புதன், 7 டிசம்பர், 2011

ஜோதி வழிபாடு


நன்றி: படம் - கூகுள்.

அண்ணாமலை உறை அண்ணா போற்றி!
கண்ணார் அமுதக் கடலே போற்றி!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

அறிவை ஒளிக்கு உதாரணமாய் சொல்கிறார்கள். ‘சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே, தேஜோமய ஆனந்தமே!’ என்று தாயுமானவர் குறிப்பிடுகிறார்.

’அருளானோர்க்கு அகம்புறம் என்று உன்னாத
பூரண ஆனந்தமாகி இருள் தீர விலங்கு பொருள் யாது? அந்தப்
பொருளினை யாம் இறைஞ்சி நிற்பாம்.’

‘தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
தீயில் இரும்பென்னத் திகழுநாள்எந்நாளோ?’

என்றெல்லாம் தாயுமானவர் ஜோதிமயமான இறைவனைப் பாடுகிறார்.


காயத்ரீ மந்திரம் ,’ நம்முடைய உயிராற்றலாகவும் துக்கத்தை அழிப்பதாகவும்  இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும், தன்னை விட மேலாக ஒன்றும் இல்லாததும். நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீகப் பரம் பொருள் நமது அறிவை நல்வழியில் ஈடுபடுத்தட்டும்.’என்று இறைவனை ஒளிக்கடவுளாய் உணர்த்துகிறது.

’எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக’ என்று அந்த மந்திரம் கூறுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழில் ’தீபமங்கள ஜோதி நமோ நம’ முருகனைப் பாடுகிறார்.


வள்ளலார் தீப வழிபாடு செய்தார்.

’ஏகாந்த மாகிய ஜோதி--என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி--என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி!

அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

அருள் ஒளி என் தனி அறிவினில் விரிந்தே
அருள் நெறி விளக்கெனும் அருட் பெருஞ் ஜோதி ’


’அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே
மருள் கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வநடத் தரசே நான் செய்மொழி ஏற்றருளே.’

என்று கூறி வள்ளலார் இறைவனை வழிபட்டார்

அறியாமை இருளைப் போக்கி அறிவு ஒளியை தந்த இறைவா எனப் பாடுகிறார்.

கருங்குழியில் வீட்டில் ஒருநாள் இராமலிங்க அடிகள் எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே, எண்ணெய்ச் செம்பன நினைத்து தண்ணீர்ச் செம்பை எடுத்து விளக்கில்  ஊற்றினார். விளக்கு இரவு முழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீரில் விளக்கெரிந்த இந்த  அற்புதத்தை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் வள்ளலார்.

அப்பாடல்:

’மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கென உட் பொங்கிவழி கின்றேன் ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும், புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்!
நெய்விளக்கே போன்றொருதண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே.’

அறுபத்து மூன்று நாயன்மர்களில் ஒருவரான கணம்புல்லர் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த்தால் தான் என்னமோ அவர் தான் பிறந்த இருக்குவேளூர் இறைவனுக்கு விளக்கெரித்துத் தொண்டு செய்தார்.வறுமை வந்த போதும் கணம்புல் என்னும் ஒருவகை புல்லை அறுத்து விலைக்கு விற்றுத் திருவிளக்கு ஏற்றி வந்தார்.ஒரு நாள் புல் விற்கவில்லை அதையே திருவிளக்குக்கு இட்டு எரிக்கமுற்பட,அதுவும் போதாமையால் தம் திருமுடியை விளக்கில் மடுத்து எரித்து மகிழ்ந்து இறைவனின் அருள் பெற்றார்.

நமி நந்தி அடிகள் என்னும் நாயனார் தண்ணீரில் விளக்கு எரித்து இருக்கிறார்.

மசூதியில் விளக்கேற்றி அது விடிய விடிய எரிவதை பார்ப்பதில் ஷீரடி சாய்பாபாவிற்கு மகிழ்ச்சி. அதற்காக பக்கத்தில் உள்ள இரண்டு கடைகளில் இலவசமாக எண்ணெய் பெற்று வந்தார். ஒருநாள் அந்த வியாபாரிகளின் எண்ணம் மாறியது. ‘நாம் இலவசமாக எண்ணெயைக் கொடுத்து பக்கிரி என்ன விள்க்கேற்றுவது? இனி நாம் எண்ணெய் கொடுக்கக் கூடாது. எண்ணெய் இல்லை என்று சொல்லிவிடவேண்டும்’என்று அவர்கள் பேசி வைத்துக் கொண்டார்கள். வழக்கம் போல் எண்ணெய் வாங்கும் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு
பாபா அக் கடைகளுக்குப் போனார்.’ஒரு துளி எண்ணெய் கூட இல்லை. இனி மேல்தான் வர வேண்டும்’ என்று அந்த வியாபாரிகள் கூறினார்கள்.

பாபா கிணற்றடிக்குச் சென்று நீர் இறைத்து அந்த குவளையில் ஊற்றி நன்றாகக் கழுவினார். பின்,அதில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மசூதிக்குச் சென்றார். அந்த த்ண்ணீரை விளக்கில் ஊற்றி ஏற்றினார்.

முன்னிலும் பிரகாசமாய் விளக்கு எரிந்ததாய் சாயி சரிதம் கூறுகிறது.

இசை மேதை தான் சேன் தன் இசையால் விளக்குகளை ஏற்றியதாக வரலாறு உள்ளது.


தீபத்திருநாள், தீபங்கள் ஒளி வீசும் நாள். கார்த்திகை மாதத்தில் மாலையில் சீக்கீரம் இருட்டி விடும். நம் தமிழ்நாட்டில்மாலை நேரத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு வைத்து இருளை நீக்கினார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள். தை மாதம் பொங்கல் வரை விளக்கு வைப்பது தொடரும். தீப வழிபாடு இங்கு மிகவும் போற்றப் படுகிறது.

அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.

வலை அன்பர்கள் எல்லோருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

18 கருத்துகள்:

  1. வெகு அழகான அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  2. அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.

    பதிவின் ஒளி பட்டு பிரகாசிக்கிறது மனசு.

    பதிலளிநீக்கு
  3. எங்கெங்கிருந்தெல்லாம் சான்றுகளைத் திரட்டி ஜோதி வழிப்பாட்டின் தாத்பரியத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள்?.. எல்லாமே உணர்வுபூர்வமாக இருந்தது தான் அழகு.

    கருங்குழியில் அருட்பிரகாசரின் அருள் பக்தியில் 'நெய்விளக்கே போன்றதொரு தண்ணீர் விளக்கும் சந்நிதி முன்னே எரிந்ததுவும், நமி நந்தி அடிகள் நீரில் விளக்கு எரித்ததுவும், ஷீரடி சாய்பாபா கிணற்று நீரை குவளையில் ஊற்றி விளக்காய் எரிய வைத்ததுவும், இசைமேதை தான்சேன் இசையால் விளக்கை ஏற்றியதுவும்-- எவ்வளவு விவரங்கள்?..

    ஜோதிமயமான இறைவனை ஜோதியிலேயே கண்டு தரிசித்தல் ஒரு வரம் தான்.

    அழகான பதிவிற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. அக இருள் விலகினாலே வாழ்க்கை ஒளிமயமாகும். அழகாகச் சொன்னீர்கள். இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு. கார்த்திகை மாதம் வாசலில் விளக்கு வைப்பதை தொடர்கிறேன். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபத் திருநாளாம் திருக்கார்த்திகை வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  6. வாங்க கோபாலகிருஷ்ணன் சார், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ரிஷபன், பிரகாசிக்கும் மனசுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ரத்னவேல் சார், உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஜீவி சார், உங்களுக்கு எவ்வளவு பெரிய மனது ! ஆயிரம்மாயிரம் நன்றிகளா எனக்கு, மிகவும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க கீதா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராமலக்ஷ்மி, எங்கு இருந்தாலும் நம் பழக்கத்தை மறக்காமல் விளக்கு வைப்பது அறிந்து மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவும்மா. தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான மந்திரங்களுடன் அழகிய பதிவு ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  15. தமிழ்மணம் ,மற்றும் இண்ட்லி இரண்டிலும் வாக்களித்தேன் சகோ

    பதிலளிநீக்கு
  16. தீபத் திருநாள் பற்றி நல்ல பகிர்வும்மா..

    இன்று திருக்கார்த்திகை தீபம் நன்கு முடிந்திருக்கும் என நினைக்கிறேன்..

    வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு