காத்திருந்து காத்திருந்து -என்ற தலைப்பு நல்ல பிரபலமான பாட்டை நினைவு படுத்துகிறதா!
எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு இரண்டு பக்கமும் மாடிப்படி உள்ளது. அதில் ஒரு மாடிப்படியின் கீழ்ப்பகுதியில் மோட்டர் சுட்ச்சின் பக்கம் பறவை கூடு கட்டிக் கொண்டு இருந்தது. மின்சார ஒயரில் பயமில்லாமல் கூடு கட்டி இருப்பது ஆச்சிரியமான உண்மை. தேங்காய் நார், சிறிய காய்ந்த குச்சிகள் வைத்து கட்டி இருந்தது.
அணிலும், புல் புல்லும்
கூடு கட்டும் பறவை என்ன பறவை என்று காத்திருந்து கண்டுபிடித்தேன், முதலில். தலையில் சிறிய கொண்டை உள்ள அந்தக்கருப்புக்குருவியின் பெயர் புல் புல் ( BUL BUL ) என்று என்று கூகுள் மூலம் அறிந்தேன். அது முட்டைகள் இட்டு வைத்து, அடை காப்பதை இரவு நேரத்தில் போய்ப் பார்க்கப் போனால், தன் வாலை மட்டும் காட்டிக் கொண்டு தன்னைக் கூட்டுக்குள் நுழைத்துக் கொள்கிறது. குஞ்சு பொறித்த பின் உணவு கொடுக்க வரும் போது படம்
தாய்க் குருவியும், தகப்பன் குருவியும்
எடுப்பதற்காக தினம் பார்த்து வருவேன். நான் காத்து இருக்கும்
போது வராது. ஒருநாள் பறவைகளுக்காக நான்மாடியில் வைத்திருந்த உணவை, காலையில் கொத்திக்கொண்டு இருந்தன, அந்த குருவிகள். அந்தக் குருவிகளின் பின்னே போய் ஒளிந்து கொண்டு எடுத்தேன்.
இந்த பன்னீர் மரத்தில் தான் அமர்ந்து தேன், புழு பூச்சிகளை தன் குஞ்சுகளுக்குஎடுத்து வரும்.

என் அசைவு கொஞ்சம் தெரிந்தாலும் பறந்து விடுகிறது. எத்தனை நாட்கள் படியில் இறங்கி , ஏறி , ஒளிந்து , மறைந்து காத்திருந்து எடுத்தேன்.
தாய்க்குருவி, தந்தைக் குருவி இரண்டும் பக்கத்தில் இருக்கும்,
பன்னீர் மரத்தில் பன்னீர் புஷ்பத்தில் உள்ள தேன் எடுத்து கொடுக்கும்,
அதில் உள்ள புழு, பூச்சியை எடுத்து கொடுக்கும். என் கை கேமிரா சின்னது. நல்ல ஜூம் செய்ய முடியாது, ஓரளவு தான் செய்ய முடியும். ஏதோ எனக்கு ஆசை.
காடுகளில்,போய் விலங்குகள், பறவைகளை எடுப்பவர்கள் எவ்வளவு
கஷ்டப்பட்டு வெகு நாட்கள் காத்திருந்து எடுக்கிறார்கள். அதற்கு சற்றும் குறைந்தது இல்லை என் காத்திருப்பு. பக்கத்து வீட்டில் உ ள்ளவர்கள் ,என் கணவர் எல்லாம் காமிராவும் கையுமாய் நான் அலைவதைப் பார்த்து சிரிப்பு- இந்த காமிராவில் நல்லா எடுக்க முடியாது என்று. ஆனாலும் என் ஆசை குறைய வில்லையே!.
புதன் கிழமை திருச்செந்தூர் சென்றோம். அங்கு முருகன்கோவில் எதிரில் நிறைய பெண் மயில், ஆண்மயில் நின்று கொண்டு இருந்தன. மாலை ஐந்து மணி இருக்கும். அப்போது ஒரு ஆண் மயில் தோகை விரித்து வெகு நேரம்
ஆடியது . எல்லோரும் நின்று பார்த்தும், காமிராவிலும்,
செல் காமிராவிலும் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்
சூரியஒளி தன் பின்புறம் விழும் படி ஆடியது. அதனால் சரியாகத் தெரியவில்லை. பின் புறம் ஈச்ச மரத்தின் விரிந்து கிடந்த தோகையும், மயிலின் தோகையும் ஒரே போல் இருந்ததால் சரியாகத் தெரியவில்லை.
முதலில் பின் பாகம் தெரிவது போல் ஆடிக் கொண்டு
இருந்தது. வெகு நேரம் காத்திருந்த பின் முன் பக்கம்காட்டி ஆடியது. மக்கள் உற்சாக ஆரவாரம் செய்தார்கள். மயில்கள் ,தோரணவாயிலில் இருந்து எதிர்க்கட்டிடத்திற்கும், அங்கிருந்து இங்கும் மாறி மாறிப் பறந்து பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. குமரன் அருகில் இருப்பதால் மகிழ்ச்சியில் அடிக்கடி அகவிக் கொண்டு இருந்தது.
அங்கே ஒரு நாய் தன் ஏழு குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருந்தது. அதையும் எடுத்தேன் பக்கத்தில் போகாதே தூரத்திலிருந்து எடு என்று கணவர் சொன்னார்கள். நேரே பார்த்து எடுக்க முடியவில்லை. சைடிலிருந்து தான் எடுத்தேன்.

திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு நட்சத்திர மீனை அலை அடித்துக் கொண்டு வந்தது. அதை சில சிறுவர்கள் கையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள் தயவு செய்து கடலில் விட்டு விடுங்கள், உயிர் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பார்த்தபின் கடலில் விடப்பட்டது நட்சத்திர மீன்.
கடவுளின் படைப்பில் ஒரு அற்புதம் நட்சத்திர மீன். சிவப்பு கலர் தூரிகையால் ஓரத்தில் வரைந்த மாதிரி இருந்தது. பின் பக்கம் திருப்பிப் பார்த்தால் குட்டி குட்டி கால்கள் அசைவது பார்க்க அதிசயமாய் இருந்தது. தொட்டுப்பார்த்தேன்.
படங்களை ஜூம் செய்து பாருங்கள். புல் புல் பறவை நான் எடுத்த படத்தில் சரியாகத் தெரியவில்லை என்றால் கூகுளில் பாருங்கள். புல்புல் பறவை நிறைய ரகங்கள் இருக்கிறது. எங்கள் வீட்டில் உள்ளது தலைப் பகுதி கழுத்து வரை நல்ல கருப்பு. தலையில் கருப்புச் சிறு கொண்டை. உடலின் அடி பகுதியில் லேசாக சிவப்பு கலரில் இருக்கும்.
காத்திருந்து காத்திருந்து படங்கள் எடுத்ததில் மனது மகிழ்ச்சி அடைகிறது . அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்.