி அதற்காக தனியாக நேரம் ஒதுக்கி 'தினமும் நான் காலை வாக்கிங் போகிறேனாக்கும்' என்று மற்றவரிடம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய அளவுக்குப் போய் விட்டது! அந்த அளவுக்கு கால்களை உபயோகித்து நடப்பது குறைந்து விட்டது. புதுப்புது வியாதிகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள்,
    மருந்துக்கடைகள் -- இதெல்லாம் நம் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சங்களாகி விட்டன. சுற்றுப்புற சூழ்நிலையை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பாதி வியாதிகள் இல்லை.

    நம் சாஸ்திரம், சம்பிரதாயங்களுடன் இணைத்து ஆரோக்கிய விஷயத்தைப் பேசியது அற்புதம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க ஜீவி சார், நீங்களோ சொல்வது போல் இந்த காலத்தில் உடல் உழைப்பு குறைந்து போனது. நடப்பது கூட பெரிய வேலையாகி போனது. வாக்கிங் போகிறேன் என்று சொல்வது ஒரு பேஸன் ஆகி போனது. பேசாமல் வாக்கிங் போக வேண்டும் ஆனால் இரண்டு மூன்று பேராய் வீட்டு கதைகளை பேசிக் கொண்டு போகிறார்கள்.

    அந்த காலத்தில் கட்டப் பட்ட கோவில்கள் பெரிய பெரிய கோவில்கள். அதற்கு தினம் நடந்து போனாலே வாக்கிங் போனது போல
    .
    ’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று நம் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

    அதன் படி நடந்து இருந்தாலே மருத்துவமனைக்கு செல்லாமல் ஆரோக்கியமாக இருந்து இருப்போம்.

    நம் முன்னோர்கள் நம் சாஸ்திரம், சம்பிரதாயங்களுடன் இணைத்து ஆரோக்கிய விஷயத்தை நமக்கு எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.

    மனவளக்கலையில் அதை தான் கற்பிக்கிறார்கள். பாடமாய் படித்தாலும் அதை வாழ்க்கையில் கடைபிடித்தால் தான் நல்லது இல்லையா சார்.

    நீங்கள் விரிவான பின்னூட்டம் கொடுத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி சார்.
    நன்றி நன்றி சார்.

    பதிலளிநீக்கு