//இங்கு நியூஜெர்சியில், நம் ஊரில் விற்பது போல் களிமண் பிள்ளையார் கிடைக்க மாட்டார், ஆனால் களிமண் கிடைக்கிறது. ஈரக்களிமண் 5 கிலோ வாங்கி வந்தான் மகன். ”போன முறை மண்பிள்ளையார் சிலை நான் செய்தேன் , இந்த முறை நீங்கள் இங்கு இருப்பதால் நீங்கள் செய்யுங்கள் அப்பா” என்றான். அவர்களும் மகிழ்ச்சியாக பிள்ளையார், மூஞ்சூறு வாகனம் எல்லாம் செய்தார்கள். அலங்காரக் குடை இருந்தது ,அதை மகனின்
பிள்ளையாருக்கு வைத்து விட்டு, தான் செய்த பிள்ளையாருக்கு அலங்கார திருவாச்சி வீட்டில் இருந்த தெர்மோகோலில் செய்தார்கள். மகன் போன முறை செய்த பிள்ளையாருக்கு ஸ்பிரே பெயிண்ட் அடிக்கப்பட்டது. அந்த பிள்ளையாரும் புதிதாக ஆனார்.//
இன்று எங்கள் வீட்டுக்கு மண் பிள்ளையார் வருவாரா என்று சந்தேகமாய் இருந்தது . நேற்று வண்ணப் பிள்ளையார்கள் தான் விற்றார்கள். இன்று காலை போய் பார்த்த போது களிமண் பிள்ளையார் செய்பவர் கடை போட்டு இருந்தார், ஆனால் அவரைச் சுற்றிக் கூட்டம் என்று வந்து விட்டார்கள். இந்த முறை மஞ்சள் பிள்ளையார் மற்றும் நம் வீட்டில் இருக்கும் நிறைய பிள்ளையார்களை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி விடலாம் என்று முடிவு செய்தாலும் , எதற்கும் போய்ப் பார்த்து வருகிறேன், கூட்டம் இல்லையென்றால் வாங்கி
வருகிறேன் என்று போனார்கள் கடைக்கு. அவர் அருளாலே அவர் தாள் வணங்க
வந்து விட்டார் வீட்டுக்கு .
இவர்கள் வாங்கும் போது இன்னொருவருக்கு செய்து முடித்து விட்டு சார் உங்களுக்கு வேண்டுமா? செய்யவா ?என்று கேட்டு செய்து கொடுத்து இருக்கிறார்.
அப்புறம் கூட்டம் நிறைய வந்து விட்டதாம். அச்சு வைத்து தான் செய்கிறார். ஆனாலும் கூட்டத்திற்கு செய்வது கஷ்டம் தான். .
விநாயகர் சிலைகளைக் கரைக்கும் வழக்கம் ஏன் ஏற்பட்டு இருக்கும் என்பதைப் பற்றிப்
படித்த செய்தி:-
//ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்று மணலை அடித்து கொண்டு போய் இருக்கும். அதனால் நீர் நிலத்தில் நிற்காமல் கடலை சென்று அடையும். ஆனால் களிமண்ணில் நீர் இறங்கும். களிமண்ணில் உள்ள இடத்தில் நீர் கீழே இறங்கும்.அதனால் விநாயகரை நீர் நிலைகளில் கரைக்க செய்தார்கள். ஈரக்களிமண் நீரோடுசீக்கீரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும். //
நன்றி- தினமலர்.
ஆனால் இப்போது ஆற்றில் மணலும் இல்லை, நீரும் இல்லை. இருக்கும் நீர்நிலைகளில் விநாயகரை எப்படிக் கரைப்பது? நான் வீட்டில் வாளியில் கரைத்து என் தொட்டிச் செடிகளுக்கு விட்டு விடுவேன். இப்போது தொட்டி சின்னது இரண்டு தான் இருக்கிரது அதனால் மரம் செடி இருக்கும் இடத்தில் கொண்டு விட வேண்டும். அதனால் சின்னப் பிள்ளையார் தான் வாங்கினோம்.
சேலம் மாணவிகள் செய்த மாதிரியும் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கலாம்.
சேலம் மாணவிகள் 6000 விதைப்பந்து விநாயகர்களை செய்து சாதனை செய்து இருக்கிறார்கள். அவற்றை இன்று மரம் இல்லாத இடங்களில் போடப் போகிறார்கள். பெரியவிநாயகர் சிலைகளைச் செய்து அவை கரைக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப் படுவதற்குப் பதிலாக இப்படி செய்வது நல்லது.
விதைப்பந்து விநாயகர்கள் எல்லாம் மரங்களாய் வளர்ந்து வளர்ந்து நல்ல மழையைக் கொடுக்க வேண்டும்.
அந்த குழந்தைகளைப் பாராட்டுவோம். வேந்தர் தொலைக்காட்சியில் விதைப்பந்து விழாவைக் காட்டினார்கள். குழந்தைகள் விதைப் பந்து விநாயகருக்கு கொழுக்கட்டைகளையும் செய்து வணங்கினார்கள்.
அவர்கள் அனைவருக்கும் விநாயகர் அருள் கண்டிப்பாய் கிடைக்கும்.தன்னலம் பார்க்காமல் பொதுநலத்திற்கு உழைக்கும் குழந்தைகள் வாழ்க!
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும்பவர் ஸ்ரீ விநாயகப் பெருமான், அவர் எல்லோருக்கும் நலமே அருள வேண்டும்.