வெள்ளி, 4 செப்டம்பர், 2009

மழையும் மகிழ்ச்சியும்


மழையும் மகிழ்ச்சியும்


மழையைப் பற்றி வல்லி அவர்கள் எழுதுங்களேன் என்றார்கள் என்னை. எனக்கு மிகவும் பிடிக்கும் மழைக்காலம். எனக்கு, என்கணவருக்கு, என்குழந்தைகளுக்கு, மழையை ரசிக்கப் பிடிக்கும். நான் சிறுமியாக இருக்கும்போது மழையில் நனைந்து அம்மாவிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டு.

மழைக் காலம் என்றால் குடை அவசியம். எனக்கு,என் அக்காவிற்கு, என் அண்ணனுக்கு ,மூன்று பேருக்கும் புதிதாகக் குடை வாங்கிப் பள்ளியில் மாறி விடக் கூடாது என்பதற்காகக் குடையில்,எங்கள் முதல் எழுத்தையும்,ஒரு பூவும் அழகாகத் தைத்துக் கொடுத்தார்கள்,அம்மா..

பாளையங்கோட்டையிலுள்ள சாரட்டக்கர் பள்ளியில் நடந்த கிறித்து பிறந்தவிழாவில் கலந்து கொண்டு பள்ளியில் கொடுத்த
பரிசுப் பொருட்கள், தின்பண்டங்களை அம்மாவிடம் காட்டும் ஆவலில் குடையை பஸ்ஸிலேயே விட்டு விட்டு வந்துவிட்டோம், மூவருக்கும் நினைவு இல்லை.

வீட்டுக்கு அருகில் வந்தபின் தான் நினைவு வந்தது.புதுக் குடை அம்மா கஷ்டப்பட்டு பேர் பின்னிக் கொடுத்தது. அம்மாவிடம் குடை தொலைந்து விட்டது என்றால் திட்டுவார்களே என்று மூவரும் கலந்து பேசிப் பக்கத்து வீட்டுப் பவளத்தையை(தூரத்துச் சொந்தம்) சிபாரிசுக்கு அழைத்து சென்றோம், பாவம் குழந்தைகள் தெரியாமல் தொலைத்து விட்டார்கள் என்று சொல்ல. ஆனால் குடையைத் தொலைத்ததை விட சிபாரிசுக்கு அழைத்து வந்தது தான் அம்மாவிற்கு மிக மிகக்கோபம்.


எனக்குத்திருமணம் ஆகி திருவெண்காடு என்ற ஊருக்கு வந்தேன். அங்கு முதலில்பெரிய ஓட்டு வீடு நிறையபேர் இருக்கலாம்,ஆனால் அந்த பெரியவீட்டில் நானும் என்கணவரும் மட்டும் இருக்கவேண்டுமே என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது ,என் கணவர் இன்னொரு விஷயம்
சொன்னார். மழைக் காலத்தில் அந்த வீட்டுத் தரையிலிருந்து நீர் ஊறி மேலேவரும் என்று சொல்ல,

என் மாமியார் ,’அதை ஏன் கேட்கிறாய் போ நான் கார்த்திகை மாதம் இந்த வீட்டில்மாட்டிக் கொண்டேன் அப்போது மழை புயல்
இருந்தது,15 நாள் மின்சாரம் வேறுஇல்லை தரைஎல்லாம் தண்ணீர் .கொல்லைப்புறத்தில் பாத்ரூமை
ஒட்டி வாய்க்கால் ஓடும் .அதில் தவளை சத்தம் காதை அடைக்கும் ’என்று மேலும் திகில் ஊட்டினார்கள்.

என் கணவர் பணியாற்றும் கல்லூரி முதல்வர் வீட்டில் விருந்துக்குக் கூப்பிட்டார்கள் அவர்கள் வீட்டில் மாடி போர்சன் காலியாக இருந்தது உடனே அந்த வீட்டிற்கு வந்து விட்டோம்  அங்கு மழைக் காலம் மிகவும் இனிமையானது.

அந்த வீட்டின் வராந்தாவிலிருந்து திருவெண்காடு கோவில் ,அங்கு உள்ள மூன்று குளங்களில் இரண்டு குளங்கள் எல்லாம் தெரியும். பிரதோஷவிழாவிற்கு சாமி சுற்றி வருவது(இரண்டு வெள்ளிரிஷபத்தில் சாமி சுற்றிவரும்)தெரியும். மழை என்ற முக்கிய விசயத்திற்கு
வருவோம் இந்த வீட்டில் வராந்தாவில் கம்பிகேட் வழியாக மழையைப் பார்க்கப் பார்க்க அலுக்காது. பலத்த மழை பெய்யும்போது கோவில் மதில் சுவரைக் கடல் அலை போல் தாண்டித் தாண்டி வருவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி.

குழந்தைகளும் கம்பிகேட் வழியாக மழையை வேடிக்கைப் பார்ப்பதும் என் பெண் பள்ளியில் சொல்லித் தந்த மழைப் பாட்டைப் பாடுவாள். நாங்கள் கேட்டு மகிழ்வோம் அதை டேப் செய்து வைத்து இருக்கிறோம். புயல் மழைக்குப்பொருத்தமாய் இருக்கும் அந்தப்பாட்டு:

"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலோடு நாட்டியம்
மேடையான மண்டபம்
தூறலோடு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திசைக் காற்றிலே
ஏகவெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார்முழுதும் வீட்டிலே
பறவை கூடக் கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே.'

குழந்தைகள் இருவருக்கும் மழையோடு சம்பந்தப்பட்ட’ ஊசி மூஞ்சி மூடா ’கதை சொல்வேன் அதுவும் மகள் பாடத்தில் வந்த கதை தான் .

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கும் குரங்கைப் பார்த்து அந்த மரத்தில் கூடுக் கட்டிவாழும் குருவி உனக்குக் கூடு இல்லையா கூடுகட்டத் தெரியாதா?கூடு கட்டி வாழ் என்று சொன்னவுடன் எனக்குக் கூடு கட்டத்தெரியாது ஆனால் பிய்த்து எறியத் தெரியும் என்று மரத்தில் ஏறிக் குருவிக் கூட்டைப் பிய்த்து எறிந்துவிடும்.

பள்ளி கல்லூரிகளுக்குப் போனபின் தான் விடுமுறை என்று அறிவிப்பார்கள் .அப்போது பிள்ளைகள் படும் பாடு அதுவும் என் மகன் படித்த பள்ளியில் சுற்றிலும் தண்ணீர் இருக்கும் நடுவில் இருக்கும் பள்ளிக்குச் செல்வது கஷ்டம்.

இப்படி மழையில் கஷ்டப் பட்டாலும் மழை எனக்குப் பிடிக்கும். பாரதியாரின் மழை பாட்டுப்பிடிக்கும்:

திக்குக்க ளெட்டுஞ் சிதறி- தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட் தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகளுடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்- அண்டம்
சாயுது சாயுது சாயுது- பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று- தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டியடிக்குது மின்னல் -கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையு மிடிய- ம்ழை
எங்கனம் வந்ததடா தம்பி!-தலை


அண்டங் குலுங்குது தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான் திசை
வெற்புக் குதிக்குது வானத்துத்தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்- இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

மழையினால் வரும் மகிழ்ச்சிக்கு மற்றுமொரு பாட்டு.
நாமும் இப்பாடலைப்பாடி மகிழ்ச்சி அடைவோம்

ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி- மலை
யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே -கேணி
நீர்ப்படுசொ றித்தவளை கூப்பிடுகுதே
சேற்றுநண்டு சேற்றில்வளை ஏற்றடைக்குதே-மழை
தேடியொரு கோடிவானம் பாடியாடுதே
போற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைச-சேரிப்
புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே.


.மழையே நம்மை என்றும் வாழ வைக்கும் அமிழ்தம் என்று வள்ளுவரும் சொல்கிறார்.
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று,

18 கருத்துகள்:

  1. தண்ணீர் இல்லாமல் இந்த உலகமில்லை என்பதற்கு சான்றாக தங்களின் மழையின் மீது உள்ள காதல் அமைகிறது :-)

    மழை எங்கு சென்று ரசிச்சதாலும் அழகுதான் என்றாலும், tropical countryகளில் பெய்யும் மழைக்கு ஒரு வேகம் இருப்பதாகப் படுமெனக்கு. வால்பாறையில் இருக்கும் பொழுது மழை என்பது வெயில் போல எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும், அலுப்பதே இல்லை நீங்கள் கூறியது போலவே...

    நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நல்லா இருக்கு...மழைக்கால நினைவலைகள்!! :-) குடை விஷயம்...எங்க ஆயாவும் எம்ப்ராய்டரி செய்வாங்க..குடைக்குன்னு இல்ல..பொதுவா எல்லா பொருட்களுக்கும் ஒரு அடையாளம்..பப்புவோட பள்ளிக்கூட தொப்பிவரைக்கும்...LoL!! பாடல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி! ஊசி முஞ்சி மூடா என் பெரிம்மா படித்த காலத்தில் இருந்ததாக சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. அன்பு தெகா,
    உங்களைப் போல் எனக்கும்
    இயற்கையை நேசிக்க பிடிக்கும்.

    ஆழியார் போகும் போது வால்பாறைப்
    போக வேண்டும்.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. \\வீட்டுப்பவளத்தையை(தூரத்துச் சொந்தம்)
    சிபாரிசுக்கு அழைத்து சென்றோம், பாவம் குழந்தைகள் தெரியாமல் தொலைத்து விட்டார்கள் என்று சொல்ல. ஆனால் குடையைத் தொலைத்ததை விட சிபாரிசுக்கு அழைத்து வந்தது தான் அம்மாவிற்கு மிக மிகக்கோபம்.//

    :))

    மழையை வீட்டுக்குள்ளிருந்து ரசிப்பது நல்லாவே இருக்கும்.. ரோட்டில் இறங்கி நடக்கத்தான் முடியாது நம்ம ஊர்களில்....

    பதிலளிநீக்கு
  5. முல்லை,

    என் அம்மாவும் கை எம்பராய்டரி நன்கு செய்வார்கள் என்
    அக்கா மிஷின் எம்பராய்டரி நன்கு செய்வார்கள்.

    ,

    பதிலளிநீக்கு
  6. ஆம் அருணா எல்லோருக்கும் மழை
    உயிர் தான்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க சென்ஷி,
    நலமா?

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ம‌ழையை விரும்பாதோர் இந்த‌ ம‌ண்ணில் ஏது?? சிறுவ‌ர், சிறுமிய‌ர், பெரியோர் என்று ம‌ழையை கொண்டாடும் ம‌ன‌ம் நிறைய‌ உண்டு... ந‌ல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க...வாழ்த்துக்கள்... காத‌லில் கூட‌ ம‌ழையின் ப‌ங்கு நிறைய‌ உண்டு.. வார‌ண‌ம் ஆயிர‌ம் பாட‌ல் பாருங்க‌ளேன்... ம‌ழையை எவ்வ‌ள‌வு சிலாகித்து சொல்லி இருக்கிறார்க‌ள் என்று..??

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாம‌ழை
    நீருக்குள் மூழ்கிடும் தாம‌ரை
    ச‌ட்டென்று மாறிடும் வானிலை

    பதிலளிநீக்கு
  9. அனுபவிச்சு படித்து இருக்கிறீர்கள்,
    நன்றி கோபி.


    //நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை //


    தாமரை எழுதிய பாட்டு எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு கோமதி, மழை பற்றி எத்தனை செய்தி!!
    எனக்கும் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு மழை விழும் அழகைப் பார்க்கப் பிடிக்கும்.
    பிடிக்காதது இடியும் மின்னலும். சத்தமில்லாமல் பெய்யும் மழை வெகு சந்தோஷம். உங்கள் மழைப்பாட்டு நல்லா இருக்கு. உங்க மகளுக்கு நன்றி.
    திருவெண்காடு கிராமமாச்சே.
    அதையும் அமைதியாக ரசிக்கிறீர்கள். நல்ல ரசனை கோமதி.

    பதிலளிநீக்கு
  11. அன்பு வல்லி,
    ” திருவெண்காடு”
    அங்கு இருந்த ஏழு வருடங்கள் ஒரு
    பொற்காலம்.

    கிராமமாக இருந்தாலும் அமைதியும்,
    ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை.

    நன்றி, வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. ஆன்டி
    உங்க எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கு.படிக்கும் பொது எங்க பாட்டி நாபகம் வந்துடுச்சு..எnக பாட்டி மாயவரம்ள இருக்காங்க.நாகை மாவட்டதுல எல்லா ஊருமே அழகு தான்.இன்னிக்கிகு தான் உங்க ப்லோக் முதல் தரம் படிக்கிறேன்.சூப்பரா இருக்கு.

    பதிலளிநீக்கு
  13. விஜி,
    உங்கள் வருகைக்கு நன்றி.
    நீங்கள் சொன்ன மாதிரி நாகை
    மாவட்ட ஊர் எல்லாம் அழகு தான்.

    பதிலளிநீக்கு
  14. செல்வநாயகி,
    உங்கள் வருகைக்கும்,
    பாராட்டுக்கும் நன்றி.

    உங்கள் எழுத்தின் ரசிகை நான்.

    பதிலளிநீக்கு
  15. மழையை ரசிப்பதுபோலவே உங்கள் மழை பற்றிய பதிவையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு