மதுரை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வளையல் வாங்கலையோ! வளையல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடக்கிறது.  இறைவன் நடத்திய 64 திருவிளையாடல்  நிகழ்ச்சியாக நடத்திக் காட்டப்படும். போன வருடம்  வளையல் திருவிழா, புட்டுக்கு மண்சுமந்த திருவிழா பார்த்தோம்.

64 திருவிளையாடல்களில் 32 வது திருவிளையாடல்.
 தாருகாவனத்து முனிவர்கள்  மனைவியர் சாபம் நீங்க வளையல் விற்கும் வணிகராய் வந்து  அவர்களுக்கு வளையல் அணிவித்து அவர்கள் சாபம் நீக்கி பலரும் காணும்படி விண்ணில் மறைந்தார்.


இன்று சோமசுந்தரக் கடவுள் வளையல் விற்ற திருநாள்.
நாங்கள் மீனாட்சி அம்மன் கோவில் போன போது வளையல் எல்லாம் அணிந்து சோமசுந்தரப்பெருமான் வளையல் விற்கப் போக ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்.



மீனாட்சி அம்மன் கையில் வளையல் சரம்.

சுவாமி கையில் வளையல் சரம்.  ”வளையல் வாங்குவீர், வளையல் வாங்குவீர்  “


சுவாமி பல்லாக்கு எல்லாம் வல்ல சித்தர் சன்னதி அருகிலிருந்ததால் சரியாக படம் எடுக்க முடியவில்லை மூங்கில் கம்பு கட்டி இருந்தார்கள் அருகில் போக முடியாமல் இருக்க.


தங்கவளை, வைரவளை விற்க வந்து இருக்கிறார்.

பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடக்கும், நாங்கள் போன போது இவர்கள் மட்டும் இருந்தார்கள், முருகன், சண்டேஸ்வரர் எல்லாம் இனிமேல்தான் வருவார்கள். 



                   முரசு முதுகில் - இறைவன் வருவதைக் கட்டியம் கூற
                                                      
                             வளையல் வணிகர் வந்தார்(இது போனவருஷப்படம்)

இறைவன் வளையல் வணிகராக வருவதால் குடை  உபசாரம்(போனவருஷப்படம்)




கோவிலுக்குள்ளே  பெரிய சந்தனக்கல்லில் சந்தனம் அரைத்துக் கொண்டு இருந்தார்கள்,  நான் எட்டிப் பார்த்தவுடன் சந்தனம் அரைக்கிறீர்களா ? நாளை இறைவனுக்கு தேவைபடும் சந்தனம் என்றார்கள்.  சந்தோஷமாய் நானும் , என் கணவரும் அரைத்தோம்.
அரைக்க போகும் முன் அவர்கள் சொன்னது நம் கையை துடைத்து விட வேண்டும் கையில் ஒட்டி இருந்தால், நெற்றியில் அணிந்துவிட கூடாது,முகர்ந்து பார்த்து விட கூடாது என்பதுதான்.  பெரிய சந்தனகட்டை என்பதால் அரைக்கும் போது நம் கையில் படவில்லை.


                                                   
போன வருடம் இன்மையில் நன்மை தருவார் கோவிலில் எடுத்த படம் இந்த படம்..


இந்த கோவில் வாசலில் வளையல் விற்றதை போன வருடம் பார்த்தோம். பக்தர்கள் டப்பா டப்பாவாய் வளையல் கோவிலில் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அங்கு இருக்கும் மக்களுக்கு.

இம்மையில்  நன்மைதருவார் கோவிலில் உள்ளே  மூலவர் இருக்கும் இடத்தில்  உள்ளே போகும் அன்பர்கள் எல்லோருக்கும் குருக்கள் இரண்டு வளையல் கொடுத்தார்.

                                                          வாழ்கவளமுடன்.

சனி, 16 ஏப்ரல், 2016

வடக்கு மாசி வீதியிலே!




 சித்திரைத் திருவிழாவைப் பார்க்கக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள் என் தங்கை.  அவள் வீடு வடக்கு மாசி வீதியில் இருக்கிறது,அங்கு தான்  மீனாட்சி கோவில் சித்திரைத் திருவிழாப் பார்க்க எப்போதும் போவோம். இம்முறை நான் போகவில்லை ஐந்து நாளாய். நேற்று வீட்டுக்கு வந்து கையோடு கூட்டி சென்று விட்டாள். ”இன்று ரிஷபவாகனத்தில் சுவாமியும் பிரியாவிடையும், ரிஷபவாகனத்தில் மீனாட்சி வருவதை பார்ப்பது நல்லது” என்று சொன்னாள். போய் தரிசனம் செய்து வந்தோம்.  தினமும் என் தங்கை வீடு,  உறவினர், நண்பர்கள் வருகையால்  விழாக் கோலம் பூண்டு இருக்கும் மகிழ்ச்சி அலைகளைப் பரப்பிக் கொண்டு.

 உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையாக  சுவாமி கோவிலைவிட்டு கிளம்பி வருவது முதல்  எந்த இடத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்றும் காட்டிக் கொண்டு இருந்தார்கள். எங்கள் தங்கை வீட்டுக்கு வரும் நேரம் அறிந்து 8.30க்கு நல்ல இடம் பார்த்து அமர்ந்து கொண்டோம்.(நடை  மேடையில்) நிறைய பேர்  நடு ரோட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். மாலையில் வீதி முழுவதும் தண்ணீர் லாரி பூ மாதிரி நீரைப் பொழிந்து கொண்டு போனது.

குழந்தைகள் வித விதமாய் அலங்காரம் செய்து கொண்டும் கோலாட்டம் செய்து கொண்டும் வந்தார்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்றவைகளும் இருந்தன. மீனாட்சி வேடத்தில்  பெண்கள் நிறைய பேர் பவனி வந்தார்கள், கேரள பாணி உடை அணிந்து ஆடி வந்தார்கள்.சிவன், பார்வதி உடையில், கருப்பண்ணசாமி  மாதிரி வந்து கையில் அரிவாளுடன் அருமையாக ஆடினார்கள். அஷ்டபுஜ துர்க்கை வேடம் அணிந்து வந்தாள் ஒரு பெண்.

முதலில் வந்த கோவில்யானை ’பார்வதி’.

மின் விசிறி விளம்பரமும் ஆச்சு, வந்து இருக்கும் பக்தர்களுக்கு  நல்ல காற்று வீசியது போலவும் ஆச்சு.  
மீனாட்சி அம்மன் கோவில் அம்மனைத் தரிசிக்க வரும் பக்கதர்களுக்கு  பல வருடங்களாய்  விசிறி சேவை செய்து வந்தவர் வீதியில் காத்து இருக்கும் பக்தர்களுக்கு விசிறி சேவை செய்தார்.

அவர் மகன் என்று சொன்னார்கள். அவர்களும்  இருமருங்கில் இருக்கும் பக்தர்களுக்கு விசிறி சேவை செய்தார்.
நாராயணா என்று விசிறியால் வீசிச் சென்றார்கள் 
ரமணா தையல் மிஷின் விளம்பரம் செய்த விசிறியால் பக்தர்களுக்கு வீசி சென்றார்கள்.

பக்தர்களுக்கு விசிறிகள் இருப்பது சிறப்புதானே!

சுவாமியும் , அம்மனும் தங்க ரிஷபத்தில்
தங்க ரிஷபத்தில்

அழகிய வேலைப்பாடு நிறைந்த ரிஷபம்.

மீனாட்சி அம்மன் 
வெள்ளி ரிஷபத்தின்  பின்புறம்

பெரிய தொலைக்காட்சி பெட்டியில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டு  போய்க்கொண்டு இருந்தார்கள்>(மினி வேனில்.)


ஜவ்வு மிட்டாய் மூன்று ருசிகளில் --சுக்கு கலந்த மிட்டாய்,  கமர்கட் போன்ற மிட்டாய், ஜவ்வாய் இருக்கும் ஜவ்வு மிட்டாய்(ரோஸ்கலர்)
திருவிழாவில் உள்ள அனைத்தும் அங்கு இருந்தது. ஜவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய், சூடான நிலக்கடலை, பட்டாணிசுண்டல், குல்பி ஐஸ்கீரீம்  எல்லாம் விற்றார்கள்.  எல்லாரும் வாங்கிக் கொண்டு இருக்கும்போது காவல்துறையினர் விற்பவர்களை  அந்த இடத்தில் நிற்கவிடாமல் விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் பாவம் ஓடிக் கொண்டே இருந்தார்கள். தங்கை பெண் வாங்கி தந்தாள்  ஜவ்வு மிட்டாய்கள்.

                                                             
                                                                     பஞ்சு மிட்டாய்

அலங்காரக் குடைகள்
கோலாட்டங்கள் 
பொய்க்கால் குதிரை போல் பொய்க்கால் மாடு --அப்பாவின் தோளின் மேல் இருந்து பார்க்கும் குழந்தை பின்புறம்.

அஷ்டபுஜ துர்க்கை அலங்காரம்

சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு வந்தார்கள் இரண்டு சிறுவர்கள்.

               
கோலாட்டம் ஆடிக் களைத்துப் போய் அப்பாவின் தோள் மீது இளைப்பாறும் குழந்தை.

உயரமாய்    கட்டைக்காலை வைத்துக் கொண்டு ஆடிய இருவர். நான் படம் எடுக்கும் போது ஒருவர்  யாரிடமோ பேச குனிந்து  விட்டார்.

                                                
                           கடைசியில் தேவாரம் பாடிக் கொண்டு போனார்கள்.

                                                       
காவல்துறை வாகனத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டு வந்தார்கள் ’பெண்கள் அணிந்து இருக்கும் நகைகள் பெயர் சொல்லி பத்திரம், பத்திரம்! கவனம்! கவனம்!’ என்று.

ஊர்கூடி திருவிழாவைச் சிறப்பாய் நடத்தி மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

                                                                 வாழ்க வளமுடன்.
                                                                        -----------------------