திங்கள், 11 ஏப்ரல், 2016

ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்கள் பகுதி -- 2

கோவில் நகரம் என்று அழைக்கப்படும்  ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்கள் பற்றி முந்திய பதிவில்  சில படங்களைப் பகிர்ந்து இருந்தேன். இந்தப் பதிவில் அந்தக் கோவிலில் உள்ள அழகான ஜன்னல்கள், கலையம்சம் உள்ள சிலைகள் பகிர்வு.

இங்கு உள்ள சிற்பங்கள் இரண்டு காலத்தில்  உள்ளவர்களின் கலைப்பாணி என்கிறது விக்கிமீடியா.  சில சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டை சார்ந்த  சாளுக்கியர்கள் கலை ,  சிலசிலைகள் 12ம் நூற்றண்டை சேர்ந்த காகதீயர்கள் காலத்தை சேர்ந்தது    என்கிறது.  இருவர் காலத்து சிற்பங்களும் அழகுதான்.

   










                                                                                           
                                                                 


                                               

                                                                         










இங்கு உள்ள சந்நிதிகளில் சிவலிங்கங்கள் உள்ளன   கருவறையில் எல்லா   சிவன் அருகிலும் எண்ணெய் டின்கள் அடுக்கப்பட்டு இருக்கிறது. அதையும் சேர்ந்து தான் வணங்க வேண்டும். படம் எடுக்க வேண்டும்.

கோவில் வளாகத்தில்  தர்க்கா இருக்கிறது.  ஹஸரத் சையது ஷா பயில்வான்  அவர்கள் தர்க்கா.  அந்த தர்க்காவில் நடக்கும் திருவிழாவில் சாதி மதம் பாராமல் அனைவரும் கலந்து கொள்வார்களாம் என்று  எங்கள் டாக்ஸி  டிரைவர் அந்த தர்க்காவை பற்றி சொன்னார்.   அங்கு உள்ளே போய் வணங்கி வந்தோம் அங்கு இருந்தவர் வீபூதி மாதிரி (பாபா கோவில் உதி போல்)   கொடுத்து பூசிக்கொள்ளுங்கள் என்றார்  இந்தியில். நினைத்தது நடக்கும் அமர்ந்து வேண்டிச் செல்லுங்கள் என்றார்.









நம் ஊர்ப் பக்கம் கோவில்களில்  தாங்கள் வீடு கட்ட வேண்டும்  என்று வேண்டிக் கொண்டு கல்மேல் கல் வைத்து அடுக்கி வைத்து இருப்பார்களே அது போல் இந்தக் கோவிலிலும் அடுக்கி வைத்து இருந்தார்கள்.

நாம் கோவிலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது  நம்மைச் சிறிது நேரம்  நின்று  தன்னைப் பார்க்க வைத்த அழகிய நாய்.    

அடுத்து கர்நூல் பயணம்.   அங்குள்ள  கொண்டாரெட்டி கோட்டையைப்  பார்த்தோம். அடுத்த பதிவில். அதை பார்ப்போம்.

                                                                வாழ்க வளமுடன்.
                                                                    -----------------------

புதன், 6 ஏப்ரல், 2016

ஆலம்பூர் நவப்பிரும்மா கோயில்கள்

ஸ்ரீசைலம் போய்விட்டுத் திரும்பி கர்நூல் வரும் முன்  ஆலம்பூர்  என்ற ஊரில் உள்ள நவப்பிரம்மா கோவில் பார்த்தோம். மிக அழகான  கோவில்.
தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கிறது. சேதம்  அடைந்து இருக்கிறது பல சிற்பங்கள்,  இருந்தாலும் மிச்சம் இருக்கும் சிற்பங்கள் பல அழகிய கலைவேலைப்பாடு நிறைந்தவை. பார்க்கப் பார்க்கப் பரவசம் தரும் அழகு.




 


இங்கு ஜோகுலாம்பாள் திருக்கோயில் உள்ளது. சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று

 2002 ல் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஜோகுலாம்பாள் அம்மன் மிக அழகாய் அலங்காரமாகக்  காட்சி தந்தார்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு. அப்போது அங்கு இருந்த தெலுங்கு பேசும் குடும்பத்தினர் குனிந்து மண்டியிட்டு அமர்ந்து  அம்மனைப் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள் .அவர்கள் பேசியது கொஞ்சம் புரிந்தது , அம்மனின் மூக்குத்தி ஜொலிப்பது கீழே மண்டியிட்டு அமர்ந்து பார்த்தால்தான் தெரிகிறது  என்று எங்களைப் பார்த்து மீண்டும் தெலுங்கில் சொன்னார்கள்.  நாங்களும் பார்த்தோம் . மிக அழகாய் மூக்குத்தி ஜொலித்தது.

கோவிலைச் சுற்றி அகழி மாதிரி இருந்தது. குழாய்கள் இருந்தது. விழாக் காலங்களில் நீரூற்றுகள் இயங்கும் போலும்.  அம்மனுக்கு குங்குமார்ச்சனை நடக்கிறது தினமும்.  அழகிய நந்தவனம் இருக்கிறது.  முன்பக்கக் கோபுரம்  ஐந்து நிலைகளுடன் அழகாய் இருக்கிறது.  

கொடிமரமும் பின் புறம் அம்மன் கோபுரமும்

கோவிலைச்சுற்றி அகழி
                        
தூண்களில் அழகிய சிற்பங்கள்
அழகிய நந்தி மண்டபம்
                                              சிதிலமடைந்த நந்தி, கோபுரங்கள்.
அடியும், முடியும் காண ,பிரம்மாவும், விஷ்ணுவும் போகும் கதை சித்தரிக்கப்பட்டு இருக்கிறது..

                                                    நுணுக்கமான கலைவேலைப்பாடு
வாழைமரமும்  குரங்கும், இரு தோழிகள்.






                 
             

                      
                                                               திரிபுரசம்ஹாரம்

அகோர வடிவம்

தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை  அழிக்க எடுத்த தோற்றம்.

இப்படி பல புராணக்கதைகளை கொண்ட அழகிய சிலைகள் அமைந்த கோவில். கோவில் நகரம் என்று அழைக்கப்படும் ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்.

பறவைகள் தண்ணீர் குடிக்க, குளிக்க  வைத்து இருக்கும்  கல் தொட்டி போல் உள்ளது.

 இந்தக் கோவிலின் அழகிய வேலைப்பாடு அமைந்த ஜன்னல்கள், கோவிலுக்குள்  குடியிருக்கும் சிவலிங்கங்களின் காட்சி.  மற்றும் கோவில் வளாகத்தில் அமைந்து இருக்கும்  தர்க்கா ஆகியவை பற்றி  அடுத்த பதிவில்   பார்க்கலாம்.
                                                       வாழ்க வளமுடன்.
                                                          -----------------------

திங்கள், 4 ஏப்ரல், 2016

கோடையிலே நீர்தேடித் தவிக்கும் பறவைகள்







கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
           குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
             உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
             மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
            
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.  


வள்ளலார் சொன்னது போல் அனைத்து உயிர்களுக்கும் நீரும் நிழலும்  இறைவன் தரவேண்டும்.(நீரும் , நிழலுமாய் இறைவன் இருப்பார்)

கோடையில் எல்லா உயிர்களும் நிழலுக்கும், தண்ணீருக்கும் தவித்து வருகிறது .  நாங்கள் மாயவரத்தில் இருந்தவரை தண்ணீர் கஷ்டம் என்பதே இல்லை. மதுரைக்கு வந்தபின் மக்கள் தண்ணீருக்கு கஷ்டபடுவதை பார்க்கும் போது மனது மிகவும் வேதனை படுகிறது.


முன்பு ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் மண் போட்டு அந்த மண்மேல் ஒரு மண் பானை அதில் குளிர்ந்த தண்ணீர் இருக்கும். தெருவோரம் நடந்து போகிறவர்கள் எல்லோரும்  எடுத்து அருந்தி செல்வார்கள். (தவித்த வாய்க்கு தண்ணீர் என்று. )

  இப்போது மினரல் வாட்டர் என்று கையில் தண்ணீர் பாட்டிலுடன்  செல்கிறார்கள், மக்களுக்கு கண்ட இடத்தில் தண்ணீர் அருந்தக் கூடாது என்ற எண்ணம் வேறு இருக்கிறது. வீடுகளில் இப்போது திண்ணையும் இல்லை, தண்ணீர் வைப்பதும் குறைந்து விட்டது.

 ஒரு சில வீடுகளில் தண்ணீர் வைக்கும் வழக்குமும், வீட்டுக்கு வந்தவர்களுக்கு ஒரு வாய் தண்ணீராவது கொடுக்க வேண்டும் என்ற பழக்கத்தையும் கடைபிடிப்பதால்  இன்னும் சில இடங்களில் காணப்படுகிறது.

வீட்டு வாசலில் குளு குளு என்று நிழல் தரும் வேப்பமரமும் இருக்கும் எல்லோரும் கொஞ்சம் நேரம் நடந்து இளைப்பாறிச் செல்வர்.
 இப்போது மரமும் இல்லை, தண்ணீரும் இல்லை.

சித்திரை திருவிழா வரப்போகிறது. அப்போது எல்லோர் வீட்டு வாசலிலும் தண்ணீர் பந்தல், நீர் மோர் வைப்பார்கள். முன்பு இப்போதும் வைப்பார்கள் என்று நினைக்கிறேன். 
  என் கணவர் வரைந்த படம். (  சார் வரைந்து விட்டார்   உங்கள் வேண்டுகோள்படி  ஸ்ரீராம்)

நான் மாயவரத்தில் இரண்டு மண் பாத்திரங்களில் தண்ணீர் வைப்பேன் பறவைகளுக்கு. அவை தண்ணீர் குடிக்கும், குளிக்கும். மதுரை வந்தபின் எங்கு வைப்பது என்று இடம் தேடிக் கொண்டு இருந்தேன் மண் பாத்திரமும் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் இப்போதைக்கு வைப்போம் என்று வைத்தேன். உடனே வந்து குயில்கள் தண்ணீர் குடித்தன , மனதுக்கு நிம்மதி கிடைத்தது. கோடைகாலம் பறவைகளுக்கு தண்ணீர் எல்லோரும் வைக்கலாமே .








                                பெண் குயில்

கோடை வெயிலுக்கு இதமான குளியல். மைனாவிற்கு இடம் போதுமானதாய் இல்லை . 


பறவைகள் குளித்து மகிழ மண் தொட்டி வாங்க வேண்டும், வாங்கப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தேன், திருநாளைப்போவார் போல் !
அவர் எங்கே மண்தொட்டி வாங்க போக வேண்டும் என்று சொன்னார் என்று கேட்காதீர்கள். அவர் சிதம்பரம் போகவேண்டும் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

 என் மருமகள் வாங்கி அனுப்பி விட்டாள் . எங்கள் வீட்டு மதில்மேல் வைக்க வசதியாய் மண் தொட்டி.



ஆன்லைன் விற்பனையில் வாங்கி அனுப்பி விட்டாள் மருமகள் ,
 அத்தை வெயிலில் அலைந்து வாங்க வேண்டாம் என்று.
தண்ணீர் குடிக்கும் தவிட்டுக் குருவி

தண்ணீர் குடிக்கும் காக்கா


 கொடுத்து வைத்த பழனி கோவில் யானை.

 பாவம் இந்த காட்டு யானைகள்

இன்று வந்த தினமலரில்   மூணாறில் தேயிலை தோட்டத்தில் சுற்றி திரியும் காட்டு யானைகள் என்று போட்டு இருந்தது. நாம் மட்டுதான் வெயில் காலத்தில் கோடை வாசஸ்தலத்திற்கு போக வேண்டுமா? அதுகளும் போய் மகிழ்வாய் இருக்கட்டுமே!



மற்றும் ஒரு படம் குளுமையைத் தேடும் கொக்குகள் படம்.

கடும் வெயிலில் தாக்கத்தால் தகிக்கும் கண்களுக்கு குளுமையாக பச்சை புல்வெளியில் இரைதேடி மகிழ்ன்றவோ கொக்கு கூட்டம் ! என்று போட்டு இருந்தார்கள்  தகிக்கும் வெயிலுக்கு குளுமை, வயிற்று பாட்டுக்கு பஞ்சமில்லை.

தினமலர் பத்திரிக்கையில் இன்று வந்த இன்னொரு நல்ல  செய்தி:-

                                      
மனிதநேய நாயகர்கள்  பறவைகள் தண்ணீர் குடிப்பதற்காக மரத்தில் வைத்த மண்கலயம்.
கோடைகாலத்தில்  நீர் வழங்கும் சேவையை செய்து வருகிறார்கள்.

நற்பணி மன்ற இளைஞர்களை பாராட்டுவோம்.
எங்கள் வீட்டில் தொட்டி வாங்கும் முன்பு அவசரத்திற்கு தண்ணீர் வைத்த பிளாஸ்டிக் டப்பாவில் குளிக்கும் மைனா.




மெல்ல மெல்ல விடியும் வைகரை பொழுது என்ற பதிவில் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் வைத்து இருப்பேன். என் கணவரின் ஓவியமும்  இருக்கும்

மாயவர வீட்டு மொட்டைமாடி மதிலில் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தது
எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான் இருந்தாலும்  எங்கள் வீட்டில் வந்து தண்ணீர் குடிக்கும் பறவைகளை பற்றி பகிர ஆசைதான் எனக்கு. படங்கள் சுமாராய்த் தான் இருக்கும். இரண்டாம் மாடியில் இருந்து கைபேசியில் ஜன்னல் வழியாக எடுத்த படங்கள்.  ஜூம் செய்ய முடியாமல் இருக்கிறது .காமிரா சரி செய்ய வேண்டும்.
வாழ்க வளமுடன்.

 ----------